2013 டிசெம்பர் சங்கீத விழா: வியாசர்பாடி கோதண்டராமன் கச்சேரி

Standard

2013-dec-30-dinamalar-arunn-review-kothandam[30 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

பரிவாதினி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நாகஸ்வரக் கச்சேரிக்கு காலை பத்துமணியளவில், நான் ஒருவன் அமர்வதற்கே இருபத்தியைந்து இருக்கைகளா, என்றவாறு ஆழ்வார்பேட்டையின் அடுக்கக சமூக அறையொன்றில் நுழைந்தேன். கோதண்டராமன் மாயாமாளவகௌளையில் தியாகையரின் கிருதியில் “துளசிதளமுலசே சந்தோஷமுகா” என்று வினவிக்கொண்டிருந்தார்.

மேடையில் ஆறு பேர். கீழே ரசிகர்களாய் ஐந்து பேர். அதில் மூன்று பேர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள். என்னைத் தவிர ஒருவர் நான் அழைத்துவந்தவர். தனிமைகொண்டு நூறாண்டுகளுக்கு முன்வாழ்ந்த கலாரசிக ஜமீன்போல் உணர்ந்தேன்.

குந்தலவராளி சஞ்சாரங்களுக்குப் பின்னர் “போகீந்த்ர சாயினம்” என்று பழகிய கிருதியைத்தான் துவங்கினார். எனக்கோ “ஒருமுறை வந்து பார்த்தாயா” என்று மணிச்சித்ரதாழ் திரைப்படத்தின் குந்தலவராளி வரிகளே ஒலித்தது. நாகஸ்வரம் ரசிகர்களிடம் கேட்பதாய்.

ஸாளகபைரவி ராகம் ஆலாபனை அநேகமாக இந்த இசை விழாவின் முதலும் கடைசியும். இந்த ராகத்தில் இருப்பதே ஏழெட்டு கிருதிகள்தான். அதில் 99 சதவிகிதம் மேடைகளில் ஒலிப்பது “பதவினி சத்பக்தி” என்னும் தியாகையரின் கிருதி. கோதண்டராமன் வாசித்தது “வரலக்ஷ்மி நீயே” என்று பாபநாசம் சிவன் இயற்றிய தமிழ் கிருதி.

அடுத்து சாவேரி ஆலாபனை. இவரிடம் நாகஸ்வரதில் ஒலிக்கும் சில நுட்பங்கள் முன்னனி மரபிசைக் குரல்களிலுமே இன்றளவில் பேசவில்லை. காம்போதி, சாவேரி போன்ற ராகங்களின் சில வைடூர்ய பிடிகள் நாகஸ்வரம் என்னும் வாத்தியத்தில் மட்டுமே எழுவது. நாகஸ்வரத்துடன் அடங்கியும் விடப்போவது.

தொடர்ந்து “முருகா முருகா என்றால் உருகாதோ” என்னும் பெரியசாமி தூரன் இயற்றியதை வழங்கினார். அடுத்ததாக துவிஜாவந்தி ஆலாபனை. தொட்ட இடமெல்லாம் சுநாதம். ஆறு நிமிடங்களில் ஆற்றிவிட்டது அலையும் மனத்தை.

“அகிலாண்டேஸ்வரி” என்னும் பழகிய கிருதிதான். இழைத்து நாகஸ்வரத்தில் இசைமழையோடுகையில் நமக்கு பனித்துவிடுகிறது. தவில் வாசிப்பும் கிருதியின் தன்மைக்கேற்றவாறு சட்டென்று மிருதுவானது சிறப்பு. தவில் குச்சியை மேற்புரம் பிடித்துக்கொண்டு கீழ்பகுதியால் இசைக்கையில் நமக்கு சிறுவயது ஆனந்தம்.

இதே கிருதியில் அன்று அகாடெமியில் திருமெஞ்ஞானம் சகோதரர்கள் தவிர்த்ததை, இன்று கோதண்டராமன் மூச்சைப்பிடித்து மேல்ஸ்தாயியில் வாசித்து சிலிர்ப்பூட்டினார்.

ஓரிரு இழுப்பில் முதல் சஞ்சாரத்திலேயே நளினகாந்தி ராகத்தை காட்டிக்கொடுப்பது அருமை என்றால், தொடர்ந்து வந்த “மனவியாலகிம் பரா தகே” கிருதியை வாசித்த விதம் அமர்களம்.

கச்சேரியின் பிரதான ராகம் தோடி. தேடிவரும் ரசிகர்களுக்கு தோடியின் தீஞ்சுவைச் சாற்றை மட்டுமே வழங்குவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஆலாபனை செய்தார். தொடர்ந்து வந்த தியாகையரின் “ஜேசினதல்ல” கிருதியை ராஜரத்னம்பிள்ளை வாசிப்பது மைல்கல். நேரில் அதை கேட்டிருக்க முடியாதவர்கள் இன்று கோதண்டராமன் வாசிப்பில் நிறைவுற்றோம்.

ராகமாலிகையில் கானடா, ரஞ்சனி எனத் துவங்கி, பேகடா வாசித்துக்கொண்டிருக்கையில் மேலும் இரண்டு ரசிகர்கள் சேர்ந்தனர். கோதண்டராமன் வாசிப்பதை கேள்விப்பட்டு அருகில் வசிக்கும் டி. எம். கிருஷ்ணா துணைவியார் சங்கீதா சிவக்குமாருடன் வந்தமர்ந்தார். கமாஸ் ராகத்தில் “கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ” பாசுரத்தை கண்டசாபு தாளத்தில் வாசித்தார். தொடர்ந்து ரசிகர் விருப்பமாய் கிருஷ்ணா கேட்ட சுருட்டியும், சிந்துபைரவியும் வாசித்து முடித்துக்கொண்டார்.

கலைஞர்களே ரசிகர்களாகவும் இருப்பதே கலைக்கு பத்திரம். மேலும், வைரக்கடையில் கூட்டம் எதற்கு?