2013 டிசெம்பர் சங்கீத விழா: மாண்டலின் ஸ்ரீநிவாஸ்

Standard

2013-dec-jan-01-dinamalar-arunn-review-srinivas[01 ஜனவரி 2014 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

மியூசிக் அகடெமி கச்சேரியில் யு.ஸ்ரீநிவாஸ் மாண்டலினில் கானடா ராகத்தில் “சரஸுட” என்னும் வர்ணத்தை வழக்கமான அதிவேக காலப்பிரமாணத்தில் துவங்கினார். மிருதங்கத்தில் திருச்சி பி. ஹரிகுமார், கடத்தில் இ.எம்.சுப்ரமணியம், கஞ்சிராவில் வி.செல்வகணேஷ். விறுவிறுப்பில் துவக்கத்திலேயே அரங்கம் கிளர்ச்சியில் திளைத்தது.

அடுத்ததாய் பஹூதாரி ராகத்தில் சில சஞ்சாரங்களை வழங்கி, துளசிவனம் இயற்றிய “பஜமானஸம்” என்னும் கிருதியை ஆதி தாளத்தில் வாசித்தார். ஏழெட்டு ஆவர்தனங்களுக்கு அதிநீளமான ஒரு கோர்வையை வைத்து, தாளவாத்தியங்கள் ஒருங்கிணைந்து ஜோர் பெருக்க, அவர்களையும் விஞ்சிய அதிவேக ஸ்வரங்களாய் அடுக்குவது மாண்டலினில் ஸ்ரீநிவாஸால் மட்டுமே முடிந்தது.

தீக்ஷதரின் “பவனாத்மஜ” என்னும் நாட்டை ராக கிருதியை அடுத்ததாய் கண்டசாபு தாளத்தில் வாசித்தார். ஸ்ரீரஞ்சனி ராகத்தில் ஆலாபனை சுருக்கமானது. ஸ்ரீதரின் வயலினில் வேகம் கூடியுள்ளது. ஆனால் நாதம், மாண்டலினின் குழைவிற்கு நேரெதிர்.

தியாகையரின் ஆதிதாள “மாருபல்க” கிருதி, ஸ்ரீநிவாஸ் இருபது வருடங்கள் முன்னர் ‘இரட்டை மாண்டலின்’ என்னும் ஒலிநாடாவில் வாசித்தது. வயதுக்கேற்ற நிதானமும், முதிர்ச்சியும் சங்கதிகளின் தெளிவிலும், வாசிப்பின் தேர்ச்சியிலும் இன்று வெளிப்பட்டது. தொடர்ந்த ஸ்வரகல்பனையில் ஏக லய தடபுடல்.

தொடர்ந்தது கதனகுதூஹலம் ராகத்தில் பட்ணம் சுப்பிரமணிய ஐயரின் ”ரகுவம்ஸ சுதாம்புதி” கிருதி. ஸ்ரீநிவாஸை பால்யத்தில் ரசிகர்கள் ‘எங்கள் வீட்டுப் பிள்ளையாய்’ உச்சிமுகரவைத்து பேராதரவுடன் மேடையேற்றிய கிருதி. இரண்டு ஸ்தாயிகளில், நடைகளை வேறு மாற்றி, அநாயாசமாக பல்லவி, அனுபல்லவி, சிட்டைஸ்வரங்கள் என அனைத்தையும் மெருகேற்றி வாசித்து, பிரமிப்பில் ஆழ்த்தினார்.

ஷண்முகப்பிரியாவில் ராகம் தானம் பல்லவி. நிதானமான ஆலாபனையில் ராகத்தின் சில முத்திரைபிடிகள் வெளிப்பட்டன. மாண்டலினில் வாத்திய அமைப்பு கைகொடுக்க, வாய்ப்பாட்டில் கடினமாகிவிடும் ஸ்வரப்பிடிகளை மூன்று ஸ்தாயிகளிலும் வெளிக்கொணர்ந்து ராகத்தை அவரால் விரிக்க முடிந்தது. ஆனால் விவரிக்க முயலவில்லை.

பல்லவி “திருவேங்கடமுடயான் ஜெயஜெய கோவிந்த” ஆதிதாளத்தில் அமைத்திருந்தார். ஷண்முகபிரியா என்றவுடன் எதிர்பார்க்கும் முருகக்கடவுளை தவிர்த்து, கோவிந்தன் மேல் அமைத்திருந்தது பல்லவியின் கேள்விச்சுவை. த்ரிகாலத்திலும் பல்லவியை வாசித்து ஸ்வரங்களுக்குச் சென்றார்.

ராகமாலிகையில் பேகடா, ஹம்ஸாநந்தி, வருணப்ரியா. பல்வகைராகங்களும் மதுரமாக பல்லவி வரியை வாசிக்கையிலேயே வித்தியாசப்பட்டு வெளிப்படுகிறது.

தனி ஆவர்த்தனத்தில் மூன்று தாளபக்கவாத்தியங்களும் சில சுற்றுகள் தனியாகவும், சேர்ந்தும் பலவிதமன கோர்வைகளை பரிமாறிக்கொண்டு அரங்கை உற்சாகப்படுத்தினர்.

துக்கடாவில் சிந்துபைரவி ராகத்தில் “வெங்கடாசல நிலையம்” பாடலில் துவங்கினார். ராகமாலிகையாக ராஜகோபாலாச்சாரி இயற்றிய “குறை ஒன்றும் இல்லை” பாடலை எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடும் அனைத்து நளினங்களுடன் பிரதியெடுத்தார். “மைத்ரிம் பஜத” வாசித்து முடித்தார்.

ஸ்ரீநிவாஸின் மரபிசை ஞானத்தை மெச்சுவது பூக்கடைக்கு விளம்பரப்பலகை எழுதுவதுபோல. அவரிடம் வருடந்தோறும் நமக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு, இன்றைய கச்சேரியில் இரண்டு ஆலாபனைகளுமே சுமார் என்றாக்கியது. பல கிருதிகளும் ஒரேவிதமான காலப்பிரமாணத்தில் லய பிரதானமாய் அமைவதில், தாளபக்கவாத்தியங்கள் மகிழலாம். கேட்கும் சிரசும் நோகிறது.

என்றும்போல இன்றும் எச்சபையிலும் மேடையும் பால்கனியும் நிறைந்துவிடுவதை கவனித்தால், ஸ்ரீநிவாஸ் மாண்டலினால் மரபிசையை நம்சமுதாயத்தினுள் எடுத்துச்சென்றுள்ள ஆழம் புலப்படும். வேகத்துடன் விவேகத்தையும் கூட்டி அவர் அளிக்கையில் நம் மரபிசை ரசனையையும் உயர்த்துவார்.