2013 டிசெம்பர் சங்கீத விழா: திருச்சூர் சகோதரர்கள் கச்சேரி

Standard

2013-dec-25-dinamalar-arunn-review-trichur-bros[25 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

மைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் திருச்சூர் சகோதரர்கள் (ஸ்ரீகிருஷ்ண மோஹன், ராம்குமார் மோஹன்) ‘மஹா கணபதிம்’ என்னும் தீக்ஷதரின் நாட்டை ராக கிருதியில் துவங்கினர். ஸ்வரகல்பனையில் இருவரும் சேர்ந்து ஒத்திசைவாய் கோர்வையை பாடி கரவொலி பெற்றனர்.

அடுத்ததாய் ஹமீர் கல்யாணி ராகத்தில் சஞ்சாரங்களுடன் துவங்கி ‘தூமணி மாடத்து சுற்றும் விளக்கேற்றி’ என்னும் திருப்பாவை பாசுரத்தை பாடினர்.

மிஸ்ரசாபு தாளத்தில் அடுத்தாய் தீக்ஷதரின் ‘நரசிம்மா ஆகச்ச’ என்னும் மோஹன ராக கிருதி. ’முரஹர…’ எனத் துவங்கும் சரண வரியை பரிசோதனையாய் இரண்டு ஸ்தாயிகளில் நிரவல் செய்ய முயன்றனர். வரிகளின் இடைவெளிகளை மோஹன ராக செவ்வியல் சஞ்சாரங்களை இட்டு நிரப்பியது அருமை.

பூர்வி கல்யாணி ராகத்தில் அருமையாக துவங்கிய ஆலாபனை, இடையில் தட்டையாக ஒலித்தது. இழுவையாக பிடிப்பில்லாமல் சுற்றி, ஒருவர் குரலில் சிரமப்பட்டு கமணஸ்ரமத்தை சுட்டியது. தேவையற்ற வடக்கத்திய வாடையுடன் நிறைவுற்றது. மூச்சைபிடித்து மேல்ஸ்தாயி ஸ்வரங்களில் நிற்பதெற்கெல்லாம் கைதட்டுவது ‘கல்கி’ காலத்திலிருந்து தொடரும் மரபிசை அபாக்யம்.

தொடர்ந்து மிஸ்ரசாபு தாளத்தில் ‘நின்னுவினா மரிதிக்கெவரு’ என்னும் சியாமா சாஸ்திரியின் கிருதியை கவுரவமாகப் பாடினார்கள். ‘பன்னக பூஷணுடைன’ வரியில் சம்பிரதாயமான நிரவல் மேற்காலத்தில் நல்ல விறுவிறுப்பு.

சந்திரமௌலி வயலினை இருத்த முன்னால் கேமரா முக்காலி போல வைத்துக்கொண்டிருக்கார். ஆலாபனைகளில் தேர்ச்சியாக வாசித்தார்.

தியாகையரின் ‘கொலுவையுனாடே’ என்னும் தேவகாந்தாரி ராக கிருதியை விறுவிறுப்பிற்கு பாடிவிட்டு, காம்போதி ஆலாபனையை துவங்கினர்.

சுவாமி புறப்பாடு நான்கு வீதி வலம் வருகையில் நாகஸ்வரம் காம்போதியால் வழிபட்ட இசைதேர்ச்சியை கொத்தமங்கலம் சுப்பு எழுதியுள்ளார். வழமையான ராகத்தை நன்றாக துவக்கினர். இடையே ஸ்வரப்பயிற்சியாய் சங்கராபரணத்துடன் கலந்தனர். மேல்ஸ்தாயியில் ரம்யமான பிடிகளை வெளிப்படுத்தி ஈடுசெய்கையில் மீண்டும் ஸ்வரங்களில் ஏறி இறங்கினர்.

பல்லவி “தில்லை ஈசனை காண என்ன புண்ணியம் செய்தேனோ”. எளிமையாக ரூபக தாளத்தில் பொருத்தி விறுவிறுப்பாய் நிரவல் ஸ்வரங்கள் செய்தனர். ராகமாலிகையில் வராளி, மலயமாருதம், ஹம்ஸநந்தி ராகங்களிலும் பல்லவியை பாடினர்.

மிருதங்கத்தில் மோஹன் கச்சேரியில் அணுசுரனையாய் வாசித்தார். கடத்தில் டி.வி. வெங்கடசுப்பனும் வாசித்திருக்கவேண்டும். கச்சேரியில் தாளபக்கவாத்தியங்களின் பொதுவொலி மிகக்குறைவு. அவகாசமின்மையில் ‘ரேடியோ தனி’ ஆவர்த்தனத்தில் முடித்துக்கொண்டனர்.

திருச்சூர் சகோதரர்களுக்கு விலாசமான குரல்வெளி. கச்சேரிகளில் அவ்வப்போது மேற்கத்திய ஒத்திசைவையும் சிறப்பாய் செயல்படுத்துகின்றனர். கரவொலியை தருவிக்கும் அங்கங்களில் கவனம் செலுத்துவதும் இயல்பே. இன்றைய கச்சேரியின் பட்டொளி என்றால், மேற்கால நிரவல்களும், துவக்கத்தில் ஹமீர் கல்யாணியில் பாடிய திருப்பாவையும்.