2013 டிசெம்பர் சங்கீத விழா: ரவிகிரண் கச்சேரி

Standard

2013-dec-24-dinamalar-arunn-review-ravikiran[24 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

மியூசிக் அகாடமியில் ரவிகிரண் தன் கோட்டுவாத்திய கச்சேரியை கண்ட அட தாளத்தில் சாவேரி ராகத்தில் தானே இயற்றிய வர்ணத்தில் துவக்கினார். வரிகளை அவர் குறிப்பிட்டிருக்கலாம். “நாத தனும் அனிஷம்” என்னும் சித்தரஞ்சனி ராகத்திலமைந்த தியாகையரின் கிருதியை அடுத்ததாய் வாசித்தார். விறுவிறுப்பாய் ஸ்வரங்கள் வாசித்து கோர்வையில் முடித்ததை ரசிக்கமுடிந்தது.

அடுத்ததாய் பூர்வி கல்யாணி ராகம் ஆலாபனை. ராகத்தின் அடையாளத்தை காட்டும் பிடியுடன் துவங்கி, மதுரமாய் மனோதர்மத்துடன் வார்த்தெடுக்கப்பட்டது. மைசூர் மஞ்சுநாத் வயலின் பாணிக்கு ஒத்துவராத ராகமோ எனத்தோன்றியது.

நீலகண்ட சிவன் ரூபக தாளத்தில் இயற்றிய “ஆனந்த நடமாடுவார் தில்லை” எனத்துவங்கும் தமிழ் கிருதி. இதன் ’வஞ்சகம் இல்லாத அடியார் குவிக்க’ என்னும் சரண வரியில் நிரவல் செய்தார். இப்பகுதியில் இடைவெளிகளை மிருதங்கம் அருமையான கும்கிகள் வழங்கியது. தொடர்ந்து விறுவிறுப்பான ஸ்வரங்களை வாசித்து ரவிகிரண் பரவசப்படுத்தினார்.

விறுவிறுப்பிற்கு மாற்றாக அடுத்து ஆஹிரி ராக சஞ்சாரங்களுடன் எதிர்பார்த்த சியாமா சாஸ்திரியின் ‘மாயம்மா’ கிருதியை உருக்கமாக வாசித்து முடித்தார்.

அடுத்ததாய் வெகுஜோராய் துவங்கியது சங்கராபரணம் ஆலாபனை. மேல்ஸ்தாயி சஞ்சாரங்களில் துவங்கி, அருவியாய் வழிந்து மந்திரஸ்தாயியில் கரணங்கள் அடித்து மத்யஸ்தாயியில் நிலைபெற்று, நிதானமாய் வளர்ந்தது. அன்றாடங்களை ரசிகர்கள் மனங்களில் மழுங்கச்செய்து மொழியற்ற நாதவெளிக்கு உயர்த்தியது. மஞ்சுநாத்தின் ஆலாபனை அவருக்கிருந்த தேர்ச்சியை எடுத்துக்காட்டியது.

ஊத்துக்காடு வேங்கடகவியின் “அருளாளச் சொல்வதெல்லாம்” என்னும் தமிழ் கிருதியை மிஸ்ர சாப்பு தாளத்தில் மூன்று தள்ளி எடுப்பில் துவக்கி விரிவாக வாசித்தார்.

இக்கிருதியின் இறுதியில் சில ஆவர்த்தனக்குறைப்பாகவே தொடர்ந்து ஸ்வரங்கள் வாசித்தது அருமை. இதன் முடிவில் தனி ஆவர்த்தனம்.

கச்சேரி முழுவதும் மிருதங்கத்தில் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் சௌக்கியமாக வாசித்தது இன்றைய சிறப்பு. உபபக்கவாத்தியங்கள் கடமும் ஸ்ரீரங்கம் கண்ணன் முஹர்சிங்கும், மிருதங்கத்திற்கு அனுசுரனையாய் வாசித்தனர்.

இறுதிப்பகுதியில் தோடியில் ராகம் தானம் பல்லவி. வழங்கினார். தானம் பகுதியை நாட்டைகுறிஞ்சி, காபி ராகங்களிலும் வாசித்தார். இங்கு லய பிரதானமான மஞ்சுநாத்தின் பாணி அவருக்கு கைகொடுத்தது.

“தாசரதி நீ ருணமு தீர்ப நா தரமா” என்னும் பல்லவி வரிகளை ஆதி தாளம் இரண்டு களையில் அமைத்து, சமத்தில் இருந்து கால் அக்ஷரம் தள்ளி எடுப்பில் பாடியும், வாசித்தும் வழங்கினார். ஹமீர்கல்யாணி ராகத்தில் துக்கடா வாசித்து, “எப்போவருவாரோ” (ஜோன்பூரி) எனக் கேட்டு, மங்களம் பாடி முடித்துக்கொண்டார்.

சுருக்கமான சங்கதிகளில் ரவிகிரண் எந்த ராகத்தையும் செவ்வியல் நெறி பிசகாமல், கோட்டுவாத்தியத்தில் கொண்டுவந்துவிடுகிறார். அதிவேகமாய் ஸ்வரக்கோர்வைகளை வாசித்துக்கொண்டிருக்கையில், சடாரென்று வழுக்கி ராகத்தின் வடிவை அவர் குழைக்கையில் சுகமே அலாதி. கை, கால், கோட்டுவாத்தியம் என வாத்தியமும் ரவிக்கிரணுக்கு உடலின் நீட்சி என்றால் மிகையில்லை.

*

பாக்ஸ் மேட்டர்

‘அலைபாயுதே கண்ணா’ இயற்றியவர் என்று மட்டுமே பலர் அறிந்திருக்கும் ஊத்துக்காடு வெங்கடகவியின் இருநூறுக்கும் மேற்பட்ட அரிய தமிழ் கிருதிகளை சேகரித்து ரவிகிரண் கச்சேரிகளில் அளித்துவருவது சிறப்பு.

அகடெமியில் சென்ற வருடம் கொடுத்திருந்த பட்டியலையே பதித்துவிட்டனராம். வாசித்தது தோடியில்லை, சாவேரி என்று துவங்கி, கச்சேரி உருப்படிகளை ரவிகிரண் அவ்வப்போது அறிவித்தார். அதையும் தமிழில் செய்திருந்தால் மேலும் சிறந்திருக்கும்.