[23 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]
மியூசிக் அகாடமியில் வேதவல்லி கானடா ராகத்தில் சில சஞ்சாரங்களுடன் கச்சேரியை துவக்கினார். ‘சுகி எவரோ சுமுகி எவரோ’ என்னும் தியாகையரின் ஆதி தாள கிருதி.
தொடர்ந்து கச்சேரியின் முதல் உருப்படியிலேயே, எவருமே எதிர்பாராத “எவரு சுகி எவரு ராமா நாம” என்னும் பல்லவி வரியிலேயே நிரவல். நிரவல் அங்கம் கிருதியின் ஒரு வரியை ராகத்தின் குணங்களை வெளிக்கொணரும் விதமாய் இசையில் விரித்து நிரப்புவது. நம் மரபிசையின் கடினமான அங்கம். படைப்பூக்கத்திற்கு வயதேது.
அடுத்து “தன்யு தெவ்வடோ தாசரதே” என்னும் பட்ணம் சுப்ரமணிய ஐயரின் மலயமாருத ராக கிருதியை பாடினார். தொடர்ந்து அடானாவில் சுருக்கமான ஆலாபனை. உடனே அடையாளம் காணப்பட்டு, கவரப்பட்டோம். தியாகையரின் ‘நாரத கான லோல’ என்னும் ஆதி தாள கிருதி. தொடர்ந்து அடாணாவுக்கேற்ற மிடுக்கான ஸ்வரங்கள் வெளிப்பட்டன.
அடுத்து ‘ராமா நீயெட’ என்னும் தியாகையரின் அபாரமான கவித்துவ உவமைகள் அமைந்துள்ள கிருதியை பாடினார். கச்சேரிகளில் இக்கிருதியை கரஹரபிரியாவில் பாடுகிறார்கள். வேதவல்லி தியாகையர் இதை இயற்றியதாய் கருதப்படும் திலீபகம் ராகத்தில் (கரஹரபிரியாவின் ஜன்யம்) பாடியது அவரது வித்தையின் சிறப்பு. தியாகையர் ராமா உன் நாமத்தின் ருசியை சாமான்யர் அறியமுடியுமா என்று கேட்டு, உவமையாய் அனுபல்லவியில் மேடையில் பெண்வேடம் கட்டுபவருக்கு (காமினிவேஷதாரி) நிஜப் பெண்ணின் குணங்கள் கிட்டிவிடுமா என்கிறார்.
ராமப்ரியா என்னும் அரிதான மேளராகத்தில் அடுத்து விரிவான ஆலாபனை. தொடர்ந்து பட்ணம் சுப்பிரமண்ய ஐயரின் “கோரினி வர மொஸகு” என்னும் ரூபக தாள கிருதி. இதில் “வாரிஜாஸ்த்ர ஜனக ஸ்ரீவத்ஸாங்க நிஷ்களங்க” என்னும் அனுபல்லவி வரியில் நிரவல் செய்து விரிவாக ஸ்வரங்களும் பாடினார்.
கௌளிபந்து ராகத்தில் தீக்ஷதரின் “கிருஷ்ணா நந்த முகுந்த முராரே” கிருதியை மிஸ்ரசாபு தாளத்தில் பாடிவிட்டு, அடுத்த ஆலாபனையை துவக்கினார். சட்டென்று முகாரியுடன் குழப்பிவிடும் உசேனி ராகத்தை மிகக்கவுரமவாய் சில நிமிட ஆலாபனையில் உணர்த்தியது பிரமிப்பு. சுவாதி திருநாள் இயற்றிய “ஸ்ரீராமசந்த்ரா பரிலஸ” கிருதி.
தோடி ராகத்தில் ராகம் தானம் பல்லவி. ஆலாபனை பழகிய பாட்டை. சுவாரஸ்யம் குன்றாத சஞ்சாரங்களை பின்பாட்டு சுமித்ராவுடன் பகிர்ந்துகொண்டார். வயலினில் ஸ்ரீராம்குமாரிடமும் எதிர்பார்த்த தேர்ச்சி வெளிப்பட்டது. வீணையிசையிலிருந்து வந்ததால், தானம் வாய்பாட்டிலும் மத்யமகாலத்தில்தான் செய்யப்படவேண்டும் என்பது முடிகொண்டான் வென்கட்ராம ஐயர், மதுரை ஸ்ரீரங்கம் ஐயங்கார் வழிவந்த வேதவல்லி பள்ளியின் நிலைப்பாடு. ஆதி தாளத்தில் ”பூரண போதோஹம் சச்சிதானந்த பரி” பல்லவியை பாடி, நிரவல், ஸ்வரங்கள் செய்தார். தொடர்சியாக பாடுகையில் ‘பரி’யும் ‘பூரண’மும் சேர்ந்து ‘பரிபூரண’மாய் ஒலிக்குமென்பது பல்லவிகளின் கேள்விச்சுவை.
கச்சேரியில் பல தருணங்கள் மிதமான வேகத்திலேயே அமைந்தது. உருட்டி அடித்து மிரட்டாமல், தேவையான விறுவிறுப்பை தனி ஆவர்த்தனத்தில் வழங்கியது அருண் பிரகாஷின் மிருதங்கமும் -குருபிரசாத்தின் கடமும் வழங்கியது.
குரல் ரம்யமாய் இருந்த காலத்தில் ‘அது வெறும் அகடெமிக் பாட்டு’ என்று விமர்சிக்கப்பட்டவர், இன்று அவ்வப்போது குரல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றாலும், இசையினால் அரங்கம் நிரம்பிய ரசிகத்திரளை கவர்வது பெருமூச்சுடனான ஆனந்தம்.
“முகடுசி விளசெடு போயிவதுனா” மற்றும் “மோடி ஜேஸவேலரா” பதங்களை பாடி “சர்வேஜனா சுகினோபவந்து” மங்களத்தில் முடித்தார். வேதவல்லியின் சவுக்கிய சங்கீதத்தில் சுகிக்காதவர் எவரோ.
*
பாக்ஸ் மேட்டர்
“இங்கருக்கிற பைரவி சாவேரியலாம் எடுத்துண்டா சாயம் வெளுத்துரும். ஆலாபனைலயே கற்பனை ஓடலன்னு அஞ்சுநிமிஷத்துல அம்பேலாயிடும். அதான் ஹிந்துஸ்தானி சாயலாக்கும்னு பிந்துமாலினி ஹேமமாலினின்னு என்னத்தையாவது பல்லவிக்கு எடுத்துண்டு ஒப்பேத்தறுதுகள். எனக்கன்னவோய், இன்னொரு தரம் ஆதியில் தனி வாசிச்சிட்டு வரும்படிய வாங்கிண்டு கிளம்பறேன்.”
வாயிலிருந்து பொங்கல் தெறிக்க கேண்டீனில் ஒரு மிருதங்க வித்வான் சா(ட்)டியது.