2013 டிசெம்பர் சங்கீதா விழா: மண்டா சுதாராணி கச்சேரி

Standard

2013-dec-22-dinamalar-arunn-review-manda[22 டிசெம்பர் தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

ஆந்திரப் பாடகரான மண்டா சுதாராணி தன் மியூசிக் அகாடமி கச்சேரியை ‘வந்தே வாசுதேவம்’ என்று ஸ்ரீராகத்தில் துவங்கினார். ரம்யமான சிட்டைஸ்வரங்கள் பஞ்சரத்ன ஸ்ரீராக கிருதியில் இருக்கும் கோர்வைகளிலிருந்து மாறுபட்டதாயிருந்தது சிறப்பு.

அடுத்ததாய் சலநாட்டை விவாதி மேளராகத்தில் ஆலாபனை. அருமையான அகார பிடிகள் வெளிப்பட்டன. தொடர்ந்து கோடீஸ்வர ஐயரின் ‘ஏதயா கதி’ கிருதியை ஆதி தாளத்தில் பாடி, ஸ்வரகல்பனை செய்து முடித்தார்.

அடுத்ததாய் ஆலாபனை ஜெயந்தசேனா ராகத்தில். பல பத்தாண்டுகளாய் கச்சேரிகளில் அரிதாக ஆலாபனை செய்யப்படும் ராகங்களில் ஒன்று. நல்ல முயற்சி. ராகத்தின் பிடிகளை சுற்றி வாசிக்கையில் பிடிப்புடன் வெளிவந்த ராகவேந்திர ராவின் வயலின் ஆலாபனை, வேறுசமயங்களில் ஸ்வரப்பயிற்சியாய் ஒலித்தது. ஆதி தாளத்தில் ‘வினதாசுதவாகனஸ்ரீரமணா’ எனும் தியாகையரின் கிருதி. ஸ்வரங்களில் முடிக்கையில் சரியாக பொருளமையும் விதமாய் ‘வினதாசுத வாகனன்’ என்றோ ‘வினதாசுதவாகனஸ்ரீ’ என்றோ பாடியது பொருளுணர்ந்தவரின் மேடைச்சிறப்பு.

‘எந்தனி நினவிந்துரா எவரிதோ’ கிருதியை ஆதி தாளத்தில் திஸ்ர நடையிலேயே பாடி, அந்நடையை மாற்றாமல் ஸ்வரங்களை சதுஸ்ர கதியில் பாடியதும் சுதாராணியின் வித்தையின் சான்று. அடுத்து சில சஞ்சாரங்கள் ஆஹிரி ராகத்தை ஆலாபனை செய்துவிட்டு, ‘மாயம்மா’ எனத் துவங்கும் பிரபலமான கிருதியை நிறைவாய் பாடினார்.

கச்சேரியின் பிரதான ராகம் காம்போதி. ஆலாபனையில் குரல், வயலின் இரண்டிலும் பழகிய பிடிகள் சிறப்பாக வெளிப்பட்டது. பிரபலமான ‘ஓ ரங்க சாயி’ கிருதியை விஸ்தாரமாகப் பாடி, எதிர்பார்த்த ‘பூலோக வைகுண்ட’ எனும் வரியில் நிரவல் செய்து முடித்து, தனி ஆவர்த்தனம் விட்டார். மிருதங்கத்தில் சுதீந்திராவும் கடத்தில் உடுப்பி பாலகிருஷ்ணாவும் நன்றாக வாசித்தனர்.

கச்சேரியின் இறுதிப்பகுதியில் விஸ்தாரமான ராகம் தானம் பல்லவி. ஷண்முகப்பிரியா ராகத்தில் அருமையான ஆலாபனையை தொடர்ந்து, நான்கு சுற்றுகள் தானம் செய்தார். வீணையில் செய்வதைப்போல ஐந்து ராகமாலிகையாக தானத்தின் இறுதிப்பகுதியை அமைத்தார். கேதாரம், நாராயணகௌளை, சாரங்கநாட்டை, ரீதிகௌளை, பௌளி என்பவை உப கண பஞ்சராகங்கள்.

“கானலோல கருணாலவால பக்தஜனபாலா மாம்பாலய சதா சாம” எனும் பல்லவி கண்ட அட தாளத்தில் இரண்டு ஆவர்தங்களில் அமைக்கப்படிருந்தது. இதை பஞ்ச நடையில் தாளத்தின் ஒவ்வொரு இரு அக்ஷர இடைவெளிகளிலும் சதுஸ்ரம், திஸ்ரம், மிஸ்ரம், கண்டம், சங்கீர்ணம் என்று பொருத்தி பாடியது பிரமிப்பு. ஓரிருமுறை பல்லவியுடன் தாளத்தை போட்டுப்பார்த்துவிட்டு ‘அம்பேல்’ என்று கையை உயர்த்திவிட்டேன். சுதாராணி அநாயாசமாக பிசகாமல் இத்தாளத்தில் பல்லவியை பாடி, நிரவல், ஸ்வரங்கள், த்ரிகாலம் செய்து, சிறு தனி ஆவர்த்தனமும் விட்டார்.

சௌக்கியத்திற்காகவே ரசிகர்கள் அனுபவிக்க வருவது ஒருவகை மரபிசை. சாமர்த்தியமான வெளிப்பாடுகளை சில அங்கங்களில் கேட்டு பிரமிப்படைவது மற்றொரு வகை. நிரவல்களிலும், காம்போதி போன்ற பிராசீனமான ராகங்களின் ஆலாபனைகளிலும் வெளிப்படாத சுதாராணியின் வித்தை, ஸ்வரங்கள், பல்லவிகள் போன்ற லய பிரதானமான அங்கங்களில் அசுரத்தனமாய் வெளிப்பட்டு மெச்ச வைக்கிறது.

ஆந்திராவில் இவருக்கு ‘பல்லவி’ சுதாராணி என்று அடைமொழியாம். இக்கச்சேரியை இறுதிவரை இருந்து கேட்டவருக்கு இதில் வியப்பொன்றுமில்லை.