2013 டிசெம்பர் சங்கீத விழா: சுமித்ரா வாசுதேவ் கச்சேரி

Standard

2013-dec-19-dinamalar-arunn-review-sumitra[19 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் இடவசதிற்கேற்ப சுருக்கிவரையப்பட்டு வெளியானதின் ஒரு வடிவம். அங்கு ‘எடிட்’ ஆனவை கீழுள்ளதில் சாய்வு எழுத்தில்.]

மியூசிக் அகடெமி கச்சேரியில் சுமித்ரா வாசுதேவ் ‘நின்னே கோரிநாதிரா’ எனும் மோஹன ராக வர்ணத்தில் துவங்கினார். கவனிக்கவும், வழக்கமான ‘நின்னு கோரி’ வர்ணம் இல்லை. இனிமையான சிட்டைஸ்வரங்களுடனான இதை இயற்றியவர் பல்லவி துரைசுவாமி ஐயர்.

முதல் ஆலாபனை முகாரியில். எடுத்ததும் ராகத்தை உணர்த்தும் சஞ்சாரங்களை வழங்கிய, நேரடியான, நேர்த்தியான ஆலாபனை. ‘எந்த நின்னே சபரி பாக்யமு’ எனும் தியாகையரின் கிருதி. சபரிக்கு மோட்சம் கிடைத்ததை வியந்தேற்றும் பொருளமைந்த கிருதியை முகாரி என்பதால் அழுகையொலிக்கும் வடிவில் சிலர் பாடுவார்கள். அவ்வாறில்லாமல் மோட்சம் கிட்டியவரின் சிலிர்ப்பான தருணத்தை சரியாக முகாரியில் வெளிக்கொணர்ந்து சுமித்ரா பாடியது அருமை.

நாராயணகௌளை ராகத்தில் தீக்ஷதரின் பிரபலமான ‘ஸ்ரீராமம்’ எனும் கிருதியை பாடிவிட்டு, சாவேரி ராகத்தில் விரிவான ஆலாபனையை துவக்கினார். அதில் பல இடங்களில் அகாரங்களில் அவருக்கிருந்த பயிற்சி வெளிப்பட்டது.. குரலின் அப்போதைய தன்மையை உணர்ந்து மத்யஸ்தாயியிலேயே படைப்பூக்கம் குறையாமல் ஆலாபனையின் பெரும்பகுதியை வளர்த்தெடுத்தது சுமித்ராவின் வித்தையின் தேர்ச்சி. வயலினில் நளினா மோகன் ஓங்கிய ஒலியுடன் சுநாதமாய் சாவேரியை வாசித்தார். தொடர்ந்து ‘துருசுகா’ எனும் சியாமா சாஸ்திரியின் பிரசித்தியான கிருதியை பாடி, ’பரமபாவநி கிருபவாணி வினுதா’ எனும் வரியில் நிரவல் செய்தார்.

வழமையான ராகங்களில் ஆலாபனை, நிரவல் என படைப்பூக்கங்களின் செவ்வியல் இலக்கணங்களை இன்றளவில் வேதவல்லியின் பள்ளியில்தான் கற்கவேண்டும். பரமபாவநி எனும் ஒரு சொல்லை பிரித்தாய்ந்து சுமித்ரா நிரப்புகையில் அரங்கை நிறைத்தது சாவேரியின் செவ்வியல் சாறு.

துவக்க தருணங்களில் தொண்டையார்பேட்டையில் சிக்கியிருந்த குரல் கச்சேரியின் இப்பகுதியிலிருந்து ஓங்கி புறப்பட்டு சௌக்கிய ஜாலம் செய்தது. ஸ்வரங்கள் பாடுகையில் ஸரிமகாரிஸ, ஸரிம, என குறைத்துக்கொண்டே வந்து ஸ, ரி எனும் இரண்டே ஸ்வரங்களில் சாவேரியை ஓரிரு நிமிடங்கள் வெளிப்படுத்திய பாங்கு, “சாவேரி என்றால் ‘சா’ வே ‘ரி’” எனும் சொலவடையை நினைவுறுத்தியது.

தனி ஆவர்த்தனத்தில் மிருதங்கம் முஹர்சிங் கலவை அருமை. கிருதிகளின் பொருளுணர்ந்து, வேண்டிய இடங்களில் அழுத்தங்களும், அமர்த்தலுமாய், ஷேர்தலை அனந்தகிருஷ்ணின் மிருதங்க வாசிப்பு கச்சேரியை உயர்த்தியது. மூச்சைகட்டி, நாக்கினால் சொட்டி, விரல்களால் சொடுக்கி, லயத்துடன் தொடர்ச்சியான கார்வையை பய்யனூர் கோவிந்த பிரசாத் முஹர்சிங்கில் கேட்பதே இனிமை.

சுருக்கமாக வஸந்தா ராகத்தில் ‘கண்டேன் கண்டேன்’ என்று அனுமார் சீதயை கண்டதை ராமரிடம் கூறிவிட்டு, ராகம் தானம் பல்லவியை துவங்கினார். இங்கு பளிச்சென்று ராகம் எதுவென வெளிப்படும் சஞ்சாரங்களுடன் சுமித்ரா செய்த நாட்டைகுறிஞ்சி ஆலாபனை உன்னதமானது. மகிழ்ச்சிப் பிரவாகமான இவ்வங்கம் கச்சேரியின் பட்டொளி.

சுமாரான, சுருக்கமான தானம் அவகாசமின்மையால் விளைந்திருக்கலாம். பிறகு, ‘தாசரதே கருணாநிதே பயோநிதே மாம்பாஹி’ எனும் பல்லவியை இரண்டு களையில், கண்ட திரிபுடை தாளத்தில் திஸ்ர கதியில், சமத்திலிருந்து இரண்டு அக்ஷரம் தள்ளிய எடுப்பில் அமைத்துப் பாடினார். தாளம் ஓரிருமுறை இடறியதாலோ, தொடர்ந்து ஒரு களையில் நிரவல் செய்து, சதுஸ்ர கதியில் நாட்டைகுறிஞ்சி ததும்பும் ஸ்வரங்கள் பாடி முடித்துக்கொண்டார்.

வேதவல்லியின் அதட்டாத சௌக்கிய சங்கீதம் சுமித்ரா வழியே அடுத்த சந்ததியில் உயிரூட்டத்துடன் நிலைபெற்றுவிட்டது ரசிகர்களுக்கு ஆனந்தம்.

***

பாக்ஸ் மேட்டர்

“இங்கருக்கிற பைரவி சாவேரியலாம் எடுத்துண்டா சாயம் வெளுத்துரும். ஆலாபனைலயே கற்பனை ஓடலன்னு அஞ்சுநிமிஷத்துல அம்பேலாயிடும். அதான் ஹிந்துஸ்தானி சாயலாக்கும்னு பிந்துமாலினி ஹேமமாலினின்னு என்னத்தையாவது பல்லவிக்கு எடுத்துண்டு ஒப்பேத்தறுதுகள். எனக்கன்னவோய், இன்னொரு தரம் ஆதியில் தனி வாசிச்சிட்டு வரும்படிய வாங்கிண்டு கிளம்பறேன்.”

வாயிலிருந்து பொங்கல் தெறிக்க கேண்டீனில் ஒரு மிருதங்க வித்வான் சா(ட்)டியது.