2013 டிசெம்பர் சங்கீத விழா: திருமெய்ஞானம் டி.கே.ஆர். அய்யப்பன் & மீனாக்ஷிசுந்தரம் சகோதரர்கள் கச்சேரி

Standard

2013-dec-18-dinamalar-arunn-review-tkr-bros[18 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் ஏகத்திற்கு விழுங்கப்பட்டு வெளியானதின் ஒரு வடிவம்]

மியூசிக் அகடெமியின் 87ஆவது ஆண்டு இசை மாநாட்டில், திங்கள் காலை நாகஸ்வரக் கச்சேரியில் திருமெய்ஞானம் டி.கே.ஆர். அய்யப்பன், மீனாக்ஷிசுந்தரம் சகோதரர்கள் வாசித்தனர். துவக்கத்தில் சுமநீஸரஞ்சனி ராகத்திலமைந்த ஆதி தாள வர்ணம் தருமபுரம் கோவிந்தராஜன் இயற்றியது. இதில் நடைகளை மாற்றி ஸ்வரங்கள் வாசித்தது வித்தியாசம்.

திருநாகேஸ்வரம் சுப்ரமணியம், திருக்கடையூர் பாபு, என இரட்டை தவில்கள் இருந்தாலும், அகடெமியின் நேர்த்தியான ஒலி அமைப்பில் கச்சேரி இசை காதுகளுக்கு இனிமை. கௌளை, துவிஜாவந்தி, சாரங்கா, சாமா என நாகஸ்வரத்திற்கேற்ற ராகங்கள் பலதும் கச்சேரியில் வாசிக்கப்பட்டது.

கௌளையில் திக்ஷதரின் ‘ஸ்ரீ மஹா கணபதி’ கிருதியில் ஸ்வரகல்பனை. அடுத்து அகிலாண்டேஸ்வரி என சியாமா சாஸ்திரியின் துவிஜாவந்தி ராக கிருதி. ஒத்திசைவில் பெரும்பாலும் அருமையாக வாசிக்கப்பட்ட கிருதியில், சரணத்தில் மேல்ஸ்தாயி சஞ்சாரங்களை மத்யஸ்தாயியில் வாசித்தது ஏமாற்றம். கிருதியின் உச்ச வெளிப்பாட்டை துச்சமாக்கிவிட்டது.

பரந்தாமவதி என்று தர்மவதி ராகத்தில் தீக்ஷதர் கிருதியை ரூபக தாளத்தில் வாசித்து, ஸ்வரங்களில் அருமையாக குறைப்பு செய்தனர். முதல் விரிவான ஆலாபனை சாரங்கா ராகத்தில். தியாகையரின் ‘நிவாடநேகான’ எனும் கிருதி. சாரங்கா ராக கிருதிகளின் சஞ்சாரங்களை நினைவுறுத்தும் வகையில் ஆலாபனையை அமைத்திருந்தது ரம்மியமாய் இருந்தது.

சாந்தமுலேகா என்று சாமாவில் நிரப்பிவிட்டு, கச்சேரியின் பிரதான அங்கத்திற்கு கீரவாணி ராகத்தை ஆலாபனை செய்யத்துவங்கினார்கள். ஸ்வரங்களை அகாரமாய் அதிவேகமாய் வரிகளினிடையே செய்வதை பிருக்காக்கள் என்றால், நாகஸ்வரத்தில் ‘விரலடி’ எனும் விஷயம் இதற்கு அருகில் வருவது. ஆலாபனையில் சில இடங்களில் இவ்வகையில் அதிவேக கீரவாணி ஸ்வரக்கோர்வைகளை நுழைத்தது சிறப்பு. ஆலாபனை முடிவில் நாகஸ்வரத்தில் தரஸ்தாயி ஷட்ஜத்தை தொடமுயன்றார். இந்த ஆலாபனையில் மட்டுமே நாகஸ்வரத்தின் சிறப்பம்சங்களுடனான படைப்பூக்கமான வாசிப்பு வெளிப்பட்டது.

தொடர்ந்து தவில் துணையுடன் மத்யமகாலத்தில் தானம் வாசிக்கையில் இறுதிக் கார்வைகள் கீரவாணியை நன்கு உணர்த்தியது. ஆதி தாளத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்லவியை, த்ரிகாலத்திலும் வாசித்தனர். பிறகு ராகமாலிகையாக மோஹனம், பேகடா, ரஞ்சனி போன்ற ராகங்களில் பல்லவியை வாசித்து தனி ஆவர்த்தனம் விட்டனர்.

கச்சேரியின் இறுதிப்பகுதியில் துக்கடாக்களாய் ரேவதி ராகத்தில் ‘மஹாதேவ சிவசம்போ’, காபி ராகத்தில் ‘என்ன தவம் செய்தனை’ மற்றும் ராகமாலிகையில் ‘ஸ்ரீசக்ரதார’ போன்றவை வாசிக்கப்பட்டது. திருப்புகழ் ஒன்றை கண்டசாப்பு தாளத்தில் வலஜி ராகத்தில் வாசித்து முடித்துக்கொண்டனர். கச்சேரி முழுவதுமே நாகஸ்வரத்தில் சகோதரர்கள் தங்கள் உச்சவெளிப்பாட்டை இன்று வழங்கவில்லை என்றே தோன்றியது.

அலாரிப்புடன் மல்லாரிக்காக தவில் வாசிக்கும்போது நமக்குள் ஏற்படும் கிளர்ச்சி அபாரமானது. தோல் பட்டைகளைப் போல இழுத்துக்கட்டத் தேவையில்லாத இரும்புப்பட்டைகளை வார்களாக கொண்ட தவில்கள் அறுபதுகளில் வந்தது. பொறையார் வேணுகோபால் பிள்ளை கொண்டுவந்த மாற்றம். இவ்வகை தவிலின் சப்தம் ஒவ்வாத ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். இன்றைய கச்சேரியில் தோல் வார் பிடித்த தவில்களே.

இடையிடையே தவில் பிரமிப்பான கோர்வைகளை அள்ளி வீசுவது நாகஸ்வரக் கச்சேரிகளின் தனியம்சம். மேற்கால திஸ்ரம், மிஸ்ரம் என்று அவ்வப்போது அமர்களப்படுத்தியது இக்கச்சேரியை சோபிக்க உதவியது. இரட்டை தவில்களின் நெடிய தனி ஆவர்த்தனத்தில் வெளிப்பட்ட லய விஷயங்களில் தலைசுற்றி தவில் எனும் மகத்தான வாத்தியத்தை வியக்கத்தான் முடிகிறது.

***

பாக்ஸ் மேட்டர்

இசைவிழாவில் நாகஸ்வரக் கச்சேரிகளில் பெரும்பாலும் மேடையிலிருப்போரின் எண்ணிகையை ஒத்தே சபையிலும் ஆட்கள் இருக்கிறார்கள். நாகஸ்வர இசையே சம்பிரதாயம் எனும் போர்வையில் ‘மங்கள இசை’ என முத்திரையிடப்பட்டு தேய்வழக்காகிவிட்டது.

இந்நிலையில், காலை இடம் என்றாலும், அகடெமியில் தொடர்ந்து தனிக் கச்சேரி தருவதே ஆறுதல். சில வருடங்களாக மார்கழி இசை விழாவையொட்டி கிருஷ்ணகான சபாவும் ப்ரம்ம கான சபாவும் நாகஸ்வரக் கச்சேரிகளை தனியே நடத்திவருவது இவ்வாத்தியத்தை வாழவைப்பதற்கான நல்ல தொடக்கம்.