2013 டிசெம்பர் சங்கீத விழா: ராமகிருஷ்ணன் மூர்த்தி கச்சேரி

Standard

2013-dec-17-dinamalar-arunn-review-ramakrishnan[17 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

அரங்கம் நிரம்பியிருந்த ‘சாந்தி ஆர்ட்ஸ் ஃபௌண்டேஷன்’ சாஸ்திரி ஹால் கச்சேரியில் பாடிய ராமகிருஷ்ணன் மூர்த்தியின் குரல் காத்திரமானது. சில சஞ்சாரங்களால் ஆனந்த பைரவி ராகத்தை உணர்த்தி, ‘பாஹிஸ்ரீ’ எனத் தொடங்கும் சியாமா சாஸ்திரியின் கிருதியை பாடினார்.

அடுத்ததாய் பந்துவராளி ஆலாபனை. நல்ல தொடக்கத்துடன் தேர்ச்சியுடன் வளர்ந்தாலும், விறுவிறுப்பு குறைந்து, சுருக்கிவரைந்து முடித்தார். தியாகையரின் ‘சிவ சிவ சிவ எனராதா’ எனும் ஆதி தாள கிருதி. இதன் இறுதியில் ‘பாகவதுலலோ போஸின்சி’ எனும் சரண வரியில் நிரவல் நல்ல தேர்ச்சி. இங்கு தாளவாத்தியம் இடைவெளிகளில் வாசித்த கும்கிகளும் பரன்களும் நன்று. இங்கு பிடித்த வேகம் ஸ்வரகல்பனை மேற்காலத்தில் சில உற்சாகமான பரிமாற்றங்களுக்கு இட்டுச்சென்றது. நீண்ட குறைப்பை குரலும் வயலினும் செய்து இக்கிருதியை முடித்தனர்.

பந்துவராளியை விட அடுத்து வந்த யதுகுல காம்போதி ஆலாபனை என்னைக் கவர்ந்தது. சபாஷ். ஆலாபனையின் தன்மைக்கேற்ப எதிர்பார்த்தபடி மாரிமுத்தாப்பிள்ளையின் ‘காலை தூக்கி நின்றாடும் தெய்வமே’ தமிழ் கிருதியை ஆதி தாளம் இரண்டு களையில் நிதானமாய் பாடினார். ரீங்கரிக்கும் குரலில் கிருதியை போஷித்து பாடுகையில் அரங்கமே பொலிவுற்றது.

நிரப்புவதற்காக பாடப்பட்ட சரஸ்வதிமனோஹரி ராகத்தில் அதே சொல்லில் தொடங்கும் திக்ஷதரின் கிருதியில் எதிர்பார்த்த விறுவிறுப்பு இல்லை. அடுத்து பிரதான ராகமான தோடியில் ஆலாபனை. பயிற்சியிலிருந்து ஞாபகத்தில் இருத்தி, மேடையில் ஒப்பிக்கப்படும் ஸ்வரத் தொங்கட்டான்கள் துணையின்றி, ஓரளவு தனித்தன்மையான படைப்பூக்கத்துடன் கட்டமைத்த ஆலாபனை. ஸ்ரீராம்குமார் வயலினில் தன் வழக்கமான தோடி முத்திரையை பதித்தார்.

பாபநாஸம் சிவனின் கார்த்திகேய காங்கேய எனும் கிருதியில் நிரவல் இல்லாதது ஏமாற்றம். மத்யமகால ஸ்வரங்கள் சுருக்கமாக முடிந்ததும் அவகாசமின்மையினால் இருக்கலாம். கரண்டியில் நிறைய எடுக்கப்பட்ட கோவில் பிரசாதம், பந்தியில் நம் இலையில் விழுகையில் கனிசமாக குறைந்துவிடுவதுபோன்ற அதிருப்தி எனக்கு.

தனி ஆவர்த்தனத்தில் தாளவாத்தியங்கள் அரங்கம் நிறைந்து ஒலித்தன. வளரும் கலைஞர்களின் கச்சேரிகளில் தனி ஆவர்த்தனம் சில ஆவர்த்தங்கள் அதிகமாக ஒலிக்கலாம். பல ஆவர்த்தங்கள் மிகையாவது ருசிக்கவில்லை.

அடுத்ததாய் மிஸ்ரசாப்பு தாளத்திலமைந்த ’என்றைக்கு சிவ கிருபை’ எனும் அருமையான நீலகண்ட சிவனின் தமிழ் கிருதியை ‘கன்றின் குரலைக் கேட்டு’ என அனுபல்லவியில் பாடத்துவங்கினார். மிருதங்கம் இன்றி இக்கிருதி முகாரி ராகத்தில் உருக்கம் குலையாமல் ஒலித்தது.

நிரிநிரிகமகரிஸ என்று ஸ்வராக்ஷரமாக பூர்வி எனும் ராகத்தில் தில்லானா செய்து மங்களம் பாடி முடித்துக்கொண்டார்.

கச்சேரியில் கடமும் வாசிக்கப்பட்டது. மிருதங்கத்தினுள்.

ராமகிருஷ்ணன் மூர்த்தி அமேரிக்க படிப்பிற்குப்பின் முழுநேர கர்நாடக இசைக் கலைஞராய் இங்கு புலம்பெயர்ந்துவிட்டவர். மரபிசை பாடுவது கடினமேயில்லையே எனும்படி இயல்பாய் லகுவாய் இசைக்குள் செல்கிறார். யாரையும் பிரதி எடுப்பதில்லை. தனக்கென ஒரு வழியை விரைவில் வகுத்துக்கொண்டு வருகிறார். மூன்று வருடங்களாய் கவனித்ததில் அவரது இளமையான குரலில் ஆற்றல் ஓங்கியுள்ளது. வானத்தில் தவ்வும் எழுச்சியுடன் கட்டற்ற களிவெறியாய் பாடவேண்டிய இவ்வயதில் சற்றே அடைத்துக்கொண்டு பாடுகிறாரோ எனத் தோன்றுகிறது. இசைவிழா முழுவதும் தேவை என்பதால் குரலை காப்பாற்றுகிறாரோ. பொறுத்திருப்போம்.

செவ்வியல்தன்மை லவலேசமும் குறையாமல் கர்நாடக இசையை மனோதிடத்துடன் மதுரமாய் மேடையில் வழங்குவதற்கு ராமகிருஷ்ணன் போல் அடுத்த சந்ததியினர் முன்வந்துவிட்டனர். நிறைந்திருந்த சபையில் அடுத்த சந்ததி பெருவாரியாக தென்படாததற்கு சமகால ரசிகர்கள் பொறுப்பேற்கவேண்டும்.

*

பாக்ஸ் மேட்டர்

கச்சேரியின் துவக்கத்தில் மைக்-செட் மிகையான ஒலியுடன் இருந்ததால் சிறிய அரங்கினுள் பேரொலி. இதை சரிகட்டுகிறேன் என்று மிருதங்கத்தின் மைக்-கை மட்டும் ஒருங்கிணைப்பாளர் அணைத்துவிட்டது சரியில்லை.

இதற்காக துணுக்குற்று வளரும் கலைஞரின் கச்சேரி முழுவதும் மிருதங்கம் செய்த சண்டித்தனங்கள், மூத்த வித்வானுக்கு அழகன்று. கச்சேரி முடிந்ததும் வைத்துக்கொண்டிருக்கலாம் ஒருங்கிணைப்பாளர்களுடனான தனி ஆவர்த்தனத்தை.