2013 டிசெம்பர் சங்கீத விழா: டி. எம். கிருஷ்ணா கச்சேரி

Standard

2013-dec-16-dinamalar-arunn-review-tmk[16 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

மைலாபூர் பைன் ஆர்ட்ஸ் சபா கச்சேரியின் தொடக்கத்தில் கிருஷ்ணாவின் கன்னடா (கானடா இல்லை) சஞ்சாரங்களின் தீஞ்சுவை ஆஹா, பேஷ். தொடர்ந்து மிஸ்ரசாபு தாளத்தில் தீக்ஷதரின் ‘ஸ்ரீ மாத்ருபூதம்’ கிருதியை நிதானமாகப் பாடினார். ஸ்ரீராம்குமார் வயலினில் வரிகளை நிழலாய் நகலெடுத்தார். மிருதங்கத்தில் அருண்பிரகாஷ் கஞ்சிராவில் புருஷோத்தமன் இருவரின் மெத்தான வாசிப்பும் சௌக்யம்.

‘வாசவாதி’ எனும் வரியில் நிரவல். மரபிசையின் கடினமான அங்கமான நிரவலை கன்னடா ராகத்தில் செய்வதற்கான வித்தை கிருஷ்ணாவிடம் உள்ளது. தொடர்ந்து விளம்பகாலத்திலேயே ஸ்வரங்களை படிப்படியாக அடுக்கியது அவரிடம் மட்டுமே இன்று கேட்கமுடிந்த தெவிட்டா திரளமுது. இசையும் சொல்லும் இழைந்துவரும் சரணத்தை முடித்ததும் எழுந்த கரவொலியை அதை இயற்றிய தீக்ஷதரின் படைப்பூக்கத் திறனுக்கானதாய் கொள்ளலாம்.

அடுத்த ஆலாபனை மாயாமாளவகௌளை என்று நினைத்தேன். இல்லை. அரிதான ‘பரஸ்’ ராகம். ஆரோகணத்தில் மட்டுமே ‘ஸமகம’ போன்ற ஸ்வரக்கோர்வைகளை வைத்து கண்டுகொள்ளமுடியும். ஸ்வரங்கள் பாடுகையில் இது தெளிவானது. வயலினில் ஸ்ரீராம்குமாரிடம் சராசரிகளுக்கு மேலான ஆலாபனையே வெளிப்பட்டது. கச்சேரி நடைபெற்ற வெள்ளியன்று பரஸ் ராகத்தில் பாட தீக்ஷதர் கிருதி இருக்க, வித்தியாசமாக ‘நீலாயதாக்ஷி’ என்று திஸ்ர திரிபுடை தாளத்தில் சியாமா சாஸ்திரியின் கிருதியை பாடியது அருமை.

கிருஷ்ணா சஞ்சாரங்களில் அடுத்து கோடிகாட்டிய ராகம் கர்நாடக பெஹாக். ஸ்வரங்களின் கமகம் கார்வைகளில் இந்தப்பக்கம் இழுத்தால் நீலாம்பரி, அந்தப்பக்கம் நாடக்குறிஞ்சி என்றாகிவிடும். அருமையாக கம்பிமேல் நடந்தார். தியாகையரின் ‘நேநெந்து வேதகுதுரா ஹரி’ கிருதி. ஹரி, நான் உன்னை எங்கு தேடுவேன்? என்று பல்லவியிலேயே இறைகிறார் தியாகையர்.

அடுத்து தோடி மற்றும் மோஹனம் ராக ஆலாபனைகள் மட்டும். தோடியில் தரஸ்தாயியில் சில சஞ்சாரங்கள் பிரமிப்பானவை. மெல்லிசை வாடையடிக்காத மோஹனம் ஆலாபனையும் உசத்தியே. இரண்டுமே விரிவானவையில்லை. அடுத்து, அடாணா ராகத்தில் ரூபக தாளத்தில் ‘திருவொற்றியூர் தியாகராஜன்’ எனும் கனம் கிருஷ்ணய்யர் இயற்றிய கனமான தமிழ் பாடலை விளம்பகாலத்தில் பாடினார்.

சில ஆவர்த்தங்கள் ரூபக தாளத்தில் அருண் பிரகாஷும் புருஷோத்தமனும் ரம்யமான கோர்வைகள் வாசித்து ரசிக்கவைத்தனர். தனியை மிகச் சுருக்கமாக முடித்துக்கொண்டது ஏமாற்றம். அவகாசமின்மையோ என்றால், பாடகர் அதன் பிறகு அரைமணிநேரம் பாடவே செய்தார்.

இறுதிப்பகுதியில் “சாரதே கருணா நிதே” என்று உருக்கமாக கிருஷ்ணா பாடியது சந்திரசேகரேந்திரர் இயற்றியதாம். ஹமீர் கல்யாணி ராகத்தில் மிஸ்ரசாபு தாளத்தில் இசையில் பொருத்தியது ஸ்ரீராம்குமார். சந்தடியின்றி இவர் மரபிசையில் இவ்வாறு பல விஷயங்கள் செய்துகொண்டிருக்கிறார்.

சிந்துபைரவி ராகத்தில் ’ஊனேறு செல்வத்தில்” என ஆழ்வார் பாசுரத்தில் தொடங்கி, ‘அன்றி இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’ திருப்பாவையில் கச்சேரியை முடித்துக்கொண்டார்.

அரியக்குடி ராமானுஜர், திருவாவடுதுறை ராஜரத்தினம், குழல் மாலி, பாலமுரளிகிருஷ்ணா என்று மரபிசையில் மேதைகள் பல புதுமைகள், பரிசோதனைகள் நிகழ்த்தியிருக்கின்றனர். மரபிசையின் தேர்ச்சியில் சொக்கத்தங்கமான நம் கிருஷ்ணாவும் இளவயதிலேயே புதுமைகள் செய்வதற்கான சாதனைகள் தன்னிடம் உள்ளதாக மனோதிடத்துடன் கருதுகிறார். ஆலாபனைகள் மட்டுமே உருப்படிகளாய் கருதி, மேற்கால ஸ்வரப்பிரஸ்தாபங்கள், ரகளையான நிரவல்கள் போன்றவை தவிர்த்து, தனக்கென ஒரு கச்சேரி வழியை முன்னெடுக்கிறார். ஆஹா என்று தன் கச்சேரிகளில் ரசித்தும் கொள்கிறார்.

பரிசோதனைகள் என்றுமே இருகூர்முனைகள் கொண்டவை. “நல்ல கச்சேரின்னா நல்லா தூக்கம் வரணும் என்பார் என் கணவர்” என்றார் பின்னிருக்கை ரசிகை. இன்றைய விளம்பகால கிருஷ்ணா கச்சேரியை பொறுத்தமட்டில், அதற்கான தருணங்கள் ஏராளம் எனலாம். நல்ல கச்சேரி என்றும் கூறலாம்.