2013 டிசெம்பர் சங்கீத விழா: அம்ருதா வெங்கடேஷ் கச்சேரி

Standard

2013-dec-15-dinamalar-arunn-review-amrutha[15 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ளதின் ஒரு வடிவம்]

மைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் நவராகமாலிகை வர்ணத்தில் துவக்கிய அம்ருதா வெங்கடேஷ் பெங்களூருரைச்சேர்ந்த வளர்ந்துவரும் இசைக்கலைஞர். சரியான உச்சரிப்புடன், தமிழில் நிறைய பாடியது இன்றைய கச்சேரியின் பட்டொளி.

கௌளை ராகத்தில் தீக்ஷதரின் “ஸ்ரீ மஹாகணபதி” கிருதியில் சங்கதிகளின் அலங்காரங்கள் சற்றே மிகையானவை. ‘ரவிஸஹஸ்ர’ எனும் வரியில் தேர்ச்சியுடன் ஒலித்த ஸ்வரக்கல்பனையில் தியாகையரின் பஞ்சரத்ன கிருதியின் ஸ்வரக்கோர்வைகள் ஆங்காங்கே பளிச்சிட்டன..

முதல் விரிவான ஆலாபனை பஹூதாரி ராகத்தில். எடுத்ததும் ‘பதநிபாமக’ என்று சஞ்சாரத்தில் ராகம் எதுவென்பதை உணர்த்தினார். அருமையான ஆலாபனை. அந்தக்காலத்தில் மதுர மணி ஓஹோ எனப் பாடிய தியாகையரின் ‘ப்ரோவப்பாரமா ரகுராமா’ எனும் கிருதியை பாடி, ஸ்வரகல்பனை செய்தார். இங்கு வயலினில் பத்மா வாசித்ததை மிருதங்கத்தில் அர்ஜுன் கணேஷ் வாங்கி வாசித்து அமர்க்களப்படுத்தினார்.

அடுத்த ஆலாபனையும் சற்றே லேசான ஹம்ஸநாதம் ராகத்தில் துவங்கியதும், பாடகருடைய ஆத்ம தேர்வா இல்லை இந்தச்சபை ரசிகர்களுக்கென்றாகிய தேர்வா என விசனித்தேன். சுருக்கமாக முடித்துக்கொண்டு ரூபக தாளத்தில் ’தமிழிசை பாடவேண்டுமே’ என தண்டபாணி தேசிகரின் கிருதியை எடுத்ததும் வியந்தேன். இக்கிருதியின் தமிழ் புதியது. குறிப்பிடப்படும் வாத்தியங்கள் பழையன. குழல், யாழ், முழவு, என வாத்தியங்களை ஒருங்கிணைத்து எவ்வாறு தமிழில் பாடி இசைக்கவேண்டும் என்கிறார் தேசிகர். முழவு, தண்ணுமை இன்றைய மிருதங்கத்தின் தமிழ் தாளவாத்திய முன்னோர்கள் எனலாம்.

பிரதான ராகம் சாவேரி. ஆலாபனையில் நல்ல பிடிப்பிருந்தது, எனக்குப் பிடித்திருந்தது. சுவாதி திருநாளின் ‘ஆஞ்சநேயா, ரகுராம தூதா’ வித்தியாசமான தேர்வு. இதில் ‘ஜனகசுதாதி’ எனும் வரியில், சாவேரியின் வடிவம் கெடாமல், சற்றே தொய்வான நிரவல் செய்தார், ஸ்வரங்களில் ஈடுசெய்தார். அழகான, சத்தான ஸ்வரக்கோர்வை வைத்து முடித்து அர்ஜுன் கணேஷிற்கு மிருதங்கத்தில் தனி ஆவர்த்தனம் விட்டார். தனிப்பக்கவாத்தியமாய் அர்ஜூன் திடமாய் வாசித்து, நீளமான கோர்வை வைத்து முடித்துக்கொண்டார்.

அடுத்ததாய் அம்ருதா ‘கண் திறந்து பாரய்யா தென்பழநிவேலய்யா’ என்று பிலஹரி ராகத்தில் தொடங்கி, ஷண்முகப்பிரியா, கமாஸ் ராகங்களில் விருத்தம் பாடினார். இங்கு பாடல் வரிகளும் ராகங்களும் தெளிவாக பிரிந்துவந்தது சிறப்பு. தொடர்ந்து கமாஸ் ராகத்தில் பாடிய ‘ஜாலமே செய்வதழகாகுமா’ எனும் மாயூரம் விஸ்வநாத சாஸ்திரியின் கிருதியில் அனுபல்லவி ஒரு ஆவர்த்தத்தில் திஸ்ரமாகவும் அடுத்த ஆவர்த்தத்தில் சதுஸ்ரமாகவும் அமைந்திருந்தது.

துக்கடாவாக புரந்தரதாஸரின் ‘ராம நாம பாயஸகே’ பாடலை பெஹாகில் பாடியபிறகு, துவிஜாவந்தி ராகத்தில் பாலமுரளியின் தமிழ் சொற்கள் கொண்ட தில்லானாவைப் பாடி கச்சேரியை முடித்தார்.

பத்மா சங்கர் வயலின் பக்கவாத்தியத்தின் பொறுப்பை நன்கு உணர்ந்துகொண்டிருக்கிறார். ஆலாபனைகளில் பாடகரின் அனைத்து வாக்கியங்களையும் திருப்பி வாசித்துக் குழப்பமால், அவர் முடிக்கும் ஸ்வரத்தில் வாசித்து சரியான தொடர்ச்சியை பாடகரின் கற்பனைக்கும், ரசிகர்கள் இசையில் ஆழ்வதற்கும் உதவுவது அருமை.

அம்ருதாவிற்கு வதனம் வாடாமல், வாய் கோணாமல், காத்திரமாக ஆலாபனைகளை நிதானமாக வளர்த்தெடுக்க வருகிறது. ஸ்வரங்களின் கோர்வை சுற்றுவரை கச்சேரியின் அனைத்து அங்கங்களிலும் வயலினுக்கு சந்தர்ப்பம் வழங்கியதும், தனி ஆவர்த்தனத்திற்கும் நிறைய அவகாசமளித்ததும் நன்று. மின்-தம்பூராவை அணைத்துவைத்துவிட்டு, மரபான மரத் தம்பூரா கலைஞரை உபயோகித்ததும் நன்றே. ஆங்காங்கே அவர் கச்சேரியில் விறுவிறுப்பைக் கூட்டவும், நிரவலில் இன்னமும் அழுத்தமாய், பிரமிப்பாய் பாடுவதற்கு தேர்ச்சிபெறவும் முனையலாம். வாழ்த்துவோம்.

***

பாக்ஸ் மேட்டர்

இசைவிழாவையொட்டி கச்சேரிகளில் தமிழில் பாடுவோரின் மேல் கவியெழுதி வெளியிடுவதாய் இணையத்தில் ஓரிரு எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது ஆறுதலா, அச்சுறுத்தலா தெரியவில்லை.

ஆனால் தமிழிசைக்காக நாளிதழ்களில் வியாசம் எழுதுவோர், வலைப்பூக்களில் விண்ணப்பிப்போர் சிலராவது அம்ருதா போன்று தமிழில் நிறைய பாடுபவர்களின் கச்சேரிகளில் வந்தமர்ந்து பாராட்டினால் கலைஞர்கள் உற்சாகம் அடைவார்களே.