2013 டிசெம்பர் சங்கீத விழா: பந்துலரமா கச்சேரி

Standard

2013-dec-12-dinamalar-arunn-review-pantularama[டிசெம்பர் 12, 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

ஆந்திராவில் பிரபலமான சமகால கர்நாடக இசைக்கலைஞர்களில் ஒருவரான பந்துலரமா, கௌளை ராகத்தில் சஞ்சாரங்களுடன் பாரதிய வித்யா பவனத்தில் தன் கச்சேரியைத் துவக்கினார். முத்துஸ்வாமி தீக்ஷதரின் ‘ஸ்ரீ மஹா கணபதி ரவதுமாம்’ எனும் மிஸ்ரசாப்பு தாள கிருதியில், ஸுவரகல்பனையில் மந்திரஸ்தாயி சஞ்சாரங்கள் அவருடைய காத்திரமான குரலில் ரம்யமாய் ஒலித்தது.

அடுத்ததாய் சுத்தசாவேரி ராகத்தில் ஆலாபனை. பொதுவாக அநாயாசமாக குரலை உபயோகிப்பவர், இவ்வாலாபனையில் தயங்கியே செய்ததுபோலிருந்தது. சுருக்க முடித்துக்கொண்டார். ஷேவாக் போன்றோர் தடுத்தாடக்கூடாது.

இக்கால கச்சேரிகளில் பொதுவாக பெண்கள் பாடிக் கேட்க அரிதாகிவிட்ட தியாகையரின் ‘தாரினி தெலுஸுகொண்டி’ எனும் கடினமான கிருதியை பந்துலரமா தொடங்கியதும் மகிழ்ந்தேன். பல்லவியில் “த்ரிபூர சுந்-தாரினி”க்கு சங்கிலிச் சங்கதிகளால் அலங்காரம் செய்து பந்துலரமா பாடியது கௌரவம். இங்கு மிருதங்கத்தில் பத்ரி சதீஷ்குமார் கும்கிகளும் பரன்களுமாய் வாசித்தவிதம் பிரமாதம். சரணத்தின் முடிவில் த்ரிகாலமாகவே பல்லவியைப் பாடிமுடித்ததும் பாடகரின் வித்தையின் சான்று.

அடுத்துவந்த கல்யாணி ஆலாபனையில் சில பளிச் இடங்கள். பல தேய்விடங்கள். வயலினில் பாடகியின் கணவர் எம். எஸ். என். மூர்த்தியின் மதுரமான விரல்வித்தை அடக்கமான ஆலாபனையில் வெளிப்பட்டது. கச்சேரியில் வேறு சில இடங்களில் பாடகியின் சிறு சறுக்கல்களை ஈடுகட்டி சமாளித்தார். சியாமா சாஸ்திரியின் ‘தல்லி நின்னு நெரநம்மினானு’ கிருதி, சிலர் பாடுகையில் ‘தள்ளி நின்னு’ என்று காதில்விழுந்து ஓரமாய் நின்று கேட்கச்சொல்கிறாரோ எனத்தோன்றும். பந்துலரமாவின் சுந்தரத் தெலுங்கு உச்சரிப்பில் சரியாகக்கேட்டது. நிரவல் ‘சியாம கிருஷ்ண’ எனும் வரியில் செய்தார்.

சரியான தமிழ் உச்சரிப்புகளுடன் ‘கொஞ்சி கொஞ்சி வா குஹனே’ என்று பெரியசாமி தூரனின் கிருதியை கமாஸ் ராகத்தில் பாடிவிட்டு, தேனுகா ராகத்தில் ராகம் தானம் பல்லவியைத் தொடங்கினார். அருகில் உள்ள தோடி ராகத்துடன் குழப்பமில்லாமல் செய்த தேனுகா ஆலாபனை சீரிய முயற்சியே. தானம் சிறப்பாகச் செய்தார்.

பத்து அக்ஷரங்கள் கொண்ட சதுஸ்ர மட்டிய தாளத்தில், ”நீ சரி சமானமெவ்வரே தயாசரதே தாசரதே” என்பது பல்லவி. ரஞ்சகமான மெட்டில் அமைந்திருந்ததை மேற்காலத்தில் பாடுகையில் கிட்டத்தட்ட ‘ஆடுபாம்பே’ ரேஞ்சிற்கு ஒலித்தது. மகுடி போலிருப்பதால் ரசிக்கலாம். ஆனால் நிச்சயம் தேனுகாவின் செவ்வியல் வடிவிற்கு இழப்பே. இங்கு நிரவலும் மேற்காலத்தில் ஸ்வரங்களில் ஏறியிறங்கும் பயிற்சியாகிப்போனது. குரல் மட்டும் மந்திரஸ்தாயியில் வசீகரத்தை இழக்காமலிருந்தது ஆறுதல். ராகமாலிகையில் பல்லவியை வடக்கத்திய துர்கா மற்றும் தர்பாரி கானடா ராகங்களில் பாடினார்.

கச்சேரி முழுவதும் சந்தர்ப்பம் அமைகையில் கஞ்சிரா கோபாலகிருஷ்ணன் பிரமாதமான வாசித்தார். பத்ரி சதீஷ்குமாரின் மிருதங்கம் கட்டுப்பாடோடு வாசிக்கையில் கச்சேரியை உயர்த்துகிறது. தனி ஆவர்த்தனத்தில் மட்டிய தாளத்தில் குறைப்பு செய்கையில், ஐந்து அக்ஷரங்கள் வாசிக்கும் கோர்வைகள் சில தாளத்திற்குப் பொருந்திவராதது அன்றைக்கான சிறுபிழையே. ஆனால் கிருதியின் சரணங்களிலும், ஸ்வரகல்பனை பகுதியிலும் வாசிப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது, ஒருங்கிணைத்து கேட்பதற்கான இசையை நிலைகுலையவைப்பது. சுத்தசாவேரியில் இன்று பாடகி திணறியது சான்று. பொதுவில் மிருதங்கம் தன்பாட்டிற்கு வாசிக்காமல், வித்வான் பாட்டிற்கு வாசிப்பதில் கவனம்செய்தால் நலம்.

கச்சேரியின் இறுதிப்பகுதியில் ‘பாலகிருஷ்ணம்’ என்று நாராயணதீர்த்தர் இயற்றியதை முகாரி ராகத்தில் பாடுகையில், ஆதிதாளத்தில் பல்லவியையும் சரணத்தையும் சதுஸ்ரம் திஸ்ரம் என்று நடையை மாற்றிப் பாடியது சிறப்பு.

பந்துலரமா இசைக்கலைஞர்கள் கச்சேரிகளில் பரிமளிக்கத்தேவையான சாதனா முறைகள் பற்றி ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். அதன் செயல்முறைகளில் சில அம்சங்களே இன்றைய கச்சேரியைப் பொறுத்தமட்டில் அவருடன் மேடையேறின.

***

பாக்ஸ் மேட்டர்

பவன் உட்பட அநேகமாக அனைத்து சபாக்களும் ஏஸி செய்து வெளியிலிருந்து வரும் இடைஞ்சலான சப்தங்களை அடக்கிவிட்டனர். உள்ளிருந்தும் கர்நாடக சங்கீதம் பொதுமக்கள் காதுகளுக்கு வெளியேறாமல் முடங்கிவிட்டது என்பது முன்னொருகாலத்தில் கிருஷ்ணகானசபா ‘கீத்து கொட்டாய்க்கு’ வெளியே நின்று கச்சேரி கேட்டவர்களுக்குப் புரியும்.