[டிசெம்பர் 11, 2013 தினமலர் நாளிதழில் வெளியான கட்டுரையின் ஒரு வடிவம்]
பந்துவராளியை இக்கால கச்சேரிகளில் பூர்விகல்யாணி ஓரங்கட்டிவிட்டதோ என்று இரண்டு நாள்கள் முன்னர் இப்பகுதியில் குறைபட்டது கேட்டுவிட்டதோ. கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் நாரத கான சபாவில் நடைபெற்ற கச்சேரியை உன்னிகிருஷ்ணன் பந்துவராளி சஞ்சாரங்களில் தொடங்கினார். “கேட்டதைக் கொடுப்பவன் உடுப்பி கிருஷ்ணன், கேட்டவுடன் கொடுப்பவர் நம் உன்னிகிருஷ்ணன்” என்றார் அறிவிப்பாளர்.
உடன் வயலினில் எம்பார் கண்ணன், மிருதங்கத்தில் திருச்சி சங்கரன், கடத்தில் வி. சுரேஷ் வாசிக்க, சுவாதி திருநாளின் ’சரோருஹாஸன ஜாயே பவானி’ கிருதியை நிதானமாகப் பாடி, ‘புரந்தராதி சுரோத்தம…’ எனும் அனுபல்லவி வரியில் நிரவலும் செய்தார்.
அடுத்ததாய் பாபநாசம் சிவன் இயற்றிய ‘கற்பக மனோஹர’ கிருதியை மலையமாருதம் ராகத்தில் கண்டசாப்பு தாளத்தில் பாடினார். வித்தியாசமான தேர்வு எனலாம். வேறு எதுவும் சொல்வதிற்கில்லை. கச்சேரியின் முதல் விரிவான ஆலாபனை வாகதீஸ்வரி ராகத்தில். சில பத்தாண்டுகள் முன்னர் டி. கே. ரங்காச்சாரி செய்த ஆலாபனைகள் உரைகல். ஆலாபனையைவிட உன்னிகிருஷ்ணன் ‘பரமாத்முடு’ எனத் தொடங்கும் தியாகையரின் கிருதியை ஆதி தாளத்தில் நிதானமாய்ப் பாடியது நேர்த்தியாக இருந்தது.
கச்சேரியின் பிரதான ராகம் ஷண்முகப்பிரியா. அடிக்கடி பல்லைக்கடித்துக்கொண்டு பாடுகிறாரோ எனும் விகல்பம் விலகி, இதன் ஆலாபனையில் உன்னிகிருஷ்ணனின் குரல் பிரிந்து ஓங்கியது. அகாரங்கள் அலர்ந்தன. அவ்வப்போது ஏஸி குளிர் குரலையும் தொட்டது.
ஷண்முகப்பிரியாவை சில வயலின் வித்வான்கள் செய்வதுபோல் கொஞ்சி மலிவாக்காமல், ராக லக்ஷணம் உறையும் தரமான பிடிகள் பலதை வெளிப்படுத்தி வாசித்து எம்பார் கண்ணன் கௌரவப்படுத்தினார். இங்கு அவரின் வேகமான, கட்டுப்பாடான, விரல்வித்தை பலம்.
பட்ணம் சுப்ரமணியரின் ‘மரிவேர திக்கெவரய்ய ராமா’ எனும் கிருதியை மத்யமகாலத்தில் சர்வலகுவில் மிருதங்கத்தின் சொற்கட்டுக்கள் உயிரூட்டி உயர்த்தியது. எதிர்பார்த்தபடி ‘ஸன்னுதாங்க ஸ்ரீவெங்கடேச’ எனும் வரியில் நிரவல். அடுத்த சில ஆவர்த்தங்களில் நிரவல் சொர்க்கம் என்றிருக்க, முத்தாய்ப்பாய் எதுவும் செய்து அதை எட்டாமல், சட்டென்று ஸ்வரத்திற்கு வழுக்குவது உன்னியிடம் ஏமாற்றம்.
சுறுசுறுப்பாய் ஸ்வரங்கள் பாடி, பழகிய கோர்வையில் முடித்து, தனி ஆவர்த்தனம் விட்டார். திருச்சி சங்கரன், பழநி சுப்ரமணியப்பிள்ளையின் சிஷ்யராய் புதுக்கோட்டை வாசிப்பு வழிவந்தவர். அயல்நாட்டில் பலவருடம் தங்கிவிட்ட அவரின் மனவிலாஸம் கச்சேரி முழுவதுமே பட்டவர்த்தனம். கீர்த்தனை சரணங்களை உபபக்கவாத்தியம்தான் தொடங்குவார். வயலின் வாசிக்கையில் கடம்-தான் உடன் வாசிப்பு. இரண்டு பேர் கைதட்டிவிட்டார்களே என்று தனியில் கடத்தின் மொஹராவில் மிருதங்கம் குறுக்கே புகுந்து பிடுங்கவில்லை. தன் முறை வருகையில் அடித்து வாசித்து கைதட்டலை அதட்டவில்லை. வாசிப்போ உன்னதம்.
பத்துவிரல்களும் கடத்தில் நர்த்தனமாட, அதன் வாயை சாய்த்து வயிற்றினால் பொத்தித்திறந்து நாதத்தின் தன்மையை கட்டுப்படுத்தி, உடல் முழுவதுமாய் ஃபரன்கள் பறக்க, வியர்வை தெறிக்க, சுரேஷ் வாசிக்கையில் எழுந்திடும் லய ஆலயத்தில், உடுக்கையொலியுடனான தாண்டவம் ப்ரத்தியட்சம். தரிசனம்.
கச்சேரியின் இறுதிப்பகுதியில் ராதா சமேதா கிருஷ்ணா-வில் ஜி. என். பாலசுப்ரமணியனின் பிரசித்தியான பாடும்விதத்தைத் தவிர்த்து, தனிவழியில் முயன்றது உன்னிகிருஷ்ணனுக்குச் சிறப்பு.
சுமார் பதினைந்து இருபது வருடங்கள் முன்னால் ஸ்ரீரங்கம் தியாகராஜர் ஆராதனைகளில் பாடுகையில் இருந்து உன்னிகிருஷ்ணனின் சிரத்தை எனக்குப் பிடிக்கும். சிறுசிறு ஸ்வரத்துண்டுகளாய் ஆலாபனை செய்யும் அவர் பாணியில், கடல் அலைகளென தீண்டிவிட்டு அகல்கிறது புறவயமாகச் சரியாக இருக்கும் இசை. அகத்தை ஆக்கிரமித்து அமிழ்த்துவதில்லை எனலாமோ.
***
பாக்ஸ் மேட்டர்
திருச்சி சங்கரன் மற்றும் வி. சுரேஷ் தனி ஆவர்த்தனத்திற்கு எழுந்து செல்லும் ரசிகமணிகளுக்கு ஆத்திரத்துடன் எதுகையிடும் ஒன்று வந்திருக்கவேண்டும்.
ஆனாலும் சங்கரன்-சுரேஷ் வாசிப்பை முழுதும் ரசித்துக் கைதட்டிவிட்டே எழுந்து சென்றனர் எனக்கு முன் இருக்கைகளில் இரு ஆங்கிலேய நாரீமணிகள்.