2013 டிசெம்பர் சங்கீத விழா: சிக்கில் குருசரண் கச்சேரி

Standard

2013-dec-10-dinamalar-arunn-review-sikkil[டிசெம்பர் 10, 2013 தினமலர் நாளிதழில் வெளியான கட்டுரையின் ஒரு வடிவம்]

கார்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் நாரத கான சபாவில் பாடிய குருசரணுக்கு வசீகரிக்கும் சாரீரம், களையான முகவெட்டு. இரண்டாமவதை அரங்கில் செல்பேசியில் அடிக்கடி இவரை க்ளிக்கிக்கொளும் ரசிகைகள் எழுதவிண்ணப்பிக்கின்றனர்.

சாவேரி ராகத்தின் சில சஞ்சாரங்களைப் பாடி, கொத்தவாசல் வெங்கடராம ஐயரின் ‘சரஸுட’ எனும் ஆதி தாள வர்ணத்தில் கச்சேரியைத் துவக்கினார். அடுத்ததாய் ‘புவனேஸ்வரியாம்’ என்று மோஹனகல்யாணி ராகத்தில் முத்தையா பாகவதரின் ஆதிதாள கிருதியைப் பாடினார். மிருதங்கத்தில் கிருதி அறிந்தவர் உடன் வாசித்தால் எவ்வாறு இசை பரிமளிக்கும் என்பதற்கு பக்தவத்சலத்தின் வாசிப்பு சான்று.

கச்சேரியின் முதல் ஆலாபனை ஆச்சர்யமாய் கன்னடகௌளை ராகத்தில். இக்கால கச்சேரிகளில் அரிதாகிவிட்ட இந்த ராகத்தில் ஆலாபனையை முயன்றதற்காக குருசரணை பாராட்டலாம். அவ்வளவாக சோபிக்கவில்லை. வயலின் சில நிமிடங்கள் ராகத்தை வளர்த்தெடுத்தார். பல நிமிடங்கள் ஸ்வரங்களாய் அடுக்கினார்.

கிருதி ‘ஸொகஸு ஜூட தரமா’ என்று தியாகையருடையது. ஒளிரும் வதனமும் மிளிரும் கன்னங்களுமாய் உன்னைப்போல் அழகுடையவர் வேறுயார் என இராமபிரானை வருணிக்கிறார். தேசாதி தாளத்தில். தேசாதி என்பது ஆதி தாளத்தில் சமத்தில் இருந்து ஒன்றரை தள்ளி எடுப்பு என்றால் அடிக்க வருவீர்கள். ஆதி தாளத்தில் ஒருவகை என்றாவது மனதில் போட்டுவையுங்கள்.

அடுத்ததாய் ‘நிவாடநேகான’ என்று சாரங்கா ராகத்தில் கண்டசாப்புவில் தியாகையரின் கிருதியில் விரைந்துவிட்டு, கச்சேரியின் பிரதான அங்கமாய் ராகம் தானம் பல்லவிக்கு வராளி ராகத்தை எடுத்துக்கொண்டார். அருமையான ஆலாபனை. வயலினில் பாஸ்கரும் சிரத்தையாக வாசித்து ராகத்திற்கு நீதி செய்தார்.

ஆலாபனை பரிமளித்த அளவில் தானம் அமையவில்லை. தான வாக்கியங்களில் இறுதியில் ஸ்வரங்கள் தெளிவில்லாமல் வழுக்கியது குருசரணின் அன்றைக்கான குறையாக இருக்கலாம். வயலின் பாஸ்கருக்கு தானத்தில் நல்ல பிடிப்பு இருந்தது. சபையோரிடம் சபாஷ் வாங்கினார்.

பல்லவி “முருகா வா வா, கந்தா வா, வா, பழநி மலையுரையும்”. ஆதி தாளத்தில் தொடக்கத்தில் இருந்து இரண்டு அக்‌ஷரம் தாள இடைவெளி விடுத்துப் பல்லவியில் ‘முரு’ வை விட்டு, ‘கா வா வா’ எனப் பாடத்துவங்கினால் பிரபலமான கிருதியை நினைவுறுத்தி மகிழ்விக்கும். குருசரண் அருமையாகச் செய்தார். பலமான தாளவாத்தியங்கள் விறுவிறுப்பில் இழுத்தாலும் நிலையான காலப்பிரமாணத்தை தக்கவைத்துப் பாடும் மனோபலம் குருசரணிடம் உள்ளது. இப்பலம் ‘த்ரிகாலம்’ என்று மூன்று வேகங்களில் பல்லவியைப் பாடுகையிலும் வெளிப்பட்டது.

பல்லவிக்குப் பிறகு விரிவான தனி ஆவர்த்தனம். முதல் தனிச் சுற்றில் வழக்கமான நடைகளை பக்தவச்சலம் மிருதங்கத்திலும், வைக்கொம் கோபாலகிருஷ்ணன் கடத்திலும் ஆதி தாளத்தில் பொருத்தி வாசித்தனர். அடுத்த சுற்றில் மிருதங்கத்தில் பொறி பறந்தது. இரண்டு மணிநேரக் கச்சேரியில் இருபத்தியைந்து நிமிடம் ஆக்கிரமித்த தனி ஆவர்த்தனத்தின் விளைவு, கச்சேரியை ‘முருகனின் மருபெயர்’ என  பெஹாக்கில் துக்கடாவும் தொடர்ந்து தில்லானாவும் அவசரமாகப் பாடி முடித்துக்கொண்டார்.

பிரதான கச்சேரி இடத்திற்கு வந்துவிட்டிருந்தாலும் குருசரண் அதற்கே உரித்தான சில அபத்தங்களை செய்யாத ஆடவர். மேடையில் ஆடாதவர். ஆனாலும் மேடையில் அன்றைக்கான பிரமிப்பும், விடுபட்ட வகையான அசரடிக்கும் படைப்பூக்கமும் கைகூடவில்லை. மருதாணியிட்ட விரல்களால் கைகொடுப்பதுபோன்ற ஜாக்கிரதையான, திட்டமிட்ட கச்சேரிகளே. பொறுத்திருப்போம்.

***

பாக்ஸ் மேட்டர்

இன்று கச்சேரியில் வராளியில் அனைவரும் ஆழ்ந்திருக்க, அதில் இல்லாத ஸ்வரங்களில் செல்பேசி ஒலிக்க, கூட்டத்தில் லஜ்ஜையில்லாமல் எடுத்துப்பேசும் (கச்சேரில இருக்கேன்; தோசை சொல்லிடு) ரசிகர். இவர் போன்றோரை முன்னிறுத்திதான் சில வருடங்கள் முன்னரே தன் கச்சேரி தொடக்கத்தில் சித்ரவீணா ரவிக்கிரண் ரசிகர்களிடம் செல்பேசியின் அணைக்காவிடில் காலர்-டியூனையாவது வராளியில் வைத்துக்கொள்ளச்சொன்னார்.