[டிசெம்பர் 09, 2013 தினமலர் நாளிதழில் வெளியான கட்டுரையின் ஒரு வடிவம்]
கூட்டம் அம்மும் எனத்தெரிந்து விடிகாலையிலேயே அலார்ம் வைத்து எழுந்து, சுருக்க கிளம்பி, மீட்டர் போடும் ஆட்டோவாய் பார்த்து ஏறி, அரக்க பரக்க ‘கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்’-ஸின் கச்சேரிக்காக நாரத கான சபாவை அடைந்தால், ஹவுஸ்ஃபுல். சஞ்சய்-னா சும்மாவா. வெளியே ‘வுட்லேண்ட்ஸில்’ ஏமாற்றத்தைக் குறைக்க கசப்பாய் ஒரு காஃபி அருந்துகையில் எதிரே ரவா தோசை மாமா என் ஒரு புன்னகையில் தன் அதிகப்படியான ‘டோனார் பாஸை’ கூலாய் எடுத்துக் கொடுத்தார் (பஞ்ச் அடித்ததும் திருப்பி கொடுத்துடனும்).
நேரத்திற்கு கச்சேரியை ‘சரஸிஜ’ என்று காம்போதி ராக ஆதி தாள வர்ணத்தில் தொடங்கிவிட்டார் சஞ்சய். விளம்பகாலத்தில் கார்வைகள் தெளிவாய் நிதானமாய் விழுந்தது. அடுத்து வந்த கேதாரம் ராகத்தை ஒரு சில தொடக்க சஞ்சாரங்களிலேயே காட்டிக்கொடுத்தார். தீக்ஷதரின் வர்த்தகமுத்திரையான வடிவில் சரணங்கள் அமைந்த ‘ஆனந்த நடனப் பிரகாஸாம்’ கிருதியை நிதானமாய்ப் பாடினார். இறுதியில் தில்லானா வகையில் ஜதிஸ்வரங்களுடனான சிட்டைஸ்வரங்கள் சஞ்சய்யின் அழுத்தமான வெளிப்பாட்டில் சிறப்புற்றது.
விரிவான முதல் ஆலாபனை பூர்வி கல்யாணியில். வழக்கமான ‘சப்-மெயின்’ இடத்தில் அறுபது எழுபதுகளில் கொலுவீற்றிருந்த பந்துவராளியை சமீப சில வருடங்களாய் பூர்வி கல்யாணி இடம்பெயர்த்துவிட்டது எனத் தோன்றுகிறது. ஆலாபனையில் சீசன் துவக்கத்தில் ஓங்கியிருக்கும் தன் குரல் வளத்தை சஞ்சய் நன்கு உபயோகித்துக்கொண்டார். மதுரமாய் நாதமெழுந்த வயலினில் சஞ்சீவ் சுருக்கமாய் சாருபிழிந்தார். விறுவிறுவென அமைந்த ‘பரலோக சாதனமே மனஸா’ கிருதியின் இடைவெளிகளில் கணகணவென மிருதங்கத்தில் திருவனந்தபுரம் பாலாஜியும் கஞ்சீராவில் குரு பிரசன்னாவும் கோர்வைகள் வாசித்தனர். தன் பங்கிற்கு சஞ்சய் ஒரு இறுதிக் கார்வையை மூச்சுகட்டி ஒரு ஆவர்த்தம் முழுவதும் தொடர, இதை எதிர்பாராமல் திணறி சுதாரித்து உருட்டினார் மிருதங்கம். சபையோரிடம் கலைஞர்கள் அப்ளாஸ் வாங்கிய தருணம்.
அடுத்ததாய் துவிஜாவந்தி ராகம், சொக்கவைக்கும் அங்கம் ஒரு புறம், சிறகடிக்கும் குதூஹுலம் மற்றொருபுறம் என கச்சிதமான ஆலாபனை. எதிர்பார்த்தபடி முத்துஸ்வாமி தீக்ஷதரின் ‘சேட்ட ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ கிருதியை நிதானமான காலப்பிரமாணத்தில் பாடினார்.
விறுவிறுப்பிற்கு கோட்டீஸ்வரரின் ’வேலய்யா தயவில்லையா’ எனத்தொடங்கும் சாவேரி ராக தமிழ் கீர்த்தனைக்குப் பிறகு, கச்சேரியின் மெயின் உருப்படி கரஹரப்பிரியா. தேர்ந்த கலைஞரான சஞ்சய்க்கு கரஹரப்பிரியா தாய்வீடு போல. வேண்டிய நேரம் வேண்டிய ஸ்வரக்கதவுகள் திறக்க, அனைத்து அறைகளும், அதன் ஓரங்களும், சுவற்றின் காரைகளும், கமகக் கார்வைகளும், அத்துப்படி. அருமையான ஆலாபனை. வயலினில் சஞ்சீவ் தன் ‘வில்வித்தையை’ நேர்த்தியாக வெளிப்படுத்தினார்.
விரிவாகப் பாடுவதற்கு ஆதிதாளத்தில் ‘சதத்தம் தாவக்க’ என்று ஸ்வாதித்திருநாள் கிருதியை எடுத்துக்கொண்டார். ‘மதுசூதனாஸம்…’ எனும் சரண வரியில் நிரவல் செய்தார். இங்கு கஞ்சீராவின் விறுவிறுப்பான வாசிப்பு அருமை. நிரவலின் முடிவில் ஸ்வரக்கல்பனையில் சஞ்சய்யின் பாண்டித்யம் கரஹரப்பிரியாவின் பல கிருதிகளின் ஸ்வரக்கோர்வைகளாய் வெளிப்பட்டது.
தனி ஆவர்த்தனத்தில் மிருதங்கத்தில் பாலாஜி செய்த வித்தைகள் அனைத்தையும் கஞ்சீராவில் வாங்கி வாசித்தார் குரு பிரசன்னா. இடையிடையே வாங்காததையும் வாசித்து பிரமிக்கவைத்தார்.
இடையில் எதிர்பார்த்தபடி தமிழில் பஹூதாரி ராகத்தில் ‘உன்னடியே சரணடைந்தேன்’ எனப் பாடிவிட்டு, ராகம் தானம் பல்லவிக்குச் சென்றார். தொடக்கத்தில் ரஞ்சனி போலிருந்த ராகம் பெயர் பிரியதர்ஷினி. அவ்வப்போது ஹம்ஸநந்தியின் சாயலுமடித்தது. பரிச்சயமில்லாத ராகத்தில் ஆலாபனையைவிட தானம் சிறப்பாய் அமைந்தது. .திஸ்ர திரிபுடை தாளத்தில் ‘ஓம் நமச்சிவாய வென்று சிந்தனைச்செய் மனமே’ என்பது பல்லவி. மூன்றுகாலங்களில் பல்லவியை சஞ்சய் பிரித்தாய்ந்ததெற்கெல்லாம் வயலினும், பக்கவாத்தியங்களும் அருமையாக துணைவந்தனர். ராகமாலிகையில் நாட்டக்குறிஞ்சி, ரீதிகௌளை, காப்பி நாராயணி, பெஹாக் என்று ஸ்வரமாலையாய் நமச்சிவாயவை மனத்தில் சிந்தனை செய்யவைத்தார். ஆடும் சிதம்பரமோ என்று பெஹாக் ராகத்திலேயே துக்கடாவில் கச்சேரியை முடித்துக்கொண்டார்.
சில வருடங்கள் முன்னால் இல்லாத ஒரு அமைதி சஞ்சயின் இசையில் இன்று தென்படுகிறது. தன் பலங்களை நன்கு உணர்ந்துகொண்டிருக்கிறார். தொடக்கத்தில் அறிவிப்பாளர் “கிரிக்கெட்டில் சதமடிக்க சச்சின், சங்கீதத்தில் இதமாய்ப்பாட சஞ்சய்” என்றார். உண்மை.