இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத் ரத்னா’ நாட்டின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான சின். என். ஆர். ராவ்-விற்கு இவ்வருடம் வழங்கப்பட்டுள்ளது. கூடவே சச்சின் டெண்டுல்கருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
*
ராவ் இந்திய அரசாங்கத்துடன் பல்வேறு அறிவியல் சார்ந்த குழுக்களிலும் திட்டங்களிலும் தொடர்ந்து பணியாற்றியவர். பட்டியல் வெகு நீளம். பிரதம மந்திரியின் பிரதான அறிவியல்-ஆலோசனை குழுவின் தலைமைப்பொறுப்பில் (நான்கு பிரதம மந்திரிகளின் பதவிக்காலங்களை அடக்கிய காலவரையறையில்) செயலாற்றியுள்ளார். ராவ் இந்திய அறிவியல் மற்றும் அறிவியலாளார்களின் மேல் மிகுந்த பிடிப்பும் அதிகார சக்தியும் வைத்திருப்பவர். இச்செயல்பாடுகளில், நிச்சயம் இவர் கீழிருக்கும் அல்லது சக-விஞ்ஞானிகள் சிலருக்கு மூச்சு முட்டியுள்ளது. நேரடியாகவும் உட்பூசல்களாகவும் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்துள்ளன. இக்கட்டுரையில் இவற்றைத் தவிர்க்கிறேன். ஆய்வுகளும், சார்ந்த ஓரிரு சர்ச்சைகளுமே இக்கட்டுரையின் உள்ளடக்கம்.
*
சச்சின் நம் அனைவரின் ‘டார்லிங்’. நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து நேற்று (நவெம்பர் 16, 2013) ஓய்வுபெற்றார். ஒரு சாம்பியனின் வெற்றிக்குப் பின்னால் எவ்வளவு தியாகங்கள் எவ்வெவரிடமிருந்தெல்லாம் தேவை என்பதை உணர்த்தும் வகையில் பெற்றோர் முதல் பெருந்திரள் ரசிகர்கள் வரை அரவணைத்த அருமையான நன்றியுரையுடன் விடைபெற்றார். வருங்காலத்திற்கு கிரிக்கெட்டில் எட்டக்கூடிய சாதனைகள் எவை என்பதை நிறுவியதோடு அவற்றைச் சென்றடையவேண்டிய வாழ்க்கைப்பாதையையும் இளைய சமுதாயத்திற்கு உணர்த்தியுள்ளார். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பாரத் ரத்னா.
சின். என். ஆர். ராவ் (சிந்தாமணி நாகேஸ ராமச்சந்திர ராவ்) எண்பது வயதை நெருங்கும் அறிவியல் இளைஞர். இன்னமும் ரிடையர் ஆகவில்லை. வேதியியல் விற்பன்னர். மிக முக்கியமாக, இந்தியாவிலிருந்தபடியே, இங்கிருக்கும் வசதிகளை வைத்துக்கொண்டே, ஒரு துறையில் பெருஞ்சாதனை செய்துகாட்டியவர். விஞ்ஞானம்-தொழில்நுட்பம் துறைகளில் சி. வி. ராமன் (1954), விஸ்வேஸ்வரய்யா (1955), அப்துல் கலாம் (1997) வரிசையில், பாரத் ரத்னா பெறும் நான்காவது நபர்.
சச்சின், ராவ், இருவருக்கும் சில ஒற்றுமைகளைக் குறிப்பிடலாம். தங்கள் துறையில் நம்பிக்கையானவர்கள். இளவயதிலேயே நட்சத்திரங்களாய் அறியப்பட்டவர்கள். தொழிலை, துறையை மிகவும் விரும்பித் தேர்வுசெய்துகொண்டவர்கள். நெடுங்காலம், சராசரிக்கும் மிக அதிக தரத்தில் பணியாற்றியவர்கள். செயலாற்றும் விதத்தில் இன்றளவிலும் வெளிப்படும் குழந்தை-போன்ற உற்சாகத்தில் பலரை துறைபால் ஈர்த்தவர்கள். ஒருவர் டெஸ்ட், ஒரு-நாள், டுவெண்டி-டுவெண்டி என்று கிட்டத்தட்ட எழுநூறு போட்டிகளுக்குமேல் பங்குபெற்றவர் என்றால் அடுத்தவர் திட-வேதியியல், நேனோ-அறிவியல் துறைகளில் ஆயிரத்தைநூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியவர். ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ரன்கள் என்றால், அடுத்தவரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான முறை சக ஆராய்ச்சியாளர்களால் சுட்டப்பட்டுள்ளது. இருவரும் இல்லறத்தில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியவர்கள். சச்சின் தன் நன்றியுரையில் மனைவியின் உறுதுணையை “என்னுடைய பெஸ்ட் பார்ட்னர்ஷிப்” என்று சிலேடையாகச் சொன்னார். ராவ் தன் மனைவியுடன் சமையல் செய்வது பொழுதுபோக்கு என்கிறார். மனைவியுடன் இன்றுவரை குழந்தைகளிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்கு உழைக்கிறார். ராவ் இவ்வகையில் அளித்த ஒரு உரையை சில வருடங்கள் முன் நேர்முகமாய் கேட்டிருக்கிறேன். உரையின் முடிவில் நிகழ்ந்த ஹலோ-கைகுலுக்கல்களில் என் குரலும் கையும் இருந்தது.
சச்சின் சாதனைகள் பற்றிய தகவல்கள் நமக்கு பரிச்சயமே. இணையம் முதல் குமரிவரை எங்கு பெறுவது என்றும் தெரியும். சின். என். ஆர். ராவ் பற்றிய சில தகவல்களை இங்கு உராய்ந்துகொள்வோம்.
*
ராவ் தற்போது ஜவஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். 1950-களில் அமேரிக்காவின் பர்டூ பல்கலைகழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று, பிறகு சில வருடம் பெர்க்லி கலிஃபோர்னியாவிலுள்ள பிரசித்திபெற்ற பல்கலைகழகத்தில் பின்-முனைவர் தகுதியில், நவீன வேதியியலின் தந்தை என்று கருதப்படும் ஜி. என். லூயிஸ்-உடன் சில ஆய்வுகளை மேற்கொண்டார். 1959-இல் இந்திய அறிவியல் கழகத்தில் விரிவுரையாளராக ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார். பிறகு அப்போது தொடங்கப்பட்ட ஐ.ஐ.டி. கான்பூரில் இணைப்பேராசிரியராகச் சேர்ந்தார். 1976இல் மீண்டும் இந்திய அறிவியல் கழகம். இப்படித் திக்கித்திக்கித் தொடங்கிய இந்திய ஆராய்ச்சி வாழ்க்கையில் ராவ் பல இலக்குகளை எட்டியுள்ளார்.
ராவ் நேனோ-அறிவியலை இந்தியாவிற்கு கொண்டுவந்த முன்னோடி. அன்றாட அறை-சூட்டில் நிகழும் (அதி-கடத்திகள் அல்லது) மீ-கடத்திகளைப் (ரூம் டெம்ரேச்சர் சூப்பர்-கண்டக்டிவிட்டி) பற்றிய இந்திய ஆராய்ச்சிகளை உலகத்தரத்திற்கு எடுத்துச்சென்றவர். ஐம்பதுகளில் தொடங்கி இன்றுவரை பலபத்தாண்டுகளில் வேதியியலில் உதிக்கும் புதிய ஆராய்ச்சிக் கருத்தாக்கங்களை ஒட்டிய ஆராய்ச்சிகளை இந்தியாவில் முதன்மையாக நிகழ்த்திக்காட்டியவர். பென்ஸீன் வேதியையலில் ஆய்வுகளைத் தொடங்கியவர், 1968 வாக்கில் அ-கரிம வேதியியலுக்கும், திடப்பொருள் வேதியியலுக்கும் மாறினார். கோர்-ஷெல் கட்டாலிஸிஸ், அ-கரிம கரிம இரசாயன மாற்றங்கள், அறை-வெப்ப மீ-கடத்திகள், நேனொ-துகள்கள், நேனோ-குழாய்கள், கார்பன் நேனோ குழாய்கள், கிராஃபீன் பொருளின் தன்மைகள், கிராஃபீன் ரிப்பன்கள், குவாண்டம் பொட்டுகள், லித்தியம் பாட்டரிகள், டெம்ப்ளேட் சிந்தஸிஸ்… ராவ் ஆராய்ந்த இவையனைத்துமே வேதியியலில் வெவ்வேறு காலகட்டங்களில் முக்கியமானவையாகக் கருதப்பட்ட கருத்தாக்கங்கள்.
ஒரு ஆய்வைப்பற்றி சற்றே விரிவாக. மீ-கடத்திகள் (சூப்பர் கண்டக்டர்கள்) செய்வது பற்றிய ஆராய்ச்சி, 1911இல் கேமர்லிங் ஓனஸ் முதலில் மீ-கடத்தும் விளைவைக் கண்டறிந்ததில் தொடங்கியது. கம்பிகளில் மின்சாரம் கடக்கையில், கம்பி செய்யப்பட்ட பொருளுக்கேற்றவகையில் இக்கடத்தலுக்கு ‘எதிர்ப்பு’ கிளம்பி, சிறிதளவேனும் மின்சாரம் வெப்பமாய் விரயமாகும். இது அன்றாட மின்சாரக்கம்பிகளில் இன்றளவும் நிகழ்கிறது. சில பொருள்களை குளிர வைக்கையில், இந்த ‘எதிர்ப்பும்’ குறையும் என்று ஓனஸ் கண்டுபிடித்தார். இதனால், இவ்வெதிர்ப்பே இல்லாத பொருள் இழப்பின்றி மின்சாரம் கடத்தும் ‘மீ-கடத்தி’ ஆகிறது. இவ்வகைப் பொருட்கள் பொதுவாக மிகுந்த குளிரடிக்கும் மைனஸ் வெப்பநிலைகளிலேயே விளைவைக் காட்டியது. இயற்பியலையும் வேதியியலையும் இணைக்கும் இத்துறையின் ஆராய்ச்சிகள் அன்றாடத்திற்கு (மின்சாரக்கம்பிகள் போல) பயன்படும்விதமாய் மீ-கடத்திகளை அறை-வெப்பநிலையில் தயாரிப்பதின் சவால்களை எதிர்கொள்கிறது. இன்னமும் முழு வெற்றியில்லை. வேடிக்கையாய், மிகக்குளிரிலிருந்து சற்றே சூடான ஆனால் (23 கெல்வின் போன்ற) ‘மைனஸ் வெப்பநிலைகளில்’ இவ்விளைவைக் காட்டும் பொருட்களை ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்திகள்’ என்றழைக்கிறோம்.
டிசெம்பர் 1986இல் இயற்பியல் துறையில் ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்திகள்’ துறையில் புதிய கண்டுபிடிப்பு. அப்புதிய பொருள் 23 கெல்வினையும் கடந்து சூடான 35 கெல்வின் வெப்பநிலையிலும் மீ-கடத்தும் குணத்தை வெளிப்படுத்தியது. ராவ் இதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. பேராசிரியர் ஆண்டர்ஸன்-னை இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஒரு மாநாட்டில் ராவ் சந்திக்கிறார். ராவ்-வின் உரைக்குப் பிறகு ஆண்டர்ஸன் அவரிடம் இப்பொருள் பற்றி கேட்கிறார். ராவ் ‘எனக்கு இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது பற்றித் தெரியாதே’ என்கிறார். ஆண்டர்ஸன் “அப்பொருள் லாந்த்தானம், தாமிரம் ஆகிய மூலப்பொருள்களின் ஆக்ஸைடுகளினால் ஆனது என்கிறார். ராவ்-விற்கு பொறி தட்டுகிறது. அப்பொருள் லாந்த்தானம்-காப்பர்-ஆக்ஸைடு (LaCuO4) தானே? ஆமோதிக்கிறார் ஆண்டர்ஸன். தான் பல வருடங்கள் முன்னரே (1971இலேயே கங்குலியுடன் எழுதிய ஆய்வுக்கட்டுரையை குறிப்பிட்டு) இப்பொருளைப் பற்றிய ஆராய்ச்சிகளை வெளியிட்டிருப்பதை ஆண்டர்ஸனிடம் தெரிவிக்கிறர் ராவ். அடுத்த இரண்டு மணிநேரங்கள் இருவரும் சோதனைச்சாலையில் இக்கூற்றை மெய்பிக்கும் ராவ்-வின் ஆய்வுக்கட்டுரைகளைப் பரிசீலிக்கின்றனர். ஏற்கனவே ராவ் La2CuO4 எவ்வாறு ஃபெர்ரோ-மாக்னடிஸம் குணத்தை எதிர்க்கவல்லது என்பதை நிறுவியுள்ளது தெரிகிறது. இக்குணம் அனைத்து மீ-கடத்திகளிலும் தேவை.
எவ்வாறு தான் ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்திகள்’ ஆய்வில் பங்களிக்கலாம் என்று ராவ் கவலையுறுகிறார். அவர் சுயசரிதையின்படி “பல தூக்கமில்லா இரவுகள்” சோதனைச்சாலையில் கழிகின்றன. இரண்டு மாதங்களில் உலகின் முதல் திரவ-நைட்ரஜன் கொண்டு இயங்கும் ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்தி’ கண்டறியப்படுகிறது. அதுவரை மீ-கடத்திகளை செய்வதற்கு திரவநிலை ஹீலியம் தேவைப்பட்டது. ராவ் கண்டறிந்த புதிய வேதியியல் காம்பவுண்டு YBa2Cu3O7 யிட்ரியம், பேரியம், தாமிரம் ஆக்ஸைடுகளால் ஆனது. இதை ‘123 காம்பௌண்ட்’ என்றழைப்பார்கள். தொண்ணூறு கெல்வின் (90K) வெப்பநிலையில் இயங்கிய முதல் ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்தி’ (ஆனால், இதுவும் அறை-வெப்பநிலையில் செயல்படாது). தனிப்பட்ட ஆய்வில், ராவ்-வின் சோதனைச்சாலையில், பெங்களூரில் கண்டறியப்பட்டதென்றாலும், சமகாலத்தில் அமேரிக்காவின் பெல் லாபிலும், சீனாவின் பீஜிங்கிலும் இதே பொருள் கண்டறியப்பட்டதும் நிஜம்.
இப்பொருளை கண்டறிந்தற்கான முன்னுரிமையை ராவ்-வினால் பெற முடியவில்லை. இன்றும் விக்கிபீடியாவில் இவ்வாராய்ச்சியின் முன்னுரிமையில் இரு அமேரிக்கர்களையே முன்னிறுத்துகிறது. சுயசரிதையிலும் ராவ் இந்த “கண்டுபிடிப்பிற்கான முன்னுரிமை இழப்பை” பற்றி நேரடியாக விளக்கவில்லை. சரிதையில் அவர் குறிப்பிடும் ‘இழப்பின் வலி’, அன்றே (எண்பதுகளில்) சரியான தகவல் தொடர்பும், வேண்டிய நவீன உபகரணங்களும் தன் சோதனைச்சாலையில் இருந்திருந்தால் இந்தியாவிலேயே தன்னாலும் உலகத்தரமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கமுடியும் என்கிற ஆற்றாமையினால் எனக்கொள்ளலாம்.
கிராஃபீன் என்பது ஒரு அணுவின் பருமனான நானோ மீட்டர் உயரத்தில், கார்பன் அணுக்கள் பக்கவாட்டில் கைகோர்த்து அமைக்கும் ஓர் அணிவரிசை. இப்பொருளை கண்டுபிடித்ததற்காக 2010திற்கான இயற்பியல் நோபல் பரிசு இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரீ கெய்ம் (Andre Geim) மற்றும் கொன்ஸ்டெண்ட்டின் நொவோஸெலெவ் (Konstantin Novoselov) இருவருக்கும் அளிக்கப்பட்டதை நாம் அறிந்திருக்கலாம். இந்த நூற்றாண்டில் அவரது ஆராய்ச்சியை கவனித்தால், பழகிய பாட்டையிலிருந்து விலகி, ‘பெட்டிக்கு-வெளியே’ ராவ் யோசித்த ‘ஐடியா’, நுன்னோக்கியில் நேனோ-சைஸ் ஸ்ட்ரா போலிருக்கும் ‘கார்பன் நேனோ குழாய்களை’ அதன் மாலிக்கியூல் பிணைப்புகள் உடையாமல், வலிக்காமல் உரித்து, கிராஃபீன் ரிப்பன்களாய் செய்யமுடியும் என்று ஒரு ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.
*
சச்சினை ‘ரன்-மெஷின்’ என்றால் ராவ்-வை ஆய்வுக்கட்டுரைகள் எழுதிக்குவிக்கும் ‘பேப்பர்-மெஷின்’ எனலாம். சாதாரணர்களை அசரடிக்கும் இவரது ஆய்வுக்கட்டுரைகளின் எண்ணிக்கையைப் பற்றி, சமீபத்தில் வெளியான, சுயசரிதையான ‘முடிவிலா ஏணியில் ஏறிக்கொண்டே’ (கிளைம்பிங் தி லிமிட்லெஸ் லேடர்) புத்தகம் உட்பட, ராவ் பல இடங்களில் பேசியுள்ளார்.
பேராசிரியர் ஹெர்பெர்ட் பிரவுன் “ஆராய்ச்சி செய்வதற்கு உகந்ததென்றால், பிரசுரிப்பதற்கும் உகந்ததாயிருக்கவேண்டும்” என்றது ராவ்-விற்கு பால்யத்தில் உபதேசமாயிற்று. இதே கதியில் விஞ்ஞானி மைக்கேல் ஃபாரடே “பணியாற்று, முடி, பிரசுரி. இதுவே அறிவியலில் ஆதாரம்” என்றதும் ராவ்-விற்கு வழிகாட்டியாகியது.
இந்திய அறிவியல் நிறுவனத்தில் தன் 75ஆவது பிறந்தநாளையொட்டி ஆற்றிய உரையில் “எனக்குத் தெரிந்து தன் இறுதிநாள் வரை செயலாற்றிக்கொண்டிருந்த ஒரே இந்திய விஞ்ஞானி சி. வி. ராமன் அவர்களே. பல விஞ்ஞனிகள் ஓரிரு ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவிட்டு மறந்துவிடுவர். வருடத்திற்கு 20, 30 ஆய்வுக்கட்டுரைகளை எழுதவில்லையென்றால் நான் பரிதாபமாக உணர்வேன். அறிவியலில் உயிருடனிருப்பதற்கான ஒரே வழி ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுக்கொண்டிருப்பதே. எனக்கு வயாதாகிவருவதால் ஒரு சந்தேகம் வாட்டுகிறது. எனக்குப்பிறகு என்ன நடக்கும்? நான் செய்தவை அனைத்துமே மறைந்துவிடுமா? இதற்கு என்னிடம் இருக்கும் ஒரே பதில், ஆய்வுக்கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதே இறப்பற்ற நிலைபெறும் வழி.” என்றார்.
கிரிக்கெட்டில் ஆல்-ரவுண்டர்களின் சாதனைகளை ஒரு அளவுகோலைக்கொண்டு நிர்ணயிப்போம். நூறு விக்கெட்டுகள், ஆயிரம் ரன்கள் எடுத்தவர்கள். எத்தனை விரைவில் (டெஸ்டுகளில்) அதைச் செய்தார்கள். அடுத்த கட்டமாய் ‘இருநூறு-இரண்டாயிரம்’ எட்டியவர் யார்… இப்படி. உதாரணமாய், கபில் தேவ் ‘ஐநூறு-ஐயாயிரம்’ தொட்ட சாதனையாளர்.
ஆராய்ச்சித்துறைகளிலும் இவ்வகையில் அளவுகோல்களைக் காணலாம். தீவிரமாகச் செயலாற்றிவரும் விஞ்ஞானி ஒருவர் எத்தனை ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை எத்தனை முறை சக-ஆய்வாளர்களால் தங்கள் கட்டுரைகளில் சுட்டப்பட்டுள்ளது என்கிற எண்ணிக்கைகள் உதவும். எழுதிய நூறு கட்டுரைகள், மொத்தமாக ஆயிரம் முறையேனும் சுட்டப்பட்டுள்ளது என்கையில் “நூறு-ஆயிரம்” பிராக்கெட்டில் இருக்கும் விஞ்ஞானி என்கிற தகுதியை பெறுகிறார். நிறைய உழைத்து, பல வருடம் ஆய்வுத்துறையில் செயல்படுகையில் இந்த அளவையின் மதிப்பு அதிகரிக்கும். இன்றளவில் “ஆயிரம் (ஆய்வுக்கட்டுரைகள்) – பத்தாயிரம்” (முறையேனும் சுட்டப்பட்டுள்ளது) என்கிற மதிப்புடன் இருக்கும் ஒரே இந்திய விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் மட்டுமே.
இன்னொரு வகையில் ராவ்-வின் ஆராய்ச்சித் தரத்தை வெளிக்கொணரலாம். சமீபகாலமாய் ‘ஹெச்-இண்டெக்ஸ்’ என்கிற மதிப்பு உருவாகியுள்ளது. ஒரு ஆராய்ச்சியாளரின் எவ்வளவு கட்டுரைகள் எண்ணிக்கையில் அவ்வளவேனும் மற்ற சக ஆராய்ச்சியாளர்களால் (தங்கள் கட்டுரைகளில்) சுட்டப்பட்டுள்ளது என்பதை நிர்ணயிக்கும் அளவை. ஒருவர் எழுதியுள்ள பத்து ஆராய்ச்சிக் கட்டுரைகளில், ஐந்து தலா இருபது முறைகள் மற்றவர்களால் சுட்டப்பட்டுள்ளது என்போம். இரண்டு கட்டுரைகள் எட்டு முறைகளும், மிச்சம் மூன்று கட்டுரைகள் இன்னமும் சுட்டப்படாமலும் உள்ளது. அப்படியெனில் அவரது ஏழு கட்டுரைகள் (ஐந்து + இரண்டு) குறைந்தபட்சம் ஏழுமுறையேனும் சுட்டப்பட்டுள்ளது என்பதால் அவரது எச்-அளவை ஏழு. கவனியுங்கள், இருபதோ, எட்டோ இல்லை. ஏழு-தான். பின்னாளில் அவர் ஆராய்ச்சிக்கட்டுரைகளே எழுதவில்லை என்றால், அதிகபட்சமாக அவரது எச்-அளவை பத்து என்ற இலக்கை அடையலாம் (அவைகள் பத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் மற்றவர்களால் சுட்டப்பட்டிருந்தாலும் எச்-அளவை பத்துதான்). அதாவது, என்றோ செய்த ஆராய்ச்சியை வைத்து இன்றும் ஜல்லியடிக்கமுடியாது. மிகக் குறைவான எச்-அளவை காட்டிக்கொடுத்துவிடும். சச்சின் முதல் பத்து டெஸ்டுகளில் ஆடியதை மட்டும் வைத்துக்கொண்டு, சமீபகாலம் வரை “டக்-அவுட்” ஆகியபடியே டீமில் காலந்தள்ளமுடியாதைப்போல.
எச்-அளவை ஆராய்ச்சித்துறைகளில் கண்ஸிஸ்டென்ஸி-யை, அளக்க ஓரளவு சரியான அளவுகோல். செயல்படும் விஞ்ஞானி என்பவர் தொடர்ந்து சீராக ஆராய்ச்சி செய்து புதிய கட்டுரைகளை எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். வருடந்தோறும் அதிகரித்துவரும் எச்-அளவை கொண்ட விஞ்ஞானிகள், தொடர்ந்து சக-விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்க்கும் ஆராய்ச்சிகளாகவே செய்துவருகிறார் என்பதும் புரிதல். வெவ்வேறு அறிவுத்துறைகளில், ஆராய்ச்சி மற்றும் ஆய்வாளர்களின் எண்ணிக்கை அடர்த்திக்கேற்ப, திறனுள்ள ஆராய்ச்சியாளர்களுக்கான இந்த எச்-அளவையின் மதிப்பு நிர்ணயமாகும்.
வேதியியலில், ராவ்-வின் எச்-அளவை இன்றளவில் நூற்றியெட்டு.
அதாவது, ராவ்-வின் நூற்றியெட்டு ஆய்வுக்கட்டுரைகள் நூற்றியெட்டு தடவையாவது மற்ற ஆய்வாளர்களால் சுட்டப்பட்டுள்ளது. ஒப்பீட்டிற்கு ஒரு விஷயம் சொல்கிறேன். சமீப பத்தாண்டுகளில் அறிவியல் துறைகளில் நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளுக்குப் பொதுவாக எச்-அளவை தொன்னூறுக்கு மேல் இருப்பது புலனாகியுள்ளது. ராவ் இதுவரை மூன்று முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.
சச்சினின் “நூறு-சதங்கள்” சாதனை வருங்கால ஆட்டக்காரர்களுக்கு நிரந்தர எட்டாக்கனியாகிவிடலாம் (ஜாக் காலிஸ் மட்டும்தான் டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் 51 சதங்களை எட்டிவிடும் நிலையில் இருக்கிறார். பார்ப்போம்.). அதைப்போல ராவ்-வின் இந்த “எச்-அளவை நூற்றியெட்டு” என்பது இனியொரு இந்திய விஞ்ஞானியால் எட்டவே முடியாத சாதனையாகிவிடும் என்றே கருதுகிறேன்.
*
அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதும் நோக்கின் சில உபாதைகளிலும் ராவ் சிக்கிக்கொண்டுள்ளார்.
சமீபத்தில் (2011இல்) ராவ் பெயர் தாங்கி சக-ஆய்வாளர்கள் இருவருடன் வெளியான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் ஏற்கனவே (வேறு ஆய்வாளர்களால் எழுதப்பட்டு) வெளியாகிவிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையிலிருந்து காப்பியடிக்கப்பட்ட கருத்துகள் உள்ளன என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதன் உண்மை நிரூபணமானதும் ராவ் பகிங்கரமாக கட்டுரை வெளியான ஆராய்ச்சி சஞ்சிகையிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இது ஒரு ‘தற்செயல் நிகழ்வு’ என்றும் பிரச்சனையிலிருந்து ‘கழன்றுகொண்டார்’. ஆனால், தொடர்ந்து ஊடகங்களில் வெளியான சில கட்டுரைகளில் அவரது மேலும் சில ஆய்வுக்கட்டுரைகளில் சில பத்திகளாவது ஏற்கனவே வெளியானவைகளிலிருந்து வார்த்தை பிசகாமல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. ஏற்கனவே வெளியான ஆராய்ச்சி முடிவுகளையே இக்கட்டுரைகளில் மறுபதிப்பு செய்யவில்லை என்பதால் இவ்வகை குற்றாச்சாட்டுகள் அவரது பெருவாரியான ஆய்வுக்கட்டுரைகளின் மதிப்பைக் குறைக்கவில்லை. என்றாலும், துறையில் அவரது நற்பெயர் சற்று அடிவாங்கியது நிஜம். நேரடியாக தவறுகளுக்குப் பொறுப்பேற்காமல், ‘யாரோ என் நற்பெயரை குலைக்க அவதூறு செய்கிறார்கள்’ என்கிற ரீதியில் அவர் பேசியதும், தவறுக்கு அனுபவமில்லாத ஆராய்ச்சிமாணவனை ‘கை காட்டி விட்டு’ நழுவியதிலும் சக விஞ்ஞானிகளின் அதிருப்திக்கு உள்ளானார். “சரிபார்க்காமல் எதற்கு கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவேண்டும்; எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் ஒரே இலக்கா; ஆய்வுக்கட்டுரை செம்மையாக இருக்கவேண்டும். என்பதில்லையா…” போன்ற விமர்சனங்கள் எழுந்தது. சந்தடி சாக்கில் பொறாமை நாக்குகள் சில பலவாறு சுழன்றதையும் அவரால் இன்றளவும் தவிர்க்க முடியவில்லை.
அதிகமாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுகையில் ஒவ்வொரு கட்டுரையிலும் அனைத்து அங்கங்களையும் ஒருவராலேயே சரிபார்க்கமுடியாமல் போவது ஆபத்தான பக்கவிளைவு. ராவ் போன்ற மூத்த விஞ்ஞானிகளை பிரதான ஆராய்ச்சி ஆலோசகராகவோ, கருத்தாக்கத்தின் காரணகர்த்தாவாகவோ மட்டும் கொண்டு, அவருக்குக் கீழே கட்டுரை எழுதுவதில் அனுபவமில்லாத மாணவர்களும், ஜூனியர் ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து கூட்டுத்தயாரிப்பாய் ஆய்வுகள் மேற்கொண்டு, அதன் முடிவுகளை கட்டுரைகளாய் எழுதி சமர்ப்பிக்கையில், இவ்வகை ’சுட்டெழுத்து’ பக்கவிளைவுகள் பதம் பார்த்துவிடும். சென்ற பத்தாண்டுகளில் கவனித்தால் (2000த்திற்குப் பிறகு) கிட்டத்தட்ட வாரத்திற்கு ஒன்று என்கிற ரீதியில் ராவ் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுகிறார்!
ராவ்-வின் இவ்வகை செயல்பாடுகள், அவரது தலைமையின் கெடுபிடிகள் போன்றவை சக-விஞ்ஞானிகள் சிலரால் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அவர் ‘பாரத் ரத்னா’ விருது வாங்கியதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதும் பெங்களூரின் ஐ.ஐ.எஸ்.சி. விஞ்ஞானி/பேராசிரியர் ஒருவர் “நான் கருத்து கூறமாட்டேன். ஏன் கூறமாட்டேன் என்பதையும் சொல்ல மாட்டேன். வேண்டுமானால் ராவ்-வின் நண்பர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” என்கிற ரீதியில் பதிலளித்துவிட்டார்.
ராவ் இதற்கெல்லாம் பெரிதாக கவலைப்படுவதில்லை. நான் என்வகை ஆராய்ச்சியையும் அறிவியலையும் தொடர்கிறேன். சிலருக்கு இதில் ஒப்புமை இருக்காதுதான், பரவாயில்லை, என்கிறார்.
சச்சின் ‘அவுட்-ஆஃப்-ஃபார்ம்’ ஆகி போட்டிகளில் சில நெருக்கடியான சமயங்களில் சொதப்பியுள்ளார் என்றாலும், பல வருடங்களாய் சராசரிக்கும் அதி உயரமான அளவில் விளையாடி பல சாதனைகளையும் வெற்றிகளையும் ஈட்டித்தந்துள்ளார் என்பதும் நிஜம்தானே. ராவ்-வின் தீவிர உழைப்பையும், அறிவியலின் மீதுள்ள விசுவாசத்தையும், ஆர்வத்தையும், பரந்துபட்ட பங்களிப்பையும் கணக்கில்கொள்கையில், ராவ்-விற்கு ‘பாரத் ரத்னா’ வழங்கப்பட்டதில் அவரது விமர்சகர்களுக்குமே பெரிதாக குறை இருக்க முடியாது.
சுயசரிதையில் நினைவுகூறுகையில் சி.என்.ஆர். ராவ் சொல்வது நாம் அனைவரும் ஆசைப்படும் ‘முழுமையை’ உணர்த்துகிறது: “என் வாழ்க்கை எவ்வளவு திருப்திகரமாக இருந்தது என்பதை நினைத்துப்பார்கிறேன். அருமையான உத்தியோகமும் அதேபோன்ற நல்ல இல்லறமும் அமையப்பெற்றேன். விஞ்ஞானியாக என் வாழ்க்கையை மகிழ்சியாக கழித்தேன். வாழ்வதற்கு வேறு சிறந்த வழி எனக்குத் தெரியாது. வயதாவதோடு மகிழ்ச்சியும் கூடுகிறது. வருத்தமேதுமில்லை. அமைந்தால், மீண்டும் இவ்வாழ்க்கைப்பாதையே தேர்வு செய்வேன்.”
***
[கட்டுரையிலுள்ள சில தகவல்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்ட பேராசிரியர் அபினந்தனுக்கு நன்றி]
சான்றேடுகள்; மேலும் வாசிக்க (அனைத்தும் சி.என்.ஆர்.ராவ். பற்றிய தகவல் பக்கங்கள்)
- படங்கள், நன்றி: தி ஹிண்டு நாளிதழ், அமேஸான் வலை, நேனோ டைஜஸ்ட் சஞ்சிகை.
- ராவ்-வின் வலைதளம் http://www.jncasr.ac.in/cnrrao/index.html
- ராவ்-வின் சுயசரிதை: Climbing the Limitless Ladder: A Life in Chemistry (IISc Press – World Scientific, 2010)
- சொல்வனம் இதழில் இளையா எழுதியுள்ள ராவ் வாழ்க்கைக்குறிப்பு: http://solvanam.com/?p=26896
- பாரத் ரத்னா அறிவிப்பு: பிரதம மந்திரியின் அலுவலகம். http://pmindia.nic.in/press-details.php?nodeid=1748
- ராவ்-விற்கு பாரத் ரத்னா: இந்து நாளிதழ் கட்டுரை http://www.thehindu.com/news/national/cnr-rao-a-champion-of-basic-science-research/article5358809.ece
- ராவ்-விற்கு பாரத் ரத்னா: டெலிகிராஃப் நாளிதழ் கட்டுரை http://www.telegraphindia.com/1131117/jsp/nation/story_17579709.jsp#.Uoi3M8S3Oap
- என்.டி.டிவி தகவல் http://www.ndtv.com/article/people/bharat-ratna-awardee-cnr-rao-the-scientist-who-finds-computers-distracting-446963
- பாரத் ரத்னா விருது பெற்றவர்கள் பட்டியல் http://en.wikipedia.org/wiki/Bharat_Ratna
- ராவ் ஆய்வுக்கட்டுரையில் காப்பியடிக்கப்பட்ட கருத்துகள் பற்றி ஜெயராமன்-னின் ‘நேச்சர்’ சஞ்சிகை கட்டுரை http://www.nature.com/news/indian-science-adviser-caught-up-in-plagiarism-row-1.10102
- ராவ் மற்றும் சக-ஆய்வாளர்களுடைய ‘அட்வான்ஸ்டு மெட்டிரியல்ஸ்’ சஞ்சிகையில் வெளியான ‘காப்பியடிக்கப்பட்ட கருத்துகள்’ அடங்கிய கட்டுரையின் சுருக்கம் http://onlinelibrary.wiley.com/doi/10.1002/adma.201101414/abstract
- ராவ் மற்றும் சக-ஆய்வாளர்கள் ’அட்வான்ஸ்டு மெட்டிரியல்ஸ்’ சஞ்சிகையில் வெளியிட்ட மன்னிப்பு அறிவிப்பு http://onlinelibrary.wiley.com/doi/10.1002/adma.201190182/full
- ராவ்-வின் மேலும் சில கட்டுரைகளில் ‘காப்பியடிக்கப்பட்ட கருத்துகள்’ உள்ளன என்பதை அறிவிக்கும் ’இந்து’ கட்டுரை http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/article2983433.ece
- இவ்விஷயத்தைப் பற்றி ‘மாட்-சயன்ஸ்’ விஞ்ஞானி ராகுல் சித்தார்த்தன்-னின் மற்றொரு ’இந்து’ கட்டுரை http://www.thehindu.com/opinion/lead/article2974543.ece
- ஹெச்-இண்டெக்ஸ்: http://en.wikipedia.org/wiki/H-index
- மீ-கடத்திகள் அறிமுகம்: http://en.wikipedia.org/wiki/Superconductors
- கிராஃபீன் அறிமுகம் http://www.ommachi.net/archives/2125