அம்ருதாவில் அறிவியல்

Standard

ஓவியம், இலக்கியம், உலகத்திரை, பிற கலைகள் பற்றிய கட்டுரைகள், ஓரிரண்டு சமூகச்சாடல்கள், கவிதைகள், சிறுகதைகள், நாகரத்தினம் கிருஷ்ணா, இந்திரா பார்த்தசாரதி, அழகியசிங்கர் பக்கங்கள், விற்பனைக்கு தொட்டுக்கொள்ள சச்சின், சினிமா, அக்கபோர், நிரந்தரமாய் பட்டுப்புடவையில் அனுஷ்கா படம் என்று வெளிவரும் ‘அம்ருதா’ அச்சுஊடக மாதாந்திரியில் “வாழ்க்கை விஞ்ஞானம்” என்கிற பத்தித் தலைப்பின்கீழ் (என் தேர்வல்ல), ஒரு வருடம் எழுதிவிட்டேன். எனக்குத் தெரிந்தவரையில், வகையில், அறிவியல் கட்டுரைகளை.

முழங்கை மூட்டை எதிர்பாராமல் சுவற்றில் மோதிய பாதிப்பிற்கொப்பான ஓரிரு எடிட்டிங் ஆச்சர்யங்களைக் கடந்து நான் எழுதிக்கொடுத்த அனைத்தையும் நேர்த்தியாய் பிரசுரித்துவிட்டனர். ஒரு அட்டைப்பட கட்டுரை வேறு. படங்கள் மட்டும் பிரசுரத்திற்கேற்ற அளவுகள் பிடிபடாமல் குவி, குழி ஆடிகளின் வழியே இன்னும் பயமுறுத்துகிறது. மற்றபடி ஓகே.

அறிவியல் எழுத்தின் பாதிப்பை அறிய விசாரித்துப்பார்த்தேன். ஒருவருடத்தில் சரியாக மதிப்பிடமுடியவில்லை, இவ்வருடமும் தொடருங்கள் என்கிறார்கள். பாதிப்பை துரிதப்படுத்த கணிதம் எழுதலாமா என்றேன், சம்மதித்துவிட்டனர். அப்ப அறிவியல்? அதையும் எழுதுங்க சார்.

விளையாடுறாங்களா? அச்சு ஊடகப் பிரசுரத்திற்கு அறிவியல் எழுத்தா? பணம் என்ன மரத்திலயா காய்குது? பதிப்பிப்பது ஏதாவது ஐடியலிஸ்ட் கோஷ்டியாயிருக்குமா? இல்லயே, ஆலோசகர்கள் பட்டியல் சரியாகத்தானே உள்ளது. நேரடிச் சந்தாதாரர்கள் சில ஆயிரம் இருக்கிறார்களாம். அவ்வெண்ணிக்கையைத்தாண்டி அனைத்து பெட்டிக்கடைகளிலும் தொங்குமளவில் பெரிதாக்க வணிகசூழல் இடமளிக்கவில்லை.

அனுப்பினால், வெகுஜனப் பத்திரிகைகள் வேறு எதிலும் போணியாகாத (எடிட்டருக்கு புரியவில்லை என்பதால்?) ஒரு அறிவியல் கட்டுரையைக் கொடுத்துப் புதுவருடக் கணக்கைத் துவங்கிவிட்டேன். இவ்வருடமாவது ‘அம்ருதா’ வாசகர்களை ‘பாதித்துவிடவேண்டும்’.

குறிப்பு: ‘டீப் இண்டீரியர்’ தமிழ்நாட்டுப் பெட்டிக்கடைகளில் ‘அம்ருதா’ கிடைக்காது. நான் எழுதுவது தெரிந்து, ஸ்ரீரங்கம் செல்வா கடையிலும் வாங்குவதை நிறுத்திவிட்டார். நேரடியாகச் சந்தா செய்துகொள்வது நல்ல வழி.

சுட்டி: http://amruthamagazine.com/