தமிழில் நல்ல மரபுக் கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன என்றால் கவிஞர்கள் தவிர, புதுக்கவிதை எழுதும் ஏனையோர் ஒப்புக்கொள்வார்கள். அதைப்போல தமிழில் நல்ல சிறுகதைகள் எழுதப்பட்டுவிட்டன என்றால் தொழில்முறை எழுத்தாளர்கள் தவிர மற்ற எழுத்தாளர்கள் ஒப்புக்கொள்வார்கள். வாசிப்பவர்களுக்கு எழுத்து சார்ந்த கருத்துரைக்க என்றுமே உரிமையில்லை என்பதால் தமிழ் வாசிக்கத்தெரிந்த மிச்சம் சில கோடி ஜனத்தை இக்கருத்துருவாக்கத்தில் பொருட்டாகக் கொள்ளவேண்டியதில்லை.
நல்ல சிறுகதைகள் எழுதப்பட்டுவிட்டன என்பதற்கான போதிய ஆதாரம் இதுவரை எழுதப்பட்ட சிறுகதைகளில் மட்டுமே கிடைக்குமா என்கிற சந்தேகம் உங்களுக்கு ஏற்படுமாயின் அதற்கு என்னிடம் பதில் நேரடியாக இல்லை. இணையத்தில் ஓரிரு பக்கங்களை வாசிக்கும் அவகாசத்தையும், ஆரோக்யத்தையும், கவனத்தையும், கரண்ட்டையும் நீங்கள் இக்கலியுகத்தில் கைவரப்பெற்றிருந்தால், கீழேயுள்ளதை வாசித்து, எழுதப்பட்டுவிட்ட அது, நல்ல கதையா என்று யோசியுங்கள். உங்கள் முடிவே, உங்கள் மேற்படி சந்தேகத்திற்கான, என் பதிலும்.
*
இப்போதே இன்றைய சிறுகதை எழுதுவோம் வாங்கோ.
வெள்ளைத் தாள் + எழுதும் பேனா, சிலேட்டு + பலப்பம், வெற்றிலைப்பெட்டி + ஐ பேட், என்று வேண்டியதை எடுத்துக்கொண்டு சுவற்றின் முன் அமருங்கள். சுவற்றின் முன் + உங்கள் முன், கணினி +/- தட்டச்சுப் பொறி இருந்தால், மேற்படி உபகரணங்கள் தேவையில்லை.
எழுதத்துவங்குங்கள். எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கிக்கொள்ளுங்கள். முக்கியமாய் தாமதமாய்த் தொடங்கி, கீழே விளக்கியுள்ளதுபோன்ற ‘முடிவுக்கு அருகில்’ விரைவாய் வரவேண்டும். எப்படியென்றால், சிறுகதையில் நீண்ட விவரணைகளுக்கு இடமேது. அதனால், அதைச் செய்யத் துவங்குங்கள்.
இது எப்படியென்றால், இதற்கும் எளிய வழி உள்ளது. ஏதாவது ஒரு திசையில் உற்று நோக்குங்கள். தெரியும் காட்சியின் இடது மேல் ஓரத்திலிருந்து தொடங்கி வரிசைக்கிரமமாய் விளக்கி எழுதிச்செல்லுங்கள். வலது கீழ் மூலை வரை எழுதிவைக்கலாம். ஓரிரு பக்கங்களுக்குமேல் கரைபுரள்வதை பெருக்கிக் குப்பையில் கொட்டிவிடுங்கள். அடுத்த கதைக்கு உபயோகமாகும். மீதமிருக்கும் குப்பையை ‘முடிவுக்கு அருகில்’ கொண்டுவாருங்கள்.
தலைகீழாய், இம் ‘முடிவிற்கு அருகில்’ இருக்கும் வாக்கியத்திலிருந்து தொடங்கி, மேலே ஒவ்வொரு வாக்கியமாய் எழுதிக்கொண்டுபோனாலும் சரி. இவ்வகையில் எழுதினால், உங்கள் கற்பனை வறண்டதும் வாசகர்கள் வாசிக்கவேண்டிய கிரமத்தில் ‘நவீனத்துவக்’ சிறுகதை அவ்விடத்திலேயே தொடங்கிவிடும்.
கவனிக்க: மேற்படி முறையில் கதைசெய்ய, ‘முடிவுக்கு அருகில்’ எழுதவேண்டியதை தாளின் அடிப்பகுதியில் பொருத்தவேண்டும். பிறகே அதன் மேற்பகுதிவழியே கதையின் ஆரம்பத்தை நோக்கிச் செல்லவேண்டும். இந்த அறிவுரையை மறந்து முடிவுக்கு அருகில் இருக்கும் மேட்டரில் தொடங்கி, தாளில் அதற்கடுத்தடுத்து எழுதி, கதையின் ஆரம்பத்தைத் தேடிக்கொண்டு சென்றுவிட்டீர்களென்றால், கலங்காதீர்கள். அது ‘பின்நவீனத்துவ’ வடிவில் சொல்லப்பட்ட சிறுகதை. அவ்வளவுதான்.
இன்னும் சாகஸமாய் ஆசை என்றால் (கைவசம் செலவழிக்க உங்களுக்குச் சொந்தமான நிறைய அவகாசம் இருந்தால்), இப்படிச் செய்யலாம்: மேலே எழுதிய விவரணைகளை வாக்கியம் வாக்கியமாய் துண்டுத் தாள்களில் எழுதிக்கொள்ளுங்கள். வித்தியாசம் தெரியாமல் ஒரே மாதிரி மடித்து அனைத்தையும் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுங்கள். பிறகு கண்களை மூடிக்கொண்டு அதிலிருந்து ஒவ்வொரு துண்டுத்தாளாய் எடுத்துப் பிரித்து, அதிலிருக்கும் வாக்கியங்களை வரிசையாக தாளில் நிரப்புங்கள். முடிந்ததும், ‘மாய யதார்த்தக்’ கதை முக்கால்வாசித் தயார்.
சரி, இப்படிக் கவனமாய் எதையாவது மனம்போனபோக்கில் செய்து (திட்டமிட்டு எழுதுவதாய் காட்டிக்கொள்ளவே கூடாது; படைப்பூக்கம் குறைவு என்று முத்திரைகுத்திவிடுவார்கள்), இப்போது கதையின் முடிவிற்கு அருகில் இருக்கிறோம் என்போம். கீழுள்ள வாக்கியம் போல் ஒன்றை உருவாக்குங்கள்.
“கத்தாம சமத்தா போலியோ ட்ராப்ஸ் போட்டுண்டா, சின்னதா ஒரு விஸில் தரா; ஆ..வூ…ன்னு கத்தி போட்டுக்கறதுக்கு அழிச்சாட்டியம் பன்னா, பெரிய விஸில் தராப்பா.”
கவனித்தீர்களா, மேற்படி வாக்கியத்தை. வட்டார வழக்குகள், சமுதாய உட்பிரிவினர் உபயோகிக்கும் சொற்சிதைவுகள் உங்கள் கதையில் அமைவது முக்கியம். படிக்கையில் அப்போதுதான் சிலருக்கு உவக்கும் சிலருக்கு துவர்க்கும். இவ்வகை ‘நேடிவிட்டி’ இன்றியே உட்கருத்தை மட்டுமே உருக்கி உருக்கி அருமையாக கதைகள் எழுதமுடிந்தால் நீங்கள் மௌனியைவிட பெரிய ஆள். யாருமே வாசிக்கமாட்டார்கள். உங்கள் சித்தம்.
சரி, இப்படி ஒரு வாக்கியத்தை (“கத்தாம…” எனத் தொடங்கும், அச்சான எழுத்துருவில் இருக்கும் வாக்கியம்) எழுதுவதற்கு எழுத்தாளனான, சே, படைப்பாளியான நம்மை பாதிக்கும் வகையில் ‘நிகழ்வு’ வேண்டும். இதற்கான முக்கியமான ஒரே விதி, இந்த ‘நிகழ்வு’ அதற்கும் முன்னால் எழுதிவைத்துள்ள ‘முக்கால் பக்க விவரணையில்’ பார்த்த காட்சியில் கட்டாயமாக சம்பவித்திருக்கக்கூடாது. அனைத்தையும் பார்த்த ஒரே காட்சியிலிருந்தே எடுத்தால் அது படைப்பூக்க கதையல்ல, நிஜ வெளிக்கி. தப்பாட்டம். சுவைக்காது.
அதனால், கடைசி வரிக்கு அருகிலான ‘நிகழ்வை’ எழுத்தில் பிடிப்பதற்கு, வீக்கெண்டில் வேலைவெட்டியில்லாமல் வாசல் திண்ணையிலோ அல்லது அடுக்கக பால்கனியிலோ அமர்ந்து அடுத்த வீட்டை வெட்கமில்லாமல் வெறித்துக்கொண்டிருங்கள்.
பார்த்து, பால்கனியிலிருந்து விழுந்துவிடாதீர்கள். உங்கள் கதை உருவாக ஒரு கதைசொல்லியாவது ஏற்கனவே உருவாகியிருக்கவேண்டும். விழுந்துவிட்டால் எதிர்வீட்டு உப்பரிகையில் உட்கார்ந்திருப்பவரின் கதையாகிவிடுவீர்கள். பிறகு, அக்கதையை படிப்பவருக்குத்தான் நீங்கள் அக்கதையினுள் எழுதும் கதையை வாசிக்கமுடியும். நீங்கள் பிரபல எழுத்தாளரின் எதிர்வீடென்றால் இது சாத்யப்படலாம்.
சரி, இப்போது கடைசி வரி. மேலுள்ள ‘முடிவுக்கு அருகில்’ உள்ள வாக்கியத்திற்கு (“கத்தாம…” எனத் தொடங்கும், அச்சான எழுத்துருவில் இருக்கும் வாக்கியம்) பிறகு கதையை ஒரு ‘குத்து வரி’ (பன்ச் லைன்) எழுதி முடிக்கவேண்டும்.
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பஃபே மீல்ஸ் ஐட்டங்கள் போல, பிச்சைக்காரன் வாந்தியைப் போல, டே-கேர் ‘க்ரஷ்’ஷினுள் சப்தங்களைப் போல, இரவில் கானகம் போல, இண்ட்ரவலில் சத்யம் தியேட்டர் லாபியைப் போல, கட்டட்டற்ற சுதந்திரத்துடன் தறிகெட்டுத் திரிந்த உங்கள் கற்பனையை மீறி நீங்கள் எழுதிய அனைத்தையும் இந்த ‘குத்து வரி’ தான் ‘கதை’ என்று வாசிப்பவரை நம்பவைக்கப்போகும் திருகல். கவனம். பார்த்துச் செய்யுங்கள்.
ஏனெனில், கடைசிவரியாய் இங்கு,
“எனக்கு சின்ன விஸிலே போதும்பா”
என்று எழுதி முடித்தால் இது கலைமகள் கதையாகலாம். (தலைப்பு: குழந்தையின் ஏக்கம்)
“எனக்கும் பெரிய விஸில் வேணும்பா; நான் என்னப்பா செய்யறது?” என்று முடித்தால் இது கல்கி கதையாகலாம். (தலைப்பு: சிறுமியின் டைலமா)
“ச்சோ ச்வீட். குட்டீஸுக்கு பெரிய விஸில்தான் கொடுக்கனும், என்ன சொல்றீங்க?” என்று முடித்தால் இது விகடன் கதையாகலாம். (தலைப்பு: சிட்டுகளின் சீட்டி)
“ச்சோ ச்வீட். சின்னகுட்டிக்கெல்லாம் ஒரு ‘பெரிய விஸில் போடு’” என்று முடித்தால் குமுதம் கதையாகலாம். (தலைப்பு: விஸிலடிச்சான்குஞ்சுகள்)
“அடுத்த தலைமுறையை உருவாக்குவது, பொறுப்புள்ள நாம், அவர்களுக்கு அளிக்கும் சீழ்கையானால்தான்” என்று முடித்தால் அச்சில் இருக்கும் ஏதாவது சிறுபத்திரிகை கதையாகலாம். (தலைப்பு: சீழ்கையொலியின் சிதைவு)
“நல்லவங்களா இருந்தா யூஸ் இல்லப்பா” என்று முடித்தால் ஏதாவது இணைய இதழ் கதையாகலாம். (தலைப்பு: ஒரு விஸில் சப்தமும் அது கூவும் நோய்க்கூறு மனநிலையும்)
“விசில் விநியோகத்தில் முறைகேடுகள் நடப்பதற்கு குட்டிகள் அல்லது குழந்தைகளின் தற்கால மனநிலையும் அதை அவர்கள் செய்கைகளில் வெளிப்படுத்தும் விதமுமே காரணம் என்பது மேற்படி அனுபவப் புள்ளிவிவரத்திலிருந்து திட்டவட்டமாய் இல்லாவிடினும், தோராயமாய் நிறுவப்படுகிறது என்றாலும், இரண்டு வருடம் முன்னர் வெளிவந்த ஊசி முறையில் போலியோ மருந்தை கொடுக்கும் வழிவகையை பரிசீலித்ததில் இதே விசில் முறைகேடுகள் இருந்ததை நாம் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்”
என்று எழுதினால் (வாக்கியத்தை முடிக்கவேண்டுமென்பதில்லை), சமூகவியல் துறை ஆய்வுக்கட்டுரையாகலாம் (தலைப்பு: மூன்றாம் உலக நாடுகளில் போலியோவைக் கட்டுப்படுத்தும் வழிகளை கட்டுப்படுத்தும் தற்கால மேட்டிமை (அல்லது பழங்குடி) செயல்பாடுகள்).
எதுவுமே சொல்லாமல் விட்டுவிட்டால், வாசகர்களை அதீதமாய் நம்பி எழுதப்படும் இலக்கியச் சிறுகதையாகலாம் (தலைப்பு: காற்று ஒலியினிலே). எந்த எடிட்டரும் பிரசுரிக்கமாட்டார்.
அதனால்தான் சொல்கிறேன், இறுதி ‘குத்து வரி’ கதையின் இருத்தலிற்கே முக்கியம்.
ஆனால் நீங்கள் எழுதும் அனைத்துமே ‘குத்து வரி’யற்ற ‘இலக்கியச்’ சிறுகதைகளாகிவிட்டால் அஞ்சற்க. கட்டற்ற கதைசொல்லியின் பொறுப்பற்ற சுதந்திரத்தை முன்னிறுத்தி, சராசரி ஜனங்கள் வாசிக்கும் சஞ்சிகைகளில் பிரசுரிக்க வேண்டிய நிர்பந்தத்திலிருந்து உங்களை விடுபடுத்திக்கொண்டுவிடுகிறீர்கள்.
இவ்வகையில் மேலும் இருபது முப்பதை எழுதியதும், தொகுத்துப் புத்தகமாக்கிவிடலாம். புரூஃப் பார்க்க ஓரிரண்டு தமிழ் வாத்யார்களை நியமித்துக்கொள்ளுங்கள். அவர்களுக்குத் தமிழ் தெரிந்திருக்கவேண்டியது அவர்கள் பொறுப்பு.
உங்கள் புத்தகத் தலைப்பு உள்ளடக்கக் கதைத் தலைப்புகளுக்குத் தொடர்பில்லாத ஒன்றாய் இருக்கவேண்டியது அவசியம். நீங்கள் உபயோகித்துக்கொள்ள இவ்வகையில் ஓரிரண்டு புத்தகத் தலைப்புகள்: ‘ஆண் சார்ந்த கதையழிப்பு’ (பெண்ணீயம் கண்டுகொள்ளாத வீழ்ச்சிகள்); ‘க, கதை, கழுதை’ (கதை வளர்ந்து கழுதையான கதை); ‘முடிக்கல மாமு’ (முடிவுகளின் இல்லாமையில் உறவோற்சவம்); ‘வயாக்ரா வானம்’ (ஆண்-உரைகளின் நெகிழ்வுகள்).
மேலும் விலைக்குத் தேவையெனில் மின்னஞ்சலிடுங்கள். பத்து டைட்டில் வாங்கினால் இரண்டு ‘குத்து வரிகள்’ இலவசம்.
அட்டைப்படம் கதைக்களன்கள் சார்ந்து இருக்கவேண்டும் என்று சிலர் எதிர்பார்ப்பார்கள். கிடைத்த ஓவியத்தை போட்டுவிட்டு, கதைக்களன்களை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
பெஸ்ட் விஷஸ். தாடியை நீவிக்கொண்டு, எவ்வருடமும் ஜனவரி முதல் வாரத்திற்குள் (இது ஏன் என்று தெரியவில்லை என்றால் நவீனதமிழ் எழுத்தாளனாகவே நீங்கள் லாயக்கில்லை), உங்கள் புத்தகத்தைப் பதிப்பிக்க முயலலாம். நண்பர்களின் தயவில், சுயமாய் (இப்போதெல்லாம் மனைவிகள் படு உஷார்).