புதுவருடம், சுயபோகம்

Standard

[சொந்தக் கதைதான். விருப்பமில்லாவிடினும்  கண்டிப்பாக வாசியுங்கள். வேறு எதற்கு எழுதுகிறேனாம்… :-) ]

2013 இல் நுழைந்தாயிற்று.

புத்தாண்டு தீர்மானம்: ஒன்றாம் தேதி எழுதாதே. சுயபோகமாய் உளருவதை ஒருநாளாவது ஒத்திவை.

இடைக்காலத்தில், புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்வதற்கு அலைபேசியின் முகவரிப் பட்டியலை மேய்கையில், பெயர்களின் பின்னால் தேங்கியிருக்கும் பழைய சில்லறை மனஸ்தாபங்களே ஞாபகம் வருகிறது.

புத்தாண்டு தீர்மானம்: பழையன களை. வேறொரு வருடம் ‘புதுவருட அ(றி)வியல் உறுதிமொழிகள்’ என்பதில் சொன்னவைகளையும் சேர்த்து.

அலைபேசியில் என் அழைப்பை ஏற்ற அனைவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டேன். அலைபேசி எண் என்னிடம் இல்லாதவர்களை மட்டும் என்னால் அலைபேசியில் அழைக்க முடியவில்லை. புத்தாண்டு வாழ்த்துகளை மட்டும் சொல்லிவிட்டேன்.

புத்தாண்டு தீர்மானம்: இனி எல்லாம் சுகமே.

வேண்டாம் என்றா சொல்லப்போகிறீர்கள், “ஏன், எதற்கு, எப்படிச் சொல்கிறாய்?” என்பவைகளுக்கு பதிலளிக்காவிடினும்.

சரி, மேற்படித் தீர்மானம் பாசாங்காய்த் தோன்றினால் வழக்கம்போல, “இவ்வருடம் உண்மையே பேசி, எழுது” என்பதையே என் புத்தாண்டு தீர்மானமாகக்கொள்கிறேன்.

“இனி பாத்ரூம் போகையில் உட்கார்ந்துதான் போவது” என்பதை நல்ல புத்தாண்டு தீர்மானம் என்று மனது அங்கீகரிக்க மறுக்கிறது. நேர்மையாக செயல்படுத்த முடிவது அவ்வகையினதே என்று தெரிந்திருந்தும்.

சென்றவருடம் சொன்னபேச்சைக் கேட்காமல் ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதி பிரசுரித்துத்தொலத்தேன். ஆங்கிலம் வேண்டாம், தமிழிலேயே தொடர்ந்து எழுது என்று அசரீரி ஒலிக்கும் கெட்டகனவு வருவது இவ்வருடமும் தொடர்கிறது.

புத்தாண்டு தீர்மானம்: இவ்வருடமாவது, எழுதியாவது தமிழ் கற்றுக்கொள். வாசகர்கள் வித்யாசமாய் நினைக்கமாட்டார்கள்.

கெட்டகனவிலிருந்து விடுபட வேறுவழியில்லையாம். ‘கண்றாவித் துகளை’ நிச்சயம் காண்பாய் என்று போனவருடம் லார்ஜ் ஹாட்ரான் கொலைடருக்கு ஆரூடம் சொன்னவர் எனக்குச் சொன்ன ஆரூடம். பலிக்குமா என்று தெற்குவாசல் பாதாளக்கிருஷ்ணன் கோவில் எதிரிலமரும் கிளிஜோஸ்யரிடம் கேட்கவேண்டும். அவர் பதிலுக்கு கிளியிடம் கேட்டுச் சொல்வார். நமக்குத் தெரியாதா, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

அகவயமான கலைகளில் புறவயமாக விவாதிப்பது தக்க பலனளித்தது. புறவயமே உருவான பலர், பேசுவதை நிறுத்திவிட்டனர். அதனால், (குறிக்கோள் நிறைவேறிய திருப்தியில்?) ஒப்புக்கொண்ட ஓரிரு எழுத்தை எழுதிக் கிழித்துவிட்டு, இவ்வருடத்தில்

புத்தாண்டு தீர்மானம்: இசை பற்றி விவாதிப்பதை குறைத்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

அறிவியலை புறவயமாக எழுதியே அனைவரின் விரோதத்தையும் சம்பாதித்துக்கொள்ளமுடியும் என்று நம்பிக்கை உள்ளது.

பார்ப்போம். இன்னும் ஒருவருடம் அவகாசம் இருக்கிறது.

இவற்றையெல்லாம் மறக்க, மாற்றிக்கொள்ள.