மேலும் சில இசை தடங்கள். 2012 மார்கழி இசை விழா தாக்கத்தில்.
முதல் தவணையில் அறிமுகத்தில் குறிப்பிட்டிருந்த கல்யாணகுணங்கள் அனைத்தும், இவற்றிற்கும் பொருந்தும். ‘புண்படுத்தும்’ நகைச்சுவை ஒத்துக்கொள்ளாதவர்கள், பார்த்து வாசியுங்கள். இவ்வருடத்தில், இதற்குமேல் இவ்வகையில் தொடரமாட்டேன் என்று உறுதியளித்தால் வாசித்துவிடுவீர்கள்தானே.
*
விளக்கி அல்லது பாராட்டி எழுதியதை தெரிவிக்கையில் “ஐ கேண்ட் ரீட் டாமில் யார்” என்பவர்கள், பாதகமான விமர்சனங்களை தமிழில் எழுதுகையில் சரியாகப் புரிந்துகொண்டு அடுத்த கச்சேரியில் கேண்டீனில் சந்திக்கையில் பக்கத்து டேபிளை கவனிப்பது,
செம்மொழியின் வெம்மை அல்லது கலைஞர்களின் தன்மை.
*
மேற்படி கருத்திற்கு விதிவிலக்காக நான் சந்தித்த பாடகர், சஞ்சய் சுப்ரமண்யன்.
2009இல் அவர் கச்சேரியை விமர்சனம் செய்து எழுதியிருந்த கட்டுரையை படித்தபிறகும், இன்றும் என்னை உற்சாகப்படுத்தி தொடர்ந்து தமிழில் எழுதச்சொல்வது
செம்மொழியின் பெருமை அல்லது கலைஞர்களின் மேன்மை.
*
அகடெமியில் ஒரு நாள் ஸ்பெஷல் பாஸிற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுப்பவர்கள், சொந்த ஊரில், அருகிவரும் ‘குந்தளம்’ போன்ற வாத்யங்களை வாசிக்கும், வறுமையால் மதம் மாறும் கலைஞர்களை ஆதரிக்க அதை அளிக்கலாம்.
அகடெமி மேடையில் பாடும் கலைஞர்கள் புரிந்துகொள்வார்கள். ஒன்றும் சொல்லமாட்டார்கள்.
*
மேகமூட்டமான மத்யானம், பார்த்தசாரதி சுவாமி சபா கச்சேரியில் அம்ருதவர்ஷிணியில் ஸ்வரம்போட்டு வர்ஷய வர்ஷய வர்ஷய என்று பாடகர் நெடுநேரம் பாடியதும், என்ன ஆச்சர்யம்,
வரவேண்டிய மழை நின்றுவிட்டது.
*
ஐந்து வருடம் முன்னால் கேண்டீனில் நிறுத்தி, “என் கச்சேரிக்குலாமும் வரது” என்றவர், மூன்று வருடம் முன்னர் “ஹலோ சார், வரட்டுமா” என்றார் கையசைத்தபடி. இம்முறை நமக்கு எதிரில் அமர்ந்து சுற்றியிருக்கும் பலருக்கு கையெழுத்தும் கையசைப்பும் நிகழ்த்திக்கொண்டிருந்தார், அதே கேண்டீனில்.
இசைக் கலைஞர்கள்தான் என்னமாய் வளர்ந்துவிடுகிறார்கள்.
கூடவே இசையும் வளர்ந்தால் நிறைவே.
*
“யாரெல்லாம் கேப்ப?” என்றதற்கு “எல்லோரையும்தான்…” என்கிற என் பதிலில் திகைத்து “எல்லாரயும் கேக்காதறா, ஜீனியஸா பாத்து கேளு” என்கிறார் சதாபிஷேகம் கண்டுவிட்ட ரசிகர்.
நான் என்ன செய்வது? விசாரித்தால், நான் கேட்ட கலைஞர்களில் யார் இப்போது ஜீனியஸ் இல்லை என்று ஒப்புக்கொள்வார்கள், அவர்களை இனி நான் கேட்காமல் விட்டுவிட?
*
கச்சேரியின் நடுவே அபஸ்வரங்களில் சிணுங்கும் செல்பேசியை குட்டி, காதில் அழுத்தி, “நா கச்சேரில இருக்கேன் அப்றமா பேசறேன்” என்று அறிவிப்பது
‘இச்சுவற்றில் எதுவும் எழுதாதீர்’ என்கிற சுவர் அறிவிப்பிற்கு கீழே “சரி” என்று எழுதிவிட்டுச் செல்வதற்கு ஒப்பானது.
*
‘அகடெமி மெம்பர் நீல அட்டை’ பலதும், ஓரிரு ஓட்டைகளைத் தவிர, பஞ்ச் அடிக்கப்படாமலே இருப்பது எதையோ ஒன்றை மட்டும் இல்லை, பலதையும் குறிக்கிறது.
*
அரைநிஜாரில் வரும் ரசிகர்கள் அனைவரும் என்.ஆர்.ஐ. எனலாமா?
கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை விழாவில் வேஷ்டியில் வரும் அனைவரும் பூர்வாஸ்ரமத்தில் தென்னிந்தியர்கள் எனலாமா?
*
தந்திவாத்யங்களை மனம்போன போக்கில் வாசிக்கமுடியாமல், ‘கை’போன போக்கில் வாசிப்பது கச்சேரிக்கு கைவந்த கலையாகலாம்.
மனத்தைத் தொடும் கலையாகாது.
*
“அவா ரெண்டுபேரும் வெவ்வேற பாடுவா. ஒருத்தர் ஹிந்துஸ்தானி, இன்னொர்த்தர் கர்நாடிக். சேந்து ஜூகல்பந்தி பன்னிருக்கா. இந்த சீசன்லயே ரெண்டு மூணு வாட்டியாவது இருக்கும்…”
சரியாக வரும்வரை முயற்சிசெய்தார்கள் போலும்.
*
சுருதியுடன் சேர்ந்து பாடுவது நல்லிசைக்கு தேவையான குணமே. அதுவே மேடையேறப் போதுமானது என்று நினைக்கும் பாடகாள்,
தொழில்நுட்பவளர்ச்சியில் தங்களை விட பெட்டரான சுருதிப்பெட்டிகள் வந்துவிட்டன என்பதையும் கருத்தில்கொள்ளவேண்டும்.
*
இரண்டு மணி நேர கச்சேரிகளில் நிரவல் எனும் படைப்பூக்க அங்கம் சாய்ஸில் விடப்படுவதற்கு,
அவகாசமின்மை மட்டுமே காரணம் என்பதை அக்கச்சேரிகளுக்கு வராத ரசிகர்கள் வேண்டுமானால் நம்பலாம்.
*
“பப்ளூவுக்கு மியூஸிக்ன்னா அவ்ளோ இண்ட்ரஸ்ட்” என்று சபாவில் தோளில் தூங்கும் குழந்தையை காட்டுபவர்கள்,
என்ன சொல்லவருகிறார்கள் என்பதை யாராவது கேட்டுச்சொல்லுங்களேன்.
*
அநேகமாக அனைத்து சபாக்களும் ஏஸி செய்து வெளியிலிருந்து வரும் இடைஞ்சலான சப்தங்களை அடக்கிவிட்டனர்.
உள்ளிருந்தும் கர்நாடக சங்கீதம் பொதுமக்கள் காதுகளுக்கு வெளியேறாமல் முடங்கிவிட்டது என்பது
முன்னொருகாலத்தில் கிருஷ்ணகானசபா ‘கீத்து கொட்டாய்க்கு’ வெளியே நின்று கச்சேரி கேட்டவர்களுக்குப் புரியும்.
*
குரல் மந்த்ரஸ்தாயி ரிஷபத்தைத் தொடுகிறது என்பதால் அன்று அகடெமி மத்யான கச்சேரியில் இளம்பாடகர் நாட்டகுறிஞ்சி ராகம் நன்றாகப் பாடினார் என்பதாகுமா.
மறுநாள் அகடெமி மத்யான வீணை கச்சேரி சுமார்தான் என்றாலும், வைனிகர் வாசித்த நாட்டகுறிஞ்சி மேற்படி பாடகரதைவிட நன்றாக இருந்தது என்பதை மறுக்கமுடியுமா.
*
வீணை கச்சேரியில் மிருதங்கம் நிறைய அப்ளாஸ் வாங்கினால், ‘தனி’ யை ஆதிதாளத்தில் விடாமல், கண்ட ஜாதி திரிபுடையில் திஸ்ர கதியில் விடலாம்.
பாட்டு கச்சேரியில் கடம் முதல் ரவுண்டில் நிறைய அப்ளாஸ் வாங்கிவிட்டால், ‘தனி’ யையே அடுத்த ரவுண்டில் மிருதங்கம் ஒரு ஆவர்த்தனமாய் குறைத்துவிடலாம்.
இங்கு, ‘தன் பிழைப்பிற்கு மிஞ்சியதே கச்சேரி, கலை’ என்று எழுதிவைத்தால் மேலுள்ளவை விமர்சனமாகலாம்.
*
“குழந்தை பாடுவாளா?” என்றதற்கு “இப்பத்தான் கத்துக்கறா…” என்கிற என் பதிலை கேளாமல், வயதான ரசிகர் கொடுத்த அட்வைஸ்:
பாட வரலைனா ஓங்கி கன்னத்துல ஒண்ணு கொடு; நன்னா அழட்டும். தினம் அரைமணி அழுதா குரல் சரியாகி பாட்டு தன்னால வந்துரும்.
*
சீசனுக்கு முன் மொட்டை அடித்துக்கொண்டது, தெரிந்தவர்கள்கூட அகடெமி ஹாலில் தெரியாததுபோல கடந்துசென்றுவிட வசதியாய் உள்ளது.
*
சீசனின் பின்விளைவு இன்று மகள் என்னை ‘நீ… பா…’ என்றும் அம்மாவை ‘நீ… மா…’ என்றும் ஸ்வராக்ஷரமாய் விளிக்கிறாள்.
நானும் பதிலுக்கு செருமினேன், ‘நீ… பா..பா..’.