இசை தடங்க(ல்க)ள்

Standard

இவை மார்கழி மாதத்தில் சென்னையில் சபாக்களில் (நாளுக்கு மூன்று நான்கு கச்சேரிகள் என) சங்கீதம் கேட்கையில் மனத்தில் ஏற்படும் தடங்கள். விமர்சனங்கள் அல்ல. உபயோகமான கருத்துகள் எனவும் சொல்லமுடியாது.

அதற்காக ரஞ்சகமானவை என்றும் தீர்மானித்துவிட முடியாது. ‘புண்படுத்தும்’ நகைச்சுவையுடன் இருப்பதால், வாராந்திரிகளில் வெளிவராது. தணிக்கை போக மிச்சம் ஏதும் வெளிவந்தால், “இசை துக்கடாக்கள்” என்றோ “சங்கீத சிப்ஸ்” என்றோ தலைப்பிடுவார்கள் (அழகிய பாடகிகள் படங்களுடன் அவர்கள் கடைக்கண்ணிற்கு அருகே பிரசுரிப்பார்கள்).

அனைத்தையும் இசை வம்புகள் என வகைப்படுத்தமுடியாது. சுவாரஸ்யமானவை எனலாம். அதானாலேயே இலக்கியத் தகுதியை இழந்துவிடலாம். அதானாலென்ன, நஷ்டம் இலக்கியத்திற்குதானே.

வாசித்து ‘வையுங்கள்’.

*

இரண்டு மூன்று சீசன்களாய் திடீரென்று பல ஆண் பாடகர்களின் நெற்றியிலிருந்து உட்பிரிவுகள் ஏதுமின்றி ஹோல்சேலாய் ஹிந்துமதம் காணாமல்போய்விட்டது.

கூட்டம் நிறையவருவது உறுதியானால் பெண்களும் நெற்றியில் பொட்டின்றி, தலையில் பூவின்றி, மேடையேறலாம்.

புடவை அவ்வளவு சீக்கிரம் மறையாது (இதற்கு நான் அடிபடாதவாறு, மாற்றுச்சொல் தேர்வு கடினம்). காரணம் நீங்கள் நினைப்பதல்ல. நல்லிதயம் உள்ள ரசிகர்களுக்குத் தெரியும்.

*

‘பிரபல பாடகியின் கணவர் தற்கொலை’ என்று வந்துள்ள செய்தியின் கீழ் ஃபேஸ்புக்கில் லைக் ஆயிரம் என்று வருவது…

‘ஏன் ஆண்கள் கற்பழிக்கிறார்கள்’ என்கிற சுட்டியை கவனிக்கும் அனைத்து ஆண்களும் க்ளிக் செய்வதைக் காட்டிலும் அருவருப்பானது.

*

கல்யாணி, பூர்விகல்யாணி, தோடி, என்று வருகையில், “ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும்…” என்று ஹாய்யாக எழுந்துபோய்கொண்டிருந்தவனை ‘ரிவ்யூ செய்’ என்று கச்சேரிகளில் உட்கார்த்துவது, ஷேவிங் செய்யமுனைகையில், அது வளர்ச்சியை அழிக்கும் செயல்பாடு என்று தடுப்பதிற்கு ஒப்பானது.

*

“வரேன் அங்கிள்” என்று சபாக்களில் அழகானவர்கள் விடைபெறுகையில், “வரேன் அண்ணா” என்று அன்று வளை குலுங்க விடைபெற்றவர்களே தேவலாம் என்று மனது பெருமூச்சுகிறது.

*

இன்று பாடகர் அப்பியாசத்தில் தேர்ந்த வராளி ஆலாபனைக்குப் பிறகு ‘இடி ஜென்மமிதி ஹா…’ என்று உருகியதில், சாஃப்ட்வேர் பணியாளர்கள் ‘ஐடி (IT) ஜென்மமிதி ஹா…’ என்று நொந்துகொள்வதின் விரக்தியை உள்வாங்கமுடிந்தது.

*

‘களையான பாடகிக்கு உன் வயதுதானிருக்கும்’ என்றதும் மலர்ந்தவள்,  ‘என்னைவிட சற்று வயதானவளாய் தெரிந்தாள், அதான் சொன்னேன்’ என்று முடிக்கையில், முறைக்கிறாள்.

*

பிரபல நாளிதழ்களில், சஞ்சிகைகளில் விமர்சனம் எழுதுவதின் முக்கால்வாசித் திறன், கலைஞர், வாசகர் என எவரும் துணுக்குறாவண்ணம் விமர்சன வார்த்தைகளை கண்டுபிடித்து ஆங்காங்கே மானே தேனே தூவிக் கோப்பதுதான்.

*

சபாக்களில் தினமும் இறைந்திருக்கும் இலவச கச்சேரி செய்தித்தாள் தன்னை எப்படி உபயோக்கிக்கவேண்டும் என்று டிப்ஸ் கொடுத்துள்ளது. கோடிட்ட இடங்களில் நான்காய் மடித்துக்கொண்டால் வாசிக்க வாகாய் இருக்கும் என்று.

பிரபல நாளிதழ்கள் யோசனையை பின்பற்றலாம். எட்டாய் மடித்தால், குப்பைத்தொட்டியில் போட வாகாய் இருக்கும். 42 முறை மடித்தால் நிலவையே எட்டலாம்.

*

அறிவிப்புப் பலகையில் ‘பாடுபவர் அவந்திகா ரவி’ என்று போட்டிருந்த கச்சேரியில் பாடியது அவந்திகாவாகத்தான் இருக்கவேண்டும். ரவி கச்சேரிக்கே வரவில்லை என்பதை உறுதிசெய்துவிட்டால்.

*

உள்ளே உட்கார சங்கடமாயிருக்கும், அங்கிருக்கும் பெரியமனுஷாள்லாம் “உன்னை எப்படி உள்ளே விட்டது?” என்று எப்போது கழுத்தைப்பிடித்து நெட்டி வெளியே தூக்கியெறிவார்களோ என்று பயமாகவே இருக்கும்.

என்று எழுதியதை, அர்த்தம் மாறாமல்,

என்னத்தான் தூக்கியெறியப்படலாமோ என்று நான் அச்சப்பட்டாலும், அவ்வாறு இதுவரை நடந்ததேயில்லை; தவிரவும் அங்கு கமழும் கலையே என்னை உள்ளேயே கட்டிப்போட்டுவைக்கிறது.

என்று எழுதவைப்பவரே நல்ல எடிட்டர்.

*

டேப்பில் பாடகர் நீலாம்பரியை விஸ்தாரமாய் பாடிக்கூட தூக்கம் இன்றி தவிக்கிறேன் என்கிறார் அயல் நாட்டு தமிழ் நண்பர்.

நேற்று கச்சேரியில், எழுப்பவேண்டிய பௌளியை பாடியே என்னை தூங்கவைத்தவர் திறமையான பாடகர்தான்.

*

இசை கலைஞர் நூற்றாண்டு நினைவு விழாவில், மேலைநாடுகள் இந்தியா என்று எவ்வகையிலும் பிடிபடாத கலப்படி தொனி ஆங்கிலத்தில் காம்பியர்  செய்த நாரீமணி, ஞாபகமாய் நபர்களை தோற்றத்திற்கேற்றவாறு ‘தாத்தா,’ ‘மாமா,’ ‘அண்ணா’ என்று டாமிலில் அவர்கள் பெயருடன் இணைத்து விளித்தார்.

அவைகளையும் ‘க்ராண்ட்பா,’ ‘அங்கில்,’ ‘ப்ரோ,’ என்று சொல்லியிருக்கலாம். என்னத்தான் கர்நாடக இசை திராவிட மொழிகளிலேயே பிழைத்திருக்கிறது என்றாலும், ஸ்பெஷ்டமான காம்பியரிங்கில் இடையிடையே தமிழ் வருவது ‘மடி’யை குலைத்துவிடுமாக்கம்.

*

வயலினில் ஆலாபனை வாசித்து முடித்தவுடன் ராகம் வாய்ஸில் நன்றாக வந்ததாகத் தோன்றியது.

டி. ராஜேந்தர் அல்லது மனோஜ் நைட் சியாமளன் புதிய படத்தை பார்க்கையில், அதற்கு முன்னர் அவர்கள் இயக்கிய படம் பரவாயில்லை என்று தோன்றுமே, அதுபோல.

*

பூர்வி (புவர்-வீ) கல்யாணி-யை குண்டர் தடை சட்டத்தில் உள்ளே தள்ளவேண்டும்.

அல்ப பிரயோகமான க ம த ஸ வை குறைத்து, க ம ப த ப ஸ வை வைத்து நேர்த்தியாய் பாடாதவர்களையா அவ்வகையில் தள்ளிக்கொண்டுபோகமுடியும்?

*

அதான் தொடக்கத்திலேயே லதாங்கி வந்துவிட்டதே அப்பாடா இனி கச்சேரியில் கல்யாணி, பூர்விகல்யாணி, பந்துவராளி என்று எதுவும் வராது என்று சமாதானமாகையில் அடுத்ததாய் வருகிறது தோடி.

*

லெக்சர்-டெமான்ஸ்ட்ரேஷன்களில் கேள்விகளுக்கு நேரிடையாக பதிலளிக்ககூடாது என்பது பாரம்பர்யமான விதி.

அதனால் வேறு எப்படியும் சிதறமுடியாமல் நேரிடையாக பதிலளித்தே ஆகவேண்டியதுமாறு ‘சிக்கலான’ கேள்வி வருகையில், பதிலாய் பாடத்தொடங்கவேண்டும்.

*

“தியாகராஜா காட் (caught) தி ராகா, தீக்ஷதர் டாட் (taught) தி ராகா” என்றார் மூத்த இசை ஆய்வாளர் தன் உரையில்.

இவ்வகை ‘விளம்பரச் சொலவடை’களுக்கு நிஜமாகவே ஆழ்ந்த பொருள் இருக்கவேண்டும் என்பதில்லை. ரஜினியின் ‘பஞ்ச் டயலாக்’ போல. பம்மல் சம்பந்தத்தின் ‘பழமொழி’ போல. அனுபவிக்கனும். ஆராயப்படாது.

*

என்னத்தான் எம். எஸ். டேப்பை ‘பொட்டநெட்ரு’ போட்டுப்பாடினாலும் அகடெமி மேடையின் ‘ரங்க புர விஹாரா’ ஒரிஜினலுக்கு ஒரு ட்ரிப்யூட் மட்டுமே.

இதே மதிப்பீட்டை பாட முயல்வதற்கு முன்னர் தானே ஒப்புக்கொண்டுவிடுவதால், அருணா சாயிராம் சுதா ரகுநாதனைவிட சபையறிவு மிக்கவர் எனலாம்.

*

அகடெமி கேன்டீனில் கடுகடுவென்றிருந்தவரிடம் பத்து ரூபாய் டிப்ஸ் வெட்டி, முதுகில் தட்டி, “நீங்க சிரிச்சா அழகாயிருக்கும்” என்றதும் நின்று, கெட்டி சட்னியுடன், தன் சோகங்களை சற்று பரிமாறினார். சிரிக்க மறுத்துவிட்டார்.

மறுநாள் மறந்துவிட்டார்.

*

மீனாம்பிகாவில் காவிவேட்டியை மடித்துக்கட்டியபடி “சாருக்கு ஒரு அசோகா அல்வா” என்றபடி வந்தவன்… ஆ, பள்ளியில் உடன் படித்தவன். இருவருக்கும் அடுத்தவர் பெயர் ஞாபகம் இருந்தது, மகிழ்ச்சி. படிக்கையில் அவனுக்கு சமையல் தெரியும் என்பது எனக்குத் தெரியாது. எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது என்பது அவனுக்கு இன்றும் தெரியாது.

*

கதாகாலக்ஷேபம் குறுந்தகடுகளில் மூன்றில் ஒன்றை இலவசமாய் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்துவது ‘ஸ்ருதி’ சஞ்சிகையின் சந்தாதாரர்கள் எண்ணிக்கையை உயர்த்தும், என்கிற விளம்பர யுக்தியை ‘அமிதாப்பச்சன் கார்ப்பரேஷன்’ வளர்த்தி கோடீஸ்வர முதலாளியை லட்சாதிபதியாக்கிய யாரோ எம்.பி.ஏ.கள் சொல்லிக்கொடுத்திருப்பார்களோ.

*

[முடிக்கும்முன் மாறுதலாக…]

“சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா…” என்று இழுக்கையில்

‘ஒருவேளை கழுத்து சுளுக்கோன்னு’ நினைத்துக்கொள்கிறேன்.

ராஜ இசையில் சொக்கியுள்ள மனத்தை தரையிறக்க உதவுகிறது.