ஏலியன்ஸ் திவசம்

Standard

ஏலியன்ஸ், வளி-அறிவு-ஜீவராசிகள், பற்றி தமிழில் ஒரு அறிவியல் புத்தகம் பதிப்பாளரின் ஒப்புதலுடனேயே தொடங்கி, எழுதி முடித்து, அக்டோபர் 29, 2010 அன்று அளித்தேன். வெளிவராத அப்புத்தக வடிவிற்கு இன்று (அக்டோபர் 29, 2012) இரண்டாவது வருஷாப்திகம். திவசம்.

முதல் திவசத்தை மனதில் ஒட்டியிருந்த சில நல்லுணர்வு நம்பிக்கைகளால் விமர்சையாக கொண்டாட முயலவில்லை. புத்துயிர் ஊட்டி புத்தக வடிவை பதிப்பாளரிடம் கிடத்தினேன். இன்று இரண்டாவது திவசத்தை தடபுடலாக்க வேலைவெட்டியில்லாத அறிவு விழைந்தாலும் ஆகவேண்டியதை பார்க்கும் மனது கசப்பினால் கடந்துசென்றுவிட்டது. அதனால் எள்ளுருண்டை, சுவியன் சகிதமாய் ‘ஞானவாபியில்’ விமர்சையை தவிர்த்து, வீட்டில் சிம்பிளாய் கறிவேப்பிலை துவையல் மட்டும் செய்யச்சொல்லியிருக்கிறேன்.

என்னத்தான் மின்காந்த வெளியில் இரண்டடிமான எண்களாய் நிர்குணருபத்தில் அ-வைசேஷிகமாய் புத்தகம் தூலவடிவு பெற்றிருந்தாலும், லாப்டாப்பினுள்ளேயே பிணத்தை இரண்டு வருடமாய் வைத்திருந்தால் டைப் அடிக்கும் விரலும் நாறுகிறது. ஹார்ட்-டிஸ்க்கை ஃபார்மாட் செய்து, புனர்பூஜை, ஃபினாயில், போட்டு மறுவாழ்வு கொடுத்துள்ளேன்.

வெளிநாட்டுப் பயணத்தில் தொடங்கி, வீட்டில் பூனைப் பிரசவித்தது வரை இன்னமும் பிரசுரிக்காததற்கு படைப்பூக்கத்துடன் பதிப்பாளர் கனிசமான காரணங்கள் சொல்லிவருகிறார். சில நிஜமாகவும் இருக்கலாம். ஆனால் இரண்டு வருடம் என்பது இவ்வகைத் “தற்காலிகக் காரணங்களைக்” கடந்தது. இடையில் ஒப்புக்கொண்டு, தொடங்கி, எழுதி முடித்த என் பாடபுத்தகமே வெளிவந்துவிட்டது.

தமிழில் எழுதப்படும் அறிவியல் புத்தகங்கள் போணியாகாது, வாங்குவதற்கு போதுமான ஆளில்லை என்றிருக்கலாம். எனக்குமே சந்தேகம்தான். விவாதித்ததில் இது முக்கியமான தடையாகத் தெரியவில்லை. தேவைக்குத் தகுந்தவாறு அச்சிடும் அளவைக் குறைத்துக்கொண்டால், மொத்தமாக அடிவாங்காமல் –- பெரிதாக லாபமும் வராது – தப்பிவிடலாம்.

“ஏதோ அப்ப ஆர்வக் கோளாறில் சொல்லி விட்டேன், நீ வேலைமெனக்கெட்டு மூன்றே மாதத்தில் எழுதிமுடித்துவிடுவாய் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், இப்போது அறிவியல் புத்தகங்கள் பதிப்பிக்க முடியாது, போ.” என்று கூறிவிடலாமே. பதிப்பாளர் செய்தால் அவர் பக்கம் குறை இருப்பதாய் ஒப்புக்கொள்ளவேண்டும். அதற்கு எழுதிக்கொடுத்தவரே இழுத்தடிப்பில் வெறுத்துப் போய் விலகிக்கொண்டால் நல்லதுதானே.

இதற்கு இன்னொரு பதிப்பாளர் “அறிவியலா, அதெல்லாம் வானாம் சார், ஏதோ ப்ரொபஸர்ங்கறீங்க, இப்போ மார்கெட் சீ-ப்ளஸ்-ப்ளஸிற்குதான், அதைப் பத்தி எழுதிக்கொடுங்க, உடனே போடறேன்” என்ற நேர்மை பல நிதர்சனங்களை விளக்கவல்ல தெளிவுடையது.

கனடா நாட்டுத் தமிழ் நண்பர் சொன்னாரே என்று இரண்டு வருடம் முன்பு போய்ப்பார்த்ததற்கு, இன்னொரு பதிப்பாளர் நான் வேலை செய்யும் இடத்தைக்கேள்விப்பட்டு, “ஓ, அப்போ இனிமேதான் தமிழ்ல எழுதிப்பழகனும்னு சொல்லுங்க” என்றார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை; என் அலுவலைச்சுற்றியுள்ள நிலை அதுதானே. நவீன தமிழ் இலக்கியத்தில் பல அருமையான புத்தகங்களை தொடர்ந்து வெளிக்கொண்டுவருபவர் இப்படி எடுத்தவுடன் ‘பரிவாய் விசாரித்தால்’ என்ன செய்வது. “என்னைப்போன்ற ‘தமிழ் தெரியாத அறிவு ஜீவிகளுக்கு’ மட்டும்தானே அய்ண் ராண்ட் வகை மேட்டிமைவாதம் பேசவரும்?” என்று யோசித்துக்கொண்டே வந்து விட்டேன்.

ஆனால் “ஏலியன்ஸ் புத்தக” பதிப்பாளர் இவ்வகை மேட்டிமைகளில் சிக்காதவர். ஜஸ்ட் சொல்வதை, ஏதேதோ நிர்பந்தங்களினால், குறிப்பிட்ட அவகாசத்தினுள் செய்யமுடியாதவர். என் விஷயத்தில் அவர் பக்கம் ஒரு நியாயம் உள்ளது. என்னுடைய அறிவியல் புத்தகத்தை மட்டும் பதிப்பிக்காமல் இழுத்தடிக்கவில்லை. நான் இரண்டு வருடம்தான் வெயிட்டிங். என்னை விட சூப்பர் சீனியர் எல்லாம் க்யூவில் இருக்கிறார்கள் என்று அறிகிறேன்.

தமிழில் பாப்புலர் புத்தகங்களில் ஒன்று “சமைத்துப் பார்” எனும் தலைப்பிட்டது. அதில் விவரித்துள்ளபடி பண்டங்களைச் சமைத்துச் சாப்பிட்டால் அனைத்தும் தின்பதற்கு சிலாக்கியமாக இருக்கும் என்பதற்கில்லை. ஏன் என்பதற்கு எழுத்துப்பிழைகளையும், சமைப்பவரையும் சேர்த்துப் பல காரணங்கள். ஆனால் முக்கியமான காரணம் ”சமைத்துப் பார்” தலைப்பிலேயே பொதிந்துள்ளது. சமைத்தது, பார்ப்பதற்கே, தின்பதற்கில்லை.

இரண்டு வருட காத்திருப்பிற்குப் பிறகு எனக்கு விளங்குவது, இதைப்போலத்தான் இப்பதிப்பாளரின் வாக்குறுதியும். அறிவியல் புத்தகம் அவர் சம்மதத்துடன் நாம் எழுதுவதற்கே. பிரசுரமாக்குவதற்கில்லை.

இருந்தாலும் பதிப்பாளர் பேச்சு மாறாதவர். “வரும் புத்தகக் காட்சிக்கு உங்கள் புத்தகம் நிச்சயம்,” என்று எப்போது கேட்டாலும் சொல்லிவருகிறார்.

எழுதத்தூண்டும் முன்பே இவ்வகை நிச்சயமின்மை பற்றி பதிப்பாளர் தெரிவித்திருந்தால் நிச்சயம் ஏலியன்ஸ் புத்தகத்தை எழுதியிருக்கவே மாட்டேன். ஒரு சில இணைய கட்டுரைகளுடன் நிறுத்தியிருப்பேன். மூன்று மாதங்கள் (ஜூலை – அக்டோபர் 2010)  என் பின்னிரவு நேரங்களை தூக்கம் போன்ற வேறு ஏதாவது கர்மங்களில் செலவிட்டிருப்பேன். என் நேரம் மற்றவர்களின் கழிப்பிடம் இல்லை.

எனக்கு இப்போது அலுத்துவிட்டது. அதனால் இந்த இரண்டாவது வருஷாப்திக நல்ல நாளில் அனுபவத்தை எழுதிப்பகிர்வதன் மூலம் கடந்து செல்ல முயல்கிறேன்.

எழுதுகையில் வருங்காலத்திற்கும் சில முடிவுகள் திரள்கிறது.

இரண்டு வருடம் முன்பு ஏழு அறிவியல் புத்தகங்களுக்கான கருக்களை விவாதித்து அட்லீஸ்ட் மூன்று புத்தகங்கள் (ஏலியன்ஸ் புத்தகம் தவிர) செய்யலாம் என்று மேற்படி பதிப்பாளரும் நானும் முடிவுசெய்துகொண்டோம். தற்காலிகமாய் இவற்றை எழுதுவதை நிறுத்திவிட்டேன். இப்போதும் எழுதி முடித்துவிடமுடியும். அதற்கான ஆர்வமும், அவகாசமும், உழைப்பும் ஊக்கமும் என்னிடம் இருப்பதை நானறிவேன். ஆனால் தமிழ் அச்சு ஊடகங்களுக்கு இவையெல்லாம் காசிற்கு விற்கப்படும் புத்தக வடிவில் தேவை என்பதில் எனக்கு இன்று நம்பிக்கையில்லை.

மற்றபடி தமிழில் அறிவியலை வளர்த்தே தீருவேன் என்று பொதுச்சபைகளில் தொடைதட்டிச் சபதமெடுத்துள்ளவர்களும், தமிழ்நாட்டில் உறையும் மேட்டிமை பல்கலைக்கழகங்கள் தமிழருக்கு என்ன கிழித்தது என்று தாயகம் வருகையில் அறச்சீற்றம் கொள்ளும் அயல்வாழ் தமிழர்-விஞ்ஞானிகளும், ஹெமொராஜ் என்பதை ரத்தக்கசிவு என்று சீரழிக்காமல் குருவுக்குப்பு என்று அனைவருக்கும் புரியுமாறு வகைசெய்யும் சொற்’கொல்’லர்களும் நலம்.