ஆர்செனிக் பாக்டீரியா தற்காலிக அடக்கம்

Standard

நமக்கு விஷமாகிய ஆர்செனிக் மூலக்கூறுகளை ‘உண்டு’ வாழும் பாக்டீரியாக்கள் நம் உலகில் உள்ளது என்று 2010இல் ஒரு அறிவியல் செய்தி வெளியாகியது. அமெரிக்காவின் நாஸா ஆராய்ச்சி மையத்திடம் மான்யம் பெற்ற ஃபெலிஸா உல்ஃப்-ஸைமன் மற்றும் விஞ்ஞானிகள் குழு கலிஃபோர்னியா மாநிலத்தின் மோனோ ஏரியின் சேற்றில் வாழும் GFAJ-1 என்று குறிப்பிடப்படும் நுண்ணுயிரை பரிசோதித்து அவைகளால் ஆர்செனிக்கை உண்டு வாழமுடியும் என்று ஊகித்தார்கள். அதனால், மரபணுவில் பாஸ்பரஸ் மூலப்பொருளுக்கு பதிலாக உபயோகித்துகொள்ளும் அளவிற்கு, நமக்கு விஷமாகிய, ஆர்செனிக்கை உட்கொள்ளும் நுண்ணுயிர்கள் உலகில் உள்ளது என்று 2010இல் “சயின்ஸ்” ஆராய்ச்சி சஞ்சிகையில் அறிவித்தார்கள். விஷ(ய)ம் கேள்விப்பட்டு அங்காடித்தெருவில் ஆர்செனிக்கை pet food பகுதிக்கு மாற்றினார்கள்.

ஆனால், ஃபெலிஸா வுல்ஃப்-சைமனால் ஆர்செனிக் சூழலில் தழைத்ததாக கருதப்பட்ட அதே பாக்டீரியாவினால் அடுத்த இரண்டு ஆராய்ச்சிக் குழுக்களின் மறு-பரிசோதனைகளில் (ஜூலை 2012 இம்முடிவுகள் வெளியாகின), அதே ஆர்செனிக் அதிகமான சூழலில், தழைக்கமுடியவில்லை. எவரது பரிசோதனைகள் தவறானவை? இன்றைக்கான சரியான புரிதல் எது? கட்டுரையில் விவரிப்போம்.

[எச்சரிக்கை: கட்டுரையில் படங்களோ, ஜோக்குகளோ, கிடையாது. சிட்டிகை ஆங்கில வாடை கலந்த நீண்ட விவரணை மட்டுமே.]

*
மாற்று உயிர்” என்று தலைப்பிட்ட கட்டுரைகளில் நாம் விரிவாக இங்கும் சொல்வனம் இதழ்களிலும் [உயிர், மாற்று உயிர் -1] எழுதியுள்ளோம். செம்டெம்பர் மற்றும் அக்டோபர் 2012 அம்ருதா அச்சு ஊடக இதழ்களில் வெளிவந்துள்ளது. சொல்வனம் கட்டுரைத்தொடரின் இறுதிப்பகுதியில் [உயிர், மாற்று உயிர் – 4] இந்த ஆர்செனிக் பாக்டீரியா பற்றி விவரித்துள்ளோம். அக்டோபர் 2012 ‘அம்ருதா’ கட்டுரையில் இங்கு எழுதப்போகும் புதிய ஆராய்ச்சி முடிவுகள் பற்றியும் பக்க நிர்ணயங்களுக்கேற்ப அளிக்கப்பட்டுள்ளது.

“மாற்று உயிர்” என்று நாம் இங்கு குறிப்பிடுவது, நம் அளவு உயரம் பருமன் மூளை உடைய சிக்கலான உயிரியலுடைய “மேம்பட்ட” அறிவு-ஜீவராசிகளை இல்லை. பாக்டீரியாக்கள் மற்றும் அதைவிட சிறிதான நுண்ணுயிர்களை, வைரஸ் போன்ற உயிரணுவின்றி செயல்படும் மைக்ரோபுகளை. புரிதலுக்காக, இவற்றை எளிமையான, சாதா உயிர்கள் என்கிறோம். “மாற்று உயிர்கள்” நம்மைப்போன்ற உயிரினத்திலிருந்து மாறுபட்டு, ஆனால் மொத்தமாக வேறாக இல்லாத, நம் உயிர்தொகை தழைக்கும் உருளையின் (பூமி) நிழலாய், இயங்கும் ஒரு நிழல் உயிருருளை. பூமியிலேயே தழைக்கும் Shadow Biosphere என்கிறார்கள்.

நுண்ணுயிரிலிருந்து மண்ணுயிர்வரை, நம்மைப்போன்ற அனைத்து உயிர்களின் மரபணுக்களும் (டி.என்.ஏ.) அடினைன், குவானைன், சைடோசைன், தையமின் என்ற நான்கு முக்கியமான அமினோ அமிலங்களினால் ஆனது. இவைகள் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய மூலப்பொருட்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் வாட்ஸன் கண்டுகொண்ட(தாய் நம்பப்படும்) டபுள்-ஹெலிக்ஸ், இரட்டைச் சுருள், வடிவத்தில் உள்ள இந்த மரபணுவில், இரண்டு சுருள்களிலும் முதுகெலும்பாய் பாஸ்பரஸ் செயல்படுகிறது. அனைத்து உயிரினத்திற்கும் மரபணு இந்த மூலக்கூறுகளால்தான் ஆகியிருக்கும், இவற்றை மாற்றமுடியாது என்பது தற்கால அறிதல்.

சாத்தியப்படுமாறு ஒரு வகை ‘மாற்று உயிர்’ உள்ளது. மரபணுவில் கார்பன் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் மற்ற மூலக்கூறுகள் மாறலாமே என்கிற சிந்தையிலிருந்து புறப்படுகிறது. அதாவது கார்பனுடன் அமினோ அமிலங்களில் சேரும் மூலக்கூறுகள் நமக்கு இருக்கும் மூலக்கூறுகளிலிருந்து மாறுபட்டிருந்தால்?

நம்மைபோலன்றி மொத்தமாக வேறுவகையான உயிரினங்களை எப்படித்தேடுவது? நாம் எங்கெல்லாம் இருக்கமுடியாதோ, நம்மைப்போன்ற ஜீவராசிகள் எங்கெல்லாம் வாழமுடியாதோ, எங்கெல்லாம் தேடலை தொடங்கலாமே. இந்த யோசனையின் நீட்சியாக, ஒருவேளை நமக்கு விஷம் என்று கருதும் வேதியியல் பொருட்களை உணவாகக்கொள்ளும் ஜீவராசிகளை ஆராய்ந்தால் அவைகளில் சில “மாற்று உயிர்கள்” என்று அறியமுடியுமா?

இங்கு குழம்பவேண்டாம். நாம் ‘மாற்று உயிர்’ என்று தேடுவது நம்போன்ற உயிர்களிடத்தே இல்லாத புதிய மூலக்கூறுகளை மரபணுவிலேயே (DNA) கொண்ட உயிர்களைத்தான். ஆனாலும் முதல் கட்டமாக நம்மால் உட்கொள்ளமுடியாத மூலக்கூறுகளை உணவாகக்கொள்ளும் உயிரினங்களை சோதிக்கலாம். பிறகு, இவற்றில் சில தங்கள் மரபணு வரை இவ்வகை மூலக்கூறுகளை கொண்டுசென்றுள்ளதா என்றும் சோதிக்கலாம்.

இவ்வகை யோசனையில் ஒன்று அமேரிக்காவில் ஃபெலிஸா வுல்ஃப்-சைமனுக்குத் (Felissa Wolfe-Simon) தோன்றியது. 2008 வாக்கில் அவர் நாஸா-விடம் ஆராய்ச்சிமான்யம் கேட்டு எழுதிய பிரேரணையில், தான் ஆர்செனிக் உட்கொண்டு வாழும் உயிரினத்தை கண்டறிய முயல்வதாக குறிப்பிட்டார். 2010இல் முதல் கட்ட ஆராய்ச்சி முடிவுகளை சயின்ஸ் சஞ்சிகையில் குழுவினருடன் வெளியிட்டார். அதில்தான் மோனோ ஏரியின் சேற்றில் வாழும் GFAJ-1 என்று குறிப்பிடப்படும் நுண்ணுயிரை பரிசோதித்து அவைகளால் ஆர்செனிக்கை உண்டு வாழமுடியும் என்று ஊகித்ததை சில பரிசோதனை முடிவுகளுடன் வெளியிட்டார்கள்.

*

சர்ச்சை

ஃபெலிஸா குழுவின் “மாற்று உயிர்” ஆராய்ச்சி முடிவு சரியில்லை என்று வெளிவந்தவுடனேயே (2010இல்) சர்சையை கிளப்பியது. இதில் ஆச்சர்யமில்லை. உயிரியலை விரிவாக்கமுனையும் இவ்வகை ஆராய்ச்சிமுடிவு சர்சையை கிளப்பாமல் போனால்தான் ஆச்சர்யம். இதைப்பற்றிய விபரங்கள் “ஆர்செனிக் பாக்டீரியா சில சந்தேக நிவர்த்திகள்” என்ற குறுங்கட்டுரையில் உள்ளது. இக்கட்டுரையின் ஒருமைக்காக அதிலிருந்து இங்கு சுருக்கிவரைகிறேன்.

ஆர்செனிக்கை மரபணு வரை கொண்டுசென்று “உண்ணும்” பாக்டீரியா உண்டா இல்லையா என்ற இந்தச் சர்சையில் சில இணைய செய்திகள் (salon, abcnews தகவல் பக்கங்கள்), இவ்வகை உயிரியல் ஆராய்ச்சியில் தேர்ந்த சில விஞ்ஞானிகளின் வலைப்பூக்களில் நிகழும் விவாதங்கள் அறிவியலைத்தாண்டி சில விஷயங்களை அலசினர். ஃபெலிஸா குழுவின் ஆராய்ச்சி முடிவுகள் “சயின்ஸ்” ஆராய்ச்சி சஞ்சிகையில் வந்ததற்கு காரணமே இதைச் செய்தவர் அமேரிக்காவில் வசிக்கும் யௌவன யுவதி. இந்தியா சீனாவிலிருந்து போயிருந்தால், எழுத்தாளரின் முதல் கதை முயற்சி போல, கட்டுரை போஸ்ட் செய்த கையோடு வீட்டிற்கு திரும்பிவந்திருக்கும். மேலும் கட்டுரை வெளிவருவதற்கு நாஸா என்ற ஆராய்ச்சிமான்யம் கமழும் ராட்சஸனின் திரைமறைதிறன் பாய்ந்துள்ளது என்றெல்லாம் தெரிவித்தனர்.

ஆர்ஸெனிக் உண்ணும் உயிர் உண்மைதானா? ஊடக மற்றும் சர்ச்சைகளைத் தாண்டி, உருப்படியான புறவயமான எதிர் அறிவியல் தர்க்கங்கள் இல்லையா? இருக்கிறது. இதையும் விஞ்ஞானிகள்தான் (வலைப்பூவிலும், இதர இணைய தளங்களிலும்) முன்வைத்தனர். இவர்கள் சொல்வது ஃபெலிஸா குழுவின் கட்டுரையின் பரிந்துரையின்போது சில முக்கியமான கேள்விகளை கேட்க விட்டுவிட்டார்கள். ஒரு சில சாதகமான முடிவுகளை கட்டுரையில் கண்டதும், உற்சாகத்தில் மேலோட்டமான பரிந்துரை செய்துவிட்டார்கள் என்கிறார்கள்.

உதாரணமாக, சில கேள்விகள்: 1) ஆர்ஸனிக் உண்ணும் பரிசோதனையில் ஒருவேளை சோதனைக்கூண்டில் பாஸ்பரஸ் ஒட்டிக்கொண்டிருந்திருக்கலாமே, சரியாக சுத்தம் செய்ததற்கான வழிவகையை கட்டுரையில் குறிப்பிடவில்லையே. 2) ஒருவேளை ஆர்ஸெனிக் மரபணுவரை செல்லாமல், உயிரணுவின் லிப்பிட்டுகளில் ஒட்டுக்கொண்டிருப்பதை பரிசோதனையில் கண்டு உணர்ச்சிவசப்பட்டுவிட்டாயா? (நம் லிப்பிட்டுகளிலும் பாஸ்பரஸ் இருக்கும்; இங்கேயும் பாஸ்பரஸிற்கு பதில் ஆர்ஸெனிக் ஒட்டிக்கொள்ளலாம்தான். சென்ற பாகத்தில் குறிப்பிட்டுள்ளேன்) 3) ஆர்ஸெனிக் ஒட்டிக்கொண்டுள்ள மரபணு, நீரிலிட்டதும் (ஆர்ஸெனிக்கும் நீரும் உறவாடி) ரசாயனக்கட்டுக்கோப்பை கழன்றுகொண்டுவிடுமே, இதெற்கென்ன பதில்? 4) சோதனையில் இந்த நுண்ணுயிரை வளர்பதற்காக உபயோகித்த மற்ற உப்புக்களில் தக்குணூண்டு பாஸ்பரஸ் இருக்குமே, அதைக்கொண்டு (ஆர்ஸெனிக் சூழலிலும்) ஒருவேளை நுண்ணுயிர் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கலாமே?

ஃபெலிஸா சளைக்கவில்லை. பாஸ்பரஸ்-மட்டுமே சூழல், ஆர்ஸெனிக்-மட்டுமே சூழல், பாஸ்பரஸ்-ஆர்ஸெனிக்-இரண்டுமுள்ள சூழல், பாஸ்பரஸ்-ஆர்ஸெனிக்-இரண்டுமற்ற சூழல் என்று நான்கு சூழலில் இந்த பாக்ட்டீரியத்தை பரிசோதித்துள்ளேன். நீங்கள் சுட்டிக்காட்டும் அனைத்து தவறுகளும் என் பரிசோதனைகளில் இருக்கட்டும். ஆனால் சோதனை முடிவில், பாஸ்பரஸ்-ஆர்ஸெனிக்-இரண்டுமற்ற சூழலில் இறந்துவிடும் பாக்ட்டீரியம், ஆர்ஸெனிக்-மட்டும் சூழலில் தழைத்துள்ளதே. இது எப்படி?

*

புதிய (2012) ஆராய்ச்சி முடிவுகள்

ஃபெலிஸா வுல்ஃப்-சைமன் கேட்கும் இந்த ஆதார கேள்விக்கு பதில் கண்டுகொள்ள 2010இல் ஃபெலிஸா குழு வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகளை சந்தேகித்து, ஆர்செனிக் உண்ணும் GFAJ-1 பாக்டீரியாவை “மாற்று உயிர்” என ஐயம் திரிபற நிரூபிக்க இரண்டு குழுக்கள் தனித்தனியே மேற்கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டார்கள்.

கனடா நாட்டு வான்கூவரில் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைகழகத்திலிருந்து ரோஸ்மேரி ரெட்ஃபீல்ட் (Rosemary Redfield) தலைமையில் ஒரு குழுவும் (இதில் சுனிதா சின்ஹா என்ற இந்திய மாணவியும் உண்டு), சுவிட்சர்லாந்தின் பிரசித்திபெற்ற ஈ.டி.எச். (ETH) பல்கலையிலிருந்து டோபியாஸ் எர்ப் (Tobias Erb) தலைமையில் மற்றொரு குழுவும் இரண்டு வருடங்களாக பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். சமீபத்தில் ஜூலை 2012இல் இரண்டு குழுக்களும் ஃபெலிஸா பிரசுரித்த அதே சயின்ஸ் ஆராய்ச்சி சஞ்சிகையில் தங்கள் பரிசோதனை முடிவுகளை வெளியிட்டார்கள். இம்முடிவுகள் GFAJ-1 பாக்டீரியா ஆர்செனிக் சூழலில் தழைக்காது இறந்துவிடும் என்றது.

அதாவது ஃபெலிஸா வுல்ஃப்-சைமனால் ஆர்செனிக் சூழலில் தழைத்ததாக கருதப்பட்ட அதே பாக்டீரியாவினால் அடுத்த இரண்டு ஆராய்ச்சிக் குழுக்களின் மறு-பரிசோதனைகளில், அதே ஆர்செனிக் அதிகமான சூழலில், தழைக்கமுடியவில்லை.

மேலும், புதிய ஆராய்ச்சி பரிசோதனைகளில் (இரண்டு குழுவினரின் முடிவுகளிலும்) டி.என்.ஏ. வரை GFAJ-1 பாக்டீரியா ஆர்செனிக்கை கொண்டுசெல்லவில்லை, ஒருவேளை தனியே லிப்பிடுகளில் ஆர்செனிக் கலந்திருந்ததை (நம் உடலில் லிப்பிட்-டுகளிலும் (lipid) பாஸ்பரஸ் இருக்கும்; இங்கேயும் பாஸ்பரஸிற்கு பதில் ஆர்செனிக் ஒட்டிக்கொள்ளலாம்தான்) ஃபெலிஸா குழுவினர் தங்கள் பரிசோதனையில் கண்டு, தவறாக, மரபணுவில்-ஆர்செனிக் என்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்கள் என்கிறது இவ்வாராய்ச்சி முடிவுகள்.

டோபியாஸ் எர்ப் குழுவின் பரிசோதனைகளில் சில GFAJ-1 பாக்டீரியா சூழலில் இருந்து வடிகட்டின எச்சங்கள் ஆர்செனிக் தட்டுப்படும் சக்கரைக் கலவைகள் என்று உறுதியானது. ஆனால் இவை ரசாயன முறையில் உற்பத்தியானவை. அ-பயாடிக் (abiotic); உயிரியல் முறையில் உற்பத்தியாகவில்லை என்று முடிவுசெய்துள்ளனர். ஃபெலிஸா சைமனின் சோதனைகளில் இந்த பாக்டீரியாவை சோதித்த சோதனைக்குழாய்களில் ஆர்செனிக்கையும் தவிர சற்றேனும் பாஸ்பரஸ் ஒட்டிக்கொண்டிருந்திருக்கலாம், அதை சரியாக கவனிக்காமல் இருந்திருக்கலாம் என்கிறார்கள். ஏனெனில் புதிதாக வெளிவந்துள்ள சோதனை முடிவுகளில் மேற்படி பாக்டீரியா சுற்றிலும் எவ்வளவுதான் ஆர்செனிக் இருந்தாலும் துளிப்போரம் பாஸ்பரஸ் இருந்தால் போதும், தப்பித் தழைத்துவிடுகிறது என்று நிறுவியுள்ளார்கள்.

*

விவாதம்

ஃபெலிஸா வுல்ஃப்-ஸைமனின் தரப்பு? மரபணுவில் ஒட்டிக்கொண்டுள்ள ஆர்ஸெனிக் நீருடன் எப்படி உறவாடும் என்று என்னையும் (ஃபெலிஸா) சேர்த்து ஒருவருக்கும் திட்டவட்டமாக தெரியாது. எந்த ஆராய்ச்சி முடிவும் வெளிவந்துள்ளதாக தெரியவில்லை. ஒருவேளை மரபணுவில் ஹெலிக்ஸ் கட்டில் இருந்தால், ஆர்செனிக் பிரிந்து நீருடன் சேர்ந்துகொள்ள நேரமாகலாம். கேள்விகேட்பவர்கள் முன்வைப்பதுபோல உடனே ரசாயன கட்டுக்கோப்பு உடையாது. அதேபோல உயிரினம் வளர சோதனையில் சேர்க்கும் உப்பில் பாஸ்பரஸ் இருந்தால் அது அனைத்து சோதனைகளிலும் இருக்குமே. பாஸ்பரஸ் மற்றும் ஆர்ஸெனிக் சூழலற்ற பரிசோதனையிலும் இந்த உப்பை சேர்த்துள்ளேன். ஆனால் அங்கு உயிரினம் இறந்துவிட்டது. அப்படியென்றால் அந்த உப்பில் உள்ள பாஸ்பரஸ் அளவு உயிரினம் வாழ்வதற்கு போதவில்லை என்றுதானே பொருள் என்கிறார் ஃபெலிஸா.

ஆனால் இவர் பக்கமும் சொதப்பல்கள் இருக்கிறது என்பது திண்ணம். தன் ஆராய்ச்சிமுடிவுகளுக்கு எதிர்ப்பு தோன்றியதும், முதலில் அறிவியல் கருத்துக்களனில் மட்டும் விவாதித்துக்கொண்டிருந்தவர், தொடர்ந்து வந்த கேள்விகளாலும், எதிர்ப்புகளினாலும் (அவற்றின் வீரியத்தை ஊதிப்பெரிதாக்கிய ஊடக மிகையினாலும்), செய்வதறியாது திகைத்து ஆர்செனிக்கை மரபணுவரை பாக்டீரியா கொண்டுசெல்லும் என்று நான் சொல்லவில்லை என்றெல்லாம் (அவரது 2010 ஆய்வுக்கட்டுரைத் தலைப்பிற்கே) நேரெதிரான அறிக்கைகள் விடுத்தார். “ஏதோ ஆராய்ச்சியில் இவர் அறியாமலே தவறு ஏற்பட்டிருக்கலாம்; அல்லது ஒருவேளை உண்மையாகவும் இருக்கலாம்; மேலும் சாதக பாதக புதிய முடிவுகள் வெளிவரும்வரை பொறுத்திருப்போம்” என்று இவருக்குச் சாதகமாக பேசிவந்த நடுநிலை விஞ்ஞானிகளில் சிலரே, ஃபெலிஸா அடிக்கும் பல்டிகளில் வெகுண்டு இனி ஃபெலிஸாவின் அறிவியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அறிக்கை விடுத்து ஒதுங்கிவிட்டனர்.

ஆர்செனிக் பாக்டீரியா ஆராய்ச்சி, துரதிருஷ்டவசமாக, தொடக்கத்திலிருந்தே ஊடகச் சந்தையின் அதீத விளம்பரத்தில் சிக்கிக்கொண்டது. இதற்குப் பெருங்காரணம் நாஸா-தான். வுல்ஃப்-சைமனை பேசா உடந்தை எனலாம் (இரண்டாவது சுற்றில், எதிர்மாறாக புதிய ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும், அவரே ‘பேசிய மடந்தை’ ஆனது பரிதாபம்).

ஆர்செனிக் பாக்டீரியா ஆராய்ச்சி விஷயத்தில் நாஸாவிடம் ஆராய்ச்சி மான்யம் பெறும் சில விஞ்ஞானிகள் உட்பட பலர் நாஸாவை சாடியதற்கு காரணம், நாஸாவும் தெரிந்தே ஊடகமிகையை உபயோகித்ததனால். திட்டவட்டமாக நிரூபிக்காத ‘முதல் சுற்று’ முடிவுகளையே ஊதிப்பெரிதாக்கி “பிரபஞ்சத்தில் உயிர் எது என்பதையே மாற்றிவைக்கும் முடிவுகளை அறிவிக்கப்போகிறோம்” என்று பரபரப்பான அறிவியல் செய்தியாய் ‘ப்ரஸ் மீட்’ வைத்து வெளியிட்டது. துறையில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளிடையே அறிவியல் விவாதங்களாக மிகைகளில்லாமல் தொடரவேண்டியது, முதல்கட்டத்திலேயே இவ்வாறான உயர்வுநவிற்சிகளினால், ஊடகம் கொடுத்த அதிக விளம்பரத்தினால், தரம்குறைந்த சர்சையாக உருமாறியது. இது புரிகிறதோ தெரிகிறதோ எதற்கும் நம் கருத்தையும் சொல்லிவைப்போம், ஆக்கத்தை எதிர்கமுடியவில்லையெனில் ஆளை அடிப்போம், அது என் ஜனநாயக உரிமை என்கிற இணைய கலாச்சாரத்தின் இன்றைய பரிணாமம். எதிர்பார்க்கக்கூடியதே.

சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளும், முக்கியமாக ஃபெலிஸா வுல்ஃப் சைமன், விளம்பரப்பிரியர்கள், விஞ்ஞானத்தை முறைப்படி அணுகாதவர்கள் என்று விமர்சிக்கப்பட்டார்கள். ஆராய்ச்சி முடிவுகளின் மீது சக விஞ்ஞானிகளின் சந்தேகங்களின் தாக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் ஃபெலிஸாவின் தரப்பின் நம்பகத்தன்மை குறைந்துபோய், மேலும் பரபரப்பாய் “நீ பெரியவனா நான் பெரியவனா” என்கிற ரீதியில் சண்டை சிண்டுகள் முடியப்பட்டு, சில மாதங்களில் தூக்கிவைத்த நாஸாவே, ஃபெலிஸாவை கைக்கழுவிவிட்டது. முத்தாய்ப்பாய், செய்துவந்த ஆராய்ச்சி வேலை பறிபோன பரிதாபம், அறிவியல் ஆராய்ச்சிகளிலும் புகுந்துவிட்ட மிகையுலகின் லீலை.

இதில் கவனிக்கவேண்டிய விஷயம், ஃபெலிஸா குழுவினரின் மாற்று உயிர், ஆர்செனிக் பாக்டிரியா பற்றி தடபுடலாய் செய்திகள், பேட்டிகள், படங்கள் என்று வெளியிட்ட ஊடகங்கள், மறுப்பாய் இரண்டு ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்தும், (ஓரிரு செய்திக்குறுங்கட்டுரைகள் தவிர்த்து) அதிகம் அவற்றை பிரபலப்படுத்தவில்லை.

தற்போதைக்கு (2012இல்) புரிவது, “மாற்று” உயிர்களும் பூமியில் சாத்தியமே. இருக்கலாம், தழைக்கலாம். திட்டவட்டமாக நிரூபணமாகவில்லை. மேலும் ஆராய்ச்சி தேவை.

*****

சான்றேடுகள்

Absence of arsenate in DNA from arsenate-grown GFAJ-1 cells M. L. Reaves, S. Sinha, J. D. Rabinowitz, L. Kruglyak, R. J. Redfield (2012) http://arxiv.org/abs/1201.6643 http://www.sciencemag.org/content/337/6093/470.abstract

GFAJ-1 Is an Arsenate-Resistant, Phosphate-Dependent Organism. Tobias J Erb, Patrick Kiefer, Bodo Hattendorf, Detlef Günther, Julia A Vorholt(2012) http://www.sciencemag.org/content/337/6093/467.abstract

2010 “Arsenic found in DNA”, 2012 “We never claimed arsenic was in the DNA” WTF? Link