என் புத்தகம்

Standard

என் புத்தகம் ஒன்று பிரசுரமாகியுள்ளது.

பதற்றமடையாமல் மேலும் வாசியுங்கள். Ane Books நிறுவனம் இந்தியாவிலும் (சார்க் நாடுகளிலும்), CRC Press நிறுவனம் உலக அளவிலும் வெளியிட்டுள்ளார்கள். அமேஸான் சந்தையிலும் வாங்கலாம்.

ஆய்வாள பேராசிரியர்கள் வழங்கியுள்ள இரண்டு அணிந்துரைகள், என் முகவுரை, நன்றியுரை மற்றும் உள்ளடக்கப் பட்டியல் அனைத்தையும் இந்தச் சுட்டியில் தொடங்கி வாசிக்கலாம் — http://arunn.me/arunn/pm-book/

இனி சார்ந்த நகைச்சுவை…

முதலில் வாங்குவது பற்றி: ஆனி புக்ஸ் ‘பேப்பர்பேக்’ காப்பி, இந்தியாவில் வசிக்கும் மாணவர்களுக்கு (செராக்ஸ் அடிக்கத் தேவையற்ற) ஏற்ற விலையுடன். உலகப் பிரசுரம், தடி அட்டை நூல் பைண்டிங்கில். டிஸ்ப்ளேயில் (நானும்) தடவிப்பார்த்துவிட்டு வைத்துவிடும் விலையில். நல்லவேளையாக இரண்டிலும் உள்ளடக்கம் அதேதான்.

வரும் வாரங்களில் கொலு. விருந்தினர்களுக்கு வெற்றிலைப்பாக்குடன், பிளவுஸ்பிட், குங்குமச்சிமிழ், சந்தனப்பேலா, பழைய ஐ-போன், போன்ற வஸ்துக்களை வைத்துக்கொடுப்பார்கள். என் புத்தகத்தையும் பரிந்துரைக்கிறேன். கொலுவிலேயே பொம்மைகளுடன் வைப்பதற்கும் உபயோகமாகலாம் (நிச்சயம் சரஸ்வதி பூஜையன்று என் வீட்டில் இதைச்செய்வார்கள்).

அடுத்து உள்ளடக்கம் பற்றி: இப்புத்தக உள்ளடக்கம் முதுகலை பொறியியல் மற்றும் உயிரி-அறிவியல் துறை மாணவர்கள் மற்றும் துறை ஆய்வாளர்களுக்கு உபயோகமாகலாம் என்று நம்பவைக்கப்பட்டுள்ளது. நானே உயர்கல்வி வட்டாரங்களில் வேண்டிய புரளிகளையும் கிளப்பிவிட்டிருக்கிறேன். அணிந்துரைகளிலும் சிலாகித்துள்ளனர். பின்னட்டையிலும்தான் (எழுதினவனுக்குத் தெரியாதா, ஹி, ஹி…).

அறிவியல் புத்தகமல்லவா, அதனால் சீரியஸாக முகத்தையும் மனத்தையும் வைத்துக்கொண்டு, ஜடப் பொருட்களாய் தேர்தெடுத்து படங்களிட்டும், ஸில்லி ஜோக்ஸ், புனைப்பெயர்கள், பிராமண கலிஜ் மொழிநடை என்று எதுவும் வராமல் சர்வஜாக்கிரதையாக தமிழ் வாசகர்களின் நலன் கருதியே அவ்வப்போது சுயமாகச் சிந்தித்தும் எழுதினேன். கணிதம் கலந்த ஆங்கிலத்தில் அமைந்துவிட்டது. ஜஸ்ட் மிஸ்டு. இருந்தாலும் வாக்கியங்களை அடைப்பினுள் போட்டுவிட்டு, ஆங்காங்கே தமிழ் சேர்த்துவிட்டால், இலக்கிய பத்திரிகைகளில் தமிழில் வரும் அறிவியல் கட்டுரைபோல் இருக்குமே என்று தோன்றியது. மனசு கேட்கவில்லை (சோம்பேறித்தனம்). அடுத்தமுறை இதையும் சரிசெய்யப்பார்க்கிறேன்.

அடுத்து விமர்சனம்: விமர்சனம் என்று வருகையில், அவர்கள் காசுகொடுத்து வாங்கிய என் புத்தகத்தில் எழுத்துப்பிழைகளை கண்டுபிடிப்பவர்களை வரவேற்கிறேன். அவர்கள் காப்பியில் உள்ள அச்சுப்பிழைகள் அக்காப்பியில் மட்டுமே என்பதை சொல்லிக்கொள்கிறேன். வேண்டுமானால் இன்னொன்று வாங்கிப் பார்க்கவும். மேலும், அவர்கள் காப்பியில் உள்ள அப்பிழைகளை என் கைப்படத் திருத்திக்கொடுத்து, பிழைநீங்கிய உத்திரவாதத்திற்கு என் கையெழுத்தையும் அவ்விடத்தில் இட்டுத் தருவதாய் உள்ளேன்.

வாங்கிய புத்தகத்தில் என் எழுத்தையும் தாண்டிய பிழைகளை கண்டுபிடிப்பவர்களை சந்திக்கையில் நெஞ்செரிய, சே, நெஞ்சாரத் தழுவுவேன். இறுக்கி அணைத்தால் சிலருக்கு மூச்சுமுட்டுமாமே…

மற்ற வகை விமர்சனங்களை, அவற்றை எதிர்கொள்ள உலகெங்கிலும் மூத்த எழுத்தாளர்கள் வகுத்துள்ள நீதிவழுவா நெறிமுறையில் (திட்டார் பெரியோர், திட்டுவார் இழிகுலத்தோர், பட்டாங்கில் உள்ளபடி), புறவயமான மனநிலையில், மரியாதையாக ஏற்பேன். இதற்கென்றே பிரத்யேகமாய் டின்டின் காமிக்ஸ் புகழ் “காப்டன் ஹடாக்”கிடமிருந்து எபிஸிசிடேரியன், அனகொலுத்தான் என்று A-யில் தொடங்கி பல எழுத்துவகைகளில் தேர்ச்சிபெற்று கோர்வையாக வசைபத்திகள், திட்டுரைகள் எழுதிவைத்துள்ளேன். கூடுதலாக, வரும் விமர்சன தகுதிக்கேற்ப புக் ஆஃப் இன்ஸல்ட்ஸ் போன்ற புத்தகங்களையும், ஜேம்ஸ் க்ளாவெல் போன்ற எழுத்தாள நண்பர்களையும் கலந்தாலோசிப்பேன். நம் விமர்சன ஏற்புரையிலும் ஆங்கிலம் செறிவாக இருப்பது முக்கியம் என்பதை நானறிவேன்.

பாடபுத்தகமாதலால், என் புத்தகத்திற்கு வரும் கொதிப்புரை, சே, மதிப்புரைகளுக்கான எனது விமர்சன ஏற்புரையின் மொழிநடைக்கு சில அறிவியலாளர்களையும் கலந்துகொண்டுள்ளேன் (சாம்பிள்: நீ என்ன பெரிய ஸ்குரில் கேஜ் மோட்டாரா? போடா, டோ-டெக்கேன் பென்ஸின் சல்ஃபோனிக் ஆசிட்).

சிலகாலம் யாருமே எதுவுமே சொல்லவில்லையென்றால், நானே எனக்கு ‘வரும்’ மின்னஞ்சல்களை வெளியிட்டு அவ்விமர்சனங்களுக்கு மரியாதையுடன் பதிலளிப்பேன்.

இனி பதிப்பாளர் பற்றிச் சில வரிகள்: பதிப்பாளர் பீஹார் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். சில மாதங்கள் முன் என்னைத் தமிழ்நாட்டவர் அணுகினார்; தமிழிலும் எழுதுவேன் என்று தெரிந்ததும், புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதித் தரச்சொன்னார்.

சாத்தியங்கள் பிடிபட்டு போணியாகும் என்று தெரிந்ததும் “இரண்டு நாளில் அக்ரிமெண்ட் காப்பி உங்களுக்கு கிடைக்கும்” என்றார். கிடைத்தது. என் பவிஷிற்கு ஏற்றவாறு உலக அளவில் பதிப்பிக்க சக ஆய்வாளார்களிடமிருந்து பரிந்துரைகள் வந்ததும், “சார், உங்க பொஸ்தகம் ஏற்கனவே அட்வான்ஸ் ஆர்டரில் ‘முருகன் டாலராய்’ வந்துவிட்டது; நீங்க எழுதிக்கொடுப்பதுதான் பாக்கி; அட்வான்ஸ திருப்பிக் கேக்கரத்துக்குள்ளார, எதுவா இருந்தாலும் சொதப்பாமல், நேரத்துக்கு எழுதிக் கொடுத்துவிடுங்கள்” என்றார். செய்தேன். உடனே, “சார், நீங்க கடைசி ப்ரூஃப் பார்த்து கொடுத்ததுலேந்து ஒரு மாசத்துல புத்தகம் வெளிவந்துரும்” என்றார். வந்தது.

எழுத்தாசிரியர்களை மதிக்கும் பதிப்பாசிரியர்களோ என்று எனக்குச் சந்தேகம். வெளிப்படையாக அவரை இதுரைக் கேட்கவில்லை. நமக்கேன் போயிற்று.

இருந்தாலும், நம் எழுத்தை நம்பிப் புத்தகத்தை வெளியிட்டுவிட்டார்களே, விற்பதற்கு நாமும் ஏதாவது உதவுவோம் என்று தீர்மானித்தேன். நாமும் ‘சேத்தன் பகத் வழி’யில் செல்வோம் என்று, புத்தகத்தின் தலைப்பை ”நைன் பாயிண்ட் சம்வொன்” என்று வைக்கச்சொல்லி முடிந்தவரை மன்றாடிப்பார்த்தேன். பதிப்பாளர் மறுத்துவிட்டார். சரி தலைப்பு போகட்டும், ஆசிரியர் பெயரையாவது அப்படி வைங்கள் என்றேன். புனைப்பெயரில் எழுத உங்களுக்கு வேண்டுமானால் இல்லாமலிருக்கலாம் எங்களுக்கு புனைப்பெயராளரை பதிப்பிக்கக் கேவலமாய் உள்ளது என்றார்.

[இங்கு ஒரு விளக்கம். நகைச்சுவையென்றாலும் நாம் தவறான ஜோக்கிற்கு சிரிக்கக்கூடாதல்லவா. மேலே ‘சேத்தன் பகத் வழி’ என்று எழுதி (அவர் புத்தகம் ஃபைவ் பாயிண்ட் சம்வொன் – சுமார் படிப்புக்கார மாணவர்களைப் பற்றி) அவரைக் கிண்டல் செய்வதாக நினைத்துச் சிரித்துவிடாதீர்கள். மீண்டும் அவ்வரியை வாசித்துக்கொள்ளுங்கள். நான் தமிழ் பதிப்பாள நண்பரைத்தான் நக்கலடிக்கிறேன். வேண்டுமானால் சிரியுங்கள்.

உப விளக்கம்: நான் நக்கலடிப்பவர் இதற்கெல்லாம் சளைக்காதவர். “டேய், நீ அப்படித் தலைப்பு வைத்தாலும் அது இங்க விக்காது” என்று பதிலுக்கு என்னைத் தூக்குவார். அப்படி அவர் சொல்வதினால், என்னை நக்கலடிக்கிறாரா, இல்லை தமிழ்நாட்டு வாசகர்களையேயா என்று நமக்குப் பிரதிச் சந்தேகம் வரும்… சரி, சரி, இது ஓயாது. முடித்துக்கொள்கிறேன்.]

இதனால், புத்தகத்தை விற்பதற்கு உள்ளடக்கத்தைத் தவிர எவ்வகையிலும் உதவமுடியாமல் வயிறெறிந்தேன். வாயிலிருந்து ஒரே புகை. கடுப்பில் அதே பதிப்பாளரிடம் இதேவகையில் அடுத்த உள்ளடக்கத்தைப் புனைவதற்குச் சம்மதித்திருக்கிறேன். இம்முறையாவது எழுத்தாளர்களைச் சரியாக நடத்துகிறாரா என்று (ஒரு கை) பார்ப்போம்.