இது விஷ்ணுபுரம் விமர்சனமல்ல

Standard

தேற்றுவாய் (சரியாகத்தான் எழுதியிருக்கிறேன்):

ஏற்கனவே ஒருமுறை விஷ்ணுபுரம் அறிமுகம் என்று மகளை விஷ்ணுபுரம் நாவலின் பின்னட்டை நாலுவரி மிகையை வாசிக்கச்சொன்னதை ஒரு அனுபவப்பகிர்வாய் வெளியிட்டேன். இது யோக்கியமான விமர்சனமல்ல என்று பதில் கிடைத்தது (விஷ்ணுபுரம் ஆசிரியரிடமிருந்து அல்ல). அது விமர்சனமே இல்லையே, பிறகுதானே அதன் யோக்கியத்திற்கான வழக்கு என்றாலும், தமிழ்நாட்டின் நகைச்சுவை உணர்வு தட்டுப்பாட்டில் இப்படிக் ‘கடுகு’ அளவேனும் நானும் அடிவாங்குவது சகஜம். எதற்கு இரண்டாம் முறையும் பொல்லாப்பு என்றே இக்கட்டுரையின் தீவிரம் வெளிப்படையாகத் தெரியுமாறு நகைச்சுவையாகத் தலைப்பு வைத்துள்ளேன். பார்த்துச் செய்யுங்கள். இனி.

*

விஷ்ணுபுரம் நவீன தமிழ் இலக்கிய நாவல். சுமார் பதினைந்து வருடம் முன்னால் ஆசிரியர் கஷ்டப்பட்டு வெளியிட்டது. ஏராளமான பண்பாட்டுக் கூறுகளையும் தகவல்களையும் தொன்மங்களையும், தத்துவ தரிசன முறைமைகளையும் உள்ளடக்கி இந்திய சிந்தனை மரபையும், தமிழக வரலாற்றையும் மறு ஆக்கம் செய்து, மிகச் சாதுர்யமாக வடிவமைக்கப்பட்ட நவீன தமிழ் இலக்கிய நாவல். என்னை அவ்வளவாகக் கவரவில்லை.

ஆனால் வாசிப்பதற்கு விறு விறு என்று, நன்றாக இருக்கும். நேரம் போவதே தெரியாது. திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கையில் வாசிக்கத் தொடங்கினால் பஸ் வருவதற்குள் சில நூறு பக்கங்கள் வாசித்துவிடலாம்.

சுயமைதுனச் சுவையில் அடுத்த நாளும் காத்திருப்பீர்கள். பஸ் வருவதற்குள் தொடர்ந்து வாசித்தால், ஏற்கனவே வாசித்ததை வாசிப்பது போலவே இருக்கும். நிமிர்ந்து பார்த்தால் நேற்று வந்த அதே பஸ் வரும்.

விஷ்ணுபுரம் முழுவதும் நிறைய காலை-கள் வெவ்வேறு தினுசாய் கவித்துவமாய் புலர்கின்றன. ஏற்றார்போன்ற விகிதத்தில் இரவுகள் கவியாததை சரிகட்டத்தான் ஆசிரியர் “இரவு” என்று தனியாக ஒரு ஆக்கம் செய்தாரோ என்று நினைக்கத்தோன்றுவது எளிய வாசகனின் அனுபூதி. மகாபாரதத்தை ஆக்கியதும் பூசல் பட்டோலையாய் இப்படி ஒன்றை எழுதிவிட்டேனே என்று மனம் நொந்து, சரிகட்ட பாகவதம் இயற்றினாரே வசிஷ்டரின் நப்தாவான வியாஸ பகவான், அவ்வகையில் இக்கூற்றை உருவகித்துக்கொள்ளவேண்டும். காவியச் சமத்துவம் வெளிப்படுவதற்கு காலம் கடந்துவிட்டால்தான் என்ன.

விஷ்ணுபுரம் நாவலின் ஒவ்வொரு உச்சத்திற்கு பின்னும் அதிலிருந்து தலையை தூக்குகையில் (திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாண்டிலல்லவா இருக்கிறோம்) சுற்றி நின்று பிச்சையெடுப்பவர்கள், “சார் ஸ்கோர் இன்னா” என்பவர்கள், “இந்த கர்ச்சிப் உங்கல்தா” எனும் நாரீமணிகள், “பஸ் ஏன் லேட்” என்கிற ஆழ்மனது என்று ஏதாவது ஒரு வீழ்ச்சி உங்கள் மனத்தை நிறைக்கும். இதுவே காவிய இயல்பு.

[இப்படி அடிக்கடி திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாண்ட் பற்றி வருவது இந்தக் கட்டுரையின் எரிச்சலூட்டும் கவித்துவக் குறியீடு. விஷ்ணுபுரம் ஆசிரியரின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்துவருபவர்களுக்கு அக்குறியீட்டின் அஞ்ஞானம் (“அந்த ஞானம்” என்பதை சேர்த்தெழுதினால் இப்படித்தான் வருமாம்) ஏற்கனவே கிட்டியிருக்கும். என்னை மட்டும் வாசிப்பவர்களுக்கு ஆசிரியரின் “உள்ளே இருப்பவர்கள்” என்ற விஷ்ணுபுரம் பாஷ்யத்தின் உப-சர்க்கத்தை வாசித்துக்கொள்ளுமாறு விஞ்யாபம் செய்கிறேன்.]

மூன்று பகுதிகளாக பிரித்துப்பார்க்கையில், முதல் பகுதியின் அனைத்துக் கதைமாந்தர்களும் (குதிரை, யானை, உட்டபட) சிக்கலாய், உருவகங்களாகவே, பத்தி பத்தியாக எய்ன் ராண்ட் (அட்லஸ் ஷ்ரக்ட்) கதாமாந்தர்கள் போல சிந்தித்துக்கொள்கிறார்கள். ரோட்டில் நடக்கையிலும் (யானை உட்பட) அநேகமாக அனைவரும் ஆத்ம விசாரத்தில் ஈடுபடுகிறார்கள். கதைமாந்தர்கள் பின்னால் பீஜிஎம்மில் “பாஷா பாஷா” என்று (பாட்சா படத்தில் ரஜினிகாந்திற்கு பின் நடப்பது போல) குரலெடுத்து சிறு கூட்டம் பின்தொடர்வதுபோல மனப்பிராந்தி ஆட்டுவிக்கிறது. உணர்ச்சிக் கொந்தளிப்பில் தீபாவளி புஸ்வாணம் போல் வார்த்தைகளையும் விந்தையும் பீய்ச்சி அடிக்கிறார்கள். ஆத்தாளிலிருந்து ஆட்டுகுட்டிவரை அனைவருடனும் சகட்டுமேனிக்கு புணருகிறார்கள். போறாக்குறைக்கு சித்திரங்களை வரைந்து அனிமேட்டடாய் அதனுடன் வேறு. ஜப்பானிய அனிமி கதைகள் தோற்றது. யார் சொன்னது இணையம் தோன்றிய பிறகே ரூல் 34 தோன்றியது என்று?

காவியத்திற்கு பீபத்ஸமும் ஒரு ரஸம்தான் என்பதை நாம் மறுக்கவியலாது. நான் செய்யும் தக்காளி ரஸமும் அவ்வகையே என்றுமட்டுமே கூறுகிறேன். அதாவது, யோனியில்லையேல் “போணி”யில்லை என்பது காவிய உண்மை.

ஆனால் விஷ்ணுபுரம் தமிழ் வாசிப்பதற்கு நன்றாக இருக்கிறது.

சங்கர்ஷணன் முதலில் தன் காவியத்தை ஞானசபையில் வாசிக்கும் இடங்கள் அதீதமான இலக்கிய எழுச்சிகொண்டவை. சிலிர்ப்பாய் இருந்தது. அதேபோல், அவன் மகன் இறந்ததற்கு குற்றவுணர்வுடன் அல்லாடுவதும் என்னால் உடனடியாக மனத்தில் அனுபவித்து உருக முடிந்தது. இப்படி ஒரு சில இடங்களைத் தவிர (திருவடியின் அம்மா பேசுவது, முரசு கொட்டுபவர்கள் பேசுவது, மூன்றாவது காண்டத்தில் லக்ஷ்மியின் பாட்டி பேசுவது என்று ஒரு சில இடங்கள்) கதைமாந்தர்கள் ஒருவரும் மனதில் ஒட்டவில்லை. “எல்லாமே தமாஷ்தான்” என்று எஸ். வி. சேகர் டிராமா உண்டு. “யாதோங் கீ பாராத்” போன்ற ‘குடும்ப பாட்டு’ பாடி பிரிந்தவர் ஒன்றுசேரும் சினிமாக்கதைகளை கிண்டலடித்து எழுதிய டிராமா. அதில் ஒரு இடத்தில் பிரிந்த அண்ணனும் தங்கையும் அடுத்தடுத்து எஸ்.வி.சே. முன்னிலையில் ஒன்றுசேர்வதற்காக உணர்ச்சிவசப்பட்டு சட்டையை கிழித்துக்கொள்வார்கள். உடனே எஸ்.வி.சே., “குடும்பமே ரத்தக்கொதிப்பா இருக்கேப்பா” என்று அங்கலாய்ப்பார். எனக்கு விஷ்ணுபுரமே ரத்தக்கொதிப்பாய் இருக்கிறது.

தத்துவ தரிசனங்களை விசாரங்களை விகாரங்களை கவித்துவமாக குறியீடாய் சொல்வது விவரிப்பது விவாதிப்பது ஆசிரியரின் உரிமை. ஆனால் வாசிக்கையில் எனக்கு அலுப்பாய் உள்ளது. டாக்டர். ராதாகிருஷ்ணனின் இந்திய தத்துவ மரபு நூல் முதல், விவேகாநந்தர் எழுத்துக்கள், இணையத்தில் இலவசமாய் கிடைக்கும் அரவிந்தரின் எழுத்துக்கள் என்று பல ஆக்கங்களே இந்தியச் சிந்தனை மரபையும் தத்துவங்களையும் சீரியதாய் இலக்கியமொழிநடையும் குறியீடுகளும் இன்றி குழப்பமில்லாமல் எனக்கு அளித்துவிடுகிறது.

என்னத்தான் உழைத்து தகவல்களை சரியாகத் திரட்டி வணிக எழுத்தாளர் வரலாற்றுக் காதை எழுதினாலும் அதை சில பக்கங்கள் வாசிப்பதற்குள்ளேயே எப்படி இலக்கியவாதிகளுக்கு போர் அடிக்குமோ, அதுபோல நேரடியாகச் சொன்னாலேயே குழப்பிவிடும் தத்துவங்களையும் தரிசனங்களையும், அவ்வகையில் எளிமையான தர்க்கக் கட்டமைப்பில் சொல்லாமல், கவித்துவமான இலக்கிய நடையில் குறியீடுகளைக் கொண்டு முன்னூறு பக்கங்கள் விரித்துரைப்பது என்னைப்போன்ற இலக்கியமீதிகளுக்கு போர் அடிக்கிறது. இப்படிச் சொல்ல (படைப்பை முழுமையாக வாசித்த பிறகு) ஒரு வாசகனுக்கு உரிமை உண்டு என்பதை ஆசிரியரே வேறு பாஷ்யத்தில் (அந்நாரின் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்”) எனக்கு ஆசி வழங்கியுள்ளார்.

ஊரிலேயே “நீ தென்கலையா வடகலையா?” என்றால், “எச்சக்கலை” என்று பதிலுரைக்கும் எனக்கு நாவலில் வரும் பிராமண, வைணவ கிண்டல்கள் பெரிதாகப் படவில்லை. ஆனால் சுவைக்கவும் இல்லை. பந்திபோஜனத்தில் செட் போட்டு சித்தரித்திருந்தாலும். நாவலின் தேவையற்ற பக்கங்கள் என்றே தோன்றியது.

அதேபோல், ஆழ்வார் ஒருவர் கிண்டலடிக்கப்பட்டு சுற்றி இருக்கும் அதிகார வெறியர்களின் கைம்பாவையாக ஆட்டுவிக்கப்பட்டு “விஷ்ணு அம்சமுடைய” குதிரையிலேற்றி பரலோகம் அனுப்பப்பட்டு புராணமாகிறார். வாசிப்பவர் துணுக்குரும்முன் அடுத்த காண்டத்தில் (கதைப்படி, ஆழ்வார் காலத்திற்கு முன்னரே) பௌத்த ஞானி அஜிதருக்கும் – பவதத்தரையே வென்று விஷ்ணுபுரத்தையே காலடியில் விழச்செய்தவர் – அவர் முதுமையில் அதே நிலை ஏற்பட்டதாய் ஆசிரியர் விவரித்துவிடுகிறார். எம்மதத்திலும் காலத்திலும் ஞானகுருமார்கள் ஒருவகையில் சுற்றியிருக்கும் அதிகாரவர்க்கத்தின் கைம்பாவைகள், அந்நிலையே தொடரும், என்பதாய் நிறுவப்படுகிறது என்று இந்நிகழ்வுகளை வைத்துக்கொண்டால், நாவல் யதார்த்தத்தின் நிழலிலேயே அதை நிறுவுகிறது என்றும் ஒப்புக்கொள்ளவேண்டும்.

இப்படி நிறுவிக்கொள்வதின் தேவை இக்கட்டுரையின் இரண்டாம் காண்டத்தில் புரியும். இங்கு முக்கியமாக தெரிவது, இவ்வகைக் “காவிய உண்மைகளை” ஏப்ரகாமிய மதத்தலைவர்களை வைத்துக் கதைச்சொல்லி கவித்துவமாய் மக்களிடம் சேர்க்கமுடியாது என்கிற உலகளாவிய “யதார்த்த உண்மையே”.

எதற்குக் கூறுகிறேன் என்றால், விஷ்ணுபுரம் எனும் கனவை ஆசிரியர் கண்டிருக்கும் வகையிலேயே இந்துதர்மபூமியில் மட்டும்தான் காணமுடியும். கண்டு ராயல்ட்டி பெறமுடியும். விஷ்ணுபுரத்தினால் நிச்சயம் சகிப்பின் மகத்துவத்தை உள்வாங்கியுள்ள இந்தியஞானமரபின் வம்சாவளிகளான நமக்குத்தான் பெருமை.

என்னத்தான் ஆயிரம்கால இந்திய ஞானமரபிலிருந்து பிழிந்து எடுக்கப்பட்ட தத்துவ தரிசனங்களும் அவற்றின் உருவகங்களான ஊடாடும் கதைமாந்தர்களும், சமகால திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாண்டில் சுற்றியிருக்கும் எவரையும் பொருத்திப்பார்க்க முடியாதவாறு அமைக்கப்பட்டிருந்தாலும், “பஸ் ஏன் லேட்” என்று மணிக்கட்டைத் திருப்பிக் கைக்கடிகாரத்தை பார்க்கையில், இந்திய கண்டத்தின் ஆயிரம் வருடம் கடந்த ஞானத்தேடலின் உருவகமாய் “ஐயோ” என்று முகத்தில் அறைவது ஒரு புல்லரிப்பு. நாவலின் ததாகதரின் காலச்சக்கர தத்துவத்தை கைக்கடிகார டயலும், அதில் சக்கரமாய் சுற்றும் முட்களும் குறியீடாய் உணர்த்துவதில் நெகிழ்ந்து நின்றபடியே கால்வலிக்கக் கண்ணீர் மல்கினேன்.

இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டவுடன் அதன் பூர்ணத்துவத்தில் மேலும் சில உப திறப்புகள் எனக்குள் உண்டானது. வட்டவடிவ காலச்சக்கரம் வாழ்க்கைப் பயணம் எனும் முட்களால் ஆனது. மணியைக் காட்டும். அதனால்தான் அதை ‘மணி’க்கட்டில் கட்டுகிறோம். இப்படி சில.

சிலிர்த்து, அதிர்ந்து, மேலும் சிலிர்த்து, புல்லரித்து, கிட்டத்தட்ட கோசாலை பசுவாய் மேணியெங்கும் உணர்ந்து, நெகிழ்வின் உச்சத்தில், கையெடுத்துத் தடவிப்பார்த்ததில் புதிதாய் நெற்றியில் நாமம் தட்டுப்பட்டது. எல்லாம் விஷ்ணுபுரம் மகிமை.

ஓம் தத் சத்.

*

[இங்கு “இது விஷ்ணுபுரம் விமர்சனமல்ல” காதையின் முதல் காண்டம் முடிவுற்றது; அடுத்த காண்டம் இண்ட்ரவெலுக்குப் பின், மூனு சாங்க் ரெண்டு ஃபைட்டுடன் தொடரும்…” என்பது போல ஏதாவது காவிய மரபிலிருந்து உருவி, ஒரு வெள்ளைத் தாளில் நிறைய இடம் விட்டு எழுதி, இணைத்து வாசித்துக்கொள்ளுங்கள். அடுத்த முறை இப்படி வருகையில் எச்சரிக்க மாட்டேன்.]

*

என்னைப் பொறுத்தவரையில் (எனக்குப் பொறுக்காத வரையில்) விஷ்ணுபுரம் என்கிற இந்தப் பெரிய நாவலின் (சுமார் 850 பக்கங்கள்) வாசிப்பின் ஊறு அதன் ஆசிரியர் அதற்குத் தொடர்ந்து எழுதிவரும் பாஷ்யம். தமிழில், உரை. வாசகன் எப்படி தன்னைக் குளித்துக், காதில் பூவுடனும், நெற்றியில் நாமத்துடனும், குனிந்து, குறுகி, தயார் செய்துகொள்ளவேண்டும் என்பதில் தொடங்கி விளக்கங்களும், விமர்சனங்களுக்கு பதில் விமர்சனங்களும், அர்சனைகளுக்கு பிரதி அர்ச்சனைகளும் என்று கடந்த பத்து பதினைந்து வருடங்களில், தொகுத்தால், பாஷ்யமே மூலத்தைவிட அதிக தடிமன் கண்டிருக்கலாம். படிப்பதற்குள் திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாண்டிற்கே பஸ் வந்துவிடும்.

ஆசிரியரின் விஷ்ணுபுர பாஷ்யத்திலிருந்து சமீபத்ய ஒரு சாம்பிள்: “விஷ்ணுபுரமும் பிராமணர்களும்: என்கிற கட்டுரையில் “நாவல் சில இடங்கள் பிராமணர்களை கிண்டலடிப்பது போல் இருக்கிறதே” என்கிற எளிய அவதானத்திற்கு ஆசிரியர் பதில் சொல்லும் படலத்தில்:

“(விஷ்ணுபுரத்தை) […] எழுத்தாளர் ஏன் எழுதினார், அவரது நோக்கம் என்ன என்றெல்லாம் எண்ணி வாசிப்பது அந்நாவலை நோக்கி நம் வாசலை நாமே மூடிக்கொள்வதுதான். அதில் ஜெயமோகனுக்குப் பெரிய இடமேதும் இல்லை. அது தன்னுடைய அழகியல் விதிகளின்படி தன் படிமங்களைக் கருவியாகக் கொண்டு சுதந்திரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு முழு உலகம்.”

என்கிறார்.

இப்படி மூலத்தை சிருஷ்டித்தவரே பாஷ்யக்காரராய் ஆகி விளக்கமளித்தால், அவ்வாக்கியங்களின் முரணியக்கத்தில் உடனடியாக நாமமிட்ட நெற்றியுடைய வாசகனுக்குத் (எனக்குத்தான்) தோன்றும் கேள்வி, “அப்ப புத்தகத்தை விற்ற ராயல்ட்டி காசை இவ்வளவு நாள் எங்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்?”

இக்கேள்வியை முன்வைத்து “ராயல்ட்டி” என்பதே அதிகாரவர்க்கத்தையும் ஆளும்வர்க்கத்தையும் மட்டும் குறிக்கும் குறியீடு (தொட்டுக்கொள்ள பிராமணர்களும் உண்டு), அதனால் அதை அப்பிராணி நூலாசிரியர்களே அடைவது கடினம் என்றிருக்கையில் அதை நாமமிட்ட நெற்றியுடைய நரர்கள் உள்வாங்கும் வகையில் வெளிப்படையாக சொல்வதற்கு கவித்துவமான செவ்விலக்கிய மொழிநடையில் விளம்புவதன் கடினத்தை அவ்வகை நடையிலேயே விளக்கி நீள்-கட்டுரையாய் விஷ்ணுபுர பாஷ்யத்தின் அடுத்த உபசர்கத்தை படைக்க ஆசிரியர் உளம் கனிவார் என்பதை நன்கறிவதினால், வெளிப்படையாய் இக்கேள்வியை(யும்) கேட்காமல் மனத்தினுள் அமிழ்த்துகிறேன்.

ஆனால், மேற்படி “விஷ்ணுபுரமும் பிராமணர்களும்” பாஷ்யம் மகத்தானது. ஆசிரியரின் மனத்தையும் மீறிய படைப்பூக்கத்திலிருந்து புறப்படும் முரண்கள் அணிவகுத்து அலங்கரித்து மானுடனின் ஞானத் தேடலை வளமையுரச்செய்வது. மூலத்தை மேலும் சொதப்புவது. வாசகனின் மூளையை மேலும் குழப்புவது.

விஷ்ணுபுரமும் பிராமணர்களும்” கட்டுரையின் (தன் பாஷ்ய உப-சர்கத்தில்) முதல் வாக்கியங்களில் ஆசிரியர்: “நாவலை வாசித்த நாட்களில் சுந்தர ராமசாமிகூட அதைப்பற்றித் தன் வருத்தத்தைச் சொன்னார். சென்ற பதினைந்து வருடங்களாக அதற்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.” என்கிறார்.

உள்ளே இருப்பவர்கள்” என்கிற தலைப்பில் வேறு உப-பாஷ்ய சர்கத்தில் அவரே, வைணவரான எழுத்தாளர் சுஜாதாவிற்கும் நாவல் உகந்ததாயில்லை என்பதை பதிவு செய்கிறார் (சுஜாதாவின் நெற்றியிலும் நாமம் இருப்பதை அப்பதிவு குறிப்பிட்டுக்கொண்டே இருப்பது முக்கியமான ஒரு குறியீடு என்பதை நாம் உணர வேண்டும்). தவிர, சுஜாதாவே 1999இல் “ஜெயமோகனின் விஷ்ணுபுரம் […] போன்ற பெரிய சில சமயம் புரியாத நாவல்கள் வெளிவந்து மரியாதையுடன் விமர்சிக்கப்பட்டன.” என்று தன் இந்தியா டுடே கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆக, எளிய வாசகனுக்கு மட்டும் இல்லை. சக மூத்த எழுத்தாளர்களுக்கும் புரியாத காவியக் கிண்டல்களும் உச்சங்களும் நிறைந்த நாவல் விஷ்ணுபுரம்.

இதைக்கொண்டு தொடர்ந்து வாசித்தால், அதே “விஷ்ணுபுரமும் பிராமணர்களும்” கட்டுரையில் ஆசிரியரே, பிற்பகுதியில் இவ்வாறு எழுதுகிறார்: “செவ்வியல் தன்னை ஒரு ‘அகால’ வெளியில் நிறுத்திக்கொள்ளவே முயல்கிறது. அது நேரடியாக சமூகத்துடனும் வாழ்க்கையுடனும் தன்னை தொடர்புபடுத்திக்கொள்வதில்லை. செவ்வியல் ஆக்கங்கள் தங்களுக்கென ஒரு செறிவான உலகை உருவாக்கிக் கொள்கின்றன. உண்மையான வாழ்க்கையில் இருந்து உறிஞ்சி எடுத்துக் காய்ச்சி கெட்டியாக்கப்பட்ட ஒரு வாழ்க்கையே அவற்றில் உள்ளது.”

அதாவது விஷ்ணுபுரம் செவ்வியல் காவியம் என்பது சுந்தர ராமசாமி முதல் சுஜாதா வரை எழுத்தாளர்களுக்கே புரியவில்லை. சரி போகட்டும். “அகால வெளியில்” தன் படைப்பூக்க தவப்பயனிலேயே நிற்கும் படைப்பில் ஏன் திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாண்டில் புழுதித் தரையில் நிற்கும் பிராமணனை (அதாவது, அவன் மூதாதயரை என்று பொருள் கொள்ள வேண்டும் என்பது உருவகக் கவித்துவக் குறியீட்டு மரபு) கிண்டல் செய்யவேண்டும்? வேறு பெயர் வைத்து (உதாரணமாய், மொகலாயர் மொக்கைநாயர் இப்படி) குறியீடாய் அடித்துவிடுவதுதானே முறை? ஜே. ஆர். ஆர். டோல்க்கைன் 1960களில் எழுதிய (சே, படைத்த) பிரம்மாண்டமான “லார்டு ஆஃப் தி ரிங்க்ஸ்” போல ஃபாண்டஸியாய் ஒழுங்காய்ச் செய்திருக்கலாமே. வரலாற்றுடனும் சமூகத்தின் யதார்த்தத்துடனும் ஏன் போட்டுக் குழப்பவேண்டும்? சுந்தர ராமசாமி, சுஜாதாவிலிருந்து, வாசிக்கும் சுண்டைக்காய் சுண்டெலி வரை ஒருவருக்கும் உறுத்தியிருக்காதே.

[இங்கு சுண்டெலி இலக்கியம் வாசிக்குமா என்று தர்க்க புத்தியில் தடுமாறலாம் சிலர். அவர்களுக்கு ஜடபரதர் ஆசி கிட்டட்டும்.]

ஏன் சொல்கிறேன் என்றால், அதே “விஷ்ணுபுரமும் பிராமணர்களும்” கட்டுரையில் தொடர்ந்து ‘விளக்கமளிக்கையில்’ ஆசிரியர் இவ்வாறு எழுதுகிறார்: “ஞானசபை பிராமணர்களால் நிரம்பியிருப்பது அன்றைய இந்திய சமூகஅமைப்பின் யதார்த்தம். உணவறைக் காட்சி அதன் மறு எல்லை. இதுவும் நூல்கள் காட்டும் யதார்த்தமே. இன்றும் நீடிக்கும் யதார்த்தமே.”

ஏன் சாரே, பாஷ்யத்தின் முற்பகுதியில் “செவ்வியல் தன்னை ஒரு ‘அகால’ வெளியில் நிறுத்திக்கொள்ளவே முயல்கிறது. அது நேரடியாக சமூகத்துடனும் வாழ்க்கையுடனும் தன்னை தொடர்புபடுத்திக்கொள்வதில்லை.” என்றும் விஷ்ணுபுரம் செவ்வியல், படிமங்கள் நிறைந்தது, அது ஒரு பண்பாட்டை சார்ந்திருப்பது நாவலை வளர்ப்பதற்கான தற்செயல் என்பது போலும் எழுதிவிட்டு, அதன் தொடர்ச்சியாய் “ஞானசபை பிராமணர்களால் நிறைந்திருப்பது அன்றைய இந்திய சமூகஅமைப்பின் யதார்த்தம்.” என்று திட்டவட்டமாய் வரலாற்றை முன்வைத்து அதை உள்வாங்கிய கதைக்களம் விஷ்ணுபுரம் என்றும் விளக்குகிறீர்கள். யார் சொன்னது தமிழ்நாட்டில் அறிவார்த்தமான நகைச்சுவை புரியாது என்று? ஓ, அதைச்சொன்னதும் ஆசிரியரேதானோ.

இத்துடன் விஷ்ணுபுரத்தை விட்டுவைக்கவில்லை இந்த பாஷ்யம். ஆசிரியரின் அதே “விஷ்ணுபுரமும் பிராமணர்களும்” பாஷ்யத்திலிருந்து மேலும் சில வரிகள்:

“செவ்வியல் தன்னை ஒரு ‘அகால’ வெளியில் நிறுத்திக்கொள்ளவே முயல்கிறது. அது நேரடியாக சமூகத்துடனும் வாழ்க்கையுடனும் தன்னை தொடர்புபடுத்திக்கொள்வதில்லை. […] விஷ்ணுபுரம் காட்டும் வாழ்க்கையை நீங்கள் வெளியே காணமுடியாது. அந்த வாழ்க்கை இந்தியாவின் ஆயிரம் வருட ஞானத்தேடல் மரபில் இருந்து உருவாக்கி எடுக்கப்பட்டது.”

இப்படி விளக்கமளித்தால் திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டு விஷ்ணுபுரம் வாசிக்கும் இக்கால “யூத்து” எனக்கு  தோன்றுவது இதுதான்:

என்னால் வெளியே காணக்கிடைக்காத வாழ்க்கையை விஷ்ணுபுரத்தில் வாழ்பவர்கள் எப்படி நான் வாழும் இந்தியாவின் ஆயிரம் வருட ஞானத்தேடல் மரபை தோற்றுவித்தார்கள், இல்லை பிரதிநிதியாவார்கள்? அல்லது, என்னால் விமர்சனம் செய்யமுடியாத விஷ்ணுபுரம் கதையில் அவர்கள் வாழும் வாழ்க்கைத்தான் இவ்வகை ஞானத்தேடலை தோற்றுவிக்கும் என்பதை திருவல்லிக்கேணிப் புழுதியின் நிஜத்தில் வாழும் நான் ஏன் ஒப்புக்கொள்ளவேண்டும்?

ஆசிரியர் “உருவாக்கி எடுத்தது” சரி, சரியில்லை என்று நிச்சயிப்பது (உழைத்து எழுதும் மரியாதைக்குரிய) ஆசிரியர் மட்டுமேவா, இல்லை (அவ்வாசிரியரின் மரியாதைக்குகந்த, வேலைமெனக்கெட்டு) வாசிக்கும் வாசகனுக்கும் அவ்வுரிமை உண்டா?

உண்டென்றால், மீண்டும் சொல்வேன்: இந்தியக் காவிய மரபின் வளமைகளையும் தொன்மங்களையும், குறிப்பிட்ட உட்பிரிவினர்களின் சம்பிரதாயங்களையும் நம்பிக்கைகளையும் தன்னுள்வாங்கி “மறு ஆக்கம்” செய்து எழுதப்பட்ட விஷ்ணுபுரம் கதைமாந்தர்கள் (ஓரிருவரைத் தவிர மற்றவர்) என் மனதில் ஒட்டவில்லை. முதிரா கவித்துவ சுயமைதுனம்.

ஆனால் ஒரு விதத்தில் இன்றைய நம் மக்கள், இந்திய ஞானத் தேடல் உருவாக்கிய கதைமாந்தர்களின் மறு ஆக்கம் செய்யப்பட்ட மரபினரே. உணர்ச்சிக்குவியலாய் ரத்தக்கொதிப்பில் வாழ்க்கை முழுதும் எகிறிக்குதிக்கும், குறியீடாய் செந்நீர் ஓடும் (“சிவப்புதான் எனக்கு புடிச்ச கலரு” என்று பாடல்பெற்ற) சோனா நதிக்கரையினர் வழி வந்தவர்களே. இன்றளவில் உலகில் அதிகப்படியாய் டயாப்டீஸினால் அவதியுருவதும் சமகால இந்தியர்களே.

முடிவாக. பாஷ்யக்காரர் தொடர்ந்து தன் “விஷ்ணுபுரமும் பிராமணர்களும்” விளக்கத்தில்:

“என்னைப் பொறுத்தவரை, ஓர் இலக்கியவாசகன் தன்னுடைய பிறப்பால் வளர்ப்பால் உருவாகும் சாதி, மத, இன, மொழி பேதங்களைத் தாண்டி தன்னை ஒரு தூய அறிவார்ந்த தன்னிலையாக உணரக்கூடியவன். அந்த அறிவார்ந்த தன்னிலையை மட்டுமே ஒரு படைப்பின் முன்னால் திறந்துவைக்கக்கூடியவன். அவனுக்குத் தனிவாழ்வில் இருந்து என்னதான் காழ்ப்புகள், கசப்புகள், முன்தீர்மானங்கள் கிடைத்திருந்தாலும் அவற்றைத் தாண்டி வந்து படைப்பின் முன் நிற்க முடிந்தவன்.”

பிரமிக்கிறேன்.

எப்படியோ, சுந்தர ராமசாமி சுஜாதா நீங்கலாக, மேற்படி முன்னுதாரண வாசகனை மட்டும் எதிர்பார்க்கும் ஆசிரியர் (யாராவது தேறினாங்களா?), படைக்கையில் தான் எவ்வாறு முன்னுதாரணப் படைப்பாளியாய் செயல்பட்டிருக்கவேண்டும் என்றும் விளக்கியிருக்கலாம்.

பிராமணன், பௌத்தன், அருகன், மறவன், சத்திரியன், பாண்டியன், சேரன், என்று பெயரிட்டு கதைமாந்தர்களை ஒரு நாட்டின் வரலாற்றுப் பின்புலத்துடன் பாகுபடுத்திக் காட்டிவிட்டு (விஷ்ணுபுரம் முன்னுரையிலும் ஆசிரியர் இந்திய சிந்தனை மரபும், தமிழக வரலாறும் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளதாய் பதிவு செய்கிறார்) அது காவியம், ‘அகால’ வெளியில் நிற்கிறது என்று விளக்கமளிப்பது எவ்வகை தூய ஆசிரியத்துவம்?

“கராக்ரே வஸதே லக்ஷ்மி…” என்பதில் தொடங்கி, “அஸதோமா சர்கமய…” வழியாக “சரம ஸ்லோகம்” வரை (நடுவில் எங்கோ “பச்சைமா மலைபோல் மேனி…” என்பதின் மறு ஆக்கத்தை பார்த்ததாகவும் ஞாபகம்) நாவலில் வரும் அனைத்து ‘மந்திரங்களும்’ ஹிந்துமகாசமுத்திரமத சிந்தனை மரபின் சமஸ்க்ருத மூலங்களின் தமிழ் வடிவம். ஆழ்வார் முதல் ஆச்சார்யர் வரை, பூவுலகிலிருந்து விடுபட்ட பின்னரும் அவரது பிரதிஷ்டை செய்யப்பட்ட பூவுடலுக்கு நகமும் முடியும் வளரும் குருவிலிருந்து (ஸ்ரீரங்கத்தில் சன்னதியே இருக்கிறது), அவரது குரு பரம்பரை கதைகள் வரை அனைத்தும் ஹிந்துமதத்தின் ஒரு குறிப்பிட்ட உட்பிரிவின் ஒழுக்கங்கள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள். இப்படி ஆசிரியர் பலவகையிலும் யதார்த்த வெளியிலிருந்து விஷ்ணுபுரம் ஆக்கத்தை மீட்டுக்கொள்வதற்கு ‘முன்னுதாரணராய்’ முனையவில்லை.

ஆனால் “செவ்வியல் தன்னை ஒரு ‘அகால’ வெளியில் நிறுத்திக்கொள்ளவே முயல்கிறது. […] அது தன்னுடைய அழகியல் விதிகளின்படி தன் படிமங்களைக் கருவியாகக் கொண்டு சுதந்திரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு முழு உலகம்.” என்றும் அதை வாசிப்பவன் மட்டும் சொந்த காழ்ப்புகளையும் (அனுபவங்களையும்?) கசப்புகளையும் கழட்டிவைத்துவிட்டு முன்னுதாரணனாய் முன்வரவேண்டும் என்று “விஷ்ணுபுரமும் பிராமணர்களும்” பாஷ்யத்தில் ஆசிரியர் விளக்கம் கூறுவது… செம காமெடி மா.

ஃபேண்டஸி வகையில் கனவு காணவேண்டியிருந்தால், வரலாற்றின் சம்பவங்களையும் சார்ந்த சமூகத்தையும் எடுத்துக்கொண்டு, வாசகனுக்கு யதார்த்தத்துடன் ஒப்பிடும்வகையில் ஞாபகமூட்டும் அவற்றின் பெயர்களையாவது ‘காவியத்தில்’ மாற்றிப்போடுவது ஆசிரியத்துவ நெறி. காழ்ப்புகள் ஏதும் இல்லாத படைப்பாசிரியரிடமிருந்தே காழ்ப்புகளற்ற, உண்மையை மட்டுமே குறிவைத்து இயங்கும் காவியம் வெளிப்படும். அது இவ்வகை சுயமைதுன ஞானத் தேடல்களில் மறைந்துவிடுகிறது. மறைவதே மறைபொருளின் இயல்பு என்பதே காவிய நீதி.

ஓம் தத் சத்.

*

விஷ்ணுபுரம் நாவலையும், ஆசிரியரின் மேற்படி வகை உரைகளையும் (ஆசிரியரின் வலைதளத்திலேயே சுமார் பதினைந்து நீள்கட்டுரைகள் உபபாஷ்யங்களாய்த் தேறும்) தொடர்ந்து வாசித்துவரும் எனக்கு இவ்வாறு தொகுத்துக்கொள்ளப் புரிபடுகிறது:

விஷ்ணுபுரம் காவியம்; கிளாஸிக் (செவ்விலக்கியம்). அதை ஆசிரியர் எழுதவில்லை. அது ஒரு கனவு. கண்டவரை விமர்சிக்கமுடியாது. கனவென்பதால் அக்கனவையும் விழித்திருக்கையில் தோன்றும் மனித விமர்சன தர்க்கங்களுக்கு உட்படுத்தமுடியாது. அதனால் வாசகர்களால் விஷ்ணுபுரத்தை விமர்சிக்கமுடியாது. வாசிக்கமட்டுமே முடியலாம். ஞாபகமாக நெற்றியில் நாமம் இட்டுக்கொண்ட பிறகு.

விஷ்ணுபுரத்தின் விமர்சனத்தை வாசகர்களும் வாசிக்க, விஷ்ணுபுரத்தின் முதல் இரண்டு காண்டத்தின் விமர்சனம் மூன்றாம் காண்டத்தில் ஆசிரியரே செய்திருக்கிறார் (பார்க்க பக்கங்கள் 730, 731). முதல் காண்டம் உணர்ச்சிக்குவியல், இரண்டாம் காண்டம் வேறெங்கிருந்தோ உருவி இங்கு சேர்க்கப்பட்ட இடைச்சொருகல். மூன்றாம் காண்டம் தேவையேயில்லை. இப்படி.

அதாவது, மூன்றாம் காண்டத்தில் முதல் இரண்டு காண்டங்களின் விமர்சனம் வருவதால் அம்மூன்றாம் காண்டமே தேவையில்லை என்கையில், விஷ்ணுபுரத்திற்கு விமர்சனமே தேவையில்லை என்பதை சூட்சுமபுத்தியில் படுமாறு யாப்பமைதியுடன் ஆசிரியரே வெளிப்படுத்திவிடுகிறார்.

இப்படி, வாசகர் சொல்லவந்ததை வாசிப்பதே சொல்லிவிடுகிறது. அதாவது கனவிற்குள் ஒரு பகுதி மிச்சதை “இது வெறும் கனவு” என்கிறது. அல்லது, என்று கவித்துவமாக விமர்சிக்கிறது.

“இன்ஸெப்ஷன்” திரைக்கதைக்கூட விஷ்ணுபுரத்திலிருந்து உருவியதோ என்று எனக்கு இப்போது சந்தேகம். வெளிப்படையாகக் கேட்டால் அக்கேள்வியையே தோற்றுவாயாகக்கொண்டு பதில் எப்படி ஏற்கனவே விஷ்ணுபுரத்தின் ஒரு ஓரத்தில் தெள்ளத்தெளிவாய் பதியப்பட்டுள்ளது என்பதை விளக்கி இன்னொரு விஷ்ணுபுரம் பாஷ்ய உப-சர்கம் வெளிவரும் என்பதால், இவ்வகைக் கேள்விகளை மனத்தினுள் அமிழ்த்தியும் அமிழ்த்தியவற்றினுள் பேஸ்த்தடித்த ஆழ்வாராய் அமிழ்ந்துமிருக்கிறேன்.

இவ்வகைக் “காவியக் கொந்தளிப்புகளும்” அதன் தொடர்ச்சியாய் அடுத்து வரும் “காவியப் பேரமைதியும்” புரியாமல் நெற்றியில் நாமத்துடனும் நெற்றிக்குள் தர்க்கபுத்தியின் தடுமாற்றத்தில் தளும்பிக்கொட்டும் கேள்விகளுடனும் பவனிவரும் எளிய வாசகனுக்கு “நாவல் முழுவதுமே கனவு” என்பதை ஆசிரியர் தன் பாஷ்யங்களில் தொடர்ந்து விளக்கிவருகிறார்.

சம்பந்தப்பட்டவர்களில் ஒருவர் சட்டைப்பையில் மட்டும் 500 ரூபாய் குறைந்திட்ட ஊடாடும் சம்பவமோ அவ்வாசகனுக்கு என்றும் விளங்கமுடியாக் கவித்துவ நிகழ்வு. அவன் நெற்றியில் இருக்கும் நாமமே அக்கவித்துவத்தின் குறியீடு. காவியக் கர்ம பலனை அனுபவிக்கும் அவ்வாசகனுக்கு என் ஆசிகள் என்றும் உண்டு.

காலச்சக்கரத்தின் விளிம்பில் முடிவிலியாய்ப் பயணிக்கும், நாமமிடுவதற்கு நெற்றியேயில்லாத கருவண்டின் சந்ததியனரில், சரஸீருக ப்ருங்கனாய், இங்கு முடிவிலி காலச்சக்கரமா, பயணமா, என்கிற தர்க்க புத்தியினைக் கடந்து, சகல தர்ம நெறிகளையும் களைந்து தான் என்பதே இல்லாமலாகி அவ்வில்லாமலாகியது, ததாகதரின் பெருங்கருணையில், அத்தைத் தின்று அங்கேயே இலக்கியம் வாசித்துக் கிடக்கையில் அதற்கு விஷ்ணுபுரம் விஸ்வரூப தரிசனம் கிட்டட்டும்.

ஓம் அவ்வாறே ஆகுக.

*

அடங்கல்: [புரிதலுக்குத் தேவையெனின் “உள்ளே இருப்பவர்கள்” வாசித்துவிட்டு இதைத் தொடருங்கள்]

ஸ்ரீரங்கத்தில் வீதியுலாப் போகையில் (மாலை வாக்கிங்) கிழக்குச்சித்திரை வீதியில் சுஜாதா அவர்களின் வீட்டுவாசல் வரை சென்று “வாத்யாரெ வண்கொம்” (ஸ்ரீ குருப்யோன நம: என்கிற வேதகால மந்திரத்தின் தமிழாக்கம்) என்று ஒரு மிலிட்டரி சல்யூட் அடித்துவிட்டு அகல்வது என் வழக்கம்.

தொன்னூறுகளில் ஒரு நாள் அவ்வகையில் சல்யூட் அடிக்கையில் உள்ளே அடை அவியல் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர், எழுந்து வாசல் வரை வந்து, என்ன சத்தம் என்று, கதைவைத் திறந்தார். அவர் நெற்றியில் புதிதாய் நாமம் போட்டிருப்பதைக் கண்டேன். சிஷ்யர் ஒருவர் ஸ்ரீரங்கத்தின் வரலாற்றுப்பின்புலத்துடன் ஒரு நகைச்சுவைக்கதை எழுதவிருப்பதால் அதற்கு வேண்டிய ஆவணங்களை சேர்த்துத்தருவதற்காக பகவானிடம் சங்கல்பம் செய்துகொள்வதற்கு திருமன் அணிந்திருப்பதாய்ச் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. “நெற்றியிலிருப்பது ஒரு குறியீடுதானே?” என்றதற்கு நிர்மலமாய்ப் புன்னகைத்தார்.

நாமம் தாங்கிய நெற்றியில் அவரின் அந்த நிர்மல்யப் புன்னகையை நான் எங்கு கண்டிருக்கிறேன்?, யோசனையில் இருந்த என்னை, என்றுமில்லாத திருநாளாய், “டேய், நீ என்ன தமிழ்ல எழுத ட்ரை பன்ரயாமே, இந்த தாத்தாவின் அறிவுரை இது…” என்று அவராகவே தட்டி எழுப்பினார். “என்ன காப்பி அடிக்காத. ஆனா புரியராமாதிரி எழுது. மக்கள ஏமாத்த முடியாது. நிச்சயம் பெரிய நாவல் எதையும் அவசரப்பட்டு எழுதிராதே. தென், யு நொ ஹவ் இட் ஈஸ், எழுதினது இலக்கியமா இலேகியமான்னே உன் வாழ்க்கை விரயமாய்டும். லைஃப் இஸ் ப்ரெஷஸ். ஸ்க்வாண்டர் பன்னிராத. பேசாம, நான் டச் பன்ன சயின்ஸ் எழுத்தை மட்டும் கர்ம சிரத்தையா ஜல்லியடி” என்றார்.

எனக்குப் புல்லரித்துப்போனது. கூடவே செல்லடித்துப்போனதால் (செல் போன் அடித்தது), கிளம்புகிறேன் என்றேன். ஆசி வழங்குவது அவரின் அறிவியல் தர்க்க புத்திக்கு ஏற்புடையதானதில்லை என்பதால், “பெஸ்ட் விஷஸ்” என்று கூறி செல்லமாய் பின்முதுகிலும் பின்மண்டையிலும் ஒருசேரப்படுமாறு “சிங்தாங்” தாங்கினார். அதற்குப்பின் இறக்கும்வரை நான் அவரைச் சந்திக்கவேயில்லை.

ஆனால் அன்று வீடு திரும்புகையில், எடுத்த அடி அந்தரத்திலாட, ‘ஆடிய பாதமாய்’ ஒரு கணம் அதிர்ந்தேன். நாமம் தாங்கிய ‘சுஜாதா’வின் நெற்றியில் அந்த நிர்மால்யமானப் புன்னகையை அன்று காலை தரிசனத்தில் நான் ஸ்ரீரங்கம் கோயிலில் காலசர்பத்தின் மீது சயனித்திருக்கும் ஸ்ரீரெங்கநாதரின் முகத்தில் கண்டிருக்கிறேன்.

ஓம்.

*****

சான்றேடுகள்

விஷ்ணுபுரம் – ஜெயமோகன் (கவிதா வெளியீடு)

விஷ்ணுபுரமும் பிராமணர்களும்: http://www.jeyamohan.in/?p=29889

உள்ளே இருப்பவர்கள்: http://www.jeyamohan.in/?p=29099

நகைச்சுவையும் தமிழ்சினிமாவும் http://www.jeyamohan.in/?p=30223

நவீன தமிழிலக்கிய அறிமுகம் – ஜெயமோகன் (கிழக்கு வெளியீடு)

மாற்றமும் ஏமாற்றமும், தொகுதி: கடவுள்களின் பள்ளத்தாக்கு – சுஜாதா (உயிர்மை வெளியீடு)

படங்கள், நன்றி: http://600024.com/store/vishnupuram-jeyamohan | http://en.wikipedia.org/wiki/File:Namam1.gif | http://www.bvml.org/FVS/laksmi/visistadvaitavada.html