தமிழ் இணைய, அச்சு ஊடக சூழலில் பெரும்பாலும் அடுத்தவரது நேரத்தையும் உழைப்பையும் உதாசீனப்படுத்துவது ஒரு முக்கியமான பொழுதுபோக்கு. ஆய்வறிக்கை, கட்டுரை மற்றும் புத்தகத்திற்கான சம்பந்தப்பட்ட எழுதுபவரின் அறிவுத்துறையின் தேர்ச்சி, உழைப்பிற்கேற்ப, மேற்படி உதாசீனத்தின் வீரியம் மாறுபடும். அதிகம் உழைத்தால் அதிகமான உதாசீனம் என்கிற நேர்மையான விகிதத்தில்.
வாசகர்களின் பங்களிப்பும் இதில் முக்கியம் என்றாலும் அதைத் தற்சமயம் புறந்தள்ளுவோம். தமிழில் அறிவியல் மாநாடு நடத்துபவர்கள், புத்தகப் பதிப்பாளர்கள், அச்சு இதழாளர்கள், இணைய சிறுபத்திரிகையாளர்கள் என்று பாகுபாடின்றி மேற்படி பொழுபோக்கை மேற்கொள்பவர்களின் கருத்தொருமித்த செயல்பாடு அலாதி. பெருமைப்பட ஒரு சூலாதி இயற்றலாம். மரியாதைக்குரிய விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு. ஆனால் இவை தராசை சமன்செய்யமுடியாத சிறுபான்மை என்பது என் அனுபவம். இலக்கியமீதியான என் சொற்ப அனுபவப் பட்டியலிலிருந்து இன்றைக்கான ஒரு சாதா எடுத்துக்காட்டிலேயே இதை அறியமுடிகிற நுண்ணறிவு உங்களுக்கும் இருக்கும். சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
என்னை அவ்வப்போது அச்சு ஊடகத்திற்கு எழுதச்சொல்லி விண்ணப்பிக்கும் என் அபிமானத்திற்குரிய பத்திரிகை அன்பர் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததால், ஒரு இலக்கிய மாத இதழுக்காக ஒரு புத்தகத்திற்கு விமர்சன-அறிமுகம் எழுதுவதாக சில மாதங்கள் முன் சம்மதித்து, இரண்டு மாதம் முன் எழுதிக்கொடுத்தேன் (அன்பர் நல்லெண்ணத்திலேயே இவ்வாறு தரமான தேவையான எழுத்தைத் தேடி தனக்குத் தொடர்பிருக்கும் ஒரு சில ஊடகங்களில் அறிமுகப்படுத்துகிறார். விவரிக்கும் விஷயத்தில் பத்திரிகையின் ஆசிரியர் அவரில்லை; இதற்கு மேல் தனிப்பட்ட விபரங்களை தவிர்க்கிறேன்).
ஜூலை 2012 இதழில் வருவதாக இருந்தது, இடப்பற்றாக்குறையினால் ஆசிரியர் ஆகஸ்ட் 2012 இதழுக்கு நிச்சயித்திருக்கிறார் என்று பின்னர் விசாரித்து அறிந்துகொண்டேன். இரண்டு நாள் முன் “…ஆகஸ்ட் 2012 இதழில் … புத்தக விமர்சனம் வெளியாகியுள்ளது; பார்த்தீர்களா?” என்று மேற்படி அன்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அப்பொழுதுதான் ஒரு துயரத்தில் இருந்ததால், இதைக் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்திப்போட்டேன்.
காலை ஐந்தரை மணிக்கு எழுந்ததும், வீட்டில் தண்ணீர் வராததை சுவருக்கு ஒன்றாய் பொருந்தியுள்ள வால்வுகளையும், வந்த ப்ளம்பரில் பொருந்தியுள்ள காதையும் திருகி, சரிசெய்து, வாசல் கதவில் தொங்கும் பையினுள் தூங்கும் பால் பாக்கெட்டுகளை, அருகில் அரசமரத்தில் இன்னமும் தூங்கும் குரங்குகளிடமிருந்து காபந்து செய்து, தூக்கம் கலையாமல் தப்பான பர்னரில் லைட்டரை சொடுக்கி, அடுப்பில் காய்ச்சி, வாய் தேய்த்து, பல் கொப்புளித்தேன். முகத்தில் சிலீரிட்ட குளோரின் கலவையில் விழித்து, ஃபில்டரில் கும்பகோணம் காபிபொடியிட்டு, இறக்கி, காபி கலந்து, கொட்டிவிட்டு, மனைவி கொடுத்ததை குடித்துவிட்டு, கால்சிராய்க்குள் அவசரமாக மொபைலையும் சில்லறைப்பணத்தையும் நுழைத்துக்கொண்டு (பெட்டிக்கடையில் கிரெடிட் கார்ட்டுகளை விற்க மட்டுமே செய்வான், வாங்கமாட்டான்), காலை நடையானேன்.
சாலையின் போக்குவரத்து சிக்னல்களுக்கு எதிர்ப்பதமாய் நடையை மாற்றி ஒரு மைல் அருகில் ஞாயிறிலும் நகலும் ‘நவசஞ்சிகையங்காடி’ வரை நீட்டினேன். சணலில் தொங்கிய இலக்கிய ஏட்டை க்ளிப்பிலிருந்து விடுவித்து, உள்ளடக்கத்தில் “புத்தகத்தின் பெயர் – அருண் நரசிம்மன்” என்று இட்டிருப்பதை சரிபார்த்து, 15 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொண்டேன்.
வரும்வழியெல்லாம் ஈவ்-டீஸிங் இடிராஜாக்களாய் கார்கள் சரேலென்று உரசிக்கொண்டு செல்வதையும் பொருட்படுத்தாமல், டீ-ஷர்ட்டின் மேலாக்கை சரிசெய்துகொண்டு, ஐந்தாறுமுறை புரட்டிப் பார்த்துவிட்டேன். உள்ளடக்கப் பட்டியலில் புத்தகத்தின் தலைப்பும் என் பெயரும் இருக்கிறது. உள்ளே விமர்சனத்தைக் காணோம்.
நாம் வாங்கிய இதழில்தான் பக்கங்கள் காணவில்லையா? அப்படியொன்றுமில்லை. இதழில் பக்கங்கள் வரிசைக்கிரமமாய் உள்ளது. என் கட்டுரைக்கு முன்னரும் பின்னரும் உள்ளடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நூல் விமர்சனம் மற்றும் கவிதைகளும் வெளிவந்துள்ளன. தலைக்குத் தேய்த்துக்கொள்ளுமாறு தனிச்சிறப்புடன் நம் கட்டுரை ஏதாவது இலவச சாஷே பாக்கினுள் ஒளிந்துள்ளதா என்று உதறியும் பார்த்துவிட்டேன்.
ஏதோ இணையத்தில் நடத்தப்படும் சஞ்சிகைகள் என்றால் புரிகிறது; உள்ளடக்கம் என்பது அங்கு அதிகப்படி. தலைப்பையும் எழுதியவர் பெயரையும் போட்டுவிட்டால் போதும். மற்றதை மக்களே பின்னூட்டத்தில் பார்த்துக்கொள்வார்கள். அச்சு ஊடகத்தில் இவ்வகை வசதிகள் வாய்த்திருக்கவில்லையே. ஒருவேளை தலைப்பும் பெயரும் மட்டுமே போடமுடிவதுமாறு இந்த இதழிலும் இடப்பற்றாக்குறையோ? அப்படியெனில், அடுத்த இதழில் தலைப்பின்றி, கட்டுரை மட்டும் வெளிவருமா?
அவ்வப்போது எழுதித்தரும் கட்டுரையின் முதல் பத்தி(கள்) அச்சு ஊடகத்தில் வெளிவருகையில் முன்(பின்)னறிவிப்பின்றி காணாமல் போய்விடும். ஏன் எதற்கு என்று புரியாமல் எனக்குத் திகிலாய் இருக்கும். சரி எடிட்டர்களுக்கும் பொழுதுபோக்கு வேண்டுமில்லையா என்றிருப்பேன். ஆனால் மொத்த கட்டுரையுமே அம்பேல் ஆவது… இது நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் புதிய எடிட்டிங் சாதனையாக அறியப்படலாம்.
படிக்கும் எழுத்து என்றும் வாசகர்களின் அறிவுத்திறனை மதித்தே இருக்கவேண்டும் என்பதால், விமர்சனத்தை யோக்கியமாக எழுதுவதற்காக புத்தகத்தின் சில பத்திகள் ஆதாரமற்றவை என்று எனக்குத் தோன்றியதும் சம்பந்தப்பட்ட சிலரை நேரில் சந்தித்து கலந்தாலோசித்து எனது மதிப்புரையை சீர்செய்துகொண்டேன். அதேபோல சில புத்தகங்களில் பகுதிகளை வாசித்து தெளிவடைந்த பின்னரே ஒப்பிட்டு மதிப்புரை வாக்கியங்கள் எழுதமுடிந்தது. அடுத்து விமர்சனமாக மட்டும் இல்லாமல் அறிமுகமாகவும் இருக்கவேண்டும். படித்த வாசகர்களை புத்தகத்தை வாங்கவைக்க மதிப்புரை ஏதுசெய்யவேண்டும். இதற்கு புத்தகத்தின் சில பகுதிகளையாவது வாசித்து, தெளிந்து, சாரங்கள் வழங்கவேண்டும். இதனால் புத்தகத்தை ரசித்து வாசித்தபின்னரும், விமர்சன நோக்கோடு மறுவாசிப்பு செய்திருக்கிறேன். அடுத்து, இவையனைத்தையும் ஓரளவு புழங்கும் தமிழிலேயே எழுதவேண்டும். முடிந்தவரை தவறான தகவல்கள், தப்பான அபிப்ராயங்கள், தனிமனித விருப்புவெறுப்புகள் இன்றி எழுதவேண்டும். அதனால் எழுதியதை நண்பர்களிடம் காட்டி அவ்வகை கருத்துகளை சமன் செய்து ஒழுங்குபடுத்துவேன்.
“இதெல்லாம் எதற்கு?” என்கிறீர்களா. ஒரு கட்டுரையை நேர்த்தியாக வடிவமைக்க எனக்கு சில பல நாள்கள் (மணி நேரங்கள்) ஆகிறது. இதற்கு உழைப்பு என்று பெயர். பிடித்திருக்கிறது என்பதால், நிச்சயம் முதன்மையாக சுய அங்கீகாரத்திற்குதான் செய்கிறேன். அடுத்த கட்டத்தில், சுயத்திற்கு வெளியிலிருந்து, ஏதாவது மெய்வருத்தக்கூலிதரும் (பணமில்லை; வாசகர் அங்கீகாரம் போன்று) என்றும் நம்பியே உழைப்பை அளிக்கிறேன். அட்லீஸ்ட் இந்த புத்தக விமர்சனம் மேட்டரில் நான் ஒழுங்காய் தரமாய் எழுதித்தருவேன் என்றுதான் புத்தகம் வெளிவந்து சிலமாதங்களாகியும் காத்திருந்து என்னிடம் எழுதி எடுத்துச்சென்றனர். அப்படியெனில் வாசகர்களுக்கு எழுத்தை விற்பவர்கள் எழுத்தின் தரத்தை கருத்தில்கொள்வார்கள் என்றே கருதுவோம்.
இவையெல்லாம் சரி என்றால், அதை பதிப்பிக்கையில் மட்டும் ஏன் இவ்வகை உதாசீனங்கள் நிகழ்கிறது? நேற்று நடந்த ஒரு சம்பவத்தை மட்டும்தான் இங்கு விவரித்துள்ளேன். மற்றவை சில ஏலியன்ஸ் திவசம் பகிர்வில் இருக்கிறது.
இன்று வாங்கப்போகையில் நடைபாதையில் ஒரு பெண், கால்களைக் கட்டிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகளை வருடியபடி, என்னிடம் ஏதாவது அளிக்குமாறு கையேந்தியதை, கிளம்பிய அவசரத்தில் சில்லறை கம்மியாக எடுத்துவந்ததால், உதாசீனப்படுத்திக் கடந்தேன். வருகையிலும் விண்ணப்பித்தாள். கையில் இலக்கிய ஏடு மட்டுமே இருந்தது.
***
பின்குறிப்பு: இதில் சம்பந்தப்பட்டவர்களோ இல்லை அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்களோ இந்தக் குறுங்கட்டுரையை ஏதோ “விமர்சனம்” என்று பெரிய லெவலில் நினைத்துக்கொண்டு, “இது யோக்கியமான விமர்சனமல்ல” என்றெல்லாம் சாடும்முன்னர் கவனியுங்கள். நான் புத்தகத்தைப் பற்றி எழுதியதுவேண்டுமானால் விமர்சனம் ஆகலாம். இது வெறும் அனுபவ பகிர்வு. “இது யோக்கியமான அனுபவமல்ல” என்று வேண்டுமானால் குரலிடுங்கள்.