கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே

Standard

கல்லூரியில் உடன் படித்தவள் நேற்று மதியம் இறந்துவிட்டாள். பத்து வருடம் முன்னர் கீமோவில் போயேபோச்சு என்றிருந்த கான்சர் கடந்த மாதங்களில் ரிலாப்ஸ். கொண்டுபோயேபோச்சு.

கிட்டத்தட்ட இருபது வருடம் கழித்து, சென்ற வருடம் சந்திக்கையிலும் களையான முகத்துடன் இனிமையாக அமைதியாக பேசினாள். இருபது வருடம் முன்னர் “உன் அழகின் ரகசியம் பீமபுஷ்டி லேகியம் தானே” என்பது போன்று ஏதோ கடலை வறுத்திருப்பேன். கிளரொளி இளமை. சென்ற வருடம் சந்திக்கையில் அவ்வாறே பேசத் தயக்கம். டக்-இன் செய்த முழுக்கை சட்டை பேண்டினுள் அல்லவா இருக்கிறேன். தலையை வருடி சௌக்கியமா என்று கேட்கவே தோன்றியது. அதையும் செய்யவில்லை.

ஹாய் என்றவளிடம், வாயிலிருந்த பாராட்டை எச்சிலுடன் விழுங்கி, ஹாய், … எங்கிருக்கிறாய் இப்போது? மாரீட்? (யெஸ், உனக்கே ஆய்டுத்து எனக்காகாதா) என்றெல்லாம் ஆண்மையின் திடம் பரிமளிக்க கேள்விகளால் அளவளாவி, நான் இப்போது வசிக்கும் ஊரில், சொற்ப கிலோமீட்டர்கள் அருகிலேயே இருக்கிறாள் என்றும் தெரிந்துகொண்டேன். எப்படியும் யூஸ் பன்னமாட்டோம், மறந்த்ருவோம் என்றபடி, மொபைல் எண்கள் பறிமாறிக்கொண்டு அகன்றோம்.

யாயு ஞாயும் யார் ஆகியரோ என்று அறிவிப்பின்றி கூடி, நேசமா, காதலா, களிவெறியா, கழிவிறக்கமா என்று இனம்காண அவகாசமும் எண்ணங்களுமின்றி சுற்றித்திரிந்து, படித்து, வெடித்து, சிரித்து, செயலற்று… இளமையின் ஒரு காலகட்டத்தில் இவ்வகை நண்பர்குழாம் அவற்றின் ரகளைகள், ரசனைகள், ரகசியங்கள், சமுதாயத்தை பொறுப்புகளை தற்காலிகமாய் மறைக்க அரணாய் தேவைப்படுகிறது. வயதாகி, வேலை, குடும்பம், பொறுப்பு என்று புதியதாக உருவாக்கிக்கொண்ட அரண்கள், அந்நட்புகளை மறைத்துவிடுகிறது. இழப்பின் அதிர்ச்சி யதார்த்த அரண்களை தகர்த்தெறிகையிலேயே, மறைக்கப்பட்டது மறக்கப்படவில்லை என்பதை அறிகிறோம். அதுநாள்வரை அன்பிற்கும் உண்டிங்கு அடைக்குந்தாழ்.

அட்லீஸ்ட் “லட்சணமாய் இருக்கிறாய், மகிழ்ச்சியாய் இரு” என்றாவது கௌரவமாய் கூறிவிட்டுவந்திருக்கலாம் என்று ஓரிரு முறை சென்ற வருடத்தில் நினைத்துக்கொண்டிருக்கிறேன். இத்தனைக்கும், இணைக்கும் நண்பர்களுடன் தொடர்பிலிருந்தேன். சென்ற வருடம் முழுவதும் ஒருமுறையேனும் அவளை கூப்பிட்டு பேசவில்லை. பேசியிருந்தால் அவள் தன் நிலையை சொல்லியிருக்கலாம். ஆதரவாய் நானும் பீமபுஷ்டி லேகியம் பற்றி விசாரித்திருப்பேன். வெவ்வேறு காரணங்களால் இருவருக்கும் அவகாசமிருக்கவில்லை. சொற்ப கிலோமீட்டர் அருகில் வசித்தாலும் அவள் எனக்கு அவ்வளவு நெருக்கம் இல்லை என்பதில் தெளிவாய் இருந்திருக்கிறேன். உதாசீனம்.

இன்று அவள் வீட்டில் சென்று பேச பயமாக உள்ளது.

கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே. இரவு முழுவதும் தனித்தமர்ந்து விழித்திருக்கையில், தராதரமற்ற தகவல்களை, தவப் பயன்களை, தவறவிட்ட தருணங்களை, தன்னிச்சையாய் தொகுத்துத் தறிகெட்டுத் தழைக்கிறது மனது. இடையாடும் மௌனங்களில், இமையை மூடினால் பிதுங்கிப் பாதரஸமாய் வெளியேறிவிடும் பரிதவிப்பில் கலைந்த மனதில், களையாய் இறந்த நண்பியின் முகம்; உதாசீனமாகிய நட்புடன்.