சென்ற வாரம் பெங்களூரில் ஒரு விருந்தினர் மாளிகையில் காலைக்குளிரில் தும்மல்களுடன் துயிலெழுந்து எரியும் கண்களுடன் பூர்வா சந்தியா ப்ரவர்ததே என்று மடினியை உயிர்ப்பித்து… கடலூர் சீனு அவருள்ளிருந்து வார்த்தைகளாக்கியுள்ள என் சக மானிடன் செயலாக்கிய அவலத்தை, அடிமை மானுடத்தை (http://www.jeyamohan.in/?p=23200 — மென்மனதுடையோருக்கு எச்சரிக்கை) மனத்தளவில் அனுபவித்தேன்.
ஒருமுறை ஆஸ்பத்ரியில் ரத்தவாடை கலந்த பெண்டத்தால் வாசனையில் தலைசுற்றியதை தவிர்த்து, அதிர்ச்சியில் சட்டென மயக்கிவிழும் தருணத்தை திரையில் ப்ராணநாதா என்றிருப்போரிடமே அநேகமாக கண்டிருந்தேன். விழுப்புரம், கடலூர் என்று நான் சென்று பழகிவந்துள்ள சொந்த ஊரிலேயே சீனு விவரித்துள்ள குரூரத்தை வாசிக்கையில், மடினியிலிருந்து விடுபட்டு மீண்டும் படுக்கைக்கு வந்துவிட எழும்புகையில் தலைசுற்றி சேரிலேயே உட்கார்ந்துவிட்டேன். மயக்கமோ என கண்ணைமூடியதும் கன்னத்தில் வழிந்தோடும் உஷ்ணம் என் அன்றைய காமத்தை தீய்த்தது. கையறுநிலையை பறைந்தது.
அன்பே சிவம் பார்த்திருக்கியோனோ, அதான் உனக்குள்ளயும் கடவுள் தட்டுப்படுகிறார், மயக்கம்லாம் ஒன்னுமில்ல இன்னும் காலைல சாப்டலயோனோ வயிறு காலி, பசியாயிருக்கும், சட்டுனு எழுந்ததால தலைக்கு ரத்தம் போகல, அதான் என்று அனுபவத்திலும் அறிவியலிலும் இயல்பாவதற்கு காரணம் தேடியபடி பல், செல் துலக்கி, அந்நாளின் அடுத்த ஜாமங்களில் யூட்டெக்டிக் அலாயின் ஸொலிடிஃபிகேஷனை கணித மாதிரியாக்கும் ஆராய்ச்சி விவாதங்களில் ஈடுபடுத்தினாலும், மனத்தை தேற்றமுடியவில்லை.
கடந்த வாரம் முழுவதும் பிடித்த வேலையில் மனத்தை ஒருவாறு ஒருமுகமாக்கினாலும், அமைதி குலைந்தே செயலாற்றியது. தமிழில் நண்பர் கெடுவுக்குள் வேண்டியிருந்த இசைக்கட்டுரையையும் தொடரமுடியாமல், ஜூலியன் பார்ன்ஸ், நீல் ஸ்டிஃபென்ஸனிலிருந்து, எம். ஏ. வெங்கடகிருஷ்ணன், அகஸ்தியன் வரை பலரையும் வாசித்து, புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்கள், என் எழுத்தைபற்றிய அவதானிப்புகள் (வெளியிடவில்லை) என்று தோன்றியதை எழுதி சுய உலா சென்று, ம்ஹூஹும்.
இன்று காலையில் இசை கட்டுரையை எழுதிவிடவேண்டும் என்று மடினியை திறந்தால், மின்னஞ்சல் பறிமாற்றங்களில் சகஅலுவலர்கள் சிலர், நேற்று ஹோலோகாஸ்ட் நினைவு தினம் (http://en.wikipedia.org/wiki/Holocaust_Memorial_Day) என்று நாட்ஸிகள் யூதர்களை கொன்றுகுவித்ததை நினைவூட்டி, மீண்டும் என்னை குலைத்துவிட்டனர்.
முதலில் நாட்ஸிகளை ஆதரித்து, பின் தெளிந்து, வன்மையாக எதிர்த்து, 1941 இல் தொடங்கி 1945 வரை காண்சண்ட்ரேஷன் கேம்ப்பில் அடைக்கப்பட்டு, சக இண்டலக்சுவல்களுக்கெல்லாம் சாட்டையடியாய் மார்ட்டின் நைமோலர் 1945 நவம்பர் வாக்கில் நாட்ஸிகளின் அராஜகத்தை எதிர்த்து தன் டைரியில் எழுதிய பிரசித்திபெற்ற “முதலில் அவர்கள் வந்தனர்” எனும் மென்கவிதை வரிகளை தமிழாக்கியுள்ளேன்.
—-
முதலில் கம்யூனிஸ்ட்டுகளுக்காக வந்தனர்
நான் எதிர்குரலிடவில்லை
ஏனெனில் நான் கம்யூனிஸ்ட்டில்லை
அடுத்து சோஷலிஸ்ட்டுகளுக்காக வந்தனர்
நான் எதிர்குரலிடவில்லை
ஏனெனில் நான் சோஷலிஸ்ட்டில்லை
அடுத்து தொழிற்சங்கத்தினருக்கு வந்தனர்
நான் எதிர்குரலிடவில்லை
ஏனெனில் நான் தொழிசங்கத்தினனில்லை
அடுத்து யூதர்களுக்கு வந்தனர்
நான் எதிர்குரலிடவில்லை
ஏனெனில் நான் யூதனில்லை
அடுத்து எனக்காக வந்தனர்
எஞ்சியவர் எவருமில்லை
எனக்காக குரலிட
—–
(கவிதையின் ஒரிஜினல் வடிவம் பலவாறு கூறப்படுகிறது. வரலாற்றாய்வாலர்கள் ஒரளவு ஒப்புக்கொள்ளும் வடிவத்தையே தமிழாக்கியுள்ளேன். விக்கிப்பீடியாவில் இருப்பது ஒரிஜினல் இல்லை. இங்கு ஆய்வை படிக்கவும் http://www.history.ucsb.edu/faculty/marcuse/niem.htm )
இப்படி அரசியல் கொள்கை, மதக் கோட்பாடுகள், தத்துவவிசாரங்கள், என்கிற தார்மீகங்களில் அடுத்தவனுக்கு, அவனுக்கு தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ, அவன் உடன்பட்டோ படாமாலோ, நல்லது செய்யப்போகிறேனாக்கும் என்று பிறழ்ந்த கருத்துகளின் வெளிப்பாடாய் உலகில் தினம் நிகழும் அவலங்களையெல்லாம் சற்றேனும் மறந்து, அவை தீண்டாத ஒரு படைப்பூக்கச்சூழலில் செயலாற்றமுடியாதா என்கிற மன இறுக்கத்தில்தான், எழுச்சியில்தான், இசையில் அல்லது அறிவியலில் என்று வாழ்வை அமைக்க முயன்றேன்.
என்னத்தான் அறிவியல், இசை, சார்ந்த புத்தகங்கள் என்று மட்டுமே இனி வாழ்வின் அவகாசங்களை மனத்திலிழக்கவேண்டும் என்று முடிவெடுத்தாலும், அதற்கேற்ப நகரத்திலேயே ஒரளவு தனிமையான காட்டினுள் அமர்ந்திருந்தாலும், சுயசிந்தனை என்பதும் பொதுவெளியில் நிகழும் பலதையும் உள்வாங்கிய உரையாடலாய்தானே நிகழ்கிறது. இவற்றில் சிலவகையான அல்லது சிலருடனான உரையாடல்களை முடிந்தவரை தவிர்க்கலாம். சிலவற்றை மறக்கலாம். சிலதை துறக்கலாம். வேண்டியவற்றை வேரொருவருமில்லை என்றாலும் நாமே பேசிக்கொண்டிருக்கலாம்.
ஆனாலும் அக்கம் பக்கம் பாரடா சின்னராசா, ஆகாசப் பார்வ என்ன சொல்லு ராசா என்கிறது நிதர்சனம்.
இணையத்தில் வாசித்து பெற்ற சகமானிடர்களின் இழிசெயல்களின் பாதிப்பாய், அனைத்து குற்றங்களுக்கும் ஒரு வகையில் நானே காரணமோ என்கிற குற்ற உணர்வை இணையத்திலேயே எழுதிக் கழுவமுயல்கிறேன். அடுத்து ஏதாவது நல்லதை எழுத, நான் வசிக்குமிடம் நல்ல ஊராக்கும் என்கிற பாதுகாப்புணர்வு, ஆதூரமான நினைப்பு, இப்போது வேண்டும் எனக்கு. மீண்டும் ஒருமுறை சக மானிடனின் குரூரத்தை கடலூரைவிட்டு அகற்றி, கண்டிராத ஜெர்மனியில் நிறுத்தி அனுபவித்துவிடுகிறேன். பரத்தில் மறைந்திடும் பார்முதல் பூதமென, சிந்தனையற்ற ஞானநிலைவேண்டேன். இகத்தில் வேண்டியதை மட்டும் சிந்திக்கும் மோனநிலையிலாழ்த்திவிடு பராசக்தி.