கர்நாடக சங்கீத வருங்கால நட்சத்திர நம்பி(க்கை)கள்

Standard

“இஃப் மை மியூஸிக் இஸ் லௌட், யூ ஆர் ஓல்ட்” என்று மார்பிலுறையும் வாசகங்களுடன், கையில் மான்முத்திரை அபிநயித்தபடி, விளையாட்டுகளில் கழியவேண்டிய அன்றைய களிவெறியை “ப்ரோ-ஷோ” கோஷ்டிகாண பேரிரைச்சலில் கரைத்து, ஒரே இரவில் இன்றைய இளைஞர்கள் பலர் தன்னிறைவடைகின்றனர். கொலவெறி எனும் சொல்லாடலை ஆறுமாதத்திற்கு தமிழ்நாட்டில் எவரும் உபயோகிக்கக்கூடாது என்று பப்ளிக் இண்ட்ரஸ்ட் லிட்டிகேஷன் போடுமளவிற்கு திரையிசையில் தங்கள் இயலாமையை வெளிப்படுத்தியே இளைஞர்கள் ஒரே மெட்டில் பிரபலமாகிவிடுகின்றனர்.

இக்கட்டுரை, இவர்களில் அநேகரால் தீண்டப்படாமல், இன்று பொருளீட்டவல்ல தொழிற்கல்வி பயின்றும், யூஎஸ் மேற்படிப்பு, குடியுரிமை என பலவற்றை துறந்தும், காசிக்கு போகாமலே காசை விடுத்தும், கர்நாடக சங்கீதமே லயிப்பு என தமிழ்நாட்டு தூசி பறக்கும் ஜமக்காளத்தில், தொடையில் தாளம் தட்டும் இளம்கலைஞர்களை பற்றியது.

தமிழிலக்கிய வணிகசூழலின் முரண்நகை வேண்டின், இவ்விசைத்துறையிலும் உள்ளூர் சபா அல்லக்கைகளின் “கர்நாடக இசை வானில் சிறகடித்து பறக்காமல் எந்த ஆபிஸில் குமாஸ்த்தாவாய் குப்பைகொட்டுகிறாய் நீ? மொத்தமாய் வந்துவிடு, நாளையே உன் கொடி பறக்குமாக்கும்” போன்ற சொற்பேச்சில் மதியிழந்து, இருக்கும் சம்பாத்யவேலையை துறந்து திக்குதெரியாமல் தவிக்கும் சிலரும் இவ்விளைஞர்களில் உண்டு.

இக்கட்டுரை நான் கேட்டு மகிழ்ந்த சில வளரும் கர்நாடக இசை கலைஞர்களை வாசக-ரசிகர்களுக்கு அறிமுகிக்கும் முயற்சி. ஒருவகையில், என் கையாலாகாத கோபத்தின் விளைவு. விளக்குகிறேன்.

முந்தைய வாரங்களில் ஓரிரு கச்சேரிகள் கேட்டிருந்தாலும், 2011-12 சென்னை சங்கீதபருவகாலம் எனக்கு டிசெம்பர் ஆறாம் தேதி துவங்கியது. ராக சுதா அரங்கில், இஞ்சிக்குடி சுப்பிரமணியனின் தவிலற்ற, டிக்கெட்டற்ற, நாகஸ்வரம் கச்சேரியில். சிறிய அரங்கு என்பதால் தவில் தவிர்க்கப்பட்டது போலும். வித்தியாசமான முயற்சியே. முன் வரிசையில் நாகஸ்வர வித்வானான வியாஸர்பாடி கோதண்டராமன், வேறுவரிசையில் நாகஸ்வர சங்கீதம் அருகிவருவதைப் பற்றி ஊடகங்களில் எழுதிவரும் கோலப்பன் சகிதமாய்.

கச்சேரியிலிருந்து பிரதாபவராளி ராகத்தில் கீர்த்தனை ஒளி-ஒலித்துண்டு

முதலில் கோலப்பன். இவரது சமீபத்திய ஆதங்க கட்டுரைகளுக்கு தார்மீக கோபம் மிளிர பிரதிவாதி பயங்கரமாய் ஆதங்க கருத்துகளை தெரியப்படுத்திவரும் இணையகுல நாகஸ்வர ரசிகர்களில், சென்னைவாசிகள் அனைவரும் அன்று இஞ்சிக்குடியாரின் இலவச கச்சேரிக்கு வந்திருந்தினர். நாகஸ்வரத்தில் அவா இவா பேதமேதென்று தமிழிசை பிரியர்களும் சபையை அம்மினர். ஆனாலும், ஆர்கனைசரையும் சேர்த்து அன்று அரங்கில் 23 நபர்களையே எண்ணமுடிந்த எனக்கு சிறுவயதிலிருந்தே கணக்கு சற்று வீக். இதேபோல் ஐந்து வருடம் முன்பு ப்ரம்ம காண சபாவில் நாகஸ்வரக் கச்சேரியில் சபையைவிட மேடையில் கூட்டம் அதிகமாயிருந்தது என் கணக்குபடி என்றதற்கு, மிச்சத்தை (நடந்துவரும்) பொங்கல் நாகஸ்வர இசைவிழாவில் எண்ணு, கணக்கு சரியாக வரும் என்றார் கோலப்பன். எவ்வளவோ பாத்தாச்சு, அந்த கணக்கையும் பாக்கமாட்டோமா.

hvஅடுத்து வியாஸர்பாடி கோதண்டராமன். இவரது சமரசமற்ற நேர்மையான நாகஸ்வர இசையை ரசிக்க அன்றாடங்களின் இரைச்சலற்ற மனம், குணம், தினம் வாய்க்கவேண்டும். ஐயாயிரம் வாட்ஸில் கிட்டத்தட்ட அரங்கின் நேச்சுரல் ஃப்ரீக்வன்ஸிக்கு அருகில் ஒலிக்கும் பாஸ்கிட்டாரின் கும்-கும்-களை பொறுத்துக்கொள்ள முடிந்த, ஆனால் மைக்கற்ற அரங்கில் ஒலிக்கும் தவிலிசையை பொறுக்கமாட்டா செவிக்கு, இவ்விசை உணவில்லை. மணநாளில் இவர் கச்சேரி இல்லையெனின் பெண்ணை கட்டமாட்டேன் என்ற நண்பர்களை நானறிவேன். சமீபத்திய கச்சேரியில் கோதண்டராமன் நாகஸ்வரத்தில் ஆலாபனை செய்து தொடங்கிய பைரவி வர்ணத்தின் சிலிர்ப்பில் இருந்து மற்றொரு நண்பரால் மேற்படி இஞ்சிக்குடியாரின் கச்சேரியிலும் மீளமுடியவில்லை. இதுவும் டெக்னிக்கலா நல்லாருக்கு; ஆனாலும் கோதண்டம் அன்னிக்கு கிளப்பிட்டான்யா; அதுதான் உணர்வுபூர்வம், என்றபடி அகன்றார்.

வளரும் இளம்கலைஞர் வியாஸர்பாடி கோதண்டராமனுக்கு 2011-12 சங்கீத சீஸனில் சபாக்களில் கச்சேரிகள் ஏதுமில்லை.

சாதாரண ரசிகனான என்னாலும் பரிந்துரைக்கமுடிந்த சபா ஒன்றில் சமீபத்தில்தான் அவர் கச்சேரி முடிந்திருந்தது. மற்றொன்றில் மாதக்கச்சேரியில் நிச்சயம் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

கண்ணுக்கு நேராய், “கச்சேரி இருந்தா வாசிக்காம இருப்பேனா சார்…” என்று நடுங்காத மெல்லிய குரலிலும், “பார்த்சாரதில, ரெண்டு மணிக்கு என் கச்சேரி பக்கமும் வர்ரது…” என்று உரிமையுடனும், “என் கச்சேரிக்கெல்லாம் நீங்க வரமாட்டீங்க…” என்று ஆதங்க முறுவலுடனும் காண்டீன்களில் விடைபெறும் இவ்வகை உழைக்கத் தெரிந்த பிழைக்கத் தெரியாத இளம் கலைஞர்களுக்கு, ரசிகனாய் சீஸனில் எவ்வகையிலும் நம்மால் உதவமுடியாதோ என்கிற என் சொந்த கையாலாகாத கோபமே இக்கட்டுரையை எழுதத் தூண்டுகிறது. படித்துவிட்டு, வாசக-ரசிகர்கள் “இதுமாதிரி எழுத்து லேசில் கைகூடாது சார்” என்று என்னைப் பாராட்டுவார்களில்லையா, அதற்காகத்தான்.

(- 0 –)

இப்படி டெஸ்ட்டோஸ்டிரோன் உந்துதலில் அறச்சீற்றம் புலன்களில் நாஸிகாபூஷணியாக பிரவாகித்து ஊக்குவித்தாலும், கட்டுரையை தொடங்கியதுமே வருகிறது மனத்தடை. இளம் கலைஞர்களை எவ்வகையில் பாகுபடுத்துவது? சிறு குழப்பங்களை தவிர்க்கமுடியவில்லை. பிரதான ஸ்லாட்டில் பாடும் பல இளவயது வித்வான்களும் இளம்கலைஞர்களே. ஏற்கனவே “2011-12 சென்னை மார்கழி இசைவிழா பல்லவிகள்” விவாதித்த சுமித்ரா வாசுதேவ் இன்னமும் அகதெமியின் மத்தியான ஸ்லாட்டில் பாடுவதால் மட்டுமே இளம்கலைஞர். அதேபோல், நான் கேட்காத பல சீஸன் கச்சேரிகளில் திறமைகாட்டியுள்ள பலரும் இளம் கலைஞர்களே. நான் கேட்காது ஆனால் நண்பர்கள் கேட்டு அபிப்ராயப்பட்டுள்ள சிலரையும் சேர்த்துக்கொள்வதா; இல்லை நண்பர்களையே எழுதித்தரச்சொல்லி கட்டுரையில் சேர்த்துக்கொள்வதா? இளம் வித்வான்கள் என்றால் பாடகர்கள் மட்டுமா? அதிலும் ஆடவர், ஆடாதவர் என்றெல்லாம் பிரிக்கவேணுமா? “லலிதா” ராமின் துருவ நட்சத்திரம் வெளியீட்டுவிழா கச்சேரியில் இரட்டை மிருதங்க பக்கவாத்தியத்தில் பிய்த்துதறிய பாலகர்களை (பழனி சுப்ரமண்ய பிள்ளை சிஷ்யர் காளிதாஸ்-சின் சிஷ்யர்கள்) சேர்ப்பதா விடுப்பதா? நினைவிலிருந்தே யோசித்தாலும் இப்படி இருபது பேராவது தேறினர். அனைவரையும் அறிமுகிக்க ஆசையே.

உம்பர்ட்டோ இக்கோவின் “ஃபூக்கோ பெண்டுலம்” சொல்லாடலில் சொன்னால், இவ்வகை ரோமத்தை நான்காய் பிரிக்கும் செயலை — டெட்ராபைலொகடபாஸிஸ் — செய்வதை இங்கு தவிர்க்கிறேன். நினைவிலிருந்து பலரை பட்டியலிட்டு அதிலிருந்து சமீப வருடங்களில் நேரிடயாக நான் கேட்ட சிலரை மட்டுமே கட்டுரையில் அறிமுகப்படுத்தப்போகிறேன். உங்கள் அபிமான நட்சத்திரங்கள் விடுபட்டிருந்தால், மறுவினைகளில் சேர்த்துவையுங்கள்; பிறிதொரு கட்டுரையில் நியாயம் செய்வோம்.

குறிப்பிடப்படும் அனைவரும் அநேக நிறை, சில குறைகளுடன் கச்சேரி செய்துவரும் இளம் திறமைசாலிகளே. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் உதாரணம் கொடுப்போம். சதுர குறுக்குவெட்டுள்ள இரும்புத் துண்டை லேத்தில் பிடித்து உருளையாய் கடைவது ஒரு கலை. முதலில் ரஃப் டர்னிங் செய்து குறுக்குவெட்டை சதுரத்திலிருந்து ஒரளவு உருண்டையாக்கவேண்டும்; அடுத்து மைக்ரோ டர்னிங் என்று மில்லிமீட்டர் கணக்கில் அளவுகள் சரிவருமாறு இழைக்கவேண்டும்; பிறகு எமரி பேப்பர் எனப்படும் உப்பு காகிதம் கொண்டு வியர்த்து விறுவிறுக்க தேய்த்து உருளையின் பரப்பை சொரசொரப்பின்றி செப்பனிடவேண்டும்; இப்படிச் செய்கையில் கோர்ஸ் கிரெய்ன், ஃபைன் கிரெய்ன் என்று இருவகை பேப்பர்கள் அடுத்தடுத்ததாய் தேய்க்கவேண்டும்; இறுதியில், பிராஸ்ஸொ போன்ற திரவ-பாலிஷ் போட்டு பட்டை தீட்டி வழுவழுக்கவேண்டும். உருளை வேண்டிய பரப்புடன் கிடைக்க.

இதுபோல சங்கீதப்பயிற்சியின் அடுத்தடுத்து செம்மையாகும் கட்டங்களை உணர்ந்தால், என்னைப் பொருத்தவரையில் இன்றைய இளம் வித்வான்கள் அநேகமாக அனைவருமே மைக்ரோ டர்னிங் வரை தீட்டப்பட்டவர்களே. அங்கிருந்து உப்பு காகித மற்றும் திரவ பாலிஷிட்டு செம்மையாகும் தருணங்களிலேயே தங்கள் திறமையிலும், அதைத் தீட்டிக்கொள்வதிலும் வேறுபடுகிறார்கள். இதனால், நான் குறை என்று இங்கு சுட்டுவதும், அவரவர் அப்பியாசத்தில், எமரி பேப்பர் பாலிஷில், வருங்காலங்களில் தன்னால் களையப்படக்கூடியவையே.

தேர்ந்துவரும் இளம்கலைஞர்கள் என என் பட்டியலில் இடம்பெறுபவர்கள்: நிஷா ராஜகோபால் (வசுந்த்ரா ராஜகோபாலின் மகள்), கே. காயத்ரி (சுகுணா புருஷோத்தமனின் சிஷ்யை), ரஞ்சனி ஹெப்பார் (தற்போது சௌம்யாவின் சிஷ்யை), தாரிணி (வேதவல்லியின் சிஷ்யை) ப்ரார்த்தனா, அம்ருதா வெங்கடேஷ் (பெங்களூரிலிருந்து கடந்த ஐந்தாறு வருடங்களாக சீஸனுக்கு தவறாமல் ஆஜராகிறார்), டி.என்.எஸ்.கிருஷ்ணா, அபிஷேக் ரகுராம், குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா, சிக்கில் குருசரண், பிரசன்னா வெங்கட்ராமன், பால்காட் ராம்பிரசாத், ராமகிருஷ்ணன் மூர்த்தி, ஸ்வர்ண ரேத்தஸ், சந்தீப் நாராயண், ஜி.ரவிக்கிரன், ரித்விக் ராஜா, விக்னேஷ் ஈஸ்வர், பரத் சுந்தர், சாகேத்ராமன், திருச்சூர் பிரதர்ஸ்… பட்டியல் முடியவில்லை. விஷால் சாபுரம் போன்ற வாத்தியக் கலைஞர்கள் (கோட்டுவாத்தியம்; ரவிக்கிரன் சிஷ்யர்) மற்றும் என்.ஆர்.ஐ வித்வான்களுக்கு தனிப் பட்டியல் வேண்டும்.

வயலின் பக்கவாத்தியத்தில் கே.ஜே.திலிப், எம்.எஸ்.அனந்தகிருஷ்ணன் (வயலின் வித்வான் எம். ஏ. சுந்தரேஸ்வரனுடைய மகன்), அம்ருதா முரளி, பி. அனந்தகிருஷ்ணன், ராஜீவ், கிரிதாரி, நிஷாந்த் சந்திரன் (இருவரும் கன்னியாகுமரியின் சிஷ்யர்கள்), அக்கரை ஸ்வர்ணலதா, சாருமதி ரகுராமன், எல். ராமகிருஷ்ணன் (இந்த சீஸனில் ஆப்ஸெண்ட்; படிப்பிற்கு யூ.எஸ் சென்றுள்ளார்)… இங்கும் பட்டியல் முடியவில்லை.

மிருதங்கம்: ஸ்ரீவத்ஸன், கர்ரா ஸ்ரீனிவாஸராவ், கும்பகோணம் சுவாமிநாதன், அனந்தா ஆர். கிருஷ்ணன் (பால்காட் ரகுவின் பேரர்), எத்திராஜன் (வேலை நிமித்தம் யு.எஸ், சீஸன் ஆப்ஸெண்டி), டெல்லி சாயிராம் (திருவாரூர் பக்தவச்சலம் சீடர்), வி. சங்கரநாராயணன்.

கடம்: குருபிரசாத், சந்தரசேகர ஷர்மா (விக்கு விநாயகராமின் சகோதரர் மகன்);

கஞ்சீரா: செல்வகணேஷ், பி.எஸ். புருஷோத்தமன், ஸ்ரீசுந்தர் குமார், கே.வி. கோபாலகிருஷ்ணன் என்று அமர்களப்படுத்தும் பலரும் இளைஞர்களே, ஆனாலும் வளரும் இளம்கலைஞர் என்று அனிருத் ஆத்ரேயாவை குறிப்பிடுவேன்.

கட்டுரையின் நீளம் கருதி, மேற்படி பட்டியலில், பிரதான நேரங்களில் கச்சேரி செய்யுமளவிற்கு வந்துவிட்ட சிலரை சுருக்கிவரைந்தும், விடுத்தும், அடுத்த நிலையிலிருப்போரை ஒரளவு விரித்துரைப்போம். பக்கவாத்திய கலைஞர்களையும் ஆங்காங்கே குறிப்பிடுகிறேன். விதூஷிகளுக்கு தனிக்கட்டுரை தயார் செய்வோம்.

(- 0 – )

25fr_ramprasad1_845726f
பால்காட் ராம்பிரசாத்

சங்கீத சாம்ராட்ரான பால்காட் மணி ஐயரின் பேரன். ஜியார்ஜியா பல்கலைகழகத்தில் எக்கனாமிக்ஸ் துறையில் டாக்ட்ரேட் பட்டம் பெற்றுத் தாயகம் திரும்பியுள்ளார். சங்கீதத்தில்தான் வெளிப்பாடு. கேட்டவுடன் வசீகரிக்கும் பிரமாதமான “பேஸ்” கணகணக்கும் குரல் வரப்பிரசாதம். சம்பிரதாயமாக (மடியாக) பாடும் வழக்கம். ராகாசுதா அரங்கில் இவருக்கு வயலின் வாசித்த கும்பகோணம் எம். ஆர். கோபிநாத் மிருதங்கத்தில் அஷோக் காளிதாஸ் இருவருமே இளம் கலைஞர்கள். சாஸ்த்ரி அரங்கில் வஸந்தா மெயின் உருப்பிடியாக ஆலாபனை செய்து பாடியது வரவேற்கத்தக்கது. அடுத்து பூர்வி கல்யாணி ராகத்திலமைந்த சியாமா சாஸ்த்ரியின் நின்னுவினா மரிதிக்கெவருன்னாரு, தேவகாந்தாரியில் எந்நேரமும் என்று ராகம் தேர்விலும் சிரத்தையாயுள்ளார்.

உரிமையோடு குறிப்பிடவேண்டுமெனில், அரியக்குடி, கே. வி. நாராயனஸ்சுவாமி என்று அவருக்குப் பிடித்தமான மடியான பாடகர்களின் தாக்கத்திலேயே பாடி சற்று கட்டுபெட்டியாக அடங்கிவிடுவாரோ என்று சந்தேகம் வருகிறது. அவசர லௌகீகங்களில் ரிங்டோனாய் மரபிசை மடங்கியிருக்கும் இன்றைய கச்சேரி சூழல் சற்று அதிரடியானது. ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள குளிகைகளாகவே அனைத்து அங்கங்களையும் கச்சேரிகளில் ஆங்காங்கே புகுத்தவேண்டியுள்ளது. கற்பனை வெளிப்படவேண்டிய விஷயங்களில் இன்னமும் கவனம் செலுத்தலாமோ, கச்சேரி-கலை என்பதை இன்னமும் யோசித்து நிர்வகித்து செயலாக்கலாமோ என்று தோன்றுகிறது. மேலும் சற்று பரிசோதனைகள் செய்யலாமே. அவர்தான் இசையுலகில் தனக்கேற்ற இடத்தை தீர்மானித்து, அதை அடைந்து சோபிக்க, வருங்காலத்திற்கான பாடும் முறை, வழி என்று வகுத்துக்கொள்ளவேண்டும்.

(- 0 – )

31th_2ramakrishnan__879217f-1
ராமகிருஷ்ணன் மூர்த்தி

இவர்தான் எனக்கு இந்த 2011-12 சீஸன் பெஸ்ட். கிட்டத்தட்ட சீசனின் அனைத்து நாட்களிலும் இவருக்கு ஒரு கச்சேரியாவது இருந்ததனால், மூன்று கச்சேரிகள் முழுமையாக கேட்டேன். மூன்றிலும் வெவ்வேறு வகையான உருப்பிடிகள். பேகடா (ஐஐடியில், மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில்) பூர்வி கல்யாணி (பார்த்தசாரதி சபா) என்று பிராச்சீன ராகமாக இருந்தாலும், அடிக்கடி கேட்காத வரமு (பார்த்தசாரதி சபா), அசாவேரி, வாகதீஸ்வரி (மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில்) என்றிருந்தாலும் சளைக்காமல் தீராத கற்பனை வளம், விறுவிறுப்புடன் பாடுகிறார். நல்ல உழைப்பு.

மெயின் உருப்பிடி இக்கச்சேரியில் பூர்வி கல்யாணி. ஆனாலும் அதைக் குறிப்பிடாமல் கடக்கிறேன். காரணம், அபிஷேக் ரகுராமில் தொடங்கி, பாலகாட் ராம்பிரசாத், ராமகிருஷ்ணன் என்று ஒரு பதினைந்து முறையாவது இச்சீஸனிலும் கேட்டிருப்பேன். ஆகவே எனக்கு பின்தொடரும் பூதத்தின் குரல், பூர்வி கல்யாணி.

துணை உருப்பிடியாய் விஸ்தரித்து பாடிய வரமு ராகத்தில் துணைபுரிந்தருள் என்கிற பாபநாசம் சிவன் கிருதியில், பதிதபாவனா கருடவாஹனா என்கிற வரியில் தடங்காமல் நிரவல் செய்தார். வெல்டன்.

வரமு என்பது சுருக்கமாய் குறிக்கவேண்டுமென்றால், ஹிந்தோளம் ராகத்தின் சதுஸ்ருதி தைவத வெர்ஷன். ஸ க2 ம1 த1 நி2 ஸ் என்பதில் மற்ற ஸ்வரங்கள் அதே. த மட்டும் சற்று தூக்கலாக (த1  த2).

வரமு ராகம் ஆலாபனை ஒலித் துண்டு

இந்த வரமு ஆலாபனையைவிட எனக்கு இவர் டிசெம்பர் 26, 2011 மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் செய்த வாகதீஸ்வரி ஆலாபனை மிகவும் பிடித்திருந்தது. நிதானமாய் படிப்படியாக ஆரோஹண ஸ்வரங்களை சேர்த்து, சொற்றொடர்களாக அமைத்து விஸ்தாரமாய் ஆலாபனை செய்தது நிறைவை தந்தது. வாகதீஸ்வரி சம்பூர்ண ராகமாதலால் ஸ்வர ரூப லக்ஷண சாத்தியங்களும் அதிகமென்பதாலோ.

வயலின் எம். எஸ். அனந்தகிருஷ்ணன், எம். ஏ. சுந்தரேஸ்வரனுடைய மகன். பரிச்சயமில்லாத ராகத்தில் நன்றாகவே வாசித்து நியாயம் செய்தார். ஆனால், முன்னர் டிசெம்பர் 24, 2011 அகதெமியில் பரத் சுந்தர் கச்சேரியில் மெயின் உருப்பிடியான தோடியை அவ்வளவு நேர்த்தியாக அன்று பிரஸ்தாபிக்கவில்லை.

சிக்கில் குருசரணுக்கு கூறப்போகும் அனைத்து மேடை பலங்களும் ராமகிருஷ்ணனுக்கும் உள்ளது. உதாரணமாக, மேடையில் அபிநயம் ஆடாத ஆடவர். மரபிசை பாடுவது கடினமேயில்லையே எனும்படி இயல்பாய் லகுவாய் இசைக்குள் செல்கிறார். யாரையும் பிரதி எடுப்பதில்லை. தனக்கென ஒரு வழியை விரைவில் வகுத்துக்கொண்டு வருகிறார். வலுவான வயலின் பக்கவாத்தியமாகத் திகழும் டெல்லி சுந்தர்ராஜன்-னிடம் வாய்ப்பாட்டு பயில்பவர். கூடவே சவிதா நரசிம்மன், வைரமங்கலம் லக்ஷ்மிநாராயணன், பாலை சி. கே. ராமசந்திரன், மற்றும் சமீபத்தில் மறைந்த செங்கல்பட் ரங்கநாதன் என்று கலவையாக பலரிடம் கீர்த்தனைகளை கற்றுத்தேறியிருக்கிறார்.

வட்டார சொல்லாடலில் சொன்னால், ருசித்தால் சீமை சரக்கு என்று தெரியாது. ஏனெனில், அமெரிக்காவில்தான் பால்ய வாசமெல்லாம். ஆனாலும் தமிழ் பேசினாலும், ஆங்கிலம் பேசினாலும் வாடை அடிக்காது. ஆங்கே வசிக்கும் பெற்றோர் சொல்கேட்டு கலிஃபோர்பியாவின் இர்வின் பல்கலைகழகத்தில் இளம்கலை கம்பூட்டர் சயின்ஸ் படிப்பு முடிந்தகையோடு, தற்போது இங்குதான் தாத்தா பாட்டியுடன் டேரா. வேலை எதுவும் போவதற்கே நேரமில்லாமல், அமர்களமாய் மாதத்திற்கு பல கச்சேரிகள் செய்துவருகிறார். உங்களுக்குத் தெரியுமோ, இவரை என்.ஆர்.ஐ. என்று விளித்தால் இவருக்கு ஆகாது. வித்தியாசமான இளைஞர்.

கவனிக்கப்படவேண்டிய ஸ்டார். நாம்தான் ஆதரிக்கவேண்டும்.

(- 0 -)

06theftb-t_n_s_krish_21529f

டி.என்.எஸ். கிருஷ்ணா

பழகுவதற்கு இனிமையானவர். யாராகினும் அதிர்ந்து பேசாமல் மிக்க மரியாதையுடன் இயல்பாய் பேசுவார். ஐ.ஐ.எம்.மில் படித்துவிட்டு சென்னையில் நல்ல இடத்தில் வேலையிலிருக்கிறார். சமீப வருடங்களில் சங்கீதத்தையே பிரதானமாக்கிவருகிறார். ஏற்ற உழைப்பும் கைகூடிவருகிறது. தன் கச்சேரிக்கு தாமதிக்காமல் நேரத்திற்கு வந்து தொடங்கிவிடுகிறார். தொடர்ந்து இரண்டு முறை மத்தியான ஸ்லாட்டில் அகதெமியில் சிறந்த பாடகருக்கான கௌரவத்தைப் பெற்று, பயனாய் 2011இல் பிரதான ஸ்லாட்டிற்கு முன்னேறியிருக்கிறார்.

நல்ல சாரீரம். நினைத்ததை வெளிக்கொணரும் இளமையான குரல். தந்தைக்குப் பின்னமர்ந்து பாடுகையில், கண்ணசைவில் தந்தையின் கற்பனைகளை ஆலாபனையிலும், பல்லவி அனுலோம பிரதிலோமங்களிலும், அமர்க்களமாக வெளிப்படுத்துவதில் சூரர். இவரைப் பற்றி ஏற்கனவே ராகம் தானம் பல்லவி பாகம் ஏழில் குறிப்பிட்டிருக்கிறேன். லயம் இவரது பலம். பலம் என்றால் த்ரிவிக்ரம பலம்.

சங்கீர்ண திரிபுடை தாளத்தில் தோடி ராகத்தில் இவர் அகதெமியில் சமீபத்தில் செய்த பல்லவியை கேட்டுப்பாருங்கள்.

பல்லவி அனுலோம பிரதிலோம மற்றும் தாள விளக்கங்களுக்கு ரா.தா.ப. ஏழாம் பாகத்தைவாசியுங்கள்.

கடந்த ஐந்து வருடங்களில் கேட்டவரையில் இவரிடம் இன்னமும் தொடரும் பலவீனம் என நான் கருதுவது இரண்டு. முதலாவது, ஆலாபனையில் கற்பனை சற்று மட்டுபடுவது. 2009இல் கிருஷ்ணகாண சபாவில் ஹிந்தோளம் ஆகட்டும், அவ்வருடத்தில் ஐஐடி மியூஸிக் கிளப் கச்சேரியில் சுபபந்துவராளி ஆகட்டும், அகதெமியில் தோடி ஆகட்டும், பல்லவியிலும் கீர்த்தனையிலும் ஸ்வரங்களிலும் காட்டும் நேர்த்தி, மனத்தெளிவு, கற்பனை, ஆலாபனையில் வெளிவரவில்லையோ என்றே தோன்றியது. எடுத்துக்கொண்ட ராகத்தை முழுரூபமாக உணர்வுப்பூர்வமாய் உள்வாங்கவில்லையோ, ஸ்வரங்களின் கூட்டாகவே நிற்கிறதோ என்கிற சந்தேகம் மேம்படுகிறது. இது அகவயமான கருத்தே.

அடுத்த (பலம் என்று சிலர் நினைக்கும்) பலவீனம், பிரபலமான பாடகரான தந்தையின் வித்வத் நிழல். இவரைக் கேட்டுவிட்டு “என்னருந்தாலும் அவரப்போல இன்னும் வரல…” எனச் சட்டென விமர்சிக்கும் விமர்சகர்களும், ரசிகர்களுமே நம்மிடையே அதிகம். ஏய்யா அவர மாதிரியே பாடுவதற்கு இவர் எதற்கு, அவரே போதாதா; என்று யாரும் இவ்விமர்சகர்களைக்கூட கேட்க முடிவதில்லை.

குறிப்பிடும் இரண்டு பலவீனங்களில் பின்னது ரசிகர்களின் குறை. மாற்ற பாடகரால் ஒன்றும் செய்யமுடியாது. முன்னதை, முன்னேற்ற தனிச் சிறப்புகளை வளர்த்துக்கொள்ள முயலலாம். எடுத்துக்கொள்ளும் அனைத்து ராகத்தின் ஆலாபனையிலும் தேர்ந்து வருங்காலத்தில் நிச்சயம் மிளிரக்கூடிய இளைஞர் டி. என். எஸ். கிருஷ்ணா.

(- 0 -)

sikkilgurucharan_307042f

சிக்கில் குருசரண்

சிரித்தால் சித்தார் அழுதால் ஷெனாய் என்கிற தற்கால திரையிசை தேய்வழக்கையொத்ததே, முகாரி ராகம் என்பது சோக ரசத்தைக் கொட்ட என்கிற பொய்வழக்கும். வேண்டுமானால் காருண்ய ரசத்தை வெளிக்கொணரும் கீர்த்தனைகள் உள்ள ராகம் என்று சொல்லலாம். இதன் சுத்தமத்தியம ஸ்வரம் அசைவுடன் பாடப்படவேண்டும். இசையொலியாய் பாடுவதில் மட்டுமே உணரமுடிந்தது. சிலருக்கே சுலபமாகக் கைகூடும். நேதனூரி கிருஷ்ணமூர்த்தி விவரித்து பாடுவார். காருண்யம் என்கிற தலைப்பில் முகாரி ராக விவரணையாக வெளியாகியுள்ள இசைத்தகட்டில், ரவிக்கிரனுடனான இவரது பேட்டியில் இந்த ஸ்வரப் பிரயோகங்களை பாடிக்காட்டி ராகத்தின் அழகையும் விளக்கியுள்ளார். முசிறி சுப்ரமண்யர் முகாரியில் (எந்தனின்னே…) முழ்கி முத்தெடுத்தவர். செம்மங்குடி ஸ்ரீனிவாஸர் (க்ஷீணமை… ஃபேவரிட்) நன்கு புரிந்துவைத்திருந்தார். ராம்நாட் கிருஷ்ணன் (காரு பாரு…) இந்தராகத்தை நன்றாக பாடுவார்.

2009ஆம் வருடம் இந்த ராகத்தின் ஆலாபனையை இரண்டு இளம் வித்வான்களிடமிருந்து கேட்டு ரசித்தேன். 2011இல் கி. ரவிக்கிரனிடம் கேட்டேன் (கட்டுரையில் பின்னர் வருகிறார்). முதலில் சிக்கில் குருசரண் அகதெமி கச்சேரியில்.

குருசரணுக்கு வசீகரிக்கும் சாரீரம், களையான முகவெட்டு. இரண்டாமவதை அரங்கில் செல்ஃபோனில் அடிக்கடி இவரை க்ளிக்கிக்கொளும் ரசிகைகள் எழுதவிண்ணப்பிக்கின்றனர். ஒரு கல்லூரியின் கதை என்ற டப்பா படத்திலும் ஆர்யாவை தியேட்டரில் க்ளிக்கியது போல.

பிரதான ஸ்லாட்டிற்கு வந்துவிட்டிருந்தாலும் குருசரண் அதற்கே உரித்தான அபத்தங்களை இன்னமும் செய்யாத ஆடவர். மேடையில் ஆடாதவர். தன் ஆலாபனை வாக்கிய முடிவில் தானே ஆஹா பேஷ் என்றெல்லாம் அருதி வைப்பதில்லை. இரண்டு மூன்று உருப்பிடிகளுக்கு பிறகு சடாரென்று வசனநடையாய் இசைகச்சேரியில் லெக்-டெம் மோடிற்கு தாவுவதில்லை. அடுத்தடுத்த உருப்பிடியாக பாடிக்கொண்டே செல்கிறார்.

ஐந்து வருடம் முன் இந்திரா நகர் கும்மிருட்டு வீட்டுக் கச்சேரியில் கேட்பதற்கும் சமீபத்தில் அகதெமி பிரதான ஸ்லாட்களில் கேட்பதற்கும் உடனே புலனாவது ராக ஆலாபனையின் அபிவிருத்தி. அதேபோல், பக்கவாத்தியங்கள் பெரிய கை என்றாலும் அசராமல் தன் நிலையை தக்கவைத்துக்கொண்டு பாடும் மனோதிடம் நிறைய உள்ளது.

குருசரண் 2009 அகதெமி முகாரி

யுடியூப் விடியோ சுட்டி:

(ஒளி-ஒலித் துண்டுகள் வாசக-ரசிகர்கள் சங்கீதத்தை மேலும் அணுகுவதற்கு கோடிகாட்டுவதற்கே அளிக்கப்படுகிறது; எவ்வகை வர்த்தகத்திற்கும் வினியோகத்திற்கும் அல்ல.)

எந்தனி நே வர்நிந்துனு சபரி பாக்யமு எனத்தொடங்கும் தியாகராஜரின் கீர்த்தனை. சபரி மோக்ஷத்தை அடைகிற காட்சியை, பாக்கியத்தை வியத்து உவக்கும் கீர்த்தனை வரிகளை, முகாரி என்பதால் “சோக ரசம்” சொட்ட முகத்தை அஷ்டகோணலாக்கிப் பாடமுயல்வது ராகத்திற்கும் சாஹித்யத்திற்கும் கேடு. சிக்கில் குருசரண் அவ்வாறில்லாமல், நேர்த்தியாய் பாடியது இளைஞர்களின் சிரத்தையை உணர்த்தியது.

அன்றைய பிரதான ராகம் கல்யாணி. ஆலாபனையில் சுருதிபேதம் செய்து சுத்ததன்யாசி ராகத்தை தொட்டுக்காட்டினார் என்று கேண்டீனில் ஞாபகம். கல்யாணியில் நி மற்றும் மா ஸ்வரங்களை விடுத்து, தா வை ஸா என்று வைத்து பாடினால், “புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு” என்று சுத்ததன்யாசியாய் ஒலிக்கும். வேறு தருணத்தில் சுருதிபேதம் பற்றி விளக்குவோம்.

பியானோவுடன் (கீபோர்ட்) ஃபியூஷன் என்று படைப்பூக்கத்தை அவ்வப்போது பரிசோதனை செய்தாலும், கர்நாடக இசை கச்சேரி மேடைகளில், வகுக்கப்பட்டுள்ள நெறிவழுவாமல், நீர்க்கடிக்காமல் (லைட் வாடை அடிக்காமல்) தொடர்ந்து பாடிவருவது குருசரணின் பெரிய ப்ளஸ் என்பேன்.

அடுத்த முகாரிக்கு சொந்தக்காரர்.

(- 0 -)

22dec_review_01_pra_870670f

பிரசன்னா வெங்கட்ராமன்

மேலே பட்டியலில் குறிப்பிட்டுள்ள இளம்வித்வான்களின் சராசரிக்கும் ஒரு படி மேலே இருப்பவர். என் கண்ணெதிரே ஐஐடி மெட்ராஸில் மேல்படிப்பு முடித்தவர். சங்கீதத்தின் அருகிலேயே இருக்கவேணும் என்று நல்ல ஊதியத்துடன் வேறு இடங்களில் வந்த சில வேலைகளை தவிர்த்து, சென்னையிலேயே கிடைத்த வேலையில் இருந்து கச்சேரிகள் செய்துவருபவர். கேட்பார் பேச்சை கேட்டு “கலைச்சேவைக்காக” இன்னனும் அவ்வேலையை விடாத சமர்த்தர். அமைதியாக, மென்மையாக ஆனால் இசையை ஆராய்ந்து அணுகிப் பேசும் இளைஞர்.

கல்யாணியோ காம்போதியோ, எடுத்துக்கொண்ட ராகத்திற்கு நியாயம் செய்வது வழக்கம். வளரும் கலைஞர்களில் இவரை முகாரி ஸ்பெஷலிஸ்ட் என்பேன். பால்யத்தில் பம்பாயில் பாலாமணி அல்லது பஞ்சாபகேச ஐயர் குருகுலமாயிருந்தாலும் (நினைவிலிருந்து எழுதுகிறேன்; சரிபார்க்கமுடியவில்லை), சென்னையில் வளரும் வருடங்களில் முசிறி சுப்ரமண்யத்தின் பிரதான சிஷ்யரான, சமீபத்தில் மறைந்த டி.கே.கோவிந்தராவ்-விடம் பயின்றது காரணமாயிருக்கலாம். தற்போது சஞ்சய் சுப்ரமண்யத்திடம் பயில்கிறார்.

2008இல் சாஸ்த்ரி அரங்கில் இவர் பாடிய முகாரியை கேட்டுவிட்டு நண்பர் என்னிடம், “பலமுறை பாவம் – bhaவம் – என்றால் என்ன, அப்ஜெக்டிவா சொல்லு என்பாயே, உதாரணம் வேண்டுமானால் இவன் பாடுவதில் பாவம் இருக்கிறது, கவனித்துபார்” என்றார்.

இவரின் 2009 அகதெமி மத்யான கச்சேரியில் கேட்ட முகாரியிலிருந்து ஒலித்துண்டு:

மூன்று வருடங்களில் நான் கேட்ட ஐந்து கச்சேரிகளில் மூன்றில் முகாரி ஆலாபனை. சார்ஸுர் வெளியீடான இவரது “தியாகராஜா” ஒலித்தகட்டிலும் முகாரியே மெயின் உருப்பிடி. ஆனாலும் கச்சேரிகளில் கேட்டதே என்மனதில் நிற்கிறது. இப்படி நீர் வருகையிலெல்லாம் முகாரி பாடுகிறேனே என்றார். அடுத்த கச்சேரியிலும் அதே நேர்த்தி சிரத்தையுடன், ஆலாபனையுடன் என்னை ரசிக்கவைத்தால் ஆனந்தமே.

பிரசன்னாவிற்கு குரல் தரஸ்தாயி சஞ்சாரங்களில் திணறுவதுபோல் ஒலிக்கிறது. அதேபோல் நீண்ட கச்சேரியின் இறுதிப் பகுதிகளில் குரல் மெலிதாகி, கம்மி ஒலிக்கிறது. 2009இல் கவனித்தது, 2011-12 கச்சேரிகளிலும் தொடர்வது சிறு குறையாய் படுகிறது. இளவயதில் இவ்வகையில் ஆவதை தவிர்க்கலாம். விரைவில் பிரதான ஸ்லாட்டில் பிராகசிக்க வாழ்த்துகள்.

(- 0 -)

16theft_trichur_bro_865077f

திருச்சூர் பிரதர்ஸ் (கிருஷ்ண மோஹன், ராம்குமார் மோஹன்)

2011 டிசெம்பர் இருபதன்று நடுப்பகலில் அகதெமியில் ”பாட்ரன்” வாயில் வழியே இருட்டோரமாய் நுழைந்து இருக்கையிலமிழ்கையில், அமர்களமான மேடையில் திருச்சூர் பிரதர்ஸ் மாயம்மா என்றபடி ஆஹிரியில் நல்ல குரல் வளம். நல்ல கூட்டம்.

பொதுவாக துக்கடா ராகமாலிகா என்று நொடிகளில் வந்துபோகும் பூபாளத்தில் பிரதானமாய் ஒலிக்கும் ஆலாபனையில், பிரதர்ஸ் சில மேற்கத்திய ஒத்திசைவு (ஹார்மனி) சாத்தியங்களைப் புகுத்தினர். ஒருவர் ஆலாபனை செய்து முடிக்கும் தருவாயில், அவர் ஓங்கியோ தழைத்தோ பிடித்திருக்கும் ஸ்வரத்தின் கவுண்டர்பாயிண்ட் எனப்படும் எதிர்புள்ளியிலுள்ள ஸ்வரத்திலிருந்தோ அல்லது அதே ஸ்வரத்தின் மேல், கீழ் ஸ்தாயிகளில் தொடங்கி ஆலாபனையை தொடர்வது. பொதுவாக மெலடி பிரதானமான கர்நாடக சங்கீதத்தில் இவ்வகையில் பிரஸ்தாபம் கிடையாது. அவ்வப்போது நாகஸ்வரக் கச்சேரிகளில் தொட்டுகாட்டுவர். தில்லானா மோஹனாம்பாளில் சிக்கில் நாகஸ்வரகுழுவால் கோவிலில் வாசிக்கப்படும் ஆபேரியிலும், அடுத்து துரைவாளின் மாளிகைக்கு வெளியே மேற்கத்திய நோட்ஸ்களை வால்ட்ஸாய் வாசிக்கையிலும் எம்.பி.என். சகோதரர்கள் செய்துகாட்டியிருப்பர். கணீர் தொண்டையுடன் வளமான குரலில் திருச்சூர் பிரதர்ஸ் ஒத்திசைவு சாத்தியங்களை இன்று கச்சேரி மேடைகளில் முயல்கையில் ரசிக்கும்படியே இருக்கிறது. உற்சாகத்தில், அளவிற்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

வயலின் பரூர் பாணி. எம்.எஸ்.கோபாலகிருஷ்ணனின் தந்தை பரூர் சுந்தரம் கட்டுமானித்தது. இளம் வித்வான் கே.ஜே.திலீப் ஆலாபனையில் கோர்வையாய் கவனமுடன் ஆரோஹன அவரோஹன ஸ்வரங்களை பிரித்தும் கூட்டியும் வேகமாய் வாசித்ததில், இன்று பூபாளம் ஓரளவே தட்டுப்பட்டது. எம்.எஸ்.நர்மதாவிடம் பயில்பவர் (என்று நினைக்கிறேன், உறுதிசெய்யமுடியவில்லை), இச்சீஸனில் ஒரு ரவுண்டு வந்துள்ளார் எனத்தோன்றுகிறது. நானே இக்கச்சேரிக்கு அடுத்து பாரதீய வித்யா பவனத்தில் சைத்ரா சாயிராம்-மிற்கு வாசிக்கையிலும் (கோஸலம் உடனே வாசித்துவிட்டார்; பூர்விகல்யாணி திணறுகிறது), ஸ்வர்ண ரேத்தஸ்ஸிற்கு துணையாய் பார்த்தசாரதி ஸ்வாமி சபாவிலும் கேட்டேன் (இங்கும் சற்று பரிச்சியமில்லாத ராகவர்த்தினி வாசித்துவிட்டார்; கல்யாணி சுமார்தான்). கையில் விறுவிறுப்பு இருக்கிறது. மென்மையும், ஆலாபனை கற்பனை வளர்ச்சியும் காலத்தில் கைகூடலாம்.

கரஹரபிரியா கச்சேரி பிரதான ராகம். ராம நீ சமானமெவரு மெயின் உருப்பிடி. ஆலாபனை கட்டுமானத்திலும், உதவும் மூக்கிலும், ராம்குமார் மோஹன் செம்மங்குடியை நினைவுபடுத்துகிறார். பலுகு பலுகு என்று எதிர்பார்த்த இடத்தில் தொடங்கிய நிரவலில் நல்ல வேகம். ஆரவாரமான க்ளைமாக்ஸ் இன்னமும் கைகூடவில்லை. ஆனால் ஸ்வரங்கள் கரஹரபிரியாவாய் பிரவகித்தது. குறைப்பிலும் ஸ்தாயி வேறுபாடுகளுடன் குரல்களை பரிமாறிக்கொண்டார்கள். ஒரு யோசனை: வரும் கச்சேரிகளில் ஆலாபனையில் செய்யத்துணியும் இரட்டைக்குரல் ஹார்மனியை நிரவல் பாடுகையிலும், கடைசி ஆவர்த ஸ்வரம் பாடுகையிலும் ஒருவர் மூச்சு வாங்குகையில் அடுத்தவர் நிரப்ப முயன்று, கேட்பவர்களுக்கு பிரமிபூட்டலாம்.

பிரதர்ஸ் அமர்க்களமாய் பலுகு பலுகு விற்கு ஒரு பொருத்தம் வைத்து ஸ்வரங்களை முடிக்க, மிருதங்கம் தனியில் விறுவிறுத்து, அதே பொருத்தத்தை வைத்து முடித்தது பிரமாதம். வளரும் இளம்கலைஞரான கர்ரா ஸ்ரீநிவாஸ ராவ் ஆந்திரா மிருதங்கம். வாசிப்பும், திம்திம்மெனும் மிருதுவான மிருதங்க நாதமும், கமலாகர் ராவ் பாணியில்.

சமீபத்தில் நடந்துமுடிந்த ஐஐடி சாரங்-கில் இசைப்போட்டிகளுக்கு நடுவர்களாக திருச்சூர் பிரதர்ஸ் அழைக்கப்பட்டிருந்தனர் (சென்ற வருடம் நிஷா ராஜகோபால் என்று ஞாபகம்). போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பாடி முடித்ததும், அவர்களின் குறைகளை உறுத்தாமல் விளக்கி, இப்படிப் பாடிப்பாருங்களேன் என்று பாடிக்காட்டி தட்டிக்கொடுத்த பிரதர்ஸின் பாங்கு, பேராசிரிய இசை நண்பர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. துறையிலும் பயிலும் சக இளைஞர்களையும் மரியாதையுடன் அணுகும் பிரதர்ஸ் கூடியவிரைவில் தங்கள் உழைப்பிற்கேற்ற பிரதான ஸ்லாட்களில் பிரசித்திபெருவார்களாக.

(- 0 -)

lat_music_season_20_861050f
பரத் சுந்தர்

அபஸ்வரம் ராம்ஜி நடத்திவரும் “இசை மழலை” கண்டெடுத்த பாடகர். ஜெயா டி.வியின் 2010-11-ற்கான “கர்நாடிக் ஐடல்” பரிசு பெற்று “க்ளிவ்லாண்ட் தியாகராஜர் ஆராதனை” சென்று பாடிவந்தவர். (வருடாவருடம் திருவையாறு போகிறாரா என்பதை யாமறியோம்.) மைசூர் ஜி.ஸ்ரீகாந்த் மற்றும் லீலாவதி கோபாலகிருஷ்ணன் (எழுபதுகளில் ரேடியோவில் நன்றாகப் பாடியவர்) போன்றோரிடம் பயின்று, சமீப வருடங்களில் பி.எஸ்.நாராயணசுவாமியிடம் சிஷ்யராக உள்ளார். (இதே குருவின் மற்றொரு இன்றைய பிரபலம் அபிஷேக் ரகுராம்.) அடிப்படையில் சென்னை. நங்கநல்லூரில் இருந்தவர், கச்சேரி வாய்ப்புகள் பெருகியதும் தற்போது கே.கே.நகர் போல, மெயின் சிட்டிக்குள் இடம்பெயர்ந்துள்ளார் என்றும், கே.வி.நாராயணஸ்வாமி இசைக்கு ரசிகர் என்றும் அறிந்தேன்.

வித்யாபவன் சிறிய அரங்கில் தொடங்கி, ஐந்து வருடமாய் கேட்டுவருவதில் வளர்ச்சி நன்றாகப் புலப்படுகிறது. ராகம் ஆலாபனை அமர்க்களமாய் பாடுகிறார். தாளமும் கெட்டி. சாஹித்யம் ஸ்பஷ்டமாய் வருவதற்கு வார்த்தைகளை கவனித்து பயில்கிறார் என்று தெரிகிறது. “தாச்சுகோவலனா” என்று சரியாக உச்சரித்து (பெரிய தா போடாமல், தாஸு என்றெல்லாம் உஸ்தாதாக்காமல்) பாடுகிறார். உழைப்பிற்கு ஷொட்டு.

ஆனால் 2011 அகதெமி கச்சேரியிலும் தோடியில் ராகத்தில் தாச்சுகோவலனா கீர்த்தனையில் நிரவல் ஸ்வரங்கள் அவ்வளவு சோபிக்கவில்லை. நிரவல் (மானசீக) குரு என்று யாரையாவது வைத்திருந்தால், உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். அகதெமி கச்சேரியில் ஸ்வரங்களும் சோபிக்காமல் போனது துரதிருஷ்டம். அடுத்தமுறை நன்குவரும்.

உடன் மிருதங்கம் வாசித்த ஸ்ரீவத்ஸன் ஐஐடி மேற்படிப்பு மாணவர். அவகாச நெருக்கடிக்கேற்ப மிஸ்ர ஜம்பை தாளத்தில் இவர் வாசித்த தனி நறுக்கென்றிருந்தது. வேறு கச்சேரியில் ராமகிருஷ்ணன் மூர்த்தியுடன் கேட்டபோதிலும் வாசிப்பில் மனத்திடம் நிரம்பியிருக்கிறது.

(- 0 -)

08_Swarna Rethas_Vocal_Academy_vgஸ்வர்ண ரேத்தஸ் சந்தீப் நாராயன் இருவரும் சஞ்சய் சுப்ரமண்யத்திடம் பயில்பவர்கள். ஸ்வர்ண ரேத்தஸ் படித்து சென்னையிலேயே வேலையிலிருப்பவர். சந்தீப் அமேரிக்க-இந்தியர். முன்னர் ஜில்பாவுடன் இருந்தார். இவ்வருடம் வேறு வேடம். இருவருமே, ஏனைய சஞ்சய் சிஷ்யர்களைப்போல, தேவையான ராகத்தை வெளிக்காட்டும் ரூபஸ்வரங்களை திறம்பட பாடிவிடுகின்றனர்.

சஞ்சய் சிஷ்யர்களிலேயே இனிமையான குரல் உடையவர் ஸ்வர்ண ரேத்தஸ் எனலாம். சந்தீப் சற்று ஃபிளாஷி; கைதட்டல் வாங்கிவிடுவார். ரேத்தஸ் சற்று அடக்கி வாசிப்பவர். சங்கீதம் இதமாய், பாவத்துடன், வெளிப்படும். டிசெம்பர் 23, 2011 பார்த்தசாரதி ஸ்வாமி (வித்யபாரதி) சபாவில் வஸந்தா ஆலாபனையில் குரலின் வசீகரம் வெளிப்பட்டது. கலங்காதே மனமே என்று ராகவர்த்தினி ராகத்தில் கோட்டீஸ்வரரின் கீர்த்தனையை நேர்த்தியாக பாடினார். ஆனால் அடுத்து வந்த கல்யாணி ஆலாபனை அன்று சுமார்தான் (கீர்த்தனை நிஜதாஸவரத). வஸந்தாவில் ஸ்வரங்களை ஒதுக்கி விவகாரம் செய்து முடித்தது நன்று. தயங்கித் தயங்கி கற்பனையை நிரவலிலும், ஸ்வரங்களிலும் வெளிப்படுத்துவது, சற்றே மனோதிடம் மட்டுபடுகிறதோ என்று தோன்றுகிறது. ஆனால் ஒரிஜினல் குரலுடனான பாடகர். இவரைக் கேட்கையில், குரு சஞ்சய் ஒலிக்கமாட்டார்.

18dec_review_01_san_866983eசந்தீப்பிடம் அவ்வப்போது சஞ்சய் ஒலிக்கிறார். செம்மங்குடி சிஷ்யர்களிடம் சொல்வாராம்; என்னைக் கேட்டுண்டு பாடு (சொன்னதை பாடு), பாத்துண்டு பாடாதே (என்னைப்போலவே காப்பி அடிக்காதே). தனித்தன்மையான குரலை அவர்தான் அடையாளம் காணவேண்டும். இவர் பிரும்ம கான சபாவில் கீதா வாத்திய என்று தியாகராஜரின் நாடகபிரியா ராகத்திலமைந்த கீர்த்தனம் பாடுகையில், புதிதாகச் செய்யமுயல்வது வெளிப்பட்டது. அடுத்து பாஹுமீர கீர்த்தனைக்கான சங்கராபரணத்தில் ஆலாபனையும் நன்றாகவே செய்தார். ஆனால், வேறு இடத்தில் ஸ்ரீராஜகோபாலம் கீர்த்தனைக்கான சாவேரி ஆலாபனையில் ஆங்காங்கே லைட் வாடையுடனான ஆலாப் ஆகி, ஐம்பதுகளில் பங்கஜ் மல்லிக்கின் “யெ கௌன் ஆஜ் ஆயா ஸாவேரே நினைவூட்டியது” என்றார் நண்பர்.

பொதுவில் சஞ்சய் சிஷ்யர்கள் விவாதி ராகங்களை எடுத்தாளத் தயங்குவதில்லை. கூடவே பிராச்சீனமாய் மெயின் உருப்பிடிகள் பாடிவிடுகின்றனர். ஆகையால், அன்றைய வெற்றி தோல்வி சகஜம். பரிசோதனைகள் தொடரட்டும் என்பேன்.

ஜி. ரவிக்கிரன், ரித்விக் ராஜா, விக்னேஷ் ஈஸ்வர் டி. எம். கிருஷ்ணாவின் இன்றைய சிஷ்யர்கள்.

இம்மூவருள் ஜி. ரவிக்கிரன், மூத்த வித்வான் ஆர். கே. ஸ்ரீகண்டனிடமும் கற்ற, கிருஷ்ணாவின் சீனியர் சிஷ்யர். நாரத கான சபா மினி அரங்கில் பவனு(த்)த என்று மோஹனத்தில் கலாட்டா ஸ்வரங்களுடன் தொடங்கி, தப்பகனே வஸ்துனா என்று அரிதான சுத்த பங்களா ராகக் கிருதியை கடக்கும் முன், “நுக்கலகை தியானிச்சிதை…” என்று சற்று நிறுத்தினார்; அட, சுத்த பங்களாவில் நிரவலா என்று நிமிர்கையில், கடந்து சென்றுவிட்டார். அடுத்து ஹரிஹரபுத்ரம் சாஸ்தா என்று வஸந்தாவிலும், முகாரி ஆலாபனை நிதானமாக பாடுகையிலும் ஸ்ரீகண்டனிடம் தேறிய அனுபவம் வெளிப்படுகிறது. இதனால், என் கருத்தில், மற்ற இருவரை விட முன்னனியில் இருக்கிறார்.

ரித்விக் ராஜாவிற்கு இச்சீஸனில் அநேக கச்சேரிகள் (பதினேழு என்று சொன்னதாக ஞாபகம்). சற்று “பேஸ்” குரல். தக்கு சுருதி அல்லது கட்டை குரல் எனலாம். கீழ் ஸ்தாயி ஸ்வரங்கள் நன்றாக ஒலிக்கும். தாளத்திலும் கெட்டி. பிருக்கா அவ்வளவாய் பேசுவதில்லை (குறையில்லை; ஜஸ்ட் அவதானிப்பு). மத்யமகாலத்தில் செம்மங்குடி பாணியில் பிருக்காக்கள் வருகிறது. தோடி, வராளி என்று ராக ஆலாபனை நன்றாக வருகிறது. ராகம் தானம் பல்லவியும் நன்றாக நிர்வகித்தார்.

விக்னேஷ் ஈஸ்வருக்கு பிருக்கா பேசுகிறது. அகதெமியில் மீனலோசனா என்று தன்யாசியிலும், ஏதாவுனாரா என்று கல்யாணியிலும் மேல்காலங்களிலும் பிருக்காக்கள் பறக்கிறது. ஜி.என்.பி., மணக்கால் ரங்கராஜன் கச்சேரி ஞாபகங்கள் வந்துபோகும். ஆனாலும் அதையே செய்துகொண்டிராமல், கட்டுப்பாடோடு பாடுவது சிறப்பு. மும்பாய்கர்-ரான இவர், சங்கீத நாட்டத்தில் இன்று சென்னைக்கர். விறுவிறு ஓட்டத்தில் சென்னை கார்.

மூவருக்கும் பொது, நிரவல் நன்றாக வருகிறது. குருவின் பலம் வாய்த்திருக்கிறது. ஆனால் நிரவல் முடிகையில் தேவையான பஞ்ச் இன்னும் ரித்விக்கிடம் கைகூடவில்லை. ஜி. ரவிக்கிரனிடத்திலும் இதை கவனித்தேன். பழகப் பழக கலை. பொறுத்திருப்போம்.

(- 0 -)

சில பொதுக்கருத்துகளை எழுதி முடிப்போம்.

பட்டியலிலுள்ள அநேக இளைஞர்கள், தற்போதைய குரு எவர் என்ற பேதமில்லாமல், நிரவல் செய்கையில் இன்றைக்கு பிரபலமான டி.எம்.கிருஷ்ணா பாணியையே கடைபிடிக்கிறார்களோ எனத் தோன்றுகிறது. தவறொன்றுமில்லை. அடுத்தடுத்து சீஸனில் கேட்கையில், அனைவரும் தொடங்கியதுமே நிரவலில் இதற்குப் பிறகு இது, இறுதியில் ஒரு க்ளைமாக்ஸ் முயற்சி, என்று பிடிபட்டுவிடுகிறார்கள். வித்தியாசப்படுத்திக்கொள்ள, வசீகரமான மாற்றுப் பாதைக்கு ஐம்பது அறுபதுகளில் எம். எஸ். சுப்புலக்ஷ்மி கச்சேரிகளின் ஒலிக்கோப்புகளை கேட்டுப்பழகலாம்.

அதேபோல, பல இளைஞர்களை அடுத்தடுத்து கேட்கையில், மீண்டும் தற்போதைய குரு எவர் என்ற பேதமில்லாமல், அனைவருமே ஒருவகையில் செம்மங்குடி ஸ்ரீனிவாஸாரிடம் கற்றவர்களோ என்று பிரமை ஏற்படாமலில்லை.

கவனித்தவரையில், இளம் பாடகர்கள் ராகம் தானம் பல்லவி அங்கத்தை அவகாசமிருக்கையில் கையாளத் தயங்குவதில்லை. சீஸன் தவிர்த்த வேறு காலங்களில் விஸ்தாரமான அவகாசத்துடன் செய்துவரும் கச்சேரிகளில் தொடர்ந்து ரா.தா.ப. வழக்கத்தை கேட்டுரசிக்க பழக்குவார்கள் என்றே நினைக்கிறேன்.

பெருகிவரும் சபாக்களினாலும், சங்கீத சீஸன் என்பதே மார்கழி சொற்பநாட்களுக்குள் என்பதிலிருந்து விரிந்து நவம்பரிலேயே தொடங்கி, கிட்டத்தட்ட ஜனவரி முடிவு வரை செல்கிறதாலும், அநேக கச்சேரி வாய்ப்புகள் நிரம்பிவழிவதுபோல்தான் தோன்றுகிறது. ஆனாலும், கலைஞர்களிடம் விசாரித்தால் அநேகருக்கு தக்க சன்மானம் கிடைப்பதில்லை என்று புரிகிறது. சபாக்கள் கச்சேரிகளை குறைத்து, ஊதியத்தை உயர்த்த வேண்டும். இன்றைய நிலையில் கர்நாடக சங்கீதத்தை மட்டுமே நம்பி கௌரவமான வருமானத்துடன் பிழைக்க முடியாது. அட்லீஸ்ட், மிகப் பிரபலமாகும்வரை. அதுவரையிலாவது, இன்றைய இளம் வித்வான்கள் அநேகர் சைடில், படித்து, ஒரளவு நல்ல உத்தியோகம் வைத்திருப்பது சரியே.

அதேபோல், இளம் வித்வானாய் இன்றைக்கு சீஸன் சர்க்கியூட்டில் உள்ளே வருவதும் கடினமே. பாரம்பர்யம்மிக்க சில சபாக்களே திறமையை மட்டுமே வைத்து அழைப்புவிடுக்கின்றனர். பல சபாக்கள் இங்ஙனம் செயல்படுவதில்லை. இளம்கலைஞர்கள் மேலெழும்ப ஆரபி, தேவகாந்தாரி என்று மட்டும் சஞ்சரிக்காமல், இவ்வகை நுண்ணரசியல், நரஸ்துதி, முகஸ்துதி என்று நிஜத்திலும், ஃபேஸ்புக், டுவிட்டர் என்று அநேகர் “லைக்” செய்ய இணையத்திலும் சஞ்சாரம் செய்யவேண்டிய நிர்பந்தம் உள்ளது. போதாததற்கு, பொதுவில் வைக்கமுடியாத சில தேவைகளும் உள்ளது. கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள வியாஸர்பாடி கோதண்டராமனை இவ்விடத்தில் மீண்டும் உங்களிடம் குறிப்பிடுகிறேன்.

வேறு சில குட்டி இடர்களும் உண்டு. மூன்று வருடம் முன்னால் யாவும் அமைந்தால் இவர் நிச்சயம் ஸ்டார் என்றதற்கு, பிரபலங்களை மட்டுமே கேட்கும் நண்பர் என்னை கேலிசெய்தார். அந்நண்பரே இவ்வருடம் (2011) வந்து “பிரசன்னா பின்ரான்”, “சாகேதராமன் கலக்கரான்” என்கிறார். இந்நண்பரைப் போல பல ரசிகர்களுக்கு தனக்கு உகந்த மாணிக்கங்களை தானே தேடிக் கண்டெடுக்க பொறுமைகிடையாது. பேப்பரில் பிரபலப்படுத்தியதும், ஆஹா என்பார்கள். பேப்பரில் கிழித்தால், இவர்களும் கலைஞர்களை அவர்களின் பலவருட உழைப்போடு சேர்த்து கடாசிவிடும் சுயசிந்தனைச் செம்மல்கள். ஏதோ அவ்வப்போது கேட்டுரசித்தால் சரி.

நான் நம்பிகைவாதி. என் ரத்தமே பி பாஸிடிவ். இவ்வகை மேம்போக்கு ரசிகர்களையும் அரங்கில்கொண்டு, அடுத்த பத்து வருடங்களாவது அவ்வப்போது பெய்யும் மார்கழி மழையிலும், கட்டுரையிலிட்டுள்ள இவ்விளைஞர்கள் இசையிலும், சங்கீதபருவகாலம் நிச்சயம் நனையப்போகிறது.

ஆனந்தாம்ருதகர்ஷினி, அம்ருதவர்ஷினி…வர்ஷய, வர்ஷய, வர்ஷய.

*****
(கட்டுரையின் முன்வடிவை வாசித்து செம்மையாக்கிய புன்யாத்மாக்களுக்கு சொற்பேச்சைக் கேட்கும் பேரக் குழந்தைகள் அமைய மனஸிஜ கோடி கோடி லாவன்யாய ஸ்ரீ சுப்ரமண்யரை, காம்போதியில் நம்ஸ்கரித்து அடியேன் சரண்யே)

கட்டுரையிலுள்ள படங்களுக்கு நன்றி Kutcheris.com | TheHindu.com

[சொல்வனம் இணையைதழில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் மீள்பிரசுரம்]