2011-12 சென்னை மார்கழி இசைவிழா பல்லவிகள்

Standard

ராகம் தானம் பல்லவி என்றொரு கட்டுரைத்தொடரை கடந்த இரு வருடங்களில் அவகாசமிருக்கையில் சொல்வனத்தில் எழுதிவந்தேன். அதை முடித்துவிடவேண்டாம் என்ற பணிவான மிரட்டலுக்கிணங்க “தொடரலாம்” அடிக்குறிப்பிட்டு பூடகமாய் கிடப்பிலிட்டிருந்தேன். தொடருவதற்கு 2011-12 சங்கீதகாலம் “இதி சமயமுரா…” இணைய குல பாலகா என்றழைக்கிறது.

இணையத்தின் “சுட்டி” வசதியில் முன்கதைச்சுருக்கமென மெகாசீரியல் ஓட்டுவது எடுபடாதெனினும் வாசகர் சிலர் பிரிண்ட்டிட்டு படிப்பதால் இக்கட்டுரையின் உள்ளடக்கம் கருதி, ஒரு ரா.தா.ப. முன்னிசைச் சுருக்கம்.

கர்நாடக சங்கீத கச்சேரியின் முக்கியமான அங்கம் ராகம் தானம் பல்லவி. எடுத்துக்கொண்ட ராகத்தினை விஸ்தாரமாய் பாடகர், வயலின் என ஆலாபனை செய்து, தொடர்ந்து “ஆனந்தம்” என்ற சொல்லினை பிரித்தெழுதி ‘ஆ’கார சப்தமாய் தானம் எனும் பாடும்முறையில் அந்த ராகத்தை சீராட்டி ஆனந்தித்து, பிறகு ஒரிரு வரிகளிலான பல்லவியை அவ்வப்போது கடுமையான அவகாச இடவெளிகளில் அமைக்கப்பட்டிருக்கும் தாளத்திற்கேற்ப பாடுவர். இடையே பல்லவி வரிகளில் ராகத்தை சங்கீதமாய் இட்டு நிரப்பும் நிரவல், ராக ஸ்வரங்களில் சங்கேதமாய் சங்கீதிக்கும் ஸ்வரகல்பனை, தாள வேகத்தையும் பாடும் வேகத்தையும் ஒன்றிற்கொன்று மிகைப்படுத்தியோ மட்டுப்படுத்தியோ பல்லவியை அனுலோமம் பிரதிலோமம் என்று பந்தாடுவது, சதுஸ்ர நடையில் திஸ்ரம் செய்வது, ஷட்காலம், த்ரிகாலம் பாடுவது, பல ராகங்களில் அதே பல்லவியை பாடி ராகமாலிகையாக பரவசப்படுத்துவது, இடையே பக்கவாத்தியங்களுக்கு ஒரு மினி தனி ஆவர்தனம் என ரா.தா.ப. அங்கத்தில் பல சங்கதிகள் உண்டு. கச்சேரியில் சம்பிரதாயமாகச் செய்யவேண்டுமெனின், ஓரிரு மணிநேரம் பிடிக்கும்.

இக்கட்டுரையில் வரும் கர்நாடக சங்கீதம் சார்ந்த சங்கேத சொற்கள் சிலவற்றிற்கு ராகம் தானம் பல்லவி கட்டுரைத்தொடரின் முன் பாகங்களில் உதாரண ஒலி/ஒளி/சித்திரங்களுடன் விளக்கமளித்திருக்கிறேன். புரட்டிப்பார்த்துக்கொண்டு இக்கட்டுரையை படியுங்கள். சந்தேகங்களை மின்னஞ்சலிட்டால் அடுத்த பகுதி எழுதுகையில் எனக்குத் தெரிந்தவரை விளக்குகிறேன்.

thumbசமீபத்திய 2011-12 சென்னை இசைவிழாவில் சுமார் இருபது சபாக்களில் தலா பத்து நாளுக்காவது, தினம் நான்கு கச்சேரிகள் வீதம், கிட்டத்தட்ட எண்ணூறு கச்சேரிகள் நடந்தேறியிருக்கும். அதில் தமிழ்ப்பாரம்பர்ய கச்சேரி, அடைமழை, ஆராய்ச்சி மாநாடு என்று பல கவனக்கலைப்புகளைக் கடந்து அடியேன் விட்டகுறை தொட்டகுறையாய் கேட்டது முப்பது நாற்பதே. பாடகர்களாகப் பார்த்து நல்லவிதமாகப் பாடி, என்னை அவர்கள் கச்சேரியில் பல்லவிவரை இருக்கச்சொன்னது அவ்வெண்ணிக்கையிலும் குறைவே. மொத்ததில், நான் பல்லவி அங்கத்தோடு கேட்ட கச்சேரிகள் ஐந்து சதவிகிதத்திற்கும் கம்மி. இந்தத் தக்குணுண்டு கேள்வியறிவை வைத்தே 2011-12 மார்கழி சங்கீதபருவகாலத்தில் ராகம் தானம் பல்லவி பற்றி சற்றே அலசிடலாம் என்றிருக்கிறேன்.

மேலே பட்டவர்தனமான தகவல் முழுமையின்மையால், இது விமர்சனக் கட்டுரையாகாது. ஒரு பானை சோற்றுக்கு… என்பது இங்கே பொருந்தலாம். ஆனால் அது அன்றைய சமையலுக்கு, 2011-12 மார்கழி சீசனின் கச்சேரிகளுக்கு மட்டுமான முடிவு.

அதேபோல், இது சங்கீத அடிப்படைகள் அனைத்தையும் விளக்கும் அறிமுகக் கட்டுரையுமன்று. அறிமுகநிலையில் அணுகும் வாசகர்களின் ஆர்வத்தை வெறுப்பேற்றி குறைத்துவிடாமல், ஆங்காங்கே சில அடிப்படைகளை விளக்கியிருக்கிறேன்.

எனவே இக்கட்டுரை விமர்சனத்திற்கும் அறிமுகத்திற்குமாய் ஊசலாடும் அனுபவப் பரவசமே. படித்துவிட்டு கர்நாடக இசையின் பாலபாடத்தினோர், கரைகண்டோர் இருவரும் “இப்படி எழுதுவது வேஸ்ட்” என்று என்னை மிருதங்கமாய் மொத்தலாம். ஸொகசுகா மிருதங்க தாளமு.

போதும் பூர்வ பீடிகை. இனி பல்லவி கச்சேரி.

தங்களது அவசர கார்யங்கள் இரண்டிற்கிடையே சபாக்களில் ஒதுங்குகையில், grt stf da என்று ஏகத்திற்கு வவ்வலின்றி மெச்சிக்கொள்ளும் ரசிகர்களுக்காகவும் கச்சேரிகளில் பல்லவியை நுழைத்துப் பாடுவதற்காகவே மார்கழி இசைவிழா பாடகர்களுக்கு வந்தனம். ஆனாலும் பொதுவில் காலத்திற்கேற்ப ரா.தா.ப. அவகாசம் இன்றைய கச்சேரிகளில் கணிசமாகக் குறைந்துவிட்டது. அரைமணி பாடினாலே ஆனந்தம். பல்லவிக்கு பின்னரே துக்கடா என்று நினைத்திருக்கையில், துக்கடாவிற்கான அவகாசத்திலேயே, “பத்து நிமிஷம் இருக்கு போலருக்கே, ஒரு பல்லவி பாடிடட்டா” என்று அகதெமியில் கேட்டுகுமளவிற்காகிவிட்டது. விஸ்தரித்து பாட “நான்கு மணிநேர பிரத்யேக கச்சேரியாக்கும்” என்று முத்ரா பாஸ்கர் போல விளம்பரப்படுத்தவேண்டியுள்ளது.

கச்சேரி அரங்கத்தின் கல்யாண குணங்களைப் பற்றி தனிக்கட்டுரை வரையலாம். நம் கட்டுரைக்கேற்ப நான் தேர்ந்தெடுத்தது இரண்டு சபைகள். மியூசிக் அகதெமி அல்லது “சங்கீத வித்வத் சபை” யில் இசைவிழாவில் நியதியாய் அனைத்து கலைஞர்களும் ரா.தா.ப. செய்வர். அச்சபையே சித்திரசபை. முடிந்தவரையில் அங்குதான் நமக்கு டேரா. விட்டால் இடையேயிருக்கும் சில பல சபாக்களை மரியாதைக்கு டச்சி-விட்டு, ராக சுதா அரங்கில் தஞ்சம்.

கடலைவிற்பவனின் இலுப்பச்சட்டி டங்-நங்-ஒலிகளுடன், ஓரளவு அமைதியுடன், சிறிதளவு கொசுக்கடியுடன், இன்றைக்கும் ஜமுக்காளத்தில் உட்கார்ந்து வித்வானுடன் அன்யோன்யமாய் கச்சேரி கேட்கமுடிவது மைலை தியாகராஜ வித்வத் சமாஜம். ஏனென்றால் அரங்கம் சிறியது. அடுத்ததாய் அவ்வகையில் ராகா சுதா அரங்கம். பாரம்பர்யம் இலவசமாய் மலர்ந்திருக்கும்.

பிரதானமாய் இரண்டு அரங்கத்தில் மூன்று நாள்களில் அனுபவித்தவைகளிலிருந்து ராகம், தானம், பல்லவி என்று அங்கத்திற்கு ஒன்றாக வகையிட்டு ஒலித்த பல்லவிகளை அலசுவோம்.

—oooOOOooo—

முதலில் ராகம்.

எந்த ராகத்திலும் பல்லவி பாடலாம். என் தாத்தா இன்றைய என்வயதிலிருக்கையில், மதுரை மணி ஊரில் எங்கள் வீட்டில் அடை சாப்பிடும் காலத்தில், பல்லவிகளுக்கான ராகம் ஒருவகை. ஒன்று சம்பூர்ண மேளமாய் அனைத்து ஸ்வரங்களுடன் இருக்கும். சங்கராபரண கல்யாணி தோடி என்றோ கரஹரபிரியா, தர்மவதி, ஹேமவதி என்றோ. இல்லை பிராச்சீன ராகமாய் இருக்கும். மோஹனம், சாவேரி, பைரவி என்று. ஜகன்மோகினி போன்ற விதிவிலக்கு உண்டு. இப்படி விவாதியற்ற, சம்பூர்ண சௌகர்யமாய் எடுத்துக்கொண்டால் ஆலாபனை, தானம், பல்லவி விஸ்தாரணம் என்று அமைக்கையில், ராக தனித்தன்மை கடந்த பொதுக் கட்டுமானங்களை உபயோகிக்கமுடியும். ஒரு வகை ஸ்வரக் கோர்வைகளை, தீர்மானங்களை பல ராகங்களுக்கும் உபயோகிப்பது போல.

ஆனால் இன்று ரா.தா.ப-வில் நாட்டை, கௌளை, கோஸலம் முதல் சலநாட்டை, ரீதிகௌளை, சுவர்னாங்கி வரை எந்த ராகமும் எடுத்தாளப்படுகிறது. ஒருவிதத்தில் நிறைவே என்றாலும் இதில் சில சங்கடங்களும் உள்ளன.

சங்கராபரணம் போன்ற பல மேளகர்த்தா ராகங்களுக்கு பல கீர்த்தனைகள் வழியே இலக்கணங்களும் இலட்சியங்களும் வழிவகுக்கப்பட்டுள்ளன. திறமையுடன் கற்றுணர்ந்து விஸ்தாரமாய்ப் பாடமுடியும். ஆனால் பலமுறை கேட்டு ரசிகர்களுக்குப் பரிச்சியமானது என்பதால் “ஆஹா சபாஷ்” வாங்க மிகுந்த படைப்பூகம் வேண்டும். எதையாவது வித்தியாசமாய், ரசிக்கும்படி செய்வதற்கு, இல்லை அட்லீஸ்ட் திறம்பட முன்னரே பல கீர்த்தனைகளில் ஒளிந்து விரவியிருக்கும் அனைத்து பிடிகளையும் மெலடிகளையும் வெளிக்கொணர்ந்து ஒருக்கிணைத்து கனமாக பாடுவதற்கு, நிறைய அப்யாஸம், உழைப்பு, மற்றும் கற்பனை வேண்டும்.

சங்கராபரணம், கல்யாணி, தோடி, போன்றவைகளில் கச்சேரிக்கு கச்சேரி இனி புதுமையாக ஏதாவது செய்வது கடினம். முனைந்தால் முத்துப்பரல்கள் என்றாலும் மனோதர்ம மாணிக்கங்கள் சில நாட்களிலேயே சிதறும். மடியாக, பழசாகவே பாடினாலும், இந்த ராகங்கள் அடிக்கடி பாடப்படுவதால் சற்று அலுப்பாகிவிடும்.

ஆனால் அறிமுகமாகாத ராகம் என்றால் விஷயம் வேறு. அதுவும் விவாதி மேளம், இல்லை வரமு சுமனேஸரஞ்சனி என்று சட்டென ரூபம் பிடிபதாத ஓரிரு கீர்த்தனைகள் மட்டுமிருக்கும் ராகமென்றால் இன்னும் சொஸ்த்தம். ஸ்வரப்பிரதானமாய் ஆரோகண அவரோகணங்களில் ஏறி இறங்கி அந்தர் பல்ட்டியடித்து “ஸ்தம்பான் அரோஹதா நிபபாதபூமௌ” (சீதையை கண்ட அனுமாரின் ரியாக்‌ஷன்) என எந்த ஸ்வரத்திலிருந்து எங்குவேண்டுமானாலும் குதித்தேறியிறங்கி ஒப்பேற்றி முடிக்கலாம்.

இவ்வகை ராகங்களுக்கு எந்த ஸ்வரங்களுக்கு எவ்வளவு கமகம் போன்ற லக்‌ஷணங்கள் இல்லாமலில்லை. இருப்பது புத்தகங்களில். இல்லை இயற்றபட்டிருக்கும், இன்றைய இசை ஆர்வலர்களிடையே பரிச்சியமாகாத, ஓரிரு கீர்த்தனைகளினுள்ளே உறைந்து கிடக்கும். இலக்கணப்படியே பாடியிருந்தாலும், ராகத்தின் ஸ்வரூபங்களும், மலர்ச்சிகளும், சாத்தியங்களும் கேட்கும் ரசிகர்களுக்கு நன்கு புலப்பட்டிருந்தால்தானே, சரியாக அமைந்ததா, பாடகர் எடுத்துக்கொண்ட ராகத்திற்கு நியாயம் செய்தாரா என்றெல்லாம் ஆலோசிக்கமுடியும்.

இல்லையேல், சற்று அரிதான ராகங்களில் பல்லவி பாடுகையில் பொத்தாம் பொதுவாய் ரசனை மதிப்பீட்டில் மட்டுமே, “கேட்க நன்றாக இருக்கிறது” என்பதோடு விடவேண்டியதே. பாடகரை கறாராக விமர்சிக்கமுடியாது. “ஒன்னும் புரியல” என்று வேண்டுமானால் விமர்சிக்கலாம். பாடகரும், உனக்குதான் இந்த ராகமே தெரியலை, புரியலை என்று பதில் அபிஷேகம் செய்யலாம்.

இந்நிலையைவிட மோசமாய், மொத்தமாக புரியாத ரசிகனுக்கு, வியர்த்து விறுவிறுக்க குதித்து பாடுகிறாரே, நன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுவது, இன்னமும் மோசம். கோரஸுடன் சேர்ந்து குண்ஸாய் கை வேறு தட்டுவார்.

பழகாத ராகத்தில் பாடக்கூடாது என்று சொல்லவில்லை. அதை மேடையில் நேரிடையாக ரா.தா.ப-விற்கு எடுத்துக்கொண்டால் சந்திக்க வேண்டிய சவால்களையே விளக்குகிறேன்.

அதேசமயம் சவால் என்பதாலேயே சில சலுகைகளும் வித்வான்களுக்கு கிடைத்துவிடும். புரியாத நடையில் புழங்காத வட்டார வழக்குகளைப் போட்டு எழுதிவிட்டு, அப்படிச் செய்ததாலேயே இது இலக்கியமாக்கும் என்று விற்க முயல்வதுபோல.

கற்பனை வறட்சியை சில சமயம் வேண்டுமென்றே இவ்வகையில் ஒளிக்கும் தொழில் ரகசிய பாவ்லா இங்கிருப்பவருக்கு தெரியாமலில்லை. (லலிதா ராம் துருவ நட்சத்திரமாய் நிறுத்தும்) பழநி சுப்பிரமணிய பிள்ளை வழியில் இன்று பிரதானமாய் முழங்கும் மிருதங்க வித்வான், நாரதகானசபா ஞானாம்பிகாவில் இதைப்பற்றி வாயிலிருந்து பொங்கல் தெறிக்க சா(ட்)டினார்:

“இங்கருக்கிற பைரவி சாவேரியலாம் எடுத்துண்டா சாயம் வெளுத்துரும். ஆலாபனைலயே கற்பனை ஓடலன்னு அஞ்சுநிமிஷத்துல அம்பேலாயிடும். அதான் ஹிந்துஸ்தானி சாயலாக்கும்னு பிந்துமாலினி ஹேமமாலினின்னு என்னத்தையாவது பல்லவிக்கு எடுத்துண்டு ஒப்பேத்தறுதுகள். எனக்கன்னவோய், இன்னொரு தரம் ஆதியில் தனி வாசிச்சிட்டு வரும்படிய வாங்கிண்டு கிளம்பறேன்.”

எதற்கு இவ்வளவு தூரம் முன்கதையை நீட்டி முழக்கியுள்ளேன் என்றால், இப்படி ஒரு பின்புலம் அடுத்து வைக்கப்போகும் சுருக்கமான விமர்சனத்திற்கு தேவை.

ts

23/12/2011 பிரதான கச்சேரியாக அகதெமியில் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பல்லவிக்காக எடுத்துக்கொண்ட ராகம் சுவர்நாங்கி, 47 ஆவது மேளராகம்.

தீக்ஷதர் சரஸ சௌவ்வீர என்று ஒரு கீர்த்தனையும், எழுபத்தியிரண்டு மேளராகங்களிலும் கீர்த்தனை இருக்கவேண்டும் என்பதால் கோட்டீஸ்வர ஐயர் முயன்று அமைத்துள்ள ஒரு கீர்த்தனையும், பாலமுரளிகிருஷ்ணாவின் ஒரு கீர்த்தனையும் சுவர்நாங்கி ராகத்தில் உள்ளது. தியாகையரும், சியாமா சாஸ்த்ரியும் சுவர்நாங்கியில் அமைத்துள்ளனரா என்பது கேள்விக்குறியது.

எனக்கு ராகங்களில் இவ்வகை பரிசோதனைகள் பிடிக்கும். ஆனாலும் சுவர்னாங்கியின் ஸ்வர இடைவெளிகளே இடக்காய், சுகிர்தமான வாக்கியமாக ஒரு மெலடியை ஏற்படுத்த முடியாததாய் அமைந்திருந்திருப்பதாலோ, அல்லது அன்று ஸ்ரீனிவாஸ் கையாண்ட முறையினாலோ, ஒரு பூரணமற்ற தன்மையே மிஞ்சியது. ஆலாபனையில் அவ்வப்போது கல்யாணி போலவும், சுபபந்துவராளி போலவும் கேட்டது. இது அமைந்திருந்த உத்திராங்க பூர்வாங்க ஸ்வரங்களின் இயல்பே என்றாலும், சுவர்நாங்கி என்ற தனித்தன்மையுடைய ஒரு ரூபமாக ஸ்ரீனிவாஸால் அன்று வெளிக்கொணர முடியவில்லை.

[சுவர்நாங்கி ஆலாபனை ஒலித் துண்டு யூடியூப் விடியோ]

ஸ்ரீனிவாஸ் தன்னைத்தானே ஜெயித்துக்கொள்ள இவ்வகை சவால்களை அவ்வப்போது தனக்கிட்டுக்கொள்வது வழக்கமே. பல வருடம் முன்பு சாருகேசியை இப்படி எடுத்துக்கொண்டு பல்லவி வாசித்தார். சாருகேசியில் அந்தப் பல்லவி ஒரு மைல்கல். குறுந்தகடாய் உலவும் அந்த ரா.தா.ப.-வை இன்று கேட்டாலும் அவர் வாசித்திருக்கும் சாருகேசியின் சத்தியம் நிற்கிறது.

ஆனால் 23/12/2011 அகதெமியில் சுவார்நாங்கியுடன் அவருக்கு ஜெயமில்லை. இந்த ராகத்தையே பல்லவிக்கு எடுத்துகொண்டிருக்கவேண்டாமோ என்றே தோன்றியது.

சுவர்நாங்கி விவாதி ஸ்வரங்கள் இல்லாத சம்பூர்ண மேளம். விவாதி ராகமான கானமூர்த்தி-யில் இருக்கும் ஜீவன், ஸ்வரங்களிலான மெலடி ரூபம், விவாதியற்ற சுவார்நாங்கியில் இல்லை.

[ராகத்தில் விவாதி என்பதை ஸ்வரங்களின் இடைவெளிகள் ஓரளவு புரிந்தால்தான் விளக்கிக்கொள்ளமுடியும். சுருக்கமாக, அனைத்து ஸ்வரங்களும் இருக்கும் சம்பூர்ண ராகங்களில் சிலவற்றில், ஒரு ராகத்தின் ரி ஸ்வரம் அடுத்த ராகத்தின் கா ஸ்வரத்துக்கு வெகு அருகாமையில் அமைந்து, பாடிக் கேட்கையில் இந்த ராக ரி-யா, அந்த ராக கா-வா என்று குழப்பும். இவ்வகை ராகங்கள் விவாதி.]

இங்கு சங்கீதம் பரிச்சயமானவர்களுக்கு அடியேனின் அகவயமான எண்ணம்: விவாதியான கானமூர்த்தியை ரசிக்கமுடிகிறது. விவாதியற்ற சுவர்நாங்கியை ம்ஹூஹூம். விமர்சனங்களில் விவாதி தோஷம் பற்றி ஜபர்தஸ்து செய்யாமல் எடுத்துக்கொண்ட மேளராகம், கேட்பதற்கு நன்றாக இருக்கிறதா என்றுதான் யோசிக்கவேண்டுமோ. தகவோர் தெளிவுரை பகர்ந்தால் நன்றே.

எனிவே, அன்றைய எண்ணம் ஆங்கு நிற்க.

—oooOOOooo—

தானத்திற்கு வருவோம்.

முதலில் அறிமுக வாசகர்களுக்கான பரிமாற்றம்.

வேதவல்லியின் ராகம் தானம் பல்லவிகளில் உங்களை உடனே கவர்வது அலட்டலில்லாத மத்தியம கால தானம். நொடித்து ஓடி குதிக்காமல் கையைமட்டும் சுழற்றி ஆஃப்ஸைடில் ஸ்டம்பிற்கு வெளியே மொஹிந்தர் அமர்நாத் மிதவேகத்தில் வீசும் பந்து. மனதில் கலவரமின்றி ஆரவாரமின்றி ரசிக்கலாம் பந்தின் போக்கை, தானத்தின் கட்டமைப்பான வளர்ச்சியை. போகட்டும் கீப்பருக்கு என்று ஆடாதிருக்கும் தருணத்தில் ஆஃப் கட்டராகி, சில பல ஆகார பிருக்கா-களையும் ராகத்தின் பிரதான பிடிகளையும் குழைத்து வீசி, ஸ்டம்பை பதம்பார்த்து பரவசப்படுத்திவிடும்.

[வேதவல்லி கீரவாணி தானம் யூடியுப் ஆடியோ]

ஒரு காலத்தில் (அறுபதுகளில்) தானம் என்பது வீணையில் மட்டுமே செய்யவேண்டிய அங்கம், அதை பாடகர்கள் செய்யத்தேவையில்லை என்று வாதமிருந்தது. அவ்வணை உடைந்து புதுவெள்ள தானம் குரல்களில் பிரவாகிக்கையில், அதை எந்த காலப்பிரமாணத்திலும், வேகத்திலும், பாடலாம் என்பதாயும் ஒரு சாரார் புகுத்தினர். இன்றும் இவ்வழி வந்தவர்களின் கச்சேரிகளில் தானம் மெதுவான ஒரு கதியில் தொடங்கி, விவரித்து வளர்கையில் பல வேகங்களிலும் மாறி மாறி பொழியப்பட்டு, தொடங்கிய சௌககால கதியிலேயே அடங்கும்.

இது ஒருவகையில் அத்துமீறல். ஏனெனில், தானம் வீணைக்கே என்றிருந்த காலத்திலேயே அதை வீணையிலும் மத்யமகாலப்பிரமாணத்தில், ஒரு மிதமான வேகத்திலேயே தொடக்கத்திலிருந்து முடிவுவரை செய்வார்கள். பாடகர்களும் தானம் செய்யலாம் என்று அனுமதி ஏற்படுகையில், இந்த வேக நிர்ணயமும், ஒரு கச்சேரி ஸ்டண்டாய், ஜோருக்காக, கதிமாறி திரிந்துவிட்டது.

மாறாக, வீணையில் தோன்றியதாகையால் தானம் என்றால் அது மத்யம காலத்தில் மட்டுமே செய்யவேண்டியது என்கிற தன் குருநாதர்களான முடிகொண்டான் வெங்கட்ராமையர் மற்றும் மதுரை ஸ்ரீரங்கம் ஐயங்கார் “ஓல்டு ஸ்கூல்” வழியில் உறுதியாய் நிற்பவர் வேதவல்லி.

இவரது 23/12/2011 ராகசுதா கச்சேரியில் இவ்வகையில் கீரவாணியில் தானம் செய்தார் என்றாலும், அக்கச்சேரியை பல்லவி பகுதியில் எடுத்துக்கொள்வோம்.

வேதவல்லியின் சிஷ்யை, வளரும் “தேர்ந்த” கலைஞர், சுமித்ரா வாசுதேவ் இவ்வழியை பின்பற்றுவது நிறைவாயுள்ளது. தன் பங்கிற்கு அகதெமியில் (21/12/2011) சுமித்ரா வாசுதேவ் காம்போதி ரா.தா.ப.-வில் மத்யமகால தானத்தையே பாடினார்.

05tvf_sumitra_281370eஇன்றளவில் கல்கத்தாவில் ஒரு முத்துஸ்வாமி தீக்‌ஷதர் கீர்த்தனைக்களஞ்சியமான இசைப்பள்ளி இருக்கிறது. தீக்‌ஷதரின் நேரடி சிஷ்யர்களில் தொடங்கும் இதன் வரலாறு சுவாரஸ்யமானது. தனிக் கட்டுரை வேண்டும். 20/12/2011 அன்று அகதெமி மத்தியான கச்சேரி இரட்டை வீணை வித்வான்கள் ஜெயராஜ் கிருஷ்ணன் மற்றும் ஜெயஸ்ரீ ஜெயராஜ் இப்பள்ளியைச்சார்ந்தவர்கள். பிரத்யேக ஸ்ருதித் தந்திகளுடனான வீணையின் சுநாதத்திலும், தேர்ந்த வாசிப்பிலும், இவர்களது தோடி ரா.தா.ப-வின் மத்யமகால தானத்தை ரசிக்க அகதெமியின் சூழல் அலாதி.

அதேபோல் 22/12/2011 அன்று பிரும்ம கான சபா (லஸ் பாங்க் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடுத்துள்ள சிவகாமி பெத்தாச்சி ஆடிட்டொரியத்தில் நடைபெறும்) மத்யான கச்சேரியில் ஆஸ்திரேலியாவை உறைவிடமாய்கொண்ட வீணை வித்வான்கள் ஐயர் பிரதர்ஸ் வாசித்த காம்போதி மத்யமகால தானமும் அமர்க்களம். இவர்கள் ரா.தா.ப. செய்யவில்லை. மெயின் உருப்படி “ஓ ரங்கசாயி” கீர்த்தனை தொடங்கும்முன்னர் தானம் செய்தனர். வீணையிசையில் இப்படி செய்வதற்கு அனுமதி உண்டு. நாகஸ்வரத்தில் ஆலாபனைக்கு பிறகு தவில் உருட்டுசொல் அடிப்பது போல (சொல்வனம் இதழ் 60இல், கோலப்பனின் தவில் கட்டுரையை வாசியுங்கள்), இதுவும் ஒரு மரபிசை வழக்கம்.

அடுத்ததாய் ஒரு விமர்சன அளவுகோலை விவரிப்போம்.

“போய்க்கொண்டிருக்கிறபொழுதில்” என்கிற வார்த்தையை சரியாக உச்சரிக்க அனைத்து ‘சிலபில்களும்’ தேவை. வேகமாகவோ நிதானமாகவோ எப்படிச் சொல்கையிலும் முழுவதுமாய் சொல்லவேண்டும். கீர்த்தனைகளின் சொற்களும் இப்படித்தான் என்பது உடனடியாக புரிந்துவிடும். அதேபோல்தான் அவை பாடப்படும் ஸ்வரங்களின் ஸ்வரஸ்தானங்களும்.

ரா.தா.ப-வில் எடுத்துக்கொண்ட ராகத்திற்கேற்ப தானத்தின் ஆகாரங்களும் இவ்வகையில் தெளிவாக உச்சரிக்கவேண்டும். எவ்வளவு வேகமான பிருகாக்களை கூட்டி சர்ரடித்து பாடினாலும் ஸ்வர ஸ்தானங்கள், ஸ்புரிதமாய் ஆனால் கோர்வையாய் ஒலிக்கவேண்டும். “போய்க்கொண்டிருக்கிறபொழுது” என்பதை “போய்ண்டிருக்கரப்போ” என்று நாம் சுருக்கியொலிப்பதைப்போல, தேவையான பயிற்சியின்றி மேடையேருவோர், மூன்று நான்கு ஸ்வரங்களாய் அடுக்கடுக்காய் கூட்டி தானம் பாடுகையில் ஸ்வரங்களில் தெளிவில்லாமல் வழுக்குவார்கள். இன்னும் சில அரைகுறைகளிடம் “போய்ண்டிருக்கரப்போ” வும் போய், “போயினுகப்ப” என்று சுருங்கியோ அல்லது “போய்கினுருக்கசொல்ல” என்று உருமாறியோ, ஸ்வரங்கள் தேய்ந்தொலித்து, தானம் மானம் காணும் என்றாகிவிடும்.

கர்நாடக இசையை யார் யார் சரியாக கர்நாடக இசையாகவே பாடுகிறார்கள் என்று நிர்ணயிப்பதற்கு வேகமாக ஸ்வரகல்பனைகள், அல்லது அதற்கான சாஹித்தியங்களை பாடுகையிலும் இப்படி ஸ்வரஸ்தானங்கள் சரியாக தெளிவாக ஒலிக்கிறதா என்றுணரமுற்படுவது ஒரு கறார் அளவுகோல் எனலாம்.

ஏனென்றால், “போய்ண்டிருக்கரப்போ” என்று சுருக்கிச் சொன்னாலும் பொருள் சரியே; புரியவும்கூடும். அதாவது, தானத்தில் ஸ்வரங்களை வழுக்கி பூசி மொழுகினாலும், அந்நியஸ்வரங்களில்லாமல், அந்த ராகமாகவே ஒலிக்கும்வரை கேட்பவர்க்கு மேலோட்டமாக பெரிதாக தவறொன்றும் புலப்படாது. சிலவேளைகளில் ரம்யமாகக்கூட காதில் விழும். ஆனால் கலையின் அடிநாதம் பேருண்மை என்றால், “போய்ண்டிருக்கரப்போ” என்கிற ரீதியில் ஸ்வரங்களை/குரலை உபயோகிக்கும் பாடகர், நிச்சயமாக எடுத்துக்கொண்ட ராகத்திற்கும், சார்ந்த கலைக்கும் நியாயம், அட்லீஸ்ட் அன்றைய கச்சேரியில், செய்யவில்லை.

குரலுக்கு இளவயதிருக்கையில் எடுத்துக்கொண்ட ராகம் காம்போதியாக ஒலிக்க, குரல் மூப்புணர்கையில் யதுகுலகாம்போதியாய் ஒலிக்குமாம்.

இப்படிப்பட்ட கறார் அளவுகோள்களை உபயோகிக்கையில்தான் பல சங்கீதங்கள் மீதங்களாகிவிடுகிறது. உடனே, கேட்கையில் எனக்கு பிடிச்சிருக்கு, அநேகருக்கு பிடிச்சிருக்கு, இந்த ரசனை விமர்சன அளவுகோல்ல இவ்வகை வழுக்கல்கள் ஸ்மால்-மேட்டர்-யார், அலௌடுதானே, வுடுவியா என்றால், நான் மேலே குறிப்பிடுவதும் ரசனை அளவுகோல்தான்.

ஒரு ராகத்தின் உருவம் குணாம்சம் இவ்வகை ஸ்வரங்களால், இவ்விவற்றை இத்தகைய அவகாசத்தில் கமகத்துடன் ஒலிக்கச்செய்து, இவ்வகை ஸ்வரப்பின்னல்களால், இவ்வகையான ஒலிக்கூடுகளால் கட்டுமானித்து என்று முதலில் ஒரு இலக்கணம் கொடுத்துள்ளோமே அதுவும் “இப்படிச்செய்தால் கேட்பதற்கும் மனதிற்கும் நன்றாக இருக்கிறதே” என்கிற முன்னோர்களின் பலவருடத்திய கேள்வி ரசனையால் தோன்றியதுதான். பிராச்சீன ராகங்கள் என்பதெல்லாம் யாரோ முதலில் கணக்கு புக்கில் எழுதிவைத்ததல்லவே.

ஒரு ராகத்திற்கான அமைப்பை ரசனைமுதன்மையான அளவுகோலில் ஏற்றுக்கொண்டு, அதன் நுணுக்கங்கள் நிறைந்த கீர்த்தனைகள் பலதையும் கற்றுக்கொண்டபிறகு, அவ்வகையில் வெளிக்கொணர்ந்து பாடாமல், நவயுக யுவயுவதிகளுக்காக சற்று எளிமைப்படுத்தி வழுக்குகிறேன் என்று ஜல்லியடிப்பதும், அல்லது அதையும்தாண்டிய நிலையாய், நான் கலைஞன், பொங்கும் பொன்னியாறு, தடைமீறிய தருதலை, என்றெல்லாம் உதார் விடமுடியாது.

வெண்பா, ஆசிரியப்பா, கட்டளைகலிப்பா என்றேல்லாம் வகுத்துவிட்டு யப்பா என்று மலைத்து, புதுக்கவிதையாய் வசனம் படிப்பது ஓகே. ஆனால், அது புதுக்கவிதையே. பா இல்லை.

ஆயாசமாய், இவ்வளவு தேர்ந்த காதும் மன ஒருமுகமும் தேவையா என்றால், கர்நாடக இசையை கர்நாடக இசை என்று அறிந்து ரசிக்க தேவையே. திராவிட நாட்டுச் சமுதாயமாய் நமக்கு இவ்வகை காது இருந்திருக்கிறது. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம். இன்றும் நமக்கு நிச்சயம் இருக்கிறது. இதால்தானே வல்லதொரு இசைவழியை வையகத்தோர் வியக்க வகுத்துள்ளோம்.

இந்த அளவுகோலின் பின்புலத்தோடு இதோ தானம் விமர்சனம்: 21/12/2011 அன்று அகதெமியில் சுமித்ரா வாசுதேவ் தானம் தெளிவாய் காம்போதி ஸ்வரஸ்தானங்களுடன் ஒலித்தது நிறைவாயிருந்தது.

—oooOOOooo—

அடுத்து பல்லவி.

இப்பகுதியில் முதலில் கொஞ்சம் அறிமுக விவாதம், அடுத்து கொஞ்சம் விமர்சனம், முடிவில் அனுபவப் பரவசம்.

பல்லவிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். எப்படி அமைப்பது என்பது பற்றி ஏற்கனவே மால்டோவாவில் வரும் மால் என்று தொடங்கி ஒரு தனிக் கட்டுரை (ரா.தா.ப. பாகம் 3) எழுதி விளக்கியுள்ளோம். பல்லவியை சொற்ப சொற்களை வைத்தே, கடுமையாக அமைக்கமுடியும். அகதெமியில் (21/12/2011) சுமித்ரா வாசுதேவ் பாடியதைப்போல். பல்லவி வரி இது:

பார்த்தசாரதே | பரமதயாநிதே ||

திஸ்ர மட்டிய தாளத்தில், கண்ட நடையில் அமைத்து பாடினார்.

ஏற்கனவே தாளத்தை பற்றி ரா.தா.ப. நான்காம் பாகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அப்புரிதலை வைத்து இங்கு கவனித்தால், மட்டிய தாளத்தின் “X 2 X” என்கிற கட்டமைப்பு புலப்படும். திஸ்ரம் என்பதால் இதில் X = 3, அதாவது, ஒரு ஆவர்த்தத்திற்கு 3 2 3 என்கிறவிதமாய் தொடயில் தட்டவேண்டும். 3 என்பதை விரல் எண்ணிக்கையாக அவகாசம் கொண்டும், 2 என்பதை உள்ளங்கை-புறங்கை தட்டுகளாலும் செய்யவேண்டும்.

இதில் ஒரு ருசிகரம் சொல்வோம். 3 2 3 என்கிற எண்ணிக்கை 3+2+3 = 8 என்பதால், இதே அக்‌ஷரங்கள் வருமாறு வேறு எந்த தாளத்தில் வேண்டுமானாலும் பல்லவியை பாட முயலலாம். உதாரணமாக ஆதி தாளத்திற்கும் 4 2 2 என்பதால் (ரா.தா.ப. நான்காம் பாகம்பார்த்துக்கொள்ளுங்கள்) மொத்தம் 8 அக்‌ஷரங்கங்தான். மேலே உள்ள பல்லவியை இத்தாளத்திலும் அமைத்துப்பாட முயலலாம். அதேபோல், கண்ட ஜம்பை தாளம் 5 1 2 என்பதால் அதுவும் 8 அக்‌ஷரம், அதிலும் முயலலாம்.

ஆனால் மேட்டர் அவ்வளவு சுலபமல்ல. இங்குதான் பல்லவியை எப்படி பதம் பிரிப்பது, கார்வை எவ்வளவு அக்‌ஷரங்கள், என்பதெல்லாம் முக்கியப்படும்.

உதாரணமாக மேலுள்ள பல்லவியை

பார்த்த—–சா–ரதே—— ——-ப-ர-ம-த-யா–நிதே

என்று பிரிப்பதுபோல் பாடினால் ( ‘-’ என்ற குறி ஒர் கால இடைவெளி என்று கொள்ளுங்கள்), கார்வை (மூச்சுவிட்டுக்கொள்ளும் இடைவெளி, கேப் என்று கொள்ளலாம்) என்பது “சாரதே” என்பதிற்கும் “பரம…” என்பதிற்கும் நடுவில் இருக்கிறது. நிறைய அவகாசம் விட்டிருக்கிறோம். பிறகு நிரவல் செய்கையில் இந்த இடைவெளியை முன் பின் உள்ள எந்த பதத்தை நீட்டியும் சுருக்கியும் நிரப்பலாம்.

இப்படி கட்டமைத்தால் அக்‌ஷரங்கள் 8 என்றாலும் உடனே கண்ட ஜம்பை தாளத்தில் இந்தப் பல்லவி அமையாது என்பது தாளம் போட்டு பல்லவியை பாடுகையில் புரிந்துவிடும். கார்வை இடக்காய் நிற்கும். தாளத்தின் கட்டுக்கோப்பான 5 அக்‌ஷரங்களுக்குப்பிறகோ, இல்லை அடுத்த 1 அக்‌ஷரத்தையும் சேர்த்து 6 அக்‌ஷரத்திற்கு பிறகோ பொருந்தாமல், தொங்கும்.

ஆனால், இதே வகையில் பாடினால், 8 அக்‌ஷரங்கள் 4 2 2 என்று பிரிக்கப்பட்டுள்ள சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளமான ஆதி தாளத்திற்குள் பொருத்தலாம். கார்வை அவகாசம் லகுவின் 4 அக்‌ஷரங்களின் முடிவில் தொடங்கி, ஒரு 2 அக்‌ஷர துருதம் வரை இழுக்கலாம்.

இப்படி சிறிய பல்லவியை, எளிமையான ஆதி தாளத்தில் அமைத்துப் பாடுவது வளரும் கலைஞர்களால் சில வருட அப்யாஸத்திற்கு பிறகே முடியும். ஆனால் இதனினும் கடுமையாக, சுமித்ரா அன்று இதே சிறு பல்லவியை மட்டிய தாளத்தில், கண்ட நடையில் பாடினார். அதாவது, எட்டு அக்‌ஷரங்களாய் காலம் பிரிக்கப்பட்டிருந்தாலும், அக்‌ஷரங்களுக்கிடையேயான அவகாசம் கண்ட நடைக்கானது.

(பஞ்ச நடைகள் பற்றி திரை இசையுடன் விடியோ விளக்கங்கள் ரா.தா.ப. நான்காம் பாகத்தில் கொடுத்துள்ளேன்.)

சதுஸ்ர நடையிலிருந்து கண்ட நடையாகுகையில், அவகாசம் சற்றே இழுக்கப்பட்டு, பல்லவி வார்த்தைகளையும் அதற்கேற்றவாறு இழுத்து இழுத்து பாடவேண்டும். வரி சிறிதென்றால், இப்படி பாடுவது கடினம். ஏனெனில் இழுப்பதற்கு வார்த்தைகளே குறைவு. அதே சமயம், எடுத்துக்கொண்ட காம்போதி ராகத்தில் இசையாக பல்லவி ஒலிக்கவேண்டும். “கொலைவெறியாய்” வாய் கோணி “ஸாக்ஸ் (sax) எடுத்துக்கோ”-வா “ஸ்நாக்ஸ் (snacks) எடுத்துக்கோ”-வா என்று புரியாத மழுப்பலாக்கக்கூடாது. பார்த்தசாரதி பார்த்தனுக்கே சாரதி. பின்னிவிடுவார்.

தொடருவோம்.

கண்டெடுத்து அனுபவித்து ஆலோசித்து கேட்குமுன் நிரவல் ஓடிவிட்டது. அவகாசமின்மை. ஆனால் சுமித்ரா பல்லவியை த்ரிகாலமும் திஸ்ரமும் செய்தே முடித்தார். (இப்படியென்றால் என்ன என்று ரா.தா.ப. ஏழாம் பாகத்தில் விளக்கியுள்ளேன்).

அன்று அகதெமியில் சுமித்ரா வாசுதேவ், அருமையாக பாடி, எடுத்துக்கொண்ட பல்லவிக்கு நியாயம் செய்தார் — என்கிற இந்த விமர்சன வரிக்கு பின்னால் கட்டுரையின் தானம் பகுதியில் தொடங்கி இதுவரை கூறிய அனைத்து கர்நாடக சங்கீத பின்புலமும் தோய்ந்த ரசனை உறைகிரது என்று கொள்க.

அடுத்த பல்லவி, தமிழ் பல்லவி.

தேடினேன் கிடைக்கவில்லை வார்த்தைகள் | அவள் அழகினை வர்ணிக்க ||

சத்தியமாய் இதுதான் பல்லவி. உஸேனி ராகத்தில் கண்ட திரிபுடை தாளத்தில் அமைத்து பாடியவர் டி.எம்.கிருஷ்ணா. 21/12/2011 அன்று, அகதெமியில், பிரதான கச்சேரியில்.

மேடையில் வயலின் டாக்டர். ஹேமலதா (டாக்ட்ரேட் தீக்ஷதர் கிருதிகளில்) வரிகளைக்கேட்டு முதலில் சற்றே நெளிந்தாலும், அருமையாவே உள்வாங்கி ஈடு கொடுத்து வாசித்தார்.

“அவள்” யார்? காதலியா? தேவதையா? அலங்கார பூஷிதை அலர்மேல்வல்லியா? கண்ணை மூடிய அவரவர் கற்பனையில் உதிப்பவள். அப்படியிருப்பதுதானே கச்சேரி ரசனைக்கு உகந்தது.

கிருஷ்ணா கச்சேரிகளை தொடர்ந்து கேட்டுவருபவர்கள் அறிவது அவர் அவ்வப்போது சாஹித்ய வார்த்தைகளை சற்று மறந்துவிடுவார். விருத்தங்களில் இது வெளிப்படும். ஆப்த நண்பராய் உறுதுணையாய் இவருக்கு வயலின் வாசிக்கும் ஸ்ரீராம்குமார் இச்சமயங்களில் உதவுவார். ஸ்ரீராம்குமார் மும்மூர்த்திகளின் சாஹித்யங்களில் சூரர். அதுவும் தீக்ஷதர் கீர்த்தனங்கள் அநேகம் அத்துப்படி. பட்டம்மாள் வழி வந்த சாஹித்ய கெட்டி. ஆனால், ஒரு முறை விருத்தத்தில் கிருஷ்ணா பாரதியார் பாட்டின் வரியை மறந்துவிட்டார். நல்லவேளையாக அருகில் இருந்த கடம் கார்த்திக் வரியைச்சொல்லி உதவினார்.

tmk2

இந்த முஸ்தீபு எதற்கென்கிறீர்களா. மேலே பல்லவியை கவனித்தீர்களா. கிருஷ்ணாவிற்கு அடிக்கடி மிருதங்கம் வாசிக்கும் அருண்ப்ரகாஷ் இவர் வார்த்தைகளை மறப்பதில் துணுக்குற்று, ஆரோக்ய பொது எள்ளலாய், இந்த பல்லவியை கிருஷ்ணாவிற்காக பிரத்யேகமாக அமைத்துக்கொடுத்தாராம். கிருஷ்ணா அகதெமியில் அன்று சொல்லக் கேட்டது.

இவ்வகை சுவையான பின்னனிகள் இருந்தும் அன்று பல்லவி சுமார்தான். வயலினில் நேர்த்தியாக வெளிவந்த உஸேனி ராகம், கிருஷ்ணா பாடுகையில் அன்று சோபிக்கவில்லை. நேரத்திற்கு முடிக்கவேண்டிய அவசரம் வேறு. மொத்தத்தில் வித்யாசமான முயற்சி. ஆபரேஷன் சக்ஸஸ். நோயாளி அன்று பூட்டகேஸ்.

(இந்த கச்சேரியே, வேறு அங்கங்களில் கிருஷ்ணா செய்த பரிசோதனைகளுக்காக, பயங்கர விமர்சனத்துக்குள்ளாகியது. இனிமேல் கிருஷ்ணாவை கேட்பதில்லை என்று துண்டைப்போட்டு தாண்டியுள்ளனர் சிலர். ஒரு துண்டு மட்டும் என்னுடையது. பிரிதோர் சமயம் விவாதிப்போம்.)

அடுத்த நாள் 22/12/2011 அதே அகதெமி. பிரதான கச்சேரி சஞ்சய். மீண்டும் தமிழ் பல்லவி.

11fr-sanjay_subraman_16830f

சிக்ஸரும் ஸாலிட் டிஃபென்ஸுமாய் அன்றிருந்த பார்மில் சஞ்சய் தொட்டதெல்லாம் துலங்கியது. காபி ராகத்தில் ஆலாபனை தானமென்று கிளப்பிவிட்டு, யாரும் எதிர்பார்க்காத சச்சினின் “ஸ்லிப்பிற்கு மேல் சிக்ஸாய்” சிம்பிளாய்

சின்னஞ்சிறு கிளியே | கண்ணம்மா ||

அப்புடுதேங் பல்லவி. கண்ணம்மா வை மட்டும் கண்-ணம்-மா என்று சற்றே குலுக்கி, ஆதி தாளத்தில் பொருத்திவிட்டார்.

இவரதும் பெண்ணைப் பற்றிய பல்லவியே. ஆனால், ஒருவரும் நெளியாத வகையில், பாரதியின் கண்ணம்மா.

காபி ராகத்தை கள்ளிச்சொட்டு டிகாஷனில் களமிறக்கி, கம்போடியன் கென்யன் என்று ஸ்டார்பக்ஸில் விற்கும் வகைக்கொன்றாய், காபி ராகத்தையே நாகஸ்வரத்தில் வாசிக்கும் வகையிலும் குழலில் குழைக்கும் விதத்திலும் பாடி (ஓரளவே குரல் ஒத்துழைத்ததெனினும்) அமர்களப்படுத்திவிட்டார்.

தமிழிலேயே பாடினாலும், இசையாய் கேட்கையில் மனதிற்கு ரம்யமூட்டுவதற்கு பொருள் செறிவின் பங்களிப்பும் முக்கியம் என்றுணரமுடிந்தது.

வருடாவருடம் உழைத்து எதையாவது வித்தியாசமாய் செய்யமுனையும், இன்றைய முன்னனி வித்வான்களான கிருஷ்ணா சஞ்சய் இருவருக்கும் இடையே நிலவும் ஆரோக்யமான போட்டியில், இவ்வருட அகதெமி வின்னர் சஞ்சய்.

சரி இதுதான் 2011 சீசனுக்கு சூப்பர் கச்சேரி என்று நினைத்திருந்தேன். வேதம் சிரித்தது. என் பாட்டியின் வயதையொத்த வல்லியின் உருவில்.

05theftb-r_vedavalli_21330f

மறுநாள் (23/12/2011) ராக சுதா அரங்கில் வேதவல்லி கச்சேரி கேட்கப்போனேன். ஹவுஸ் நான் சென்றமர்ந்ததும் ஃபுல். உடன் பாடியவர் ஏற்கனவே அறிமுகப்படுத்திய சிஷ்யை சுமித்ரா வாசுதேவ். வயலின் ஸ்ரீராம்குமார், மிருதங்கம் அருண்பிரகாஷ். கடம் குருபிரசாத்.

வர்ணம் விடுத்து நேரடியாக கானடாவில் “சுகி எவரோ” என்று தொடங்கியதுமே பல விஷயங்கள் பொட்டில் அறைந்தன. சௌக்கிய சங்கீதமும் படைப்பூக்கமும் ஒருங்கிணைபவையே. ரசிக்கும்படியான பரிசோதனைகளுக்கு ஆர்பார்ட்ட ஆரவாரங்கள் தேவையில்லை. ஆண்டாண்டு காலமாய் மேடையேறி ஜரிகை குலுங்க தொடை தட்டினாலும், ஆலாபனையில் விரலுக்கொன்றாய் மோதிரம் தெறிக்க அபிநயம் பிடித்தாலும், ராகத்தின் படைப்பூக்கம், மனோதர்மம், ஜீவன், மெலடி, பிரவாகம், மலர்ச்சி, சௌக்கியம் போன்றவை ராகத்தை சரியாக உள்வாங்கிய சொற்ப சிலருக்கே வாய்க்கும். இப்படி பல நிதர்சனங்கள்.

இவ்வகை சங்கீதத்தை கேட்டுச் சுகிக்காதவர் எவரோ.

காட்டுமன்னார்கோயிலில் எழுந்தருளியுள்ளவர் மேல் ஜகன்மோஹனம் ராகத்தில் (தாளம் திஸ்ர ஏகம்) ஸ்ரீவித்யாராஜகோபாலம் பஜேகம் போன்ற தீக்‌ஷதர் கீர்தனைகளெல்லாம் அடுத்தடுத்து நளினமாக இதமாக பிரவாகிக்க, அதற்குள் பல்லவி வந்துவிட்டதா? ரா.த.ப. கீரவாணி என்று தெரிந்து, ராகம் ஏற்கனவே விளக்கிய மத்யமகால தானம் என்று கேட்டுக் கடந்து உடன் வாசிப்பவர்களுடன் சேர்ந்து அரங்கமே சற்று மயக்க நிலையில் இருக்க, எடுத்தார் பல்லவியை சதுஸ்ர ஜம்பை (4 1 2 அக்‌ஷரங்கள்) தாளத்தில்:

அருணப்ரகாஷ ஸ்ரீராம | ஜயகுருப்ரிய ||

தமிழ்ப் பல்லவியில்லையெனினும், சட்டென்று பொருள் புரிந்து, அரங்கமே கொல் என்றாகிவிட்டது. தொடர்ந்து கரவொலி. ஸ்ரீராம்குமாரும், அருண்பிரகாஷும் தத்தம் வாத்யங்களில் கைவைக்கமுடியாமல் வெட்கத்தில் சில ஆவர்த்தங்கள் குனிந்துகொண்டனர்.

[வேதவல்லி பல்லவி யூடியுப் ஆடியோ]

கச்சேரியில் அதுவரை இருவரும் பக்கவாத்தியம் அருமையாக வாசித்துவந்ததால், இரண்டு சந்ததி மூத்தவளிடமிருந்து கிடைத்த சங்கீத படைப்பூக்க ஆசீர்வாதம்.

ரகுநாதகீர்த்தனம் கேட்குமிடமெங்கிலும் “பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்” என்றிருக்கும் மாருதியின் கட்டுண்ட நிலையை, “ஸ்பாட் கிரியேடிவிட்டி” என்பார்களே அதன் வியாபித்தலில் நானும் தொட்டேன் அன்று.

இவ்வகை சௌக்கிய சங்கீதத்தின், கட்டுரையின் இப்பகுதியில் முன்பு கூறிய, நிதர்சனங்களில் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்கிறேன். படைப்பூக்கத்திற்கு வயது பொருட்டல்ல.

கச்சேரி முடிந்ததும் மேடையிலமர்ந்திருந்த வேதவல்லியிடம் சென்று, கச்சேரி பற்றி ஒரே வார்த்தை, “சூப்பர்” என்றதிற்கு, அது அப்போ, இப்போலாம் “ஆவ்ஸம்”னுனா சொல்லணும் என்றார்.

ஆம், ரசிகன் எனக்குத்தான் வயதாகிவிட்டது.

*****
[தொடரலாம்]

[கட்டுரையின் முன்வடிவை ஆழ்ந்து வாசித்து செப்பனிட்ட புண்யாத்மாக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே நல்ல சங்கீதமும், அதைக் கேட்கும் மன, தின அமைதியும் கிட்ட வினதாசுதவாஹனஸ்ரீரமணரை அடியேன் மனஸாரக ஸேவின்சேதா]

[சொல்வனம் இதழில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் மீள்பிரசுரம்]