இயல் இசை ஆடை

Standard

தோடியில் ஒலிக்கும் தொண்டை செருமல்களுடன் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொண்டிருக்கும் 2011 சென்னை இசைவிழாவிலும், அடுத்து எழுத்தாளர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மெகா சைஸ் கட்டவுட்டுகள் வைத்து தடுத்தாட்கொள்ளும் 2012 சென்னை புத்தகக் காட்சிவிழாவிலும் என்னைக் கவர்ந்தது, கர்நாடக இசை, தமிழ் சார்ந்த வாசகங்களுடன் வெளிவந்துள்ள டி-ஷர்ட்கள்.

புத்தகக் காட்சியில் அரங்கின் நுழைவாயிலிற்கு எதிர் கோடியில் தமிழ் வாசக டி-ஷர்ட்டுகள் நல்ல விற்பனை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், ஆதலினால் காதல் செய்வீர், நாம் யார்க்கும் குடிமை அல்லோம், நமனை அஞ்சோம் போன்ற வாசகங்கள் கவர்ந்தன. ஆண்களுக்கு கிட்டத்தட்ட அனைத்தும் கறுப்பு நிறத்தில் இருப்பது குறை. அதுவும் “தமிழ்”, “அ” என்று மட்டும் எழுதிவைப்பது… வாசகங்களுக்கு இன்னும் சற்று மெனக்கட்டிருக்கலாமோ. வேறெதுவும் தோன்றவில்லையெனில், அ-விற்கு பதில் ஆ என்று இட்டால் சுஜாதா ரசிகர்கள் வாங்கலாம். இல்லை அவசரத்திற்கு நாஞ்சில் நாடனின் புத்தகத் தலைப்புகளை சுட்டாலே போதும்.

ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என வீட்டிலுள்ளோர் அனைவருக்காகவும் இயல் இசை இடம்பெறும் ஆடைகளை ஒரு அள்ளு அள்ளினேன்.

என்னைக் கவர்ந்த சீஸன் வாசகம்: Gaga over Raga. தமிழ் வாசகம்: யாதும் ஊரே யாவரும் கேளிர் (அடுத்த அடியையும், “தீதும் நன்றும்…”, தனி வாசகமாக அடிக்கலாமே).

மெட்டாலிக்கா, மெகாடெத், ஐயன் மெய்டன், ஜூடாஸ் பிரீஸ்ட் என்று ஜெர்க்விட்டு தலைவிரிகோலமாய் ஜேம்ஸ் ஹெட்ஃபீல்டையும் (தொழிலில் சிரத்தையானவரே), டெக்னோகலரில் எலும்புக்கூட்டு கோரக்கொள்ளிவாய் பிசாசுகளையும் டி-ஷர்ட்டுகளில் அணிந்து, ராக்-ஷோவில் குவாட்டர் அடித்து “ஒய்ன் இஸ் ஃபைன் பட் விஸ்கீ-ஸ் குவிக்கர், சூயிஸைட் இஸ் ஸ்லோ வித் லிக்கர்” என்று பொருள் புரிந்தோ புரியாமலோ விம்முவதற்கு பதில், கால் கை விரல்களின் நளின நர்த்தன அபிநயங்களையும், வீணை, யாழ், என்று அழகிய நம் இசைப் பொருட்களையும், ரம்யமான ராகங்களின் பெயர்களையும், வகிடெடுத்து வாரிய வாக்கியக்காரர்களையும், நாவிதனை நெருங்கவிடாத வள்ளுவனையும், சார்ந்த வாசகங்களையும் டி-ஷர்டுகளில் அணிவதில் எனக்குத் தயக்கமில்லை.

அடுத்த சீஸன் வரை பிரிண்ட் அடித்த படங்கள் தேயாமலும் துணி நையாமல் தரமாகவும் இருக்குமானால்.

*****

டீ-ஷர்ட்டில் முகம் அச்சாகியிருந்த, சகஜமாக பழகும் ஒரு பிரபல பாடகரிடம் அகதெமியில் அளவளாவுகையில்:

அண்ணா, எனக்கொரு யோஜனய்…

என்ன ஸார்…

உம்ம படம் போட்ட டீ-ஷர்ட்…

ஆமா, கெடைக்குமே… மேலே கடைல கேட்டுப்பாத்தேளா

அதத்தான்….

யாருக்கு, வாண்டுக்கா…

இல்ல எனக்குதான்… கேளுங்கோ. அத மாதிரி அஞ்சு வாங்கி…

அஞ்சா… ஆனாலும் இவ்ளோ ப்ரியமெல்லாம்… தாங்கலியே… என்னப்பண்ணப்போறீங்க…

இல்ல, ஃப்ரெண்ட்ஸ் நாங்க அஞ்சு பேர் ஆளுக்கொன்னா போட்டுண்டு, நடு ரோல வரிசையா உக்காந்துண்டு, உம்ம கச்சேரில ஸ்க்ரின் ரைஸ்ஸானதும், எழுந்து நின்னு “தலைவா…” ன்னு கத்திண்டு சீட்டி அடிச்சி, கிழிச்சுவச்ச ஹிண்டு விமர்சன தாள்களை அப்டி தூக்கிபோட்டு இறைச்சு… தேங்காய்ல சூடம் ஏத்தி…

அய்யா ஸாரே, நீர் முதல்ல கிளம்பும். அப்டி மனசாலகூட நினைச்சுராதேள்…

இல்ல… இப்டி செஞ்சா உம்ம பாப்புலாரிட்டி கூடாது…

இப்டி செஞ்சால் நான் அம்பேல்யார்… உமக்குதான் இதுமாதிரிலாம் தோணும். அப்பவே நினச்சேன்…

எனக்கென்னமோ உம்ம அகதெமி கச்சேரில இப்டி செஞ்சா, அடாவடி, அதிகப்பிரசங்கின்னெல்லாம் உம்ம விமர்சிக்கிற பெரிசுகள் சிலர ”கொரொனரி த்ரோம்போஸிஸ்ஸில் ஆச்சர்யன் திருவடியடைந்தார்” ன்னு காலம்பர ஹிண்டு ஆபிச்சுவரில பாக்கலாம்னுதோணுது…

என்ன குழிதோண்டி புதைக்கிறதுன்னு தீர்மானமா? மாமா, இவன முதல்ல அடிபடாம கூட்டிண்டுபோம்…

என்றபடி பிரபலம் கழன்றுகொண்டார்.

யோசனை அங்கீகாரம் பெறாத ஆற்றாமையில் பேசிக்கொண்டிருந்த பாடகரையும் சேர்த்து அனைத்து இளவயது பிரபலங்களையும் தவிர்த்து, கர்நாடக சங்கீத பாடகர் படமாய் இருக்கவேண்டும் என்பதால் அருணா சாயிராமையும் தவிர்த்து, பாலமுரளிகிருஷ்ணா முகமிட்ட டி-ஷர்டை வாங்கினேன்.

*****

சீஸன் தாக்கத்தில் எனக்கு தோன்றிய மேலும் சில டி-ஷர்ட் வாசகங்கள் விற்பனைக்கு இதோ:

நீ தோடி, நான் எழுந்தோடி!

என் ரிங்டோன் வராளியில்

சிம்மனந்தனம் பயிலறங்கிற்கே

தாளம் தப்பினால் கிள்ளுவேன்: இப்படிக்கு, நலங்கிள்ளி

(பொடி சைஸில்) ஆரபியா தேவகாந்தாரியா, பைரவியா மாஞ்சியா, தர்பாரா நாயகியா, (பெரிய சைஸில்) ஜாங்கிரியா ஜிலேபியா?

(பெரிய சைஸில்) கிருஷ்ணா நீ பேகனே பாரோ, (பொடி சைஸில்) அகதெமி பாஸ் ஒண்ணு தாரோ

(பெரிய சைஸில், படத்துடன்) நாகஸ்வரம் (பொடி சைஸில்) யாதும் ஊதியும் யவரும் கேளீர்

சிக்ஸுக்கு அப்புறம் ஸெவண்டா, <பிடித்த பாடகர் பெயர்> க்கு அப்புறம் எவண்டா

பொங்கலுக்கு பின்னரே பக்கோடா, பல்லவிக்கு பின்னரே துக்கடா

மங்களம் வரை இருப்பேண்டா!