ராகம் தானம் பல்லவி – பாகம் 6

Standard

சென்ற பாகத்தின் இறுதியில் மேற்கத்திய செவ்வியல் இசையில் முக்கியமான அங்கமாய் இடம்பேறாத, கர்நாடக சங்கீதத்தில் முக்கியமான கற்பனைத்திறன் வெளிப்பாடாய் தோன்றும் அங்கம் நிரவல் என்றோம். ஆனால் அந்த இசையில்தான் இதைசெய்யவேண்டும் என்று கட்டாயமில்லை. நிரவல் பற்றி விளக்கும் முன் அதன் முன்கதைசுருக்கமான சங்கதி என்பதின் சங்கதியை ஓரளவு இங்கு சொல்வோம். சங்கதி என்னவென்று விளக்குவதற்கு முன் இப்பாடலை முழுவதும் கேளுங்கள்.

மன்னவன் வந்தானடி.

http://www.youtube.com/watch?v=5-y-J9Pabq8

பாடலின் முடியும் தருணங்களில் பல்லவி “மன்னவன் வந்தானடி தோழி” என்பதை பலவிதங்களில் பாடுவதை கவனியுங்கள். ராகம் அதேதான். பாடல் வார்த்தைகளும் அதேதான். தாளமும், தாள ஆவர்த்தமும், தாள நடையும், களையும், காலப்பிரமாணமும் மாறவில்லை. மாறாது. பாட்டின் மெலடி என்கிற ட்யூன் மட்டும் ராகத்திற்குள், ராகத்தை வெளிக்கொணருமாறு சற்று அப்படி இப்படி போய் வரும். மீண்டும் மீண்டும் பாட்டின் ஒரே வரியை (பல்லவியை) பாடுகையில், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சங்கதியாக பாடுகிறார் என்று பொருள்.

இசை விடுத்து, மனப்பிம்பத்திற்காக உதாரணம் வேண்டுமென்றால், தாத்தா கடையில் வாங்கும் (அந்தகாலத்தில்! ஹும்…) ஒரு கலிடாஸ்கோப்பிலுள்ள வளையல் துண்டுகளும், சைஸ்களும், அதன் நிறங்களும் அதேதான். ஆனால் ஒவ்வொரு குலுக்கலிலும் ஒவ்வொரு பாட்டர்ன் தெரியுமே. அதுதான் சங்கதி.

(இதே உதாரணத்தை வைத்து ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் என்று வாணி ஜெயராமுக்கு அடுத்தபடி வியக்கலாம். சற்று குழப்பிவிடும். பிறகு பார்ப்போம்)

இன்னமும் விரிவாக சங்கதியை விளக்க, ஸ்கேல், ராகம், என்பவைகளையும் சற்று விளக்குவோம். அருகில் உள்ள படம் உதவும்.

rtp-sangathi-02

படத்தில் நாம் கேள்விப்பட்டுள்ள (இல்லையென்றால் பரவாயில்லை) நின்னுக்கோரி என்று தொடங்கும் வர்ணத்தின் முதல் அடியின் (பல்லவி போல) ஸ்வரங்களை கொடுத்துள்ளேன்.

இந்த வர்ணம் மோஹனம் என்கிற ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், இவ்வர்ணத்தின் பாடல் வரிகள் மொத்தமும் மோஹன ராக ஸ்வரங்களுக்குள் அமைக்கப்பட்டு பாடப்படும். கீழ் ஸா வில் தொடங்கி, ஸ, ரி, க, ப, த, என்று போய், மேல் ஸ்தாயி ஸா வில் முடியும். அதாவது, ஒரு ஸ்தாயியில் (ஆக்டேவினுள்), மோஹன ராகத்திற்கு ஐந்து ஸ்வரங்கள்.

ஸ்வரங்கள் என்றவுடன் புரியாதோ என்று முகம் சுளிக்காதீர்கள். ஜஸ்ட் எந்த சப்தத்தில் (324 ஹெர்ட்ஸ், 486 ஹெர்ட்ஸ் என்பதுபோல்) ஒலி எழுப்பவேண்டும் என்பதற்கான ஒலிக்குறிகள்.

மோஹன ராகத்திற்கான ஸ்வரங்களை படத்தில், ஒவ்வொரு செங்குத்தான கோட்டின்மீதுள்ள ஆறு புள்ளிகள் குறிக்கின்றன. பாட்டின் சொற்களை, ஒரு சந்தத்தில், தானத்தில் (முன்னர் தானம் பாகம் படித்துக்கொள்ளுங்கள்) இந்த ஸ்வரங்கள் குறிக்கும் ஒலியோசைகளில் அமைத்துப் படித்தால், மோஹனம் ஸ்கேலில், கிட்டத்தட்ட மோஹன ராகத்தில், பாடல் ட்யூன் ரெடி. அப்படி அமைத்த பல்லவி வாக்கியத்தைத்தான், லிரிக்ஸுக்கு ஏற்ற ஸ்வரங்களையும் சுட்டிக்காட்டி படமாய் போட்டிருக்கிறோம். நின்னுக்கோரி என்று வார்த்தையை பாடுகையில், க க ரி, ஸ, ஸ, ரி, ரி, என்பதற்கான ஒலி சப்த அளவுகளில் பாடவேண்டும் என்று பொருள்.

இப்படி ஒரு டியூனில் ஒரு மெலடி வரியாக அமைத்த பல்லவியை, படைப்பாளியே இன்னொரு மெலடி வரியாக வடிக்கமுடியும். நின்னுக்கோரியை க, க, ரி, ஸ, ஸ, ரி, ரி, என்று ஒலிக்குறிகளுடன் சொல்லாமல், வேறு மாதிரி ஸ்வரக்கோர்வையாய், ஆனால் மோஹனராகத்திலேயே உள்ள ஸ்வரங்களை வைத்து, வடிவமைக்கமுடியும். படத்தில், கிரே நிறத்தில் உள்ள ஸ்வரக்கோர்வை வளைகோடு ஒரு மெலடி சங்கதி என்றால், மஜெந்தா நிறத்தில் உள்ள ஸ்வரக்கோர்வை வளைகோடு இன்னொரு சங்கதி.

முக்கியமாக மனதில் கொள்ளவேண்டியது, ராகம் அதன் ஸ்வரங்களும் அதேதான். பாடும் வரியின் ஸ்வரக்கோர்வைகள் மட்டும் வேறு வேறு. அதேபோல், வார்தைகள் இன்றி வாயால் ஆ காரம் செய்து ஆலாபனை போல் வார்த்தை இடைவெளிகளை ஒரு ராகத்தில் அல்லது ஸ்வக்கூட்டல்களாக நிரப்பிக்கொண்டே போவது சங்கதியல்ல. வார்த்தை இருக்கவேண்டும். அதை ஒரு ராகத்தில் பாடுகையில் வேறு வேறு மாதிரி பாடவேண்டும்.

இப்படி ஒரு ட்யூனில் சங்கதிகள் பொருத்துவது, அழகியல் சார்ந்த கேள்வியனுபவத்தை, ரசிகானுபவத்தை கூட்டும் அங்கம். ஆங்கிலத்தில் எம்பெலிஷ்மெண்ட். மீண்டும் மேலே வீடியோவில் கேட்ட மன்னவன் வந்தானடி தோழி வரியை யோசித்துப்பாருங்கள்.

தியாகராஜர் காலத்தில்தான் இப்படி மெருகூட்டும் சங்கதி விஷயம் தோன்றியுள்ளதாய் ரங்கராமானுஜ அய்யங்கார் தன் இசைஉரையில் அபிப்பிராயப்படுகிறார். அதற்கேற்றவாறு தியாகரஜாரின் கீர்த்தனைகள் சங்கதிகளுக்கு பெயர்போனவை.

ஒரு பாடலில் எவ்வளவு சங்கதி வரலாம்? கணக்கெல்லாம் கிடையாது. உதாரணமாய் தியாகராஜரின் மரி மரி நின்னே என்ற காம்போஜி ராக கீர்த்தனையில் முதல் பல்லவியை மட்டும் 22 சங்கதிகளில் பாடமுடியும்.

சங்கதிகளுக்கு பிரசித்தி பெற்ற கீர்த்தனை, சக்கனி (த்ஸக்கனி என்று எழுதவேண்டும்) ராஜ என்று தொடங்கும் தியாகராஜரின் கரஹரபிரியா ராக கீர்த்தனை.

மதுரை மணி அய்யர் பாடுவதை கேளுங்கள்.

http://www.youtube.com/watch?v=7CsU7X5g35U

முதலில் எவ்வளவு முறை சக்கனிராஜமார்கமுலுண்டக என்று சொல்கிறார் என்று எண்ணிக்கொள்ளுங்கள். பிறகு மீண்டும் ஓட்டி, முதல் முறை சொல்வதற்கும் இரண்டாம் முறை சொல்வதற்கும் சற்றே வித்தியாசம் எங்கு வருகிறது என்று கவனியுங்கள். இப்படிச் செய்ய கரஹரபிரியா ராகமெல்லாம் தெரிந்திருக்கவே அவசியமில்லை. ஆண்டவன் கொடுத்த காது, கேட்கும் நிலைமயிலும், மனதில் அவசரமற்ற அமைதியும், பொறுமையும், ஆர்வமும் போதும்.

பேச்சுமொழியில் தற்குறியாய் எழுதும் என் குறை எழுத்தையே பொறுமையாக படித்து அதன் மூலம் இசையை அணுகமுடியும் என்று நம்பிவரும் உங்கள் அனைவராலும் இதுவும் நிச்சயம் முடியும்.

கச்சேரியில் கனகனவென மிருதங்கத்துடன், கடம் கஞ்சீரா என்று கூடவே வாசிக்க, வயலின் நிழலாய் தொடர, தேர்ந்த பாடகர் அனைத்து சங்கதிகளையும் தொட்டு சக்கனிராஜமார்கமுலுண்டக (அதுதான் முதல் வரி) என்று பாடிமுடிக்கையிலேயே, மனது பரவசமாகி வேறு எந்த ஸந்துலவிலும் சஞ்சாரம் செய்ய மறுத்து தூரனேல விலகிவிடும்.

யானைகள் பீடுநடையிடும் ராஜபாட்டை இருக்கையில் சாக்கடைச்சந்தில் வலிய எவனாவது புகுவானா சார் – இது மதுரமணி பாடும் பல்லவியின் பொருள்.

தியாகராஜரின் கீர்த்தனைகளில் மற்றொரு உதாரணம் நா ஜீவாதார என்று தொடங்கும் பிலஹரி ராக கீர்த்தனையில் அநேக சங்கதிகளுண்டு. விளையாட்டில்லை. நல்ல குரல் தேர்ச்சியும் அப்பியாசமும் இல்லையெனின் படைப்பாளி படைத்துள்ள சங்கதிகளை பாடகரால் வெளிக்கொணரமுடியாது. சமீபத்தில் (2008 என்று நினைக்கிறேன்) டி.எம்.க்ருஷ்ணா மியூசிக் அகதெமியில் இப்பாடலை திறம்பட பாடினார்.அதிலிருந்து இந்தப்பல்லவியை சங்கதிகளுடன் பாடும் இடத்தைமட்டும் ஒலிக்கோப்பாக கொடுத்துள்ளேன், கேளுங்கள்.

நா ஜீவாதார பல்லவி ஒலிக்கோப்பு

பல்லவியை (கீர்த்தனை முதல் வரியை) தியாகராஜர் அமைத்துள்ள சங்கதிகளுடன் பாடிமுடிக்கவே ஐந்து நிமிடம் பிடிக்கும்.

இது படைப்பாளியின் படைப்பூக்கம். கச்சேரியில் இவற்றை பாடிவிட்டு, தொடர்ந்து, பாடகரும் தன் படைப்பூக்கத்திறனுக்கேற்றவாறு (அவரின் குருவிடம் கற்றோ, அவராகவே ஸ்பாட்டிலேயோ) பல சங்கதிகள் வழியாக பல்லவியை மெருகேற்றலாம்.

“என்னய்யா அது ஒர்ரே வரியவே திருப்பித்திருப்பி பாடிகிட்டேருகரானுவ, எவ(ன்)ய்யா கேப்பான் இத்த,எதுக்கு இப்படி உருவேத்தி நமக்கு வெறியேத்துரானுங்க…” என்கிற ரீதியில் என்னிடம் அவ்வப்போது நண்பர்கள் குறைபட்டுள்ளனர். சங்கதியை படித்து, அறிந்து, காதைதீட்டி மீண்டும் கேட்க முயற்சி செய்தால், நாகூர் ஹனீஃபாவின் வார்தைகளில் சொன்னால்,

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள், அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை.

யோவ், என்னவோ பல்லவின்னு ஆரம்பிச்சே. எங்கெல்லாமோ சுத்திசுத்தியடிக்கறயே என்றால், அதையும் தொட்டுகொள்வோம்.

நம்ம அரியக்குடியாரின் சதுர்ராகமலிகை பல்லவியில் இப்போது சங்கதி எப்படி வருகிறது என்று கேட்டுப்பாருங்கள். நான்கு ராகங்களிலும் வரும் (பல்லவியின் பெருமைக்கும் பிரித்தாளுமைக்கும் முன் பாகங்களை பார்த்துக்கொள்ளுங்கள்).

அரியக்குடி ஒலிக்கோப்பு.

அவ்வளவுதான் சார் சங்கதி மேட்டர்.

இப்போது சார்ந்த சில தெளிவுரைகள்.

*****

ஓகே சார், சங்கதி படைப்பாளிகளின் படைப்பூக்க கருவி, புரியுது. இருபது சங்கதியெல்லாம் வைத்து டியூன் ரெடி. ஆனால் கேட்பவர்க்கு இந்த ட்யூன் புரிந்து, பிடிக்கவேண்டுமே என்றால், அது தனி விஷயம்.

துரத்ருஷ்டவசமாக, இசையமைப்பாளர்கள், நான் படைப்பதைத்தான் படைப்பேன், உனக்கு புரியவில்லை, பிடிக்கவில்லையென்றால் உன் அறிவை விருத்திசெய்துகொண்டுவா என்று இப்போதிருக்கும் ஒருசில இலக்கியவாதிகள் போல் திட்டவட்டமாய் ரசிகர்களையே சாடமுடிவதில்லை.

ஒரு சீசனில் கச்சேரிகளில் வெகுஜன ரசிகர்களுக்கு புரியாமல் நிறைய பாடிவிட்டாலோ, இசையமைத்த இரண்டு படம் ஊத்திக்கொண்டாலோ, அம்புட்டுதேங். காரியரெல்லாம் வெறும் டிபன் காரியராகி, வூட்டுக்கு போகவேண்டியுள்ளது. போதாக்குறைக்கு அவர்களது இசை அறிவையே உணர்ச்சிக்குவியலான படிமத்தில் மட்டும் நின்று சப்ஜாடாய் தூக்கியடிக்கும் பலர் வாயில் வேறு புகுந்து புறப்படவேண்டியிருகிறது.

இசையை பொறுத்தவரையில் மட்டும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கருதி (இலக்கியத்திற்கு இப்படியில்லையாம். அங்கு மக்கள் அறிவிலிகளாம்), தொடருவோம்.

சங்கதி கர்நாடக இசையில் மட்டும்தானா? இல்லை, ஹிந்துஸ்தானியிலும் முக்கியமான அழகியல் அங்கம். மேற்கத்திய செவ்வியலிலும் சீஃப் வயலினிஸ்ட் ஸ்பாட் இம்ருவைசேஷனாய் காட்டக்கூடிய அங்கமே. இந்த சங்கதி மேட்டர் பொதுவாக இசையில், பாட்டின் நளினத்தை, அழகியலை ஏற்றிச்சொல்லி, கேள்வியனுபவத்தில் கிளர்ச்சி கூட்டும் என்பதால், நம் திரையிசையிலும் விரவியுள்ள அங்கம். மன்னவன் வந்தானடி பார்த்தீர்களல்லவா? என்னம்மா கண்ணு சௌக்கியமாவையும் ஏழு விதமாய் பாடுகையில் சங்கதிகள்தான் போடுகிறார்கள்.

அப்ப கர்நாடக இசை வர்ணங்களில் சங்கதி வருமா? கர்நாடக இசையில், கீர்த்தனைகளில்தான் அதிகம் சங்கதி வரும். கீர்த்தனை பல்லவி, அனுபல்லவி, சரணம் எதிலும் சங்கதிகள் அ மைக்கலாம். வர்ணத்தில் வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலே குறிப்பிட்ட நின்னுக்கோரி வர்ணத்தில் சில சங்கதிகளை புகுத்த முடியும். கச்சேரிகளில் செய்வார்கள்.

இன்னொரு இசை விஷயத்தையும் விலக்கிவிடுகிறேன். பாடகருக்கு குரல் போகிறது என்றால் என்ன?

ஒரு ராகத்தில் பாடகர் பாட்டை பாடுகிறார் என்றால் பாடல் வார்த்தைகளை ராகத்தின் ஸ்வரங்களுக்கான ஒலியோசைகளுக்குள் புகுத்திப்பாடுகிறார் என்று, மேலே மோஹன ராக நின்னுக்கோரி சங்கதி விள க்கப்படத்தில் பார்க்கையில் புரியும். பாடகருக்கு குரல் போகிறது என்றால், ஒரு ராகத்தின் ஸ்வரங்களில் நிலையாக நிற்காமல் அங்குமிங்கும் அலைகிறது என்று பொருள். அதாவது மோஹன ராகம் பாடுகையில் மேலே படத்தில் புள்ளிகளின் ஸ்வரங்களின் ஒலியோசையை விட்டு விலகி, வேறு ஸ்வரங்களில் (புள்ளிகளுக்கு இடையில், வேறு புள்ளிகளிலான ஸ்வரங்களில்) பாடுகிறார். மோஹன ராகத்தில் இல்லாத வேறு புள்ளிகள், ஸ்வரங்கள் என்பதால், அந்நியஸ்வரங்கள் வருகிறது என்று பொருள்.

பெரிய பாட்டில், இப்படி ஒரே ஒரு முறை ஒரு ஸ்வரத்தில் மட்டும் நடக்கலாம். கேட்பவற்கு சட்டென்று தெரியாது. மீண்டும் மீண்டும் நடந்தால், மரபிசைபற்றியெல்லாம் அறியத்தேவையில்லாத என்னைப்போன்ற சாதாரண ரசிகரே, கேள்வியறிவிலேயே கண்டுகொண்டுவிடுவார்.

காலேஜில் கல்சுரல் நிகழ்ச்சிகளில் நாமும் எஸ்.பி.பி.தான் என்று மேடையில் ”எங்கேயும் எப்போதும்” என்று யுவதிகள் கிறங்க மைக்கையெல்லாம் கையில் தூக்கிபோட்டு பிடித்து சகாக்கள் பாடுகையிலும், குரல் ஒத்துழைக்காமல் சற்றே அந்நிய ஸ்வரங்கள் ஒலிக்குமாறு மாற்றிப்பாடினாலும், ”டேய், மேல போரச்ச வாய்ஸ் நிக்கல, மாமு சொதப்பிட்டாண்டா” என்று மாட்டிக்கொள்வரே, அதுதான் குரல் போவது. கர்நாடக இசை கச்சேரியில், கேடுக்கேட்டே காதுதேய்ந்த தேர்ந்த தாத்தா ரசிகர்கள் ஒருமுறை ஒரு ஸ்வரத்தில் சொதப்பினாலும் ”ஸ்ருதியே நிக்கல” என்று கண்டுபிடித்து உதட்டைபிதுக்கிவிடுவர்.

மொத்தத்தில் ஸ்ருதி விலகுதல், குரல் போதல், என்பது அகவயமான உணர்ச்சிக்குவியல் படிமத்தின் மதிப்பீடு இல்லை. எனக்கு அப்படித் தோன்றுகிறது என்று என் கருத்தாய் அதை போகிறபோக்கில் சொல்வதற்கு.

மோஹனத்தின் ஸ்வரங்கள் ஸ வென்றால் ஒரு கட்டை ஸ்ருதியில் 240 ஹெர்ட்ஸ், ரி என்றால் 270 ஹெர்ட்ஸ் என்று (உதாரணத்திற்காக எண்களை கொடுக்கிறேன். சரியான ஃப்ரீக்வென்ஸி தேவையெனில் சொல்லமுடியும்) திட்டவட்டமாய் அறிவியல்ரீதியாய் நிர்ணயிக்கமுடிந்த இடைவெளிகளில் ஒலிக்கும் ஸ்வரக்கூட்டு. புறவயமான விஷயம். இ ந்தச் ஸ்வரங்களை பாடவேண்டும் என்று பாட்டில் இருக்கையில், இதிலிருந்து விலகி, வேறு மோஹன ராக ஸ்வரங்களையும் விடுத்துப் பாடினால் குரல் போகிறது என்று புறவயமாக, துல்லியமாக, அனைத்து ரசிகர்களும் ஆமோதிக்கும் வகையில் மதிப்பிட முடியும்.

ஆனால், மோஹனராகத்திலேயே ஒரு ஸ்வரத்திற்கு பதிலாய் வேறு ஸ்வரங்களைகொண்டு பாடியபடி சென்றால், பாடகர் வேரியேஷன், ப்ருகாக்கள், கமகங்கள், கார்வைகள் கொடுத்து சங்கதிகள் காண்பித்திருக்கலாமோ என்று முதலில் நம்மை நாமே சரிபார்த்துக்கொள்ளவேண்டும். பல்லவி வார்தைகளுக்கு நடுவில் வாய்திறந்து சொற்களற்ற ஆ காரத்தில் மோஹன ராக ஸ்வரங்களை நிரப்பிக்கொண்டே சென்றாலும் தவறில்லை. ஏனெனில் இப்படியெல்லாம் பாடுகையில் இங்கு ஸ்ருதியும் விலகவில்லை. ராகமும் மாறவில்லை. அதனால் குரலும் போகவில்லை.

மேலுள்ள விளக்கம் உங்களுக்கு உபயோகமாகலாம். உதாரணமாய், ” இன்னாராகிய பாடகர் பாடிய திரையிசையை கேட்டிருக்கிறேன், அவ  ருக்கு குரல் போகுங்க” என்று ஒருவர் சொன்னால், அது உண்மையென்றால் இதுவரை அப்பாடல்களை கேட்டவர்கள் அப்படிச் சொல்லவில்லையே, ஒருவேளை அவர்களனைவருக்கும் காது லேதா, இல்லை இசையின் புறவய அங்கத்தை, அகவயமாய் அள்ளித்தெளிக்கும் குறைசொல்பவரின் இசையறிவு செம்மையடையவில்லையா என்பதை பாகுபடுத்தி நீங்களே உணர்ந்துகொள்லலாம். நீங்களே உங்கள் கேள்திறன், அறிவை வைத்துக் கேட்டுச் சரிபார்த்தும் கொள்ளலாம்.

*****

சரி, சங்கதிகள் பற்றி அறிந்துகொண்டுள்ளதால், இப்போது இசை பற்றி எந்த இலக்கணமும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அவசியமில்லாமல், பாட்டின் மெலடியை பாடகர் பலவிதமாய் பாடுவதை, அதனால் மனதில் ஏற்படும் கிளர்ச்சியை என்னுடன் சேர்ந்து உங்களாலும் ரசித்து அனுபவிக்கமுடியும் இல்லையா?

இப்படியே ஒரு நூறு திரையிசை பாடல்களிலாவது சங்கதிகளை தேடிக் கண்டுகொண்டு ரசித்தீர்களென்றால், பாட்டை அவசரமாய் கேட்டுவிட்டு, அதில் கமகங்கள், ப்ருகாக்கள் கார்வைகள் கலந்து சங்கதிகள் வருவதை கவனிக்க அவகாசமின்றி, பாடகர் குரல் நடுங்குகிறது என்றெல்லாம் என்னைப்போல் பகீரங்கமாய் இசை அறியாமையை பறைசாற்றத்தேவையற்ற ரசிகானுபவத்தை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள்.

கூடவே இந்த பாடலின் சிறு-சங்கதியின் தேர்ச்சி மகாத்மியம் உங்களுக்கே புரியும்.

http://www.youtube.com/watch?v=PedLzIREx1Q

உதாரண மாக, பல்லவியிலேயே, ”கை வண்ணம்” என்று பாடும் இடத்தை கவனியுங்கள். பாடலின் மிச்ச ரசனையை, வார்த்தையில் விளக்கிச்சிதைக்காமல், உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

*****

அடுத்து சங்கதியின் நீட்சியாய், நிரவல். பல்லவி பாடுவதில் முக்கியத்தேவை.

இப்படிச்சொல்லலாம். படைப்பவரின் கற்பனைத்திறன், படைப்பூக்கம், கிரியேடிவிட்டி, சங்கதி. பாடுபவரின் படைப்பூக்கம் நிரவல்.

அடுத்த பாகத்தில்.

*****