கர்நாடகசங்கீதத்தில் நிரவல் (தெலுங்கில் நெரவு) என்றால் நிரப்புதல், பரப்புதல், பல்கிப்பெருக்குதல் போன்ற அர்த்தங்கள் தொனிக்கும். நிரப்புதல் என்கிற தமிழ் அர்த்தத்திலேயே இதை அணுகலாம். கீர்த்தனையை, பாடலை, கெடச்ச gapப்பில் இசையால் கொட்டி நிரப்புதல் என்று அறிமுகவிளக்கமாக கொள்ளலாம். ஒரு ஐடியாவை பலவகைகளிலும் குலுக்கி புரட்டிப்போட்டு அலசும் மனித மனதின் செயல்பாட்டின் இசைவழி வெளிப்பாடாகவும் பார்க்கலாம். பாடலின் ஒரு வரியை, சாஹித்தியத்தை, எடுத்துக்கொண்டு, அதை நீட்டி, முழக்கி, புரட்டி, சுருக்கி, ராகத்தின் ஸ்வரூபத்தை, பரிமாணங்களை, அந்த வரி வடிக்கப்பட்டிருக்கும் ராகத்தால், இசையால், பலவகைகளிலும் அலசி நிரப்பிச்சொல்வது நிரவல்.
சங்கதி பற்றி சொன்னோம். அதை மனதில் வைத்து இப்படிச்சொல்லலாம். ஒரு கீர்த்தனையை, பாடலை, படைப்பவரின் கற்பனைத்திறன், கிரியேடிவிட்டி, படைப்பூக்கம், சங்கதி. அந்தக் கீர்த்தனையை பாடுபவரின் படைப்பூக்கம் நிரவல்.
நிரவல் பாடுவது கடினம். சில வித்வான்கள் தங்கள் கச்சேரி வாழ்க்கையயே நிரவலை தவிர்த்து ஒப்பேற்றியிருக்கிறார்கள். மரபிசையிலேயே இப்படியென்றால் திரையிசையில் நிரவல் செய்யமுடியுமா என்ன?
இதோ ஒரு திரையிசை உதாரணம். கீழே கொடுத்துள்ளதே நண்பர் ராம் ஓர் இரவு தேடியெடுத்தது.
சிவசங்கரி சிவானந்தலஹரி என்பது பாடல். ஜகதலப்பிரதாபன் திரைப்படத்திலிருந்து. அந்த பாடல் வரிகளையே எடுத்துக்கொண்டு கடினமான நிரவல் அங்கத்தை சுருதிவிலகாமல் பாடுபவர் யாரென்பது பொருட்டல்ல.
http://www.youtube.com/watch?v=lw7oGHq1Qng
நிரவலை கவனியுங்கள். சிவசங்கரி சிவானந்தலஹரி என்ற பதங்களை நீட்டி முழக்கி, குறுக்கிச் சுருக்கி, தடுக்கி உடைத்து, மூன்று மூன்றாய் ஸ்வரக்கோர்வையாய் பதங்களை உபசொற்களாய் (’தான’ மாய்) உடைத்து பாடி, அடுத்த ரவுண்டில் சடாரென்று வழுக்கி சி , வா, நந், த, ஹரி என்று விரித்து இழுத்து, “ஸ்தம்பான் அரோஹன் நிபபாத பூமௌ” என்று மந்தோதரியை சீதை எனநினைத்த ஆஞ்சவேயரின் ரியாக்ஷன் போல ஒரு சமயம் தரஸ்தாயிவரை குரல் எழும்பி கம்பத்தின் உச்சிவரை ஏறி, சர்ரென்று குதித்து கீழே விழுந்து மந்தர ஸ்தாயிவரை இறங்கி, பிரவாகித்து, அனைத்தையும் தாளக்கட்டுக்கோப்பிலிருந்து விலகாமல், ஒரே ராகத்தினுள்ள ஸ்வரங்களுக்குள், அன்னியஸ்வரங்கள் வராமல் பாடி…
ஒரு கோடி தான் காட்டுகிறார் அமரராகிவிட்ட பாடகர். சினிமாவில் அவ்வளவுதான் செய்யமுடியும். இவரது டாக்டர் மகன் இன்றும் டிசெம்பர் சீசனில் தமிழ் பாடல்களை முன்னிறுத்தி ஒரு 15 கச்சேரிகளாவது செய்கிறார். நிரவலோடு. கேட்டுப்பாருங்கள்.
நிரவலை இன்னமும் சற்று டெக்னிகலாய் விளக்கிவிட்டு உதாரணங்கள் தருவோம். மீண்டும் சங்கதியின் விளக்கப்படத்தில் இருந்து தொடங்குவோம்.
இந்த படத்தில் நின்னுக்கோரி என்று தொடங்கும் வர்ணத்தின் முதல் வார்த்தையை மட்டும் சங்கதிகள் வைத்து பாடுவதில், மோஹன ராகத்தின் ஸ்வரங்களிலேயே வேறு வேறு தினுசுகளாக ஸ்வரக்கோர்வைகள் வைத்துப் பாடுவது என்பதைக் கண்டோம் (படத்தில் gray நிற கோடுகளில் வழியாக பாடினால் ஒரிஜினல் மெலடி; majentha நிற கோடு வழியாக பாடுவது முதல் சங்கதி).
பாட்டின் பல்லவியை இவ்வாறு சங்கதிகள் வைத்துப் பாடுகையில், பல்லவி ஒரு தாளத்தில், ஒரு ஆவர்த்தத்தில் அமைந்திருந்தால், சங்கதிகள் போடுகையிலும் அதே ஒரு ஆவர்த்தத்திற்குள் வருமாறு பல்லவியை அமைத்து பாடவேண்டும். உதாரணமாக, மேலே குறிப்பிட்டுள்ள வர்ணம் இவ்வாறு உள்ளது.
நின்னுக் கோரியுனா நுரா நிகிலலோக நாயகா
நன்னுபாலிம்ப ஸமயமுரா நாமிதி க்ருபாஜூடரா
ஸன்னுத்தாங்க ஸ்ரீநிவாஸ
இதில் நின்னுக்கோரியுனா நுரா எனும் பல்லவி (முதல்) வரி ஆதிதாளத்தில் ஒரு ஆவர்த்தத்திற்கு அமைந்திருக்கிறது. இதற்கு ஸ்வரக்கோர்வைகளாக சங்கதிகள் அமைக்கையிலும் மீண்டும் ஒரே ஆவர்த்தத்திற்குள் பாடவேண்டும். பல சங்கதிகள் இருக்கின்றன என்றால், பல முறை ஒரு ஆவர்த்தன அவகாசத்தில் அமைந்த பல்லவி வரிகளாக பாடிக்கொண்டே செல்லவேண்டும்.
நிரவல் கட்டுமானம் சற்று மாறுபடும்.
சங்கதிகள் போல, நிரவலிலும் ஒரு பாடல் வரியை எடுத்துக்கொண்டு ராகஸ்வரங்களைக்கொண்டு பிரஸ்தாபிக்கவேண்டும். அந்த வரி பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று ஏதாகவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு கீர்த்தனையில் நிரவல் வரியை எப்படி தேர்வுசெய்யவேண்டும் என்று விதிகள் இருக்கிறது. பொதுவாக தெய்வப்பெயர்கள் அடங்கிய, அத்தெய்வத்தை, அது உறையும் இடத்தை, தெய்வாம்சங்களை, தெய்வீகத்தை, போற்றும் பொருள் அமைந்த வரிகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது நியதி. நல்லதை, உன்னதத்தை மீண்டும் பாடி இசையால் நிரப்பி விருத்திசெய்து கிளர்ச்சிகொள்வதே நிரவல் நியதி. அமங்கள சொற்களுக்கு இடமில்லை. பலாச்சுளையைத்தான் மேலும் தேனில் முக்கிச் சாப்பிட அனுமதி.
மேலேயுள்ள நின்னுக்கோரி வர்ணத்தில் சங்கதிகளை பல்லவி, அனுபல்லவி மற்றும் சரணம் எதில் வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் நிரவல் செய்யவேண்டுமென்றால் பொதுவாக, சரணமான, ஸன்னுத்தாங்க ஸ்ரீநிவாஸ எனும் வரியை எடுத்துக்கொள்வார்கள். ஸ்ரீநிவாஸ என்பது தெய்வப்பெயர்.
இந்த வரியில் நிரவல் என்றால் படத்திலுள்ளதுபோல் அனுமானிக்கலாம்.
படத்தில் மேலே ஸன்னுத்தாங்க ஸ்ரீநிவாஸ எனும் வரியை ஒரிஜனலாய் எப்படிப்பாடவேண்டும் என்று (என் மனதிற்கு தோன்றிய சில) ராகஸ்வரங்களில் அமைத்திருக்கிறோம். சரியாக பாடினால், இது தாளத்தில் 1 ஆவர்த்தத்தில் முடிந்துவிடவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். படத்தில் கீழே இந்த வரியை நிரவல் செய்வதென்றால் எப்படி என்று பாருங்கள். அதே பாடல் வரிதான். தாளமும் அதன் காலப்பிரமாணமும் அதேதான். ஆனால் வரியை அதன் வார்த்தைகளை நீட்டி முழக்கி வெட்டி சுருக்கி ராகஸ்வரங்களுக்கேற்ப எப்படிவேண்டுமானாலும் (கேட்பதற்கு இனிமையாக) பாடிக்கொண்டே போகலாம். பல ஆவர்த்தங்களுக்கு. இங்கு நான்கு ஆவர்தங்களுக்கு அமைத்திருக்கிறோம்.
முக்கியமாக, ஒரிஜினல் மெலடி (மேல் படம்) வார்த்தை வரி தொடக்கமும் முடிவும் சரியாக சமத்தில் அமைந்திருந்தால், நிரவல் பல ஆவர்த்தங்களுக்கு செய்தாலும் முடிக்கையில் கரீட்டாய் தாளத்தினுள் ஆவர்த்தம் மிச்சம் வராமல் பொருத்திவிடவேண்டும். அடுத்த ரவுண்டு இதே வரியை பாடுகையில் சமத்தில் இருந்து தொடங்கிக்கொள்வதற்கு ஏதுவாக.
முதல் விடியோவில் சீர்காழி கோவிந்தராஜன் நிரவல் பாடுவதை மீண்டும் கேட்டுப்பாருங்கள்.
நிரவல் படத்தையும், முன்னர் கொடுத்துள்ள சங்கதி படத்தையும் ஒப்பிடுங்கள். சங்கதி என்பது ஒரிஜினல் பாடல் வரி எவ்வளவு ஆவர்த்தத்தில் அமைக்கப்பட்டுள்ளதோ அதே ஆவர்த்தத்தில்தான் அமையும். நிரவல் அதே வரியை எவ்வளவு ஆவர்த்தத்திற்கு வேண்டுமானாலும் இழுத்து, விஸ்தரித்து நிரப்பலாம். முடிக்கையில் சரியாக தாள ஆவர்த்தத்தினுள், எடுப்பு பிசகாமல் முடிக்கவேண்டும்.
சங்கதி நிரவல் இரண்டுமே கீர்த்தனையை, பல்லவியை, பாடல் வரிகளை மெருகூட்டுவதற்கான அழகியல் சமாச்சாரம்தான். சங்கதி படைப்பாளியின் படைப்பூக்கம். பல சங்கதிகள் வைக்கலாம். ஆனால் பாடகரின் படைப்பூக்கத்திற்கு பெரிதாக இடமில்லை. நிரவல் மொத்தமும் பாடகரின் படைப்பூக்கம் சார்ந்தது. பாடகருக்கு வித்தை எவ்வளவு பரிமளிக்கிறதோ, அந்த ராகத்தில் சம்பத்து எவ்வளவோ அவ்வளவு செய்து நிரவலாம்.
ஆனால் கச்சேரியின் முதல் உருப்படியாகப் பாடப்படும் வர்ணத்தில், அரிதாகத்தான் நிரவல் செய்கிறார்கள். தொடக்கப் பாடலிலேயே அனைத்து கர்நாடக இசை அங்கங்களையும் ஒருசேர செய்யவேண்டாம் என்பதாலோ என்னவோ. முதல் சீனிலேயே மொத்த கதையையும் சொல்லிவிடக்கூடாது இல்லையா.
அதற்காக தமிழ் சினிமா போல எந்த சீனிலேயுமே கதையை சொல்லாமல் இருக்கக்கூடாது. அட்லீஸ்ட் படம் முடிவதற்குள் சொல்லிவிடவேண்டும். ஏனெனில் சில வித்வான்கள் தங்கள் கச்சேரி வாழ்க்கையயே நிரவலை தவிர்த்து ஒப்பேற்றியிருக்கிறார்கள்.
*****
நிரவல் என்பதே இசை வைத்து நிரப்புதல் என்கையில் புரியவேண்டியது, ஒரிஜினல் பாடல் வரிகள் முதலில் அதற்கேற்றவாறு தாளத்தினுள் நிறைய அவகாசங்களுடன் சுருக்கமாக பொருந்தியிருக்கவேண்டும். இடைவெளிகள் இருந்தால்தானே நிரப்பமுடியும். பல்லவி உருவாக்குகையில் இதைமனதில்கொண்டு நிரவல் செய்வதற்கு தகுந்தவாறு வரிகளை வார்த்தைகளுக்கிடையே வேண்டிய அவகாசங்கள், அருதிகள் வைக்க முடியுமாறு அமைக்கவேண்டும்.
ஏற்கனவே குறிப்பிட்டபடி வார்த்தைகளை போட்டு தாள நேரம் மொத்தத்திற்கும் அடைத்து அந்தண்டை இந்தண்டை இசைவைத்து இழுத்தாலும் இசைந்துகொடுக்காமல் பல்லவி அமைத்தால் அதற்கு யதி பல்லவி என்று பெயர். பெரிதாக நிரவல் செய்யமுடியாது. பல்லவி வாக்யத்தை பாடிவிட்டு முடித்துகொள்ளவேண்டியதுதான். கணக்கு காட்ட முடியாது. பல்லவி பாடிவிட்டேன் என்று வேண்டுமானால் கணக்கு காட்டலாம்.
குறையாய் தெரியவேண்டிய இது இன்று சில மேடையஸ்தர்களுக்கு நிரை. சுருக்க பல்லவி பாடிமுடித்துவிடுவார்கள்.
தெய்வப்பெயர்கள் அடுத்து தெய்வம் உறையும் இடத்தை போற்றும் வரிகளையும் நிரவலுக்கு எடுத்துக்கொள்ளலாம். பூலோகவைகுண்டமிதியினி என்பது ஒரு பாப்புலர் நிரவல் வரி. ஓ ரங்க ஸாயி என்று தொடங்கும் காம்போதியில் அமைந்த கீர்த்தனையில் அடிக்கடி எடுத்துக்கொள்ளப்படும் நிரவல் வரி. பூலோக வைகுண்டத்தின் (எந்த ஊர் என்று தெரியும்) மகத்துவமும் தெய்வீகமும் எப்படி இருக்கும் என்பதை இசையால் விஸ்தரித்து, வார்த்தைகளினூடே காம்போதிக் கூழை அச்சில் இட்டு இட்டு நிரப்பி, தாள ப்ரமாணங்கள் குலையாமல், பாடகர்கள் பலதினுசுகளில் கச்சேரியில் கூழ்வடாமாக பிழிந்து, மொத்தமாக சாஹித்தியமாகவும் இல்லாமல், ஸ்வரக்கோர்வைகளாகவும் இல்லாமல் அரைப்பதமாக காய்ந்த நிலையில் துணியிலிருந்து உறித்து ரசிகர்களுக்கு கற்பனைசெய்ய ஊட்டுவார்கள். தேர்ந்த நிரவல் காரத்தில், கேட்பதற்கு ஜிவ்வென்று இருக்கும்.
அதேபோல கண்ணுலார ஸேவின்சி என்பது மற்றொரு பாப்புலர் வரி. தியாகையரின் எந்தநி நே வர்னெய்ந்துனு (சபரி) என்று தொடங்கும் முகாரி ராகத்தில் அமைந்த கீர்த்தனையின் நிரவல் வரி. பாடல் தெய்வாம்சமான ராமலக்ஷ்மன ர்களை நேரில் கண்டு அவர்களுக்கு உணவளித்து மோக்ஷத்திற்கு சென்ற சபரியின் பாக்யத்தை வியக்கிறது. நிரவல் வரி தெய்வப்பெயர்களை விஸ்தரிக்காமல், சபரி பார்த்துப்பார்த்து உவகித்து கண்கள்கொள்ளாமல் ராமரை சேவிக்கும் பாக்யத்தை, அந்த உன்னத நிலையை இசையால் நிரப்பி விஸ்தரிக்கிறது. இதில் முசிறி சுப்பிரமண்ய ஐயரின் நிரவல் பிரசித்தி.
இங்கு ஒரு விமர்சனக்கருத்தை குறிப்பிடவேண்டும். பாடலோ சபரியின் பாக்யத்தை வியப்பது. நிரவல் வரியும் அதே மாதிரி. ஆனால், முகாரி ராகம் என்பதற்காக பாடுகையில் வாயைக்கோனியபடி கண்ணுலாஆஆஆஆஆற… என்று மேடையில் அலறி அழக்கூடாது. சிரிச்சா ஸித்தார் அழுதால் ஷெனாய் என்பது எப்படி ஒரு திரையிசை, பரப்பிசை, சௌகர்யத்திரிபோ, அதேபோல்தான் முகாரி ராகம் சோகத்தைச்சொல்வதற்கு, அழுவதற்கு மட்டும் எனும் புரிதலும். தெய்வத்தை நேரில்கண்டு மோக்ஷத்திற்கு போகும் உன்னத களிப்பான நிலையில் சபரியை விவரிக்கப் பாடுகையில், முகாரியில் சோகரஸத்தை பிழிந்து ரசிகர்களை அழவைக்க எத்தனிக்கக்கூடாது. பொருள் தெளிந்த ரசிகர்கள் மேடையில் இப்படி தத்துபித்தாகச் செய்வதினால்தான் (தியாகையருக்காகவும், கர்நாடக இசைக்காகவும்) அழுவார்கள்.
*****
நிரவல் செய்ய லயத்திலும் தாளத்திலும் நல்ல தேர்ச்சி வேண்டும். நிரவல் அங்கம் மூலமாக கச்சேரியில் விறுவிறுப்பு ஏற்படுத்தமுடியும். ஸ்ரீசுப்ரமண்யாய நமோஸ்தே யின் வாசவாதி யில் தொடங்கும் அரியக்குடியின் நிரவல் ஃபேமஸ். ராம்நாட் கிருஷ்னன் இன்னொரு நிரவல் விற்பன்னர். தற்போது பாடுபவர்களில் டி.எம்.கிருஷ்ணாவின் நிரவல் ஒரு க்ளைமாக்ஸ் வரை சென்று தூங்குபவர்களையெல்லாம் அதட்டி எழுப்பி உட்காரவைக்கிறது.
கச்சேரி சர்க்யூட்டில் நிரவல் சூரிகள் சூரர்கள் இருக்கிறார்கள். தொடவே முடியாத நிரவல்களை செய்து அசத்தியிருக்கிறார் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி. ஒரு சாம்பிள் இங்கு தருகிறேன். யாரும் பாடவே தயங்கும் புஷ்பலதிகா ராகத்தில் அமைந்த இகநைன என்று தொடங்கும் கீர்த்தனை.
இந்த ராகத்தில் இவர் நிரவலே செய்கிறார்.
http://www.youtube.com/watch?v=CvMCILupjhQ
ராகம் தானம் பல்லவி உருப்பிடியில், பல்லவி வரி(களு)க்கு நிரவல் பாடுகையில், தாளப்பிரதானமாய் பாடிக்கொண்டே இருந்தால் போர் அடித்துவிடும். தாளமே தெரியாதவர்களும் பல்லவியை பாடுகையில் கேட்பதற்கு போரடிக்காமல் இருக்வேண்டும். மூன்றுவிதமாய் நிரவல் காட்டமுடியும். எம்.எஸ்.சுப்புலட்சுமி செய்துள்ளார்.
1. மெதுவான காலப்பிரமாணத்தில், கீழ்காலம் நிரவல் பாடுகையில் ப்ருகாக்கள் அதிகம் வரலாம். உருட்டல்கள். (நிறைய ராக ஆலாபனை, மெலடி அங்கங்கள் சேர்க்கமுடியும்) 2. அடுத்த வகையாக நிரவலை வர்ணம் மாதிரி இழுத்து இழுத்து பாடுவது (கொஞ்சமாய் தாள, லய விஷயங்கள் அதிகரிக்கும்; ராக அனுபவம் குறையும்) 3. மூன்றாவது வகையாக மெலடி மறைந்து, தாள தட்டுகளுக்கு ஏற்ப வரிகளும் உடைக்கப்பட்டு நிரவலில் மொத்தமாக ரிதம் முக்கியத்துவம் பெறும். சவுக்க காலத்திலிருந்து புறப்பட்டு துரித காலத்தில், க்ளைமாக்ஸ் ஸ்பீடில் உருட்டி, மலையேற்றி, வாய்ப்பாட்டும் வயலினும் போட்டிபோட்டு வாசித்து உச்சத்திற்கு ஏற்றி முடிப்பது.
***
நம்ம உதாரண ராகமாலிகை ராட்டைப்பல்லவிக்கு வருவோம். பல்லவி ஒரு ராகத்தில் அமைந்திருக்கிறதென்றால் அந்த ராகத்தை மட்டும் விஸ்தாரம் செய்து காட்டினால் போதும். பல்லவியின் வரியையும் எங்குவேண்டுமானாலும் தொடங்கி ஜாலியாக அப்படி பல ஆவர்த்தங்கள் நிரவல் செய்துவிட்டு பல்லவியை (சம எடுப்பாய் இருக்கையில்) தாளம் ஒரு சுற்றின் தொடக்கத்தில் வந்து முடித்துகொள்லலாம்.
ஆனால் ராகமாலிகை பல்லவியில் நிரவல் செய்வதற்கு எந்த ராகத்தில் நிரவலோ அந்த ராகத்தில் பாடப்படும் சாஹித்திய பகுதியில் தொடங்கவேண்டும். பல ஆவர்த்தங்கள் மொத்த பல்லவியையும் இந்த ராகத்தில் விஸ்தரித்து பாடி, தாளத்தின் ஒரு ஆவர்த்தத்தில் பல்லவியின் அந்த ராகத்தில் சாஹித்யம் அமைந்த இடத்திலேயே கொண்டுவந்து முடிக்கவேண்டும்.
உதாரணமாய், நாம் ஏற்கனவே உலலாகட்டிக்கு ஆதி தாளத்தில் வகுத்துக்கொண்ட ராக தான பல்லவியே, கொண்டுவா பல்வலியே என்ற பல்லவி, இப்போது இரண்டு ராகத்தில் அமைந்திருக்கிறது என்போம். முதல் ராகத்தில் ஆதி தாளத்தில் முதல் நான்கு அக்ஷரங்களுக்கு ராக தான பல்லவியே வார்த்தைகளையும், இரண்டாவது ராகத்தில் மிச்ச நான்கு அக்ஷரங்களுக்கு கொண்டுவா பல்வலியே வையும் பாடுவதுபோல் அமைகிறது என்போம்.
நிரவல் செய்கையில் முதல் ராகத்தில் செய்தால், ஆதி தாளத்தின் தொடக்க தட்டிலிருந்து நிரவலை தொடங்க வேண்டும். ராக தான பல்லவியே என்று பாடியபடி. பிறகு மொத்த பல்லவியையும் இதே ராகத்தில் பல சுற்றுக்கள் விஸ்தரித்து பாடி முடிக்கையில் ஆதி தாளம் ஒரு சுற்று முடியும் இடத்தில் கொண்டுவந்து முடிக்கவேண்டும்.
இரண்டாவது ராகத்தில் நிரவல் செய்கையில், ஆதி தாளத்தின் ஒரு சுற்றில் நான்கு அக்ஷரங்கள் விட்டு, முதல் லகு தொடங்குகையில் கொண்டுவா பல்வலியே என்று பாடத்தொடங்கி, பல்லவி மொத்தத்தையும் இந்த ராகத்திலேயே பல சுற்றுக்கள் பாடி, முடிக்கையில் மீண்டும் சமத்தில் இருந்து நான்கு அக்ஷரங்கள் விட்டு லகுவின் தொடக்கத்தில் முடிக்கவேண்டும்.
இவையெல்லாம் பாட்டும் தாளமும் சம எடுப்பாய் இருக்கையில். இப்படியில்லையேல் செம கடுப்பாய் இருக்கும்.
[மேலே லகு த்ருதம் சம எடுப்பு ஆதி தாளம், ஆவர்த்தம், களை, சவுக்ககாலம், அக்ஷரம் போன்ற டெக்னிக்கல் வார்த்தைகளுக்கு நான்காம் பாகத்தில் விளக்கங்கள் கொடுத்திருக்கிறோம்.]
இப்போது நம் நான்கு ராக, இரட்டை ஆவர்த்த, இரண்டு களை ஆதி தாள ராட்டைப் பல்லவியை யோசித்துப்பாருங்கள். சமத்திலேயே தொடங்கவில்லை. முதல் சங்கராபரண ராகமே, சங்கராபரணனை என்று முக்கால் இடம் தள்ளித் தொடங்குகிறது (இந்தப்பல்லவியின் அமைப்பை மூன்றாம் பாகத்தில் விளக்கியுள்ளோம்). எந்த தனி ராகமும் சமத்தில் தொடங்கும் சாஹித்தியம் பெற்றிருக்கவில்லை. சங்கராபரணணை என்று நிரவல் தொடங்கினால் எது ஏற்கனவே குறிப்பிட்டப்படி சமத்திற்கு முக்கால் தள்ளி தொடங்கும். இங்கு தொடங்கி, பல ஆவர்த்தனங்கள் நிரவல் செய்தபின், அங்கே வந்து, அதாவது, சமத்திற்கு முக்கால் இடம் தள்ளி, முடிக்கவேண்டும். அழைத்தோடி, வாடி கல்யாணி, தர்பாருக்கு என்று எந்த சாஹித்திய பகுதியும் அந்த ராகத்தினை நிரவல் செய்வதற்கு சமத்திலோ, ஏன், தாளத்தின் எந்த அக்ஷர தட்டிலோ (அதாவது, விரல் எண்ணிக்கை இடையிலேயே அனைத்து ராக சாஹித்யமும் தொடங்கும்) தொடங்கமுடியாதவை.
இதை லயத்தில் கைதேர்ந்தவர்கள் ஜிண்டாமிர்தம் செய்வார்கள். அரியக்குடியாரே அமர்க்களமாய் செய்திருப்பார். மேலே கொடுத்துள்ள பல்லவி அடங்கிய அவரின் கச்சேரி கமர்ஷியலாக கிடைக்கும். கேட்டுப்பாருங்கள். இங்கு யூடியூபில் இருக்கும் சாம்பிளைத் தருகிறேன். நிரவல் பகுதியில் முடிந்தால் ஆதி தாளம் போட்டுப்பார்த்து கேளுங்கள். நான் கூறுவது மேலும் விளங்கும்.
http://www.youtube.com/watch?v=lT9nD9C1gQc
இவ்வகை நிரவலுக்கு பிறகு, ஸ்வரகல்பனை செய்வார்கள். ஸ்வரங்களாக கற்பனைத்திறனை வெளிப்படுத்துவது. சதுர் ராக பல்லவியில் ஒவ்வொரு ராகத்திலும் செய்வார்கள். இதற்கு பிறகு இன்னொரு பிரமிக்கும் கணக்குவழக்கு இருக்கிறது. அனுலோமம், பிரதிலோமம் எனும் வகைகள். தாளத்தையும் பல்லவியையும் பல வேகங்களில் ஒருங்கிணைத்து காட்டுவது. பொறுப்பாய் ஒழுங்காய் செய்யவேண்டும் என்றால் இதற்கே 20 முதல் 30 நிமிடங்கள் பிடிக்கும்.
*****