சென்ற நான்காகவது பாகக் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல சதுர்ராகமாலிகை பல்லவி ரிப்பீட்டு.
சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி தர்பாருக்கு
சென்ற பாகங்களில் விளக்கியுள்ள சங்கீத வார்த்தைகளை நினைவில் கொண்டு, சென்ற பாகம் தொடக்கத்தில் நீங்கள் என்னை அடிக்க வரும்முன் நான் குறிப்பிட்ட கீழ்வரும் பத்தியை இப்போது மீண்டும் படித்துப்பாருங்கள்.
இந்த ராட்டை பல்லவி சதுஸ்ர ஜாதி திரிபுடை (ஆதி) தாளத்தில், சதுஸ்ர நடையில், இரண்டு ஆவர்த்தத்தில், இரண்டு களை சௌக்கத்தில், அமைக்கப்பட்டு, சமத்தில் இருந்து முக்கால் இடம் தள்ளி அனாகத எடுப்பில் தொடங்குகிறது.
இப்படி எழுதியிருந்தோம், இல்லையா?
பல்லவி கட்டமைப்புபற்றி ஏற்கனவே மூன்றாம் பாகத்தில் விளக்கியுள்ளோம். நான்காம் பாகம் படித்தபிறகு, நிச்சயம் ஆவர்த்தம், ஆதி தாளம், களை, சதுஸ்ர நடை இவையெல்லாம் இப்போது புரியும். என்னை அடித்ததற்காக ஸாரியெல்லாம் வேண்டாம். இட்ஸ் ஓகே. விட்ட இடத்திலிருந்து மேலே செல்வோம்.
அடுத்து, எடுப்பு. இதை புகுசிகு புகுசிகு புகுரயிலே ஓட்டி கோடிகாட்டியிருந்தோம். இப்போது சில உதாரணங்களுடன்.
எடுப்பு என்றால் பாடலை தாளத்தில் எங்கு எடுக்கிறோம், தொடங்குகிறோம் என்பது.இது தாளத்திற்கு உட்பட்ட அனைத்து இசைக்கும் பொருந்தும்.
சம எடுப்பு, விஷம எடுப்பு என்று இரண்டு உள்ளது. சம எடுப்பில் பாட்டும் தாளமும் ஒரே நேரத்தில் தொடங்கும். ஆதி தாளம் என்றால், தொடையில் முதல் அக்ஷரத்திற்காக தட்டியபோதே வாயால் பாடவும் தொடங்கவேண்டும்.
ஒட்டகத்த கட்டிக்கோ என்று, அது நாறுமே என்பதை கடந்து தர்மவதி ராகத்தில் முயற்சிசெய்கையில், அது சம எடுப்பு.
என்ன சார் நாற்றமாய் உதாரணம் சொல்கிறீர்களே என்றால், வாசனையாய் வசந்தமுல்லை போலே வந்து என்று சாருகேசியில் அழைத்தாலும் சம எடுப்பே.
விஷம எடுப்பை மேலும் இரண்டாய் அனாகத எடுப்பு அதீத எடுப்பு என்று சொல்லலாம். விஷம என்பது வி-சம அதாவது சமமில்லாத என்ற பொருளில் ஏற்பட்டு, திரிந்து, விஷம என்று ஆகியிருக்கலாம். நிச்சயமாய் தெரியவில்லை. சாம்பமூர்த்தி தன் இசைப்பாடப்புத்தகத்தில் விஷம என்றே குறிப்பிடுகிறார்.பல்லவியின் எடுப்பில் விஷமத்தனமாய் பொடிவைத்து அமைக்கலாம்தான். அதனால் விஷம என்றே வைத்துக்கொள்ளுவோம்.
அனாகத எடுப்பில் பாடல் பல்லவி, தாளம் தொடங்கியபின்னர், சற்று அவகாசம் விட்டு தொடங்கும். எவ்வளவு அவகாசம் என்பது பல்லவி வார்த்தைகளை, தானக் கட்டமைப்பை, படைப்பவரை, பொருத்தது. இத ற்கு சென்ற கட்டுரை இறுதியில் புகுசிகு புகு சிகு புகுரயிலே என்று ஒரு திரையிசை உதாரணம் சொல்லியிருந்தேன். மேலும் சில உதாரணங்கள் தருவோம்.
மருதமலை மாமணியே முருகைய்யா என்று மதுரை சோமு தர்பாரி கானடாவில் உருகுகையில் அனாகத எடுப்பு. ஆதி தாளத்தில், சமத்தில் தொடையில் தட்டியதிலிருந்து, அரை அக்ஷரம் தள்ளியே உருகத்தொடங்குவார்.
http://www.youtube.com/watch?v=82qfhI7uZf0
மேடையில் பலமாய் தலையாட்டும் குன்னக்குடியை கவனித்தீர்களா? பாடலுக்கு இசையமைத்தவரும் அவரே. அதான் போய்விட்டாரே இனி இவரால் மனிதர்களுக்கு புரிவதுபோல் மறுதலிக்கமுடியாது என்கிற தில்லில், மரபிசை மதிப்பீடு சாக்கில், இவரைப்பற்றி காழ்ப்புணர சாதாரண ரசிகனான எனக்கு எதுவுமில்லை. கர்நாடக இசையை மக்களுக்கு எடுத்துச்சென்ற உன்னதக் கலைஞர். அதற்காக இவர் சந்தித்த சில இடையூறுகளை நினைக்கையில் கண்கள் குளமாகிறது. சே, க்ளிஷே.
அனாகத எடுப்பிற்கு மாறானது அதீத எடுப்பு. என்றால், பாட்டு பல்லவி தாளத்திற்கு முன்னமே தொடங்குகிறது என்று பொருள்.
என்னைத்தாலாட்ட வருவாளோ
http://www.youtube.com/watch?v=XnGOeak-bOQ
மலரே, மௌனமா
http://www.youtube.com/watch?v=o32O5g_Kack
இரண்டும் ஆதிதாளம்தான். சதுஸ்ர நடை. முதல் பாட்டில் தாளம் என்னையின் எ வில் தொடங்காமல், தாலாட்டவின் தாவில் தொடங்குகிறது. வித்தியாசாகர் இசையமைத்துள்ள இரண்டாவதில், மலரேவின் ம வில் தொடங்காமல், ரே வில் தொடங்குகிறது (இப்பாடலும் தர்பாரி கானடா ராகம்தான்).
அனாகத எடுப்பில், சம எடுப்பில் ரஹ்மானை சொன்னோமே, இந்தாங்கோ அதீத எடுப்பிலும் ரஹ்மான்
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது.
http://www.youtube.com/watch?v=KEMG1NXktLs
எடுப்புகளை விளக்க கீழே உள்ள இரண்டு பட ங்கள் உதவும்.
படம் 1
படம் 2
முதல் படத்தில் எளிமையாக, எந்த தாளம் என்று குறிப்பிடாமல், எடுப்பை அறிமுகம்செய்துள்ளோம். இரண்டாவது படத்தில், நமக்கு இப்போது நன்றாகப் போட வரும் ஆதி தாளத்தை வைத்து, எடுப்புக்களை விளக்கியுள்ளோம். கவனியுங்கள், இரண்டு விஷம எடுப்புகளுமே ஒரு அக்ஷரம் சமத்திலிருந்து விலகித் தொடங்குகிறது. ஒன்று, சமத்திற்கு பிறகு, மற்றொன்று முன்பே, அதாவது, முதல் ஆவர்த்தத்தின் முடிவில்.
கர்நாடக இசையா கொக்கா என்றேன். நாம் எடுத்துக்கொண்ட பல்லவியை பார்த்தால், அது ஆதி தாளம்தான். ஆனால், இரண்டு களை சவுக்கம், இல்லையா (சென்ற பாகத்தை பார்த்துக்கொள்ளுங்கள்). அதில், ஒவ்வொரு அக்ஷரமும் இரண்டு மடங்கு அவகாசத்துடன் விரியுமல்லவா. அந்த அவகாசத்தின் உபயோகத்தால், பல்லவியை, அனாகத எடுப்பாய், கடினமாய், சமத்திலிருந்து முக்கால் இடம் தள்ளி அமைத்துள்ளார்கள். கீழே உள்ள படத்தில் விளக்கியுள்ளேன் பாருங்கள்.
இப்போது அரியக்குடியாரின் பல்லவிக்கு ஆதி தாளம் போட்டுப்பாருங்கள். நீங்கள் தாளத்தை தொடங்கியதும், அவர், மேலே படத்தில் குறிப்பிட்டுள்லது போல், முக்கால் இடம் தள்ளி சங்க என்று (சங்கராபரனணை) தொடங்குவார்.
இந்த பலல்வி ஆதி தாளத்தில் இரண்டு சுற்றுகளல்லவா? ஆமாம், நீர் தாளம் போட்டுக்கொண்டே செல்லுங்கள். பல்லவி தன்னால், கல்யாணி ராகத்தில் இரண்டாவது சுற்றில் முக்கால் இடத்தில் உட்காரும் (சரியாய் தாளம் போட்டால்).
எப்படியிருக்கு பார்த்தீர்களா மேட்டர்?
130க்கும் மேற்பட்ட தாளங்களில், ஒரே ஒரு தாளத்தைத்தான் விளக்கியுள்ளேன். அதிலும், ஒரே ஒரு பல்லவியின் ப்ராபல்யத்தை இன்னமும் சொல்லிமுடிக்கவில்லை. இன்னமும் இரண்டு பாகங்களாவது ஆகும்.
யோசித்துப்பாருங்கள். 32 களை சவுக்கத்தில், சங்கீர்ண துருவ தாளத்தில், மிஸ்ர நடையில், சமத்திலிருந்து அரைக்கால் இடம் தள்ளி, நாராயண கௌளை ராகத்தில் பல்லவி அமைத்துப்பாடுவதின் ஒருமுகத்தை.
அ வ்வகை கச்சேரிகளை உங்களையும் என்னையும் போன்ற தமிழ் மக்கள் கோயில்களில் உட்கார்ந்து கேட்டிருக்கிறார்கள் (மேலேயுள்ள மருதமலை மாமணியேவில் உள்ள நம் தாத்தா பாட்டிக்களை பாருங்கள்). மாட்டுவண்டியில் வந்து ரசித்திருக்கிறார்கள் (தில்லானா மோஹனாம்பாளையோ, தி.ஜானகிராமனையோ படித்துப்பாருங்கள்). வீட்டிற்குப்போய் சிலாகித்து, கற்றுக்கொள்ள முயன்றிருக்கிறார்கள் (பெண்ணுக்கு பாட வருமோ? எங்க பையனுக்கு பாட்டுன்னா உயிர்…).
சரி, தொடருவோம். இப்படியே யூட்டியூபிலுள்ள தமிழ் திரையிசை பாடல்களுடன் தொடை கன்னிப்போகும்வரை பல நடைகளில், காலப்பிரமானங்களில் ஆதி தாளம் தட்டிக்கொண்டே போனீர்கள் என்றால், சங்கீத ஜாதி முல்லை என்று ரேவதி ராகத்தில் (ஸ்ருதிபேதம் செய்தால் சிவரஞ்சனியிலும் கேட்கும் – பிறகு பார்ப்போம்) தொடங்கும் பாடல், சமத்திலிருந்து முக்காலிடம் தள்ளி அனாகத எடுப்பில் தொடங்கும் என்பது தெரியும். ஆனால், இப்படியே போய், ரஹ்மான்ஜீ அநேக பாடல்களை ஆஃப்-பீட்டாய் அமைப்பதற்கான உளவியல் காரணங்களை ஆராயும்முன் நிறுத்திவிடுங்கள். இல்லையேல் நல்ல ரசிகராய் அதுவரைபெற்ற இசையின் ஜாலியான ரசிகானுபவத்தை கொஞ்சமேனும் இழக்கும் அபாயத்திற்குள்ளாவீர்கள்.
போதும். ஒரு ரீ-காப்.
இதுவரை பார்த்த திரையிசை உதாரணங்கள் உட்பட பல இசைவடிவங்களில், பாடலின் (கீர்த்தனையின்) பல்லவி, அனுபல்லவி, சரணம், தாளம், லயம், ஆவர்த்தம், நடை, ராகம் அல்லது ஸ்கேல் (இரண்டும் ஒன்றல்ல), ராக ஸ்வரங்கள், ஸ்வர கற்பனை (அல்லது கல்பனை), ஸ்வரக் கோர்வை, சங்கதி, எடுப்பு என்று சங்கேத வார்த்தைகள் போல் தோன்றிய கர்நாடக இசையின் பல விஷயங்கள், அங்கங்கள் கிட்டத்தட்ட பொருந்தி ஒரே அர்த்தத்தில் வரும்.
வேறு மரபிலிருந்து அணுகுகையில் (உதாரணமாக மேற்கத்திய செவ்வியல் இசை), வேறு வார்த்தைகள் இவ்வங்களை விளக்கப் பொருந்திவரும். சில நிச்சயம் மாறுபடும். ராகமும் ஸ்கேலும் போல. சில இல்லாமல்போகும். உதாரணமாய், மே.செவ்வியலில் உள்ள ஹார்மனி என்ற ஒத்திசைவு நம் மரபிசையான கர்நாடக் சங்கீதத்தில் முக்கிய அங்கமாக தோன்றாது. (கவனியுங்கள், முக்கிய அங்கமாய் தோன்றாது). அதேபோல், மே.செ. இசையில் முக்கியமான அங்கமாய் இடம்பேறாத, க.சங்கீதத்தில் முக்கியமான கற்பனைத்திறன் வெளிப்பாடாய் தோன்றும் அங்கம் நிரவல்.
அடுத்த பாகத்தில்…
*****