ராகம் தானம் பல்லவி – பாகம் 4

Standard

ராகம், தானம், பல்லவி வரலாறு சாஹித்யம் செய்முறை என்று இதுவரை ஓரளவு எழுதியுள்ளோம். இங்கு ஒரு சற்று கடினமான பல்லவி அறிமுகப்படுத்துவோம். பல்லவியை இந்த, அடுத்த பாகங்களில் முழுவதும் பிரித்து விளக்குகையில் மேலும் பல விஷயங்களை பகிர்ந்துகொள்ளமுடியும்.

ஏன் இப்படி தடாலடியாக கடினமான பல்லவி என்றால், நமக்கு (எனக்கு) நீச்சல் கத்துகரதுன்னா தொபுகடீர் என்று குதித்து அப்படி இப்படி கையை காலை உதறி, வாய் மூக்கு நிறைய தண்ணீர் குடித்து, புகுந்து புறப்பட்டு, மூச்சு முட்டி, உயிரே போச்சா என்கிற ரீதியில்தான் கற்றுக்கொள்ளமுடியும். இடுப்பில் ரப்பர் ஃப்ளோட் அணிந்துகொண்டு Baby poolலில் பாதம் மட்டும் இரண்டு வாரம் நனைவதில் தொடங்கி. சாரி, எனக்கு அம்முறையில் அப்பியாசமும், நம்பிக்கையும், பொறுமையும், இல்லை. மேலும், எனக்கு என் வாசகர்கள் புத்திசாலிகள் என்றும், கோடிகாட்டினால் சூட்டிகையாக புரிந்துகொள்வார்கள் என்றும் ஸ்திரமான நம்பிக்கை.

இனி நேரடியாக பல்லவி பாடம்.

எச்சரிக்கையாக ஒன்று. நான் பாடம் நடத்துகையில் ஜோக் அடிக்கமாட்டேன். ஆளைத்தான். ரொம்ப கறார். இப்பவே சொல்லிவிட்டேன். பக்கத்தில் 15 செ.மீ. ஸ்கேல் கூட வைத்திருக்கிறேன். முடிந்தால் படிக்கும்வரை கையை கட்டிக்கொள்ளுங்கள். சிரிப்பு வந்தால், கட்டுரைக்கு வெளியே போய் சிரித்துவிட்டு, கனமான இலக்கியம் ஏதையாவது தொட்டு கண்ணில் ஒத்திக்கொண்டுவிட்டு (படிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை), மீண்டும் உள்ளே வரலாமா என்று கேட்டுக்கொண்டு, அனுமதி கிடைத்ததும் படியுங்கள்.

இப்போது முதல் பாகத்தில் தொட்டிருந்த பிரபலமான ஒரு சதுர் ராகமாலிகை பல்லவியை எழுதிக்கொள்வோம்.

சதுர்த்தி, சதுர்தண்டிப்ரகாசிகா, சதுரகராதி, சதுஸ்ரம், என்ற வரிசையில் சதுர் என்றால் நான்கு; நான்கு ராகங்களில் அமைந்த பல்லவி. சிறப்பு, ராகங்களின் பெயர்களையே சாஹித்தியமாக, பாட்டின் வார்த்தைகளாக பொருள்பட அமைந்துள்ள பல்லவி.

சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி தர்பாருக்கு

எந்த நான்கு ராகங்களில் இதைப்பாடவேண்டும் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். கேட்டுக்கொண்டே கீழே எழுதியுள்ளதை படியுங்கள்.

இந்த ராட்டை பல்லவி சதுஸ்ர ஜாதி திரிபுடை (ஆதி) தாளத்தில், சதுஸ்ர நடையில், இரண்டு ஆவர்த்தத்தில், இரண்டு களை சௌக்கத்தில், அமைக்கப்பட்டு, சமத்தில் இருந்து முக்கால் இடம் தள்ளி அனாகத எடுப்பில் தொடங்குகிறது.

இப்பல்லவி மொத்தமாக ஒரு பூர்வாங்கம், ஒரு உத்திராங்கம் நடுவில் பிரிப்பது போல் வருவது ஒரு அருதி என்று கட்டமைப்பு (போன பாகத்தில் சொன்னது) இல்லை. சற்று கடினமாக, இரண்டு ஆவர்த்தங்களிலும் அறுதி கார்வை இரண்டரை அக்‌ஷரம் வருகிறது. சங்கராபரணனை சொல்லுக்கும் அழைத்தோடி சொல்லுக்கும் இடையே இரண்டரை அக்ஷரம், கல்யாணி மற்றும் தர்பாருக்கு சொற்களிடையே இரண்டரை அக்‌ஷரம். இரண்டு, மூன்றாவது ராகங்களை அழைத்தோடி வாடி கல்யாணி என்ற ஒரே சொற்றொடரில் ஒட்டியும், நான்காவது, முதலாவது ராகங்களை தர்பாருக்கு சங்கராபரணனை என்ற சொற்றொடரில் ஒட்டியும் அமைத்திருக்கிறார்கள். அதுவும் சமத்தில் இருந்து தள்ளி தொடங்கியபடி. அப்படியே தாளம் போடப் போட பாடப் பாட, நிறுத்தவே முடியாது.

பல்லவி ஒரே வரிதான். ஆனால் சங்கீத அங்கங்களை உன்னிப்பாக நோக்கினால், சிம்ப்ளி அமேசிங் கம்போஸிஷன்.

இருங்கள், அடிக்க வராதீர்கள். மேல்வாக்கியங்களில் எப்படி பல்லவியை ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சங்கேத வார்த்தைகளுடன் குறிப்பிட்டேன். அதில் உள்ள அனைத்து சில்ஃபான்ஸ் கில்ஃபான்ஸ் மேட்டர்களையும் சிலுக்குசிக்கான்சிக்கான்னு ஓரளவு கட்டுரையின் இப்பாகத்தில் புட்டுவைப்போம். படித்து முடிக்கையில், தொடங்கியதிலிருந்து விலகி வேறு எங்கோ போய்விட்டது போல் இருக்கலாம். பொறுமையுடன் இருங்கள். நிச்சயம் அடுத்த பாகத்தில் மீண்டும் இதே பல்லவிக்கு வந்து, இங்கு விளக்கியதையெல்லாம் புரிந்துகொண்டும், ரசிப்போம்.

*****

முதலில் ஆவர்த்தம்; என்றால், சுற்று. ரவுண்ட். ஒரு ஆவர்த்தம் என்றால் ஒரு சுற்று. ஆவர்த்தம் இசைக்கு, பாடலுக்கு, மிக உபயோகமான கால அவகாசம். தாளத்தின் அங்கங்கள், கால இடவெளிக்கேற்றவாறு ஆவர்த்தத்தின் அவகாசம் கூடவோ குறைந்தோ மாறுபடும். பாட்டின் அவகாசத்தை நீட்டவோ குறைக்கவோ, பாட்டின் கட்டுக்கோப்பை, வரிகளில் வார்த்தைகளை நிர்ணயிக்கவோ, ஆவர்த்தங்கள் இன்றியமையாதவை.

சில உபயோகங்கள் பார்ப்போம்.

மிருதங்கம் தனி ஆவர்த்தம் 16 ஆவர்த்தங்கள் வாசிக்கிறார் என்றால், ஏதோ ஒரு தாளத்தை (பக்கத்தில் பாடகர்) 16 முறை முழுவதுமாக போட்டுமுடிக்கும் கால அளவுவரை மிருதங்கத்தில் வாசிக்கிறார் என்று பொருள். ஒரு தீர்மாணம் 2 ஆவர்த்தங்களில் வாசிக்கிறார் என்றால், ஒரு தாளத்தை இரண்டு முறை போட்டுமுடிக்கும் காலம் வரை தொம்தரிகிட, திம்தரிகிட, தத்தும்தரிகிட என்ற ரீதியில் ஒரு பெரிய லய சொல்கட்டை (மிருதங்கத்தில் தட்டி) வாசிக்கிறார் என்று பொருள். அதையே வாயால் சொன்னால் கொன்னக்கோல்.

அதேபோல பாடகர் கீர்த்தனையின் முடிவிலோ இடையில் ஏதோ ஒரு இடத்திலிருந்தோ ராகத்தின் ஸ்வரங்களை சொல்லி ஸ்வரக்கோர்வைகளை பல ஆவர்த்தங்கள் பாடுவார். வயலின் வித்துவான் மீண்டும் இதை வாசிப்பார். பாடகர் 2 ஆவர்த்தம் பாடினால், வயலினும் 2 ஆவர்த்தங்கள் அப்படியே ரிப்பீட்டு.

சரி இது போதும். கீழே வீடியோவில் இதற்கு உதாரணம் கொடுத்துள்ளேன். மீண்டும் பல்லவிக்கு வருவோம்.

எந்த ஒரு தாளத்தையும் முழுமையாக ஒரு சுற்று போட்டு முடித்தால் அத்தாளத்தில் ஒரு ஆவர்த்தம் என்று பொருள். ஒரு கீர்த்தனை, பாடல் வரிகளை, ஒருமுறை முழுவதும் பாடி முடிக்க பல ஆவர்த்தங்கள் ஆகும் இல்லையா. பல்லவிகள் பொதுவாக ஒரு தாளத்தில் ஒரு ஆவர்தத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும். விதிவிலக்காக நம் பல்லவி இரண்டு ஆவர்த்தங்களில்.

[அதான் சொன்னேனே, உதாரணத்தையே கடினமானதாக எடுத்துக்கொண்டால் பலதைச் சொல்லலாம் என்று.]

அடுத்து ஆதி தாளம்.

ஆதி தாளம் உங்களில் பலருக்கு தொடையில் கைவத்து போடத்தெரிந்திருக்கும். தெரியாவிடின், இப்படி செய்யவேண்டும்.

முதலில் கூன் போடாமல், நிமிர்ந்து சம்மனம் போட்டு (சப்ளாமூட்டி) உட்காருங்கள். முகத்தை சீரியஸாய் வைத்துக்கொள்ளுங்கள். முதலில் உள்ளங்கையால் தொடையில் செல்லமாக ஒரு தட்டு (நம் தொடையில் கொசு உட்கார்ந்திருந்தாலோ, தொடை அடுத்தவரதென்றாலோ படார் என்று அடித்துக்கொள்ளலாம்). பிறகு சுண்டுவிரலில் தொடங்கி மூன்று விரல்களை கட்டைவிரலால் தொட்டு எண்ணிக்கொள்ளுங்கள்.

தொடையில் தட்டு + 3 விரல் எண்ணிக்கை = 4.

அடுத்து மீண்டும் தொடையில் உள்ளங்கையால் தட்டு. அடுத்து திருப்பிப்போட்டு புறங்கையால் தொடையில் தட்டு.  இது ஒரு 1 + 1 = 2 எண்ணிக்கை.

மீண்டும் இக்கை-தொடை தட்டுக்களை செய்தால், மீண்டும் ஒரு 1 + 1 = 2 எண்ணிக்கை.

இப்போது மொத்தமாக 4+2+2=8 எண்ணிக்கை பூர்த்தியாக, ஆதி தாளத்தை ஒரு ஆவர்த்தம் போட்டுமுடித்துள்ளோம்.

மொத்தம் 8 அக்‌ஷரம் உள்ள இத்தாளத்தை ஒரு வேகத்தில் செய்தால் (இரண்டு அக்‌ஷரத்தின் இடையில் சம கால இடைவெளி), ஒரு “களை”யில் தாளம் போடுகிறோம் என்று பொருள். இரண்டு அக்‌ஷரத்தின் நடுவில் உள்ள கால அளவை வேறுபடுத்தினால் களை மாறும். பாட்டின் ‘களை’யும் (விறு விறு, இழுவை) மாறும்.

பாட்டு முடிகிறவரை தொடர்ந்து இப்படி தொடை-கை கால அளவு கணக்கை செய்து கொண்டே போகவேண்டும். ஸ்வர-ராகத்தின் (பாட்டின்) கூடவே லயம் வருகிறது என்று பொருள்.

இதோ நம்ம கைவண்ணத்தில் ஆதிதாள வீடியோ.

[http://www.youtube.com/watch?v=SkkshFo7aHc ]

[வீடியோவே இருக்கிறது, எதற்கு எழுதவேண்டும் என்றால் வீடியோ பார்க்கமுடியாதவற்காகவும் (பிரிண்ட் போட்டு படிப்பவர்களுக்காகவும்) எழுத்திலும் விளக்கியுள்ளேன். அதேபோல் நான் வீடியோ வல்லுனரில்லை. சும்மா இந்த கட்டுரைக்காக ஆர்வக்கோளராய் ஒத்தகையில் கேமிராவை பிடித்தபடி ஷேக் வெல் வைல் இன் யூஸ் என்று எடுத்துள்ளேன். இதெற்கெல்லாம் டொஸ்க்சொல்லி விமர்சனம் இடது கையால் எழுதிப்பழகுங்கள்.]

இனி ஆதிதாளத்தையே சற்று டெக்னிகலாக விளக்குவோம்.

*****

ஆதி தாளத்தை சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம் என்பர். சதுர் போல சதுஸ்ரம் என்றாலும் நான்கு. ஜாதி என்றால் வகை. திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்ற ஜாதி வகையில் சதுஸ்ரம். திரிபுடை (த்ரிபுடம்) தாளத்தின் பெயர்.

தாளத்தை பற்றி சுருக்கமாக: ஏகம், ரூபகம், த்ரிபுட, ஜம்ப, மட்ய, அட, துருவ என்று ஏழு வகை தாளங்கள் இருக்கின்றன. இவற்றில், மேலே சொன்ன ஐந்து ஜாதிகளிலும் அமைக்கலாம். 5 x 7 = 35 ஆயிற்றா. இசை கற்றுக்கொள்கையில் அதனால்தான் அலங்காரங்கள் என்ற விஷயத்தை அப்பியாசம் செய்யச்சொல்லுவார்கள். அலங்காரம் 35 இருக்கிறது. ஒவ்வொன்றும் மேலே குறிப்பிட்ட ஒவ்வொறு தாள வகையில். அனைத்தும் சதுஸ்ர நடையில்.

நடையா, அதுவேறா? இந்த 35 தாளங்களிலும், பஞ்ச (5) நடைகளை அமைக்கலாம். பஞ்ச நடைகளின் பெயர்களும் திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்பதுவே. (கீழே நடைகளை உதாரணத்துடன் வீடியோவில் விளக்கியுள்ளேன்.) இதனால் 35 x 5 = 175 வகை தாளங்கள் செய்யமுடியும் என்றும் கூறலாம்.

அதேபோல், தனியே ஆதிதாளம் அடுத்து, சாப்பு தாளங்களான கண்டசாப்பு, மிஸ்ரசாப்பு, சங்கீர்னசாப்பு என்றும் இருக்கிறது.

அதேபோல், முன்னர் குறிப்பிட்டபடி, நம் தாளங்கள் அனைத்திலும் லகு துருதம் இரண்டும் அங்கங்களாக அநேகமாக இருக்கும். பல தாளங்களில் அனுத்ருதம், ப்ளிதம், காக்கபாதம், குரு போன்ற பல அங்கங்களும் வரும். பல வித்தியாசங்கள், எளிமையான சட்டத்திற்கு கட்டுப்படாதவைகள் இருக்கிறது. உதாரணமாய், குரு என்பது கல்லுரலில் மாவாட்டுவது போல அப்படி கையை சுத்தி போடுவது.

[மழுப்பலாய் நான் இங்கு எழுதுவது அறிமுகமாக கோடிகாட்ட மட்டும்தான். விஷயம் மிக்கவர்கள் (விஷ-மி-கள்) பொருத்தருள்க.]

எப்படியும் நம் தாள வகைகள் நூற்றுக்கணக்கில் வரும்.

எதில் வேண்டுமானாலும் பல்லவி (கீர்த்தனை, பாடல்) அமைக்கலாம்.

ஆனாலும் பல ராகங்களை இலட்சணமாய் கையாளும் நம் திரையிசையமைப்பாளர்கள், தாள வகைகளை அவ்வப்போதே தொடுகிறார்கள்.  முக்காலவாசி ஆதி தாளம்தான். நடைகள் மட்டும் மாறும். கச்சேரிகளில் தாளத்தில் சூரர்கள் இருக்கிறார்கள். பாட்டை கேட்கையில் சுலபமாக தோன்றும். கையில் தாளம் போடுவதை கவனித்தால், தலை சுற்றும்.

தாளங்களை அப்பால தனிக்கட்டுரையாக பார்ப்போம். இப்போதைக்கு இதையெல்லாம் விடுத்து ஆதியை மட்டும் மேலும் அலசுவோம். நம்ம பல்லவிக்கும் அது போதும்.

ஆதி தாளத்தை விளக்க லகு த்ருதம் இரண்டு அங்கங்கள் மட்டும் போதும்.

தாளத்தின் அங்கமான த்ருதம் லகுவை, துண்டங்களாக உடைக்கமுடியும். செய்தால் அக்‌ஷரங்களாக விழும்.

அக்‌ஷரம் தாளத்தின் உப-கால இடைவெளிக் குறியீடு. இக்குறியீட்டை எட்டு முறை சமகால இடைவெளிவிட்டு வாயால் சொன்னாலோ, தொடையில் கையால் தட்டினாலோ, தலையில் குட்டினாலோ, ஒரு ஆவர்த்தம் (சுற்று) ஆதிதாளம் போடுகிறோம் என்று பொருள்.

அக்‌ஷரங்களையும் உடைக்கலாம். மாத்திரைகளாக. மாத்திரை என்றால் உச்சரிப்பின் ஒரு கால அளவு.

அடடா எங்கெங்கோ சுற்றி தமிழிலக்கணத்திற்கு வந்துவிட்டீரே என்றால், அதான் சொன்னேனே, கர்நாடக சங்கீதம் தமிழர்களின் பொக்கிஷம்.

சரீர, சாரீர ஆரோக்யம் கருதி மாத்திரையையும் பொடித்து சூர்ணமாக்கவேண்டாம். இப்போதைக்கு அப்படியே முழுங்குவோம்.

தாளத்தின் த்ருதம் எப்போதும் 2 அக்‌ஷரம் கொண்டது (தொடையில் உள்ளங்கையையும் புறங்கையையும் அடுத்தடுத்து தட்டும் இரண்டு அக்‌ஷரம்). அல்ஜீப்ராவின் X போல லகுவின் அக்‌ஷர மதிப்பு மாறும். ஒவ்வொரு தாளத்திலும் சில பல லகுக்களும் த்ருதங்களும் இருக்கலாம். கூட்டினால் வருவது தாளத்தின் மொத்த அக்‌ஷரங்கள். இதை வைத்து ஒரு ஆவர்த்தத்திற்கு அந்த தாளம் போடப்படும் நேரம் நிச்சயமாகும்.

திரிபுடை தாளத்தின் இலக்கணம் ஒரு லகு இரண்டு த்ருதம். அதாவது X 2 2. இதில் X மட்டும் 1, 3, 4, 5, 7, 9 என்று இருக்கலாம். இந்த “X = எண்கள்” விதி அனைத்து தாளத்தின் லகுவிற்கும் பொருந்தும்.

படித்தவுடன் வரும் டவுட்டிற்கு பதில்: 2 நான்கில் பாதி, 8 இரு நான்குகள், 6 இரு மூன்றுகள், அவைகள் ஏற்கனவே இருக்கும் எண்களின் ஒருவகை ரிப்பீட்டு என்பதால் சேர்க்கத்தேவையில்லை.

சரி, X = 3ஆய் இருந்தால் திஸ்ரம் என்று பெயர். அதாவது, X, 2, 2 என்பது X=3, 2, 2 என்று வந்தால் அத்தாளத்தின் பெயர் திஸ்ர ஜாதி திரிபுடை தாளம். அதைப்போல X = 4 என்பது சதுஸ்ரம், அதனால் சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம். அதுதான் நம்ம ஆதி தாளம். வீடியோவில் ஆதி தாளம் போட்டதை இப்போது சரிபாருங்கள். ஒரு ஆவர்த்தத்தில், முதலில் 4 அக்‌ஷரம் போட்ட விதமும், அடுத்த இரண்டு த்ருதங்கள் போட்ட விதமும் புரியும்.

சதுஸ்ரம் அடுத்து, மிச்சம் X = 5 கண்டம், X = 7 மிஸ்ரம், X = 9 சங்கீர்னம். பின்னால் இருமுறை 2, அதாவது இரண்டு த்ருதம் வருவதால் திரிபுடை தாளம்.

இப்போது நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம், சங்கீர்ன ஜாதி திரிபுடை தாளத்திற்கு எத்தனை அக்‌ஷரங்கள், எப்படி தொடையில் போட வேண்டும் என்று. (பதில்: நோ, சொல்லமாட்டேன். உங்களுக்கே நிச்சயம் தெரியும், போடவும் வரும். செய்துபாருங்கள்.)

சரி, அடுத்து களை, சுருக்கமாக.

ஆதி தாளம் ஒரு ஆவர்த்தத்திற்கு 8 அக்‌ஷரங்கள். ஒரு களை சவுக்கத்தில் போட்டால், 8 மாத்திரைகளே. இரண்டு களை சவுக்கத்தில் போட்டாலும் அதே 8 அக்‌ஷரங்கள்தான். ஆனால் இரண்டு அக்‌ஷரங்களுக்கிடையே உள்ள இடைவெளி 2 மாத்திரைகளாக நீண்டு, ஒரு ஆவர்த்தத்தில் மொத்தம் 16 மாத்திரைகள் ஆகிவிடும்.

அப்டீனா, இரண்டு களையில் ஒரு ஆவர்த்தம் போடப்படும் அதே ஆதி தாளம், ஒரு களையில் ஒரு ஆவர்த்தம் போடும் அதே ஆதிதாளத்தின் நேர அளவை காட்டிலும் இரண்டும் மடங்கு நீண்டு இருக்கும்.

மீண்டும் படித்துக்கொள்ளுங்கள். இந்த சூட்சுமம் புரிந்துவிட்டால் தாளத்தில் பாதி கிணறு கிராஸ்டு.

அவ்ளோதான் சார் ஆதிதாள மேட்டர்.

*****

ஸ்டாப்ப்ப்ப் என்று நீங்கள் அலறுவது புரிகிறது.

ஒப்புக்கொள்கிறேன், மூச்சுமுட்ட விஷயத்தை கொட்டிக்கொண்டே போகிறேன். வேறுவழியில்லை. வாழ்க்கையில், கட்டுரையில், எங்காவது இதையெல்லாம் ஏதாவது ஒரு களையில், வேகத்தில், சொல்லித்தான் ஆகவேண்டும்.

[யோவ், மேலே சொன்ன பல்லவி என்னவாயிற்று? அதான் சொன்னேனே, அடுத்த பாகத்தில்ங்னா.]

*****

இப்போது மேலே விளக்கிய வார்த்தைகளுக்கு சிலவற்றிற்கு உதாரணங்கள்.

ஆதிதாளம், ஒரு களை சவுக்கத்தில் ஒரு பாட்டு. அதிலேயே ஆவர்த்தம், குறைப்பு, தீர்மாணம் போன்றவற்றை விளக்குகிறேன். எனக்கு பாட வராது, அதனால் டி.எம்.எஸ்ஸை துணைக்கு கூப்பிட்டுக்கொள்கிறேன். தன் பங்கிற்கு அவர் கே.வி.மகாதேவனையும், சிவாஜி கணேசனையும் துணைக்கு கூட்டிக்கொள்வது அவர் இஷ்டம்.

[பாட்டும் நானே http://www.youtube.com/watch?v=xg_hBWlR3h0 ]

இசை, பாடகர், வாயசைத்து நடித்தவர் என்று ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் அரங்கேற்றிய பாட்டும் நானே பாவமும் நானே என்று கௌரிமனோஹரி ராகத்தில் அபாரமான பாட்டு நமக்கு பரிச்சயம். இப்பாடலின் இறுதியில் கொன்னக்கோல், மற்றும் வாத்தியங்கள் ஆதி தாளத்தில் சில ஆவர்த்தங்கள் எப்படி வாசிக்கின்றனர் என்பதை இசையை ரசித்துக்கொண்டே அனுபவியுங்கள்.

என் பங்கிற்கு சில விளக்கங்களை இந்த வீடியோவில் கொடுத்துள்ளேன்.

[பாட்டும் நானே, குறைப்பு விளக்கம் – http://www.youtube.com/watch?v=v7xUDzIkVu4 ]

பாட்டும் நானே, தீர்மாணம் விளக்கம் – http://www.youtube.com/watch?v=EEjEdtoRy10 ]

கச்சேரியில், மெயின் பாட்டில் இந்த விஷயங்களை செய்வார்கள். ரா. தா. பல்லவியிலும் தீர்மாணம் போன்றவற்றை செய்வார்கள்.

இப்போது நடை பற்றி இன்னொரு விளக்க வீடியோ

நடை என்பது ஒரு பேஸ், ஸ்பீட், வேகம். ஆனால் ஒரு தாளத்தின் இரு அடுத்தடுத்த அக்‌ஷரத்திற்கிடையே அமையும். மேலே தாள வகைகளின் பெயர்களில் வருவது போல், பஞ்ச நடைகள் உள்ளன. கேள்விப்பட்டிருக்கலாம்.

திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்னம்.

ஒரு தாளத்தில், இவை முறையே 3, 4, 5, 7, 9 என்று இரண்டு அக்‌ஷரங்களுக்கு இடையே உள்ள காலத்தை குறுந்தட்டுக்களக நிர்ணயிக்கும். ஒரே கால இடைவேளைகளை இப்படி மாறும் குறுந்தட்டுக்களாக பிரிப்பதால் பாட்டின் நடையை சுலபமாக மாற்றலாம்.

கவனிக்கவும், தாளம் அதே தான். நடை தான் வித்தியாசம். அதாவது, மேலே விளக்கிய ஆதி தாளத்தை இந்த பஞ்ச நடைகளிலும் போடலாம்.

படித்தால் மட்டும் உடனே புரியாதுதான். இருங்கள், இந்த வீடியோவில் ஆதி தாளத்தை சதுஸ்ர நடைக்கும், கண்ட நடைக்கும் வித்தியாசப்படுத்தி ஒரு சிறு விளக்கம் கொடுப்போம்.

[யூடியூப் வீடியோ சுட்டி – http://www.youtube.com/watch?v=2vAokb919Ts ]

இப்போது கீழே இரண்டு ஒலிக்கோப்புகளை கேளுங்கள். இரண்டும் கரஹரப்பிரியா ராக திரையிசை. இரண்டும் ஆதி தாளம். ஒன்று சதுஸ்ர நடையில், மற்றொன்று திஸ்ர நடையில். நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.

மஹாராஜன் உலகை ஆளலாம்

மாதவிப்பொன்மயிலாள்

சரி, இப்போது பஞ்ச நடையும் இதோ மிருதங்கத்தில், உன்னால் முடியும் தம்பி படத்திலிருந்து (முன்னே பின்னே வேறு சீன்கள் உள்ளன; பார்த்து ரசியுங்கள்).

[யூடியூப் சுட்டி – http://www.youtube.com/watch?v=ryvkxiGrvIQ]

(என்னைவிட வயதில் சிறியவருக்கு மட்டும் சொல்கிறேன்) நடைகளை புரிந்துகொள்ள உன்னால் முடியும் தம்பி. சரிதானே?

*****

பிரேக். இளைபாறுவோம். இதுவரை ஆவர்த்தம், ஆதிதாளம், டெக்னிகலா அது இன்னா, அதை எப்படிப்போட வேண்டும், களை, அக்‌ஷரம், மாத்திரை இவைகள் இன்னா, பஞ்ச நடைகள், ஒரே தாளத்தில் பல நடைகள் இவற்றை பார்த்துள்ளோம்.

*****

முடிக்கப்போகிறேன். அதற்குமும், அடுத்த பாகத்திற்கு முன்னுரை.

ஆதிதாளம், சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம். 4, 2, 2 என்ற அக்‌ஷரங்கள், மொத்தம் 8 அக்‌ஷரங்கள் கொண்டது. விளக்கினோம். அதில் கட்டுரை தொடக்கத்தில் சொன்ன சதுர் ராக பல்லவி இரண்டு ஆவர்த்தத்திற்கு வரும். அப்படியென்றால் இருமுறை 8 அக்‌ஷரங்கள், மொத்தம் 16 அக்‌ஷரங்களுக்குள் பல்லவி அமைந்திருக்கிறது. நான்கு ராகங்களும், ஒரு ஆவர்தத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு ராகம் என்று வரும்.

ஏன் கிட்டத்தட்ட என்றால் பல்லவி தாளத்தின் சமத்தில் தொடங்கவில்லை.

பல்லவியின் சாஹித்தியமும் (பாட்டும்) தாளமும் அதே நேரத்தில் தொடங்கினால் பல்லவி சமத்தில் ஆரம்பிக்கிறது என்று பொருள். பாட்டு தாளம் தொடங்கிய பின், அதைத் தாண்டித்தான் தொடங்குகிறது என்றால் அனாகத எடுப்பு. அதீத எடுப்பு என்றால் பாட்டு தாளம் தொடங்குவதற்கு முன்னரே தொடங்குகிறது என்று பொருள்.

இதைப்பற்றியும், இன்னபிற பல்லவி விஷயங்களையும் அடுத்த பாகத்தில் விளக்குவோம். லைட்டாய் ஒரு திரையிசை சர்ப்ரைஸ் உதாரணம் கொடுத்து இப்பாகத்தை முடிப்போம்.

நம்ம ஏ.ஆர். ரஹ்மானையே குறிப்பிடவில்லையே இதுவரை. செய்துவிடுவோம்.

ஜெண்டில்மேன் படத்தில், ரஹ்மானின் சிக்குபுக்கு ரயிலே பாட்டு பிரபலம், நமக்கு பரிச்சயம். மேலே படிக்கும்முன் சட்டென்று சொல்லுங்கள், பாட்டு எப்படி தொடங்கும்? அதாவது, சுரேஷ் பீட்டர்ஸ் பாடுகையில், பாட்டு எப்படி தொடங்கும்? சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்றுதானே?

இந்தாருங்கள் வீடியோ. கேட்டுப்பாருங்கள்.

[http://www.youtube.com/watch?v=NYoByJiOTDM ]

சரி, முதலில் தாளத்தை கவனித்து பாருங்கள், மேலே சொன்ன அதே ஆதிதாளம் தான். ஒரு களை சவுக்கம். சதுஸ்ர நடையில்.

தொடக்கத்தில் கொயந்தை பாடிமுடித்ததும் வரும் இசைக்கு ஆதிதாளம் போடுங்கள். நான்கு ஆவர்த்தத்தில் முடிந்துவிடும். ஆனால் முடிகையில் இரண்டு அக்‌ஷரம் அமைதி. பிறகு சமத்தில் சுரேஷ் பீட்டர்ஸ் பாட, பாடல் தொடங்கும். ஆனால் பாட்டு சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்று தொடங்காது. புகு சிகு புகு சிகு புகு ரயிலே என்று தொடங்கும்.

அடுத்த சுற்றில், இரண்டாவது முறை பல்லவியை சொல்கையில், சமத்தில் டிரம்ஸ் அடி விழுந்ததும், சற்று காலம் தள்ளியே, சிகு புகு சிகு புகு ரயிலே என தொடங்கும். இதை சரிகட்டதான் சுரேஷ் பீட்டர்ஸ் முதல் சுற்று தொடக்கத்தில், சமத்தில், ஒரு புகு சேர்த்து தொடங்குவார்; சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா என்றெல்லாம் கேட்டுவிட்டு மீண்டும் பல்லவியை தொடங்குகையில் புகு சிகு புகு சிகு என்று கோரஸாய் தொடங்கும்.

ஆதி தாளம் தான். அதன் சமத்தில் இப்பாடலை தொடங்க வேண்டுமென்றால் புகு வில் தான் தொடங்கமுடியும். விட்டு சிகுவில் தொடங்கினால், சமத்தை விட்டு சற்று தள்ளி தொடங்கவேண்டும். இப்படி செய்தால் அனாகத எடுப்பு என்று பெயர்.

இந்தாருங்கள் என் விளக்க வீடியோ.

http://www.youtube.com/watch?v=iMC8x9NWb08

ஒரு களை சவுக்கத்தில் ஆதி தாளத்தில் இப்பாடல் அரை இடம் தள்ளி தொடங்குகிறது. அதாவது கையை தொடையில் சமத்தில் தட்டிய முதல் அக்‌ஷரத்திற்கும் அடுத்து சுண்டுவிரலை விடும் இரண்டாம் அக்‌ஷரத்திற்கும் நடுவில் சிகு வருகிறது.

ஸோ (ஆகையால்), சிகு புகு சிகு புகு ரயிலே என்று பாட்டை சொன்னால், இப்பாடல் ஆதி தாளத்தில் அனாகத எடுப்பு பாடல். மேலும் பல உதாரணங்கள் அடுத்த பாகத்தில்.

இப்போது பாருங்கள். கட்டுரை தொடக்கத்தில் சொன்ன சதுர் ராக மாலிகை பல்லவி இரண்டு ஆவர்த்தம், இரண்டு களை சவுக்கம் (இரண்டு அக்‌ஷரங்களுக்குள் ஒரு களையை விட இரு மடங்கு நேர அவகாசம்). இப்பல்லவியும் அனாகத எடுப்பே. தாளத்தின் சமத்தில் இருந்து முக்கால் இடம் தள்ளி.

கர்நாடக இசையா கொக்கா. அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

*****