ஜெயமோகன் தளத்தில் அருண் என்று ஒருவர் இன்று கேள்வி கேட்டிருக்கிறாரே, நீ தானா? அன்பர் போன் செய்தார்.
நான் எதற்கு எனக்குத் தெரியாதை அவரிடம் போய்க் கேட்கப்போகிறேன், அதற்குப் பதில் கூறுவதைத் தவிர அவருக்கும் வேறு வேலைகள் இல்லையா… நினைத்துக்கொண்டாலும், என்ன கேள்வி? என்ன விஷயம்? என்கிறேன். பேஸ்புக்கே பற்றி எரிகிறதே… என்னனு தெரியாதா என்றார் அன்பர். இல்லையே, நீங்க பேஸ்புக்ல தலைய வுட்டுனுக்குறீங்க, நான் ஸென்ஹெய்ஸர் ஹெட்போனில் வுட்டுகினு எம்பாட்டுக்கு பாட்டு கேட்னுகிரேன் என்கிறேன்.
அன்பர் விளக்கிய பின்னர் விஷயம் புரியத் தொடங்கியது. டி.எம்.கிருஷ்ணாவிற்கு மகஸஸே விருது வழங்கப்பட்டிருப்பதைப் பற்றி ஜெயமோகனின் விமர்சனம் தொடர்பாக ஜடாயு என்பவர் எழுதியிருப்பதைச் சுட்டி ஜெயமோகனிடம் ‘இதைக் கவனித்தீரா? இதுக்கு இப்ப நீங்க என்ன சொல்றீங்க?’ வகையில் கேட்கப்பட்ட கேள்வி.
இல்லை அன்பரே, அந்தக் கேள்வியைக் கேட்ட அருண் நானில்லை. எனக்கு அவ்வகை அறிவு வாய்க்கவில்லை. முயன்று மொக்கையாவதற்கும் நேரமில்லை.
தொடர்ந்து ஜெயமோகன் அப்படி என்னதான் விமர்சித்துவிட்டார் என்று அவர் கட்டுரைகள் நான்கைப் படித்தேன். இசை மேல் இன்றளவும் ஓரளவு நாட்டமுள்ளவன் எனும் சுயதகுதியால் தான் அவ்வாறு செய்தேன் (இந்த விளக்கம் ‘உனக்குதான் ஜெ வலைதள எழுத்தே ஒவ்வாதே, எதுக்குப் போய்ப் படிச்ச?’ என்று கேட்கக் காத்திருக்கும் இரண்டு நண்பர்களுக்காக). அடிக்குறிப்பில் சுட்டிகளை அளித்துள்ளேன். அக்கட்டுரைகளை முழுவதுமாய் வாசிக்காமலும் கீழுள்ளதை வாசிக்கலாம். களம் முழுவதுமாய் விளங்காது.
*
அருண் கேள்விக்குப் பதிலாய் ஜெயமோகன் இசை அறிதலைப் பற்றி எழுதியுள்ளார். இதை பிறகு கவனிக்கிறேன். முதலில் டி.எம்.கி.க்கு விருது கிடைத்ததை விமர்சித்த கட்டுரை.
பெரும்பாலும் சரியாகவே அடித்திருக்கிறார். வழக்கம் போல ஓங்கி அடித்திருக்கிறார். அடி மற்றவர்கள் மேல் விழுகையில் இணைய இருட்டில் பாப்கார்ன் சாப்பிட்டவர்கள், இந்தக் கட்டுரையில் மற்றவர்களுக்கு பாப்கார்ன் சாப்பிடத் தருணம் அமைந்துவிட, இணைய வெளிச்சத்தில் கடுப்பாகிறார்கள்.
டி. எம். கிருஷ்ணாவிற்கு அவரது சமூகப் பணிகளுக்காக என மகஸஸே விருது வழங்கப்பட்டிருப்பது அபத்தம். இதனைச் சரியாகவே சாடியுள்ளார் ஜெயமோகன்.
எதற்காக இந்த விருது என்று விருதின் பட்டயம் விவரித்திருக்கும் கூற்றுகள் கர்நாடக இசைக் கலைஞர்கள் அனைவரையுமே அவமதித்துள்ளது. வேதனையே. WTF என்று மட்டுமே பத்து பதினைந்து முறை எழுதிக் கட்டுரையாக்கி எதிர்வினையற்றத் தோன்றுகிறது. அவரது இந்து கட்டுரைகளின் அபத்த ஆக்ரோஷங்களைக் கேள்விப்படுகையில் (ஒன்றையும் நான் வாசித்ததில்லை. நான் அவரது இசை ரசிகன் மட்டுமே), இரண்டு வருடங்கள் முன்னதாகவே போகிற போக்கை கவனித்தால் டி.எம்.கிருஷ்ணா விரைவில் ராஜ்ய சபை உறுப்பினர் ஆகிவிடுவார் என்று கருதியிருந்தேன். ஜெயமோகன் இனி ஞானபீடமே வாங்கிவிடுவார் என்கிறார். வாங்கக் கூடியதுதானோ அதுவும்.
*
ஆனால் போகிற போக்கில் தனக்குத் தெரியாத விஷயத்திலும் ஜெயமோகன் ஓங்கி அடிக்கிறார். பொதுவாக இணையவெளி எழுத்தைத் தீவிரமாய் எடுத்துக்கொள்ளவேண்டாம் என்றாலும் தன் கருத்து புத்தகத்தில் வந்துவிடும் என்கிறார். காலத்தால் அழியாத கருத்துகளுடன் மட்டுமே வேறுபட முயல்கிறேன்.
டி.எம்.கிருஷ்ணா மிக மிக நல்ல கர்நாடக இசைக் கலைஞரே. ஒரே போடாய் ஜெயமோகன் போடுவதைப் போல ‘சஞ்சய் அமர்ந்த இடத்தில் அமர்வதற்கே தகுதி இல்லை’ என்பதைவிட, அமர்வதற்குத் தேவையற்ற அளவிற்கு டி. எம். கிருஷ்ணா மரபிசை அறிவும் மேடையில் படைப்பூக்கமும் உடையவரே. அதிநுட்பங்கள் பலவற்றையும் அறிந்திருந்தாலும் உணர்வுப்பூர்வமாய்ப் பாடுவதில் அதிசூரர் எனப் பெயரெடுத்தவரே. வயது வித்தியாசமின்றிப் பல மரபிசை ரசிகர்களையும் உணர்ச்சிவயப்படுத்தியவரே. மரபிசைத் தேர்ச்சியே இல்லாதவரையுங்கூட தன் இசையினால் பைத்தியவெளிக்கு இட்டுச் சென்றவரே.
டி. எம். கிருஷ்ணா இசை மேடைகளில் வளர்ந்த காலங்களில் — சுமார் பதினைந்து இருபது வருடங்கள் முன்பிருந்து சுமார் ஐந்து வருடங்கள் முன்னர் வரை — மரபிசையில் அபாரமாய்ப் பாடியுள்ளார். களையான உற்சாகமான அதிரடியான கச்சேரிகள் பலவற்றை நான் கேட்டிருக்கிறேன். மனது வைத்தால், இன்றும் இனியும் இவ்வகையில் பாடுவார். ஏனோ இவ்வகை ரகளையான கச்சேரிகளில் அவருக்கு இன்று நாட்டமில்லை. சமீப காலங்களில் ஏதோ மனக் குழப்பங்கள். இசையுடன் தொடர்பற்ற எதையெதையோ குறுகிய காலத்திற்குள் இசைமேடையில் சாதிக்கத் துடிக்கிறார். மரபிசை என்று மட்டும் பார்த்தால், குழப்பங்கள் என்பதை விட அறிவெளியில் தட்டுப்படாத ஏதோ அரூவத்தைப் பிடித்துவிட உந்தும் ஒரு தொடர் நமைச்சலில் மேடைகளில் உள்ளார் எனலாம். பிரமாதமாய்த் தொடங்கும் கச்சேரி அடுத்த கால் மணி நேரத்தில் மேடையில் அமர்ந்திருக்கும் சக வித்வான்களுக்கே புரியாத கோணங்களில் பிரவாகித்து, கேட்பவர்கள் விக்கித்து ஒருவரையொருவர் சங்கடமாய்ப் புன்னகைத்துப் புருவ நெளியல்களில் ‘அவ்ளோதான் இன்னிக்கு ஊத்தாக்ஸா’ என விசாரித்து வீட்டிற்கு வந்ததும் மவனே இவங் கச்சேரிக்கு இனிமே போறேனா பார் என்று வாசலில் செருப்பை உதறி… கடந்த சில வருடங்களில் பல முறை இது நடந்துவிட்டது. மீண்டும் செல்பவனே கலையின் ரசிகன். ஜெயமோகனின் அடுத்த நூலையும் வாசிப்பவந்தானே இலக்கிய ரசிகன்.
ஒருவிதத்தில் கலைஞர்களுக்கு இவ்வகை மனநிலைகள் இயல்பே. எதையாவது சிந்தித்துப் புதுப்பித்துக்கொள்ள முயல்வதே அவர்களை உந்தும் சக்தி. ஆனால் என்ன, இன்றைய வடிவிலான கர்நாடக இசை மேடைக் கச்சேரியை வீம்பிற்கென்றே மங்களத்தில் தொடங்கி வர்ணத்தில் முடித்தவர்கள் இங்கு ஏற்கெனவே உண்டு. இதைப்பற்றி ‘லலிதா’ ராமுடன் எழுதியிருக்கிறேன் (சொல்வனத்தில் என்று நினைக்கிறேன்). இவ்வகைத் தடாலடிகளிலும் தான் ‘வித்தியாசம்’ எனக் கருதி அவர் செய்யும் பலவற்றிலும் டி.எம்.கிருஷ்ணா முன்னோடி இல்லை. ராஜரத்தினம், மஹாலிங்கம், பாலமுரளி, தஞ்சாவூர் கல்யாணராமன், டி.ஆர்.சுப்ரமணியன் என்று மிக நீண்ட பட்டியலே உள்ளது, அதுவரையிலான கச்சேரி மரபுகளைத் தகர்த்தெறிந்தவர்களுக்கு.
கர்நாடக இசையில் டி.எம்.கிருஷ்ணா வல்லவரே. அதன் மையத்திற்காக மட்டுமே தொடர்ந்து தன் உழைப்பை வழங்கிவந்திருந்தால் மரபிசை ரசிகர்களின் மானசீக முருகக் கடவுளாகியிருப்பார் (அழகான இளமையான தெய்வம்).
விருதுகளும் புகழ் தேட்டங்களும் அதற்கான தேவையற்ற செயல்பாடுகளும் எக்கேடோ போகட்டும். அய்யர் அய்யங்கார் சபா லாபிக்கள், இடது வலது சாரிக்கள் எவரும் எவையும் கலையன்று. கலை அநாதி. அதன் போக்கை மனிதனால் முழுவதுமாய் நிர்ணயித்துவிட முடியாது. டி. எம். கிருஷ்ணா எனும் நல்ல கர்நாடக இசைக் கலைஞன் மீண்டும் மேடையில் மட்டும் இசையால் முழங்குவான் என்றே காத்திருக்கிறேன். கோயில்களுக்கு அடுத்து குப்பை மேடுகள் செழிக்கும் நம் நாட்டில் அந்த மேடை எங்கு எவரால் எவருக்காக இடப்படுகிறது என்பது எளிய இசை ரசிகனான எனக்கு முக்கியமில்லை. எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு…
*
இப்போது அருண் என்பவரின் கேள்விக்குப் பதிலாய் இசை அறிதல் என்று ஜெயமோகன் எழுதியுள்ளதைப் பற்றி.
முதல் பத்தியே பயமுறுத்தினாலும், கொஞ்சம் ரிஸ்க் எடுத்து முழுவதும் வாசித்தேன். இசை அறிதலை விளக்க விளக்க, அதை வாசிக்க வாசிக்க, அடிப்படையாக எத்தனை விளக்க வேண்டியுள்ளது என்பது நமக்கு விளங்கிக்கொண்டே வந்து மலைப்பு ஏற ஏற, நல்லவேளை சிறிய கட்டுரைதான். முடிந்துவிட்டது.
இசையைக் காட்சியாக்கிக்கொள்வது சிலருக்கு இயல்பே. அருமையாகவே சொல்லியிருக்கிறார். சிலருக்கு மனத்தில் இசை நிறங்களாய்க் குழையும். எனக்குக் கண்களை மூடினால் பல இசைக் கணங்கள் நிறங்களின் கூட்டாய்ச் சிதறும். இயற்கைக் காட்சிகளும் கனவுலகு போல உருவாகும். சுவரங்கள் அனைத்திற்கும் ஒத்த நிறங்கள் உண்டு என்கிறது ப்ரதர்ஷனி. எஸ். ராஜம் ஓவியங்களாய்த் தீட்டியுள்ளார். ஷட்ஜம் சரி ஷட்ஜமம் தவறு எனும் பதிவில் என்றோ குறிப்பிட்டிருந்தேன். லலிதா ராம் எஸ். ராஜம் பற்றி எடுத்திருந்த கானொளியில் விரிவாக ஓர் காட்சி விலக்கம் உள்ளது. (டிவிடி காப்பி கடைகளில் இருக்காது; ஓசியில் பார்த்துக்கொள்ளவும்). ஒலி வண்ணம் இவற்றை அறியும்/உணரும் இடங்கள் மூளையில் அருகருகே உள்ளன என்று நியூராலஜிஸ்டுகள் கருதலாம். வி. எஸ். ராமச்சந்திரன் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ராகங்களைக் கண்டுபிடிப்பதும் விரல்விட்டுச் சுவரங்களை எண்ணிப்பார்ப்பதுமே ரசனை என்று சொல்லப்படுகிறது என்கிறார். எங்கு? விரல் விட்டு எங்கு சுவரங்களை எண்ணுகின்றனர்? கூடவே தாளம் போடுவதைச் சொல்கிறாரா? சுவரக் கோர்வை ஒன்றை ஒரு தாளத்தில் ஒரு வேகத்தில் (பிரமாணத்தில்) பொருத்திப் பாடுவதைச் சொல்கிறாரா? ரசனை இதுவல்ல என்கிறாரா அல்லது இதைச் செய்யவேக்கூடாது என்கிறாரா? ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஆரோஹணம் அவரோஹணங்களுக்குப் புது விளக்கம் கொடுத்தார். அப்போது செய்ததையே இன்றும் செய்வோம். ‘போர்து வுடுமா’ என விட்டுக் கடந்து செல்.
இருந்தாலும் அடுத்ததாய்… ராகங்களைக் கண்டுபிடிப்பது ரசனை. இப்படி யார் சொன்னது? ஓயாமல் இதைச் சொல்லிவருகின்றனர். சொல்கிறார். உண்மையில், ராகங்களைக் கண்டுபிடிப்பதை முயன்று தோல்வியுற்று அதனால் உண்டாகும் தாழ்வு மனப்பான்மையிலேயே இந்தக் ‘கண்டுபிடித்தலை’ச் சிறப்பாக ‘அஸால்டாய்’ச் செய்வோரது ‘ரசனை’யைச் சாடுகின்றனர் எனத் தோன்றுகிறது. தனக்கு வராததை இவன் மட்டும் செய்வதா, இவன் செய்வதே வீண் என்று ஆக்கிவிட்டால்… இசையைப் பயிலவே ராகங்களை ஒருவாறு தெரிந்து அறிந்து பெயர் வைத்து பொட்டு வைத்து பூ வைத்து அணுகவேண்டும். இசையைக் கேட்டு ரசிப்பதில் யார் ஐயா உங்களை ராகங்களைக் கண்டுபிடிக்கச் சொன்னது? என்று தொலைந்தது அவை நீங்கள் கேட்கும் இசையில் இன்று மீண்டும் கண்டுபிடிக்க? கல்யாணி ராகத்தில் பாடுவதைக் காம்போதி என்று நினைத்துக் கேட்டாலும் இசைதானே. கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும், ஜெயமோகன் ராகம் என்று நினைத்துக் கேட்டாலும் இசைதான்.
ஆனால், ராகங்களின் உருவங்களே பிடிகளிலும் (ஒருவகை பிரத்யேகச் சுவரக் கோர்வை), கமக அசைவுகளிலும் தான் உள்ளது என்பதே கர்நாடக இசையின் சிறப்பாகிவிட்டிருக்கையில் அவற்றை வைத்தே ரசனை விவாதங்களும் உருவாவதில் தவறென்ன? கவனிக்கவும், விவாதங்கள் தரம் பிரிப்பது போன்றவை வருகையில்தான் இந்த அளவுகோல்கள் பெரும்பாலும் தேவைப்படுகிறது. இவ்வாறு ரசனையை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டுமானால் ராகங்களைக் ‘கண்டுபிடிக்க’ முனையலாம். இது ரசனையின் ஒரு நிலையே. ஆனால் புறவயமான நிலை என்று அருதியிடமுடியும். பழக்கமான ரசனை நிலையில் தேவையில்லை. செய்யவும் கூடாது. இவ்வகை நுணுக்கங்களை ஒதுக்கிவிட்டும் அதே மரபிசையை விவாதிக்க முடியும்தான். குரல் வளம், பாவம், பித்துநிலையாக்குதல், கவித்துவம், போன்ற பல அளவுகோல்கள் உள்ளனவே. அத்தளங்களில் அகவயமான கருத்துகளே மேலோங்கும் என்பதால் சச்சரவுகளில் முடிந்துவிடும். தரம் பிரியாது. விவாதங்கள் எம்முடிவுவை நோக்கியும் செல்லாமல் கேட்டு ரசிப்பதை விட்டு, ஓயாமல் இசையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கவே வழிவகுக்கும். ஜெயமோகன் தன் எழுத்தினால் புத்தியைத் தொடுவாரா மனத்தைத் தொடுவாரா போன்ற விவாதங்களில் பங்குபெறுவோர் விவாத முடிவில் பெறுவதையே மேற்படி இசை விவாதங்களில் பெறமுடியும். இடையில் இசை அறிதல் பேஸ்தடித்து எங்காவது ஒளிந்திருக்கும்.
டி.எம்.கிருஷ்ணா கணக்குகளில் சிறந்தவர் (அதனால் ஜடாயுவிற்குப் பிடிக்கும்) என்கிறார் ஜெயமோகன். வீட்டுக் கணக்கா? டி.எம்.கி. படிப்பையே இசைக்காகப் பாதியில் விட்டவராயிற்றே… மாறாக டி.எம்.கி. அரசியல் கணக்குகளில் சிறந்தவர் எனக் கருதியுள்ளார் என்றால், அவருக்குத் தெரியாததா…
இரண்டுமில்லை, இசைக் கணக்குகளைத்தான் குறிப்பிடுகிறார் என்போம். அடிப்படை கால இடைவெளி ஒன்று (ஒரு தாளம்) பலமுறை தொடர் சங்கிலிகளாக நீளும் காலத்திற்குச் சரியாகப் பொருந்தி வருமாறு சுவரக் கோர்வைகளை அமைத்துப் பாடுவதை இசையில் கணக்குகள் என்று குறிப்பிடுவர்.
இந்த வகை இசைக் ‘கணக்குகளை’ சிறப்பாகச் செய்வதற்கு மனத்திலும் தொடையில் போடும் கையிலும் தாளம் வலுவாய் நிற்கவேண்டும். அப்படியென்றால், கவனம் பிசகாமல் கால இடைவெளிகளைக் குறித்துத் தட்டிக்கொண்டே இருக்கவேண்டும். ஏனெனில், தொடர்ந்து பின்புலத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த கால இடைவெளித் தொடரின் மீதே இசைச் சுவரங்களை, மெலடியை, ‘கணக்கு’ என்று மனத்தில் உருவாக்கிப் பாடிப் போகமுடியும். தாளம் தப்பினால், ‘கணக்கு’ தவறிவிடும்.
ராமேஸ்வரம் கோயிலில் உள்ளது போல வரிசையாகத் தூண்களை கால இடைவெளிகளைக் குறிப்பிடும் ஒரு வகைத் தாளம் எனக் கொள்வோம். பிரகாரத்தின் ஒரு கோடியில் தொடங்கி இத்தூண்களைக் கடப்பதற்கு ஒரு வேகத்தில் நடந்து செல்லலாம், ஓடலாம், நொண்டியடிக்கலாம் அல்லது நாட்டியமாடியபடியே செல்லலாம். நடந்து செல்வது கால்களிருக்கும் நம் அனைவராலும் முடிவது. தாளத்திற்கு மேலாக சாதாரணமான சுவரக்கோவை ஒன்றை அமைத்துப் பாடுவது எளிய மரபிசைப் பயிற்சி உடைய அனைவராலும் செய்ய முடிவது. நொண்டி அடிப்பதற்கு ஒற்றைக் காலில் பலம் வேண்டும். ஒரு ராகத்தில் நிறைய பயிற்சி இருந்தாலேயே அதன் உருவம் கெடாமல் தாளத்திற்கு மேலாகச் சற்று கடினமான சுவரம் கோர்வைகளை அமைத்துப் பாடமுடியும். பல மணிநேரம் வீட்டில் நொண்டியடிதுப் பயிற்சி செய்யவில்லை என்றால் கோயில் பிரகாரம் கால்தூரம் தாண்டுவதற்குள் கால் தடுக்கி விழுந்து விடுவோம். அல்லது கால் மாற்றிக் கொள்ளட்டுமா எனக் கெஞ்சுவோம். ஒரு ராகத்தில் அபாரப் பயிற்சி இல்லாது போனால், கணக்குகள் வரவில்லை கற்பனை ஓய்ந்துவிட்டது சார்ந்த மற்றொரு ராகத்திற்கு கால் மாற்றிக்கொள்ளட்டுமா என்று மேடையிலேயே கெஞ்சி விடுவோம்.
இப்போது நாட்டியமாடியபடியே பிரகாரத் தூண்கள் அனைத்தையும் கடப்பவரை யோசித்துப்பாருங்கள். பார்ப்பதற்கு எத்தனை பிரமிப்பாகவும் நளினமாகவும் இருக்கும். அந்த நளினத்தை எட்டுவதற்கு மறைவில் எத்தனை பயிற்சி செய்திருப்பார். ஒரு தாளத்தில் ஒரு ராகத்திலேயே சுவரக் கோர்வைகளாக பல மெலடிகளை அணிவரிசையாக இட்டு நிரப்பியவாறே (நேரம்)காலத் தூண்களை வேகம் கெடாமல் இசை மேடையில் கடந்து செல்வது கேட்பதற்கு எத்தனை நன்றாக இருக்க வேண்டும். அதைச் செய்வதற்கு எத்தனை பயிற்சி வேண்டும்.
நாட்டியமாடிச் செல்பவரைக் காண்கையிலேயே அதன் அபிநய லாகவங்கள் பலவற்றையும் மனத்தோடு ரசிப்பதற்கு பித்துநிலைக்கு அந்த நடை என்னைத் தள்ளுகிறதா என்று சரிபார்ப்பது எத்தனை எளிய அளவுகோலோ அத்தனை எளிய அளவுகோலே அதே போல ஒருவர் இசை மேடையில் செய்யும் கணக்குகள் எனப்படும் சுவரக் கோர்வைகளின் ஜாலங்கள் என்னைப் பித்துநிலைக்கு இட்டுச் சென்றதா எனச் சரிபார்ப்பதும்.
இன்னொன்று, இந்த சுவரக் கணக்குகளை ஜெயமோகன் இப்போதெல்லாம் கேட்பதாகச் சொல்லும் இந்துஸ்தானி இசையிலும் அபாரமாக நிறையவே செய்வர். (தமிழ் எழுத்தாளர்கள் இந்துஸ்தானி இசை கேட்பதாவது என்ன புது டிரெண்டா, என் முன்னிலையில் சென்ற வருடத்திலேயே நான்கு எழுத்தாளர்கள் கூறிவிட்டனர்.)
பித்துநிலைக்கு இட்டுச் செல்வதென்பது ஒரு அளவுகோல்தான். மிகவும் அகவயமான அளவுகோல். எனக்கு என் பித்துநிலை உங்களுக்கு உங்கள் பித்துநிலை. நான் ஒரு கலையின் மேன்மை பற்றி அறவே அறியாதவன் என்கிற பொறுப்பற்ற மேட்டிமையில் மட்டுமே இவ்வாறான அளவுகோல்கள் கொண்டு ரசிப்பேன். ஆனால் அது என் உரிமை என்பதை மறுப்பதற்கில்லை. அதனால்தான் நாட்டியக் கலை பற்றி என்னுடைய எந்தக் கருத்தையும் வெளியே சொல்வதில்லை. என் உறவினர்கள் பலரும் நாட்டியமாடுபவர்கள் என்றாலும் கூட. தெரியாது தெரியாது எனச் சொல்லிக்கொண்டே தொடர்ந்து இருபது வருடங்கள் அதைப்பற்றி எழுதிவைக்க எனக்கு வேறு விஷயங்களா இல்லை.
சரி, மீண்டும் கணக்குகளுக்கு வருவோம். மேலே அறிமுக நிலையிலேயே சட்டென்று தோன்றிய உதாரணம் வைத்து எளிதாகத்தான் விளக்கியுள்ளேன். ஒரே கட்டுரையில் செய்துவிடும் அளவிற்கு நம் பாரம்பர்யக் கலைகள் அத்தனை நுட்பமானவை சிக்கலானவை இல்லை என்றாலுமே. ராகம் தானம் பல்லவி கட்டுரைத் தொடரில் மற்றொரு அறிமுகம் உள்ளது.
இந்த இசைக் கணக்குகளில் இன்றைக்கு டி.என்.எஸ்.கிருஷ்ணா என்பவரே சூரர். சேஷகோபாலனின் மகன். டி.எம்.கிருஷ்ணா இக்கணக்குகளில் சூரர் இல்லை. சாதாரணர். உணர்ச்சியாகப் பாடுவதில்தான் சமர்த்தர். அதாவது நம்மைப் பித்துநிலைக்கு இட்டுச்செல்லக்கூடிய உணர்வுப்பூர்வமான பாட்டிலேயே டி.எம்.கிருஷ்ணா வல்லவர். ராகங்களை அதன் முடிவிலிவரை நீட்டிப் பாடக்கூடியவர். ஒரே ராகத்தில் நான்கு மணிநேரங்கள் தொடர்ந்து பாடப்படும் கச்சேரிகளை இன்றளவும் கொடுப்பவர். ஜெயமோகனும் நாமும் கடைகளில் வாங்கிக் கேட்கும் இருபது ஆல்பங்களில் இவை இடம்பெறாது. முந்நூறு பக்கள் கொண்ட புத்தகத்தையே பதிப்பிக்க மறுக்கும் கலைவர்த்தகர்கள் மூவாயிரம் பக்கங்கள் கொண்டதை அத்தனை எளிதாகப் போட்டுவிடுவரா அதை லட்சக்கணக்காய் நாம்தான் வாங்கியும்விடுவோமா? நான் இசை ரசிகனைச் சொல்கிறேன்.
ஏன் இந்த இசை கணக்குகளில் டி.எம்.கி. சிறந்தவர் இல்லை என்கிறேன் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளது. ஒன்றை மட்டும் எளிதாக உங்களிடம் கடத்த முடியும். முன்னர் குறிப்பிட்ட உதாரணத்தில் தூண்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. அவை இருப்பதை ஏற்று நாட்டியத்தை கவனித்துக்கொண்டு சென்றால் போதும். ஆடுபவரும் சரி, பார்ப்பவரும் சரி. இசையில் அத்தூண்களை தாளம் என்றேன். அதை யாராவது சரியாக அவதானிக்க வேண்டும் (தொடையில் போடவேண்டும்) இல்லையா. அதாவது கால இடைவெளிகளை கோட்டைவிட்டால் தூண்களைச் சட்டென்று இடைவெளிகளில் கூட்டியோ குறைத்தோ இடம் மாற்றிப் பொருத்துவது போல ஆகிவிடும். தூண்களிடையே சாதரணமாய் நடப்பவர் சமாளித்துக் கொள்வார், சட்டென்று வேகமாக நடப்பார் அல்லது மெதுவாக. செய்து இரு தூண்களின் இடைவெளியை அதே எண்ணிக்கையான தப்படிகளில் கடந்துவிட்டதாகக் ‘கணக்கு’ சரியாக வருவதாய்க் காட்டி விடுவார். ஆனால் நாட்டியமாடுபவர் பாடு பெரும்பாடு. அடுத்த தூண் இங்குதான் என்கிற அனுமானத்தில் காலெடுத்து ஆடியவாறு முன்செல்பவர் சடாரென்று அடுத்த தூண் முன்னாலோ பின்னாலோ போய்விட, அதற்கு அடுத்த தூணும் இதுபோல இடம் மாறுமா மாறாதா என்று குழப்பம் வர, ஈடுகட்ட ஆடிவரும் நாட்டியத்தை மாற்ற, சற்றேனும் நளினத்தையாவது இழப்பார். அல்லது அபிநயக் கற்பனை தடைபட்டு நாட்டியத்திற்கு பதிலாக நம்மைப் போல தூண்களிடையே வெறுமனே தீய்த்து தீய்த்து நடந்து விடுவார். பார்ப்பவர்களுக்கு ரசனை ஊறு பெரும் ஊறு. புடவை தடுக்கிய நாட்டியத்தின் நிலை.
இசையில் பாடுபவரே தாளங்களைப் போட்டுக்கொள்ளவேண்டும். இது பின்னணியில் நடைபெற மனத்தில் முன் கற்பனைவெளியில் இசை நாட்டிய சுவரம் கோர்வைக் கணக்குகளை அவர் விரிக்கவேண்டும். தாள ஓட்டம் சரியாக அமையாது முன்வெளியின் கற்பனை பலசமயம் கவிழ்த்துவிடும். அதனால் சில வேளைகளில் சுதாரித்து முன்கற்பனைக்கு ஏற்று பொருந்துகிறார்போல போகிற போக்கில் தூண்களின் இடைவெளிகளை தொடையில் வேகமாகவோ மெதுவாகவோ தாள இடைவெளிகளைத் தட்டி சரிகட்டிவிடுவர். ஆப்பரேஷன் சக்ஸஸ் பேஷண்ட்…
டி.எம்.கிருஷ்ணாவிற்கு இவ்வாறு சிலமுறையாவது நடந்துவிடும். பத்து கச்சேரிகள் கேட்டால் நான்கைந்திலாவது. அவர் கணக்குகளை அறிந்தவராய் இருக்கலாம். மேடையில் அதில் சூரர் இல்லை. அவருக்கும் இது தெரிவதால் தேவையான அளவிற்குச் செய்துவிட்டு வேறு பலங்களை முன்வைப்பதில் கவனம் கொள்வார்.
சொல்லப்போனால் இதன்படி பார்த்தால், ஜெயமோகன் தன்னை பித்துநிலைக்கு இட்டுச் சொல்லும் இசையை வழங்குவதாகக் குறிப்பிடும் சஞ்சய்க்கு தான் தாளம் நன்றாய் நிற்கும். இசை ஊரறிந்த விஷயம் இது. டி.என்.எஸ்.கிருஷ்ணாவிற்கு அடுத்து அவர்தான் இன்றைய முன்னனி பாடகர்களில் ‘கணக்கு’களில் சிறந்தவர் என்றும் விவாதிக்கலாம் (போன தலைமுறையில் சேஷகோபாலன் போன்ற வேறு கில்லாடிக் கணக்கு கலைஞர்கள் உள்ளனர்; அதற்கும் முந்தைய தலைமுறையில் ஆலத்தூர் சகோதரர்கள் என்று பட்டியல் நீளும்). ஆனால் நிச்சயம் இந்தக் கணக்கு அளவுகோலில் டி.எம்.கி. ஒரு மாத்து கீழ்தான். ஆனால் கணக்கு தாளம் என்று தப்பினாலும் என்றுமே உணர்வாய்ப் பாடிக்கொண்டிருப்பார் (உடனே இசைக் கலைஞரே இல்லை என்று தூக்கியடிக்க முடியாது என்பதால் கூடவே இதையும் சொல்கிறேன்). அவரவருக்குப் பலவித பலங்கள் பலவீனங்கள். அனைத்து சிறந்த கலைஞர்களும் இவ்வாறே.
*
இவை புரிவதற்கு நான்கு கச்சேரிகள் கேட்டால் போதாது. மேலும், இவ்வகை அளவுகோலை அறிந்துகொள்ளும் பயிற்சியும் அவசியம். இசையைக் கேட்டதுமே நாம் அடைந்துவிடும் பித்துநிலை அளவுகோல் இதற்கு உதவாது. அவ்வாறுதான் நான் கேட்பேன் அது என் உரிமை என்று நாம் உறுதிசெய்துகொண்டாலும். அவரவர் ரசனை மட்டத்திற்கு ஏற்றவகையிலேயே அணுகும் கலை விரியும். அல்லது சுருங்கும்.
நுண்கலைகள் பலவற்றிலும் இவ்வகை நுட்பங்களை அறிவதென்பதும் ரசனையின் அங்கமாய் ஆகிவிட்டிருக்கும். அக்கலையின் தொன்மையின் அளவுகோல் அது. அதையே தங்கள் வசதிக்கேற்பக் குறையாகக் காண்பது அக்கலையில் பயிற்சியற்றவர்கள் செய்வது. சற்று இளகிச் சொன்னால் இலக்கியம் வழியே என்பதுபோல இலக்கணம் வழியே மொழியை அணுகுவதும் கற்கும் முறைதானே? பழுத்த கலைகளை என்னைப் போன்ற பாமரர்கள் காலப்போக்கில் அதற்கான முன்பயிற்சி இன்றி அனுகமுடியாது போய்விடும்தான். ஜெயமோகன் புதினங்களைப் படிக்க ஒரு வாசகநிலைத் தகுதியை முயன்று வரவழைத்துக்கொள்ள வேண்டும் இல்லையா?
நான் வெறும் எளிய கலா ரசிகன். இலக்கிய ரசனையை உயர்த்திக்கொள்ள இலக்கியத்தை எவ்வாறு ரசிக்க வேண்டும் என்று மூத்தவர்கள் எழுதியவற்றை என்னால் முடிந்த அளவு சிரத்தையாக வாசிக்கிறேன். பல விஷயங்கள் இன்னமும் புரியவில்லை. இனியும் புரியாது என்றும் ஆகலாம். ஆனால் கருத்து சொல்லவேண்டும் என்பது என் எழுத்தின் நமைச்சல். அரைகுறையாகப் புரிவதை அவ்வாறுதான் என் புரிதல் என்றே தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டால் போதும் எனத் தோன்றுகிறது. பிறகு இலக்கியதைப் பற்றி எது வேண்டுமானாலும் எழுதிவைக்கலாம், தொடர்ந்து செய்துவந்தால் அதையே சாதனை போலவும் சொல்லிக்கொள்லலாம் எனத் தோன்றுகிறது. உதாரணமாய், வாசித்ததுமே என்னை பித்துநிலைக்கு எடுத்துச் செல்லும் எழுத்தே என்னை ஈர்ப்பவை. எனக்கு வாசிக்கையில் எழுத்து இசையாய் ஒலிக்கவேண்டும் அதுவே என் ரசனை. புத்தியைத் தூண்டும் பின்ன மாத்திரை மரபெழுத்தோ கவியோ என்னை ஈர்ப்பவை இல்லை. எத்தனை மரபும் வளர்ச்சி நிலைகளும் படிமங்களும் நுண்மைகளும் அவற்றில் இருந்தாலும். அவற்றை தேவையான நுண்மையான அளவுகோல்கள் கொண்டு வாசிப்பது எழுத்து ரசனையா என்றே சந்தேகமாய் உள்ளது. எனக்குப் புரியவில்லை என்பதாலும் இருக்கலாம். எனக்கு வராதது கலையா என்றே கடுப்பாகிறது. இவ்வாறெல்லாம் இலக்கியத்தைப் பற்றி எழுதலாம் எனத் தோன்றுகிறது.
தினமும் செய்வதற்கு இவ்வகை அரைகுறைச் சிந்தனைகள் நிறைய இருந்தாலும் நல்லவேளையாக எனக்கு அவகாசமில்லை. திராணியுமில்லை. அதனால் புரியாத பல கலைகள் பற்றி அநாயாசமான மனோதிடத்துடன் நான் எழுதிச்செல்வதை நீங்கள் பெறுவதற்கில்லை. ஆனாலும் கலைகள் அநாதி. எப்படியோ பிழைத்துக்கொள்ளட்டும். இல்லை தன்மானங்காக்க மாய்த்துக்கொள்ளட்டும்.
ஜெயமோகன் இசை வரலாற்றைப் பற்றி, இசையின் வளர்ச்சி நிலை, உதவிய சமுதாயங்கள் என்று இசையைச் சுற்றி எழுதியவர். எழுதுகிறவர். நல்ல பணி. நடக்கட்டும் நன்றாகவே. அவர் தளத்தில் இசை வரலாறு வளர்ச்சி பற்றி பல நல்ல கட்டுரைகள் உள்ளன. ஆனால் அவர் இசையை எழுதவில்லை. அவ்வாறு முயன்றபோதெல்லாம் அவ்வெழுத்தில் பிழைகள் மலிந்திருக்கும். ஏனெனில் அவர் கூறுவது போலவே அவருக்கு இசை தெரியாது. எப்படி நம் சங்க இலக்கிய மரபுக் கவிதைகளை அணுகுவதற்கு சுஜாதாவின் எழுத்து ஒரு பிழையான முன்மாதிரியோ அதுபோலத்தான் மரபிசையை அணுகுவதற்கு ஜெயமோகன் இசையைப் பற்றி எழுதுவதும்.
அவரது ‘இசை அறிதல்’ கட்டுரையின் ஒற்றை வரியின் பிழையை மறுப்பதற்கே இத்தனையாவது எழுதவேண்டியுள்ளது. இருபது வருடங்களாக இசை தெரியாது என்றவாறே இசை பற்றி எழுதிவைப்பதையெல்லாம் வாசித்துச் சரிபார்த்து…
என் பணியல்ல அது. ஜெயமோகன் எனும் தமிழின் சிறந்த புனைவெழுத்தாளன் மீது என்றுமிருக்கும் அபிமானத்தினால்தான் இத்தனையாவது பொதுவெளியில் எழுதிடத் துணிந்தேன்.
சாந்தி.
***
சுட்டிகள்
இசையை அறிதல் http://www.jeyamohan.in/89383
டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேசே http://www.jeyamohan.in/89307
சாதி, சங்கீதம், டி.எம்.கிருஷ்ணா http://www.jeyamohan.in/89353