காதாசப்தஸாதி: ப்ராக்ருதி மொழிக் காதல் கவிதைகள்

Standard

IMG_1926

ஹாலா இரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட சாதவாஹன அரசன் [ https://en.wikipedia.org/wiki/Hāla ]. கவிஞன் அல்லது கவிதையில் நாட்டமுள்ளவன். காதாசப்தஸாதி என்பது இவ்வரசன் (மஹாராஷ்ட்ரிய) ப்ராக்ருதி மொழியில் தொகுத்த காதல் கவிதைகள். சுமார் 700 சிறு கவிதைகள். அதான் சப்த ( = 7). காதா என்றால் பாடல்.

இந்தியப் பிரதேசத்தின் தொன்மையான கவிதைத் தொகுப்பு நூல்களில் ஒன்று. ஹிந்தி, மராத்தி ஜெர்மன் மொழிகளில் நூறு வருடங்களுக்கும் முன்பாகவே மொழியாக்கப்பட்டுப் பெயரெடுத்தவை. வாய்வழியே அறிவுச்சேகரம் செய்த மரபானதால் இக்கவிதைகளில் பலதும் ஹாலாவின் சமகாலத்தைவிடத் தொன்மையானவை எனலாம்.  இந்தக் கவிதைத் தொகுப்பு நூலிற்குப் பின்னர் வந்த பல சமஸ்க்ருத கவி ஆக்கங்கள் சுவடின்றிப்போய்விட்டன, இன்றும் காதாசப்தசாதி கவி அறிஞர் சபைகளிலேனும் கோலோச்சுகிறது. காதல் என்றுமிருக்கும்.

கவிஞர் அர்விந்த் க்ருஷ்ண மெஹ்ரோத்ரா [ https://en.wikipedia.org/wiki/Arvind_Krishna_Mehrotra ] 1991இல் ‘இல்லாத பயணர்’ எனும் தலைப்பில் காதாசப்தசாதியில் இருந்து சுமார் 200 காதாக்களை ஆங்கிலத்தில் மொழியாக்கியுள்ளார். இந்திய அழுக்கு தாள் பேப்பர் பேக் பிரதியை பெங்குவின் வெளியிட்டுள்ளனர். The Absent Traveller Prakrit Love Poetry from the Gathasaptasati of Satavahana Hala  — translated by Arvind Krishna Mehrotra, Penguin India Pub., (1991, 2008).

இத்தொகுப்பில் காணப்படும் கவிதைக் குரல்கள் பெண்களுடையவை. பெண்கள் பெண்களிடம் பகிர்ந்தவை… வெகுசிலதே ஆண் குரல்கள். பெண்மையின் மங்கிய பிரதிபலிப்பான ஆண் குரல்கள்…

அகம் புறத்திலும் புறம் அகத்திலும் பிரதிபலித்து அவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் மரபு இந்தியப் பிரதேச எழுத்தின் சிறப்பு. சங்க காலச் சிறப்பு. இதற்குப் பல உதாரணங்கள் இந்த ப்ராகிருதி காதல் கவிதைத் தொகுப்பில் உள்ளது.

பவளமும் மரகதமும் கோர்த்து வானில் வீசிய மாலையாகிறது சங்க வானில் பறக்கும் பச்சைக் கிளிக்கூட்டம். காளிதாசர் எடுத்தாண்ட உவமை காதாசப்தசாதியில் உள்ளது. பாடல் 75. மார்த்தா ஆன் செல்பி சுட்டிக்காட்டுகிறார் இந்த மொழியாக்க நூலின் தனது பின்கட்டுரையில். ஐங்குறுநூறில் இருந்தும் பச்சைக்கிளிகளின் தொடர்புடன் அமைந்த பாடலை உதாரணம் கொடுக்கிறார். பொதுவாக தமிழ்க் கவிதைகளில் இந்த ப்ராக்ருதி ஆக்கத்தில் தென்படும் அளவிற்குக் காமம் வெளிப்படையாகப் பேசப்படவில்லை. மறைத்தோ, உட்பொதிந்தோ கையாளப்பட்டுள்ளது. இருந்தும், ஒரு காலகட்டத்தில்  உருவான உவமைகள் தேய்ந்து மறைவதற்குக் காலங்கள் ஆகின்றன. காளிதாசரும் தமிழின் எட்டுத்தொகை கவிகளும் அவர்கள் காலத்திற்கு முந்தைய இம்மாதிரியான ப்ராக்ருதி மொழி ஆக்கங்களில் காணப்பட்ட உவமைகளையும் உருவகங்களையும் தங்கள் கால இட நிலைகளுக்கேற்ப மாற்றிக்கொண்டார்கள் என்கிறார் மொழியாக்க ஆசிரியர்.

அறிமுகம் கருதியே மாதிரிக்குச் சிலவற்றைக் கீழே தமிழாக்கி வழங்கியுள்ளேன்.

இவை சீரிய மொழியாக்கங்கள் அல்ல. அதற்கான மொழித் திறனும் கவித் தகுதியும் எனக்கில்லை. வாசித்த ஆங்கில வடிவிலிருந்து ஆர்வத்தில், சட்டென மனத்தில் தென்பட்ட ஆங்கில தமிழ் சமனிலைச் சொற்களால் போகிறபோக்கில் செய்யப்பட்டவையே.

ப்ராக்ருதி மூலத்தின் ஒவ்வொரு காதாக்களும் சீரிய ஆர்ய சந்தத்தில் அமைந்தவை. தமிழில் எட்டுத்தொகை நூல்களின் கூட்டு மாத்திரை விதிகளுக்கும் மரபிற்கும் சற்றும் வழுவாதவை. நல்ல கவிஞர்கள் இவற்றை — தேவையெனில் மரபுக் கவிதையாகவும் — செம்மையாக தமிழில் மொழியாக்கி நூல் வடிவில் தொகுக்கலாம். எட்டுத்தொகை கவியாக்கங்களுடன் நேரடியாக நாம் ஒப்பிட்டு ரசிக்க உதவும். குறைந்த பட்சம் சங்க காதல் சங்கேதங்கள் இன்றையவரிடத்தேயும் செம்மொழிகள் கடந்து மலர்ந்திருக்கும். ‘பிறவி ரொமாண்டிக்’ பதிப்பாசிரியர் காதில் போட்டு வைத்திருகிறேன்.

இரவில், கன்னம் சிவக்கக்
களிப்பில் எனை நூறு விதச்
செயல்கள் செய்ய வைத்தவள்
காலையில், தலை நிமிரவேத்
தயங்கும் நாணத்துடன்
நம்பமுடியவில்லை, இவள் அவள்தானா!

*

காதலித்தவளைத் துறந்து
காதலிக்காதவளுடன் அமர்ந்திருப்பது
வேதனையை இரட்டிப்பது. உனை
இட்டுவந்த நன்மை அதை மதிக்கிறேன்.

*

ஊடலுக்குப்பின்
மூச்சைத் தாழ்த்திக்
காதைத் தீட்டிப்
பொய்த் துயில்கின்றனர்
காதலர்கள்.

பார்ப்போம்
யார் நீடிப்பர்
இவ்விதமே
என

*

அவன் புது மனைவியின்
திட மார்பகங்கள்:

ஒட்டிய கன்னங்களிடையே
மூப்பனின் பெருமூச்சு

*

அவனை இனி என்னைத்
தீண்ட விடமாட்டேன்
தலைப் பிரசவ வலியில்
அவள் அரற்ற
தோழியர் நகைத்தனர்

*

அவன் பார்த்த பார்வையில்
எனை மீண்டும் போர்த்துகிறேன்

அவனை வேறுபுறம் பார்க்கவைக்க
என்பதற்கில்லை

*

யாரே விடுபடுவர்
யாரே கீழ்மையில் தப்புவர்
யாரே மயங்காதார்

வேசி உடலின் நகக்கீற்றுகள்
சொல்லிடுமே அனைத்தையும்

*

கணவன் உன் மார்ப்பில் வரைந்த
காதல் கோலங்களைக்
காட்சியாக்குகிறாயோ பெருமிதமாய்

நானும் என்னவன் முன் நின்றேனடி
அவன் கைகள் அங்கு
எல்லை மீறிப் போய்விட்டதடி

*

பயிரைப் பச்சைக்கிளிகளே உண்ணட்டும்
இனி நான் அங்கு செல்பவளில்லை
பாதையை நன்கறிந்தவரே மீண்டும் வந்து
வழி கேட்கினரே

*

குளிர்கால இரவுகள்தான்
என் இறும்மாப்பை இழக்கவைப்பவை

*

மாமியாரே
என் முடியில் சிக்கிய
மூங்கில் இலைகளைப் பற்றி
ஒரு சொல் வந்ததோ
உங்கள் முதுகில் அப்பிய
புழுதித் தடங்களைக்
கிளறிடுவேன்

*

சேவல் கூவியதும் ஏன்
திடுக்கிட்டு எழுகிறாய்க் கணவா
நீ உன் படுக்கையில்தான்
விழித்துள்ளாய்

*

ஏதோ
தங்கப் புதையலின்
தலைவாயிலைக் கண்டதுபோல்
திளைக்கிறாள்

காற்று எழுத்திய ஆடையடி
மகளின் அல்குலருகே பல்தடம்
கண்டதும்

*

எப்பொழுதும் எனை
மேலே வா என்கிறாய்

குழந்தையில்லை என
குற்றம் சொல்கிறாய்

கவிழ்ந்த ஜாடியை
நிரப்பிவிடமுடிவதாய் நினைக்கிறாய்

*

அது
மாமியாரின் படுக்கை

இதோ
என்னுடையது

அவை
பணிப்பெண்களது

ராக்குருட்டு வழிப்போக்கனே
தடுக்கிவிழாதே எனதில்

*

அந்த ஆண்கள்
அன்றைய இந்தச் சீரூர்
என் இளமை நாட்கள்

கதைகளாகி இன்று
என் காதுகளையும் எட்டுகின்றன
சிலவேளைகளில்

*