பெரும்பாலும் அக்கப்போர்தான். அவசியம் வாசிக்கலாம்.
*
இருபது வருடங்களுக்கு மேலாக எழுதிய பின்னர் இன்று பிரபலம் என்று அவரைச் சந்திப்போரால் அறியப்படும் ஒரு எழுத்தாளருக்குப் பக்கவாட்டில் தொன்னூறு டிகிரி கோணத்தில் நடந்து முடிந்த புத்தகக் காட்சியில் ஒரு கடையில் அமர்ந்திருக்க நேர்ந்தது.
அவருக்கு அந்தப் பக்கம் இருக்கையில் முகநூல் பிரபலம் என்று கருதப்படுபடும் ஒருவர் வந்து அமர்ந்தார். இவரது சீரான எழுத்தும் புத்தகங்களாய் வந்துள்ளது. இருபதாயிரத்திற்கும் அதிகமான லைக்குகள் சம்பாதித்திருப்பதைப் பற்றியும் தொடர்பான சில பல பேச்சுக்களாகவும் இருந்தவர், கடையில் வருவோரில் தெரிந்தோர்களிடம் அதுவரைச் சிலாகித்திருந்த தன் ஜெர்மன் அலைபேசியில் கைப்பழக்கத்தில் ஒரிரண்டு தற்படம் (ஸெல்ஃபீ) எடுத்துக்கொண்டார். முகநூலில் இடுவதற்காக. பிறகு அருகிலிருந்தவரிடம் அலைபேசியைக் கொடுத்து, பக்கம் அமர்ந்திருந்த பிரபல எழுத்தாளருடன் தன்னைப் படம் பிடிக்கச் சொன்னார். முகநூலில் இடுவதற்காக. நானும் தொன்னூறு டிகிரியில் அமர்ந்திருந்து அதுவரை அவர்களுடன் கலகலத்திருந்ததால் — சென்ற வருடமே நானும் சில தமிழ்ப் புத்தகங்கள் எழுதியுள்ளேன் என்று அவர்களுக்கு அறிமுகமாயிருந்தேன்; இம்முறையும் என் இரண்டாவது நாவல் ஏற்கெனவே அவர்களிடம் சுட்டப்பட்டிருந்தது — இணக்கமாய்ப் பெயர் சொல்லி என்னையும் சேர்த்துப் படம் பிடிக்கச் சொன்னார். சந்தேகத்திற்கு இரண்டாக எடுத்துக் கொண்டார்.
நான் முகநூலில் இல்லை என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
நாளை முகநூலில் படங்களைப் ‘போட்டுவிடுவேன்’ என்றார்.
நாளை அவருடைய முகநூலைப் பார்த்தேன் (நீதான் அதில் இல்லையே எப்படி என்று கேட்காதீர்கள்; இருபது வருடங்களாய் இணைய இருட்டில் தட்டுத் தடுமாறி உலவுபவனுக்கு முகவரி இல்லாமல் முகநூலில் புழங்குவது அங்கு பிரபலமாவதை விட எளிதே). முகநூல் பிரபலம் சொன்னபடியே படத்தைப் போட்டிருந்தார். படத்தில் அவருடன் பிரபல எழுத்தாளர் மட்டும் இருந்தார்.
மேட்டர் முடியவில்லை.
மறுநாளும் முகநூல் பிரபலம் அதே கடைக்கு வந்தார். ‘என்ன சார் முகநூலில் போட்டுவிட்டீர்களா’ என்றேன். ‘இனிமேதான்’ என்றார். இன்று அருகிலிருந்தவரை தன் அலைபேசியில் அவரை என்னுடன் மட்டும் படம் பிடிக்கச் சொன்னார். இன்றும் இரண்டு படங்கள் எடுத்துக்கொண்டார்.
எப்படியும் நான் பிரபலமானதும் அவருடைய முகநூல் பக்கத்தில் ‘போட்டுவிடுவார்’. பார்த்துக்கொள்ளுங்கள் அப்போது யார் பிரபலம் என்பதை.
***
இன்னொரு எழுத்தாளர். புகைஞர் என்பது இம்முறை புத்தகக் காட்சிக் கொட்டகைக்கு வெளியே நான் உடன் நின்றிருந்தவர்களிடம் ஓசியில் பற்றவைக்கையில் தெரிந்தது.
இரண்டு வருடங்களாவது இந்தப் புகைஞர் என்னுடன் மூன்று நான்கு முறைகளாவது சந்தித்துக் கைகுலுக்கி அறிமுகமாகிப் பேசியிருப்பார். ஒவ்வொரு முறையும் ‘நீங்க யாரு…’ என்று தான் மறந்துவிட்ட மில்லியன் பேர்களில் ஒருவராய்த்தான் என்னிடம் தொடங்குவார்.
சென்ற வருட தொடக்கத்தில் பதிப்பாசிரியர் வீட்டுக் கலியாணத்தில் சந்தித்தபோதும் ‘ஓ… இசை ஆர்வலரா… என்னிடம் ஒரு பெரிய அடர் அடுக்கு நிறைய இசைக் கோப்புகள் உள்ளது…’ என்றார். நான் ‘சரி…’ என்றது காதில் விழுவதற்குள் விலகிவிட்டார்.
பிறகு போன புத்தகக் காட்சியில் கடைக்கு வந்திருந்தவரிடம் பதிப்பாசிரியரால் என் புத்தகங்கள் சுட்டிக்காட்டப்பட்டு கல்லாவில் அமர்ந்திருந்த என்னிடம் ஒன்றும் பேசாமல் சிரித்த முகத்தை வேறுபுறம் திருப்பியபடி விலகிவிட்டார். போட்டும் விடுங்க… என்றிருந்தார் ஆதங்கப்பட்ட பதிப்பாசிரியர் அன்று.
இன்று என்னிடம் ‘எப்டி இருக்கீங்க…’ என்று எழுத்தாளர் கேட்டார். நலம் நீங்கள்… என்று நான் கேட்டதற்கு பதிலின்றி அருகிலிருந்த மூத்தப் புகைஞர்களிடம் தன் பேச்சைத் தொடர்ந்தார். வேடிக்கை பார்த்திருந்தேன். தன் குடும்ப விசேஷங்களுக்கு வருமாறு அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்குள் முடிந்துவிடும் நிலையைப் புகையாக்கி எட்டியிருக்க, ‘உள்ளே போணும்… (புகையாக்கியைச் சுட்டியபடி) இதுக்குதான் வந்தேன்… ஒரே கூட்டம், கையெழுத்துக்கு நிக்கறாங்க… வரட்டுமா…’ என்றவாறு என்னையும் உள்ளிருத்தி பார்வையில் வருடிவிட்டு உள்ளே சென்றார்.
‘இப்ப என்ன, தம்மாத்தூண்டு ஒன்னய கண்டுகாம உதார் உட்டு ஜூட் உட்டாறாக்கும்; போர்து வுடு, பிஸ்கோத்து…’ என்றிருக்கையில் இதன் அடுத்த நிமிடங்களையும் வாசித்துவிடுங்கள்.
இரண்டு நிமிடங்களில் நாங்களும் மீண்டும் புத்தகச் சந்தையினுள் எழுத்தாளர் நுழைந்து மறைந்த அதே தெருவினுள் நுழைந்தோம். ‘பாத்தியா… எங்கிட்டயே அடிச்சுவிட்டு சிலுப்பிட்டுப் போறான்… கையெழுத்து, கூட்டம்னு… இங்க தெருவே வெறிச்சுனு இருக்கு… பெருங்கூட்டத்துக்கு கையெழுத்துப் போடுறேங்கான்…’ என்றவாறு நடந்தார் உடன் வந்த பதிப்பாசிரியர்.
‘ரெண்டு வருஷம் முன்னாடி இவர் எழுதிய புத்தகத்தில் நான் கையெழுத்து கேட்டதுக்கு, புத்தகத்தில் கையெழுத்து போடறதில்லீங்க என்றார்…’ அந்தப் புகைஞருடனான என் முன்னனுபவம் ஒன்றை ஞாபகம் வந்து நானும் பகிர்ந்துகொண்டேன்.
***
புத்தகக் காட்சியில் விற்பனைக் கடையில் வினைல் அட்டையில் பெரிதாய்ப் புழங்கும் என் முகப் படத்தை இனி நீக்கிவிடுமாறு பதிப்பாசிரியரிடம் கோரியுள்ளேன்.
ஏற்கெனவே என் புத்தகங்களை வாங்குவோரிடம் என்னை அறிமுகப்படுத்தாதீர்கள் என்றும் கோரியிருந்தேன். கையெழுத்து வேணுங்களா என்று கேட்டு அனுபவப்பட்டிருந்ததையும் சேர்த்துப் பல காரணங்கள். விவாதித்துப் பரிசீலித்து ‘சரி என் நண்பர்களிடம் மட்டும் அறிமுகம் செய்கிறேன்…’ என்று சம்மதித்திருந்தார். இந்த என் புது நிபந்தனையை உடனடியாக எதிர்த்தார்.
‘அவனவன் படத்த வெக்கலியேங்கறான்… நீ எடுங்கறயே…’
‘கேக்கரவங்களுக்கு பெரிய கட்-அவுட் வெச்சு பாலூத்துங்க சார்… என்ன உட்டுடுங்க…’
‘கட்-அவுட்டுகெல்லாம் காசில்ல… சின்னதா கடைக்குள்ளாரதான வெச்சுருக்கேன்…’ வாதிட்டார்.
‘எழுத்து தான் அறியப்படவேண்டும், எழுத்தாளன் இல்லை. வேணும்னா என் புத்தக அட்டைகளைப் பெரிதாக விளம்பரமாய்க் கடைக்குள்ள படம் போட்டுக்குங்க…’
எழுத்தாளர்களை கௌரவித்தல் என்பது போன்ற தன் கட்சியின் நியாயங்களைப் பதிப்பாசிரியர் எடுத்தார். இறுதியாக, ‘ஒங்க பெற்றோர், உற்றார், நண்பர்கள்… வர்ரவங்கள்ல அவங்களாச்சும் சந்தோசப்படுவாங்கள்ல… இப்டித்தானே… (எனக் கூறி, உதாரணங்களாய் வேறு ஊர்களில், புத்தகக் காட்சிகளில் வேறு சில கண்ணியமான எழுத்தாளர்களின் குடும்பங்கள் மகிழ்வதை முன்வைத்தார்)’
‘சார்… நீங்க கட்-அவுட் வெச்சு என்னை எழுத்தாளன்னு ஏற்றிச் சொல்வதா நெனக்கறீங்க… என் சுற்றத்தின் மனநிலை வேறு. படிப்பு படிப்புனு எப்டி இருந்தவன்…, இப்டி கத கிதன்னு கண்டதையும் கூத்தடிச்சதையும் தமிழ்ல எழுதறதோடு நிறுத்தாம போஸ்டர் பேனர்னு வீணாப்போயிட்டானே-னு தான் பெரும்பாலும் நெனப்பாங்க…’ என்றேன்.
வினைல் விளம்பர முகத்தை எடுத்து விடுவதாய் ஏற்றுக் கொண்டுள்ளார்.
***
‘வலைப்பூக்களை யாரும் முகர்வதில்லை. இட்லிவடைலாம் ஊசிருச்சு. முகநூலில் மட்டுமே இன்றைய இணையத் தமிழ் வாசிப்பு. அங்குதான் நுன்னுயிர்கள் பற்றி எழுதினாலும் ‘வைரல்’ ஆகி பிச்சிகிட்டி போய் சஞ்சிகைகளில் பகிரப்பட்டு கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டு பிரபலமாகி…’ தன் கற்பிதங்களை என்னிடம் ஆத்திக்கொண்டிருந்தவரை இடைமறித்தார் இன்னொரு அனுபவமிக்க கிழ-முகநூலாளர்
‘நேற்று வந்த நடிகை போட்ட தற்படத்திற்கு லட்சம் லைக்குகள்… இதுதான் தமிழனின் முகநூல்… சொல்ல வந்ட்டே… எப்பவுமே மூணே மேட்டர்தான் வாசிக்கப்படுது, பேசப்படுது… அரசியல், மதம், சினிமா. இதுல என்ன உளறினாலும் கேப்பாய்ங்க, ஏன்னா பதிலுக்குத் தாங்களும் அதே தராதரத்தில் கருத்துக்களை வழங்கமுடியுங்கறதால…’
முதலாமவர் ஏற்கவில்லை. எழுதுவது எதுவாயிருந்தாலும் பலரைச் சென்றடைய முகநூல் மட்டுமே இன்றைய வழி என்று வேறு வாக்கியங்களில் தான் முன்பு கூறியதை மீள்-பேச்சாக்கினார்.
சில நிமிடங்களில் இருவரும் தத்தமது வாதங்களின் சூட்டில் அடுத்தவரை வேகவைக்க இயலாமல் வேகமாய் எழுந்து சென்றனர்.
அன்றைய திண்ணை வாதங்களைப் போல, இன்றைய இணைய (ம் பற்றிய) வாதங்களிலும் ஒருவரையும் ஒருவரும் மாற்றிவிட முடியாது என்பது அடிப்படை. இதையே இணையத்தில் சொல்லிவைத்தால் அதற்கும் ‘இல்லங்க, மாத்த முடியுங்க…’ என்று பின்னூட்டமிட்டு ‘வெட்டிப்’ பேசும் திறனாளிகள் உண்டு.
நமக்கு வேண்டியதைக் கடைகளில் சென்று பீராய்ந்து நம் சக்திக்குத் தக்கபடி வாங்கிவருவது அன்றைய வழக்கம். பிறகு கடைகள் தாங்கள் விற்பனவற்றைப் பட்டியலிட்டு அவ்வப்போது வீட்டிற்கு நோட்டீஸ்களாய் அனுப்பி வந்தனர். தேர்வு செய்து ஒரு விலையுடன் கொடுத்தனுப்பினால் வேண்டியது வீட்டிற்கு வந்துவிடும். இன்று மலிவான பல பொருள்களையே நம் அனைவர் வீட்டு வாசல்களிலும் வைக்கின்றனர். நம் வேலை அவ்வப்போது வாசலைத் திறப்பதும் (இல்லாவிட்டால் அழைப்பு மணியை அழுத்துவார்கள்), அங்கு உள்ளவற்றில் எதையேனும் தேர்வு செய்து நுகர்வதும் மட்டுமே. மறைமுகமாய் இச்செயல்பாட்டிற்கு நாம் கொடுக்கும் விலை அதிகம். இச்செயல்பாடு பிடிக்கவில்லையென்றால் ஒன்று வாசலையே திறவாமல் வீட்டிற்குள்ளேயே காதில் பஞ்சடைத்துக்கொண்டு அடைவது, இல்லை கொல்லைபுறமாய் எஸ்கேப் ஆவது… அங்கு அவுட்-அவுஸில் பழைய புத்தகங்கள் ஏராளமாய் உள்ளன…
‘இதுவரை இணையம் பற்றியா சொல்லிவந்தாய்’ என்கிறீர்களா… அது சரி…
நானும் முகநூல் பிரபலமாய் இருந்தால் இதையெல்லாம் மூன்றாய்ப் பிரித்து தினத்திற்கு ஒன்றாய் உங்கள் அனைவரது சுவர்களிலும் ஒட்டலாமோ…
நான் நன்றாக எழுத முனைபவன் மட்டுமே. பிரபலமாவதாய் இல்லை.
***
குறிப்பு: தலைப்பின் விளக்கத்திற்கு, clay footed = களிமண் கால்கள்.