அமெரிக்க தேசி – அத்தியாயம் 1 – பகுதி 1

Standard

அமெரிக்க தேசிnovel-front-s நாவல் | பாகம் 1 | இறங்கல் | அத்தியாயம் 1 | பகுதி 1

*

கலியுகத்தில், பிரதமேபாதத்தில், உத்திராயணத்தில், பொன் கிடைக்காத ஒரு புதனில், ஜம்பூத்வீபத்தில், பாரத வர்ஷே பரத கண்டத்தை விட்டு லுஃப்தான்ஸா விமானத்தில் கிளம்பி, இண்டர்நேஷனல் டேட்லைனைக் கடந்த, சுமார் இருபத்தியிரண்டு மணிநேரப் பயணத்தில் அதே புதன்கிழமை பொன்னொளி மதியம் அமெரிக்காவில் டலஸ் ஃபோர்ட்வொர்த் விமான நிலையத்தில் இறங்கினான் ஸ்ரீரங்கம் தேசிகன்.

ராட்சத நகரத்தின் பஞ்சவர்ணப் பரப்பையும் கட்டடக் கொந்தளிப்புகளையும், அமெரிக்காவிலேயே மிகப்பெரியதில் ஒன்றான விமான நிலையத்தை அப்பிரதட்சணமாய் சுற்றித் தரையிறங்குகையில், வெண்மேகத்திற்கும் நிழல் உண்டு என்பது தூக்கக்கலக்கத்தில் ‘மொலுமொலு’வென்றிருந்த மனத்தில் சிறு திறப்பாய் விழித்தது.

பவேல் கூலிஷ் வந்திருப்பானா?

பவேல் ருஷ்யன். கேட்டதற்கு அப்படித்தான் சொன்னான். முதலில் தேசிகன் அவனை ஜெர்மானியன் என்று நினைத்தான். பிஎச்டி செய்வதற்கு லக்ஸம்பர்கிலிருந்து டலாஸ் சென்றதாக அவன் ஈமெயிலில் குறிப்பிட்டிருந்ததால். ஜெர்மானியன் பவேல் என்று பெயர் வைத்துக்கொள்வானா என்று சந்தேகம். அடுத்த ஈமெயிலில் கேட்டதும்தான் பவேல் ருஷ்யன் என்பது தெரிந்தது.

ருஷ்யன் ஒருவனை தேசிகன் முன்பின் பார்த்ததில்லை. நியூ செஞ்சுரியின் ‘மீர் பதிப்பக’ தயவில் நிறைய ருஷ்ய புத்தகங்கள் வாசித்திருக்கிறான். நாவல்கள், கணித, இயற்பியல் புத்தகங்கள். தஸ்தயேவ்ஸ்கி, செகொவ் தொடங்கி இரடோவின் கால்குலஸ், லெவ் லாண்டாவ், லிஃப்ஷிட்ஸ் எழுதிய ஏழு பாகங்களில் பெளதீக வரிசை, கிட்டாய்கிரோட்ஸ்கியின் ‘ஃபிஸிக்ஸ் ஃபார் எவ்ரிவொன்’ வரிசை என்று அப்பா பரிசாய்க் கொடுத்த தமிழாக்கத்தில் யா. ரா. பெரல்மன் எழுதிய ‘பொழுதுபோக்கு பெளதீகம்’ வரை நிறைய வாசித்திருக்கிறான். ஆனாலும் ருஷ்யன் ஒருவனையும் நேரில் சந்தித்ததில்லை.

சிறு வயதில் ரேடியோ தமிழ் காமெண்ட்ரியில் ‘மட்டை யிலிருந்து ஸ்லிப் திசை நோக்கி விருட்ணீடன்று வந்த பந்தை குண்டப்பா விஸ்வநாத் அபாரமாய் எம்பி காட்ச் பிடித்தார்’ என்று வர்ணணையை வடக்கு உத்திரைவீதி வீட்டுவாசலில் நண்பனுடன் கேட்கையில், அப்போதைய  ̄மில் இருப்பதிலேயே குட்டையான ஐந்தரை அடி விஸ்வநாத் ரோட்டின் மீது பதினைந்து அடி உயரத்தில் போகும் மின்சாரக்கம்பிவரை எம்பி அந்தக் காட்சைப் பிடித்திருப்பார் என்று நினைத்துதான் சிலாகிப்பான். அதைப் போலதான் சில வாரங்களாய் மின்னஞ்சல் செய்து கொண்டிருக்கும் பவேலை ருஷ்யன் என்றறிந்ததும் ஏனோ மிக உயரமாக ஏழரை அடிக்கு ஜேம்ஸ்பாண்ட் படத்தின் ஜாஸ் வில்லன் கணக்காய் உருவகித்திருந்தான். பார்க்காத காட்சியும், பேசாத பெண்ணும் என்றுமே கட்டற்ற ஆச்சர்யம்.

அப்பாவின் ஆபிஸ் கணினியில் பார்த்தபோது பவேல் முன்தினம் அனுப்பிய மின்னஞ்சலில் முழுப்பெயரையும் குறிப்பிட்டிருந்தான். பவேல் கூலிஷ். ஆனால் உயரம் எவ்வளவோ என்பதைக் குறிப்பிட்டிருக்கவில்லை.

“நீ வா, நான் விமான நிலையத்திற்கு வருகிறேன். உனக்காகக் காத்திருப்பேன்” என்றது மின்னஞ்சல்.

“கட் அண்ட் ரைட்டா இருக்காண்டா; அவாள்ளாம் அப்படித்தான்” என்றார் அப்பா.

பவேலின் தந்திமொழிக்குக் காரணம் அவனுக்கு ஆங்கிலம் அவ்வளவுதான் வருமென்பது போகப்போகத்தான் தேசிகனுக்குத் தெரிந்தது. பேசாத ருஷ்யனும் ஆச்சர்யம்தான்.

ஹாஸ்டல் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. புரஃபஸரும் ஹாஸ்டல் உண்டா, எங்கே தங்குவது, வேலை உண்டா, பணம் சம்பாதிக்க முடியுமா, உதவித்தொகை கிடைக்குமா, ஒன்றும் நிச்சயமாய்ச் சொல்லவில்லை. துறையிலேயே பெரிய ஆய்வாளருடைய சிஷ்யர். அவரிடம் பிஎச்டி செய்யக் கிடைத்திருந்தது. அவரும் கிரமமாக மின்னஞ்சல் அனுப்பி விசாரித்துக்கொண்டிருந்தார். அங்கே சென்றால் முதல் செமஸ்டரில் தேசிகனை நேரில் சந்தித்துப் பழகியதுமே டிபார்ட்மெண்ட்டில் இவ்வகைக் கேள்விகளுக்கு விடை சுலபமாகக் கிடைத்துவிடும் என்றார். அவ்வளவுதான் நிச்சயம்.

இங்கே இருந்து ‘வீட்டில் பார்க்கும்’ பெண்ணைக் காலையும் மாலையும் கட்டிக் கொண்டு, தூவாக்குடி வேலைக்கு கேரியர்ல பருப்பு சாதம் எடுத்துச்சென்று, வைகுண்ட ஏகாதசிக்கு கோயில் மடப்பள்ளியில் தோசையும் செல்வரப்பமும் சொல்லிவைத்துச் சுவைத்து, ஈஸிசேரில் தினமலர் வாரமலர் துணுக்குமூட்டையில் ஞாயிறுகளின் உச்சத்தை சோம்பலாய்க் கழித்து, மறுநாள் திங்கள் சேர்வதுதான் மனித வாழ்க்கையா என்று அரையர் சேவை கிண்கிணியில் கேட்டபடிஞ் ம்ஹுஹும். நோ.

என் திறமைக்கு ஏற்ற தீரச்செயல் எதையாவது ஏட்டிலாவது சாதித்தே தீரவேண்டும். அப்புறம்தான் கல்யாணமெல்லாம். ஒருநேரத்துல ஒரு கஷ்டம் போதும்.’

அமெரிக்காவைப் பார்க்கக் கிளம்பிவிட்டான் தேசிகன்.

ஆனாலும் புஷ்பவல்லி அவன் வாதத்தை ஏற்கவில்லைதான்.

சாதிச்சதுக்கப்பறம்? கல்யாணந்தானே?’ மலைக்கோட்டை தாயுமானவர் சந்நிதி அரையிருட்டில் அண்ணாந்தபடி மடியில் புடவைக்குள் தேய்த்தபடி ஆமோதிக்கும் அவன் காதைத் திருகினாள். ‘அத இப்பவே செஞ்சுகிட்டா என்னவாம்?’

இப்பொவே செஞ்சுண்டா, அது மட்டுந்தான் சாதனையா மிஞ்சும் புஷ்… சரி, ஒன்ன பண்ணிக்கறத்துக்கும் ஒரு தைர்யம் வேணும்தான் இல்லேங்கல…’

பாத்து, தைர்யத்துல ராத்ரியே மீச மொளச்சு, காலைல வூட்ல தொரத்திரப் போறாங்க.’

அப்டி ஒரு சான்ஸுக்குத்தான ஐயா வெயிட்டிங். ஹேப்பி இன்று முதல் ஹேப்பீன்னு…’

‘சுத்து சுத்து, போ. எத்தின்நாள் மாட்டாம போய்ருவ? எப்டியும் எங்கிட்டத்தான வருவ… அப்ப வெச்சுக்கறேன்.’

சுற்றக் கிளம்பியாகிவிட்டது. இனி ஹேப்பியா தெரியவில்லை. புஷ்பவல்லியிடம் சொல்லியிருக்கலாமோ. முதலில் உதவித்தொகை கிடைக்க வேண்டும். கடன் வாங்கியதை வங்கியில் அடைத்துவிட வேண்டும்.

யோசனையுடன் ‘பேகேஜ் க்ளெய்ம்’ அம்புக்குறி வழியில் சென்றான். பல மணி நேரங்கள் காற்றடைத்த விமானத்தில் இருந்ததில் லேசாய் காது அடைத்திருந்தது. எச்சில் விழுங்கிக் கொண்டான். இடுப்பில் பெல்ட்டுடன் முடுக்கிக் கட்டியிருந்த ‘லெதர் பவோச்’சில் ஜிப்பைத் திறந்து மீண்டும் ஒருமுறை கையினால் துழாவியே பாஸ்போர்ட்டும், டிக்கெட் மிச்சமும் உள்ளதா என்று பார்த்துக்கொண்டான். ஐ-20 பேப்பர் பேகினுள்ளே ஃபைலில் உள்ளது. ஜெராக்ஸ் காப்பி பெட்டியினுள். நடக்கையில் உள்ளாடையில் பத்திரப்படுத்தியிருந்த டிராவலர்ஸ் செக்குகள் அடங்கிய கவர் உறுத்தியது. கசங்கியிருக்குமோ? கசங்கினால் செல்லுமா? யாரிடம் கேட்பது? செல்லாததாகிவிட்டால்? எந்த பாங்கில் மாற்றுவது?

மடங்காம இருக்கான்னு செக் பண்ணிடுவோமா?

கூட ‘லீஷில்’ நடப்பதற்கு சண்டித்தனம் செய்யும் கருப்பு நாய்க்குட்டி போல் சற்று வேகமாக இழுத்தால் ரோலரில் குடைசாயும் கேபின் ஹோல்டாலுடன் பாதையின் இடதுபுறம் நியானில் அறிவித்த டாய்லெட்டினுள் நுழைந்தான்.

தேசிகனுக்கு முதன்முறையாக விமானப் பயணம். உடன் வந்த ஹோல்டாலுக்கும்தான். சொல்லப்போனால் தேசிகன் அணிந்திருக்கும் ஜீன்ஸ், உள்ளே டாண்ணீடக்ஸ், காலரில்லாத முழுக்கை டீ-ஷர்ட், வுட்லேண்ட்ஸ் ஷு, பெல்ட், ஜிப் வைத்த பொடிமட்டை போன்ற பௌச் என்று அனைத்திற்குமே முதன்முறையாக விமானப் பயணம். அனைத்துமே உற்சாகத்தில் புதிதாய்ப் பொலிந்தன.

டிராவலர்ஸ் செக்குகள் மடங்கியிருக்கவில்லை. வெளியே எடுத்து பௌச்சினுள்ளே பத்திரப்படுத்தினான். டாய்லெட்டில் புஸ்ஸென்று சூடான காற்றில் கையைக் காயவைத்துக்கொண்டது புதிது. பேப்பர் டவலை முகத்தைத் தவிர இதர உடல்பாகங்களைத் துடைக்கவும் பயன்படுத்தலாம் என்பதை ஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்திலேயே காலைக்கடனாய் கட்டாயமாகக் கற்றறிந்திருந்தான். துடைத்ததை ‘ஸின்க்’கினுள்ளேயே போட்டு ஃப்ளஷ் செய்யலாம் என்பதைக் கண்டுகொள்ள சிறிது அவகாசம் தேவைப்பட்டது. இதைப்பற்றி ஒருவரும் அவனிடம் சொன்னதில்லை.

சில வாரங்களாய் அவனுக்கு வழங்கப்பட்டிருந்த விமானப் பயணத்தின் தாத்பர்யங்கள் அநேக இந்திய மிகை அவதானிப்புகள் போலவே அவ்வளவு துல்லியமாக இருக்கவில்லை.

குடும்பத்தாரிலேயே அவன் தந்தை மட்டும்தான் சமீபத்தில் விமானம் ஏறி அமெரிக்கா கண்டம் கண்டவர். ஓரிருவர் அமெரிக்கா செல்லும் பாதையில் அவரை வழியனுப்ப மீனம்பாக்கம்வரை தொட்டிருக்கிறார்கள். வழக்கமான தந்தை மகனுக்காற்றும் உரைகள் வாயிலாய் அவர் தன் அமெரிக்கப் பயணக்குறிப்புகளை ‘தயிர் சாதமும் பிரெட்டும்தான், செம குளிர்…’ ரீதியில் தெரிவித்திருந்த விஷயங்கள் அவனுக்கு அவ்வளவு பயனளிக்கவில்லை என்பதைப் பின்னர் அவர் அறிந்துகொள்ள முயன்றதில்லை. தேசிகனும் இவ்வகையில் அவரை எதிர்த்துச் சொல்வதை நிறுத்தி சில வருடங்களாயிருந்தது. முயன்றால் வாக்குவாதத்தில் முடியும். தந்தை மகன் இருவரும் சளைத்தவர்களில்லை. அம்மா கண்ணைக் கசக்குவாள். பிறகுதான் பேசத் தொடங்குவாள். தந்தை மகன் இருவருக்குமே அது டேஞ்சர். அவள் அப்பா, தேசிகனின் தாத்தா, மேடைப் பேச்சாளர்.

சாமான்களுக்காகக் காத்திருக்கையில் தேசிகனின் பின்புலத்தைக் கொஞ்சமாய் அறிமுகம் செய்வோம்.

தேசிகனின் அப்பா அனந்தநரசிம்மாச்சாரி. பையனுக்கு மறக்காமல் பதிமூன்று வயதில் பூணூல் போட்டுவிட்ட, அபிவாதை, ஆசமனம் தெரியாத அய்யங்கார். ஆபிஸிற்கு விபூதி இட்டுச் செல்லும் மீசை வைத்த வடகலை இன்ஜினியர். ஆபிஸில் அவர் ஏஸி சாரி. ஏஸி-யை விட்டு வெளியே வரமாட்டார். தற்சமயம் மெட்ராஸில் நல்ல மென்பொருள் உத்தியோகம். கை கால் நிறைய சம்பளம். அம்மா கல்யாணி திவசத்திற்கும் ஆவணி அவிட்டத்திற்கும் ஒன்பது கஜம் உடுத்துபவள். அன்றாடம் சாந்துப் பொட்டு, ஆறு கஜம் அணிந்து அம்புஜம் டாக்டருடன் செண்ட் துணியினால் துடைக்கப்பட்ட தொலைபேசியில் ஆங்கிலத்தில் குசலம் விசாரிக்கும், தமிழ் டைப்ரைட்டிங்கில் ‘ஹயர்’ பாஸ் செய்த, காலேஜ் செல்லாத ‘ஆத்துக்காரி.’

தேசிகன் தஞ்சை ஜில்லாவில் சிவனுக்கு ஒன்று, திருமாலுக்கு ஒன்று, காளிக்கு ஒன்று என்று எச்சாரென்ஸியால் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட கோயில்கள் நிறைந்த எந்நேரமும் தாலுகா ஆக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட புழுதியான கிராமத்தில் பிறந்தவன். புழுதியில் மட்டுமல்ல வீட்டில் ஊதுபத்தி ஏற்றினாலும் மூச்சுத் திணறுவான். தும்மித் தும்மி அதற்கு வழங்கப்படும் தீர்க்காயுசு வாழ்த்துகளாய்ச் சேர்த்த நூறு வருட ஆயுசில், கால் பங்கை ஸ்ரீரங்கத்தில் கழித்தவன். ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆஸ்ரமத்தில் சமாஸ்ரயணம் என்று தோள்களில் சங்கு சக்ரம் பொரித்துக்கொண்டு, அதை மறைக்கும் ஹவாய் சட்டை, ஹவாய் செப்பல், ஆணியில் மாட்டிய பூணூல், ஜீன்ஸ் பேண்ட், ஜான் லெனன் ‘தாத்தாகடை’ கிரானி கிளாஸஸ், கழுத்து வரை புரளும் தலைமுடி, வாட்ச் கட்டாத கையில் ரஜினி அணியும் ராகவேந்திரர் தாமிர நசுக்கல் (பெளலிங் போடுகையில் ‘ஓம்’ சொல்லி முத்தமிட்டுக்கொள்ள) என்று அவன் பங்கிற்கு அதிக ஆசாரம் இல்லாமல் பண்பாட்டை வியூகம் செய்துகொண்டான்.

இல்லாவிட்டால் இன்று கடல் கடந்து கன்னி கழியாமல் கிறித்துவ உயர்கல்வி நிறுவனத்திற்கு பிஎச்டி செய்ய வரமுடிந் திருக்குமா?

ரெங்கா மெட்ரிகுலேஷன், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்று பள்ளிப்படிப்பை அனைத்து வகுப்புகளிலும் முதல் மாணவனாய் முடித்தான். பன்னிரண்டாவதைத் தவிர. குறைந்த மார்க்கினால் நல்லவேளையாக இன்ஜினியரிங் கிடைக்காமல் அவன் நினைத்தபடியே புனித வளனார் கல்லூரியில் இயற்பியல் மேல்நிலை வரை அமர்க்களமாய்ப் படித்துவிட்டு கொசுறாய் பிஜிடிசிஏ ஒன்றில் கோபால் ஆரக்கிள் என்று நிர்பந்தத்தில் ஒப்பேற்றி, தூவாக்குடியில் கார்பரேட்டர், ஸ்பார்க் பிளக்குகள் செய்யும் தனியார் கம்பெனி ஒன்றில் இரண்டு வருடம் வேலை பார்த்தான். ஸ்ரீரங்கத்தை விட்டு இருபத்தியைந்து வயதுவரை அதிகம் வெளியே செல்லாதவன். ஸ்ரீரங்க தேசி.

என்னதான் ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்றாலும், இனிமேல் ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்று இருந்தாலும், வயதுவந்த வீட்டுப் பையன்களுக்கு ‘காலா காலத்துல கால் கட்டு போட்டுவிடுவது’ என்கிற கெட்டபழக்கம் தமிழ்நாட்டில் பரவலாக சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பான காலந்தொட்டு புழக்கத்தில் இருப்பதால், அம்மா தனக்கும் கல்யாணத்திற்கு ‘பார்க்கத்’ தொடங்குவாள் என்பதை அறிந்திருந்தான்.

படிக்கையிலேயே வீட்டில் புஷ்பவல்லி விஷயம் ஒருமுறை புகைந்து, தேசிகனே அதில் தீவிரம் காட்டாததில், அடங்கியிருந்தது.

வேலைக்கு ‘கட்’ அடித்துவிட்டு வீட்டில் சொல்லாமல் பெங்களூர் சென்டரில் ‘ஜி.ஆர்.ஈ. டோஃபெல்’ போன்ற தேர்வோகளை மும்முரமாக எழுதினான். கிடைத்த நல்ல மதிப்பெண்களை வைத்து ‘கற்றது கைமண் அளவோ’ என்றால் அதில் தனக்கு ஆர்வம் இருக்கும் ஒரு சிட்டிகை மண் அளவிலான உபதுறையில் அமெரிக்காவில் ‘பெரிய புரஃபஸருக்கு’ தன் இயற்பியல், உத்தியோக பராக்கிரமங்களையெல்லாம் வரிசைக் கிரமமாக பிள்ளையார்சுழி போட்டுப் பட்டியலிட்டு நெடிய லிகிதம் வரைந்தான். மெட்ராஸில் வேலையாயிருந்த அப்பா வார இறுதியில் வருகையில் கொடுத்து, ஆபிஸ் ஸ்ணீடனோவை ‘எம்.எஸ்.வேர்டில்’ (பிள்ளையார் சுழி நீங்கலாக) டைப் அடிக்கச்சொல்லி, மின்னஞ்சலில் அமெரிக்காவிற்கு அனுப்பி, ‘சேந்துச்சோ சேரலியோ’ என்று எஸ்டிடியில் விசனப்பட்டான்.

சேந்துச்சு என்பதற்கான ருசு அந்தப் பேராசிரியர் தன்னிடம் சேர்த்துக்கொள்வதற்கு தற்சமயம் இடமில்லை என்று மறுநாளே பதில் மெயில் அனுப்பியதை வீக்கெண்ட்டில் அப்பா ப்ரிண்ட் போட்டுவந்ததில் அறிந்து கொண்டான்.

அடுத்த வாரம் தில்லைநகர் கடை ஒன்றில் நண்பனுடன் மணிக்கு எழுநூறு ரூபாய் பணம் கட்டி (அநியாயம்) இணையத்தை வாக்கியங்களாகவே ‘டெக்ஸ்ட்-பிரவுஸரில்’ பீராய்ந்து அந்தப் பேராசிரியரிடம் முனைவர் பட்டம் பெற்று வேறு பல்கலையில் வேலை செய்யும் வேறொரு இளவயதுப் பேராசிரியரைத் தேர்ந்தெடுத்து, தகவல்கள் சேர்த்துக்கொண்டான். அவர்தான் ஜோஸ் வர்காஸ். அப்படித்தான் உச்சரித்துக் கொண்டான். டலஸில் ஒரு கிறித்துவப் பல்கலைக்கழகத்தில் ‘அப்ளைடு பிஸிக்ஸ்’ ‘இன்ஜினியரிங்’ என்று கலந்துகட்டி உருவான துறையில் பேராசிரியர். அவருக்கும் பிரதாபங்களை மீள்பதிவோ செய்தான். தேசிகனை பிஎச்டிக்கு எடுத்துக்கொள்வதாய் மறுநாளே அவர் பதிலெழுதியதை வழக்கம்போல் வீக்கெண்டில் ஸ்ரீரங்கத்தில் தந்தையிடமிருந்து பெற்றான்.

சில வாரங்கள் விட்டு இன்று டலஸில் ‘பேகேஜை’ப் பொறுக்கிக்கொள்ளக் காத்திருக்கிறான்.

மற்றவை முக்கியமில்லை. அமெரிக்காவின் வெறுமைக்கேற்ப தேவையிருக்கையில் போகப்போக விவரிப்போம்.

மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் பாதிப் பெருவளையமாய் உருண்டு ஓடிக்கொண்டிருந்த பேகேஜ் சிதறல்களில் தன்னுடைய அரக்குப் பட்டையடித்த தோல்பெட்டி, புழுதிப் பச்சையில் துணிப்பெட்டி இரண்டையும் இழுத்து வெளியே தள்ளினான்.

“ஹாய், ஸோ வி மீட் எகெய்ன்.” விமானத்தில் ஃபிராங் ஃபர்ட்டில் இருந்து அருகில் அமர்ந்திருந்தவன். ருமேனியன். தேசிகன் வைத்திருந்த தெர்மோடைனமிக்ஸ் புத்தகத்தைப் பார்த்துவிட்டு பேசத்தொடங்கியிருந்தான். அந்தப் புத்தகத்தை எழுதிய இயற்பியல் விற்பன்னர், தேசிகன் முதலில் விண்ணப்பித்தவர், ருமேனியராம். அவன்தான் சொன்னான். அவன் பேர்கூட என்னவோ சொன்னானே. பாப்பஸ்கியுவா.

“ஹாய், யெஸ். ஸோ, வேர் ஆர் யூ கோயிங்? யுனிவர்ஸிடி?”

புதிய இடத்தில் பார்ப்பவர்களெல்லாம் நம் இலக்கை நோக்கியே செல்வார்கள் என்பது தனிமையின், தடுமாற்றத்தின், துணை தேடும் தவிப்பின் எதிர்பார்ப்பு.

“நோப், இன்னொரு விமானம் பிடித்து ஆஸ்டின் போகவேண்டும். இதோ என் லக்கேஜ். ஹெவ் யெ கிரேட் டே.”

தேசிகனுக்கு ஏதாவது வேண்டுமா, அவன் ‘ஓகே’யா என்றெல்லாம் கேட்கமாட்டானா என்றிருந்தது. அமெரிக்கா. முதலில் இந்தப் பெட்டிகளை டிராலியில் வைத்து கஸ்டம்ஸுக்கு போகணும். எந்த வழி? பவேல் வெளியே நிப்பானோ. வீட்டுக்கு போன் போடணும், டலாஸ் வந்தாச்சுன்னு.

ஸ்போர்ட்ஸ் பேண்ட்டுகள், தங்கக்கேசங்கள், வாசக பனியன்கள், தொடைமூடா அரை நிஜார்கள், தொப்புள் தெரியும் பைஜாமாக்கள் சென்ற திசையிலேயே பின்தொடர்ந்து கஸ்டம்ஸ் அறையை அடைந்தான்.

“வாட்ஸ் திஸ் ஃபார்?”

வெள்ளை அரைக்கைச் சட்டைக்கு மேல் சிவப்புக் குறுக்குக்கோடு போட்ட நீலநிற டை கட்டியிருந்த, கண்கள் சிவந்திருந்த ஆஜானுபாகு கேட்டான்.

பேக்கலைட்டில் பிடி வைத்த ‘ப்ரீதி’ பிரஷர் குக்கரை புழுதிப்பச்சைப் பெட்டியிலிருந்து, கிளம்பும் முன்தினம் நங்கநல்லூர் தெருவில் கரி அயர்னில் நெருசாய் அமுக்கி மடித்து அடுக்கி வைத்திருந்த துணிகள் குப்பலாய் கலையும்வண்ணம் வெளியே எடுத்திருந்தான்.

“குக்…குக்கர். ப்ரஷர் குக்கர்.”

“ஓவ். ஓகே…ய். வாட்டார் த்யீஸ்?”

சாம்பார் பொடியை எப்படிச் சொல்வது?

“உணவு. சாப்பிடுவது. சூப் மேக்கர்.” கையால் குடித்துக் காட்டினான்.

பக்கத்தில் தோல்பட்டையில் கட்டுப்படுத்தியிருந்த கருப்பு நாய் பாட்டிலை முகர்ந்தது.

பேர் ‘பைரவன்’ன்னு இருக்குமா, ‘ராஜாளி’ன்னு இருக்குமா? ஆஜானுபாகு ‘டைகர்… ஹீல்’ என்றான். நாய்க்கு பேர் புலி. மனுஷனுக்கு பேர் கல்லு இல்ல மண்ணு. ஆலிவர் ஸ்டோன், ஜியார்ஜ் ஸாண்ட்-ன்னு. என்ன ஊருடா இது. அது சரி, நாம பேனைப் பெருமாளாக்கலியா. ஒன்றை இன்னொன்றாய் நினைத்துக்கொள்வதில்தானே மனிதத்தின் மலர்ச்சியே.

“படிக்க வந்திருக்கிறாயா; ஓ, டாக்டோரல் டிகிரி.”

ஐ-20 எனப்படும், பல்கலைக்கழகத்திலிருந்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வாயிலாக தேசிகனுக்கு வந்திருக்கும் அழைப்பை மற்றொருவன் சரிபார்த்தான்.

அதுதான் அமெரிக்காவை அவனுக்குத் திறக்கும் மந்திரச்சாவி என்பது தேசிகனுக்குப் புரிபடுமாறு அடுத்த சுங்க அதிகாரி நடந்து கொண்டான். பச்சைப் பெட்டியை மூடி உடனே ஓரங்கட்டினான். தோல்பெட்டியைத் திறக்கவேயில்லை. ஹோல்டாலையும்தான்.

“எடுத்துக்கொள்.”

தேசிகன் லக்கேஜை சரிசெய்து இழுத்துக்கட்டி மீண்டும் ரோலர் ஸ்டாண்டில் ஒருமாதிரி குமித்துக்கொண்டான். கைகள் நடுங்கின. பெல்ட்டில் பௌச் இளகித் தொங்கிக்கொண்டிருந்தது.

பாஸ்போர்ட்டில் விசா பக்கத்தில் ‘பச்சக்’ என்று சாப்பா. வெள்ளைத் துணியில் விழுந்த மிளகாய்வற்றல் போல.

உதடுகளைக் குறுக்குவாட்டில் விரித்து, கணீரென்று அதட்டுவது போலச் சொன்னான் “வெல்கம் டு அமெரிக்கா, மிஸ்டர் தேஷிகா… டேஷிக்…, மிஸ்டர் டேஸி”

*