வேலை என்பது பிழைப்பிற்காக செய்யப்படுவது எனலாம்.
இந்த வேலை பிடித்தமானதாக அமைந்தால் நலம். வருமானம் சற்று குறைவானதாக இருந்தாலும் உளைச்சல் இன்றிச் செய்யலாம். ஆசிரியர் வேலை போல. சுய தொழில் முயற்சிகள் போல. தேவையான வருமானத்திற்கு ஒரு நாளில் வேலைக்கென்று செலவிடும் நேரம் குறைவானதாக இருந்தாலும் நலம். பிடிக்காவிட்டாலும் சுருக்க செய்து முடித்துக்கொள்ளலாம். ஆசிரியர் வேலை போல. திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதைப் போல. அடுத்தபடியாக ஓரளவே பிடித்திருந்தாலும் தேவையான வருமானத்திற்கு அதிக நேரம் செய்தாகவேண்டிய வேலைகள் உள்ளன. ஆட்டோ ஓட்டுநர் போல. தொலைக்காட்சி இழுவைகளுக்கு தினப்படி கதைவசனம் எழுதுவதைப் போல.
மனத்திற்கு உவக்காத ஆனால் தினமும் பல மணி நேரத்தைக் கோரும் வேலையை அதிகபட்ச வருமானம் கருதிச் சில வருடங்கள் செய்யலாம். தொடர்ந்து செய்தால் சேதாரம் செய்கூலியைவிட அதிகமாகிவிடும் அபாயமிருக்கும் ஐடி கம்பெனி பணியாளர்கள் போல. அல்லது பங்கு சந்தையின் கூவுனர்கள் போல.
வாழ்நாளில் அதிக நேரத்தைக் கோரி வருமானத்தையும் சரிவர தராத வேலைகள் உள்ளன. இந்தக் கட்டுரையை இணையத்தில் வாசிக்க வகையில்லாத பலரும் அவ்வகை வேலையில் ஒன்றைத்தான் செய்துவருகின்றனர். இந்த வகையிலும் ஆசிரியர் வேலையைச் சேர்க்கவும் என்று விண்ணப்பம் செய்வர் தனிநபர் நடத்தும் சிலபல கல்வி நிலையங்களில் வேலை செய்யும் பலர்.
வருமானமே இன்றி வேலை மட்டும் செய்யும் நிலையை இங்கு வைக்கவில்லை. இவ்வகை வேலைகளை இலக்கியங்களில் பாடு என்று குறிப்பிடுகின்றனர். வாசிக்கையில் அந்தராத்மா நாய் பொழப்பு என்று பொருள் சொல்லிக்கொள்ளும். சுய தேர்வாக இன்றிப் பெண்டிர் பலரும் பலகாலம் செய்துவரும் அவை பிழைப்பு இல்லை. சமுதாய அமைப்பின் அவலம். சமனற்ற சீர். வேறு கட்டுரையின் கரு.
அனைவருக்கும் பொழுதுபோக ஐபிஎல் கிரிக்கெட் குழு வாங்கி வைத்திருப்போரின் வாரிசாக இல்லாத நம்மில் பலரும் திங்கள் காலை தன்மானம் தடுத்தாலும் கொட்டாவியுடன் எழுந்து சென்று வருமானத்திற்கான வேலை என்று மேற்படி வகைகளில் ஏதோ ஒன்றைச் செய்யத்தான் வேண்டியுள்ளது.
துறை என்பது (கேரியர்) வேலை சார்ந்த படிப்படியாக வளர்ச்சிநிலைகள் கொண்ட பாதை எனலாம். மேற்படி வேலை வகைகளில் பணிபுரியும் அனைவருக்குமே அவர்கள் வேலை சார்ந்த சூழல் ஒரு துறையாக உருவானால் நல்லதே என்பது எதிர்பார்ப்பு. பணியில் வளர்ச்சி நிலைகள் கண்டு அதற்கேற்ப வருடங்களில் பதவி, வருமான உயர்வுகளும் பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதனால்.
மாற்றிச் சொன்னால், ஒரு துறையில் வளர்வது என்றால் முன்னர் செய்த வேலைகளைவிட அலுப்பு குறைவானதாகவும் வருமானம் அதிகம் அளிப்பதாகவுமான வேலைகளுக்குச் செல்வது அப்பாதையில் முன்னேற்றம் எனலாம். துறை இவ்வகைப் பாதையாக அமைந்தால் வாழ்க்கையில் தொடர்ந்து பிழைப்பிற்கான வேலை செய்யவேண்டிய அவசியத்தை அத்துறையில் சலிப்புகள் அதிகமின்றி எதிர்பார்ப்புகளுடன் ஏற்றுக்கொள்வது ஓரளவேணும் சாத்தியப்படும்.
சேருகையில் அமைந்த வேலை பிடித்துள்ளதோ இல்லையோ, சில வருடங்களுக்குப் பிறகாவது வேலைகளில் முன் கூறியது போல மாற்றங்கள் கண்டு ஒருதுறையில் வளர்க்கையில், பெற்ற வருமானத்தையும் கடந்து எதையோ சாதித்தது போன்ற திருப்தி அதிகரிக்கும். இளங்கலை முடித்துச் சில வருடங்களிலாவது பொறியாளராய் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, அந்த நிறுவனத்திலேயே (அல்லது அப்பொறியியல் துறையிலேயே சார்ந்த நிறுவனங்களில்) வேலைகள் மாறி, பணியில் பொறுப்புகள் கூட்டி, அதிக வருமானம் பெற்று, சலிப்புகள் சிறுத்து, சில வருடங்களில் பொறியியல் துறை நிறுவனத்தின் உற்பத்தியை ஏதோ வகையில் மேம்படுத்திக்காட்டுவது இவ்வகையில் ஒரு சாதனையே. அந்நிறுவனத்திற்கான வர்த்தக லாபம் என்பது ஒருபக்கம். ஒரு துறையில் தனிமனிதனுக்கான வளர்ச்சி என்பதை மட்டுமே இங்கு குறிக்கின்றேன். ஒன்பதிலிருந்து-ஐந்து வகை வேலைகளே என்றாலும், துறைசார்ந்த கற்பிதங்களும் அதில் தேர்ச்சிகளும் தேட்டங்களும் தொடர்ந்து இருப்பதால், இவ்வகைத் துறைகளில் வருமானத்திற்கான வேலைகளே காலப்போக்கில் மனத்திற்குப் பிடித்தவையாகவும் உருமாறிவிடலாம். நலம்.
மேலும் ஒரு உதாரணம் என்றால், கல்வித் துறை. இதில் (முனைவர் பட்டம் பெறுவதற்கான) ஆராய்ச்சி மாணவன் என்கிற நிலையைத் தொடக்க நிலை வேலை என்றும் கொள்ள முடியும். மாத வருமானமாய் ஆராய்ச்சி மான்யம் வருவதால். வருமானம் குறைவானாலும் இது பிடித்ததைப் பல மணிநேரங்கள் செய்யும் வகை வேலை.
கல்வித் துறையில் ஆராய்ச்சி மாணவராய் வருமானத்திற்கான வேலை என்று தொடங்கி, உதவி ஆசிரியர், ஆசிரியர் என்று வளர்ந்து பேராசிரியராய் ஆகும்வரை வருமான அதிகரிப்புடனான வளர்ச்சியைக் காண இயலும். பிறகு வருமானம் அத்தனை அதிகரிக்காது (நிறுவனங்களுக்கு ஆலோசகர், வீட்டிலேயே டியூஷன் செண்டர், சேர்க்கை இடப் பேரம் என்று உபதொழில்கள் தகிடுதத்தங்கள் செய்யாதிருந்தால்). ஆனால் புதியன கற்பதில் கல்வித் துறை பரப்பில் தனிமனிதனுக்கான வளர்ச்சியை உறுதியாக எதிர்பார்க்கலாம். பேராசிரியர் பதவியில் அதற்கான உரிமையும் சுதந்திரமும் உண்டு. அவற்றை உபயோகிப்பதில் உறுதியும் தெளிவும் தனிநபரிடத்தில் வேண்டும்.
பொறியியல் மென்பொருள் துறைகளையே சாடுவது போல இங்கும் பல கல்வி நிறுவனங்களின் தற்கால இயங்கு சூழலைக் கொண்டு கல்வித் துறையையே கேவலப்படுத்தி எழுதிவைப்பது எளிது. துறை ஆழமறியா பன்முகப் பண்டிதர்களின் நுனிப்புல் கட்டுரைக் கருத்துகளில் இவ்வகை தூக்கியடித்தல்களை கவனிக்கலாம். மறுநாள் வேலைக்குச் செல்லும் முன்னர் அக்கருத்துகளை மறந்துவிடுவது நல்லது.
தொகுத்துக்கொண்டால், வேலை வருமானத்திற்கெனச் செய்வது. துறை வருமானத்தை உள்ளடக்கிய வளர்ச்சி நிலைகளைக் கொண்டது. இவை அடிப்படையில் நமக்குப் பிடித்திருத்தல் மனநலத்திற்கு நன்று.
ஆட்டோ ஓட்டுநர் வேலையில் நல்ல வருமானம் இருக்கலாம். துறை வளர்ச்சி என்பது சந்தேகம். இருபதில் ஓட்டத் தொடங்கியவர் ஐம்பதிலும் அதையேதான் செய்யவேண்டும். வேலையில் சலிப்பு அதிகம். குடும்பத்தைக் காப்பாற்றியது போக மிச்ச சேமிப்பில் — குடிப்பழக்கம் இல்லாதிருந்தால் — வருடங்களில் புதிய ஆட்டோ வாங்கி ஓட்டி மகிழலாம். துறை வளர்ச்சி என்று மிஞ்சினால் ஓலா கார் ஓட்டுநராகலாம். அல்லது துபாயில் கார் ஓட்டப் போகலாம். வருமானம் அதிகரிக்கலாம். மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று சொல்வதற்கில்லை.
அர்ச்சகர் வேலையில் பல கோயில்களில் வருமானம் அதிகமில்லை. சார்ந்த துறை வளர்ச்சி என்பது வருமானமற்ற சிறிய கோயில்களின் சிறு சந்நிதியில் தொடங்கிப் பெரிய கோயில்களின் பெரிய சந்நிதிகள் வரை என்பது போன்ற அசாதாரணமான பாதையாகத் தென்படும் வளர்ச்சியே. ரிடையர்மெண்ட் கிராஜுவட்டி பென்ஷன் என்று எந்தக் காப்பீடுகளும் இல்லை. பஞ்சகஞ்சத்திற்கு மேல் விண்ட்-பிரேக்கர் அணிந்து அர்ச்சனைத் தட்டில் டாலர் புரளும் அயல் தேச கோயில்-மால்களில் வேலை என ஓரிருவருக்கே இத்துறை வளர்ச்சி மகிழ்வானதாய் அமைகிறது.
இவ்வாறு சூழ்நிலை காரணமாக பிடிக்காத வேலை துறைகளில் செயல்படுவோருக்கான விடிவு என்ன?
வேலை, துறை இவற்றைக் கடந்து ஒன்று உள்ளது. அழைப்பு (காலிங்) எனலாம். அல்லது அச்சொல்லின் அருகில் உள்ள நமைத்தல் எனலாம். மனத்தின் நமைத்தல். நம்மை தினமும் அதைச் செய்ய அழைக்கும் அழைப்பு. நம் ஒவ்வொருவருக்கும் ஒன்று உண்டு. இருக்க வேண்டும். கண்டுகொள்ளவேண்டியது அவசியம். தினமும் சஹஸ்ரநாமம் அல்லது இசை வாத்தியம் வாசிப்பது, தோட்டம் அல்லது பிராணிகள் வளர்ப்பது, கணிதம் அல்லது குறள் ஓம்புவது இப்படி. வாட்ஸாப் போன்ற ஆப்புகளில் சிக்குவதையோ பாரதியார் எழுதியிருப்பதால் ‘சும்மா இருத்தல்’ கட்டுரைத் தலைப்பை மட்டும் சீரியஸாய் எடுத்துக்கொள்வதையோ இவ்வித மனத்தின் அழைப்பில் என்னால் சேர்க்க முடியவில்லை. உங்களால் முடியலாம்.
அழைப்பின் தனித்தன்மை என்னவென்றால் அதைச் செயலாக்குவதற்குப் பலனாய் பெரும்பாலும் எதையும் எதிர்பார்க்க மாட்டோம். வேலை என்பதற்கான வருமானம் போல. துறை என்பதற்கான வளர்ச்சிநிலைகள் சாதனைகள் போல. நமக்கான அழைப்பிற்கு இணங்காமல் நம்மால் உயிர்வாழ முடியாது. அவ்வளவே.
எனக்கான அழைப்பு என்று ஒன்றை இதுவரைக் கண்டுகொள்ளாமல்தானே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனலாம். அழைப்பின் தேவை இன்றி வாழ்வது பிடிமானமற்ற வாழ்க்கை. இது புரிவதற்குச் செய்துவரும் வேலைகளை நீக்கிகொள்ள வேண்டியிருக்கும். வருமானமற்ற வேலைகளில் அன்றாடம் ஆழ்ப்பட்டிருக்கும் இந்திய சமுதாயத்தின் பல இல்லத்தரசிகளும் இந்நிலையை நன்கு உணருவார்கள். இவர்களை தினமும் நேரத்தை (சமையல், பிள்ளை வளர்ப்பு போன்ற) ஏதோ வேலைகளில் செலவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று நம்பவைத்துள்ளோம். இவ்வாறான பிறர் காட்டிக்கொடுத்த வேலைகளைச் செய்வதை நிறுத்தினால் செய்ய ஒன்றுமில்லாமல் வாழ்க்கையே சூன்யமாய்த் தோன்றும். குற்ற உணர்வு மேலெழும். இப்படிப்பட்ட பரிதாபமான நிலை ஆணுக்கும் சமபங்கில் இன்று உண்டு. தங்களுக்கான அழைப்பு எதுவென்பதைக் கண்டுகொள்ளாமல் வேலை மட்டுமே செய்து ஓய்வுபெற்ற ஆண்களில் பலர் தவிப்பது சலிப்பது விரக்தியாவது பார்க்கும் அனைத்திலும் நொள்ளை சொல்வது உலகையே தனக்கெதிரான ஒரு திட்டமிட்டச் சதியாகக் கருதுவது இவ்வாறுதான்.
அழைப்பு என்று எதுவுமின்றி அதே சமயம் பிழைப்பை கவனித்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் நிலை வாய்க்கப்பெற்றால் பேரானந்தம். பிழைப்பையே அழைப்பு எனக் கொள்கிறார்கள் எனலாம். அவர்கள் கட்டுரையை வாசிப்பதை இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம். (அழைப்பும் இன்றி வேலையும் இன்றி வெட்டியாக உள்ளவர்கள் எப்படியும் இக்கட்டுரையை வாசிக்கவும் முனைந்திருக்க மாட்டார்கள்.)
வேலை, சார்ந்த துறை, அழைப்பு அனைத்தையுமே ஒருவரால் தனக்கானதெனத் தேர்வு செய்துகொள்ள முடியவேண்டும். வேலையும் துறையும் அவ்வாறு அமையாமல் போவதற்கு தன்னைத் தாண்டிய காரணங்கள் இருக்கையில் சோர்வடையாமல் தனக்கான அழைப்பைக் கண்டுகொண்டு அதையும் தொடர்ந்து செய்துவருவதே தனி மனிதனுக்கு வாழ்க்கை சலிப்படையாதிருப்பதற்கான வழி.
பிடித்திருப்பதால் எந்நேரமும் செய்யலாமே எனக் கருதி அழைப்பையே பிழைப்பாக்கும் வழியை நாடுவது இயல்பே. அவ்வாறு அமையாது போவதும் எதிர்பார்க்கக்கூடியதே. ஏனெனில் பல அழைப்புகள் வருமானத்திற்கான வேலையாகவும் உடனடியாக மாறுவதில்லை. அல்லது அவ்வாறு மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவானதாய் இருக்கும். கிரிக்கெட் ஆடுவது தனக்கான அழைப்பாய்ப் பலருக்குப் புலப்படலாம். சிறுவனாய் தெருக்களில் தினமும் விளையாடுவதைத் தொடர்ந்து வருமானத்திற்காகவும் செய்வதற்கான வாய்ப்புகள் பலருக்கும் அவர்களது இளமையில் மங்கிவிடலாம். இவர்கள் வருமானத்திற்காக கிரிக்கெட் துறை சார்ந்த வேறு வேலைகளில் எதையாவது செய்யலாம். என் நண்பன் ஒருவன் நேரடியாக அம்பயர் ஆனான். அல்லது வேறு துறையில் வருமான வேலையைத் தேடிக்கொண்டு தினமும் தொடர்ந்து வசிக்கும் காலனியில் கிரிக்கெட் விளையாடிவரலாம். அழைப்பு என்பதால் அதற்கான உந்துதலும் அதற்கேற்ற திருப்தியும் பெறலாம்.
ஆனால் இளமையில் வாய்ப்புகள் மங்குகின்றன என்பது புரிந்ததும் ஏற்றுக்கொள்ளும் மனோதிடம் பயில்வது அவசியம். இல்லையேல் விரக்தியே மிஞ்சும். ஆட்டோ ஓட்டுநர் நண்பர் ஒருவனின் மகன் பந்து வீச்சாளர். சென்னை சேப்பாக்கத்தில் சில வருடங்கள் முன்புவரை டெஸ்ட் மேட்ச் தொடங்கி ஐபிஎல் வரையிலான ஆட்டக்காரர்களுக்கு நெட்ஸ் பயிற்சிகளில் பந்துவீச்சாளராய் உள்ளார். அவருக்கு நன்றாகத் தெரிகிறது, இனி தன்னை எந்தக் குழுவிலும் ஆடுவதற்குத் தேர்வு செய்யமாட்டார்கள் என்று. விடமுடியவில்லை. ஆட்டோ ஓட்டுநர் தந்தை என்னிடம் பலமுறை புலம்பியிருக்கிறார். நல்லாத்தான் விளையாடுறான், சிபாரிசு வேணுமோ என்னவோ சேத்துகிடமாட்டேங்கறாங்க. போறுண்டா வேறப் பொழப்பப் பாருங்கறேன் கேக்கமாட்டேங்கறான்… என்னால முடிஞ்சவர ஆட்டோ ஓட்டி சம்பாரிச்சுக் காப்பாத்துவேன். அப்பால அவன் பாடு… ஒவ்வொருவருக்கும் அழைப்பு இவ்வாறுதான் ஆட்டிவைக்கும்.
மனத்தின் அழைப்பே வருமானத்திற்கான வழி என்று ஆகா. அழைப்பை மட்டுமே செய்துகொண்டிருப்பதற்கான சூழலை ஓரளவுதான் நம் நலம் விரும்பிகளால் தொடர்ந்து அளித்து வைத்திருக்க முடியும். பிறகு நாமேதான் அச்சூழலை உருவாக்கிக்கொள்ளவேண்டும். அழைப்பையே வேலையாக மாற்றி. அல்லது வேறு வேலை செய்து. தருணத்தில் இவற்றைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் வாழ்க்கை அடித்துப் புரியவைக்கும்.
வருமான வேலை, சார்ந்த துறை, இவை ஒன்றாகவும், மனத்தின் அழைப்பு வேறானதாகவும் அமைந்துவிடுகிறதே. ஆமாம். சாதகமாய் நோக்கினால், வேலையும் அழைப்பும் எவை என்பது வாழ்க்கையில் விரைவிலேயே ஒருவருக்குப் புரிந்துள்ள இந்த நிலை பரவாயில்லை எனலாம். பல வருடங்கள் வருமானத்திற்கான வேலை செய்த பிறகுதான் பலருக்கும் அந்த வேலையும் துறையும் தனக்குப் பிடிக்கவில்லை என்பதும், தனக்கென்ற மனத்தின் அழைப்பு என்று ஒன்று இருக்கலாமோ என்பதும் சந்தேகப்படுகிறது. யாரோ காட்டிக்கொடுத்த அந்தப் பாதையை உடனடியாக விடுத்துவிட பரபரத்து ஐடி கம்பெனி வேலையை விட்டு விவசாயம் செய்யக் கிளம்புகிறோம். விட்டது வேண்டுமானால் பிடிக்காத வேலையாக இருக்கலாம், ஏற்றது மனத்திற்கான அழைப்பா என்பதை அறியாமல் செய்யத் தொடங்கினால் நாளடைவில் அது வருமானமற்ற வேலை என்று முடிந்து மனத்தை மேலும் குழப்பிவிடலாம்.
போதிய வருமானம் பெற்ற பிறகு பிடிக்காத வேலையை விட்டுவிடலாம்தான். விடும் முன்னர் அடுத்துச் செய்யப்போகும் பிடித்தமான அழைப்பு எது எவை என்பதை உணர்ந்துகொள்வது அவசியம்.
அனுபவத்தில் இருந்து ஒரு உதாரணம் கூறி முடித்துவிடுகிறேன். பலவருடங்களாய்ச் சோதித்துப் பார்த்துத் தெளிவானதில் என் அழைப்பு என்றால் அது எழுத்து.
எழுதுவது அதற்கேற்றவர் வாசிப்பதற்கே. இதைப் புத்தகங்கள் வழியே செய்யலாம். இன்று இணையம் வழியே முடிகிறது. எழுதி வைத்துவிட்டால் அதற்கான வாசகன் தன்னால் என்றாவது தேடி வந்து வாசித்துப் போவான். எழுதுவதே என் அழைப்பு. அதை வாசிப்பது வாசகனின் அழைப்பு.
புத்தகங்கள் இணையம் இவற்றில் தமிழ் எழுத்திற்கு வருமானம் இல்லை. அதனால் மனத்தின் அழைப்பான எழுத்தை வருமானத்திற்கான வேலை என்று கொள்ளும் முன்னர் அறிந்துகொள்வது நல்லது, எதை எழுதப் பிடக்கிறது எதை எழுதினால் வருமானம் வருகிறது என்று. உதாரணமாக, ஆட்டோ ஓட்டுநருக்கான அர்ச்சகர்களுக்கான வருமானங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள், அறிவுத்துறை புத்தகங்கள் எழுதுவதில் இல்லை. புனைவெழுத்து புத்தகமாய்ப் பிரசுரமாகத் தமிழில் நீர் பணம் இழக்காதிருத்தல் பேறு.
அனுபவத்தைப் பொதுப்படுத்திப் பார்க்கிறேன். எழுத்துக் கலை சார்ந்த பல்வகைக் கலைகள் உள்ளனவே. பொதுவாக்கினால், வெளிப்படுத்தல். சிந்தையை உணர்வை எழுத்து, ஓவியம், இசை, நாட்டியம் என்று ஏதோ கருவி வழியே மற்றவரிடம் வெளிப்படுத்தல். அக்கருவியே கலை என்பார் தொல்ஸ்தோய். வெளிப்படுத்தலே வாழ்வு என்று ஒரு கூற்று உண்டு. வெளிப்படுத்தல் ஒரு போர். மனப் போர். அதைச் செய்திருப்பதே வாழ்வு. போரும் வாழ்வும் கலையாவது மனத்தின் அழைப்பில்.
வருமானத்திற்கு எனச் செய்யப்படாமல் இருக்கையிலேயே கலை நேர்மையாய் வெளிப்படுகிறது என்பார் தொல்ஸ்தோய். அப்போதுதான் கலை பிரதிபலன் வேண்டா மனத்தின் அழைப்பாய் உயர்கின்றது எனலாம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது தாயுமானவரின் அழைப்பு. என் பணி கலை செய்து கிடப்பதே என்பது தொல்ஸ்தோய் போன்றோரின் அழைப்பு.
ஆனால் தொல்ஸ்தோய் கௌண்ட். பிரபு. வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இளமையில் (போரில் பங்குபெற்று) வருமான வேலை செய்தாலும் நாளடைவில் மாளிகையில் அமர்ந்து தனக்கான அழைப்பைச் செயல்படுத்தினார். அனைவருக்கும் அவ்வாறு அமையாது. அமைந்தாலும் அத்தனை அன்னா கரனீனாக்களை உலகம் தாங்குமோ தெரியாது.
நல்லவேளையாக எழுத்தையே பொருளீட்டும் தொழிலாகக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் வாழ்க்கை என்னை வைக்கவில்லை. இதுவரை தமிழில் அனைத்து ஊடங்களிலும் எழுதிய எதற்கும் — புத்தகங்களின் ராயல்டி சேர்த்து — காசு வாங்கியதில்லை. இனியும் அவ்வாறே இருப்பதாகவே உள்ளேன். எனக்குப் பிடித்த வேலை தரும் வருமானம், எனக்கான அழைப்பில் அதைத் தேட வைக்கவில்லை. சாந்தி.