அமெரிக்க தேசி – பதாகை நேர்முகம்

Standard

அமெரிக்க தேசி நாவலை முன்வைத்து இலக்கியம் சார்ந்த கேள்வி பதில்களுடன் பதாகை இணைய சஞ்சிகை நேர்முகம்.

அறிவியல் நூல்கள் மூன்று  எழுதியுள்ள திரு அருண் நரசிம்மன் அவர்களின் அமெரிக்க தேசி என்ற சமூக நாவல் தமிழினி வெளியீடாக இவ்வாண்டு பதிப்பிக்கப்படுகிறது.  இவருடைய புனைவுகதைகளில் காணப்படும் தனித்தன்மையுடனான வடிவத்தை நாவலுக்கு எவ்வகையில் வளர்த்தெடுத்திருக்கிறார் என்று எதிர்பார்க்க வைக்கும் படைப்பு.   தன் நாவல் குறித்தும் இலக்கியம் தொடர்பான பிற விஷயங்கள்  குறித்தும் அவர் மின் அஞ்சல் உரையாடலில் பதாகையுடன் பகிர்ந்து கொண்ட கருத்துகள் இங்கு

பதாகை- அமெரிக்க தேசிஎன்ற தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதேசுதேசி விதேசி தெரியும், அது என்ன அமெரிக்க தேசி?

அருண்-  தலைப்பில் இரண்டு சிலேடைகளை யோசித்திருந்தேன்.

அமெரிக்காவில் இந்தியர்களை பொதுவாக ‘தேசி’க்கள் (desis) என்றழைப்பார்கள். தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா செல்லும் என் நாவல் கதாநாயகன் பெயர் தேசிகன். சிலேடைச் சுருக்கமாய் தேசி (அவனுக்கு தன் பெயரைச் சுருக்கினால் பிடிக்காது).

நாவலில் எந்நாட்டினருக்கும் சளைக்காத ஒரு தமிழ் தன்னம்பிக்கையாளனை படைக்க விழைந்தேன். வீட்டில் ‘அமரிக்கை’ எனும் சொல்லை அமெரிக்கை என்றே உச்சரித்துப் பழக்கம். அதனால் தலைப்பின் முதல் பகுதியையும் சிலேடையாய் ‘அமரிக்க’ தேசி என்று வைத்திருந்தேன். அமைந்து வரவில்லை என்பதால் இறுதியில் அமெரிக்க என்றே மாற்றிவிட்டேன்.

பதாகை- அறிவியல் ஆய்வாளராகவும் கல்வியாளராகவும் இருப்பதே இரு முழு நேரப் பணிகள். புனைவு இலக்கியத்தில் ஆர்வம் வந்தது எப்படி, ஒரு நாவல் எழுதும் அளவுக்குத் தேவையான நேரத்தை எப்படி உருவாக்கிக் கொண்டீர்கள்?

அருண்- எழுத்தைச் சார்ந்த பணிகளையே ஆய்வாளனாகவும் கல்வியாளனாகவும் அன்றாடம் செய்துகொண்டிருக்கிறேன். ஆனால் அனைத்தும் ஆங்கிலத்தில். தமிழில் எழுதுவது சமீப சில வருடங்களாகத்தான். எப்படி நடக்கிறது என்பது எனக்கே ஆச்சர்யம்தான். தமிழ் வாத்தியார் கேள்விப்பட்டால் மனம் நோகலாம். பள்ளியில் அவர் வகுப்பில் வெளியேற்றப்பட்ட மாணவன் நான்.

இலக்கிய ஆர்வம் இலக்கியங்களை வாசிப்பதனால் வந்தது. தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் ஜெயமோகன் எழுத்தை வாசித்தபிறகு. உள்ளூர் குயிலை விட்டுவிட்டு அசலூர் கழுதையையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறோமோ என்றானது (இது இசை உருவகம்).

நாவல் எழுத என்றில்லை, செய்வதற்கு ஒன்று நமக்கு நிஜமாகவே பிடிக்கும் என்றால், நேரத்தை தன்னால் உருவாக்கிக்கொள்வோம். மேலும், என் வீட்டில் பதினைந்து வருடங்களாய் டிவி கிடையாது (மின்திரை உண்டு). என்னத்தான் இணையம் இலவசம் என்றாலும் என்னால் நக்கித்தான் குடிக்கமுடியும் என்றாக்கிக்கொண்டுவிட்டேன். தேவையான நேரம் அமைவதற்கு இப்படிப் பல காரணங்கள்.

பதாகை- நாவல் எழுதிய அனுபவம் உங்களிடம் மாற்றங்களை ஏற்படுத்தியதா? எப்படிப்பட்ட மாற்றம்? படைப்பூக்க மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள ஏதேனும் விசேஷ முயற்சிகள் தேவைப்பட்டதா?

அருண்- நாவல் எழுத்து ஒருவகையில் மனித படைப்பூக்கத்தின் உச்சம். எட்டித் தொட்டுத் திரும்புகையில் மனத்தினுள் மாற்றங்கள் நிகழாமல்போனால்தான் சோகம். என்னையே மேலும் ஒரு அடுக்கு உரித்துப் புதிதாய் புரிந்துகொண்டதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. படைப்பூக்கக் காவிரியில் அலம்பியோடிவிட்ட சேறுபோல மனத்திலிருந்து பல வேண்டாத குழப்பங்கள் நீங்கியோடிய விடுபட்ட உணர்வு.

முதல் ஆய்வுக் கட்டுரையை எழுதியபோதும் – இல்லை, எழுதியபோது இல்லை; அது பிறகு நடந்தது; நானே தாளில் கிறுக்கிப் பலநாள் தீவிரமாய் யோசித்து ஆய்விற்கான முடிவு ஒன்றை உருவாக்கியபோதும் இவ்வாறு உணர்ந்தேன்.

கொஞ்சநாள் சும்மா இருந்தால் மீண்டும் மனம் கட்டுண்டுவிடும். புதிய சேறு படியும். ஆனால், இன்று எனக்கு சுத்திகரிப்பு வழிகளில் மேலும் ஒன்று தெரியும்.

படைப்பூக்க மனநிலையை தக்கவைப்பது கடினமே. ஹென்ரி மில்லர் என்று நினைக்கிறேன்; படைப்பூக்கமாய் செயல்படமுடியாதபோது வேலையைச் செய் என்பார். இவ்வகை பிரிவினை உதவியதென்றாலும், மனத்தின் ஆழத்தில் ஒரு படைப்பூக்கச் சரடு ஓடிக்கொண்டேதான் இருக்கும். தடுக்கக் கூடாது. தளும்புகையில் எழுத்தாக்கிவிடவேண்டும்.

எழுத்தின் படைப்பூக்கத்தைப் பொறுத்தமட்டில் முக்கியமாக செய்யலாம் என்பது மாபெரும் படைப்புகளை புரட்டிக்கொண்டே இருப்பது. முழுவதும் வாசிக்கவேண்டும் என்பதில்லை. மனத்தில் சிறப்பான, மேன்மையான, எழுச்சியான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருப்பது நன்று. அவற்றைச் சுற்றியே நம் சிந்தனைகள் சூள்பெற்று விருக்ஷமாகும்.

எனக்கு மட்டுமான விசேஷ பயிற்சி என்றால், இணையத்தில் என்றில்லை, ஜெயமோகன் எழுத்தையே வாசிப்பதை ஒரு வருடத்திற்கும் மேலாய் நிறுத்திவைத்திருந்தேன். சற்றும் சாயல் வந்துவிடக்கூடாது என்றுதான்.

அடுத்து, (என்) மனைவியுடன் நிறைய நடந்தேன், யோசித்தபடி, விவாதித்தபடி. எவ்வளவு என்றால், நடையின் முடிவில் ஷேவ் செய்துகொள்ளவேண்டியிருக்கும்.

பதாகை- சி பி ஸ்னோவின் இரட்டைப் பண்பாடுகள் என்ற நூல் மிகப் பிரபலம், அது வேறெங்கும் உள்ளதைவிட தமிழுக்கு மிகவும் பொருந்தும். நீங்கள் அறிவியல் நூல்கள் எழுதியுள்ளீர்கள், புனைவு இலக்கியமும் செய்தாயிற்று. அறிவியலையும் humanitiesகளையும் ஒருங்கிணைக்க மொழியில் நிகழ வேண்டிய மாற்றங்கள் குறித்து உங்கள் கருத்துகள்?

அருண் –  மானுடவியலின் உள்ளேதான் கலை (இயல், இசை, இலக்கியம், இன்னபிற) என்றுகொண்டு அறிவியலை பிரித்துவைத்துக்கொள்வதே ஒரு கல்விநிலை சௌகர்யத்திற்குதான். அறிவியல் என்றுமே மானுடவியலுடன் தொடர்பிலிருப்பதே. கலை அறிவியல் இரண்டுமே உண்மையைக் குறிவைத்து இயங்கும் மானுடப் படைப்பூக்கச் செயல்பாடுகள். கலைகளில் உண்மை அகவயமாய் பரிசீலிக்கப்படுகிறது. அறிவியலில் புறவயமாய். அதனாலேயே அது மனித மனத்தை விடுத்த செயல் என்றோ, மனிதற்கு பாற்பட்ட உண்மை என்றோ ஆகிவிடாது.

கலை என்பது மனிதகுலத்தை மேம்படவைக்கும் ஒன்றுபடவைக்கும் செயல்பாடு என்று கொண்டால், அதற்கு மனிதகுல வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிவியல் கண்டடையும் உண்மைகள் துணைபுரியுமாறு அமையவேண்டும். மனித குலத்தை (கலைகளில் ஊடாடி, அல்லது நேரடியாக) மேம்படவைக்காத அறிவியல் உண்மைகள் இருந்தால் என்ன, எக்கேடும் போனால்தான் என்ன?

இப்பின்புலத்தில் உங்கள் கேள்விக்கான பதில், அறிவியலையும் மானுடவியலையும் இணைக்க மொழியில் என்று தனிப்பட்ட மாற்றங்ளை யோசிக்கமுடியும் என்று தோன்றவில்லை. மொழியை உபயோகிக்கும் மனங்களிலேயே மாற்றத்தை விதைத்திடவேண்டும். என்னைப் போன்றவர்களை சமுதாயத்தில் பிழைத்துப்போகவிடுவது முதல் கட்டம்.

பதாகை- அமெரிக்க தேசி சமூக நாவல் என்று தெரிகிறது. அறிவியல் புனைவுகளை முயற்சித்துப் பார்க்கும் உத்தேசம் உண்டா?

அருண்-  நிச்சயம் உண்டு. சில வருடங்களில்.

பதாகை- தமிழில் வெகுஜன ரசனையை முன்னிட்டு விஷயஞானமுள்ள எழுத்தாளர்கள் புனைவு படைக்க வேண்டுமல்லவா? பெரிய பதிப்பகங்களால் தீவிர இலக்கியங்கள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டு முன்னிலைப்படுத்தப்படுவது ஆரோக்கியமான வாசிப்புச் சூழலுக்கு உதவுமா? இந்த விஷயத்தில் ஒரு எழுத்தாளராக நீங்கள் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

அருண் –  ‘பெரிய பதிப்பகங்களால் தீவிர இலக்கியங்கள் மட்டுமே பதிப்பித்து முன்னிலைப்படுத்துவது…’ இது என்ன வாக்கியவகை ‘ஆக்ஸிமோரானா’? சரி, வாதத்திற்காக அப்படியே வைத்துக்கொள்வோம். அது நல்ல விஷயம்தானே.

எதையுமே சற்று முயன்று உள்வாங்கும் மனநிலையை தமிழ் வாசகர்களிடமிருந்து உருவிவிட்டதே கடந்த ஐம்பது வருடங்களாய் தமிழ் ஊடகங்களின் சாதனை. இன்றைய குமுதம் (மட்டுமே) வாசிப்பவனுக்கு இலக்கியம் என்ன, ஐம்பது வருடத்திற்கு முன்னாலான குமுதத்தையே வாசிக்கமுடியாது. மனச்சோம்பலில் திளைப்பவன் மகாபாரதத்தையும் எஸ்.எம்.எஸ். ஸில்தான் கேட்பான்.

விஷயஞானமுள்ள தமிழ் எழுத்தாளர்கள் தீவிர இலக்கியங்கள் எழுதினால் அவை நம் தமிழ் சமுதாயத்தின் ரசனைத் தரத்தையே உயர்த்தும்.

நான் எழுத்தாளன்தான் என்றால், இவ்விஷயத்தில் சமரசமின்றி என்னால் முடிந்த தீவிரமான எழுத்தையே இனியும் நான் சமுதாயத்தின் ஆரோக்கியத்திற்கு என்று அளிப்பேன்.

(மேல் பத்தி அழகிப்போட்டியில் பங்குபெறுவோரின் பதில் போலிருக்கிறதே என்றால், பாசாங்கு எவ்விடங்களில் என்று யோசித்துப்பாருங்கள்).

பதாகை- நீங்கள் உங்கள் துறைசார்ந்து உயர்கல்வி பாடநூல் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் இசைக்கட்டுரைகள் மிகப் பிரபலம். பிறரைவிட, நீங்கள் செயல்படும் தளத்தில் மிகுந்த கவனமும் உழைப்பும் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். இசை, இலக்கியம், அறிவியல், கல்வித்துறை என்று பல்முனை ஆர்வங்களில் உங்களால் எப்படி ஈடுபட முடிகிறது?

 அருண்- ஒருவேளை நான் புத்திசாலியோ என்னவோ.

பதாகை- இது தவிர தனி வாழ்வில் மனைவி, மக்கள், உணவு, தூக்கம் போன்ற சங்கதிகளையும் கவனித்துக் கொண்டாக வேண்டும், இல்லையா? இந்த நாவலை எழுதிக் கொண்டிருந்தபோது உங்கள் அன்றாட டைம்டேபிள் எப்படி இருந்திருக்கும்?

அருண்- ஆமாம், நாவல் எழுதுகையில் டைம் இருந்தால் டேபிள் இருக்காது, டேபிள் இருந்தால் டைம் கிடைக்காது; கஷ்டப்பட்டுத்தான் போய்விட்டேன். பல் கூட எனக்காக மனைவியை ஓரிருமுறை சேர்த்துத் தேய்க்கச்சொல்லி விண்ணப்பித்துக்கொண்டேன்.

டைம்டேபிள் என்றெல்லாம் இல்லை; மனத்திலிருப்பது எழுத்தாய் வெளியேறினால்தான் தூக்கம் வரும். பல இரவுகள் மூன்று நான்கு மணி என்றும் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். எனக்கென்றில்லை, படைப்பூக்கமாய் செயல்படும் பெரும்பான்மையினர் இவ்வகையில்தான் இயங்குவார்கள் என்று கருதுகிறேன். நண்பர் வேணு (சு. வேணுகோபால்) இவ்வாறுதான்; வெறிகொண்டு, ஒரே மூச்சில் நாவலையே எழுதிக்கொட்டிவிட்டுதான் அக்கம்பக்கம் அகல்வார். அவரே என்னிடம் பகிர்ந்தது.

பதாகை- விஷ்ணுபுரம் நாவலுக்கு நீங்கள் எழுதிய பின்னட்டை விமரிசனம் மறக்க முடியாதது. இந்த நாவலுக்கும் பின்னட்டை உண்டு என்று தெரிகிறது. ஒரு எழுத்தாளராக, விமரிசனம் குறித்து உங்கள் கருத்து என்ன? எப்படிப்பட்ட விமரிசனம் நியாயமானது என்று கருதுகிறீர்கள்?

 அருண்- விஷ்ணுபுரம் நாவல் பின்னட்டை ‘விமர்சனம்’ என்றும் நாவலுக்கே என்றும் மொத்தம் இரண்டு விமர்சனங்கள் எழுதினேன். அதில் ஒன்றுதான் விமர்சனம். இரண்டுமே அதன் ஆசிரியருக்கு மட்டும்தான் முழுவதுமாய் புரிபடும் (எனக்கு இதுவரை வந்துள்ள கருத்துகளில் இருந்து இது எனக்கு சர்வ நிச்சயமாய் தெரியும்). அத்துடன் அவற்றின் பயன் முடிந்துபோனது.

இனி, உங்கள் அவதானிப்பிற்கு: என் நாவலின் பின்னட்டையை நீக்கச் சொல்லியிருக்கிறேன். அப்படி அவசியம் வேண்டும்தான் என்றால், எடுத்து முன்பக்கமாய் வைக்கச் சொல்லியுள்ளேன். பார்ப்போம்.

விமர்சனங்கள் பற்றி: ஹிஸ்டரி ஆஃப் தி வேர்ல்ட் பார்ட் 1 என்கிற மெல் ப்ரூக்ஸ் திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. குகை மனிதன் குகைச் சுவரில் ஓவியம் ‘கிறுக்குவான்’; உடன் இருப்பவன் அதன் மீது உச்சா அடிப்பான். கதைசொல்லி பின்குரலில் ‘கலை பிறந்தது… கூடவே கலை விமர்சகனும்’ என்பார்.

விமர்சனம் என்பதே மக்கு சமுதாயத்திற்குத்தான். தொல்ஸ்தோய் சொல்கிறார் (வாட் இஸ் ஆர்ட் புத்தகத்தில்). கலை ஆக்கத்தை கலைஞன் உருவாக்கி மக்களிடம் அளிக்கிறான். அவரவருக்குப் புரிந்த வகையில் அவர்கள் அதை எதிர்கொண்டு உணர்கின்றனர், உவக்கின்றனர், உவர்க்கின்றனர். இடையில் விமர்சகன் என்பவன் யார்?

மேலிரண்டு பத்திகளிலும் உள்ள விமர்சகர்கள் இருவேறு வகை. முதலாமவர் கலைஞனுக்கே எதையோ (தன் உச்சாவினால்) கற்றுக்கொடுக்க நினைக்கிறார். அடுத்த பத்தியிலிருப்பவர் தன் விமர்சனம் மூலம் படைப்பை மக்களிடம் கொண்டுசெல்ல முயல்பவர். தாங்களே சிந்தித்து தர நிர்ணயம் செய்துகொள்ளும் மக்கள் சமுதாயத்தில் இவ்வகை விமர்சகனுக்கு வேலையில்லை.

எனக்கு விமர்சனங்கள் ஆய்வுத்துறையில், எழுதிச் சமர்ப்பிக்கும் கட்டுரைகளின் வாயிலாய் அன்றாட நிகழ்வு. முக்கியமான வேறுபாடு, அறிவியல் எழுத்தில் விமர்சனம் செய்பவர்களும் சக ஆய்வாளர்கள். அவர்கள் விமர்சனத்தின் தரமும் நியாயங்களும் பெரும்பாலும் பழுதற்றது. மேலும், அவர்கள் கருத்துகளை மறுத்து நான் பிரதி வாதங்கள் முன்வைக்க முடியும். நடுவராய் ஒரு சஞ்சிகையின் எடிட்டர் (இவரும் ஆய்வாளர், பேராசிரியரே) செயல்பட்டு நீதி வழங்கி ஒன்று என் கட்டுரையை பிரசுரிப்பார் இல்லை நிராகரிப்பார். இல்லை, மேம்படுத்தும் வழிகளைக் கூறுவார். எனக்கு ஒவ்வவில்லை என்றால், வேறு சஞ்சிகைக்கு எடுத்துச் செல்லலாம். இவ்வகை விமர்சனங்களில் பொதுவான நியாயங்களில்தான் (பிழைகளும் ஏற்படும்தான்) அறிவியலின் புறவயமான தர நிர்ணயம் செயல்பட்டு நம்பகத்தன்மை பெறுகிறது.

சுருக்கமாய், அறிவியல் எழுத்தில் விமர்சிப்பவரும் அறிவியல் பழகும் சக அறிவியலாளர் (வெறும் வாசகர் இல்லை).

இதையே கலை விமர்சனத்தில் கொண்டுவந்தால் (அது அகவயமான விமர்சனக் கூறுகள் கொண்டதென்றாலும்) எனக்கு உடன்பாடே.

அதுவரை அனைவரும் தொடர் பெருமூச்சு விட்டுக்கொண்டு தர நிர்ணயங்களை சுயமாய்ச் சிந்திக்கப் பழகுவோம்.

பதாகை- தமிழினி வசந்தகுமார் மிகச் சிறந்த எடிட்டர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த நாவலின் எடிட்டிங் ப்ராசஸ் பற்றிச் சொல்ல முடியுமா? பொதுவாக, எடிட்டிங் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை என்பதால் கேட்கிறேன்.

அருண்- தமிழினி பதிப்பாசிரியரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது அவருடைய ஒரு முகம்தான். எனக்குப் பிடித்த முகங்களில், அவருக்கு சீன ஜப்பானிய எழுத்துலகம் சேர்த்து உலக இலக்கியப் போக்கு முழுவதுமாய் அத்துப்படி என்பதும் அடக்கம்.

எனக்கு மிகவும் உடன்பாடான ஒரு கருத்தை தொடக்கத்திலேயே முன்வைத்தார். நாவலில் ஆங்காங்கே மானுடத்தின் மீது நம்பிக்கை வரும் தருணங்களை நழுவவிடாதே, மேம்படுத்திச் சொல்.

இந்த நாவல் ‘எடிட்டிங்’ என்றால், சுமார் இரண்டாயிரம் பக்கங்கள் எழுதினேன். சுமார் எழுநூறாய் குறைத்துள்ளேன். இதில் பதிப்பாசிரியரின் பங்கும் நிச்சயம் உண்டு. ஏழெட்டு முறை நாவலின் பல முன்வரைவுகளை மாற்றி மாற்றி தட்டச்சுப்பிழைகள் ‘ப்ரூஃப்’ பார்த்தார். இன்னும் இருக்கும் என்றேன். நிச்சயம் கிடையாது என்றிருக்கிறார். பெட் வைத்துள்ளோம். என் அனுபவப்படி எப்படிச் சிறப்பாய் புரூஃப் பார்த்த புத்தக்கத்தின் முதல் பிரதியிலும் ஐந்து சதவிகிதம் அச்சுப்பிழைகள் இருக்கும். பார்ப்போம்.

பதாகை-உங்களிடமிருந்து அடுத்து என்ன எதிர்பார்க்கலாம்?

 அருண்- நிச்சயம் திரைப்பட வசனங்கள் இல்லை எனலாம்.

ஒரு அறிவியல் டிவி சீரியலில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்தும் வந்தேன். சிலமாதங்களில் புரட்டியூசரைக் காணவில்லை. நான் எழுதிய குறுநாவலை திரைக்கதையாக்கலாமா என்றிருந்த இயக்குநர் ‘நாம ஃப்ரெண்ட்ஸாவே இருந்துக்கலாமே’ என்று தொழிலை விட்டுவிட்டார். ஸோ, தற்சமயம் நோ மோர் வசனங்கள்.

(மேலே சொன்னவை சத்தியமாய் நிஜம்தான்)

அடுத்து ஒப்புக்கொண்டுள்ளது, ஒரு ஆய்வுநிலைப் புத்தகம். உயிரியல் வெப்பவியலைச் சார்ந்த பாடப்புத்தகம் என்றும் கொள்ளலாம். அதற்கு அடுத்து தமிழில் அறிவியல் சார்ந்து இரண்டு புத்தகங்கள். ஆங்கிலத்திலும் தமிழிலும் என்று இசை பற்றி புத்தகம் எழுதுமாறு கேட்டுள்ளனர். அதற்குள் மனத்தில் இரண்டாவது நாவல் எழும்பலாம். இடையில் வாழ்க்கை அதனிஷ்டப்படிக் குறுக்கிடலாம்.

நன்றி – பதாகை.