அமெரிக்க தேசி என் முதல் தமிழ் நாவல். சுமார் 700 பக்கங்கள். கெட்டி அட்டை. கனமான உள்ளடக்கம். விலை ரூபாய் 550.
[அமெரிக்க தேசி – பதாகை நேர்முகம் | முனைவர் கரு. ஆறுமுகத் தமிழன் உரை காணொளி | திரு. சேஷஸாயி பாராட்டுக் கடிதம்.]
தமிழினி வெளியீட்டில், ஜனவரி 2015 புத்தகக் காட்சியில் கிடைக்கும். தொடர்பு எண்: 9344290920.
ஆன்லைன் ஆர்டர் செய்ய | இந்தியாவில் — [ உடுமலை டாட் காம் ] அமெரிக்கா, கனடாவில் — [ இங்கு செல்லவும் ].
இனி நாவல் சார்ந்து ‘அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான’ பதில்கள்
***
இது நாவல்தானா?
ஆமாம்.
நிஜமாகவே நீதான் எழுதினாயா?
ஆமாம். அதுதான் இணையம் பக்கம் சில மாதங்கள் வரவில்லை. பின்குறிப்பை பிறகு வாசியுங்கள். (*)
என்ன திடீரென்று நாவல், இலக்கியம் என்றெல்லாம்?
1) ஒரு கனவு நனவாகிவிட்டது. விழித்துக்கொண்டதால், இது…
2) தமிழினி வெளியிட்ட என் அறிவியல் புத்தகங்கள் நன்றாக விற்பனையாகிவிட்டனவாம். சரி, இப்படி ஒன்றை முயல்வோமே என்று…
பிடித்த காரணத்தை வைத்துக்கொள்ளுங்கள்.
நல்ல நாவலா?
வாசித்துப்பாருங்கள், உங்களுக்கே தெரிந்துவிடலாம்.
யார் வாசிக்கலாம்?
வயது வந்த என் வாசகர்கள்.
எந்த வகை? அறிவியல் புனைவு, இதிகாசம், புராணம், வரலாற்று ரொமான்ஸ், கொலை, துப்பறியும், த்ரில்லர், தொடர்கதை…
சமூக நாவல்.
எந்த உத்தி? நவீனத்துவம், பின் நவீனத்துவம், மாய எதார்த்தம்…
எதுவுமில்லை. நேரடியாய் பொறுமையாய் விரிவாய் சொல்லப்படும் கதையில், கதாபாத்திரங்களுடன், கதாசிரியன், கதைசொல்லி சேர்த்து மூன்று பார்வைகளில், வாசிப்பவரையும் நான்காம் பார்வையாய் அனுபவிக்கச் செய்யும் உத்திதான். வெகுப் பழமைத்துவம்.
இலக்கியமா?
ஆமாம்.
உனக்கெப்படி தெரியும்?
1) தமிழினி வெளியீடு. அதன் கிளாஸிக் வரிசையில் வெளிவருகிறது.
2) எனக்கு வேறு எப்படி எழுத வரும் என்று நினைத்திருந்தீர்கள்?
பிடித்த காரணத்தை வைத்துக்கொள்ளுங்கள்.
சரி போதும். எதைப் பற்றி என்று சொல்லித் தொலை…
புற அங்கீகாரத்தைத் தேடி அமெரிக்க தேசம் ஏகிய ஒரு தேசி ஆங்கே அடைந்த அக மலர்ச்சி இந்நாவல். இதுதான் சாரம். பின்னட்டையிலும் இட்டுள்ளோம்.
மேலும் அறிமுகம் என்றால், ஸ்ரீரங்கத்திலிருந்து அமெரிக்கப் பல்கலை ஒன்றில் பிஎச்டி ஆய்விற்கு செல்லும் மாணவனின் மூன்று வருட அமெரிக்க அனுபவங்கள், சார்ந்த சிந்தனைகள், சமத்காரங்கள், சமரசங்கள்… இறக்கம், பயணம், ஏற்றம் என்று மூன்று பாகங்களில். கதைக் களன் முழுவதும் அமெரிக்காவில். ஸ்ரீரங்கம், நினைவுகளில். மீதியை வாசித்து அனுபவியுங்கள்.
வாசிக்கையில் சிரிப்பு வருமா?
கண்டிப்பாக வரும். சமூகத்தை வேறு எவ்வாறு எதிர்கொள்வது?
காதல்…
உண்டு.
காமம்?
அதுவும்தான்.
வெளியீட்டு விழா?
அதுவும் உண்டு. இதுவே முதலும் கடைசியும் என்றாகிவிட்டால் என்பதால் வெளியீட்டு விழாவை இந்த நாவலுக்கே கொண்டாடிவிடலாம் என்று பதிப்பாசிரியர் கருதுகிறார். [முடிந்துவிட்டது].
விழாவி்ல்…
அட, நிச்சயம் கொரிக்க ஏதாவது உண்டுங்க… [குஞ்சாலாடு கொடுத்தோம்]
நிகழ்ச்சி நிரல்?
கதை களன் முழுவதும் அமெரிக்காவில் என்பதால் வெளியீட்டு விழாவிற்கு ஓபாமாவை அழைக்கலாமா, அவர் ஒப்புக்கொண்டால் விழா நடைபெறவிருக்கும் நம் முட்டுச் சந்தில் அவர் கார் நுழையுமா, நுழைந்தாலும் கதவைத் திறக்காமலேயே அவரால் இறங்க முடியுமா போன்றவற்றிற்கு இன்னமும் கருத்தொருமித்த முடிவு கிட்டவில்லை. சில நாட்களில் வெளியிடுகிறேன், வெளியீட்டு விழா நிகழ்ச்சி நிரலை. [முடிந்துவிட்டது].
***
பின்குறிப்பு
(*) இணையம் நாவல் எழுதுவதற்கு ஊறா?
கதாசிரியனாய் ஒரு தனி உலகை உருவாக்கி அதில் பாத்திரங்களை உலவவிடும் தீவிரமான படைப்பூக்கச் செயலை முன்னிருத்தும் நாவலை எழுதுவதும், அன்றாடங்களில் அலைபாயும் எண்ணங்களில் சுவையானவற்றை தொகுத்து, சிறு பெருங் கட்டுரைகளாக இணையத்தில் எழுதுவதும் வேறு வேறு மனநிலைகளில் செய்யவேண்டியது.
இரண்டையும் ஒருவரால் வெற்றிகரமாகச் செய்யமுடியலாம். அன்றாட வேலைகளுக்குப் பிறகு கிடைக்கும் சில மணிநேர ஓய்வில் இதில் ஏதோ ஒரு மனநிலையை மட்டுமே என்னால் ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. அதுதான் இனணயத்திற்கு சில மாதங்களாய் டாடா.
வாசிப்பதிலும் இவ்விரு மனநிலைகள் இன்னமும் தீவிரமாய் இயங்குவதை வருடங்களாய் உணர்ந்திருக்கிறேன். ஒரு வகை வாசிப்பு இன்னொன்றை ஒழித்துக்கட்டிவிடும் என்றுதான் கருதுகிறேன். எது எதை என்பதை உங்கள் வாசிப்பில் நீங்கள் முடிவுசெய்து கொள்ளலாம்.
ஒரு நாவல் எழுதியதுமே கருத்து கந்தாடையாய் நாங்கள் ஒன்று கேட்டால், உன்னிடம் கேட்காத எதைப் பற்றியும் அறிவுரை வழங்கத் தொடங்கிவிட்டாயே…
ஸாரி… எழுத்தாளன் என்றாகிவிட்டாலே…