இம்மாதம் ஆசிரியர் தினத்தன்று சென்னையில் ஒரு பள்ளி விழாவில் தலைமை விருந்தினராய் உரையாற்றும் இக்கட்டை வெற்றிகரமாக எதிர்கொண்டேன்.
ஃபோனில் ஏற்கெனவே ஆசுவாசப்படுத்தியிருந்தனர்: நீங்க ஆசிரியர்களுக்குதான் சார் உரையாற்றப்போறீங்க; மாணவர்கள் இருக்கவே மாட்டாங்க… பத்து நிமிஷம் பேசினாப் போதும் சார்… தமிழ்லயே பேசலாம்… புக்ஸ்லாம் எழுதிருக்கீங்கலாமே… தமிழ்லயேன்னா, மொத்தமா அதுலயே வேணாம்… சும்மா கலந்துகட்டி பைலிங்குவலா… அதான் நீங்க பிரமாதமா பேசுவீங்கன்னு “ … ” சொன்னாங்களே…
இரண்டு மூன்று வருடங்களாய் தெரிந்தவர் மூலம் அழைத்து வந்தார்கள். இம்முறை ஒப்புக்கொண்டேன்.
சுமார் இருபது நிமிடங்கள் ‘ஆத்தின’ உரையை மூன்று வாரங்கள் கழித்து வரி மாறாமல் இங்கு மீண்டும் ஆற்றினால், முகர்ந்து பார்த்தே ‘ஆரிய பவனில் வாங்கியதா’ என்று பதிவிலிருந்து அந்தண்டை க்ளிக்கிவிடுவீர்கள் (இப்படி வாசிப்பவருக்கு புன்சிரிப்பு வருமாறு மென்நகையாய் ஒரு வாக்கியம் எழுதினாலே அது ‘சுஜாதா’வாம். இதிலிருந்து வேறு நான் வெளிவரவேண்டியதுள்ளதாம்! நான் கேட்காமலயே ஒரு ‘நலங்கிள்ளி’ வழங்கினார். இது தனிக் கதை…)
*
உரையின் சாரம் மட்டும் (நினைவிலிருந்து):
சில வாரங்கள் முன் மகளிடம் அன்று கொத்தாய் வாங்கிவந்திருந்த Very Short Introduction வரிசையில் பத்து பதினைந்து புத்தகங்களைக் காட்டி எதைவேண்டுமானாலும் எடுத்து வாசியேன் என்றேன். அவள் அனைத்தையும் ஆசையாய் ஒருமுறை வருடி முகர்ந்துவிட்டு, “அப்பா, இதெல்லாத்தயும் படிக்னம்ன்னா நான் ஒரு வாரம் ஸ்கூல் லீவ் போட்டாத்தான் முடியும்… இப்ப பரிட்சைக்கு படிக்கனும் பை..” போய்விட்டாள். அனைத்துமே அவளுக்கு ஆர்வமிருக்கும் அல்லது அதைத் தூண்டக்கூடிய தலைப்புகள்தான். ஆனால் பாடம், தேர்வு என்பதில் மிகக்கவனமாய் இருக்கிறாள். இத்தனைக்கும் நான் மார்க், குறைந்ததா, அதிகமா, முதலாவதா… என்றெல்லாம் அவளிடம் அலட்டிக்கொள்வதை கவனமாய் தவிர்ப்பவன். ஆனாலும் ஆறாவதிலேயே ஒரு சட்டகத்தினுள் தன்னிச்சையாய் ஓடத்துவங்கிவிட்டாள். வகுப்பில் முதல் சில மாணவிகளில் ஒருவளாய் வரவில்லையென்றால் அவளாகவே மிகவும் வருந்துகிறாள். அடுத்த பரிச்சைல எப்டியும்… என்று கருவிக்கொள்கிறாள். Peer pressure. சத்தியமாய் நான் காரணம் இல்லை. மனைவியின் ஜீனொ என்னவோ (அவள் காலத்தில் அவள் மாநிலத்தில் முதல்). இன்னும் இரண்டு வருடங்களில், நண்பிகளின் கற்பிதங்களில், மகள் ஐஐடியில் சேர்வதை பற்றி அவளாகவே கேட்பாள்… இப்போதிலிருந்தே என் உயர்கல்வி நிறுவன வேலையின் முக்கியத்துவத்தை வேண்டுமென்றே அவளிடம் குறைத்துக்கூறுகிறேன்… அது ஒரு பொருட்டே இல்லை. பிடித்திருக்கிறது என்று மட்டுமே செய்கிறேன்… நீயும் உனக்குப் பிடித்ததை மட்டுமே யோசி… நிச்சயம் சொந்தக் காலில் நில்… ஆனால் பிடித்ததை செய்யாமல் விட்டுவிடாதே… இப்படி…
இந்நிலை எனக்கும் புதிதில்லை. உங்களுக்கும்தான். நம் அனைவருக்குமே பழகியதுதான். ஏன் பள்ளியில் மாணவர்கள் அவர்களுப் பிடித்ததை மட்டுமே படிக்ககூடாது? அதை அவர்கள் எத்தனை உள்வாங்கியிருக்கிறார்கள், அதில் அவர்களின் தேர்ச்சி என்ன இப்படி மட்டும் நாம் ஆசிரியர்கள் அவர்களை சோதிக்கக்கூடாது? நாம் அவர்களுக்கு இதுதான் கல்வி என்று சட்டகமிட்டு போதித்து சோதித்து தேர்ச்சியாக்கி அனுப்பும் முறையை மறுபரிசீலனை செய்யவேண்டும். மாணவர்கள் அவர்களுக்கு வேண்டியதை – அஃப்கோர்ஸ், உருப்படியான விஷயங்களை – பள்ளியிலிருந்தே அவர்களாகவே தேர்வுசெய்துகொள்வது அவசியம். அவர்களின் பலத்திற்கு, மனச்சாய்விற்கு ஏற்றபடி. ‘யுடோப்பியன் ஐடியா’ என்று ஒதுக்குவது எளிது. கொஞ்சமாவது வகுப்புகளின் உள்ளே கொண்டுவந்து செயல்படுத்துவதை யோசிக்கவேண்டும்.
மாணவர்கள் தாமாக பள்ளிக்கும் வரவேண்டும். நாம் அவர்களை அழைக்கக்கூடாது. அவர்கள் தாமாய் நம்மிடம் சந்தேங்கள் கேட்டுத் தெளியவேண்டும். சோதித்து நிலையை உணர்த்துமாறு கேட்கவேண்டும்.
இன்றைய நிலையில் பாடதிட்டங்கள் எதுவேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அவற்றினுள்ளே ஓரிரு புத்தகங்களை அவர்களாகப் படித்துப் புரிந்து தெளிந்து விவாதிக்கும் நிலையை அவர்களுக்கு வழங்கவேண்டும். உதாரணமாய், அவர்கள் ஒரு வருடத்தில் வாசித்த ஓரிரு புத்தகங்களிலேயே தேர்வு வைக்கலாம். ஹாரி பாட்டர் வரிசைதான் அது என்றால், அதில் தேர்வு வைத்து அவர்களின் புரிதலை, அறிதலை, ஒருமுகத்தை, நினைவாற்றலை… இப்படிச் சோதித்து அனுப்பினாலும் தகுமே…
இன்றைய மாணவர்கள் வயது வித்தியாசமின்றி தொடுதிரை வீடியோ கேம்ஸ் கில்லாடிகள். அதையே ஒரு பாடதிட்டமாக இல்லையெனினும், ஒரு ஊக்கத் தேர்வாக வைத்துவிடலாம். பள்ளியில் வருடாந்திர விளையாட்டுகளில் இதையும் சேர்த்துவிடலாம். இன்று அமெரிக்காவில் ராணுவ வீரர்களுக்கு வீடியோ கேம்ஸ் விளையாட்டில் திறனை வளர்க்கிறார்களாம். உட்கார்ந்த இடத்தில் விடியோ கேம்ஸ் போல ‘டார்கெட்’களை தானியங்கி பறக்கும் ‘ட்ரோன்ஸ்’ வைத்து ‘போட்டு தள்ளும்’ வித்தையை வளர்க்க. அந்த வீரர்களைப் பொறுத்தவரை அவர்கள் கத்தியின்றி ரத்தமின்றி வீடியோ கேம்ஸ்ஸில் வெற்றிகொள் முயல்கிறார்கள். போரில் ஈடுபட்டு சேதங்களை விளைவிப்பதின் குற்ற உணர்வைக் குறைக்கும் உளவியல் வழியாம்.
நாம் இதை பின்பற்றவேண்டும் எனவில்லை, நிச்சயம் பள்ளியின் ஒரு விடியோ கேம்ஸ் திறனாளி, ஒரு விமானத்தை ‘ரிமோட்’டில் ஓட்டுவதற்கான பயிற்சித் திறனை இளமையிலேயெ வளர்த்துக்கொள்ளலாம் தான்.
பள்ளியினுள் கற்றாகவேண்டிய பாடதிட்டக் கல்வியை போதிப்பது மட்டுமே பள்ளியினால் மாணவர்களுக்கு உபயோகம் என்பது மாறவேண்டும். பள்ளிப் பாடங்களைச் சுற்றி எதை ஆர்வமுடன் பயின்றாலும் அம்மாணவர்களும் வாழ்கையில் வெற்றிபெறுவார்கள் என்பதை நாம்தான் அவர்களிடம் உணர்த்தவேண்டும். இல்லை, அவர்கள் நமக்கு உணர்த்துவார்கள்.
பிடிக்கிறதோ இல்லையோ, ஃபிஸிக்ஸ் வேண்டாம், இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்கும் என்று ஏதோ நிர்பந்தங்கலில் பள்ளிப் பாடங்களை மட்டுமே ஒழுங்காய் வாசித்து, வாழ்க்கையில் நிச்சயம் வெற்றிபெறமுடியும் தான். வெற்றிபெற்று, உங்களிடையே இதைப் பற்றியெல்லாம் பேசவும் அழைக்கவும் படலாம்.
*
சென்னையில் நல்ல பெயர் வாங்கிய அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் பற்றி நான் எதிர்பார்த்திராத ஒன்றை இங்கு குறிப்பிடவேண்டும். ஓரிருவரைத் தவிர அனைவருமே பெண்கள். விலைவாசிக்கு இந்நிலைதான் கட்டுப்படியாகும் என்றார் சந்தித்த ஒரு ஆண் ஆசிரியர். இப்போதைக்கு நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டியது, என் உரையை கேட்ட சுமார் இருநூறு பேர்களும் பெண்கள்.
பேசி முடித்து வந்தமர்ந்ததும் அருகில் நிகழ்ச்சிக்கு என்னை வரவேற்றிருந்த நபர் அமர்ந்தார்.
“என்ன ஓகேயா? போதுமா?”
“ஐய்ய்யோ… சூப்பர் போ… கமல்ஹாஸன் பேசரா மாதிரியே இருந்துதுன்னு பின்னாடி ஒரே டாக்…”
என் நாவிதரும் இவ்வாறான குறும்பு உடையவரே: சார், உங்களுக்கு அப்டியே ரஜினி மாதிரி முடி சார்… என்பார். ரஜினிக்கு ஏதப்பா முடி? அதான் சார் நானும் சொல்றேன்…
“கமல் பேச்சு மாதிரியா… சூப்பரா வா… ஏதானு ஒன்னு சொல்லு… ரெண்டுத்தையும் சொல்லாதீங்க…”
“இந்தக் கிண்டல்தான… சே, சே, நிஜமாவேபா… ஆழ்வார் பிரபந்தம்… மிஸைல்ஸ்ன்னு எல்லாத்தயும் கலக்கி, கமல் பேசறா மாதிரியே… சூப்பரா இருந்துது… அதான் எல்லாரும் யாரதுன்னு… நீ இன்னும் அரை மணி பேசிருந்தாலும் கேட்ருப்பாங்க…”
சிரித்து மழுப்பினேன். டிஃபனைத்தான் மறுக்க முடிந்தது. பெரிய உருண்டையான பரிசுபொருள் வழங்கினார்கள். கட்டிலுக்கு அடியில் போட்டுவைத்திருக்கிறேன்.
ஒரு ஆசிரியை தன் திரைப்பட இயக்குநர் மகனைத் தெரியுமா என்றார். அவருக்கும் என்னை நன்றாகத் தெரியும், இன்றும் நேரில் எங்கு பார்த்தாலும் ஞாபகமாய் பேசுவார், விசாரியுங்கள் என்றேன்.
பள்ளியில் மூன்று தலைமை ஆசிரியைகள். ஒருவர் தன் அறை மேஜையில் பூனை வைத்திருந்தார் (உயிரோடு தான்). ஒருவர் மிகவும் நன்றி தெரிவித்து பிறகு ஈமெயில் எழுதியிருந்தார். உரை முடிந்ததும் அவர் என் பொறுப்பாளியிடம் பகிர்ந்ததாய் அவர் என்னிடம் சொன்னது:
பேச்ச கேக்கறப்ப எனக்கு அப்டியே ‘சுஜாதா’ தான் ஞாபகம் வந்தார்.
ஜெயமோகனிடம் ஒருமுறை (2011இல்) சிறுபேச்சில் பகிர்ந்ததின் சாரம்தான் எனக்கு ஞாபகம் வந்தது (நினைவிலிருந்து குறிப்பிடுகிறேன்): ‘சுஜாதா’வைத் தவிர எதுவும் தெரியாதவங்களுக்கு, அவர்கள் பார்க்கும், கேட்கும், நுகரும் எதிலும் அவர்தான் தெரிவார்.
பாதகமில்லை.