பேராசிரியத்துவம்

Standard

நாளைக்கு ஒரு கிளாஸ் எடுப்பியா? அப்பறம் ஃப்ரீதானே, போரடிக்காதா? இப்பதான் செமஸ்டர் முடிஞ்சிருத்தே, ஃப்ரீதானே, தினம் என்ன பண்ணுவ? கிளாஸும் கெடயாது, சும்மாதானே போய்ட்டுவருவ? ஜாலியான பொழப்புடா ஒனக்கு. ஒரே சப்ஜக்ட்ட அதே கிழிஞ்சுபோன நோட்ஸ வெச்சு எடுத்தா போரடிச்சுராது? பி.எச்.டி. ரிஸர்ச்சுன்னா, அதுனால என்ன யூஸ்? நீ ஏதாவது புதுசா கண்டுபிடிச்சிருக்கியா? நீ விஞ்ஞானியா, வாத்தியாரா?

உயர்கல்வி நிறுவனத்தில் என் வேலைப் பெயரைச் சொன்னதும் அடுத்து கேட்கப்படும் கேள்விகள் மேற்படி வகையே. அப்போது அறிமுகமானவரும், அன்றாடம் சந்திப்பவரும் ‘வாத்தியார்’ யார் என்கிற தங்கள் அனுமானத்தில் ஒரே வகையினரே. வாத்தியார் ஆசிரியரா, பேராசிரியரா, ஆய்வாளரா இவற்றில் வித்தியாசங்கள் உண்டா என்பதில் கவனம் இல்லை.

பேராசிரியர் ஆசிரியர் மட்டுமில்லை. பேராசிரியர் ஆய்வாளர் மட்டுமில்லை.

ஆசிரியர் ஆசிரியத்துவம் செய்பவர். பேராசிரியர், பேராசிரியத்துவம்.

ஆசிரியர் ஒரு பாடத்தை மாணவர்களுக்கு ‘நடத்துவதில்’ குறியாயிருப்பார். அதற்காக வகுப்பெடுப்பது அவர் வேலை. சிலபஸ், தினப்படி வகுப்புகள், தேர்வுகள், மதிப்பெண், தேர்ச்சி, அவரது பணியின் முக்கியமான அங்கங்கள். தான் ‘நடத்தும்’ பாடங்கள் யாவையும் மாணவர்கள் யாவருக்கும் புரியவேண்டியது ஆசிரியருக்கு முக்கியம். இதன் மறுபக்கம், ஒரு ஆசிரியருக்கு மாணவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதில் அக்கறை அதிகம். அவர் வகுப்பில் பாடம் கேட்ட மாணவர்கள் செமஸ்டர் அல்லது வருட இறுதியில் வழங்கும் ’ஃபீட்பேக்’ எனப்படும் மறுவினைகள் அவருக்கு மிக அவசியம். தன் பணி செவ்வனே நிறைவேறுகிறது என்பதை மேற்படி விஷயங்களை வைத்தே நிர்ணயிப்பார். அதாவது ஆசிரியர் ஆசிரியத்துவம் புரிபவர்.

பேராசிரியர் ஒரு அறிவுத்துறையை விழித்திருக்கும் கணமெங்கும் ஓம்புபவர். குளிக்கையில், படுக்கையில், மிதிவண்டியில், அழகானவர்களுடனான அளவளாவலில், சோதனைச்சாலையில், வகுப்பில், வெறுப்பில்… எவ்வகைக் கணங்களிலும் மனதில் ஓரிரு அறிவுத்துறை விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்கும். ஒரு விஷயத்தை எவ்வாறெல்லாம் விளக்கலாம், மேம்பட்ட புரிதல் விளையுமாறு எவ்வாறு ஒரு கருதுகோளை அனுகலாம், இதுகாரும் அத்துறையின் போக்கு எது, அது சரியா, அப்போக்கில் வைத்து புதிய கருதுகோளை எவ்வாறு விளக்கலாம், விரிக்கலாம், விவரிக்கலாம்… இப்படி இயங்கும் அவரது மனவோட்டம்.

பேராசிரியரும் வகுப்புகள் எடுப்பார். தொடக்கத்தில் வரையறுக்கும் ‘சிலபஸ்’ செமஸ்டர் முடியும்வரை தொடரும் என்பது நிச்சயமில்லை. அவர் ‘நடத்தும்’ அனைத்தும் மாணவர்கள் அனைவருக்கும் புரியும் என்பதும் நிச்சயமில்லை. அவ்வாறு நிகழ்வதற்கு அவரும் மெனக்கெடமாட்டார். மாணவர்கள்தான் எழும்பிவந்து புரிந்துகொள்ள முயலவேண்டும். தேர்வு, வீட்டுப்பாடம் என்பதெல்லாம் அவருக்கு வேப்பங்காய். தவிர்க்கமுடிந்தால் நலமே. ஏனெனில் ஒரு கருத்தாக்கத்தை, சித்தாந்தத்தை, கோட்பாட்டை, ஒரே விதமாய் இருமுறை சொல்லித்தரமாட்டார். மனதினுள் விளக்கங்களும் உதாரணங்களும் மாறிக்கொண்டே, மேம்பட்டுக்கொண்டே இருப்பதால். அதேபோல் செமஸ்டர், விடுமுறை, வகுப்புகள் உண்டா இல்லையா, என்பதெல்லாம் அவருக்குத் தற்செயல். அவர் மனதின் பணி தினமும் தொடரும். சில பல வருடங்களில் அவரது துறையை எவ்வாறு அணுகினால் சிறப்பாய் புரிந்து அறிந்துகொள்ளமுடியும் என்பதை விளக்குமாறு புத்தகம் எழுத முனைவார். வருங்காலத்திற்கான அவருடைய கொடையாய். அதாவது, பேராசிரியர் பேராசிரியத்துவம் புரிபவர்.

ஆய்வாளர் புதிய ஆராய்ச்சி முடிவுகளை உருவாக்குபவர். அதற்கான முயற்சிகளில் தினப்படி அதிக நேரத்தை செலவிடுபவர். தன் ஆராய்ச்சி முடிவுகளின் முன்னுரிமை அவருக்கு மிகவும் முக்கியம். உலகில் வேறு எவராவது (அல்லது குழுவாவது) அவருக்கு (அல்லது அவரின் குழுவினருக்கு) முன்னால் அதே ஆய்வுமுடிகளை ஆராய்ச்சி சஞ்சிகைகளில் வெளியிட்டுவிடுவாரோ என்கிற கவலை தினப்படி அவருக்கு உண்டு. வருடந்தோறும் தன் ஆராய்ச்சி முடிவுகளும் கட்டுரைகளாக வெளிவந்தவண்ணம் இருக்கவே விழைவார். விளையாட்டில் தானும் ஒரு முக்கியமான உறுப்பினர் என்பதை சக ஆய்வாளர்களும் அறிவுத்துறையினரும் நினைவிறுத்திக்கொள்ள.

பேராசிரியர் ஆய்வாளர் மட்டுமில்லை. அவரும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்வார். ஆனால் புதிய முடிவுகளில் முன்னுரிமை, வருடந்தோறும் கட்டுரைகள், ஆராய்ச்சி மாணவர்களின் தேர்ச்சி, ஆராய்ச்சிக் குழுவின் நிதியிருப்பு போன்றவைகளில் அதிக கவனம் செலுத்த மாட்டார். தன் அறிவுத்துறையின் எல்லைகள் எது என்பதை வரையறுத்துக்கொள்வதில் கவனமாக இருப்பார். (மேற்கூறிய ஆய்வாளர்கள் தயவில்) வெளிவந்த வண்ணம் இருக்கும் புதிய ஆராய்ச்சி முடிவுகளை பரிசீலித்து எது தேவை, எது ஏனோதானோ, எவற்றை ஏற்றால் தன் அறிவுத்துறை எல்லைகள் விரிவடையும், இல்லை புதிய கோணத்தில் பயணிக்கும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார். ஒரு பொதுப் புரிதலுக்குள் வராத புதிய முடிவுகளை அவரால் எளிதில் ஒதுக்கிவைத்தோ, கடந்தோ செல்லமுடியாது. தன் துறையின் கருடபார்வைப் புரிதலின்கீழ் அம்முடிவுகளை அவசியமான இடத்தில் இருத்திப் புரிந்துகொள்ளாதவரை, அல்லது தேவையில்லை என்று தீர்மானித்துக் கடாசாதவரையில், அவருக்குத் திருப்தியிருக்காது. இவ்வகை முடிவுகளை ஆராய்ச்சிப் புரிதல் கட்டுரைகளாக அல்லது புத்தகங்களாக (மோனோகிராஃப்) அவர் எழுதி விளக்குகையில், அம்முடிவுகளின் முன்னுரிமை அவருக்குக் கிட்டாமல் போவதைப் பற்றி அவருக்குக் கவலையில்லை. தன் துறையின் (அல்லது துறைகளின்) எழுச்சியே பிரதானம்.

துறையின் பொதுப்புரிதலில் இடைவெளிகள் தெரிகையில் அவற்றைக் குறித்தே பேராசிரியரின் ஆராய்ச்சிகள் கவனம்கொள்ளும். ஆராய்ச்சிப் பிரச்சனைகளின் கடினத்தைப் பற்றியோ அதற்கான தீர்வு ஓரிரு வருடத்தில் கிடைத்துவிடுமா என்ற உறுதியின்மையைப் பற்றியோ கவலையில்லை. ஒவ்வொரு வருடமும் புதிய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டாகவேண்டியது அவரது குறிக்கோளில்லை. துறையின் முழுமையான புரிதல், வளர்ச்சிக்கான ஆய்வுகளே குறிக்கோள். அதாவது, பேராசிரியர் பேராசிரியத்துவம் புரிபவர்.

கோடிகாட்டியுள்ளதில் உட்செயல்பாடுகளில் உங்களுக்குப் பல சந்தேகங்கள் இருக்கலாம். உதாரணமாக ஒருவர் ஓரிரு துறைகளிலும் இவ்வாறு பேராசிரியத்துவம் வெளிப்படுத்தலாமா? நிச்சயமாக. ஒரு துறையில் செய்த பிறகு அடுத்த துறைக்குத் தாவலாமா? நிச்சயமாக. நம் சுப்ரமணியம் சந்திரசேகரே செய்துள்ளார். இவ்வளவு ஏன், பிழைப்பிற்கு வேறு பணியில் இருந்தபடியேயும் (அகடெமிக் இல்லாமல்), வீட்டிலிருந்தபடியேயும், எத்துறையிலும் ஒருவர் பேராசிரியத்துவம் புரியலாம். நியூட்டனும், தியாகையரும், பாஹ்க்கும், டால்ஸ்டாயும் எக்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள்?

பேராசிரியர் யார் என்பதும் யார் இல்லை என்பதும் ஓரளவு புரிந்திருக்கும். அனைத்து சந்தேகங்களையும் விளக்க இடம் இச்சிறுகட்டுரையல்ல. சுருக்கி வரைந்தால், பேராசிரியர் ஆசிரியரும்தான், ஆனால் ஆசிரியர்கள் அனைவருமே பேராசிரியர்கள் இல்லை. பேராசிரியர் விஞ்ஞானியும் ஆய்வாளாரும்தான். ஆய்வாளர்கள் அனைவருமே பேராசிரியர்கள் இல்லை.

எனக்கு இவை சுமாராய் புரிவதற்கு பத்து வருடங்கள் பிடித்தன. பேரா. ஹோல்மன், சர் வால்டர் நோல் போன்றோர் ‘பேராசிரியர் யார்’ என்று வழங்கிய கருத்துகளும் உதவின. எனக்குத் தெரிந்து பலர் நல்ல பேராசிரியர்கள். அவர்களே மற்ற சமையங்களில் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள். சிறந்த பேராசிரியர்கள் பலரையும் நானறிவேன்.

எத்துறையிலும் ஆய்வாளத்துவம், ஆசிரியத்துவம், பேராசிரியத்துவம் மூன்றிலுமே சிறந்து விளங்குபவர் சொற்பமே. சமுதாய நிர்பந்தங்களில், கல்வி நிறுவனங்கள் பொருள்முதல்வாதப் பயன்களை மட்டுமே விற்கும் வியாபாரக் கூடங்களாய் மாறிவரும் இந்நாளில் அவ்வாறு மூன்றிலும் சிறந்து விளங்குவதை ஒருவரிடம் எதிர்பார்ப்பதே எள்ளலுக்குள்ளாகுமோ.

பணியாற்றும் உயர்கல்வி நிறுவனத்தில் இன்றிலிருந்து பேராசிரியர் என்று அழைக்கப்படவுள்ளேன். பொழுதில் பேராசிரியத்துவம் பழகவும் வாய்க்கப்பெறலாம்.

(எழுதிய தினம்: 18 ஜூலை 2014)