டிஜிட்டலில் செதுக்கிய தலையா

Standard

2012-aru-dec-02

இரண்டு நாள்கள் முன்னர் மொட்டை அடித்துக்கொண்டேன்.

ஏன் என்று காரணம் கேட்டால், இப்படிச்சொல்லலாம். சலூனுக்குச் சென்று நம் முடியையும் கொடுத்து நம் காசையும் கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூகச் சோகங்களில் ஒன்று. அதட்டிக் கேட்டால் ஒருக்கால் வெட்டியதை எடுத்துச்செல்லுங்கள் என்று திருப்பிக்கொடுக்கலாம். பிறகும், நம்மிடம் முன்னர் இருந்தது இப்போதும் நம்மிடமே உள்ளது, ஆனாலும் காசை கொடுக்கவேண்டியுள்ளதே என்று சோகம் மீளும், நீளும். எப்படியும் கொடுக்கப்போகும் காசிற்கு ‘மிகுதியான பலனாய்’ இருக்கட்டுமே என்றும், இப்படிச் செய்தால் மீண்டும் சலூன் செல்வதற்கு ஆறு மாசமாவது பிடிக்கும், காசு மிச்சம், என்றும்தான் மொட்டை. சுருக்கமாய், மிட் லைஃப் க்ரைசிஸ்.

மொட்டையின் பக்கவிளைவுகள் பல. வெளிப்பக்க விளைவுகள் நிதர்சனம். பின்வருமாறு.

நேற்றைக்கும் சரிபார்த்ததில் புரிவது, நாம் யாரும் இன்றைய காந்தியுமில்லை, ரஜினியுமில்லை. அதனால் மொட்டை என்பதாலேயே ‘மகாத்மா’ என்றோ, ‘பாபாஜி’ என்றோ அறியப்படமாட்டோம். முப்பது கோடி ஜனமோ, பணமோ நம்மால் ஆகர்ஷிக்க இயலாது. இருப்பினும் சலூனுக்கு வெளியே கையை கண்ணுக்கு மேல் நெற்றியில் குறுக்குவாட்டில் இருத்தி, கவனித்து, அடையாளம் கண்டுகொண்டவர், “என்ன சார், சிவாஜி படம் த்ரி-டீ-யில் ரிலீஸாரத கொண்டாட ‘மொட்ட பாஸ்’ ரஜினிக்காக போட்ட மொட்டையா? என்கிறார். அவர் கவலை அவருக்கு.

என் கவலை எனக்கு. வரும் சனிக்கிழமை என்னை (ஓரமாக) வைத்துத் திரைப்படம் இயக்குவதாக இருந்தவரை சந்திக்கவேண்டும். அவர் என்ன சொல்வார் என்று குன்சாய் புரிவதால் கவலை.

“என்ன பாஸ் கொஞ்சம் பூசின மாதிரி பாடி பில்ட் பண்ணி, கண்ணுக்கு கீழ ஃபேர் அண்ட் லவ்லி தேச்சி, கெட்டப் சேஞ் பன்னிட்டு ரெண்டு வாரத்துல வாங்கன்னு தானே சொன்னேன், அதுக்குனு இப்டி ‘ஆளவந்தான்’ ரேன்ஜுக்கு வந்து நிக்கறீஹ. ப்ரொட்யூஸர் பாத்தார்னா நெஞ்சுவலி வந்துடும் பாஸ், மொதல்ல இந்த கர்ச்சிப்ப தலைக்கு கட்டுங்க, ஹீரோவ கரி என்ஜின் டிரைவரா மாத்திடுவோம்… என்னது நீங்க ஹீரோ-வா, வெளயாடாதீங்க பாஸ், நீங்கதான் என்ஜின்…

யோசித்தபடியே வீட்டினுள் நுழைந்ததும் மனைவி, “இது என்ன கல்யாணம் பண்ணி பத்து வருஷம் ஆனத கொண்டாடவா?” என்று வரவேற்றாள்.

“ஆமா, நீ பாதி நான் பாதி கண்ணே-ன்னு, பாதிய உன்ன செஞ்சுக்கச் சொல்லமுடியாது, அதான் மொத்தத்தையும் என் தலைல போட்டுண்டேன்…”

சமயோஜிதமாய் எதிர்வினையாற்றியது, பூமராங்கியது.

“நல்லா பேசு. நான் தனியா வேற அடிச்சுக்கனுமா, வாக்கபட்டதுக்கு கொஞ்சநாள்ல எனக்கு மொத்தமும் தன்னால கொட்டிடும்”.

சொன்னாளே தவிர, உடனே அரக்கபரக்க என்னை சேரில் கணினிமுன் உட்கார்த்திவைத்து படம்பிடித்து, தன் வலைப்பூவில் (டைட்டில் ’மொட்ட பாஸ்’) போட்டுக்கொண்டாள். வலைப்பூவிற்கு திருஷ்டி கழிக்கவாய் இருக்கலாம்.

அப்போதுதான் நுழைந்த வீட்டு உதவியாளிப் பெண், என்னைப் பார்த்ததும் சடக்கென்று தலையை குனிந்து, புடவைத் தலைப்பால் வாயை மூடிக்கொண்டு மனைவியை கிச்சனுக்குத் தள்ளிக்கொண்டு போனாள்.

சற்று நேரம் கழித்து வெளியே வந்த மனைவி, கணினியில் சீரியஸாய் வாழ்க்கையை வீணடித்துக்கொண்டிருந்த என்னிடம் நெருங்கி, கிசுகிசுப்பாய், “அவ கேக்கறா, ஐயா என்ன உங்களுக்காக வேண்டிகிட்டு மொட்ட போட்டுக்கிட்டாராம்மான்னு. அவளுக்கு தோணினது உனக்குத் தோணித்தா பாரு…”

சுவாரஸ்யமாய் ‘இட்லிவடையில்’ ஏதோ அக்கப்போரை படித்துக்கொண்டிருந்ததை கலைத்த கடுப்பில், “சொல்ல வேண்டியதுதானே, எனக்காக வேண்டிக்கிட்டு இல்ல, எங்கிட்டயே வேண்டிகிட்டுதான் போட்டுண்டார்னு” என்றதும் மொட்டையை கணினியுடன் மோதிவிட்டு அகன்றாள். நானும் வாகாய் மொட்டைத்தலையை ‘இட்லிவடைக்குள்’ விட்டுக்கொண்டேன்.

அதற்குள் மனைவி வலையில் இட்ட பூ மலர்ந்துவிட, சாட்டில் நண்பிகள் மொலுமொலுவென்று பிடித்துக்கொண்டார்கள். மனைவியின் நண்பிகள்தான்…ஹி…ஹி… (வீட்டில் இருவருக்கும் தற்சமயம் ஒரே கணினி).

சாட்டில் ஒரு நண்பி “இதுவரைக்கும் உன்னோட பேசினாத்தான் சிரிப்பா இருக்கும், இப்ப பாத்தாலே சிரிப்பா இருக்கு” என்றாள். ”ஐம் டெம்ப்டட் டு மேக் யுவர் பிக்சர் வைரல்”.

அடுத்தவள் அமேரிக்காவிலிருந்து “உன் புது அவதாரத்தை பற்றி என் கருத்தை கேட்க உனக்கு விருப்பமா?” என்று ‘ஜுனூன் ஆங்கிலத்தில்’ சாட்டிவிட்டு, என் பதிலுக்கு காத்திராமல், “இப்ப இருப்பதை விட முன்னாடி இருந்த உன் ஸ்வரூபமே நன்றாக இருந்தது” என்றாள். அமெரிக்காவிற்கான இந்தியத் தூதுவராகப் போயிருக்கவேண்டியவள்.

அலுவலில் அநேகமாக அனைவரும் அளித்தது அனுதாபங்களையே (அஸால்ட்டா அஞ்சு ‘அ’ வில் தொடங்கும் சொற்கள் விழுவதை கவனிச்சீங்களா; மொட்ட போடலேன்னா இப்படிலாம் தோணியிருக்குமா).

காண்டீனில் டீ-வரிசையில் முண்டிக்கொண்டு வந்த சக-பெண்-பேராசிரியர், வரிசையான பற்கள் தெரிய அழகாய் சிரித்து, “அடையாளமே தெரியல; ஹவ் ஆர் யூ? என்ன திடீர்னு?”

இப்டிக் கேட்டா என்ன சொல்றது. “என் மழி, தனிஈஈஈ மழி” அப்டீங்லாம் ரஜினி ஸ்டைல்ல. அந்தளவுக்கு அம்மணிக்கு தமிழ் புரியுமான்னு ‘ஐ ஹேவ் மை டௌட்ஸ் யு நோ’. பதில்-புன்சிரித்தேன்.

”ஆனாலும் சிரிச்சா தெரிஞ்சுடறது” மேடம் தொடர,

கால வேளைல கடலயா, வயத்த கலக்குமேன்னு நினைக்கையிலேயே அவளே, “ஸீ யூ லேட்டர்…” என்று விலக முற்பட,

“எப்போ, முடி வளர்ந்ததுமா?” ன்னு வழிந்து, பெயரை தக்கவைத்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தேன்.

அடுத்த சகா அருகில் வந்து தன் கண்ணாடியை மேலே தூக்கிவிட்டுக்கொண்டு முகர்ந்து பார்ப்பதுபோல் செய்து, அடையாளம் கண்டதும், “என்னடா திருப்பதியா?” என்றார். உடன் வந்த மற்றொரு சகா “ஏன் மொட்டைன்னாலே திருப்பதியாத்தான் இருக்கனுமா?” என, முதலாமவர் “திருப்பதிங்கற காரணமும் இல்லாம மொட்ட போட்டுக்க அவன் என்ன பயித்தியமாடா?” என்று, என்னிடம் திரும்பி, “என்னடா நா சொல்றது?” என்றதை… கேட்க நானில்லை அவ்விடம். வாஷ்பேசினுடன் கொப்பளித்துப் பேசிக்கொண்டிருந்தேன்.

லாபில் என் தனியறையில் அமர்ந்து கணினியைத் திறந்தால், அதற்குள் மனைவியின் வலைப்பூ வழியே என் படத்தை பார்த்துவிட்ட அடுத்த அலுவலக நண்பர், சாட்டில் தோன்றி, “இது என்ன புது அவதாரம், எந்தூர் மொட்டை?” என்றார். “மெட்ராஸ்தான்” என்றதும், “ஒய் திஸ் கொல வெறி” என்றார்.

உபகருத்தாய் “ஆனாலும் உனக்கு இப்படி அட்டென்ஷன் ஸீக்கிங் கூடாது” என்று கணினி வழியே கைவிட்டு மொட்டைத்தலையில் கொட்டிவிட்டு, என் பதிலை பொருட்டாமல் ஆஃப்லைனாய் அணைந்தார்.

மதியம் கிளம்பி வீட்டிற்குக் வருகையில் வழியில் எதிர்பட்ட மாணவர்கள் மொட்டையை பார்த்தும் பார்க்காததுபோல, நெஞ்சில் கைவைத்து தலைகுனிந்து வழிவிட்டார்கள் (அப்படித்தான் வித்தியாசமின்றி அனைத்து ‘புரபஸர்களுக்கும்’ அவர்கள் குட்மார்னிங் சொல்லுவார்கள்). பின்னால் சென்று கிசுகிசுத்தார்கள். அன்றுதான் பரிட்சை முடிந்து நான் ‘கிரேட்ஸ்’ வழங்கவேண்டும் என்பதால், அதற்காக தயார்படுத்திக்கொண்டுள்ளேன் என்று நினைத்திருக்கக்கூடும்.

பள்ளியிலிருந்து உற்சாகமாய்த் திரும்பிய மகள் பார்த்துவிட்டு உடனடியாக அழத்துவங்கினாள். என்னவாயிற்று என்றதும் இரண்டு பாடத்தில் சற்று மார்க் இறங்கிவிட்டதாம்.

ஏன் என்றதும், “அது கிடக்கட்டும்பா, நீ ஏன் மொட்ட அடிச்ச அதச் சொல்லு மொதல்ல” என்றாள் கேவலுடன்.

பொதுவான சமாளிப்பாக நான் “சரி சரி, மார்க்கை பத்தி கேக்கல, அழாத” என்றதும், சமாதானமாகி “‘தி மம்மி’ படத்துல வர வில்லன் மாதிரி இருக்கப்பா” என்றாள்.

கடுப்பாகி, நான் அந்த வில்லன் மாதிரி கைகளை பரப்பி பெரிதாக வாயைத் திறந்து…. கார்த்திகை முன்னிட்டு வீட்டில் செய்திருந்த ஒரு பொரி உருண்டையை ‘அப்படியே விழுங்கினேன்’.

பெரு உருண்டைக்குள் சிறு உருண்டை செல்வதைப் பார்த்து சிரிப்பு வந்திருக்கவேண்டும் அவளுக்கு. “கொஞ்ச நாள்ல, ஸிக்ஸ் செவன் மன்த்ஸ்ல  வளந்துடுமாப்பா” என்றாள்.

வாயிலிருந்து ‘பொறி பறக்க’, “இல்ல, இனிமே இப்படியேதான் மொழுக்குனு இருக்கும்” என்றதும் மீண்டும் அழத்துவங்கினாள்.

மாலை நான் வாக்கிங் கிளம்புகையில் அழுகை மறைந்து மிச்சமிருக்கும் கோபத்தில் என் பனியன் வாசகத்தில் ‘டெஸ்டினி’ என்று வரும் இடத்தை மட்டும் திருத்தி, “எவ்ரி மேன் இஸ் என் ஆர்கிடெக்ட் ஆஃப் இஸ் ஹெட் (தலை)” என்றாள்.

வெளியே இறங்கும் முன் ஏதோ வேலையாய் வீட்டிற்கு வந்த அலுவல்-சகாவின் கணவர் என்னைக் கண்டு அலறினார்.

“என்ன ஆச்சு, ஏன் இப்படி? எனி ப்ராப்ளம்? இதுனாலதான் வெளில வரதேயில்லையா? எப்படி வெளில போவீங்க இப்ப? எங்கிட்ட இருக்கற தொப்பி வச்சிக்கிறிங்களா?”

படபடப்பை கேள்விகளாக்கினார்.

“அய, அது போர்து உடு மா,” அவரை ஒருவழியாய் சிரித்து சமாதானப்படுத்தி அனுப்பிச் சகியுடன் தெருவிறங்கினேன்.

வீட்டு வாசலில் மகள் அவள் தோழிகளுடன் விளையாடத் துவங்கியிருந்தாள்.

அவளை சட்டையைப்பிடித்து பக்கவாட்டில் இழுத்து, “வாட் ஹாப்பண்ட் டு யுஅர் ஃபாதர் யா?” என்றாள் தோழி அவசரமாய்.

“டேண்ட்ரஃப்” மகள் வெடுக்கினாள்.

உடனிருந்த குட்டிப் பையன் “ஹோயா, மொட்ட மொட்ட மொழுக்கு சார்…” என்று இரைந்தான்.

வந்த கோபத்தில், இருப்பது நார்வே இல்லையே, இந்தியாதானே என்பதை மனைவியிடம் உறுதிசெய்துகொண்டு, அவனை அப்படியே கையை பின்புறம் சேர்த்து பிடித்து நிறுத்தி,

“டேய், என்னடா சொன்ன?”

“மொட்ட மொட்ட மொழுக்கு சார்”

“அதயே சொல்ற, அடுத்த லைன் என்னடா?”

விழித்தான்.

“அடுத்த லைன் தெரியாம இத சொல்லக்கூடாது இனிமே, என்ன, சரியா?”

“உனக்கு தெரியுமா?”

“ஜம்புடி மொட்ட டேக்குமார்…”

பையன் எதிர்பார்க்கவில்லை இதை.

“உங்கப்பா இப்பத்தானடா திருப்பதி போய்ட்டு வந்திருக்கார். மிச்சத்த உங்கப்பா கிட்ட கேட்டுக்கோ போ”

அவனை உதறிவிட்டு, நடக்கையில் முதல் முறையாய் காற்று மொட்டையை முழுவதும் போர்த்தியதும், சிலிர்த்தது. அதிர்ந்தது. ஆதி அந்தம் குளிர்ந்தது. உள்வரை அதிர்ந்தது. மேனியெங்கும் மீண்டும் சிலிர்த்தது.

சரி, சரி, இந்த ரூட்ல போனா இலக்கியமோன்னு சந்தேகமாயிரும். நிப்பாட்டு. நடைய மாத்து.

மொட்டைத்தலை கிட்டத்தட்ட உருண்டை (விதிவிலக்குகள் உண்டு: எனக்கு சற்று இரட்ட மண்டை). அதனால் வீசும் காற்று அதன் மேல் கவிழ்ந்து, முழுப் பரப்பின் மீதும் படர்ந்து செல்கையில் வெப்பச்சலனம் (கன்வெக்க்ஷன்) அதிகரிக்கும். உடம்பின் சூட்டை மண்டை முழுவதிலிருந்தும் நேரடியாக வெளியேற்ற முடியும். முடியுடன் இருக்கும் மண்டையில் இவ்வாறு நிகழாது. முடி அடர்த்தியாய் இருந்தால், முடிக்கற்றைகளின் இடைவெளிகளில் காற்று சலனமற்று அமர்ந்துகொண்டுவிடும். முடி, மற்றும் காற்று இரண்டுமே நல்ல வெப்பக்கடத்திகள் இல்லை. அதனால், உடல் வெப்பம் அவ்வளவு எளிதாக வெளியேறாது. பனிக்கரடி ஏன் அவ்வளவு முடியுடன் இருக்கிறது என்று இதே ரீதியில் யோசித்தால் விளங்கும். இந்த வெப்பசலனத்தின் வீரியத்தை நிர்ணயிக்க “நஸ்ஸல்ட் எண்” என்று ஒன்றை கணக்கிடுவார்கள்.

சரி, சரி, இது இலக்கியத்துக்கு நேர் ஆப்போஸிட் ரூட். அறிவியல் பேசினா, என் நகைச்சுவை நுண்னுணர்வு கெட்டுப்போய்டும்.

வாக்கிங்கைத் தொடருவோம்.

தெருவில் இன்னொரு நண்பி மொட்டையைப் பார்த்து, களுக்கென்று, “என்ன சாரே என்னாச்சு, ஒரேடியா படிச்சுட்டிங்களா”

சுதாரித்து, “அட எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க, ஒரு வாரமா ஐன்ஸ்ட்டைனின் ‘தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி’ பொஸ்தகத்தை படிச்சுட்டிருந்தேனா, நேத்திக்கு ராத்திரிதான் செத்த புரியறாமாதிரி இருந்தது. சந்தோஷத்துல மூடி தலைக்கு கீழே வெச்சிட்டு தூங்கிட்டேன். காலம்பர எழுந்து பாத்தா, இப்படி ஆயிடுச்சு.”

அவள் விடவில்லை. “அப்படிப் பாத்தாலும் முடி நட்டுகிட்டுனா நிக்கும், உனக்கு காணாம போய்டுத்து”

“படிச்சது ரிலேட்டிவிட்டி இல்லயா, அதான் ராத்திரி முடி வளர்ர திசை எதுத்த பக்கமா மாறிடிச்சி, அதான் இப்படி மொட்டையா… இதத்தான் இங்லீஷ்ல கூட ’இன்னர் க்ரோத்’ அப்படீம்பாங்க…”

சற்று தூரம் சென்று திருப்பத்தில் மனைவியின் நண்பிகள் இரண்டு பேர் அவர்கள் குழந்தைகளை தெருவில் விளையாடவிட்டு வீட்டு வாசலில் உட்கார்ந்து சம்சயித்துக்கொண்டிருந்தனர். நாங்கள் எதிர்பட்டதும், குழந்தைகள் விளையாடுவதை நிறுத்திவிட்டு மவுனமானார்கள். ஒரு குழந்தை அம்மாவின் காதை கடித்தது. வேறு வழியில்லாமல் அவர்கள் அருகில் சென்று கலந்துகொண்டு, “என்ன ரொம்ப பயந்துட்டாளா, என்ன சொல்றா குழந்தை” என்றாள் மனைவி.

“இல்ல, பயப்படல, ஆண்ட்டி ஏன் யாரோ ஒரு அங்கிளோட வாக் போறான்னு கேக்கறா”

“மழை தூறல் போடறது, நாங்க கிளம்பறோம்…” என்று அகன்றோம்.

“மழை தலைல பட்டால் ஜில்லுன்னு இருக்கும்ல” என்றாள் மனைவி வாக்கிக்கொண்டே.

“இல்ல எரியறது”

“பொய்சொல்லாத”

”இல்ல நெஜமாத்தான். ஆனாலும் ஜில்லுன்னுதான் இருந்திருக்கனும், நீ சொன்னா தப்பா இருக்குமா, ஒருவேள, ஆசிட் ரெய்ன்னா இருக்கும்…”

சுழித்தாள். இடித்தாள்.

மழையில் பேச்சு நடையைவிட வேகமாய் எங்கெங்கோ சென்றது. எல்லாம் ‘மொட்டைப் பேச்சு’.

“நீ இப்டி மொட்ட போட்டதுக்கு திருப்பதில போய் செஞ்சுருக்கலாம்”

“ஏன், அப்புறம் வேண்டுதல்ன்னு எகத்தாளம் செய்யவா”

“சே, அதில்ல. திருப்பதில வெட்ற முடியெல்லாம் சேமிச்சு விக் பன்னுவாங்க. உலகத்துல பல கான்சர் பேஷண்ட்ஸ் இருக்கா. கீமோதெரபிக்கப்பறம் விக்-தான். அமெரிக்கா பூரா இப்படி திருப்பதிலேர்ந்து போற விக்தானாம். உன் முடியும் யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும்.”

“அட இது சூப்பர். எங்க படிச்ச?”

“எப்பயோ, எங்கம்மா கீமோல இருந்தப்ப தெரிஞ்சுண்டேன்”

“ம். இப்ப என்ன, அடுத்த தடவ செஞ்சுட்டா போச்சு.”

“ஆதி சங்கரர் கூட மொட்டையாத்தானே இருந்திருக்கார் இல்ல… புத்த பிக்ஷுகள் மொட்டை போட்டுகறதுக்கு சுலபமா நேரடியா ஞானத்த உள்வாங்கற வகையில காரணம் இருக்குமா?”

“கிண்டலா, அப்படிப் பார்த்தா, புத்தர் மொட்ட போட்டா மாதிரி தெரியலய. பாக்கற படங்கள், விக்ரகங்களிலெல்லாம், தலைக்குமேல ஜடையோடதான இருக்கார். ஞானத்தேடலுக்கும் மொட்டைக்கும் சம்பந்தம் இல்லை. இப்படி எதையாவது இணையத்துல கேக்றமாதிரி பேசாத. ஒரு ஞாமரபு சைன்யமே மொட்டையாத் திரியும். டுவிட்டர், ஃபேஸ்புக்-குனு அல்லாத்திலும் ஒரே நாள் ராவுல அநேக தமிழ் அவ்தார்-ஸ் ஒரேபாக்கா மொட்டையாத் தெரியும்.”

“அந்தக் காலத்துல விதவைகள கூடத்தான் மொட்டை போடவெச்சிருக்கோம். நம்ம கொள்ளுபாட்டில்லாம் அப்படித்தானே இருந்தா.”

“அது நிச்சயம் விகாரப் படுத்தத்தான். கைம்பெண்ணாவே சாவனும்ண்டு. அவங்கள வேற யாரும் விரும்பக்கூடாதுன்னு ஒரு ஏற்பாடு. பெண்களுக்கு கூந்தல் ஒரு அழகம்சம்.”

“ஆம்பளகளுக்கும்தான்… கலிகாலத்துல ஆண்களும் தங்கள் முடிய பத்தித்தான் நிறைய கவலைப்படுவாங்கன்னு வேத வியாஸர் பாகவதத்துல யேஷ்யம் சொல்லியிருக்காராமே.”

“சொல்லியிருக்கலாம். ஆனா இன்னைக்கு அப்படி நிறைய ஆம்பிளைகள்தான் நினச்சுக்கராங்க. பெண்களுக்கு ஆண்கள் மொட்டையா இருந்தா அவ்ளோ கவலையில்ல. இல்லாட்டி புருஸ் வில்லீஸ்-லேர்ந்து, ஜேஸன் ஸ்டத்தாம்-லேர்ந்து, நம்ம ரஜினி, சத்யராஜ் வரை ஹீரோவா நிலச்சு இருக்கமுடியுமா. மார்லன் ப்ராண்டோ, டேனி டி விட்டோ-ன்னு லிஸ்டே கொடுக்கலாம். ஆண்களுக்குத்தான் பெண்கள் மொட்டையா இருந்தா பிடிக்கறதில்லை. ஒரு மொட்டையான ஹீரோயின் சொல்லு பார்ப்போம். எனக்குத் தெரிஞ்சு ஸினெட் ஓ கானர் மட்டும் தான் மொட்ட அடிச்சா. பாக்க சகிக்கல்னு நானே நினெச்சேன். இவ்ளொ ஏன், இந்த ஒரு நாள்ல பாரு, என்னோட மொட்டய பாத்து ரியாக்ட் பன்ன எல்லா ஆண்களும் துக்கம் விவாரிக்கறாங்க. பெண்கள் அல்மோஸ்ட் எல்லாரும் ஜஸ்ட் லைக் தட்-டா எடுத்துண்டு தலைய தடவிட்டு போராங்க… நீ கூட…”

“அய போருமே பிரதாபம்… சீக்கிரம் நடடா, பாப்பாவுக்கு பசிக்கும்.”

இரவு சாப்பிடுகையில் கோபம் செரித்துவிட, மகள் ‘அப்பா இஸ் கேப்பபிள் ஆஃப் ஸ்கேரீ டெஸிஷன்ஸ்’ என்றாள். அம்மாவிடம் படுத்துக்கொண்டாள்.

ஆனாலும், ஓரிரு நாளில் மொட்டையைப் பார்த்து பழகிவிட்டது மகளுக்கு. இரவு தனியாகவே எழுந்து சென்று கிச்சனில் நீரருந்தித் திரும்புகிறாள். இன்று மேலும் சகஜமாகி, ‘தொடட்டுமா, எரியுமா’ என்று கேட்டு சம்மதித்ததும் லஜ்ஜையாக விரலால் தொட்டு அழுத்தி, தலையில் புதிதாகத் ஆங்காங்கே தெரியும் சிவப்புத் தடங்களைப் பார்த்து என்னப்பா என்றாள். அதான் தலையெழுத்து என்றேன்.