அன்னை பூமியின் எண்ணை வளம் தீரப்போகிறது. இதை பீக்-ஆயில் க்ரைசிஸ், “எண்ணை உச்சவரம்பின் ஆபத்து” என்கிறார்கள். தொழிற்புரட்சியின் தாலாட்டில் மயங்கி அரைஞாணை அகற்றி டிஜிட்டல் வாட்ச் கட்டிக்கொண்ட மனித சமுதாயம் உபயோகிக்கும் அநேக பொருட்களும் அடிபடப்போகிறது. பெட்ரோல், டீசல், இவற்றை எரிபொருளாய் உபயோகிக்கும் கார், பஸ், விமானம், கப்பல் போன்ற வாகனங்களிலிருந்து, அங்காடித்தெருவில் மின்வெட்டிலும் கடைகள் ஒளிர வெளியே, சூழலில் கரும்புகை கக்கும் டீசல் ஜென்-ஸெட், எண்ணை மற்றும் இயற்கை வாயுவை எரிபொருளாக்கி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்கள், கச்சா எண்ணையின் உதிரி ரசாயன உபயோகங்களான பிளாஸ்டிக் பொருட்களில் தொடங்கி, வீடு கட்டும், ரோடு போடும் ஆஸ்ஃபால்ட், தார், மெழுகு என்ற பட்டியல் இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிட ஏதும் நெயில் பாலிஷ் மற்றும் வாய்மை வரை நீள்கிறது. வாய்மை என்றால் லிப்ஸ்டிக் என்பதும் ஒரு அறிதல்.
எப்படி அறிகிறோம் என்பது கட்டுரையின் முதல் பகுதியில். நுண்கணிதம் (கால்குலஸ்) தவிர்த்து ஆனால் அறிவியலின் தீவிரத்தை குறைக்காத (ஆறாவதில் கற்ற) அல்ஜீப்ரா கணித மாதிரியைக் கொண்டு விளக்கிக் கொள்வோம். அடுத்து இதனால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள, ஏற்படப் போகும் இடர்களை ஓரளவு அலசுவோம். முற்பகுதி அறிவியல், பிற்பகுதி அவ்வறிவியலை மறைக்கும் அரசியல் செயல்பாடுகள்.
அப்ப வருங்காலம்? சுருக்கமாக, நோ பெட்ரோல். ஆனால் மாட்டுவண்டி திரும்பாது. அனிமல் ரைட்ஸ் பேச அநேகர் இருக்கின்றனர். கைவண்டியோ, குதிரைவண்டியோ மிஞ்சலாம். மேற்படி அனிமல் ரைட்ஸ் பேசும் முதல் உலக மாந்தர்கள் இவ்விரண்டையும் தொடர்ந்து ஆதரிப்பதால். நம்மவருக்கு கட்டுரையின் கடைசி வரியில் வழி சொல்லியிருக்கிறேன்.
*****
மனிதகுலமாய் பூமியில் ஜீவித்திருக்க உபயோகமாகும் ஆற்றலில் 99 சதவிகிதம் சூரியனிலிருந்து பெருகிறோம். பூமியின் தட்பவெப்பம், கடல் நீர், காற்று, தாவரஜங்கமங்கள், என மனிதகுலம் தழைக்கத் தேவையான அனைத்துமே சூரியனால் உயிரூட்டப்படுபவை. மிச்சம் ஒரு சதவிகிதமே, காசு கட்டி மின்வாரியத்திலிருந்து பெறுவது போன்ற, வர்த்தக ஆற்றல் (இதில், “கடத்தல் இழப்பு” எனும் சிலேடைக்கேற்ப டிரான்ஸ்பார்மர்களிலிருந்து காசு கட்டாத நேரடி வழிப்பறி உறிஞ்சல்களும் அடக்கம்).
இவ்வகை “வர்த்தக ஆற்றலில்”, 82 சதவிகிதம், நான்-ரென்யூஅபிள் எனப்படும், மறுவுருவாக்கம் செய்யமுடியாத வகையினது. எண்ணை 32%, நிலக்கரி 21 %, இயற்கை வாயு 23 %, அணுக்கரு ஆற்றல் 6% இவற்றின் கூட்டு. செலவாகும் ஆற்றலில் மிச்சம் 18%, மறுவுருவாக்கம் செய்யமுடிந்தவை (பயோமாஸ் 11%, மீதி 7% சூரியஒளி, காற்று, நிலத்தடி வெப்ப ஆற்றல் இவற்றின் கூட்டு).
ஆற்றலை ஆரஞ்சு பழச்சாறு என்றால், சாறை நம் உபயோகத்திற்கு பிழிந்ததும், ஆரஞ்சு சக்கையை கடாசிவிடுகிறோம். மீண்டும் ஆற்றல் ஈட்டும் சாறுள்ள ஆரஞ்சாக, சக்கையை உடனே மாற்றிவிட முடியாது. சக்கையோடு மண்ணில் புதைந்த விதையை இயற்கை மனது வைத்து மீண்டும் மரமாக்கி ஆரஞ்சு பழமாக்கி, ஆற்றலை ஜூஸ் பிழிய வைப்பதற்குள் நாம் மண்ணொடு மண்ணாகி விடுவோம். இவ்வகை ஆற்றலையே, ‘மறுவுருவாக்கம் செய்யமுடியாத’ என்கிறோம். நிலக்கரி, எண்ணை, போன்ற நம் அநேக ஆற்றல் ஈட்டும் கச்சா பொருட்களும் சட்டென புதுப்பிக்க முடியாது. அலகிலா இயற்கையின் காருண்யத்தில் விருத்தியானவை.
மாறாக, சூரிய ஒளி என்பது, சூரியனுள் செயல்படும் நியூக்ளியர் ஃபியூஷன் எனப்படும் அணுக்கருத்துகள்-இணைவில் உண்டாகும் ஆற்றல் வெப்ப-ஆற்றலாய் சூரியனின் பரப்பிலிருந்து வெளிப்பட்டு, வளியில் எட்டு நிமிடங்கள் பயணம் செய்து, பூமியில் நம்மை வெய்யிலாய் வியர்க்க வைக்கிறது, வாழ வைக்கிறது. இன்று தாவரங்கள் பச்சையம் கொண்டு இவ்வாற்றலை உபயோகித்து வளர்வதால், மறுநாள் சூரிய ஒளி சற்று மங்கலாவதில்லை. தினம் தகிக்கும். அதாவது மறுவுருவாக்கம் செய்ய முடிந்த ஆற்றல். சூரியனும் ஃபியூஷன் ஆற்றல் தீர்ந்து, விரிந்து, ‘டம்மால்’ என்று வெடித்து ஒரு காலத்தில் Red Giant எனப்படும் நட்சத்திர வயோதிகத்தில், சிவப்பு அரக்கனாய் அழிந்துவிடும். ஆனால் இதற்கு பல மில்லியன் பூமி-வருடங்களாகும் என்று கணிக்கிறார்கள். அதற்குள் மனித சமுதாயமே பரலோக ப்ராப்திரஸ்துவாகிவிடலாம். இந்த கால பேதத்தால் சூரிய ஒளி வகை ஆற்றலை முடிவுறா, மறுவுருவாக்கமுடிந்த ஆற்றல் என்கிறோம்.
எண்ணை வளத்திற்கு வருவோம். மனித குலம் பூமியில் தோன்றிச் செழிக்கும் சுமார் என்னூறு மில்லியன் ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், எண்ணை ஆற்றலை (பெட்ரோல், டீசல், சார்ந்த இயற்கை வாயு அனைத்தும் அடங்கும்) மிகச் சமீபத்தில்தான் 1859இல் கண்டெடுத்துள்ளோம். அமெரிக்காவில் 1859இல் எட்வின் டிரேக் தோண்டிய முதல் எண்ணைக்கிணற்றில் தொடங்கி, சொற்ப காலத்தில், கடந்த 150 வருடங்களாக உலகை பல இடங்களில் பொத்தலிட்டு சிமெண்டு ஸ்ட்ரா இட்டு உறிஞ்சி உருமாற்றி ஜீரணித்துவிட்டோம். வருங்காலத்தில் உலகளாவிய ஏப்ப சப்தம் மட்டுமே மிஞ்சும்.
உறிஞ்சிய மயக்கத்தில் நாமிருக்கையில், ஷெல் ஆயில் கம்பெனியின் ஆராய்ச்சியாளரான மாரியன் கிங் ஹப்பர்ட் 1969இல் ஆராய்ச்சி கட்டுரை எழுதினார். இதில் அமெரிக்காவின் எண்ணை உற்பத்தி 1970இல் உச்சத்தை தொடும், அதன் பிறகு வீழ்ச்சிதான் என்று சரியாக கணித்தார்; உற்பத்தியின் போக்கை அனுமானிக்கும் ஹப்பர்ட் விதி என்பதை நிறுவினார். இதைக்கொண்டு மீண்டும் 1982இல் எழுதிய ஆராய்ச்சி கட்டுரையில், உலகின் எண்ணை உற்பத்தி 2005இல் உச்சத்தை தொடும் என்று கணித்தார். அதன்படி நடந்துவிட்டதா?
முதலில் ஹப்பர்ட் விதி.
*****
ஹப்பர்ட் விதியின் கணிதத்தை எளிமையான அல்ஜீப்ரா சமன்பாடு கொண்டே விளக்கலாம். கணிதம் என்றதும் பயந்துவிடாதீர்கள்; இக்கட்டுரை போன்ற தமிழ் உரைநடையை சரளமாக வாசிக்கக் கற்றுக்கொண்ட ஆறாம் ஏழாம் வகுப்பில் உடன் கணிதபாடத்தில் கற்றுக்கொண்ட அல்ஜீப்ரா போதும்.
அமெரிக்க எண்ணை உற்பத்தி தகவலை உபயோகிப்போம் (இணையத்தில் தகவல் இருக்கிறது; நீங்களும் வரைந்து சரி பார்த்துக்கொள்ளலாம்). 1859இல் தொடங்கி, 2006 வரை ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் எவ்வளவு எண்ணை உற்பத்தியாயிற்று என்பதை அருகிலுள்ள முதல் படத்தில் கொடுத்துள்ளோம். இதில் வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருந்தால், அதைச் சேர்க்கவில்லை. Y அச்சில், P என்பது கிகா-பாரல்களில் உற்பத்தியை குறிக்கிறது. விளக்கத்திற்கு: ஒரு பாரல் = 169 லிட்டர்கள்; கிகா = ஒன்றிற்கு பிறகு ஒன்பது சைபர்கள்; 1 கிகா-பாரல் = 16900000000 லிட்டர் எண்ணை.
படத்தில் தகவலை பார்த்தவுடனே புரிந்துவிடும், 1970இல் தான் அமெரிக்கா எண்ணை உற்பத்தி உச்சத்தை அடைந்துள்ளது. பிறகு வீழ்ச்சிதான். அதாவது, 1970இற்கு பிறகு முன்வருடம் உற்பத்தி செய்ததை விட குறைவாகவே உற்பத்தி செய்ய முடியும் ஏனெனில், அமெரிக்க நிலத்தடியில் எண்ணை தீர்ந்து வருகிறது. இதைத்தான் ஹப்பர்ட் 1969இலேயே தன் கணித-மாதிரி வைத்தே கணித்தார்.
அடுத்த படத்தை கவனியுங்கள். இங்கு X அச்சில் Q என்பது முன் படத்தில் P என்று குறித்திருந்ததின் திரள்-தொகை (cumulative). அதாவது, ஒவ்வொரு வருடமும் Q என்பது, அவ்வருடம் வரையிலான P யின் கூட்டுத்தொகை. ஒரு வருடத்தில் எண்ணை உற்பத்தி 10 பாரல்கள் (P), அடுத்த வருடத்தில் 20 பாரல்கள் என்றால், Q என்பது முதல் வருடத்தில் 10 பாரல்கள், அடுத்த வருடத்தில் 30 பாரல்கள்.
இந்த படத்தில் X-அச்சில் 1859இல் தொடங்கி அடுத்த ஒவ்வொரு வருடத்திற்கான இந்த Q குறிக்கப்பட்டுள்ளது. Y-அச்சில் அந்த வருடத்திற்கான உற்பத்தியை அந்த வருடம் வரையிலான மொத்த உற்பத்தியின் விகிதமாய், அதாவது P/Q என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி 1859 என்பதுதான் முதல் எண்ணை உற்பத்தி வருடம், அதனால், X-அச்சில் முதல் புள்ளி 0; நிகராக Y-அச்சில், முதல் வருடம் என்பதால் P மற்றும் Q இரண்டும் சம மதிப்பு என்பதால் P/Q = 1 என்று வரும். இதனை படத்தில் குறிப்பிடவில்லை. இதற்கு அடுத்த வருடங்களில் உற்பத்தி தொடங்கிவிட்டதால், நிச்சயம் Q-வின் மதிப்பு ஒவ்வொரு வருடமும் (கூட்டுத்தொகை என்பதால்) P-யை விட அதிகமாக இருக்கும். என்றாலும், சமீபகாலமாகவே எண்ணை உற்பத்தியாகிறது (இன்னும் சூடு பிடிக்கவில்லை) என்பதால், P-யும் Q-வும் அருகருகேயே இருக்கும். இதனால்தான் படத்தில் இடதுமேல் ஓரத்தில் தகவல்புள்ளிகள் குழுமியிருக்கின்றன (ஆனால் ஒரு வருடத்திற்கு ஒரு புள்ளிதான்).
இப்படி தொடங்கி, சுமார் 1958 வருடத்திற்கு பிறகு தகவற்புள்ளிகள் சீராகி, ஒரு நேர்கோட்டில் விழுவதை காணுங்கள். தகவல் 2006வரையிலேயே கொடுத்துள்ளேன். சிவப்பு நிற நேர்கோடு இத்தகவல் புள்ளிகளை இணைக்கிறது. இப்படி தகவல் புள்ளிகளை ஒரு கணித கட்டுப்பாட்டினைக்கொண்டு பொருத்துவதை கர்வ்-ஃபிட், வளைகோட்டு-பொருத்தம் என்பார்கள். இங்கு வளைகோடு, சாய்ந்த நேர்கோடு. அதாவது ஒவ்வொரு வருடத்திற்கான எண்ணை உற்பத்தி / மொத்த உற்பத்தி விகிதம் ஒரு நேர்கோட்டினால் கணிக்கக்கூடியதே என்கிறோம்.
என்னடா கண்ணைசுழட்டும் கணக்கா இருக்குமோ என்று ஜகா வாங்கிவிடாதீர்கள், சுவாரசியமே இனிமேல்தான். இப்படி ஒரு கணித கட்டுப்பாட்டைவைத்து பொருத்துவதால், எதிர்காலத்தை பற்றி ஆரூடம் சொல்ல ஏதுவாகிறது.
நேர்கோட்டை சாய்மானம் மாறாமல் வலப்புறமாக நீட்டினால், எதிர்காலத்தில் ஒவ்வொரு வருடத்திற்கான உற்பத்தியை அனுமானிக்கமுடியும். ஏற்கனவே படத்தில் பலவருடத்திற்கான நிஜ உற்பத்தியின் தகவல்புள்ளிகளை பொருத்தியிருப்பதால், இந்த சாய்-நேர்கோடு கணிக்கும் எதிர்காலம் சரியாகவே இருக்கும் என்றும் யூகிக்கலாம். இது கணித-அறிவியல் அடிப்படை.
எதிர்கால எண்ணை உற்பத்தியை கணிக்க ஏதுசெய்யும் இந்த சாய்கோடுதான் ஹப்பர்ட் விதி.
அவர் நுண்கணிதம் வைத்து இதை விளக்கினார். நாம் அதன் எளிய சகோதரி அல்ஜீப்ரா கொண்டு விளக்கியுள்ளோம்.
இவ்வகை விளக்கத்தை ஹப்பர்ட் கிங்-குடன் ஷெல்-ஆயில் கம்பெனியில் பணியாற்றிய அவரது இளைய-சகா கென்னத் டெஃபெயெஸ் (இன்று கால்-டெக் பல்கலைகழகத்தில் பேராசிரியர்) தன் “பியாண்ட் ஆயில்” (2008) புத்தகத்தில் அளித்துள்ளார். நான் இங்கு எண்ணை உற்பத்தியின் நிஜ தகவல்களையும் உபயோகித்து நமக்காக வேண்டிய இடத்தில் தட்டி கொட்டி அளித்துள்ளேன்.
இப்போது சாய்கோட்டை வலப்புறமாய் X-அச்சை தொடும்வரை நீட்டுவோம். கோடு எங்கு X-அச்சை தொடுகிறதோ அதற்கான வருடத்தில், Y-அச்சு மதிப்பு பூஜ்ஜியம். அதாவது P/Q = 0 என்பதால் உற்பத்தி P-யே பூஜ்ஜியம் ஆகிறது. இவ்வாறு P = 0 நிகழ்கையில் அதற்கான X-அச்சின் மதிப்பே அதுவரை மொத்தமாக நிலத்தடியிலிருந்து எடுக்கமுடிந்த எண்ணை. அவ்வாறு நிகழும் அவ்வருடமே உற்பத்தியின் இறுதி வருடம். அப்பால நிலத்தடி ஆப்பை காலி.
படத்திலுள்ளபடி, வருங்காலத்தில் உற்பத்தி P=0 என்றாகுகையில், அதுவரை மொத்தமாக Q_X = 228.4 கிகா பாரல்கள் உற்பத்திசெய்திருக்கும். அவ்வளவுதான் அமெரிக்க நிலத்தடியில் எண்ணை. இந்த வருங்காலம் தொலைவில் இல்லை. 2011 வரை கிட்டத்தட்ட Q = 200 கிகா பாரல்கள் அமெரிக்க நிலத்தடியில் இருந்து உற்பத்தி செய்தாகிவிட்டது. மிச்சம் சுமார் 30 கிகா பாரல்களை இன்னும் எத்தனை வருடத்திற்கு தோண்டி எடுப்பது.
ஆனால் அமெரிக்க நிலவியல் சர்வே 2000 வருடத்தின் ரிப்போர்ட்படி உச்சவரம்பு Q_X = 228.4 கிகா பாரல்கள் இல்லையாக்கும், Q_X = 362 கிகா பாரல்கள் என்கிறது. இது உண்மையாகவேண்டுமெனில், இதுவரை ஒரு சாய்மானத்தில் இறங்கிக்கொண்டிருந்த ஹப்பர்ட் விதி கோடு, இனி சட்டென நிமிர்ந்து வேறு சாய்மானத்தில், சற்று மெதுவாக, இறங்கவேண்டும். இராக்கை அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாக அறிவித்தால் நடக்கலாம் என்று பகிரங்கமாக “போட்டு தாக்குகிறார்” கென்னத் டெஃபெயெஸ்.
(எனக்குப் பிடித்த அமெரிக்காவின் மிகச் சில விஷயங்களில் ஒன்று இந்த கருத்துச் சுதந்திரம். ஆனால், அவர்கள் அமெரிக்கர் சொன்னால்தான் பொறுப்பர், கேட்பர். பல விஷயங்களில் நேரில் அனுபவித்துள்ளேன்.(இந்தியாவிலும் அமெரிக்கர் சொன்னால்தான் கேட்போம் என்பது நம் ப்ராரப்தம்)
எந்த வருடத்தில் அமெரிக்க எண்ணை தீரும் என்பதை அனுமானிக்கமுடியுமா? முடியும். 2075இல் என்கிறது ஹப்பர்ட் விதி.
******
எப்படி? விளக்குகிறேன். சுலபமான கணிதம்தான். வரும் பத்தியில் விவரித்திருக்கும் அல்ஜீப்ரா புரியவில்லையெனில் பாதகமில்லை; அடுத்த பத்தியிலிருந்து தொடருங்கள். உங்கள் கட்டுரையின் உள்ளடக்கப் புரிதலுக்கு பங்கம்வராது.
மேல்படத்தின் சாய்கோட்டிற்கான சமன்பாடு பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்தது. Y = mX + C என்பார்கள். அதாவது (C=0 என்கையில்) Y என்கிற விஷயம் X என்கிற விஷயம் வளர்வதன் ”சாய்மானம் m” விகிதத்தில் வளரும் என்கிறோம். இங்கு படத்தில் P எனும் வருடத்திற்கான எண்ணை உற்பத்தி, அதுவரையிலான மொத்த உற்பத்தி Q-வின் ஒரு விகிதத்தில் வளர்கிறது என்கிறோம். மேல்படத்தில் (P / Q) = c – (c / Q_X)Q என்று இந்த சமன்பாட்டைக் கொடுத்துள்ளேன். இதை P = c(1 – Q/Q_T)Q என்று மாற்றி எழுதமுடியும். இந்த சமன்பாட்டை அப்படியே தலைகீழாய் கவிழ்த்தால், P என்பது 1/P என்றாகிவிடும். அதாவது ஒவ்வொருவருடத்திற்கான கிகாபாரல் எண்ணை உற்பத்திச்செலவு என்பதிலிருந்து, குறிப்பிட்ட அளவு எண்ணை உற்பத்தி/செலவாவதற்கான வருடம் எவ்வளவு என்பதைக் குறிக்கும். நமக்கு அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவில் 1972 ஆம் வருடம் அதுவரை உற்பத்திசெய்த எண்ணை Q = 100 கிகாபாரல்கள் என்பது தெரியும் (2002 இல் அமெரிக்காவிற்கு Q = 169 கிகாபாரல்கள்). 1972இற்கு Q = 100 கிகா.பா., மேலும் Q_X = 228.4 கிகா.பா. என்றும் c = 0.0536 என்றும் தெரியும் (படத்தில் கொடுத்துள்ளேன்). இத்தகவல்களை மேலுள்ள சமன்பாட்டில் பொருத்தினால், P என்பதன் மதிப்பு 1972ஆம் வருடத்திற்கு எவ்வளவு என்றும் தெரியும். இதிலிருந்து 1/P என்பதை கணக்கிடலாம். 1972 வருடத்திற்கான P மற்றும் 1/P தெரிந்துவிட்டதால், இதே P அளவு உற்பத்திசெய்ய இதே 1/P அலவு வருடம் நிகழ்காலத்திற்கோ வருங்காலத்திற்கோ செல்ல வேண்டும் என்பதும் தெளிவாகிறது. இப்படியே தொடர்ந்து பல முன் பின் வருடங்களுக்கு தத்தித் தத்தினால், நிகழ்காலத்தில் 1865 அருகே எண்ணை உற்பத்தி தொடங்கிய வருடத்தை அடைவோம். எதிர்காலத்திலோ, எண்ணை உற்பத்தி எந்த வருடத்தில் Q_X = 228.4 கிகாபாரல்களை தொடும் என்பதை அடைவோம். ஏற்கனவே விவரித்தபடி, இதன் பின் எண்ணை உற்பத்தி இல்லை. இதனை கணக்கிட்டே 2075இல் அமெரிக்காவில் நிலத்தடியில் சுத்தமாக எண்ணை தீர்ந்துவிடும் என்கிறது ஹப்பர்ட் விதி.
********
அடுத்த படத்தில் மேலே விவரித்த கணிப்பை அளிக்கிறோம். சிவப்பு புள்ளிகள் ஹப்பர்ட் விதி அனுமானிப்பது. நீலப் புள்ளிகள் நிஜ உற்பத்தி தகவல். அநேகமாய் நிஜமும் அனுமானமும் ஒன்றுபடுகிறது. இப்போது 2012இல் இருக்கிறோம். இன்றிருக்கும் உற்பத்தித் திறனுடன் செயல்பட்டால் (அதாவது வருடா வருடம் அதே P அளவு உற்பத்தி என்று வைத்துக்கொண்டால்), சிவப்புப்புள்ளிகளின் அனுமானப்படி, என்னத்தான் முக்கினாலும் 2075இற்கு பிறகு அமெரிக்க நிலத்தடியில் எண்ணை தீர்ந்துவிடும்.
இதுவரை தொடர்ந்திருத்தீர்களென்றால் உங்களுக்கு முக்கியமான ஒரு கேள்வி எழலாம். சரி இதெல்லாம் இன்றிருக்கும் எண்ணைக்கிறறுகளை வைத்துத்தானே அனுமானித்தாய். ஒருவேளை புதிய இடங்களில் எண்ணை இருப்பதாய் கண்டுகொண்டால்?
புதிய எண்ணை வளம் அமெரிக்க மண்ணிலேயே கண்டெடுத்தால், உற்பத்தி பெருகலாம்தான். ஆனால் கவனியுங்கள், மேலே படத்தில் உள்ள தகவல்படி 1970களிலேயே அமெரிக்காவில் உற்பத்தி உச்சத்தை தொட்டுவிட்டது. அதாவது 1970களிலேயே அவ்வளவு எண்ணையை உற்பத்தி செய்து வினியோகிக்க வேண்டியிருந்தது. அதன் பிறகோ, உற்பத்தி சிறுத்தது. ஆனால் உபயோகம் சிறுக்கவில்லை. மாறாக அதிகரித்துவிட்டது.
இந்த வளரும் உற்பத்தி-உபயோகத்தின் இடைவெளியை கட்டுப்படுத்தவே அமெரிக்கா வெளிநாட்டிலிருந்து எண்ணையை பலகாலமாய் இறக்குமதி செய்கிறது. அலாஸ்கா, அண்டார்டிகா என தோண்டிப் பார்க்கிறது. முடிந்தால் மத்திய-அமெரிக்க நாடுகளில் தொடர்ந்து செய்ய முயல்வதைப் போல (வெனிசூலா இதுவரை பெப்பே காட்டுகிறது) எண்ணை வளமுள்ள ஒரு நாட்டையே ஆக்கிரமித்தோ பொம்மைராஜா வைத்தோ பிடித்துக் கொள்கிறது.
இதனால், அமெரிக்க மண்ணில் புதிய எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட (சாத்தியம் மிகக்கம்மி), அதிலிருந்து உற்பத்தி இப்பொதைய உபயோகத்தை சரிகட்டும் என்பது நிச்சயமில்லை, பற்றாகுறையை சற்று மட்டுப்படுத்தலாம், ஒத்திப் போடலாம். பிரிதொரு நாள் அவர்கள் உபயோகிக்கும் வேகத்திற்கு எதிர்காலத்தில் அமெரிக்க ஆப்பை நிச்சயம் காலியாகும்.
*****
சரி, உலக எண்ணை உற்பத்திக்கு வருவோம்.
அரபு நாடுகள், ருஷ்யா, வெனிசூலா என (மிச்சப் பெயர்களை விக்கியிருக்கிறார்கள்; பார்த்துக்கொள்லலாம்) சுமார் பத்து பதினைந்து நாடுகளில்தான் எண்ணைவளம் அதிகமாய் உள்ளது. இங்கு எண்ணைவளம் என்பது, கச்சா எண்ணை மட்டுமின்றி, எண்ணைசுரந்த மண், ஷேல் ஆயில், இயற்கை வாயு என்று அனைத்தையும் உள்ளடக்கியது. இவைகளின் கூட்டு உற்பத்திக்கும் ஹப்பர்ட் விதியைக் கொண்டு மேற்சொன்ன வகையிலேயே கணிக்கலாம்.
இணையத்தில் இருக்கும் 1965 முதல் 2006 வரையிலான உலக நாடுகளின் எண்ணை உற்பத்தியின் தகவலை அலசிப்போட்டு ஹப்பர்ட் விதியைக்கொண்டு முன்னர் விவரித்த வளைகோட்டுப்பொருத்தம் செய்து அடுத்த படத்தை கொடுத்துள்ளேன். படத்தில் சிவப்புக்கோடு உலக எண்ணை உற்பத்தியின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஹப்பர்ட் விதியின் அனுமானம்.
முன்பு செய்ததுபோலவே சாய்கோட்டை எதிர்காலத்திற்கு நீட்டினால், மொத்தமாய் உலகில் உற்பத்தி செய்ய முடிந்த எண்ணை வளம் 2170 கிகா பேரல்கள் என்று கணிக்க முடிகிறது (சிவப்பு கோடு X-அச்சில் வெட்டுமிடத்தில் உள்ள Q-வின் மதிப்பு இது). மேலும், முன்பு விவரித்த கணித செயல்முறையைக் கொண்டு உலக உற்பத்திக்கான உச்சம் எவ்வருடம் நிகழும் என்று நிர்ணயிக்க முடியும். இது 2006 வருடமே நிகழ்ந்துவிட்டது என்கிறார் கென்னத் டெஃபெயெஸ். அதாவது, உலக எண்ணை உற்பத்தி இனி வரும் வருடங்களில் குறைந்து விடும். ஏனெனில் நிலத்தடியில் இருக்கும் எண்ணை வளத்தை ஒவ்வொரு வருடமும் இவ்வளவு என்று உற்பத்தி செய்யும் உச்சத்தை 2006இலேயே எட்டிவிட்டோம். சுயேச்சையான சில கணினி மாதிரிகளும் 2006 என்று கணிக்கவில்லையென்றாலும், உலக எண்ணை உற்பத்தியின் உச்சம் 2010 முதல் 2020இற்குள் நிகழ்ந்துவிடும் என்கிறது. இதைத்தான் படத்திலுள்ள உள்படம் பெல்-கர்வ் எனப்படும் (சிவப்பு) மணி-வளைகோடு மூலம் குறிப்பிடுகிறது. ஹப்பர்ட் விதியின் கணிப்பில் மணியின் உச்சம் 2010இற்கு அருகே விழுகிறது.
நிலவியல் ஆய்வாளர்களின் கணிப்பில் இனி உலகில் புதிதாக வேறு இடத்தில், நாட்டில், அதீதமாக எண்ணைவளம் கண்டுபிடிப்பதற்கான அறிகுறிகள் இல்லை. இதனால் புதிய எண்ணைவளக் கண்டுபிடிப்பால் இந்த உற்பத்தி உச்சத்தை சில வருடம் தள்ளிப்போடலாம் என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியாது. வேண்டுமானால் சில தகிடுதத்தங்கள் செய்து இருக்கும் எண்ணை வளத்தின் உபயோகத்தை கட்டுப்படுத்தலாம். யாருக்கு சென்று சேர வேண்டும் என்கிற விநியோகத்தை ஆளலாம். இதை அடுத்த பகுதியில் விவரித்திருக்கிறேன்.
ஆனால் முக்கியமாக புரிந்துகொள்ளவேண்டியது, மொத்தமாய் எண்ணை வளம் தீரும்வரை இதன் விளவுகளை சந்திக்க உலகம் காத்திருக்க வேண்டியதில்லை. கிட்டத்தட்ட 500000 பொருட்கள் நேரடியாகவோ சார்ந்தோ கச்சா எண்ணையால் தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்துமே தட்டுப்பாடாகலாம். உருமாறலாம். அழியலாம். உதாரணமாக அநேக பூச்சிகொல்லிகள் உரங்கள் தயாரிப்பில் ஒருவகையில் கச்சா எண்ணை தேவை. எண்ணைவளத் தட்டுப்பாடால் இவைகளின் தயாரிப்பு பாதிக்கப்பட்டால், உணவுத் தயாரிப்பே அடிவாங்கும். இதனுடன் ஒப்பிட்டால் பி.எம்.டபிள்யு. காரை ஆஸ்பால்ட் ரோட்டில் (இரண்டின் உருவாக்க உபயோகத்திலுமே கச்சா எண்ணை தேவை) ஓட்டமுடியாமற் போவது சாதா இழப்பே.
*****
இதுவரை அறிவியல் பேசினோம், இனி சற்று அரசியல்.
சவுதி அரேபியா தலைமையில் ஓப்பெக் (OPEC) எனப்படும் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் பதினோறு நாடுகளின் ஒருங்கிணைந்த குழுதான் இன்று உலகலளவில் எண்ணைவளம் உற்பத்தி விநியோகம் விலை என்று நிர்ணயித்து கட்டுப்படுத்தி வருகிறது. இக்குழு தோன்றுவதற்கு முன்பிருந்தே, டெக்ஸாஸ் ரெயில்ரோடு கமிஷன் என்கிற கார்டெல்தான் ஆண்டாண்டாக அமெரிக்காவின் எண்ணைவளத்தை நிர்மாணித்து வந்துள்ளது. நிலத்தடி எண்ணைவளத்தை கணித்து, அதில் ஓரளவையே உற்பத்தி செய்து விநியோகித்தது. இவ்வகை எண்ணை ரேஷனால், உற்பத்தி, விநியோகம் விலை, இவைகளை என்றுமே சுபிட்சம் என்கிற நிலைக்கு அருகிலேயே வைக்குமாறு அதனால் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் 1971ஆம் வருடம் இக்கமிஷன் அமெரிக்காவின் எண்ணைக் கிணறுகளுக்கு “இனி நூறு சதவிகிதம் எண்ணை உற்பத்தி செய்யலாம்” என்று பரிந்துரைத்த செய்தி வெளியானது. அதாவது 1971 வருடத்திற்கு பிறகும் அமேரிக்க நிலத்தடியில் “ரிசர்வ் எண்ணை” என்று தேக்கிவைக்க ஏதுமில்லை. அவ்வாறு செய்தால், உபயோகத்தைவிட உற்பத்தி குறைவாகி, பற்றாக்குறை வந்துவிடும். எண்ணைவளம் என்பது ஒரு உச்சத்தை தொட்டு குன்றும் என்று ஹப்பர்ட் 1969இலேயே கணித்தது அமேரிக்காவை பொறுத்தவரை துல்லியம் என்று இச்செய்தி நிரூபித்தது.
புரிகிறதா அமெரிக்கா ஏன் பல வருடம் முன்னரே (அதாவது ஹப்பர்ட் விதி நிரூபணமான 1970 களிலேயே) சவுதி அரேபியாவுடன் இணக்கமானதன் காரணம். நேற்று ஏன் இராக் யுத்தம், இன்று ஏன் இரானுக்கு மிரட்டல் என்று பல நிகழ்வுகளையும் ஹப்பர்ட் விதியின் மறைமுக அனுமானமாக்கலாம்.
அமெரிக்காவின் எண்ணைவளத்தின் நிலையை துல்லியமாக அனுமானித்ததால், “ஹப்பர்ட் விதி” உலக எண்ணை உற்பத்தி கணிப்பிற்கும் உபயோகிக்கலாம் என்று புரிந்தது. உலகின் எண்ணை உற்பத்தியின் உச்சம் தொட்டுவிட்டோமா என்றால், உலக நிகழ்வுகள் அவ்வகையில் எண்ணுமாறே அமைந்து வருகிறது. அமெரிக்காவின் எண்ணைவளம் பற்றி வெளியான செய்தி போலவே, உலக எண்ணைவளத்தைப் பற்றிய செய்தியை ஓப்பெக் குழு 2004இல் சந்தடியின்றி வெளியிட்டது. அதிகரித்துவரும் எண்ணைத் தேவையின் கணிப்பு சவுதி அரேபியாவின் சோர்வடைந்த எண்ணைக்கிணறுகளுக்கு சவால்: இதுதான் பிப்ரவரி 24, 2004 அன்று வெளியான நியூயார்க் டைம்ஸ் செய்திக்கட்டுரையின் தலைப்பு. இக்கட்டுரையில் உலகில் அதுவரை எண்ணை உற்பத்தியில் முன்னனியில் இருந்த சவுதி அரேபியாவின் எண்ணைக்கிணறுகள் காலியாகிவருவது குறிப்பிடப்பட்டது; அதாவது அவை நூறு சதவிகித உற்பத்தி அளவை தொட்டுவிட்டன.
முன்னர் டெக்ஸாஸ் ரெயில்ரோடு கமிஷன் கற்றுக்கொடுத்தபடியே, ஓப்பெக்கின் கொள்கையே, உற்பத்தியை கட்டுப்படுத்துவதை வைத்தே உலக எண்ணை விலையை நிர்ணயிப்பது. அதாவது, ஓப்பெக் குழுவில் பங்குவகிக்கும் ஒரு நாட்டில், நிலத்தடியில் நிஜ எண்ணைவளம் இவ்வளவு ட்ரில்லியன் பாரல்கள் என்று கணிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதை அப்படியே வெளியே சொல்வதில்லை. அதன் குறிப்பிட்ட ஒரு சதவிகிதத்தையே அந்நாட்டின் “நிஜ இருப்பாய்” வெளியே சொல்வது. அந்த வெளிக்காட்டிய இருப்பினை வைத்தே அன்றைய உலகசந்தையில் (ஒரு பாரலின்) எண்ணை விலை நிர்ணயமாகிறது. இதனால் உலக சந்தையில் எண்ணை விலை மிக அதிகமோ அல்லது கம்மியோ ஆகாமல், உட்டாலக்கடியாக ஈடுகட்டப்பட்ட சம மதிப்பில் நிலைத்திருக்கும். நிறைய லாபம் வழங்கியபடி.
உலகின் எண்ணை உபயோகம் அதிகரித்தால், ஓப்பெக் நாட்டினர் மனது வைத்தால், தங்கள் இருப்பை இன்னமும் வெளிக்காட்டி, அதன் மூலம் பாரலுக்கான விலையை அப்படியே விட்டுவைக்கலாம். இப்படி செய்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். ஒன்று உலக மக்கள் தங்கள் எண்ணை உபயோகத்தை சடாரென்று குறைக்காமல் இருப்பது; இல்லையென்றால் உற்பத்தி செய்வதை யார் வங்குவது, எப்படி லாபம் பார்ப்பது? இரண்டாவது, வேறு வகை எரிபொருட்களில் முதலீடுகளை குறைப்பது. அதான் எண்ணை அதே விலையில் பலபத்தாண்டுகளாக இருக்கிறதே, ஏன் வேறு எரிபொருட்களை நாடுகிறாய் மனிதா? மரியாதையா சொல்றேன்; வேறு எரிபொருட்களில் முதலீடு செய்து அதை மார்கெட்டுக்கு கொண்டுவர முயன்றாயோ, எங்கள் நிஜ இருப்பை சற்று வெளிக்காட்டி, அதன் மூலம் எண்ணை விலையை மேகன் ஃபாக்ஸின் மேல்சட்டை போல சரெக்கென்று குறைத்துவிடுவேன். உன் மாற்று எரிபொருள் முதலீடு கோவிந்தா. புரிகிறதா ஓப்பெக்கின் கில்லாடித்தனம்.
கொசுறாக, ஏதோ ஒரு சுபயோக சுபதினத்தில், அரபு ஷேக்கிற்கு இன்னொரு குட்டி நாடோ தங்கமுலாமிட்ட கான்கார்ட் விமானமோ வாங்கவேண்டும்போல் தோன்றினால், எண்ணை உபயோகம் அதிகரிக்கையில் அன்றைக்கு உற்பத்தியை மாற்றாமல், நேற்றிருந்தபடியே விட்டுவிடலாம். அதிக உபயோகம் அதே உற்பத்தி இவற்றின் விகித பேதத்தால் அன்றைய பங்குசந்தையில் பாரல் விலை சூடு வைத்த ஆட்டோ மீட்டர் கணக்காய் சரேலென்று எகிறிவிடும். அத்தனையும் நிகர லாபம்.
ஆனால் இந்த செப்படி விளையாட்டு நிறைய நாள் பேராது. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் விடுவதற்கு விலை பேசலாம். அந்த வகை செய்திதான் மேலே குறிப்பிட்ட 2004 நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் வெளியானது. அதாவது, ஓப்பெக் நாடான சவுதி அரேபியாவில் இனி வெளிக்காட்டாமல் வைத்திருந்த எண்ணைவளம் ஒன்றுமில்லையாம். இருக்கும் நூறு சதவிகிதத்தையும் வெளிக்காட்டி உற்பத்தி செய்தாலே, உலக அளவில் தேவைக்கேற்ப உபயோகத்திற்கு விநியோகிக்கமுடியும் என்றாகிவிட்டது. இதைவைத்து பார்க்கையில் கென்னெத் டெஃபெயெஸ் உலகின் எண்ணை உற்பத்தியின் உச்சம் 2006இல் தொட்டுவிட்டது எனும் கூற்று முச்சூடும் மெய்தானோ எனத் தோன்றுகிறது. இன்னமும் சில நாடுகள் இந்த எண்ணை உற்பத்தி உச்சத்தை தொடவில்லை. கலாமின் கனவு இந்தியாவிற்கு நனவாகிறதோ இல்லையோ, 2020 இற்குள் அநேக நாடுகள் எண்ணை உற்பத்தியின் உச்சத்தை தொட்டுவிடும் என்கிறார்கள். இதன் பிறகு சரிவுதான்.
அமெரிக்கா உலகில் எங்கெல்லாம் எண்ணைவளம் இருக்கிறதோ, அங்கெல்லாம் தானே தயாரித்த காரணங்களை சொல்லி நேரடியாக ஆக்கிரமித்தோ இல்லை பொம்மைராஜா வைத்தோ, ஏதோ வகையில் தன் கொடியை நட்டு அவ்வளத்தை கட்டுப்படுத்த முயல்கிறது. இந்தியாவும் தனக்கேற்ற எந்த சோப்ளாங்கி நாட்டில் புதிய எண்ணைவளம் இருக்கும் என்று மோப்பம் பிடித்துவருகிறது. சூடான் நாட்டில் முதலீடு லேட்டஸ்ட் (2012) முயற்சி.
எண்ணைவளம் குன்றிவருவது உலக அமைதிக்கு நிச்சயம் பங்கம். சட்டென நாளையிலிருந்து எண்ணை உபயோகத்தை நம் எவராலும் நிறுத்திவிடமுடியாது. ஆனால், நாடளாவிய, உலகளாவிய திட்டமிடலில், வருமுன் காப்பாய் ஓரளவு ஆயத்தமாகலாம். அஸுஷுவல், நாம் இதன் உக்கிரத்தை இன்னமும் உணர்ந்து தயார்படுத்திக்கொள்ளவில்லை. உலகளாவிய சூடேற்றத்தை எவ்வளவு மேம்போக்காய் அணுகுகிறோமோ அவ்வகையிலேயே இதையும் மெத்தனிக்கிறோம். ஒரு மேம்போக்கு அணுகுமுறையின் கேட்டை மட்டும் தொடுகிறேன் (தீர்வுகளை, ஆயத்தங்களை விவரிக்க தனிக்கட்டுரை பிடிக்கும்).
அனைத்து தொழில்நுட்பமும் என்றுமே நன்மை பயக்கும் என்பது நிச்சயமில்லை. எண்ணைவளமே தீர்ந்துவரும் இக்காலகட்டத்தை மனதில்கொண்டு யோசித்துபாருங்கள் இந்தியாவிற்கு டாடா நேனோ கார் தற்சமயம் தேவைதானா என்று. சொந்தமாக தயாரித்த சிறிய கார், விலை கம்மி, என்பதால் அநேகர் (உழைக்கும் வர்க்கம்) வாங்கலாமே என்று பெருமிதப்பட்டாலும், அநேகர் வாங்குவதால் நிறைய பெட்ரோல் செலவாகுமே, எங்கிருந்து கிடைக்கும்? இறக்குமதி செய்வதால் யாருக்கு லாபம்? இன்று நேனோ கார் வாங்கும் அதே உழைக்கும் வர்க்கம்தான் நாளை பெட்ரோல் விலையை அப்படியே வைத்திருக்கவும் கோரும். எண்ணைவளமே குன்றுகையில் அரசாங்கம் எவ்வளவு நாள் சப்ஸிடி கொடுக்கும்? அடுத்த எலெக்ஷன் வரை பிரச்சனையை ஒத்திப்போடும். ஆனால் இயற்கை எலக்ஷென், அரசாங்கம் என பாரபட்சமின்றி ஒருநாள் வற்றிவிடும். மாறாக, பப்ளிக் பஸ், ரயில் போன்றவற்றை அதிகரிப்பதும், அவற்றில் பயணம் செய்வோருக்கு சப்ஸிடி கொடுப்பது என்று யோசிப்பதும் ஓரளவு சரியான திட்டமிடல். மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பு, தயாரிப்பு, வர்த்தகமயமாக்கம் என்பது அடுத்த திட்டமிடல். இங்குதான் பயோ-ஃபியூயல் ஆல்கே-டீஸல் என்றெல்லாம் பேசத்துவங்கியுள்ளார்கள். இதிலும் ஆல்கே-டீஸல் எனப்படும் பாஸியிலிருந்து எரிபொருள் அவ்வளவு சரியான வழியில்லை என்றே தோன்றுகிறது. இதன் உற்பத்தி வேகமும் நம் உபயோக வேகமும் ஒத்துப்போகாது. இயற்கையை காவு கொடுக்க மேலும் ஒரு வழி, அவ்வளவே.
சரியான ஒரே வழி உற்பத்தியை விட்டு, எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் எரிபொருள் உபயோகத்தையே கட்டுப்படுத்திக் கொள்வதுதான். தனிமனிதனாய், இன்றிலிருந்தே ஆபிஸுக்கு சைக்கிளில் போக முயலுங்கள் (நான் செய்கிறேன்).
*****
தேரை நிலைக்கு இழுத்துவிடுவோம்.
அன்றே சாலமன் சொன்னார், எண்ணையில்லாமல் திரியில்லாமல் விளக்குகள் தலைகீழாக தொங்குமென்று, என்று பட்டினத்தில் பூதம் திரைப்படத்தில் ஜாவர்ட் சீதாராமன் விட்டத்தில் எரியும் மின்விளக்கை வியப்பார். அடுத்து மின்சாரமின்றியும் ஒளிவிடும் விளக்குகள் வருமா என்று ஆராவது ஆரூடம் சொல்லவேண்டிய விளிம்பில் மனிதகுலம் நிற்கிறது. ஹப்பர்ட் சிகர உச்சியில்.
பூமித்தாய் காமதேனு இல்லை. உறிஞ்சிக்கொண்டே இருந்தால் அவள் மார்பிலும் மனிதகுலத்தை வாழவைக்கும் அமுதம் வற்றிவிடும். இதை மறப்பதற்கு நான் பொருளீட்டும் சாத்தியங்கள் எண்ணற்றவை, ஈட்டும் செல்வம் முடிவிலி, வளர்ச்சி என்றைக்கும் எக்ஸ்பொனென்ஷியலாக்கும் என்று நாற்காலி சித்தாந்தம் செப்பும் கிட்டப்பார்வை எக்கானமிஸ்டு இல்லை.
தொழிற்புரட்சிக்கு நன்றி கூறலாம், கடந்த 150 வருடங்களாக இயற்கையின் கனிமங்களை எனக்குகந்த, என் சமூகத்தின் சௌகர்யத்திற்கு தேவையான வகை ஆற்றலாய், வேலையாய், எண்ட்ரொபியாய் உருமாற்ற கற்றதை. ஆனால் மேற்கொண்டு தீர்க்கதரிசித்து திட்டமிடாமல், இயற்கை பல மில்லியன் வருடங்களாய் பரிணாம கதியில் உருவாக்கிய கனிமங்களை, வளங்களை, எண்ணையை, நிலக்கரியை, பேராசையாய், திறம்படாமல், மீட்கமுடியா ஆற்றலாய் கபளீகரம் செய்து பழகிவிட்டேன். முதல் இன்ஜின் செயல்திறன் 0.01 சதவிகிதம்; இன்றும் டீஸல் இன்ஜினுக்கு 30 சதவிகிதமே. உபயோகித்த ஆற்றலை, செலவழித்த 150 வருட காலவரைக்குள் மீண்டும் இயற்கையாய் மாற்ற இயலாது. தெர்மோடைனமிக்ஸ் விதிகள், மாக்ஸ்வெல்லின் சாத்தானாய் வழித்துக்கொண்டு சிரிக்கிறது.
எண்ணை-நாகரீகத்தின் தவிர்க்கமுடியா முடிவுதான் கலியுகமுடிவா? பாகவதம் ஆரூடத்திய கலிபுருஷனாய் பகவான் மோட்டாரற்ற, எண்ணைசார் எரிபொருளற்ற, குதிரைவாகனத்தில் அவதரித்து அருள் பாலிப்பாராமே.
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை. என் பசிக்கு பிள்ளைக்கறி சமைத்து, அப்பிழையின் உச்சமாய், ஹப்பர்ட் மலைச்சிகரத்தை தொட்டுவிட்டேன். அங்கிருந்து இறங்கி, வர்த்தக ஏற்றதாழ்வுகள் நிரம்பிய, சார்ந்த சண்டையும் சச்சரவுகளும் வெடித்துக் கிளம்பக்கூடிய, அசௌகர்யங்கள் நிறைந்த, உலகமயமான கிராம ராஜ்ஜியத்தில் வருங்காலம் செல்வது
அநேகமாக கால்நடையாகவே.
*****
[சொல்வனம் இணைய இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரையின் மீள்பிரசுரம்]
சான்றேடுகள்
M. King Hubbert, “Techniques of Prediction as Applied to the Production of Oil and Gas,” in S. I. Gass, ed., Oil and Gas Supply Modeling, Special Publication 631, Washington, D. C., NBS 1982.
Kenneth S. Deffeyes, “Beyond Oil,” Hill and Wang Pub., 2005.
EIA – Petroleum Data, Reports, Analysis, Surveys: U.S. Crude Oil Field Production (Thousand Barrels) —http://tonto.eia.doe.gov/dnav/pet/hist/mcrfpus1a.htm
http://en.wikipedia.org/wiki/Predicting_the_timing_of_peak_oil