விஷ்ணுபுரம் அறிமுகம்

Standard

இவ்வாறாக சுஜாதா எனும் புணைவன், வணிகசபையை வணங்கி, விஷ்ணுபுரத்தின் அறிமுகத்தை தொன்னூறுகளின் இறுதியில் கூறிமுடித்ததும், சபையோர் பலர் காசைத் திருப்பிக்கேட்டார்கள்.

ஆதியில் ஒரு சொல் இருந்தது. அதற்கு விஷ்ணுபுரம் என்று பெயர்.

இப்டி உம்பர்ட்டோ ஈக்கோ கூட ஒரு புத்தகத்த என்பதுகளில் தொடங்கியுள்ளார் மகளே. தி நேம் ஆஃப் தி ரோஸ். ஒரிஜினல் இத்தாலி மொழில. நான் படிச்சது ஆங்கில வெர்ஷன்தான். உலக இலக்கியம்னாலே அப்டிதான். எந்த மொழில வேணா எழுதலாம். ஆனா இங்கிலிஷ்லதான் படிக்கமுடியும். “இன் தி பிகினிங் வாஸ் தி வேர்ட். அண்ட் தி வேர்ட் வாஸ் வித் காட்; அண்ட் தி வேர்ட் இஸ் காட்” அப்டீன்னு தொடங்குவார் ஈக்கோ. அந்த வாக்கியம் எங்கேருந்து வருதுன்னு தெரியுமா உனக்கு? தெரிஞ்சா விஷ்ணுபுரம் மெள்ள புரியும். பைபிள் தெரியுமா? அதுல ஜெனிஸிஸ் சாப்ட்டர்ல…

விஷ்ணுபுரத்தின் அறிமுகத்தை அருண் எனும் தமிழிலக்கியமீதி சொல்ல ஆரம்பித்தான்.

*

அப்பா, யூ நொ வாட் ஹாப்பெண்ட் இன் கிச்சன் நௌ…

நோ, டோன் வாண்ட்டு நொ..

அப்பா… ப்ளீஸ் கேளுப்பா…

நோப். இரு, நா எதோ வேலயா இருக்கேனோனொ, அத கவனிக்காம நீ சொல்றதயே…

ஓஃப்… என்ன பன்ற நீ… ஏதோ புக் படிக்கற… தமிழ்ழ்ழ்..

இத படி பாப்போம்..

படிச்சா நான் சொல்றத கேப்பயா…

பாக்கலாம்…மொதல்ல படி… படிச்சு அர்த்தம் சொல்லு, அப்பறம் கேக்கறேன்.

வி…. ஷ்….. நு… ஓவ், விஷ்ணு..

ம்..அப்புறம்…

(கைகளால் சங்குசக்ரங்களை ஏந்துவதுபோல் அபிநயித்தபடி), “விஷ்ணு..” புரம். (விரலால் காற்றை நீள்வட்டமாய் கலக்கியபடி) அவர சுத்தி… கரெக்டா?

இப்பைக்கு கரெக்ட். விஷ்ணு-அகம் ன்னு வேற ஒருத்தர் புக் எழுதாத வரைக்கும் கரெக்ட். (புத்தகத்தை திருப்பி) இதப் படி பாப்போம்…

ப்ளர்பயா? எழுத்துக்கூட்டியபடியே… “இந்திய காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும் உள்வாங்கி எழுதப்பட்ட பெரும் நாவல் இது.

பரவால்லயே… தடங்காம படிச்சிட்டியே, குட். அர்த்தம் சொல்லு பாப்போம்…

யாருப்பா இது?

அவருதான் ஜெயமோகன். இந்த புக்க எழுதிருக்கரவர்.

ஏன் நம்மள பாக்காம குனிஞ்சுண்டு போஸ் கொடுக்கரார்?

அது அவையடக்கம்… ஒன்னுமில்ல, சும்மா ஜோக்டா கண்ணு. அவர்கிட்ட சொல்லாம நைஸா ஃபோட்டோ எடுத்துட்டாங்களாம். அதான்…

நீ பார்த்திருக்கியா?

அவரயா? ம்… பேசிருக்கேன். எல்லாத்தயும் அவர் கேட்டாரான்னு தெரியாது. அது எதுக்கு இப்ப; மேட்டருக்கு வா.

அப்ப நீ கேக்கலயா, ஏன் இப்டி ஃபோட்டோ எடுத்துருக்காங்கன்னு?

இல்ல; அப்ப நான் இந்த ஃபோட்டோவ பாத்ததில்ல. தோணிருக்காது, நீ இப்டி கேப்பேன்னு… அத்த வுடு, நீ படிச்சதுக்கு அர்த்தம் சொல்லேன்.

(இந்திய காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும் உள்வாங்கி எழுதப்பட்ட பெரும் நாவல் இது.)

இந்திய… அப்டினா இண்ட்யா. ஐ நோ. நம்ம கண்ட்ரி. மரபுனா?

மரபுனா ட்ரெடிஷன். ட்ரெடிஷன்னா என்ன?

ட்ரெடிஷன்னா… கல்ச்சர்?

பாத்யா, கத வுடரயே… அப்ப எதுக்கு ரெண்டு வார்த்த… ட்ரெடிஷன்னா கல்ச்சரா; அப்ப கல்ச்சர்னா ட்ரெடிஷன்ம்பியா… ரெண்டு புரியாத வார்த்தய வச்சிண்டு இப்டி அதுன்னா இதுன்னு சொன்னா… குவாண்டம் மெக்கானிக்ஸும் பின்நவீனத்துவத்துவ கதையும் ஒன்னுங்கறாமாதிரி சொல்றயே.. ஒன்னலாம் அலன் ஸொக்கைல்-ட்ட மாட்டிவிடனும்.

போப்பா ஒன்னுமே புரியலே. ஓகே ஒகே..ட்ரெடிஷன்னா ரிலிஜன்?

இல்லமா. ரிலிஜன்னா மதம். அது தனி தொல்லை. இங்க கொண்டுவந்து கொழப்பாத.. இன்னொருவாட்டி ட்ரை பன்னு…

ட்ரெடிஷன்னா ப்ராக்டீஸ்?

எக்ஸலண்ட். எங்கேந்து சொன்ன? கரெக்ட், ட்ரெடிஷன்னா ரொம்பநாளா செய்யற ப்ராக்டீஸ்… நாம காலம்பர பல்தேச்சுட்டு காபி குடிக்கிறோமே, அது பழக்கம். ஹாபிட். பல்தேச்சுட்டு சில பேர் பீடி குடிப்பாங்க. வேற இடத்துல ஜிலேபி சாப்டுவாங்க. நிறையபேர் செஞ்சா, அதுவே வழக்கம். ரொம்பநாளா வழிவழியா ரொம்பபேர் செஞ்சா அது ட்ரெடிஷனாகிடலாம்…

ஒகேப்பா.. காவிய… வாட் இஸ் காவ்ய?

காவியம்னா… கதை… ஸ்டோரி.. பெரிய ஸ்டோரி… சூப்பர் ஸ்டோரி… ரிச் ஸ்டோரி; ராமாயணம், மஹாபாரதம் போல. அதுலாம் இதிகாசம்… அதோட கொஞ்சம் கீழேன்னா, காவியம்னு சொல்லலாம்

ஒகே பா. போதும். இண்ட்யா சூப்பர் ஸ்டோரி யோட… வளமை-ன்னா?

வளர்-னு நீ ப்ளாக் (blog) வச்சுருக்கியே, அப்டீனா என்ன?

வளர் மீன்ஸ் க்ரெஸெண்ட் மூன்?

அது மாமா உன்ன கொழப்பிட்டு போனது. வளர்மதி-ன்னாதான் க்ரெஸெண்ட் மூன். மதி ன்னா மூன், இல்ல இண்டெலக்ட். வளர் நா க்ரோ (grow) மட்டும்தான். வளமைன்னா க்ரோயிங் ஔட், க்ரோ ஃபோர்த், ஃபெர்ட்டைல்-ன்னு சொல்லலாம்.

ஓ, வளமை-ன்னா ஃபெர்ட்டைல். அழகுகளையும் அப்டினா பியூட்டி யையும்…

கரெக்ட்.

உள்வாங்கி-ன்னா? வாங்கி-னா “டு பை”… உள் நா, இன்ஸைட்…

ஆமா, உள்வாங்கி நா, கெட்டிங் இன்ஸைட்; இம்பைப் அப்டின்னு சொல்லலாம்.

ஓ, இம்பைப்… ஐ நோ தட்.

சரிதான். இப்ப மொத்தமா சொல்லு என்ன புரிஞ்சுதுன்னு.

நாவல்-ன்னா நொவல் தானே?

ஆமா… சொல்லு…

இண்ட்யாவொட… சூப்பர் ஸ்டோரி ப்ராக்டீஸ்ல இருக்கர ஃபெர்ட்டிலிடி பியூட்டி எல்லாம் உள்ள வச்சு எழுதின பிக் நொவல்.

சரி, அடுத்த வரிய படி.

மீண்டும் எழுத்துகூட்டி, சித்தரிப்பு என்பதை “சித்த”, “சித்தர்” என்று திணறியபடி படித்து…

மானுடனின் தணியாத ஞானத் தேடலை மதங்களின் வழியாகவும், விரிந்து பரவும் வாழ்க்கைச் சித்தரிப்பின் மூலமாகவும் பிரம்மாண்டமாக வரைந்து காட்டுகிறது.

படித்துவிடுகிறாள்.

குட். இதுக்கு அர்த்தம் சொல்லமுடியுமா.

மானுடன்னா மான், டீர் (deer)?

இல்ல. மான்னா டீர்தான் ஆனா இங்க மானுடன்னா மனிதன், மானுடன். மனிதன்னா… மேன்…

மேன் இல்ல… வை மேன், வுமனும்தான்.. மனிதன்ன பெர்ஸன்ப்பா.

சரிதாண்டி மகளே…தப்புதான். மனிதன்னா பெர்ஸன். இல்ல, ஹ்யூமன். மானுடனின்னா ஹ்யூமனோட… அப்புறம் சொல்லு.

தணியாத-ன்னா சிங்கிள்?

இல்ல அது தனி. தணியாத-ன்னா…

(வயர்கூடையில் ஏந்திய வாட்டராய் விஷ்ணுபுரம் வீட்டினுள் பிரவாகிப்பதை நமுட்டுச்சிரிப்புடன் கவனித்துக்கொண்டிருந்த அவள் அம்மா இடைபுகுந்து) “தண்ணி குடிச்சா உனக்கு தாகம் என்ன ஆரது?”

ம், க்வெண்ச் ஆரது…

அதான், தணியாதன்னா, க்வெண்ச் ஆகாத…

ஞானம்னா?

ஞானம்-னா விஸ்டம்னு வெச்சுக்கோ.

தேடல்னா எனக்கு தெரியும், ஸெர்ச். மதம்னா..

அதான் ரிலிஜன்… முன்னாடி சொன்னயே…

ஒகே. ஹிண்டு முஸ்லீம் கிரிஸ்டியன் மாதிரி. வழியாகன்னா அந்த வே ல… தத்துவங்களின்…?

தத்துவம்-னா ஃபிலாஸஃபி. அப்டீனா, இப்டீலாம் நல்லா வாழலாம்ன்னு இருக்கறதெல்லாத்தயும் சுருக்கி, குட்டியா சொல்ல ட்ரை பன்றது தத்துவம். நிறைய மாதிரி வாழலாம் இல்லயா, அதான் நிறைய தத்துவம்…. எது பெஸ்ட்டுன்னு அப்பாக்கு சரியா தெரியாதுரா கண்ணு. உனக்கு புடிச்சத வச்சுக்கோ.

ஓகே. விரிந்து பரவும்… விரிந்துன்னா ஸ்ப்ரெட் பா; “பறவை சிறகுகளை விரித்ததுனு” என் தமிழ் புக்ல வந்துருக்கு.

குட். அதான்… பரவுன்னாலும் அதான். விரிந்துபரவுன்னா ஓப்பன் அப் அண்ட் ஸ்ப்ரெட். வாழ்க்கை-ன்னா லைஃப். நாம லிவ் பன்றது. சித்தரிப்புன்னா…

ட்ராயிங்?

இல்ல, அதுமாதிரி. போர்ட்ரே-ன்னா தெரியுமா?

பெயிண்டிங்?

அதான், பெயிண்டிங் ஒரு விஷயத்த போர்ட்ரே பன்னும். ஷோ. காட்டும். பெயிண்டிங் சீக்ரெட்டாவோ ஓப்பனாவோ காட்ர அர்த்தம் போர்ட்ரேயல்… புரியுதா?

ம்… கொஞ்சம். மூலம்ன்னா (ஆள்காட்டிவிரலை நெற்றிப்பொட்டில் தட்டியபடி) இங்கயிருக்கறதுதானே…

அது இல்ல. அது மூளை. இது மூலம். அப்டீனா, (மனைவியிடம்: இருடிம்மா சிரிக்காத); அப்டீனா, த்ரூ திஸ்…

ஓ… ப்ரம்மாண்டமா-ன்னா வெரி பிக். எனக்கே தெரியும். வரைந்துன்னா ட்ரா பன்றது…

ஓகே. இப்ப மொத்தமா அர்த்தம் சொல்லு…

ஹ்யூமன்ஸோட அன்க்வென்ச்ட் ஸெர்ச் ஃபார் விஸ்டம்-ம ஃபிலாஸபி ரிலிஜன் வழியாலாம் ஸ்ப்ரெட் ஆர லைஃப் மாதிரி பிக்-கா (big-ஆ) ட்ரா பன்னி காட்றது…

வெர்ரி வெர்ரி குட்.

அப்பா, நீ அந்த சினிமால வரா மாதிரியே சொல்ற…

எந்த சினிமால?

அதாம்பா, திக்கி திக்கி சொல்வாளே ஒரு மாமா. ஆத்திச்சூடி கிளாஸ் எடுப்பாளே. பசங்க சொன்னதும் இப்டி நீ சொன்னா மாதிரியே வெர்ரி வெர்ரி குட்ன்னு சொல்லுவா.

ஓ அதுவா. காதலா காதலா-வ சொல்ற. ஆமா கரெக்ட். இதெல்லாம் நல்லா ஞாபகம் வெச்சுக்கோ. நா திக்காமத்தானே சொல்றேன். அத்த கவனிச்சியா…

(பொங்கிவரும் சிரிப்பை விழுங்கியபடி அம்மா அகல) ம், சரி, அடுத்த லைன படி…

அடுத்ததயுமா…

ஆமா… இருக்கறது மூணு வரி, அத படிக்க இப்படி முக்கர நீ.. இதே இங்லீஷ்ல போன வருஷமே எண்பது புக் படிச்சுருக்க. வாங்கிக் கட்டுப்படியாகல…

மீண்டும் எழுத்துக்கூட்டி… “ஆகவேதான் நாறு…”

இரு இரு, நாறா? நாறுன்னா நாத்தமா நார்ரது. நூறு.

(கெக்கலித்தபடி) ஓ… சே…

(நடுவில் தமிழிலக்கிய என்று சேர்த்து எழுதிய இடத்தில் மட்டும் சற்று திணறி படிக்கிறாள்)

ஆகவேதான் நூறு வருடத் தமிழிலக்கியத்தின் மிகப்பெரிய இலக்கிய முயற்சி என்றும் தமிழ் நாவல்களில் முதன்மையானது என்றும் இது மதிப்பிடப்படுக்கிறது.

ஆகவேன்னா ஸோ.. நூறுன்னா ஹண்ட்ரட். இலக்கியன்னா?

இலக்கியன்னா லிட்ரேச்சர். தமிழ் இலக்கியன்னா டமில் லிட்ரேச்சர்.

ஓ… ஆங்கில இலக்கியன்னா இங்லீஷ் லிட்ரேச்சராப்பா? டிங்கிள்லாம் உண்டா? ஹாரி பாட்டர்? ரபீந்திரநாத் டாகூர் போயம்ஸ்லா உண்டா? எனக்கு ரொம்ப பிடிக்கும்… அது இங்லீஷ்லதான் இருக்கு நீ ஏதோ பெங்காலின்னே? அவர் எதுக்கு நோபல் ப்ரைஸ் வாங்கினார், இங்க்லீஷ்க்கா, பெங்காலிக்கா?

மகளே, இப்ப எதுக்கு புது கொழப்பம். அதான் சொன்னேனே, எல்லா இலக்கியமும் எழுதறவாளுக்கு தெரிஞ்ச மொழில எழுதுவா. தாகூர் பெங்காலிலதான் எழுதினார். பெங்காலிலதான் அது சூப்பரா இருக்கும்னு திமான் சாட்டர்ஜி மாமா சொன்னாரோனோ. படிக்கும்போது இங்லீஷ்ல இருந்தா ப்ரைஸ் கிடைக்கும் அவ்ளோதான். இலக்கியம்னா என்னன்னு எனக்கு புரிஞ்சதும் அப்றமா சொல்றேன். படிச்சிண்டே போ…

முயற்சின்னா ட்ரை-பா, முதன்மை நா ஃபர்ஸ்ட்?

இல்ல, கிட்டத்தட்ட…

(துணியெடுக்க அறையினுள் வந்த அம்மா) முதன்மைன்னா, ப்ரீமியர்…

(மகள்) ப்ரீமியர்… டிவில வருமே… ப்ரீமியர் ஷோ முதன்முறையாக

அய்யோ. இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக…. அதையா சொல்ற.. அது இல்ல… நம்ம வீட்ல டிவி இல்லயே; இந்தக் கருமாந்தரமெல்லாம் வராதே, எங்க பார்த்தே?

இல்லப்பா, ப்ரீமியர்னா, தெ ப்ரீமியர் சண்டே-ன்னு போகோ டிவில சோட்டா பீம், க்ரிஷ்ணா அப்டீன்னுலாம் வரும். தாத்தா ஆத்துல பாத்துருக்கேன். ப்ரீமியர் ஸாட்டர்டே, ஜர்னி டு பாடலிபுத்ரா…

ஓகே… முதன்மையானன்னா, ப்ரீமியர்க்கு பதிலா ஃபோர்மோஸ்ட் அப்டீன்னு வச்சுக்கோ. புரியுதா…

ஓகே… ஃபர்ஸ்ட்டுங்கற. அப்ப மதிப்பீடுன்னா?

மார்க்-னா தெரியுமா? அதுமாதிரி, இலக்கிய புக்ஸுகெல்லாம் மார்க் போட்டு பாத்தா, இந்த புக்குக்கு நிறைய வருதாம். மார்க் போடாம வாயாலயோ எழுதியோ சொல்றதுக்கு பேர் மதிப்பீடு. அஸ்ஸெஸ் தெரியும் இல்ல…

ஓ.. அஸ்ஸெஸ்மெண்ட்…

ஆமா அதுதான் மதிப்பீடு. இப்ப மொத்தத்துக்கும் அர்த்தம் சொல்லு…

ஸோ, ஹண்ட்ரட் யியர்ஸ்ல டமில் லிட்ரேச்சர்ல ட்ரை பன்ன டமில் நாவல்ஸ்ல ரொம்ப பிக் (big) அண்ட் ஃபர்ஸ்ட் இதுன்னு அஸ்ஸெஸ்மெண்ட் பன்னிருக்கா…

சரிதான். எனிவே, இப்டிதான் விஷ்ணுபுரம் புக் பத்தி சொல்லிருக்கா. இந்த ரேட்ல படிச்சோம்ன்னு வச்சிக்க, நாமளே, இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணாமாதிரி ஆயிடும்…. உலக இலக்கியச் சேவை. ஏற்கனவே இங்லீஷ்ல எது சாறு எது சக்கைன்னு புரியாமா இப்படி உலக இலக்கியம் ஏகத்துக்கு இருக்கு. போதும், குண்டு புக் இல்ல… அப்பா ஹெல்ப் இல்லாம நீ இப்ப படிக்க முடியாது. நீனாவே ஒரு இருபது வயசுல நிச்சயம் படிக்கலாம். படிச்சுபாக்றயா?

ஓகேப்பா. இப்போ கேக்கறயா அம்மா கிச்சன்ல என்ன பன்னான்னு…

வுடமாட்டியே, சொல்லு…

பால் பொங்கறா மாதிரி இருந்துதா, அய்யோன்னு கத்திண்டே பாஞ்சு போய் அடுப்ப ஆஃப் பன்னாளா, இப்டி (அபிநயித்தபடி) டான்ஸ் ஆடிண்டே, கராத்தே போஸ் மாதிரி ஒரே ஜோக்பா…

*

இவ்வாறாக, விஷ்ணுபுரத்தின் அறிமுகத்தை அருண் எனும் தமிழிலக்கியமீதி, இணையசபையை வணங்கி, அடுத்த சந்ததிக்கு எடுத்துசென்றான்.

****

அடிக்குறிப்பு: அலன் ஸொக்கல் – Alan Sokal – Fashionable Nonsense புத்தகம் எழுதிய இருவரில் ஒருவர். இயற்பியலாளர். அறிவியல் கருத்துகளை எவ்வாறெல்லாம் சோஸியயாலஜிஸ்டுகள் – முக்கியமாக, பிரெஞ்சுக்காரர்கள் — தவறாக ஜல்லியடிக்கின்றனர் என்பதை புட்டு புட்டு வைத்தவர். டோப்பாலஜி, குவாண்டம் ஃபைபர் பண்டில் போன்ற இன்றைக்கு வசீகரமான கணித, அறிவியல்துறை வார்த்தைகளை கச்சாமுச்சா என்று திரித்து உபயோகித்து மனிதர்களை விளக்குவதாக இதே ரீதியில் சோஸியாலஜி சஞ்சிகைகளில் ஆராய்ச்சி கட்டுரை எழுதி, பிரசுரமானதும், தன் கட்டுரை மொத்தமும் உட்டாலக்கடி, பொருளற்ற பேத்தல் ஆனாலும் வெளிவந்துள்ளது, இந்த துறையே ஹம்பக் என்று செய்தி வெளியிட்டார்.