கல்பகம் ஸ்வாமிநாதன்

Standard

ஓப்பெரா இசைமுறையில் தேர்ந்த பெண்குரலால் ஒரு ஸ்வரத்தை ஓங்கிப்பிடித்தே, தோன்றும் ஒலி அதிர்வுகளினால் அருகிலிருக்கும் கண்ணாடியை உடைக்கமுடியுமாம். மனித குரலுக்கு அவ்வளவு மகத்துவம். அதேபோல கர்நாடக இசை மற்றும் பொருள் நிரம்பிய வார்த்தைகளாலான அதன் கீர்த்தனைகளின் நுணுக்கங்களை சகல பரிமாணங்களுடன் அழகுடன் வெளிக்கொணரமுடிவதும் வாய்ப் பாட்டில்தான் என்பர். இசைக்கருவிகள் ஒரு மாத்து கீழேதான்.

பொதுவில் இப்படியெனினும் கர்நாடக இசைக்கென்று நாமே உருவாக்கிய தொன்மையான இசைக்கருவிகளான குழல், நாதஸ்வரம், வீணை போன்றவை ஒரளவு விதிவிலக்கு. இவற்றில் செய்துகாட்டமுடிந்த சில நுணுக்கங்களை — உதாரணம்: அதிவேக ஸ்வர கல்பனைகள், கோர்வைகள், ’ஸர்’கள் — வாய்ப்பாட்டில் கொண்டுவருவது கடினம். மிகுந்த பயிற்சி வேண்டும்.

ஆனால் கர்நாடக கீர்த்தனைகளை வார்த்தைகள் ஒலிக்க வாயால் பாடினால்தான் அழகு. இசைக்கருவிகளின் வழியே வருகையில் அந்த இசைக்கருவிக்கான வாசிக்கும் இடர்பாடுகள் அவ்வப்போதாவது வெளிப்பட்டு கீர்த்தனைக்கு தேவையான ஒரு குழைவையோ, சரியான இடத்தில் ஒரு தொடர்ச்சியையோ இழக்க நேரிடும். பஞ்சமத்தில் தொடங்கி அப்படி மேல் ஸ்தாயி ஸா வரை போய் சடாரென்று மந்தரஸ்தாயி தைவதத்திற்கு வருகையில் வீணை போன்ற தந்தி வாத்தியங்களில் கை ஒடிந்துவிடும். பயிற்சியோ, வாசிக்கும் வேகமோ இல்லையெனில் குழைவும் தொடர்ச்சியும் மறைந்து, கீர்த்தனை வெட்டி வெட்டி ஒலிக்கும்.

வீணைதான் கிட்டத்தட்ட வாய்ப்பாட்டில் அருகே கர்நாடக இசையை முழுதும் வெளிக்கொணர ஏதுவான இசைக்கருவியாக நம்மால் ஒத்துக்கொள்ளப்படுகிறது. அந்த வீணையில் மேற்கூறிய பொதுவில் ஒத்துக்கொள்ளப்படும் இடர்பாடுகளின்றி, வாசிக்கும் விரல்கள் என்பது வயது தாண்டிய பிறகும் சுநாதத்தை தவிர வேறெதும் வாசித்துக்காட்ட முடியாதவர் கல்பகம் ஸ்வாமிநாதன்.

நான் அவரது வாசிப்பை முதலில் கேட்டது மைலாபூரில் உள்ள ரா ரா தேவாதி தேவா என்று வரவேற்புப்பலகையிலிருந்தே அடானாவில் உள்ளிழுக்கும் தியாகராஜ வித்வத் சமாஜத்தில். கேட்கத்தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்ரீரங்கம் கோயில் வஸந்த மண்டபத்தின் கம்பிக்கதவிற்கு இந்தப்பக்கம் நின்று உள்ளேசென்றமர்ந்து ஓய்வெடுக்கமாட்டோமா என்கிற சிறுவயது பரிதவிப்பு எனக்கு சட்டென்று அடங்கிவிட்டது போன்ற இகபரசுகம். தலை குனிந்து முட்டிக்கால்களை கையால் கட்டியபடி கண்ணை மூடிக்கொண்டு கச்சேரியை கேட்டுக்கொண்டிருக்கையில் ஒரு தருணத்தில் திடுக்கென்றது. கேட்பது வீணையா, வாய்ப்பாட்டா? விழித்து நிமிர்ந்து சரிபார்த்துக்கொண்டேன். வீணைதான்.

இதே சந்தேகம் அவர் இசையின் ரசிகானுபவத்தில் பலருக்கு ஏற்பட்டுள்ளதை அறிவேன்.

கீர்த்தனை வரிகள் முன்னரே தெரிந்து ரசிக்கையில், கீர்த்தனையின் அத்தனை நுணுக்கங்களையும் – சங்கதி பிடிகளையும், ராக லக்‌ஷண கமகங்களையும், கார்வைகளையும், வேண்டிய மௌன இடைவெளிகளையும் – வீணைவழியே வெளிக்கொணர்ந்து வாசிப்பதில் கல்பகம் ஸ்வாமிநாதனை விஞ்ச ஆளில்லை என்பது நிதர்சனம்.

(இரண்டு வருடம் முன்பு, எண்பத்தியேழாவது வயதில், அரிதான கௌரி ராகதிலமைந்த கௌரி கிரிராஜ குமாரி என்று தொடங்கும் தீக்‌ஷதர் கீர்த்தனையை பாடி வாசிக்கிறார் —  வீடியோ உபயம்)

பிறகு ஐந்து வருடங்களில் ஒரு பத்து கச்சேரிகளாவது இவரது வாசிப்பை நேரில் கேட்டிருப்பேன். கடைசியாக கேட்டது ஒரு வருடத்திற்கும் முன்பு, பிரத்யேக தீக்‌ஷதர் கீர்த்தனைகள் கச்சேரி, ராக சுதா அரங்கில்.

நானாக்கும் வாசிக்கிறேன் என்பதுபோன்ற வீணைதந்திகள் தெறித்துவிடும் அதட்டல் ஆர்பாட்டங்கள் இருக்காது. வாசிக்கையில் எதிரில் யாராவது தாளம் போடமாட்டார்களா என்று தேடமாட்டார். நாம்தான் அவர் எடுக்கும் கீர்த்தனையின் தாளம் என்ன என்று திணறுவோம். அவ்வளவு அரிதான கீர்த்தனைகளும் அத்துப்படி. ஆனாலும் தீக்‌ஷதர் நவாவர்ணத்தில் கச்சேரியின் மெயின் உருப்பிடி வாசித்தாலும் (கிட்டத்தட்ட அனைத்தும் சற்று கடினமான தாளங்கள்), பக்கவாத்யக்காரர்களை பதட்டமடையவைக்கமாட்டார். அவர்களது திறனறிந்து, அடுத்து ஒரு ஆதிதாள கீர்த்தனை வாசித்து தனி விட்டு கச்சேரியை சோபிப்பார். நளினம், மிருது, நிதானம், அழுத்தம், சௌக்கியம், சம்பிரதாயம். இது கல்பகம். அவரின் அபரிமிதமான இசையறிவும் அநாயாசமான விரல் கட்டுப்பாடும், எள்ளளவும் வெள்ளி விழாத நாதமும், வீணை என்பதே அவரின் மடி மற்றும் விரல்களின் அங்க நீட்சியோ என்று அச்சுறுத்தும்.

அறுபதுகளில் நேரிடையாக அவரது பல கச்சேரிகளை கேட்ட நண்பர்கள் இருவரிடம் பேசிக்கொண்டிருந்ததிலிருந்து என்.எம். நாராயாணன் போன்ற ’அந்தக்கால’ இசை விமர்சகர்கள் அவரது இசையை சரியாக மக்களுக்கு அறிமுகப்படுத்தவில்லை என்றே அறிகிறேன். அவரது சமகாலத்த வைனிக்கர்களைவிட நிச்சயமாக ராக ஸ்வரூபங்களையும், ஆலாபனைகளையும் நிறைவாக வாசித்துக்காட்டியவர் கல்பகம் ஸ்வாமிநாதன். அகடெமியின் சங்கீத கலா ஆச்சார்யா, கிருஷ்ண கான சபாவின் சங்கீத சூடாமணி போன்ற விருதுகளேல்லாம் இவருக்கு (சற்று தாமதமாக) வழங்கப்பட்டதால் கௌரவப்படட்டும். என் அவா தஞ்சாவூர் கல்யாணராமன், ராம்நாட் கிருஷ்ணன், மற்றும் எஸ். ராஜம் வரிசையில், கல்பகம் ஸ்வாமிநாதனின் வாழ்க்கை, இசைமுறை பற்றி நிச்சயம் ஒரு ஆவன மென்தகடு கொண்டுவரவேண்டும். வீணையிசையை இப்படியும் போஷிக்கமுடியும் என்பதை வருங்காலம் அறிய.

ஏனெனில், நேற்றுவரை கீர்த்தனைகளின் வாய் பாட்டு நுணுக்கங்களை கல்பகம் ஸ்வாமிநாதன் அதை வீணையில் வாசிக்கையில் காலம் மறந்து, என்னை இழந்து, கண்ணை மூடி, ரசித்துக்கொண்டிருந்த பாக்யசாலியாயிருந்தேன்.

நேற்று அவர் கண்மூடிவிட்டார்.