ஆர்ஸெனிக் பாக்டீரியா – சில சந்தேக நிவர்த்திகள்

Standard

ஃபெலிஸா உல்ஃப்-ஸைமன் மற்றும் விஞ்ஞானிகள் குழு கலிஃபோர்னியாவில் உள்ள மோனோ ஏரியின் சேற்றில் வாழும் நுண்ணுயிரை பரிசோதித்து, மரபணுவில் பாஸ்பரஸ் மூலப்பொருளுக்கு பதிலாக ஆர்ஸெனிக்கை உபயோகித்து அதனையே உட்கொள்ளும் நுண்ணுயிர் (பாக்டீரியம்) உலகில் உள்ளது என்று நிரூபித்திருந்ததை பற்றி ஆர்செனிக் நுண்ணுயிரும் விஷக்கன்னி மாலாவும் கட்டுரையில் விளக்கியிருந்தோம். அந்த கட்டுரையின் அறிவியலில் நமக்கு பொதுவாக ஏற்படும் சந்தேகங்களை சார்ந்து சில கேள்விகளுக்கான பதில்களை (அனைத்தும் விடைகள் இல்லை) இங்கு பார்ப்போம்.

ஃபெலிஸா உல்ஃப் ஸைமன் மோனோ ஏரியின் சேற்றை பரிசோதிக்கிறார்

இந்த GFAJ-1 எனும் பாக்டீரியம், நுண்ணுயிர், புதிய உயிரினமா?

இல்லை. ஏற்கனவே தன் மரப ணுவில் நம்மைப்போல பாஸ்பரஸை உபயோகித்துக்கொண்டிருந்த ஒரு நுண்ணுயிர், ஆர்சனிக்கை மட்டுமே தொடர்ந்து (பரிசோதனையில்) உண்ணக்கொடுத்ததால், வெறுத்துபோய் வாழ்வதற்கு விஷத்தைவிட்டால் வேறுவழியில்லை என்று உயிரணுவிலேயே பாஸ்பரஸை நீக்கி ஆர்சனிக்கை புகுத்திக்கொண்டு, அதன் விஷம் தாக்காமல் இருக்க பாதுகாப்பு மெக்கானிஸத்தையும் உருவாக்கிக்கொண்டுவிட்டது. அந்த அளவில் உயிரியலில் இது ஆச்சர்யமான கண்டுபிடிப்பே.

ஆ னால் இது புது உயிரினம் இல்லை. நம் லோக்கல் பாக்டீரியாதான். எதிர்பாராதவிதமாக செயல்படுகிறது. நம் உயிரியல் புரிதலை நிச்சயம் விரிவாக்கியுள்ளது. மேல் பத்தியில் வெறுத்துபோய் என்று வேடிக்கைக்காகத்தான் எழுதியுள்ளேன். பரிசோதிக்கப்பட்ட நுண்ணுயிர் இவ்வகை உணர்சிகளற்றது. தன்னைத்தானே (ஆர்சனிக்கை உண்டும்) பிரதியெடுத்துக்கொள்ளமுடியும் அவ்வளவே.

அதேபோல, இந்த நுண்ணுயிர் ஆர்ஸெனோ-ஃபைல் இல்லை.

பி.பி.சி. தகவல் பக்கமே தலைப்பில் ஆர்செனிக் லவிங் arsenic loving என்று இந்த நுண்ணுயிரை குறிப்பிட்டு சறுக்கியுள்ளது. ஆர்செனிக் லவிங், ஆர்சினோ-ஃபைல் arsenophile என்றால், வேறு மூலக்கூறுகளை விடுத்து, ஆர்செனிக் மட்டுமே உண்டு வாழும் உயிரினம் என்று பொருள். இந்த நுண்ணுயிர் அப்படி இல்லை. முன்பு பாஸ்பரசை உபயோகித்தது. கட்டாயமான ஆர்செனிக் சூழலில் அதையும் உபயோகிக்கத்தொடங்கிவிட்டது. மீண்டும் பாஸ்பரஸ் சூழலில் பழக்கினால் அதையே உபயோகிக்கத்தொடங்கலாம்.

இந்த உயிரினம் ஆர்செனிக்கை உண்பதால் (சார்லஸ்) டார்வினின் பரிணாம தத்துவங்கள் அம்பேலா?

இல்லை. உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் ஒரு ஆதி உயிரினத்துடன் தொடர்புகொண்டவை. அதன் வம்சாவளியில் தோன்றியவை. அதனால் அனைத்தும் ஒரே வகை மரபணுவிலானவை. இப்படி டார்வினின் பரிணாமத்தை பற்றிய (முக்கியமான ஐந்து) கூற்றில் ஒன்று உள்ளது. அப்படியானால் தற்போது ஆர்செனிக் உண்ணும் நுண்ணுயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், டார்வினின் இந்த கூற்று பொய்த்துவிட்டதா? இல்லை. இன்னமும் இல்லை. ஏனெனில் பரிசோதனை புதிய உயிரினம் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இருக்கும் ஒரு உயிரினம், தன் மரபணுவிலேயே மூலக்கூறு ஒன்றை மாற்றி வேறு ஒன்றை உபயோகித்துக்கொண்டும் வாழமுடியும் என்று நிரூபித்துள்ளோம். வேண்டுமானால் உயிர் என்றால் இப்படி இருக்கவேண்டும் என்ற சிந்தையை, புரிதலை விரிவாக்கிக்கொண்டுள்ளோம் என்று கூறலாம்.

இந்த ஆராய்ச்சி முடிவு சரியில்லை என்று சர்சையை கிளப்பியுள்ளதாமே?

ஆமாம். இதில் ஆச்சர்யமில்லை. உயிரியலை விரிவாக்கமுனையும் இவ்வகை ஆராய்ச்சிமுடிவு சர்சையை கிளப்பாமல் போனால்தான் ஆச்சர்யம். இவ்விஷயத்தை பற்றி ஒரளவு தெரிந்த, இதில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளிடையே அறிவியல் விவாதங்களாக தொடரவேண்டியது, ஊடக மிகையினால் தரம்குறைந்த சர்சையாக உருமாறுவது, புரிகிறதோ தெரிகிறதோ எதற்கும் நம் கருத்தையும் சொல்லிவைப்போம், ஆக்கத்தை எதிர்கமுடியவில்லையெனில் ஆளை அடிப்போம், அ து என் ஜனநாயக உரிமை என்கிற இணைய கலாச்சாரத்தின் இன்றைய பரிணாமம். எதிர்பார்க்கக்கூடியதே.

நாஸா, சயின்ஸ் சஞ்சிகை இரண்டும் பொய் சொல்கிறதா?

இந்த சர்சையில் சில இணைய செய்திகள் (salon, abcnews தகவல் பக்கங்கள்), இவ்வகை ஆராய்ச்சியில் தேர்ந்த சில விஞ்ஞானிகளின் வலைப்பூக்களில் நிகழும் விவாதங்கள் அறிவியலைத்தாண்டி சில விஷயங்களை அலசுகின்றனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் சயின்ஸ் ஆராய்ச்சி சஞ்சிகையில் வந்ததற்கு காரணமே இதைச் செய்தவர் அமேரிக்காவில் வசிக்கும் யௌவன யுவதி. இந்தியா சீனாவிலிருந்து போயிருந்தால், எழுத்தாளரின் முதல் கதை முயற்சி போல, கட்டுரை போஸ்ட் செய்த கையோடு வீட்டிற்கு திரும்பிவந்திருக்கும். மேலும் கட்டுரை வெளிவருவதற்கு நாஸா என்ற ஆராய்ச்சிமான்யம் கமழும் ராட்சஸனின் திரைமறைதிறன் பாய்ந்துள்ளது என்றெல்லாம் தெரிவித்துள்ளனர்.

நாஸாவிடம் ஆராய்ச்சி மான்யம் பெறும் சில விஞ்ஞானிகள் உட்பட பலர் இந்த விஷயத்தில் நாஸாவை சாடுவதற்கு காரணம், நாஸாவும் தெரிந்தே ஊடகமிகையை உபயோகித்ததனால். நாஸாவிற்கு செவ்வாய் செல்ல பணம் வேண்டும். மாற்று உயிர் பற்றிய இவ்வகை ஆராய்ச்சி, வேற்று கிரகங்களில் ஏலியன்ஸ் உள்ளதா என்ற கேள்விக்கு புதுவகை பதிலை தர எத்தனிப்பதால், அதை தெளித்து அரசாங்க பணம் கொழிக்கிறதா என்றுசோதிப்பது அவர்களுக்கு சகஜம். இந்த ஆராய்ச்சி வெளிவருகையில், ஊடகங்களிடம் செய்தி, பிரஸ்-மீட் என்றெல்லாம் ஏற்பாடு செய்ததே நாஸாதான்.

ஆனால் ”சயின்ஸ் சஞ்சிகை கட்டுரையை வெளியிட்டதே நாஸா மான்யத்தில் வளரும் ஃபெலிஸா என்கிற அழகான அமேரிக்க யுவதியு அனுப்பியதால்” போன்ற ஆள்-அடி தாக்குதல் எல்லாம், சயின்ஸ் சஞ்சிகையையும் அடிநாதமான ஆராய்ச்சி பரிந்துரை வழிமுறையையும் பாஸ் என்ற பாஸ்கரனில், ஜீவா ”சூப்பர் ஃபிகரை” கண்டதும் சேர்த்துவைப்பதற்கு பதில் தானே லவட்டிக்கொள்ள முயலும் க்ளைமாக்ஸ் போல ஜோடிக்கும் முயற்சி. வடிவேலு ஸ்டைலில் சொன்னால், “ரெம்பவே ஓவராப்போய்ட்ரிக்காய்ங…”.

ஏனெனில் ஆராய்ச்சி முடிவுகளைத்தாங்கி வரும் சஞ்சிகைகளில் கட்டுரைகள் சக ஆராய்ச்சியாளார்களின் மறைமுக பரிந்துரையினால் மட்டுமே ஏற்கப்படும். இது தவறான முடிவுகளைத்தாங்கி வரும் கட்டுரைகளை முதல் கட்டத்திலேயே நிராகரித்துவிடுவதற்கான வழிவகை. வெளிவந்த கட்டுரை முடிவுகள் பிறகு வேரொருவரால் அறிவியல்ரீதியாக புது-ருசுக்களுடன், தர்க்கங்களுடன் நிராகரிக்கப்படலாம். ஆனால் இக்கட்டுரையை படித்து பரிந்துரைத்த சக விஞ்ஞானிகள் அனைவரும் தெரிந்தே தவறான முடிவுகள் இருந்தும் பரிந்துரைத்தார்கள் என்பதை ஒப்புக்கொள்வது கடினம்.

அப்ப ஆர்ஸெனிக் உன்ணும் உயிர் உண்மைதானா? ஊடக  , மற்றும் பொறாமை சர்சைகளைத் தாண்டி, உருப்படியான புறவயமான எதிர் அறிவியல் தர்க்கங்கள் இல்லையா?

இருக்கிறது. இதையும் விஞ்ஞானிகள்தான் (வலைப்பூவிலும், இதர இணைய தளங்களிலும்) முன்வைத்துள்ளனர். இவர்கள் சொல்வது கட்டுரையின் பரிந்துரையின்போது சில முக்கியமான கேள்விகளை கேட்க விட்டுவிட்டார்கள். ஒரு சில சாதகமான முடிவுகளை கட்டுரையில் கண்டதும், உற்சாகத்தில் மேலோட்டமான பரிந்துரை செய்துவிட்டார்கள் என்கிறார்கள்.

உதாரணமாக, சில கேள்விகள்: 1) ஆர்ஸனிக் உண்ணும் பரிசோதனையில் ஒருவேளை சோதனைக்கூண்டில் பாஸ்பரஸ் ஒட்டிக்கொண்டிருந்திருக்கலாமே, சரியாக சுத்தம் செய்ததற்கான வழிவகையை கட்டுரையில் குறிப்பிடவில்லையே. 2) ஒருவேளை ஆர்ஸெனிக் மரபணுவரை செல்லாமல், உயிரணுவின் லிப்பிட்டுகளில் ஒட்டுக்கொண்டிருப்பதை பரிசோதனையில் கண்டு உணர்ச்சிவசப்பட்டுவிட்டாயா? (நம் லிப்பிட்டுகளிலும் பாஸ்பரஸ் இருக்கும்; இங்கேயும் பாஸ்பரஸிற்கு பதில் ஆர்ஸெனிக் ஒட்டிக்கொள்ளலாம்தான். சென்ற பாகத்தில் குறிப்பிட்டுள்ளேன்) 3) ஆர்ஸெனிக் ஒட்டிக்கொண்டுள்ள மரபணு, நீரிலிட்டதும் (ஆர்ஸெனிக்கும் நீரும் உறவாடி) ரசாயனக்கட்டுக்கோப்பை கழன்றுகொண்டுவிடுமே, இதெற்கென்ன பதில்? 4) சோதனையில் இந்த நுண்ணுயிரை வளர்பதற்காக உபயோகித்த மற்ற உப்புக்களில் தக்குணூண்டு பாஸ்பரஸ் இருக்குமே, அதைக்கொண்டு (ஆர்ஸெனிக் சூழலிலும்) ஒருவேளை நுண்ணுயிர் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கலாமே?

சர்ச்சை, தர்க்கங்களுக்கான ஃபெலிஸா வுல்ஃப்-ஸைமனின் பதில்?

முதலில் திகைத்து பின்வாங்கி வெகுஜன பேட்டி அளிக்க மற்றொரு ப்ரஸ்-மீட்டிற்கு மறுத்து, பிறகு சயின்ஸ் சஞ்சிகையிலேயே சில பதில்களும், ஒரு பேட்டியும் அளித்துள்ளார்.

உதாரணமாக மரபணுவில் ஒட்டிக்கொண்டுள்ள ஆர்ஸெனிக் நீருடன் எப்படி உறவாடும் என்று என்னையும் (ஃபெலிஸா) சேர்த்து ஒருவருக்கும் திட்டவட்டமாக தெரியாது. எந்த ஆராய்ச்சி முடிவும் வெளிவந்துள்ளதாக தெரியவில்லை. ஒருவேளை மரபணூவில் ஹெலிக்ஸ் கட்டில் இருந்தால், ஆர்ஸெனிக் பிரிந்து நீருடன் சேர்ந்துகொள்ள நேரமாகலாம். கேள்விகேட்பவர்கள் (மேலே கேள்வி 3)) முன்வைப்பதுபோல உடனே ரசாயன கட்டுக்கோப்பு உடையாது. மேலும் ஆராய்ச்சி தேவை.

அதேபோல உயிரினம் வளர சோதனையில் சேர்க்கும் உப்பில் பாஸ்பரஸ் இருந்தால் அது அனைத்து சோதனைகளிலும் இருக்குமே. பாஸ்பரஸ் மற்றும் ஆர்ஸெனிக் சூழலற்ற பரிசோதனையிலும் இந்த உப்பை சேர்த்துள்ளேன். ஆனால் அங்கு உயிரினம் இறந்துவிட்டது. அப்படியென்றால் அந்த உப்பில் உள்ள பாஸ்பரஸ் அளவு உயிரினம் வாழ்வதற்கு போதவில்லை என்றுதானே பொருள். ரிலாக்ஸ் மா, நான் அவ்வளவு யோசிக்காமல் கட்டுரை எழுதவில்லை என்கிறார் ஃபெலிஸா.

பாஸ்பரஸ்-மட்டுமே சூழல், ஆர்ஸெனிக்-மட்டுமே சூழல், பாஸ்பரஸ்-ஆர்ஸெனிக்-இரண்டுமுள்ள சூழல், பாஸ்பரஸ்-ஆர்ஸெனிக்-இரண்டுமற்ற சூழல் என்று நான்கு சூழலில் இந்த பாக்ட்டீரியத்தை பரிசோதித்துள்ளேன். நீங்கள் சுட்டிக்காட்டும் அனைத்து தவறுகளும் என் பரிசோதனைகளில் இருக்கட்டும். ஆனால் சோதனை முடிவில், பாஸ்பரஸ்-ஆர்ஸெனிக்-இரண்டுமற்ற சூழலில் இறந்துவிடும் பாக்ட்டீரியம், ஆர்ஸெனிக்-மட்டும் சூழலில் தழைத்துள்ளதே. இது எப்படி?

ஃபெலிஸா கேட்கும் இந்த ஆதார கேள்விக்கு சர்சை, எதிர்வினை, தர்க்கங்கள் வெளிவியிட்டுள்ள ஒருவரிடமும் சரியான பதிலில்லை.

ஏனெனில் பதில் சொல்வதற்கு புதிய டேட்டா, தகவல் வேண்டும். புதிய பரிசோதனை முடிவுகளுக்கு பிறகே இக்கேள்விக்கான பதில் நிர்ணயமாகும். அதுவரை ஆர்ஸெனிக் பாக்ட்டீரியத்தின் மரபணுவில் இருந்திருந்தாலும், லிப்பிடுகளில் மட்டுமே இருந்திருந்தாலும், ஃபெலிஸாவின் சோதனை முடிவுகள் அறிவியலுக்கு, உயிரியலுக்கு  புதியதே. வரவேற்கத்தக்கதே.

இனி என்ன ஆகும்?

இனி சில விஞ்ஞானிகள் மீண்டும் இந்த பரிசோதனையை செய்து அதேபோல் நடக்கிறதா என்று சரிபார்ப்பர். ஏற்கனவே ஃபெலிஸாவிடம் இந்த பாக்டீரியத்தின் சாம்பிள்களை கேட்டு உலகெங்கிலும் ஆராய்ச்சிமையங்களிலிருந்து தலா பத்து விண்ணப்பங்கள் வந்துள்ளதாம். அனைவருக்கும் விரைவில் சாம்பிள்களை அவர்கள் சோதித்துப்பார்க்க ஏதுவாக்க அனுப்பப்போவதாக ஃபெலிஸா தெரிவித்துள்ளார். ஆராய்ச்சி சஞ்சிகைகளில் வரும் மாதங்களில், வருடங்களில் (தொடர் ஆராய்ச்சி முடிவுகளை முன்வைத்து) மேலும் நிறைய விவாதங்கள் நடைபெறும். முடிவுகள் மாறலாம். இப்படித்தான் அறிவியல் புரிதல் வழிநடக்கும்.  இப்போதைக்கு ஃபெலிஸாவின் ஆராய்ச்சி முடிவுகள் ஆர்செனிக்கை மரபணுவரை கொண்டுசென்று உண்ணும் உயிரினம் இருப்பதாக அணுமானிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

சரி, அட்லிஸ்ட் இந்த பாக்டீரியம் ஏலியன்ஸா?

இல்லை. இந்த பாக்டீரியம் நம் (மோனோ ஏரி) லோக்கல் உயிர்தான். புதிய (மாற்று) உயிர் கண்டால்தான் அது ஏலியன்ஸ் எனலாம். இந்த சோதனை முடிவுகளை வைத்து ஏலியன்ஸ் உண்டு இல்லை என்ற கேள்விக்கு பதில் தேடமுடியாது. ஊடக  த்தலைப்புச்செய்திகள் ஒரு ஈர்ப்புக்காக எழுதப்படுபவை. நாஸா தளமும் இவ்வகை கவனக்கலைப்பிற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இவையெல்லாம் ஊடக  மிகை. பாஸ்பரஸிற்கு பதில் ஆர்சனிக்கை உபயோகித்து வளரும் ஒரு பாக்டீரியம். இதுதான் ஆராய்ச்சி கட்டுரையின் தலைப்பு. அது மட்டும்தான் விஞ்ஞானிகள் சொல்லவருவது. மற்றபடி இந்த பாக்டீரியம் ஏலியன்ஸ் கிடையாது. மற்ற கிரகங்களில் ஒருவேளை ஏலியன்ஸை தேடிக்கண்டால், அவை நம்மைப்போலன்றி வேறு எப்படி இருக்கலாம் என்ற புரிதலை விரிவாக்கிக்கொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவும்.

[சார்ந்த கட்டுரைத்தொடர் சொல்வனம் இதழ்களில் 1 | 2 | 3 | 4 வெளிவந்துள்ளது]

***

கட்டுரை சான்றேடுகள்

1) விவாதிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரை:  Wolfe-Simon, F., Blum, J., Kulp, T., Gordon, G., Hoeft, S., Pett-Ridge, J., Stolz, J., Webb, S., Weber, P., Davies, P., Anbar, A., & Oremland, R. (2010). A Bacterium That Can Grow by Using Arsenic Instead of Phosphorus Science DOI: 10.1126/science.1197258

2) எதிர் கருத்துக்கள்: அ)  http://www.slate.com/id/2276919/pagenum/all/

ஆ)  http://rrresearch.blogspot.com/2010/12/arsenic-associated-bacteria-nasas.html இ) http://abcnews.go.com/Technology/nasa-study-finds-life-survives-arsenic-scientists-question/story?id=12355550

3) சயின்ஸ் சஞ்சிகையில் ஃபெலிஸாவின் பேட்டி: http://news.sciencemag.org/sciencenow/2010/12/arsenic-researcher-asks-for-time.html

4) சயின்ஸ் சஞ்சிகையில் ஃபெலிஸாவின் பதில்கள்: pdf கோப்பு http://ironlisa.com/gfaj/GFAJquestions_Response_16Dec2010.pdf