எப்பொழுதும் சைக்கிளுக்கே டிரைவர் வைத்துக்கொள்ளும் நான், இன்று காரை கச்சேரி கேட்பதற்காக p. s. ஹைஸ்கூலுக்கு ஓட்டிச் சென்றேன்.
டிடிகே சாலைத் திருப்பத்தில் ஒரு வேன் டிரைவரும், பி.எஸ். பள்ளியில் திடலில் ஓடிக்கொண்டிருந்த அரைடிராயர் மாமாக்களும் நான் திருப்பிய வேகத்தில் கலவரப்பட்டார்கள். மற்றபடி காரும் கூட வந்த நண்பரும், லோகத்தில் ஏனையோரும் நலமே.
தக்ஷிணாமூர்த்தி அரங்கில் கச்சேரி தொடங்க ஏழு நிமிடங்கள் இருந்தன. எங்களைத் தவிர மொத்தம் நான்கு பேர்.
முத்துக்குமார் சரியாக ஐந்து மனிக்கு ஆரம்பித்தார் பேகடாவின் சஞ்சாரத்தை. இந்த சலமு வர்ணம். துரித காலப் பிரமாணத்தில் நின் நீ..இ..இ…என்று சரணத்தில் மிடுக்காக இழுக்கையில் கண்ணை மூடினால் இருபதாண்டு முந்தைய சேஷகோபாலன் ஒலித்தார். சேஷகோபாலன் நல்ல ஆசிரியர், முத்துக்குமார் குரு கடாக்ஷம் பெற்ற மாணவர் என்றும் கொள்வோம்.
ஆனால் முன்பே கூறினேன். கச்சேரி வித்தியாசமானது என்று. இது ஒரு பெரிய
கதாகாலக்ஷேபத்திற்கு முன் வந்த ஒரு சற்றே சிறிய ‘பெரிய’ கச்சேரி.
பெரிய கச்சேரிக்கு முன்போ, வேறு பெரிய நிகழ்ச்சிக்கு முன்பு பாடப்படும் கச்சேரிக்கோ, முதலில் கூட்டம் இருக்காது. போகப் போக அதிகரிக்கும். அடுத்த ‘பெரிய’ நிகழ்ச்சி தொடங்கும் முன்னர் வந்து இடம் போட.
பாடகர் தைவதம் தோன்றும் ‘அசல்’ நாட்டையில் அருமையாக ஆலாபனை செய்து ‘நின்னே பஜன’ என்ற தியாகராஜரின் கிருதியைப் பாடுகையில் அரங்கில் கூட்டம் அதிகரித்தது.
பேகடா, நாட்டை, ஐயகோ அடுத்து பந்துவராளி. என்னடா வழக்கமான மைலாபூர் கச்சேரியா, அப்பராம பக்திதான் என்றிருக்கையில், ‘ராமணாதம் பஜேஹம்’ என்று தொடங்கினார் பாடகர். ராம்நாட் கிருஷ்னன் பாடும் (ரிஷிமூலம் சங்கர சிவமாகவும் இருக்க வாய்ப்பு) துரித கால பிரமாணத்தில் அமைந்தது நண்பருக்குக் குறை. ஆனால் வந்து விழுந்த சங்கதிகளும், குமார குருகுஹ மஹிதம் என்று தொடங்கும் வரியில் நிரவலும், ஸ்வரங்களும், electrifying.
ஏதேதோ அசலூர் கழுதையை எல்லாம் கேட்டுக்கொண்டு எங்கு தொலைக்க இருந்தோம் இந்த உள்ளூர் குயிலை? ஆனாலும் குயில் சற்று மேல் ஸ்தாயியில் வாயைத் திறந்து கணீர் என்று பாடுகையில் மைக்கிலிருந்து சற்று விலகிப்பாடினால் தேவலை. குரல் சற்று க்ரீச்சிடுகிறதா இல்லை மைக் தீமைக்கா தெரியவில்லை.
ஸ்லோகத்திற்குப் பிறகு, சுருட்டி ராகத்தில் ‘அங்காரகம் ஆஸ்ரயாமி’யை அனுபல்லவியில் எடுத்தார். ஒவ்வொரு முறையும் பல்லவியைப் பாடுகையில் ‘ஆஸ்ரயாமி’ என்று பிரித்துப் பாடினார். கச்சேரியில் அனுபல்லவியில் எடுப்பது ஒரு time management trick. முதல் பல்லவி சங்கதிகள் பாடாமல் விரைவாகக் கிருதியை முடிக்கலாம். பாடகர் வாட்ச்சை ஒருமுறைப் பார்த்துக்கொண்ட மாதிரி இருந்தது.
அடுத்து வந்தது ஆலாபனையில் ஜியோதிஸ்வரூபிணி போல இருக்கே, இல்லை காங்கேயபூஷணியா என்று யோசிக்கவைத்து ‘ரஸிகப்ரியா’ என்று தீக்ஷை பெறவைத்தது. எனக்கும் என் உடன் வந்த நண்பருக்கும் வாயெல்லாம் பல்.
ரஸிகப்ரியா 72ஆவது மேளராகம். இளையராஜா ‘காதல் ஓவியம்’ என்ற படத்தில் ஒரு பாடலை போட்டிருக்கிறார். அவார்ட் வரும் என்று நம்பி வெறுத்திருக்கிறார் (அதே படத்தில் முதல் பாடல் முதல் மேளராகம் கனகாங்கியில்!).
பாடகர் நன்றாக உழைத்திருந்தார் ரஸிகப்ரியா ராகத்தை. சேஷகோபாலன் சொல்வதுபோல, மேடையில் வரவேண்டும் அல்லவா… பிரவாளமாக வந்தது. மேல் ஸ்தாயியை மீண்டும் மீண்டும் சென்று பாடகர் லாகவம் செய்துகொண்டிருக்கையில் பக்கத்தில் மாமி தர்மவதிதானே என்றார். மையமாகப் புன்னகைத்தேன்.
கிருதி ‘அருள் செய்ய வேண்டும் ஐயா’ எதிர்பார்ததுதான். தஞ்சாவூர் s. கல்யாணராமன் அருமையாகப் பாடுவார். இப்பாடகர் சில சங்கதிகளை மேற்படி விவாதிமேள நிபுணரிடம் சுட்டிருந்தாரோ என்று தோன்றியது. பல்லவியில் “ஐயா”வைப் பாடுகையில் ஒரு சில கார்வைகள் மட்டும் மிஸ்ஸிங். நன்றாகவே இருந்தது. மிருதங்கம் நல்ல துணை.
ரஸிகப்ரியாவின் மயக்கத்தில் அடுத்து வந்த மெயின் உருப்படி காம்போதியை மன்னித்தேன். நன்றாகப் பாடினார். ஒவ்வொரு சஞ்சாரமும் விஸ்தாரமாக நீட்டி முழக்கி நுணுக்கமான பிடிகளுடன் இருந்தது. வார்த்தை வார்த்தையாகப் பிய்த்துப் பாடாமல், முழு வாக்கியமாக, மைக் இல்லாத காலத்தின் பாடும் முறையில் ஆலாபனை இருந்தது.
கிருதி ரத்னகஞ்சுகதாரிணி. மிஸ்ர சாபு தாளம். (மெயின் உருப்படிக்கு மிஸ்ர சாபு. பலே!). முத்தய்யா பாகவதர் இயற்றியது. பிஏ-எம்மே இசை படிப்பவர்களுக்குப் பாடமாம்; நண்பர் காதைக் கடித்தார். சிறியதாக இருப்பதால் எளிதாகக் கற்றுக் கொடுத்து காம்போதிக்கு ஒன்று என்று கணக்கு காட்டிவிடலாம் எனச் சில ஆசிரியர்கள் நினைக்கிறார்கள் போலும்.
பல ஆண்டுகளாகக் கேட்டு, அனுபவித்திருக்கும் காம்போதியையும் வேளை சரியாக இல்லை என்றால் சொதப்ப முடியும் என்றார் வயலின் வித்துவான். ஆலாபனையில் அபஸ்வரங்கள். ஆனால் நிரவல் முடிக்கையில் நன்றாக வாசித்துப் பாடகரிடம் சபாஷ் வாங்கினார். வேகமான ஸ்வரப் பிரஸ்தாரங்களிலும் ok. கணக்கு அவ்வப்போது இடித்து எடுப்பிற்கு வராமல் திணறியது. மொத்ததில் அன்று its not his day.
இந்து சேகர ஹரிகேஸ சுந்தராங்க விஹாரினி என்று சமத்திற்கு சற்று முன் துவங்கும் வரியில் நிரவல், ஸ்வரம். பிறகு தனி.
தனியில் ஒருவரும் எழுந்து செல்லவில்லை. அடுத்த நிகழ்ச்சிக்கு இடம் போய் விடுமே என்கிற பயமே இதற்குக் காரணம் என்பேன்.
அருமையாக வாசித்தார் பாலாஜி. சபாஷ். ஒரு நாள் மொத்த கூட்டம் இவருக்காகவே உட்காரும்.
இருந்த பத்து நிமிட அவகாசத்தி இரண்டு துக்கடா பாடி நேரத்திற்கு முடித்தார் கச்சேரியை.
வெளியே பாடகருடன் பேசிக்கொண்டிருக்கையில் ரூபவதி பாடுவதாக இருந்து, இங்கு அது எடுக்காது என்று ரஸிகப்ரியாவை பாடிவிட்டாராம். அடுத்த கச்சேரியில் பாடிவிட்டால் போகிறது.
காரை 7 மணி ‘பீக் ட்ராஃபி’க்கில் அடையார் சிக்னலில் ஒரு போலீஸ் ஜீப்பிற்கு பின் அபாயகரமான நெருக்கத்தில் நிறுத்தியதைத் தவிர வேறு எந்த லோலாயும் செய்யாமல் வீடு வந்து சேர்ந்தேன்.
மெயின் உருப்படி ரக்தி ராகப் பேட்டையில் ரஸிகப்ரியா ஆலாபனை செய்த முத்துகுமார், நிச்சயம் ஒரு வளரும் சங்கீத சொத்துகுமார்.
————
பாடகர்: டில்லி முத்துக்குமார்
வயலின்: மேலக்காவேரி தியாகராஜன்
மிருதங்கம்: ட்ரிவான்ட்ரம் பாலாஜி
இடம்: P. S. ஹைஸ்கூல், R. K. மட் ரோடு, மைலாபூர்.
நாள்: 13 ஜூன் 2006